நினைவு ஆசரிப்பை தகுதியுள்ள விதத்தில் அனுசரியுங்கள்
நிசான் 14, பொ.ச. 33, சாயங்காலத்தின்போதுதான் இயேசு நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தார்.a அவருடைய 12 அப்போஸ்தலர்களுடன் பஸ்காவை அப்போதுதான் அனுசரித்து முடித்திருந்தார், ஆகவே அந்தத் தேதியைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம். நம்பிக்கைத்துரோகியான யூதாஸை அனுப்பிய பிறகு, இயேசு “அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக்கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது . . . என்றார்.”—மாற்கு 14:22-25.
தம்முடைய மரணத்தை அதற்கிருக்கும் முக்கியத்துவத்தின் காரணமாக நினைவுகூரும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கட்டளையிட்டார். (லூக்கா 22:19; 1 கொரிந்தியர் 11:23-26) அவருடைய பலி மாத்திரம்தான் மனிதவர்க்கத்தை சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் மற்றும் மரணத்தின் சாபத்திலிருந்து மீட்டுக்கொள்ள முடிந்தது. (ரோமர் 5:12; 6:23) அவர் பயன்படுத்தின அப்பமும் திராட்சரசமும் அவருடைய பரிபூரண சரீரத்திற்கும் இரத்தத்திற்கும் அடையாளங்களாக இருந்தன. அந்த அசல் தேதியை தெரிந்தவர்களாக, யூத பஸ்காவைக் குறித்ததில் செய்யப்பட்டதுபோலவே, ஒவ்வொரு வருடமும் அதற்கு ஒத்த தேதியில் அந்த நிகழ்ச்சியை நாம் அனுசரிக்க முடியும். ஆனால் அதை தகுதியுள்ள விதத்தில் நாம் செய்யவேண்டும். ஏன்?
அப்பம் மற்றும் திராட்சரச சின்னங்களில் பங்குகொள்பவர்கள் ‘கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறார்கள்’ என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறினார். (1 கொரிந்தியர் 11:26) இவ்வாறாக, அனுசரிப்பின் மையப்பொருள் இயேசுவின் மரணத்தின்மீதும் மனிதவர்க்கத்திற்கு அது அர்த்தப்படுத்துவதன்மீதும் இருக்கும். நிகழ்ச்சி கருத்தூன்றிய விதத்தில் இருக்கக்கூடும், கடவுளுடைய நற்குணத்தையும் யெகோவாவுக்கும் அவருடைய குமாரனுக்கும் நாம் காண்பிக்கவேண்டிய போற்றுதலையும் எண்ணிப்பார்ப்பதற்கு ஒரு சமயமாயிருக்கும். (ரோமர் 5:8; தீத்து 2:14; 1 யோவான் 4:9, 10) ஆகவே பவுல் எச்சரித்தார்: “இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.”—1 கொரிந்தியர் 11:27.
தகுதியுள்ள விதத்தில்—எவ்வாறு?
தெளிவாகவே, கேள்விக்குரிய பழக்கங்களிலோ அல்லது புறமத வழக்கங்களை ஏற்றுக்கொள்வதிலோ ஈடுபடுவதன் மூலமாக நாம் நிகழ்ச்சியின் புனிதத் தன்மையைக் கெடுப்பதை கடவுள் விரும்பமாட்டார். (யாக்கோபு 1:27; 4:3, 4) இது ஈஸ்டர் சமயத்தின் புகழ்பெற்ற சம்பவங்களை தடை செய்யக்கூடும். “[என்னை] நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்,” என்ற இயேசுவின் அறிவுரையை பின்பற்றும் விதத்தில், அவர் ஆரம்பித்துவைத்தபடியே நினைவு ஆசரிப்பை அனுசரிக்க நாம் விரும்பலாம். (லூக்கா 22:19; 1 கொரிந்தியர் 11:24, 25) கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் இந்த அனுசரிப்புடன் சேர்த்திருக்கும் அலங்கரிப்புகளை இது தடை செய்கிறது. “கிறிஸ்துவினாலும் அவருடைய அப்போஸ்தலர்களாலும் பின்பற்றப்பட்ட மிகவும் சாதாரணமான அனுசரிப்பிலிருந்து இன்றைய பூசை மிகவும் வித்தியாசப்படுகிறது,” என்பதாக புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா என்ற ஆங்கில புத்தகம் ஒப்புக்கொள்கிறது. அந்தப் பூசையை அடிக்கடி, தினந்தோறும்கூட, அனுசரிப்பதன் மூலமாக கிறிஸ்தவமண்டலம் இயேசு எதை உத்தேசித்திருந்தாரோ அதிலிருந்து விலகி அதை ஒரு சாதாரண சம்பவமாக ஆக்கியிருக்கிறது.
