“இவைகளில் அன்பே பெரியது”
“இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.”—1 கொரிந்தியர் 13:13.
1. அன்பைக் குறித்து ஒரு மனித இன ஆய்வாளர் என்ன சொல்லியிருக்கிறார்?
உலகின் முன்னணி மனித இன ஆய்வாளர்களில் ஒருவர் ஒரு சமயம் இவ்வாறு சொன்னார்: “எல்லா மனித அடிப்படை மனோஇயல்பான தேவைகளிலும் அதிமுக்கியமானது அன்பே என்பதை நம்முடைய உயிரின வகை வரலாற்றில் முதல் முறையாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய சூரிய மண்டலத்தின் மையத்தில் சூரியன் இருக்க, கிரகங்கள் அதைச் சுற்றி வருவது போல, அன்பு எல்லா மனித தேவைகளின் மையத்தில் இருக்கிறது. அன்பு செலுத்தப்படாத ஒரு குழந்தை, அன்பு செலுத்தப்பட்ட குழந்தையிலிருந்து உயிர் வேதியல் ரீதியிலும், உடல் ரீதியிலும், மனோ இயல்பிலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. முன்னது பின்னதைவிட வித்தியாசமாகக்கூட வளர்ந்துவருகிறது. வாழ்வதும் அன்புசெலுத்துவதும் ஒன்றே என்பது போல வாழவே மனிதன் பிறந்திருக்கிறான் என்பதே இப்பொழுது நாம் அறிந்திருப்பதாகும். இது நிச்சயமாகவே புதிய ஒன்றல்ல. மலைப்பிரசங்கத்தில் இது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது.”
2 ஆம், உலகப்பிரகாரமான அறிவு பெற்ற இந்த மனிதன் ஒப்புக்கொண்டது போல, மனிதனின் சுகநலத்துக்கு அன்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய இந்த உண்மை, புதிய ஏதோ ஒன்றல்ல. உலகிலுள்ள கல்விமான்களால், அது இப்பொழுதுதானே மதித்துணரப்பட்டு வருவதாக இருக்கலாம், ஆனால் அது 19 நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே கடவுளுடைய வார்த்தையில் காணப்பட்டது. அதன் காரணமாகவே அப்போஸ்தலனாகிய பவுலால் இவ்விதமாக எழுத முடிந்தது: “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.” (1 கொரிந்தியர் 13:13) அன்பு ஏன் விசுவாசத்தையும் நம்பிக்கையையும்விட பெரியது என்பது உங்களுக்குத் தெரியுமா? அன்பு, கடவுளுடைய குணாதிசயங்களிலும், அவருடைய ஆவியின் கனிகளிலும் ஏன் மிகப் பெரியது என்று சொல்லப்படலாம்?
அன்பின் நான்கு வகைகள்
3. காதலுக்கு என்ன வேதப்பூர்வமான உதாரணங்கள் இருக்கின்றன?
3 அன்பு செலுத்த மனிதனுக்கிருக்கும் திறமை, கடவுளுடைய ஞானத்தையும் மனிதவர்க்கத்திடமாக அவருடைய அன்புள்ள அக்கறையையும் தெரிவிப்பதாக இருக்கிறது. பண்டைய கிரேக்கர்கள், “அன்பு”க்கு நான்கு வார்த்தைகளைக் கொண்டிருந்தது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. ஒன்று ஈராஸ், பாலின கவர்ச்சியோடு சம்பந்தப்பட்ட காதல்வயப்படும் அன்பைக் குறிக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க எழுத்தாளர்களுக்கு ஈராஸ்-ஐ பயன்படுத்த எந்தச் சந்தர்ப்பமும் இருக்கவில்லை, செப்டுவஜின்ட் இதன் சில வகைகளை நீதிமொழிகள் 7:18 மற்றும் 30:16-ல் பயன்படுத்துகிறது, எபிரெய வேதாகமத்தில் காதல் பற்றிய மற்ற குறிப்புரைகள் இருக்கின்றன. உதாரணமாக ஈசாக்கு ரெபெக்காளை “நேசித்தான்” என்று நாம் வாசிக்கிறோம். (ஆதியாகமம் 24:67) இந்த வகையான அன்புக்கு உண்மையில் குறிப்பிடத்தக்க ஓர் உதாரணம் யாக்கோபின் விஷயத்தில் காணப்படுகிறது. இவன் பார்க்க அழகாக இருந்த ராகேல் மீது முதல் சந்திப்பிலேயே