பாடம் 52
உடையும் தோற்றமும்—ஏன் கவனம் தேவை?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கிறது. நம் உடையும் தோற்றமும் நம் ரசனைக்கு ஏற்றபடியும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரியும் இருப்பதற்கு ஒருசில பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்தாலே போதும். அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
1. என்ன நியமங்களை நாம் மனதில் வைக்க வேண்டும்?
நாம் ‘நேர்த்தியான உடையை அடக்கத்தோடும் தெளிந்த புத்தியோடும்’ உடுத்த வேண்டும். அதோடு, நம் தோற்றம் ‘கடவுள்பக்தியை’ காட்டும் விதத்தில் சுத்தமாக இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 2:9, 10) இந்த நான்கு நியமங்களை மனதில் வையுங்கள்: (1) நம் உடை ‘நேர்த்தியாக’ இருக்க வேண்டும். யெகோவாவின் மக்களுக்கு வித்தியாசமான ரசனைகள் இருந்தாலும், அவர்களுடைய உடையும் முடி அலங்காரமும் எப்போதுமே யெகோவாவுக்கு மரியாதை காட்டும் விதத்தில்தான் இருக்கும். இதை நீங்களே சபைக் கூட்டங்களில் பார்த்திருப்பீர்கள். (2) நாம் ‘அடக்கமாக’ உடை உடுத்த வேண்டும். அதாவது, நம் தோற்றம் கவர்ச்சியாகவோ மற்றவர்களுடைய கவனத்தை அளவுக்கு அதிகமாக ஈர்க்கும் விதத்திலோ இருக்கக் கூடாது. (3) புதிதாக வரும் ஒவ்வொரு ஃபேஷனையும் ஸ்டைலையும் நாம் பின்பற்றாமல் ‘தெளிந்த புத்தியோடு’ உடை உடுத்த வேண்டும். (4) நம் தோற்றம் ‘கடவுள்பக்தியை’ காட்ட வேண்டும். அதாவது, நாம் உண்மைக் கடவுளை வணங்குகிறவர்கள் என்பதை எப்போதுமே காட்ட வேண்டும்.—1 கொரிந்தியர் 10:31.
2. ஏன் சகோதர சகோதரிகளை மனதில் வைத்து உடை உடுத்த வேண்டும்?
எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்திக்கொள்ள நமக்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அது மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் ஒருபோதும் மற்றவர்களைச் சங்கடப்படுத்திவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, அவர்களை “பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அவர்களுக்குப் பிரியமாக நடந்துகொள்ள வேண்டும்.”—ரோமர் 15:1, 2-ஐ வாசியுங்கள்.
3. நம் தோற்றம் எப்படி மற்றவர்களை உண்மை வணக்கத்திடம் ஈர்க்கும்?
நாம் எல்லா சமயத்திலும், முக்கியமாக சபைக் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போகும்போது, கண்ணியமாக உடை உடுத்துகிறோம். நம் தோற்றத்தைப் பார்த்து மற்றவர்கள் நம் செய்தியைக் கேட்காமல் போய்விடக் கூடாது. அதற்குப் பதிலாக, அவர்கள் சத்தியத்திடம் ஈர்க்கப்பட வேண்டும். அப்போதுதான், நம் தோற்றம் ‘நம்முடைய மீட்பரான கடவுளுடைய போதனைகளை . . . அலங்கரிக்கும்.’—தீத்து 2:10.
ஆராய்ந்து பார்க்கலாம்!
நாம் உண்மைக் கடவுளை வணங்குகிறவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியும்படி நம் உடையும் தோற்றமும் இருக்க வேண்டும். எப்படி என்று பார்க்கலாம்.
4. கண்ணியமான தோற்றம் யெகோவாவுக்கு மதிப்பு சேர்க்கும்
நம் தோற்றத்தை நன்றாக வைத்துக்கொள்வதற்கு மிக முக்கியமான காரணம் என்ன? சங்கீதம் 47:2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நம் தோற்றம் யெகோவாவின் பெயரைப் பாதிக்கும் என்பதால் உடை உடுத்தும் விஷயத்தில் எப்படிக் கவனமாக இருக்கலாம்?
