-
ஆண்களே, கிறிஸ்துவின் தலைமை ஸ்தானத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கிறீர்களா?காவற்கோபுரம்—2010 | மே 15
-
-
ஆண்களே, கிறிஸ்துவின் தலைமை ஸ்தானத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கிறீர்களா?
‘ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்.’—1 கொ. 11:3.
1. யெகோவா எல்லாவற்றையும் சீராகச் செய்கிற கடவுள் என்பதை எது காட்டுகிறது?
“எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையையும் மாண்பையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்; ஏனென்றால், நீங்களே எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய சித்தத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று வெளிப்படுத்துதல் 4:11 சொல்கிறது. ஆம், யெகோவா படைப்பாளராக இருப்பதால், இந்தச் சர்வலோகத்தின் உன்னத பேரரசராகத் திகழ்கிறார், தம்முடைய படைப்புகள் அனைத்தின் மீதும் அதிகாரமுள்ளவராக இருக்கிறார். அவர் ‘குழப்பத்தின் கடவுளாக இல்லாமல் சமாதானத்தின் கடவுளாக’ இருக்கிறார் என்பதை, தேவதூதர்கள் அடங்கிய தம்முடைய பரலோகக் குடும்பத்தை அவர் ஒழுங்கமைத்திருக்கிற விதத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்.—1 கொ. 14:33; ஏசா. 6:1-3; எபி. 12:22, 23.
2, 3. (அ) யெகோவா முதன்முதலாக யாரைப் படைத்தார்? (ஆ) கடவுளும் அவருடைய மகனும் வகிக்கிற ஸ்தானங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
2 யெகோவா யுகா யுகங்களுக்குத் தனியாகவே இருந்தார், அதன் பின்னரே எல்லாவற்றையும் படைக்கத் தொடங்கினார். “வார்த்தை” என்பவரைத்தான் முதன்முதலாகப் பரலோகத்தில் படைத்தார்; இவர் யெகோவாவின் சார்பில் பேசுபவராகச் செயல்பட்டார். இவர் மூலமாகவே மற்ற எல்லாம் படைக்கப்பட்டன. பிற்பாடு, இவர் பரிபூரண மனிதராகப் பூமிக்கு வந்தபோது இயேசு கிறிஸ்து என அழைக்கப்பட்டார்.—யோவான் 1:1-3, 14-ஐ வாசியுங்கள்.
3 கடவுளும் அவருடைய மகனும் வகிக்கிற ஸ்தானங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன்: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்; ஆணுக்குக் கிறிஸ்து தலையாக இருக்கிறார்; கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்.” (1 கொ. 11:3) கிறிஸ்து தம்முடைய தகப்பனின் தலைமை ஸ்தானத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கிறார். புத்திக்கூர்மையுள்ள படைப்புகள் மத்தியில் சமாதானமும் ஒழுங்கும் நிலவ வேண்டுமானால் தலைமை வகிப்பும் அவசியம், அந்தத் தலைமை வகிப்புக்குக் கட்டுப்பட்டு நடப்பதும் அவசியம். ‘யார் மூலமாக எல்லாம் படைக்கப்பட்டனவோ’ அவரும்கூட கடவுளின் தலைமை ஸ்தானத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது.—கொலோ. 1:16.
4, 5. யெகோவாவின் தலைமை ஸ்தானத்தைப் பற்றி இயேசு எப்படி உணர்ந்தார்?
4 யெகோவாவின் தலைமை ஸ்தானத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பது பற்றியும், பூமிக்கு வருவது பற்றியும் இயேசு எப்படி உணர்ந்தார்? “கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த இதே சிந்தை உங்களுக்கும் இருக்கட்டும்; அவர் கடவுளுடைய சாயலில் இருந்தபோதிலும், கடவுளுடைய ஸ்தானத்தைப் பறித்துக்கொள்ளவோ அவருக்குச் சமமாயிருக்கவோ நினைக்கவில்லை; மாறாக, தமக்கிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போலானார், அவர் ஒரு மனிதரானார். அதுமட்டுமல்ல, அவர் மனிதராக வந்தபோது சாகுமளவுக்கு, ஆம், கழுமரத்தில் சாகுமளவுக்கு, தம்மையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்” என்று பைபிள் சொல்கிறது.—பிலி. 2:5-8.
5 இயேசு தம்முடைய தகப்பனின் சித்தத்திற்கு எப்போதுமே கட்டுப்பட்டு நடந்தார். “நான் எதையுமே சுயமாகச் செய்ய முடியாது; . . . நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது, ஏனென்றால் நான் என்னுடைய சித்தத்தை நாடாமல் என்னை அனுப்பியவருடைய சித்தத்தையே நாடுகிறேன்” என்று அவர் சொன்னார். (யோவா. 5:30) ‘நான் எப்போதும் என் தகப்பனுக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’ என்றும் அவர் சொன்னார். (யோவா. 8:29) இறப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்குமுன், தம் தகப்பனிடம் இவ்வாறு ஜெபம் செய்தார்: “நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்து பூமியில் உங்களை மகிமைப்படுத்தியிருக்கிறேன்.” (யோவா. 17:4) ஆகையால், கடவுளுடைய தலைமை ஸ்தானத்தை ஏற்றுக்கொள்வது இயேசுவுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.
தகப்பனுக்குக் கட்டுப்பட்டு நடந்தார், நன்மைகள் பெற்றார்
6. இயேசு என்ன அருமையான குணங்களை வெளிக்காட்டினார்?