காதல் கொண்டான். உண்மையில், “யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள்பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.” (ஆதியாகமம் 29:9–11, 17, 20) உன்னதப்பாட்டும்கூட ஒரு மேய்ப்பனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயுள்ள காதலை பற்றி பேசுகிறது. ஆனால் அதிகமான மனநிறைவுக்கும் சந்தோஷத்துக்கும் காரணமாயிருக்கும் இவ்வகையான அன்பு கடவுளுடைய நீதியான தராதரங்களுக்கிசைவாக மாத்திரமே காண்பிக்கப்பட வேண்டும் என்பதை அதிக பலமாக அழுத்திக் கூறாமல் இருக்க முடியாது. ஒரு மனிதனின் சட்டப்பூர்வமாக விவாகம் செய்யப்பட்ட மனைவியின் அன்பில் மாத்திரமே அவன் “எப்பொழுதும் மயங்கியிருக்கக்கூடும்” என்பதாக பைபிள் நமக்குச் சொல்லுகிறது.—நீதிமொழிகள் 5:15–20.
4. குடும்ப அன்பு எவ்விதமாக வேதாகமத்தில் விளக்கப்பட்டிருக்கிறது?
4 பின்னர் இரத்த சம்பந்தமான உறவு முறைகளை அடிப்படையாகக் கொண்ட பலமான குடும்ப அன்பு அல்லது இயல்பான பாசம் இருக்கிறது, இதற்கு ஸ்டார்கே என்ற வார்த்தையைக் கிரேக்கர்கள் உடையவர்களாக இருந்தனர். “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்ற பழமொழிக்கு இதுவே காரணமாகும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் மரியாளும் மார்த்தாளும் தங்கள் சகோதரன் லாசருவின் மீது கொண்டிருந்த அன்பாகும். அவன் அவர்களுக்கு அதிகத்தை அர்த்தப்படுத்தினான் என்பது அவனுடைய திடீர் மரணம் குறித்து அவர்கள் எவ்வளவாய்த் துயரமடைந்தார்கள் என்பதிலிருந்து காணமுடிகிறது. இயேசு அவர்களுடைய அன்புக்குரிய லாசருவை உயிருக்குக் கொண்டு வந்தபோது அவர்கள் எவ்வளவாய்க் களிகூர்ந்தார்கள்! (யோவான் 11:1–44) ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பு, இவ்வகையான அன்புக்கு மற்றொரு உதாரணமாகும். (1 தெசலோனிக்கேயர் 2:7 ஒப்பிடவும்.) ஆக, சீயோன் மீது தமக்கிருக்கும் அன்பு எவ்வளவு பெரியது என்பதை யெகோவா அழுத்திக் காண்பிப்பதற்காக, அது ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பைக் காட்டிலும் மிக அதிகமானது என்பதாகச் கொன்னார்.—ஏசாயா 49:15.
5. சுபாவ அன்பு இல்லாமை இன்று எவ்விதமாக காணப்படுகிறது?
5 “கையாளுவதற்குக் கடினமான காலங்களாக” இருக்கும் “கடைசி நாட்களில்” நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஓர் அடையாளம் “சுபாவ அன்பில்லா”மையாகும். (2 தீமோத்தேயு 3:1, 3, NW) குடும்ப அன்பு இல்லாமையின் காரணமாக சில இளைஞர் வீட்டை விட்டு ஓடிப்போகின்றனர், வளர்ந்த பிள்ளைகள் வயதான தங்கள் பெற்றோர்களை அசட்டை செய்கின்றனர். (நீதிமொழிகள் 23:22 ஒப்பிடவும்.) குழந்தைகள் துர்ப்பிரயோகம் செய்யப்படுவதிலும்கூட இயல்பான பாசம் குறைவுபடுவது காணப்படுகிறது—சில பெற்றோர், தங்கள் பிள்ளைகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கும் அளவுக்கு அவர்களை மோசமாக அடித்துவிடுகின்றனர். அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிட்சிக்கத் தவறுவதிலும்கூட பெற்றோரின் அன்பு குறைவுபடுவது காணப்படுகிறது. பிள்ளைகளை அவர்களுடைய சொந்த வழியில் செல்ல அனுமதிப்பது அன்புக்கு அத்தாட்சியாக இல்லாமல், ஆனால் குறைந்தபட்ச எதிர்ப்பான போக்கைத் தொடருவதற்கு சமமாக இருக்கிறது. தன் பிள்ளைகளை உண்மையாக நேசிக்கும் ஒரு தகப்பன், தேவைப்படும் போது அவர்களை சிட்சிப்பான்.—நீதிமொழிகள் 13:24; எபிரெயர் 12:5–11.