அபாத்திரமாய் பங்குகொள்பவர்களைக் குறித்து கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார், ஏனென்றால் கர்த்தருடைய இராப்போஜனத்தைக் குறித்து ஒரு பிரச்சினை சபையிலே எழும்பியிருந்தது. சிலர் அதன் புனிதத்தன்மையை மதிக்கவில்லை. உணவை தங்களுடன் எடுத்துவந்து கூட்டத்திற்கு முன்பாகவும் அதற்கு பின்பாகவும் சாப்பிட்டார்கள். அடிக்கடி அவர்கள் மிதமிஞ்சி புசித்து, குடித்தார்கள். இது அவர்களை தூங்கிவிழச்செய்து அவர்களுடைய உணர்ச்சிகளை மந்தப்படுத்தியது. மனதின் பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் விழிப்புடன் இல்லாததன் காரணமாக, அவர்களால் ‘சரீரம் இன்னதென்று நிதானித்து அறிய’ முடியவில்லை, இவ்வாறாக ‘கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவர்களாக’ ஆனார்கள். இதற்கிடையில், சாப்பிடாதவர்கள் பசியோடு இருந்ததன் காரணமாக அவர்களுடைய கவனமும் சிதறடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட எவருமே போற்றுதலோடும் அந்த நிகழ்ச்சியின் கருத்தூன்றியதன்மையைக் குறித்து—அதாவது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூருவதற்கு இந்த அனுசரிப்பு இருந்தது என்பதை குறித்து—முழுமையான உணர்வோடும் அந்தச் சின்னங்களில் பங்குகொள்ளும் ஒரு நிலையில் இல்லை. இது அவர்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பில் முடிவடைந்தது, ஏனெனில் அவர்கள் அதற்கு அவமரியாதையை, வெறுப்பையும்கூட காண்பித்தார்கள்.—1 கொரிந்தியர் 11:27-34.
பகுத்துணர்வு அவசியம்
நினைவு ஆசரிப்பு சின்னங்களில் சிலர் பங்குகொண்டிருக்கின்றனர், எனினும், பின்பு அவ்வாறு தாங்கள் செய்திருக்கக்கூடாது என்பதாக உணர்ந்தனர். நினைவு ஆசரிப்பு சின்னங்களில் தகுதியோடு பங்குகொள்பவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தளவுக்கு கடவுளுடைய ஆவியின் அத்தாட்சியைக் கொண்டிருக்கின்றனர். (ரோமர் 8:15-17; 2 கொரிந்தியர் 1:21, 22) அவர்களுடைய சொந்த முடிவோ அல்லது தீர்மானமோ அவர்களை தகுதியுள்ளவர்களாக ஆக்குவதில்லை. கடவுள், பரலோகத்திலே கிறிஸ்துவுடன் அரசாட்சி செய்யப்போகிறவர்களின் எண்ணிக்கையை 1,44,000 என்பதாக கட்டுப்படுத்தியிருக்கிறார். கிறிஸ்துவினுடைய மீட்கும்பொருளிலிருந்து நன்மையடையும் எல்லாரோடும் ஒப்பிடும்போது இது ஓரளவு சிறிய எண்ணிக்கையாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:1, 3) அவர்களை தேர்ந்தெடுப்பது இயேசுவின் நாளில் ஆரம்பமானது, அதன் காரணமாக இன்று சிலரே பங்குகொள்பவர்களாக இருக்கின்றனர். மரணம் அவர்களில் சிலரை வெற்றிகொள்வதன் காரணமாக, அந்த எண்ணிக்கை குறையவேண்டும்.
ஒருவர் ஏன் அந்தச் சின்னங்களில் தகுதியில்லாமல் பங்குகொள்ளக்கூடும்? எல்லா உண்மையுள்ளவர்களும் பரலோகத்திற்கு செல்கிறார்கள் என்ற பழைய மத கருத்துக்களின் காரணமாக அது ஒருவேளை இருக்கலாம். அல்லது ஆசை அல்லது சுயநலம்—ஒருவர் மற்றொருவரைக் காட்டிலும் தகுதிபெற்றவர் என்ற ஒரு உணர்ச்சியும்—முதன்மை வாய்ந்தவர்களாக இருக்கவேண்டுமென்ற ஒரு ஆவலும் அதற்கு ஒருவேளை காரணமாயிருக்கலாம். ஒருவேளை அது கடுமையான பிரச்சினைகளினாலோ அல்லது பூமியிலே வாழ்வதற்கான அக்கறையை இழக்கச் செய்யும் ஒரு விசனகரமான நிகழ்ச்சியின் காரணமாகவோ எழும்புகிற கடுமையான உணர்ச்சிகளின் விளைவாக இருக்கலாம். பரலோக அழைப்பை பெற்றிருக்கும் எவருடனாவது நெருங்கிய தோழமையைக் கொண்டிருப்பதனாலும்கூட இது ஒருவேளை இருக்கலாம். தீர்மானம் முழுமையாகவே கடவுளுடையது, நம்முடையது அல்ல என்பதை நாம் அனைவருமே நினைவில் வைக்கவேண்டும். (ரோமர் 9:16) ஆகவே ஒரு நபர், ‘சோதித்தறிந்த’ பிறகு, அவர் உண்மையில் சின்னங்களில் பங்குகொண்டிருக்கக்கூடாது என்பதாக உணர்ந்தால், இப்பொழுது அவர் அதிலிருந்து விலக வேண்டும்.—1 கொரிந்தியர் 11:28.