6 இயேசு பூமியில் இருந்தபோது அருமையான குணங்களை வெளிக்காட்டினார். தம் தகப்பன்மீது அளவுகடந்த அன்பைக் காட்டினார். “தகப்பன்மீது நான் அன்பு வைத்திருக்கிறேன்” என்று அவரே சொன்னார். (யோவா. 14:31) மக்கள்மீதும் அவர் அளவுகடந்த அன்பைக் காட்டினார். (மத்தேயு 22:35-40-ஐ வாசியுங்கள்.) அவர் யாரிடமும் கடுமையாக நடந்துகொள்ளவில்லை, யாரையும் அடக்கி ஆளவில்லை; மாறாக, கருணையோடும் கரிசனையோடும் நடந்துகொண்டார். “உழைத்துக் களைத்துப் போனவர்களே, பெருஞ்சுமை சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகம் மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்று அவர் சொன்னார். (மத். 11:28-30) செம்மறியாடு போன்ற மக்ககளில் பெரியோர் சிறியோர் என எல்லாருமே, குறிப்பாக மற்றவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட எல்லாருமே, இயேசுவின் இனிய சுபாவத்தினாலும் தெம்பளிக்கும் செய்தியினாலும் மிகுந்த ஆறுதலைப் பெற்றார்கள்.
7, 8. இரத்தப்போக்கினால் அவதிப்பட்ட ஒரு பெண் திருச்சட்டத்தின்படி எவ்வாறு கருதப்பட்டாள், ஆனால் இயேசு அவளிடம் எப்படி நடந்துகொண்டார்?
7 பெண்களை இயேசு எப்படி நடத்தினார் எனச் சிந்தித்துப் பாருங்கள். சரித்திரம் முழுவதிலும், ஆண்களில் ஏராளமானோர் பெண்களைப் படுமோசமாக நடத்தியிருக்கிறார்கள். பூர்வ இஸ்ரவேலில் இருந்த மதத் தலைவர்களும்கூட அப்படித்தான் நடத்திவந்தார்கள். இயேசுவோ பெண்களை மரியாதையோடு நடத்தினார். 12 வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுவந்த ஒரு பெண்ணிடம் அவர் நடந்துகொண்ட விதம் அதைத் தெளிவாக்குகிறது. மருத்துவர்கள் அளித்த பல்வேறு சிகிச்சைகளால் “அவள் மிகுந்த வேதனை அடைந்திருந்தாள்.” அதுமட்டுமல்ல, தன்னிடம் இருந்ததையெல்லாம் செலவழித்திருந்தாள். என்றாலும், அவளுடைய “நிலைமை இன்னும் மோசமாகவே ஆகியிருந்தது.” திருச்சட்டத்தின்படி, அவள் தீட்டானவளாகக் கருதப்பட்டாள்; அவளைத் தொடுகிறவர்களும் தீட்டுப்பட்டவர்களாகக் கருதப்பட்டார்கள்.—லேவி. 15:19, 25.
8 நோயாளிகளை இயேசு குணமாக்குகிறாரென அவள் கேள்விப்பட்டபோது, அவரைச் சூழ்ந்திருந்த கூட்டத்தாரோடு சேர்ந்துகொண்டாள்; “அவருடைய மேலங்கியைத் தொட்டாலே போதும், நான் குணமாகிவிடுவேன்” என்று சொல்லிக்கொண்டு, இயேசுவைத் தொட்டாள், உடனடியாகக் குணமானாள். தம்மை அவள் தொட்டது தவறு என்பதை இயேசு அறிந்திருந்தார். என்றாலும், அவளை அவர் திட்டவில்லை. மாறாக, அவளிடம் கருணையோடு நடந்துகொண்டார். வருடக்கணக்காக அவள் எந்தளவு கஷ்டப்பட்டிருப்பாள் என்பதைப் புரிந்துகொண்டார், உதவிக்காக அவள் எந்தளவு பரிதவித்திருப்பாள் என்பதையும் புரிந்துகொண்டார். அதனால் அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. சமாதானமாகப் போ” என்று கரிசனையோடு சொன்னார்.—மாற். 5:25-34.
9. பிள்ளைகள் இயேசுவிடம் வரவிடாதபடி சீடர்கள் தடுத்தபோது, அவர் என்ன செய்தார்?
9 பிள்ளைகள்கூட இயேசுவிடம் சகஜமாகப் பழகினார்கள். ஒருசமயம் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்தபோது, சீடர்கள் அவர்களை அதட்டினார்கள்; பிள்ளைகள் அவருக்குத் தொந்தரவாக இருப்பார்களோ என்று நினைத்து ஒருவேளை அவர்கள் அப்படி அதட்டியிருக்கலாம். ஆனால், இயேசு அப்படி நினைக்கவில்லை. அவர் “இதைப் பார்த்துக் கோபமடைந்து, சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள், இப்படிப்பட்டவர்களே கடவுளுடைய அரசாங்கத்தில் இருப்பார்கள்” என்று சீடர்களிடம் சொன்னார். பின்பு, “அந்தச் சிறுபிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு, அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வதித்தார்.” அவர்களைத் தொந்தரவாக நினைக்காமல் உண்மையான பிரியத்தோடு ஏற்றுக்கொண்டார்.—மாற். 10:13-16.
10. இயேசுவுக்கு இத்தகைய அருமையான குணங்கள் எப்படி வந்தன?
10 இயேசுவுக்கு இத்தகைய அருமையான குணங்கள் எப்படி வந்தன? மனிதராகப் பிறப்பதற்குமுன், யுகா யுகங்களுக்கு அவர் தம்முடைய பரலோகத் தகப்பனைக் கூர்ந்து கவனித்திருந்தார். (நீதிமொழிகள் 8:22, 23, 30-ஐ வாசியுங்கள்.) யெகோவா தம்முடைய படைப்புகள் எல்லாவற்றின் மீதும் அன்போடு தலைமை வகித்ததை அவர் கவனித்திருந்தார், அதனால் அவரும் அதைப் பின்பற்றினார். தம் தகப்பனுக்குக் கட்டுப்பட்டு நடந்ததால்தான், அவரால் அப்படிப் பின்பற்ற முடிந்தது. யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதில் அவர் இன்பம் கண்டார், யெகோவாவும் தம்முடைய கீழ்ப்படிதலுள்ள மகனை நினைத்து மனங்குளிர்ந்தார். இயேசு பூமியிலிருந்தபோது, தம்முடைய பரலோகத் தகப்பனுடைய அருமையான குணங்களை அச்சுப்பிசகாமல் பின்பற்றினார். பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக நியமிக்கப்பட்டிருக்கிற அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம் நமக்கு!