6 பின்னர், நண்பர்களிடையே, இரண்டு முதிர்ந்த ஆண்கள் அல்லது பெண்களிடையே காணப்படுவது போன்ற (எந்தப் பாலின ஈடுபாடும் இல்லாத) பாசத்தைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை ஃபீலியா இருக்கிறது. தாவீதும் யோனத்தானும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த அன்பில், இதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியை நாம் கொண்டிருக்கிறோம். யோனத்தான் யுத்தத்தில் கொல்லப்பட்ட போது, தாவீது இவ்விதமாகச் சொல்லி அவனுக்காக துக்கித்தான்: “என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப் பார்க்கிலும் அதிகமாயிருந்தது.” (2 சாமுவேல் 1:26) கிறிஸ்துவும்கூட அப்போஸ்தலனாகிய யோவானிடம் விசேஷமாக பிரியமுடையவராக இருந்தார் என்று நாம் கற்றறிகிறோம், இவன் “இயேசுவுக்கு அன்பாயிருந்த” சீஷன் என்று அறியப்பட்டிருந்தான்.—யோவான் 20:2.
7. அகாப்பே-ன் இயல்பு என்ன? இந்த அன்பு எவ்விதமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது?
7 பவுல் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பைப் பற்றி குறிப்பிட்டு “இவைகளில் அன்பே பெரியது” என்பதாகச் சொல்லிய இடமாகிய 1 கொரிந்தியர் 13:13-ல் அவன் எந்தக் கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினான்? இங்கே அகாப்பே என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதாகச் சொன்னபோது அப்போஸ்தலனாகிய யோவான் பயன்படுத்திய அதே வார்த்தை. (1 யோவான் 4:8, 16) இது நியமத்தினால் வழிநடத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் அன்பாகும். அது பாசத்தையும் பிரியத்தையும் உட்படுத்தவோ அல்லது உட்படுத்தாமலோ இருக்கலாம். ஆனால் இது பெற்றுக்கொள்பவரின் தகுதி என்னவாக இருப்பினும், கொடுப்பவருக்கு எந்த நன்மைகளும் வந்து சேராதிருப்பினும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதோடு சம்பந்தப்பட்ட சுயநலமற்ற உணர்ச்சியாக அல்லது எண்ணமாக இருக்கிறது. இவ்வகையான அன்புதானே கடவுள், தம் இருதயத்தின் அருமையான பொக்கிஷமாகிய, தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை கொடுக்கும்படியாகச் செய்தது. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு” அப்படிச் செய்தார். (யோவான் 3:16) பவுல் அத்தனை நேர்த்தியாக நமக்கு நினைப்பூட்டுவது போலவே: “நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.” (ரோமர் 5:7, 8) ஆம், அகாப்பே, வாழ்க்கையில் மற்றவர்களுடைய அந்தஸ்து என்னவாக இருப்பினும் அல்லது அன்பைக் காட்டுபவருக்கு அது என்ன செலவை உட்படுத்தினாலும் மற்றவர்களுக்கு நன்மையே செய்கிறது.
ஏன் விசுவாசத்தையும் நம்பிக்கையையும்விட பெரியது?
8. அகாப்பே ஏன் விசுவாசத்தைக் காட்டிலும் பெரியது?