கூட்டங்களிலும் ஊழியத்திலும் கலந்துகொள்ளும்போது நம் தோற்றத்துக்குக் கவனம் செலுத்துவது முக்கியம் என்று நினைக்கிறீர்களா? ஏன்?
5. சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவி
விலை அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, நம் உடை சுத்தமாகவும் சூழ்நிலைக்கு ஏற்றபடி கண்ணியமாகவும் இருக்க வேண்டும். 1 கொரிந்தியர் 10:24-ஐயும் 1 தீமோத்தேயு 2:9, 10-ஐயும் படியுங்கள். பிறகு, இப்படிப்பட்ட உடைகளை ஏன் தவிர்க்க வேண்டுமென்று கலந்துபேசுங்கள்:
கசங்கிப்போன அழுக்கான உடை அல்லது ஏனோதானோவென்ற உடை
உடம்போடு ஒட்டிக்கொண்டோ, உடம்பைக் காட்டும்படியோ, மற்றபடி கவர்ச்சியாகவோ இருக்கும் உடை
மோசே மூலம் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தை இன்று கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றாலும், யெகோவா யோசிக்கும் விதத்தைப் பற்றி அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். உபாகமம் 22:5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பெண்கள் ஆண்களைப் போலவோ, ஆண்கள் பெண்களைப் போலவோ டிரஸ் பண்ணிக்கொள்வது ஏன் தப்பு?
1 கொரிந்தியர் 10:32, 33-ஐயும் 1 யோவான் 2:15, 16-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நம் தோற்றம் நம்மைச் சுற்றியுள்ள மக்களை அல்லது சபையில் இருப்பவர்களைச் சங்கடப்படுத்தாதபடி நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
நீங்கள் இருக்கும் இடத்தில் என்ன மாதிரியான ஃபேஷனும் ஸ்டைலும் இருக்கின்றன?
அதில் ஏதாவது கிறிஸ்தவர்களுக்கு ஒத்துவராது என்று நினைக்கிறீர்களா? ஏன்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “என் இஷ்டத்துக்கு டிரஸ் பண்ணிக்க எனக்கு உரிமை இருக்கு.”
இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? ஏன்?
சுருக்கம்
உடை மற்றும் தோற்றம் விஷயத்தில் நாம் சரியான முடிவுகளை எடுக்கும்போது யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் மதிப்புக் காட்டுவோம்.
ஞாபகம் வருகிறதா?
நம் உடையையும் தோற்றத்தையும் யெகோவா ஏன் முக்கியமாக நினைக்கிறார்?
உடை மற்றும் தோற்றம் சம்பந்தமாக என்ன நியமங்களை நாம் மனதில் வைக்க வேண்டும்?
நம் தோற்றம் உண்மை வணக்கத்தைப் பற்றிய மக்களுடைய அபிப்பிராயத்தை எப்படிப் பாதிக்கும்?
அலசிப் பாருங்கள்
நீங்கள் போடும் டிரஸைப் பார்த்து மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பச்சை குத்திக்கொள்ளலாமா என்று முதலிலேயே யோசிப்பது ஏன் புத்திசாலித்தனம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“பச்சை குத்திக்கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” (ஆன்லைன் கட்டுரை)
சரியான முடிவுகளை எடுக்க உதவுகிற இன்னும் நிறைய நியமங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
“நீங்கள் உடுத்தும் விதம் கடவுளை மகிமைப்படுத்துகிறதா?” (காவற்கோபுரம், செப்டம்பர் 2016)
உடை உடுத்தும் விஷயத்தில் மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளை ஒரு பெண் எப்படி மதிக்கக் கற்றுக்கொண்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“அவர்களுடைய உடையையும் தலைமுடியையும் பார்த்து தப்புக்கணக்குப் போட்டேன்” (ஆன்லைன் கட்டுரை)