கிறிஸ்துவின் குணங்களைப் பின்பற்றுங்கள்
11. (அ) யாரைப் பின்பற்ற நாம் கடினமாக முயல வேண்டும்? (ஆ) சபையிலுள்ள ஆண்கள் இயேசுவைப் பின்பற்ற ஏன் பெருமுயற்சி எடுக்க வேண்டும்?
11 கிறிஸ்தவ சபையிலுள்ள எல்லாரும், குறிப்பாக ஆண்கள், கிறிஸ்துவின் குணங்களைப் பின்பற்றுவதற்குக் கடினமாக முயன்றுகொண்டே இருக்க வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ‘ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்’ என பைபிள் சொல்கிறது. கிறிஸ்து, தமக்குத் தலைவராக இருக்கிற கடவுளைப் பின்பற்றுவது போலவே கிறிஸ்தவ ஆண்களும் தங்களுக்குத் தலைவராக இருக்கிற கிறிஸ்துவைப் பின்பற்ற பெருமுயற்சி எடுக்க வேண்டும். அப்போஸ்தலன் பவுல் அதைத்தான் செய்தார். “நான் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதுபோல் நீங்கள் என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று சக கிறிஸ்தவர்களை அறிவுறுத்தினார். (1 கொ. 11:1) அப்போஸ்தலன் பேதுருவும் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இவ்விதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வரும்படி உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.” (1 பே. 2:21) கிறிஸ்துவைப் பின்பற்றும்படி கூறப்பட்ட அறிவுரை ஆண்களுக்கு மிக முக்கியமானதாய் இருப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்கிற பாக்கியம் அவர்களுக்குத்தான் இருக்கிறது. யெகோவாவைப் பின்பற்றுவதில் இயேசு எப்படி மகிழ்ச்சி கண்டாரோ அப்படியே கிறிஸ்தவ ஆண்களும் கிறிஸ்துவைப் பின்பற்றி அவருடைய குணங்களை வெளிக்காட்டுவதில் மகிழ்ச்சி காண வேண்டும்.
12, 13. தங்கள் மந்தையிலுள்ள ஆடுகளிடம் மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
12 கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்கள் கிறிஸ்துவைப் போலவே நடப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். மூப்பர்களுக்கு பேதுரு இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையைக் கட்டாயத்தினால் இல்லாமல் மனப்பூர்வமாகவும், கேவலமான ஆதாயத்திற்காக இல்லாமல் ஆர்வமாகவும் மேய்த்துவாருங்கள்; கடவுளுடைய சொத்தாக இருக்கிற மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல், மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்.” (1 பே. 5:1-3) எனவே, மூப்பர்கள் சர்வாதிகாரிகளாக, அடக்கி ஆளுபவர்களாக, கொடுங்கோலர்களாக இருக்கக் கூடாது. கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, தங்கள் மந்தையிலுள்ள ஆடுகளிடம் அன்போடு, கரிசனையோடு, தாழ்மையோடு, கருணையோடு நடப்பதற்கு முயற்சியெடுக்க வேண்டும்.
13 சபையை முன்நின்று நடத்துகிற ஆண்கள் தாங்கள் அபூரணர் என்பதை எப்போதும் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். (ரோ. 3:23) இயேசுவைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கும், அவரைப் போலவே அன்பு காட்டுவதற்கும் ஆர்வமாக இருக்க வேண்டும். கடவுளும் கிறிஸ்துவும் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, அப்படியே செய்யக் கடும் முயற்சியெடுக்க வேண்டும். பேதுரு இவ்வாறும் அறிவுறுத்துகிறார்: “நீங்கள் . . . எல்லாருமே ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள். ஏனென்றால், கர்வமுள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ அளவற்ற கருணையை அருளுகிறார்.”—1 பே. 5:5.
14. மூப்பர்கள் மற்றவர்களுக்கு எந்தளவு மதிப்புக் காட்ட வேண்டும்?
14 கடவுளுடைய மந்தையை முன்நின்று நடத்துகிற ஆண்கள் முத்தான குணங்களை வெளிக்காட்ட வேண்டும். “ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்; ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்” என்று ரோமர் 12:10 சொல்கிறது. எனவே, மூப்பர்களும் உதவி ஊழியர்களும் மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். ‘எதையும் பகைமையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்ய வேண்டும்; மற்றவர்களைத் தங்களைவிட மேலானவர்களாகக் கருத வேண்டும்’ என்று எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப்பட்ட அறிவுரையை அவர்களும் பின்பற்ற வேண்டும். (பிலி. 2:3) ஆம், முன்நின்று நடத்துகிறவர்கள், மற்றவர்களை மேலானவர்களாகக் கருதுவது அவசியம். அவ்வாறு கருதுவதன் மூலம், பவுலின் பின்வரும் ஆலோசனைக்குக் கீழ்ப்படிவதை அவர்கள் காட்டுகிறார்கள்: ‘விசுவாசத்தில் பலமுள்ளவர்களாகிய நாம் பலவீனர்களுடைய பலவீனங்களைத் தாங்கிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்; நமக்கே பிரியமாக நடக்கக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்களுக்கு நன்மை உண்டாகும்படி, அதாவது அவர்களைப் பலப்படுத்தும்படி, அவர்களுக்குப் பிரியமாக நடக்க வேண்டும். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்கவில்லை.’—ரோ. 15:1-3.