8 ஆனால் இவ்வகையான அன்பு (அகாப்பே) ஏன் விசுவாசத்தைவிட பெரியது என்பதாக பவுல் சொல்கிறான்? அவன் 1 கொரிந்தியர் 13:2-ல் இவ்விதமாக எழுதினான்: “நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.” (மத்தேயு 17:20 ஒப்பிடவும்.) ஆம், அறிவைப் பெற்று விசுவாசத்தில் வளருவதற்கு நம்முடைய முயற்சிகள், சுயநலமான ஒரு நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படுமேயானால், இது கடவுளிடமிருந்து நமக்கு எந்த நன்மையும் கொண்டு வராது. அதேவிதமாகவே, இயேசு சிலர் ‘அவருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்து, அவருடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தி, அவருடைய நாமத்தினாலே பலவிதமான அற்புதங்களைச் செய்து,’ ஆனால் அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றிராதவர்களாக இருப்பார்கள் என்பதாக காண்பித்தார்.—மத்தேயு 7:22, 23.
9. அன்பு ஏன் நம்பிக்கையைவிட பெரியதாக இருக்கிறது?
9 அன்பின் அகாப்பே வடிவம் ஏன் நம்பிக்கையைவிடவும்கூட பெரியதாக இருக்கிறது? நம்பிக்கை தன்னில் ஊன்றியதாக, ஒரு நபர் தனக்கு கிடைக்கும் ஆதாயத்தின் பேரில் முக்கியமாக அக்கறையுள்ளவராக இருக்கச் செய்யக்கூடும், ஆனால் அன்பு “தற்பொழிவை” நாடுவதில்லை. (1 கொரிந்தியர் 13:4, 5) மேலுமாக நம்பிக்கை—மகா உபத்திரவத்தினூடே தப்பி புதிய உலகில் வாழ்வது போன்ற நம்பிக்கை—நம்பப்படுவது நிறைவேறுகையில் முடிவுக்கு வருகிறது. (மத்தேயு 24:21) பவுல் சொல்கிறவண்ணமாகவே: “அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.” (ரோமர் 8:24, 25) அன்புதானே சகலத்தையும் சகிக்கும், அது ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:7, 8) இவ்விதமாக சுயநலமற்ற அன்பு (அகாப்பே) விசுவாசம் அல்லது நம்பிக்கையைவிட பெரியதாக இருக்கிறது.
ஞானத்தையும் நீதியையும் வல்லமையும்விட பெரியதா?
10. கடவுளுடைய நான்கு முதன்மையான பண்புகளில் அன்பே மிகப் பெரியது என்பதாக ஏன் சொல்லப்படலாம்?
10 நாம் இப்பொழுது யெகோவா தேவனின் நான்கு முதன்மையான பண்புகளைப் பற்றி சிந்திப்போம்: ஞானம், நீதி, வல்லமை மற்றும் அன்பு. இவைகளில் அன்பே பெரியது என்பதாகவும்கூட சொல்லப்பட முடியுமா? நிச்சயமாக முடியும். ஏன்? ஏனென்றால் கடவுள் செய்யும் காரியங்களுக்கு அன்பே பின்னிருந்து உந்துவிக்கும் சக்தியாக இருக்கிறது. அதன் காரணமாகவே அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினான்: “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” ஆம், யெகோவா அன்பின் உருவாக இருக்கிறார். (1 யோவான் 4:8, 16) கடவுள் ஞானமாகவே, நீதியாகவே அல்லது வல்லமையாகவே இருக்கிறார் என்பதாக வேதாகமத்தில் நாம் எங்குமே வாசிப்பதில்லை. மாறாக, யெகோவா இந்தக் குணாதிசயங்களை உடையவராக இருக்கிறார் என்பதாக நாம் சொல்லப்படுகிறோம். (யோபு 12:13; சங்கீதம் 147:5; தானியேல் 4:37) அவரில் இந்த நான்கு பண்புகளும் பரிபூரணமாக சமநிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அன்பினால் உந்தப்பட்டவராக யெகோவா, மற்ற மூன்று குணாதிசயங்களைப் பயன்படுத்தி அல்லது அவைகளைக் கருத்தில் கொண்டு தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறார்.