பரதீஸான பூமியில் நித்திய ஜீவனே பெரும்பான்மையான மனிதவர்க்கத்திற்கு முன்பாக கடவுள் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகும். அது எதிர்நோக்கப்பட வேண்டிய ஒரு மகத்தான ஆசீர்வாதம், நம்மை சுலபமாக கவரக்கூடிய ஒன்று. (ஆதியாகமம் 1:28; சங்கீதம் 37:9, 11) இந்தப் பூமியில்தான் உண்மையுள்ளவர்கள் தங்களுடைய உயிர்த்தெழுப்பப்பட்ட அன்பானவர்களுடன் மறுபடியும் ஒன்றுசேர்வார்கள், மேலுமாக ஆபிரகாம், சாராள், மோசே, ராகாப், தாவீது, முழுக்காட்டுபவனாகிய யோவான் ஆகியோரைப் போன்ற பண்டைய காலத்து நீதிமான்களை சந்திப்பார்கள். பரலோக வாழ்க்கைக்கான வழியை இயேசு திறப்பதற்கு முன்பாகவே இவர்கள் எல்லாரும் மரித்துவிட்டிருந்தார்கள்.—மத்தேயு 11:11; ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 15:20-23.
பூமிக்குரிய நம்பிக்கையுடையவர்கள் கர்த்தரின் இராப்போஜனத்தின்போது அங்கே இருப்பதன் மூலமாகவும் மரியாதையோடு கவனிப்பதன் மூலமாகவும், அப்பத்திலும் திராட்சரசத்திலும் அவர்கள் பங்குகொள்ளாவிட்டாலும்கூட அதை தகுதியுள்ள விதத்தில் அனுசரிக்கிறார்கள். அவர்களும்கூட கிறிஸ்துவினுடைய பலியிலிருந்து நன்மையடைகின்றனர், இது கடவுளுடன் ஒரு சாதகமான நிலைநிற்கையைக் கொண்டிருக்க அவர்களுக்கு உதவுகிறது. (வெளிப்படுத்துதல் 7:14, 15) கொடுக்கப்படும் பேச்சை அவர்கள் செவிகொடுத்து கேட்கும்போது, பரிசுத்தமான காரியங்களின்பேரில் உள்ள அவர்களுடைய போற்றுதல் பலப்படுத்தப்படுகிறது. மேலுமாக, எல்லா இடங்களிலும் கடவுளுடைய ஜனங்களுடன் சேர்ந்து தொடர்ந்து ஐக்கியமாக இருக்கவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது.
இந்த வருடம், ஏப்ரல் 2, செவ்வாய்க்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, பூமியெங்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய 78,000-த்திற்கும் மேலான எல்லா சபைகளிலும் நினைவு ஆசரிப்பு அனுசரிக்கப்படும். நீங்கள் அங்கே ஆஜராயிருப்பீர்களா?
[அடிக்குறிப்பு]
a யூத நாள் சாயங்காலத்தில் ஆரம்பமானது. நம்முடைய நாட்காட்டியின்படி, அந்த நிசான் 14 மார்ச் 31, வியாழக்கிழமை சாயங்காலம் துவங்கி, ஏப்ரல் 1 வெள்ளிக்கிழமை சாயங்காலம் சூரிய அஸ்தமனம்வரையாக நீடித்தது. வியாழக்கிழமை சாயங்காலம் நினைவு ஆசரிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது, இயேசுவினுடைய மரணம் அதே யூத நாளான வெள்ளிக்கிழமை மதியம் நிகழ்ந்தது. அவர் மூன்றாவது நாளில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உயிர்த்தெழுப்பப்பட்டார்.
[பக்கம் 8-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள் வருடத்திற்கு ஒருமுறை நினைவு ஆசரிப்பை அனுசரிக்கின்றனர்