‘மனைவிக்கு மதிப்புக் கொடுங்கள்’
15. ஒரு கணவன் தன்னுடைய மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
15 மணமான ஆண்களுக்கு பேதுரு கொடுத்த ஆலோசனையை இப்போது கவனியுங்கள்: ‘கணவர்களே, நீங்களும் உங்கள் மனைவியை நன்கு புரிந்துகொண்டு அவளுடன் வாழுங்கள்; பெண்ணானவள் உங்களைவிடப் பலவீனமாக இருப்பதால் . . . அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்.’ (1 பே. 3:7) ஒரு நபருக்கு மதிப்புக் கொடுப்பது என்பது அந்த நபரை உயர்வாய்க் கருதுவதை அர்த்தப்படுத்துகிறது. அப்படி நீங்கள் ஒரு நபருக்கு மதிப்புக் கொடுத்தால், அவருடைய அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் தேவைகளையும் கருத்தில்கொள்வீர்கள்; முக்கியமான காரணங்கள் இருந்தால் தவிர, மற்ற சந்தர்ப்பங்களில் அவருக்காக விட்டுக்கொடுத்துவிடுவீர்கள். கணவனும் தன் மனைவியிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்.
16. மனைவிக்கு மதிப்புக் கொடுப்பது சம்பந்தமாகக் கணவர்களுக்கு பைபிள் என்ன எச்சரிப்பைக் கொடுக்கிறது?
16 மனைவிகளுக்கு மதிப்புக் கொடுக்கும்படி கணவர்களுக்கு அறிவுறுத்திய பிறகு, அப்படி மதிப்புக் கொடுக்காவிட்டால் ‘உங்கள் ஜெபங்கள் கேட்கப்படாது’ என்றும் பேதுரு அவர்களை எச்சரித்தார். (1 பே. 3:7) ஓர் ஆண் தன்னுடைய மனைவியை நடத்துகிற விதத்திற்கு யெகோவா எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது இதிலிருந்து நன்றாகவே தெரிகிறது. மனைவிக்கு மதிப்புக் கொடுக்கத் தவறினால், கணவனுடைய ஜெபங்களை அவர் கேட்பார் என எதிர்பார்க்க முடியாது. ஒரு கணவன் தன் மனைவிக்கு மதிப்புக் கொடுக்கும்போது தன் கணவனுடைய தலைமை ஸ்தானத்திற்குக் கீழ்ப்படிவது அவளுக்குச் சுலபமாக இருக்கும்.
17. மனைவிகள்மீது கணவர்கள் எந்தளவு அன்பு காட்ட வேண்டும்?
17 மனைவியை நேசிப்பது பற்றிக் கடவுளுடைய வார்த்தை கணவர்களுக்கு இவ்வாறு ஆலோசனை கூறுகிறது: “கணவர்களும் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; . . . ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான்; ஆனால், அதைப் போஷித்து நெஞ்சார நேசிக்கிறான்; கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார். . . . உங்களில் ஒவ்வொருவனும் தன்மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்.” (எபே. 5:28, 29, 33) மனைவிகள்மீது கணவர்கள் எந்தளவு அன்பு காட்ட வேண்டும்? “கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்” என்று பவுல் எழுதினார். (எபே. 5:25) ஆம், கிறிஸ்து செய்ததைப் போலவே, ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்காகத் தன் உயிரையே கொடுக்க மனமுள்ளவராக இருக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவ கணவர் தன் மனைவியைச் சுயநலமற்ற விதத்தில் கனிவாக, கரிசனையாக, கண்ணும் கருத்துமாக நடத்தும்போது, அவருடைய தலைமை ஸ்தானத்திற்கு அவள் சந்தோஷமாகக் கீழ்ப்படிவாள்.
18. மணவாழ்வில் உட்பட்டுள்ள பொறுப்புகளைக் கையாள ஆண்களுக்கு எப்படி உதவி கிடைக்கிறது?
18 கணவர்கள் தங்களுடைய மனைவிகளுக்கு இப்படி மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று கடவுள் சொல்லும்போது, அவர் அளவுக்குமீறி எதிர்பார்க்கிறாரா? இல்லை, அவர்களால் செய்ய முடியாத ஒன்றை அவர் ஒருபோதும் செய்யச் சொல்ல மாட்டார். மறுபட்சத்தில், இந்தப் பிரபஞ்சத்திலேயே மாபெரும் சக்தியான தம்முடைய பரிசுத்த சக்தியின் உதவியை அளிக்க அவர் தயாராயிருக்கிறார். “பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலுள்ள உங்கள் தகப்பன் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு தம்முடைய சக்தியை இன்னும் எந்தளவு கொடுப்பார்!” என்று இயேசு சொன்னார். (லூக். 11:13) மற்றவர்களை நடத்துகிற விஷயத்தில், முக்கியமாகத் தங்கள் மனைவிகளை நடத்துகிற விஷயத்தில், கணவர்கள் யெகோவாவின் சக்தியைத் தரும்படி கேட்டு ஜெபிக்கலாம்.—அப்போஸ்தலர் 5:32-ஐ வாசியுங்கள்.
19. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
19 உண்மைதான், கிறிஸ்துவுக்கு எப்படி அடிபணிந்து நடப்பது, அவருடைய தலைமை ஸ்தானத்தை எப்படிப் பின்பற்றுவது என்றெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஆண்களுக்கு இருக்கிறது. ஆனால் பெண்களைப் பற்றி, முக்கியமாக மனைவிகளைப் பற்றி என்ன சொல்லலாம்? யெகோவாவின் ஏற்பாட்டில் அவர்களுக்கு இருக்கும் பங்கை அவர்கள் எப்படிக் கருத வேண்டுமென அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
-
-
பெண்களே, தலைமை ஸ்தானத்திற்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?காவற்கோபுரம்—2010 | மே 15
-
-
பெண்களே, தலைமை ஸ்தானத்திற்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?
“ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்.”—1 கொ. 11:3.
1, 2. (அ) யெகோவாவின் தலைமை ஸ்தான ஏற்பாட்டைப் பற்றியும் அதற்குக் கீழ்ப்படிவதைப் பற்றியும் அப்போஸ்தலன் பவுல் என்ன எழுதினார்? (ஆ) இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் காண்போம்?
தலைமை ஸ்தானம். இந்த ஏற்பாட்டைச் செய்தவர் யெகோவா தேவனே. இந்த ஏற்பாட்டில் உள்ள வரிசைக்கிரமத்தை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்; கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்.’ (1 கொ. 11:3) இயேசு கிறிஸ்து தமக்குத் தலையாக இருக்கிற யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படிவதைக் கௌரவமானதாகக் கருதினார், அதில் மகிழ்ச்சியும் கண்டார்; மக்களிடம் அவர் கருணையுள்ளவராக, கரிசனையுள்ளவராக, மென்மையானவராக, சுயநலமற்றவராக நடந்துகொண்டார். கிறிஸ்தவ ஆண்களுக்கு அவரே தலைவராக இருக்கிறார். கிறிஸ்தவ ஆண்களும் அவரைப் போலவே மற்றவர்களிடம், குறிப்பாகத் தங்கள் மனைவிகளிடம் நடந்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் நாம் முந்தின கட்டுரையில் சிந்தித்தோம்.
2 பெண்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களுக்குத் தலையாக இருப்பது யார்? “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்” என்று பவுல் எழுதினார். கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட அந்தக் குறிப்பைப் பெண்கள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? கணவர் சத்தியத்தில் இல்லாவிட்டாலும் அவர்கள் அந்த நியமத்தின்படி நடக்க வேண்டுமா? கணவருடைய தலைமை ஸ்தானத்திற்கு மனைவி கீழ்ப்படிவது, அவர் எடுக்கிற எல்லாத் தீர்மானங்களையும் ஒரு தலையாட்டிப் பொம்மைபோல் ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துமா? ஒரு பெண் எப்படி நடந்துகொள்ளும்போது புகழப்படுவாள்?
“ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்”
3, 4. தலைமை ஸ்தான ஏற்பாட்டிலிருந்து கணவர்களும் மனைவிகளும் நன்மையடைய முடியும் என ஏன் சொல்லலாம்?
3 தலைமை ஸ்தான ஏற்பாட்டைச் செய்த யெகோவா தேவன், ஆதாமைப் படைத்த பிறகு, “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்று சொன்னார். பின்பு ஏவாளை உருவாக்கினார்; தனக்கு ஒரு துணை கிடைத்துவிட்டதால், ஆம் ஒரு தோழி கிடைத்துவிட்டதால், ஆதாம் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டான். “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்” என்று வாய்நிறையச் சொன்னான். (ஆதி. 2:18-24) பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழப்போகிற பரிபூரண மனிதகுலத்தை உருவாக்கும் மகத்தான வாய்ப்பு ஆதாம் ஏவாளுக்கு இருந்தது.
4 என்றாலும், ஏதேன் தோட்டத்தில் இவர்கள் கலகம் செய்ததால், இனிமேலும் மனிதரால் பரிபூரணமான விதத்தில் தலைமை வகிக்க முடியாமல் போனது. (ரோமர் 5:12-ஐ வாசியுங்கள்.) ஆனால், தலைமை ஸ்தான ஏற்பாடு மாறவில்லை. கணவர் வகிக்கிற சரியான தலைமை ஸ்தானத்திற்கு மனைவி கீழ்ப்படியும்போது குடும்பத்தில் ஏராளமான நன்மைகள் விளையும், சந்தோஷம் பூத்துக்குலுங்கும். இயேசு மனிதனாகப் பூமிக்கு வருவதற்கு முன்பு, ‘எப்பொழுதும் யெகோவாவின் சமுகத்தில் களிகூர்ந்தார்.’ (நீதி. 8:30) யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது இயேசு எப்படி மகிழ்ச்சி கண்டாரோ அப்படியே கணவர்களுக்குக் கீழ்ப்படியும்போது மனைவிகளும் மகிழ்ச்சி காண்பார்கள். இருந்தாலும், அபூரணத்தின் காரணமாக, கணவர்களால் பரிபூரண தலைமை ஸ்தானத்தை வகிக்க முடிவதில்லை, மனைவிகளாலும் பரிபூரண கீழ்ப்படிதலைக் காட்ட முடிவதில்லை. கணவன் மனைவி இருவருமே தங்களுடைய பங்கை நிறைவேற்ற முடிந்தளவு முயற்சி செய்யும்போது, தலைமை ஸ்தான ஏற்பாட்டிலிருந்து ஆத்ம திருப்தியைக் காண்பார்கள்.
5. தம்பதியர் ரோமர் 12:10-ல் உள்ள ஆலோசனையை ஏன் பின்பற்ற வேண்டும்?
5 மணவாழ்க்கை மணம் கமழ வேண்டுமானால், எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் பைபிள் தருகிற பின்வரும் ஆலோசனையைத் தம்பதியர் பின்பற்றுவது அவசியம்: “ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்; ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோ. 12:10) கணவன் மனைவி இருவருமே, ‘ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டவும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னிக்கவும்’ கடினமாக முயல வேண்டும்.—எபே. 4:32.
மணத்துணை சத்தியத்தில் இல்லாவிட்டால்...
6, 7. சத்தியத்தில் இல்லாத கணவருக்கு மனைவி கீழ்ப்படியும்போது என்ன பலன்கள் கிடைக்கலாம்?