11. பிரபஞ்சத்தையும், ஆவி மற்றும் மனித சிருஷ்டிகளையும் படைக்க யெகோவாவை எது தூண்டியது?
11 அப்படியென்றால் பிரபஞ்சத்தையும் புத்திக்கூர்மையுள்ள ஆவி மற்றும் மனித சிருஷ்டிகளையும் படைக்க யெகோவாவைத் தூண்டியது என்ன? அது ஞானமா அல்லது வல்லமையா? இல்லை, கடவுள் சிருஷ்டிப்பில் வெறுமென தம்முடைய ஞானத்தையும் வல்லமையையும் பயன்படுத்தினார். உதாரணமாக, நாம் வாசிக்கிறோம்: “யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தினார்.” (நீதிமொழிகள் 3:19, NW) மேலுமாக, நீதி என்ற அவருடைய பண்பு ஒழுக்க சுயாதீனமுள்ள ஆட்களை சிருஷ்டிக்கும்படியாக அவரைத் தேவைப்படுத்தவில்லை. மற்றவர்களோடுகூட புத்திக்கூர்மையுடன் வாழும் சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ள கடவுளுடைய அன்பு அவரைத் தூண்டியது. ஆதாமுடைய மீறுதலின் காரணமாக மனிதவர்க்கத்தின் மீது நீதி வைத்த பாதகமான தீர்ப்பை நீக்க அன்புதானே ஒரு வழியைக் கண்டது. (யோவான் 3:16) ஆம், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம், வரப்போகிற பூமிக்குரிய பரதீஸில் வாழவேண்டும் என்று நோக்கங்கொள்ள யெகோவாவைத் தூண்டியது அன்பே.—லூக்கா 23:43.
12. கடவுளுடைய வல்லமை, நீதி மற்றும் அன்புக்கு நாம் எவ்விதமாக பிரதிபலிக்க வேண்டும்?
12 கடவுளுடைய சர்வ வல்லமையின் காரணமாக, அவருக்கு நாம் எரிச்சலூட்ட துணியக்கூடாது. பவுல் கேட்டான்: “நாம் யெகோவாவுக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?” (1 கொரிந்தியர் 10:22, NW) நிச்சயமாகவே யெகோவா, “எரிச்சலுள்ள தேவனாக” இருப்பது கெட்ட அர்த்தத்தில் அல்ல, ஆனால் தனிப்பட்ட பக்தியைக் கேட்பதில்தானே அவர் அவ்வாறு இருக்கிறார். (யாத்திராகமம் 20:5) கிறிஸ்தவர்களாக, கடவுளுடைய ஆழங்காண முடியாத ஞானத்தின் அநேக வெளிக்காட்டல்களைக் கண்டு பிரமித்து நிற்கிறோம். (ரோமர் 11:33–35) அவருடைய நீதிக்கான நம்முடைய பெரும் மதிப்பு, வேண்டுமென்றே செய்யும் பாவங்களிலிருந்து நம்மை விலகியிருக்கச் செய்ய வேண்டும். (எபிரெயர் 10:26–31) ஆனால், கடவுளின் நான்கு முக்கிய பண்புகளில் அன்பே மிகப் பெரியது என்பதில் சந்தேகமில்லை. யெகோவாவிடம் நாம் நெருங்கி வரவும், அவரைப் பிரியப்படுத்த விரும்பவும், அவரை வணங்கவும், அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்துவதில் பங்குகொள்ளவும் நம்மை விரும்பச் செய்வது யெகோவாவின் தன்னலமற்ற அன்பே ஆகும்.—நீதிமொழிகள் 27:11.
ஆவியின் கனிகளில் மிகப்பெரியது
13. கடவுளுடைய ஆவியின் கனிகளில் அன்பு எந்த இடத்தைப் பெறுகிறது?