6 உங்கள் மணத்துணை சத்தியத்தில் இல்லாவிட்டால் என்ன செய்வது? பெரும்பாலும், சத்தியத்தில் இல்லாமல் இருப்பது கணவர்களே. அப்படிப்பட்ட ஒரு கணவரிடம் மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டும்? “மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும், உங்கள் கற்புள்ள நடத்தையையும் நீங்கள் காட்டுகிற ஆழ்ந்த மரியாதையையும் பார்த்து உங்கள் நடத்தையினாலேயே விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்; ஆம், நீங்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே அவர் விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்” என்று பைபிள் சொல்கிறது.—1 பே. 3:1, 2.
7 சத்தியத்தில் இல்லாத கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படியே கடவுளுடைய வார்த்தை மனைவிகளுக்கு ஆலோசனை கொடுக்கிறது. மனைவியின் நல்நடத்தையைப் பார்க்கும்போது, அவள் அருமையான குணங்களை வெளிக்காட்டுவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள அவளுடைய கணவர் தூண்டப்படலாம். இதனால், அவளுடைய மத நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம், காலப்போக்கில் அவர் சத்தியத்திற்கும் வரலாம்.
8, 9. கணவர் ஒருவேளை சத்தியத்தில் ஆர்வம் காட்டாவிட்டாலும் கிறிஸ்தவ மனைவி என்ன செய்யலாம்?
8 கணவர் ஒருவேளை சத்தியத்தில் ஆர்வம் காட்டாவிட்டால் என்ன செய்வது? எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சரி கிறிஸ்தவக் குணங்களை வெளிக்காட்டும்படியே, அதுவும் எல்லாச் சமயங்களிலும் வெளிக்காட்டும்படியே, மனைவிகளை பைபிள் ஊக்குவிக்கிறது. உதாரணமாக, ‘அன்பு நீடிய பொறுமை உள்ளது’ என்று 1 கொரிந்தியர் 13:4 சொல்கிறது. அப்படியானால், கிறிஸ்தவ மனைவிகள் ‘எப்போதும் மனத்தாழ்மையோடும் சாந்தத்தோடும் நீடிய பொறுமையோடும் நடந்துகொள்ள’ வேண்டும்; அன்பினால் பொறுத்துப்போக வேண்டும். (எபே. 4:2) கடினமான சூழ்நிலைகளிலும்கூட, கடவுளுடைய சக்தியின் உதவியோடு கிறிஸ்தவக் குணங்களை மனைவிகளால் வெளிக்காட்ட முடியும்.
9 “என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு” என்று பவுல் எழுதினார். (பிலி. 4:13) ஆம், தன்னுடைய சொந்த பலத்தால் செய்ய முடியாத அநேக காரியங்களைச் செய்யவும் ஒரு கிறிஸ்தவ மனைவிக்குக் கடவுளுடைய சக்தி உதவுகிறது. உதாரணமாக, மணத்துணை கொடுமைப்படுத்தினால் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படலாம். என்றாலும், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; . . . ‘பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிலடி கொடுப்பேன் என்று யெகோவா சொல்கிறார்.’” (ரோ. 12:17-19) “உங்களில் யாரும் தீங்குக்குத் தீங்கு செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; உங்கள் மத்தியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லாருக்கும் நன்மை செய்ய எப்போதும் நாடுங்கள்” என்று 1 தெசலோனிக்கேயர் 5:15-ல் நாம் வாசிக்கிறோம். சொந்த பலத்தில் செய்ய முடியாததைக் கடவுளுடைய சக்தியின் உதவியோடு நம்மால் செய்ய முடியும். ஆகையால், நம்முடைய குறைகளை நிறைவு செய்வதற்காகக் கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபிப்பது பொருத்தமானதே!
10. தம்மை மோசமாக நடத்தியவர்களிடமும் இழிவாகப் பேசியவர்களிடமும் இயேசு எவ்வாறு நடந்துகொண்டார்?
10 இயேசு தம்மை மோசமாக நடத்தியவர்களிடமும் இழிவாகப் பேசியவர்களிடமும் நடந்துகொண்ட விதம், நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது. “அவர் சபித்துப் பேசப்பட்டபோது பதிலுக்குச் சபித்துப் பேசவில்லை; துன்புறுத்தப்பட்டபோது மிரட்டவில்லை; மாறாக, நீதியாய்த் தீர்ப்பு வழங்குகிறவரிடம் தம்மையே ஒப்படைத்தார்” என்று 1 பேதுரு 2:23 சொல்கிறது. அவருடைய சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றும்படி பைபிள் நம்மை அறிவுறுத்துகிறது. எனவே, மற்றவர்கள் உங்களிடம் மோசமாக நடந்துகொள்ளும்போது கோபப்படாதீர்கள். கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பைபிள் தருகிற அறிவுரையின்படி, “மிகுந்த கரிசனையையும் மனத்தாழ்மையையும் காட்டுங்கள்; யாராவது தீங்கு செய்தால் பதிலுக்குத் தீங்கு செய்யாதீர்கள், யாராவது சபித்துப் பேசினால் பதிலுக்குச் சபித்துப் பேசாதீர்கள்.”—1 பே. 3:8, 9.
வெறும் தலையாட்டிப் பொம்மைகளா?
11. கிறிஸ்தவப் பெண்கள் சிலருக்கு என்ன விசேஷப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது?
11 கணவனுடைய தலைமை ஸ்தானத்திற்குக் கீழ்ப்படிவது என்றால், மனைவிகள் தலையாட்டிப் பொம்மைகளாக இருக்க வேண்டும் என்று அர்த்தமா? குடும்ப விஷயங்களிலும் சரி மற்ற விஷயங்களிலும் சரி, வாயே திறக்கக் கூடாதா? இல்லவே இல்லை! ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் யெகோவா பல விசேஷப் பொறுப்புகளைத் தந்திருக்கிறார். கிறிஸ்துவோடு சக ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்யப்போகும் 1,44,000 பேருக்குக் கிடைக்கிற மாபெரும் கௌரவத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள். இந்தக் கௌரவத்தைப் பெறுபவர்களில் பெண்களும் அடங்குவர்! (கலா. 3:26-29) அப்படியானால், தாம் செய்திருக்கிற ஏற்பாடுகளில் பெண்களுக்கும் முக்கியப் பங்கை யெகோவா அளித்திருக்கிறார்.
12, 13. பெண்கள் தீர்க்கதரிசனம் சொன்னதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
12 உதாரணமாக, பூர்வ காலங்களில் பெண்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். யோவேல் 2:28, 29 இவ்வாறு முன்னுரைத்தது: ‘நான் மாம்சமான யாவர்மேலும் என் [சக்தியை] ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; . . . ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் [சக்தியை] ஊற்றுவேன்.’
13 கி.பி. 33-ஆம் வருடம் பெந்தெகொஸ்தே தினத்தன்று கூடியிருந்த சுமார் 120 சீடர்களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருந்தனர். இந்த முழுத் தொகுதியின் மீது கடவுள் தம்முடைய சக்தியைப் பொழிந்தார். அதனால்தான் யோவேல் தீர்க்கதரிசி முன்னறிவித்ததை பேதுரு மேற்கோள் காட்டிப் பேசினார்; அதை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருத்திக் காட்டி, “யோவேல் தீர்க்கதரிசி மூலம் இவ்வாறு அறிவிக்கப்பட்டதே நிறைவேறியிருக்கிறது: ‘கடவுள் சொல்வதாவது, “கடைசி நாட்களில், பலதரப்பட்ட மக்கள்மீதும் என் சக்தியைப் பொழிவேன், அப்போது உங்கள் மகன்களும், உங்கள் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்; . . . அந்நாட்களில் என்னுடைய ஊழியக்காரர்கள் மீதும் ஊழியக்காரிகள் மீதும் என் சக்தியைப் பொழிவேன், அப்போது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்”’” என்று குறிப்பிட்டார்.—அப். 2:16-18.
14. முதல் நூற்றாண்டின்போது நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பெண்கள் எவ்வாறு பங்கு வகித்தார்கள்?
14 முதல் நூற்றாண்டின்போது, நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்தார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவித்தது மட்டுமல்லாமல் அது சம்பந்தப்பட்ட வேலைகளையும் அவர்கள் செய்தார்கள். (லூக். 8:1-3) உதாரணமாக, பெபேயாள் என்ற சகோதரியை, ‘கெங்கிரேயா சபையில் ஊழியம் செய்து வருகிறவர்’ என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார்; தன்னுடைய சக வேலையாட்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தபோது, விசுவாசமுள்ள பெண்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். ‘நம் எஜமானருக்காகக் கடினமாய் உழைத்து வருகிற பெண்களான திரிபேனாளுக்கும் திரிபோசாளுக்கும் வாழ்த்துத் தெரிவியுங்கள்’ என்று சொன்னார். “எஜமானருக்காகக் கஷ்டப்பட்டுப் பல வேலைகள் செய்த அன்புக்குரிய பெர்சியாளுக்கும்” வாழ்த்துத் தெரிவித்தார்.—ரோ. 16:1, 12.
15. நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் இன்று பெண்கள் எப்படியெல்லாம் பங்கு வகிக்கிறார்கள்?
15 இன்று, உலகெங்கும் நற்செய்தியை அறிவித்து வருகிற 70 லட்சத்திற்கும் அதிகமானோரில் பெரும்பாலோர் பெண்களே; அவர்களில் எல்லா வயதுப் பெண்களும் அடங்குவர். (மத். 24:14) அவர்களில் அநேகர் முழுநேர ஊழியர்களாக, மிஷனரிகளாக, பெத்தேல் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். சங்கீதக்காரனாகிய தாவீது இப்படிப் பாடினார்: “யெகோவா கட்டளை தந்தார்; நற்செய்தியை அறிவிக்கிற பெண்களின் கூட்டம் மிகுதி.” (சங். 68:11, NW) இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை! நற்செய்தியை அறிவிப்பதிலும் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் பெண்கள் வகிக்கிற பங்கை யெகோவா மிக உயர்வாய்க் கருதுகிறார். எனவே, கிறிஸ்தவப் பெண்கள் தலைமை ஸ்தானத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் சொல்வது தலையாட்டிப் பொம்மைகளாக இருக்க வேண்டுமென்பதை ஒருபோதும் அர்த்தப்படுத்தாது.
தலையாட்டிப் பொம்மைகளாக இல்லாத இரு பெண்கள்
16, 17. மனைவிகள் வெறும் தலையாட்டிப் பொம்மைகளாக இருக்கக் கூடாது என்பதை சாராளின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது?
16 பெண்களுக்கு யெகோவாவே இப்படிப் பலவித விசேஷப் பொறுப்புகளை அளிக்கிறார் என்றால், கணவர்கள் முக்கியத் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன் தங்கள் மனைவிகளுடைய கருத்துகளைக் கேட்கத்தானே வேண்டும்? அப்படிக் கேட்பதே ஞானமானது. தங்களுடைய கருத்தைக் கணவர்கள் கேட்காதபோதிலும் அதைத் தெரிவித்த அல்லது புத்திசாலித்தனமாகச் செயல்பட்ட மனைவிகளைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்.
17 முதலாவதாக, ஆபிரகாமின் மனைவி சாராளை எடுத்துக்கொள்ளுங்கள். ஆபிரகாமின் இரண்டாம் தாரமான ஆகார், தன்னிடம் அவமரியாதையாக நடந்துகொண்டதால் அவளையும் அவளுடைய மகனையும் வீட்டைவிட்டுத் துரத்திவிடும்படி ஆபிரகாமிடம் சாராள் சொல்லிக்கொண்டே இருந்தாள். “இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.” ஆனால், யெகோவாவுக்கு அப்படி இருக்கவில்லை. அப்போது அவர் ஆபிரகாமிடம், ‘அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்’ என்று சொன்னார். (ஆதி. 21:8-12) ஆபிரகாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார்; சாராள் சொன்னதைக் கேட்டு அவள் விருப்பப்படி செய்தார்.
18. அபிகாயில் எப்படித் தானாகவே செயல்பட்டாள்?
18 அடுத்து, செல்வந்தனான நாபாலின் மனைவி அபிகாயிலை எடுத்துக்கொள்ளுங்கள். தாவீது, பொறாமைபிடித்த சவுல் ராஜாவிடமிருந்து தப்பியோடிய சமயம், நாபாலின் மந்தைகள் கூடாரமிட்டிருந்த இடத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். தாவீதும் அவருடைய ஆட்களும் இந்தச் செல்வந்தனுடைய சொத்துப்பத்துகளை அபகரிக்கவில்லை; மாறாக, அவற்றுக்குக் காவலாக இருந்தார்கள். நாபாலோ ‘முரடனும் மோசமானவனாகவும்’ இருந்தான்; ஒன்றுக்கும் உதவாதவனாக,’ ‘புத்தியில்லாதவனாக இருந்தான்.’ தாவீதின் ஆட்கள் தங்களுக்கு உணவுப்பொருள்களைத் தரும்படி அவனிடம் போய் மரியாதையுடன் கேட்டபோது, அவன் ஒரேயடியாக மறுத்துவிட்டான். தாவீதின் ஆட்களிடம் ‘சீறினான்.’ ‘நடந்த சம்பவங்களை அபிகாயில் கேள்விப்பட்டபோது என்ன செய்தாள்? நாபாலிடம் எதையுமே சொல்லிக்கொள்ளாமல், “தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து,” தாவீதிடமும் அவருடைய ஆட்களிடமும் கொண்டுபோய்க் கொடுத்தாள். அபிகாயில் செய்தது சரியா? சரிதான். அதன்பின் நடந்த சில சம்பவங்கள் அவள் செய்தது சரியே என்பதைக் காட்டுகின்றன. ‘யெகோவா நாபாலை வாதித்ததினால், அவன் செத்தான்’ என்று பைபிள் சொல்கிறது. பிற்பாடு, தாவீது அபிகாயிலைத் திருமணம் செய்துகொண்டார்.—1 சா. 25:3, 14-19, 23-25, 38-42; NW.
‘புகழப்படுகிற பெண்’
19, 20. உண்மையிலேயே புகழப்படுவதற்கு ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்?
19 யெகோவாவுக்குப் பிரியமான விதத்தில் நடந்துகொள்கிற மனைவியை பைபிள் மெச்சுகிறது. ‘குணசாலியான பெண்ணை’ நீதிமொழிகள் புத்தகம் இப்படிப் புகழ்கிறது: “அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.” அதோடு, “தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள். அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து . . . அவளைப் புகழுகிறான்.”—நீதி. 31:10-12, 26-29.
20 உண்மையிலேயே புகழப்படுவதற்கு ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்? ‘சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், யெகோவாவுக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்’ என்று நீதிமொழிகள் 31:30 சொல்கிறது. யெகோவாவுக்குப் பயப்படுவதில் அவர் ஏற்படுத்தியிருக்கிற தலைமை ஸ்தானத்திற்கு மனமுவந்து கீழ்ப்படிவதும் உட்பட்டிருக்கிறது. “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்; ஆணுக்குக் கிறிஸ்து தலையாக இருக்கிறார்; கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—1 கொ. 11:3.
கடவுளின் பரிசுக்கு நன்றியோடிருங்கள்
21, 22. (அ) கடவுள் தந்துள்ள திருமணம் என்ற பரிசுக்காகத் தம்பதியர் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்? (ஆ) யெகோவா ஏற்படுத்தியுள்ள அதிகாரத்திற்கும் தலைமை ஸ்தானத்திற்கும் நாம் ஏன் மரியாதை காட்ட வேண்டும்? (பக்கம் 17-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
21 திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு நன்றியோடிருக்க எத்தனை எத்தனையோ காரணங்கள் உள்ளன. சந்தோஷமான தம்பதியராக, மணவாழ்வுக்கு அவர்கள் மணம் சேர்க்கலாம். கடவுள் தந்திருக்கிற இந்தப் பரிசுக்கு அவர்கள் நன்றி காட்டலாம். ஏனென்றால், மனமொத்த தம்பதியராய் யெகோவாவோடு நடக்க மணவாழ்வு அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. (ரூத் 1:9; மீ. 6:8) மணவாழ்வில் வசந்தம் வீச என்ன தேவை என்பது மணவாழ்வைத் துவக்கி வைத்தவரான யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். எனவே, எப்போதும் அவருக்குப் பிரியமாக நடங்கள்; அப்படி நடந்தால், இன்றைய தொல்லைமிகுந்த உலகத்திலும்கூட ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலனாக’ இருக்கும்.—நெ. 8:10.
22 தன்னைப் போலவே தன் மனைவியையும் நேசிக்கிற ஒரு கிறிஸ்தவ கணவர் கனிவோடும் கரிசனையோடும் தலைமை ஸ்தானத்தை வகிப்பார். தேவபயமுள்ள அவருடைய மனைவி அவருக்கு உறுதுணையாக இருந்து ஆழ்ந்த மரியாதை காட்டுவாள்; இவ்வாறு அவருடைய அன்பு மனைவியாக விளங்குவாள். இப்படிப்பட்ட தம்பதியர் மணவாழ்க்கைக்கு மகுடம் சேர்ப்பார்கள்; அதுமட்டுமல்ல, கடவுளாகிய யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பார்கள்; அவரே என்றென்றும் நம் புகழுக்குரியவர்!
-