13 கலாத்தியர் 5:22, 23-ல் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளுடைய ஆவியின் ஒன்பது கனிகளின் மத்தியில் அன்பு எந்த இடத்தைப் பெறுகிறது? இவை “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” நல்ல காரணத்தோடு பவுல் அன்பை வரிசையில் முதலில் வைக்கிறான். அன்பு, அவன் அடுத்துக் குறிப்பிடும் குணமாகிய சந்தோஷத்தைவிட பெரியதா? ஆம், அன்பில்லாமல் நிலையான சந்தோஷம் இருக்க முடியாது. உண்மையில், சுயநலத்தினால், அன்பில்லாமையால் உலகம் இத்தனை சந்தோஷமில்லாமல் இருக்கிறது. ஆனால் யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்குள் அன்புள்ளவர்களாகவும், தங்கள் பரலோக தகப்பனிடம் அன்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சந்தோஷமுள்ளவர்களாக இருக்க நாம் எதிர்பார்க்க வேண்டும், அவர்கள் “மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்” என்பதாக முன்னறிவிக்கப்பட்டது.—ஏசாயா 65:14.
14. ஆவியின் கனியாகிய சமாதானத்தைவிட அன்பு பெரியது என்று ஏன் சொல்லப்படலாம்?
14 ஆவியின் கனியாக சமாதானத்தை விடவும்கூட அன்பு பெரியதாக இருக்கிறது. அன்பு இல்லாமையின் காரணமாக, உலகம் பிணக்கங்களாலும் சச்சரவுகளாலும் நிறைந்திருக்கிறது. ஆனால் யெகோவாவின் மக்கள் பூமி முழுவதிலும் ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாக இருக்கிறார்கள். சங்கீதக்காரனின் வார்த்தைகள் அவர்களுடைய விஷயத்தில் உண்மையாக இருக்கின்றது: “யெகோவா தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி அவர்களை ஆசீர்வதிப்பார்.” (சங்கீதம் 29:11, NW) அவர்கள் இந்தச் சமாதானத்தை உடையவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் அன்பு என்ற மெய் கிறிஸ்தவர்களின் அடையாளக்குறியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். (யோவான் 13:35) பிரிவினை சக்திகள்—இன, தேசீய அல்லது கலாச்சாரம்—அது எதுவாக இருப்பினும் அன்பு மாத்திரமே அதை மேற்கொள்ள முடியும். அதுவே “பூரண சற்குணத்தின் கட்டாக” இருக்கிறது.—கொலோசெயர் 3:14.
15. ஆவியின் கனியாகிய நீடிய பொறுமையோடு ஒப்பிட, அன்பின் உச்ச உயர்நிலையான பங்கு எவ்விதமாகக் காணப்படுகிறது?
15 பொல்லாப்பை அல்லது சினமூட்டப்படுதலை பொறுமையாக சகித்திருக்கும் நீடிய பொறுமையோடு ஒப்பிடுகையிலும்கூட அன்பின் உச்ச உயர்நிலையான பங்கைக் காண முடிகிறது. நீடிய பொறுமையோடிருப்பது என்பது, பொறுமையையும் கோபிக்க தாமதமாயும் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. மக்களைப் பொறுமையிழந்து உடனடியாகக் கோபப்படச் செய்வது என்ன? அது அன்பில்லாமையே அல்லவா? என்றபோதிலும், நம்முடைய பரலோக தகப்பன் நீடிய பொறுமையுள்ளவராயும், “கோபிக்க தாமதிக்கிறவராயும்” இருக்கிறார். (யாத்திராகமம் 34:6; லூக்கா 18:7) ஏன்? ஏனென்றால் அவர் நம்மை நேசிக்கிறார், ‘ஒருவரும் கெட்டுப் போவதை அவர் விரும்புகிறதில்லை.’—2 பேதுரு 3:9.
16. அன்பு எவ்விதமாக தயவு, நற்குணம், சாந்தம் மற்றும் இச்சையடக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது?
16 அன்பு ஏன் விசுவாசத்தைவிட பெரியது என்பதை நாம் முன்னர் பார்த்தோம்; இதற்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் ஆவியின் மீதமுள்ள கனிகளாகிய தயவு, நற்குணம், சாந்தம் மற்றும் இச்சையடக்கத்துக்குப் பொருந்தும். இவையனைத்தும் அவசியமான குணங்களே, ஆனால் 1 கொரிந்தியர் 13:3-ல் பவுல் குறிப்பிட்டது போல அன்பில்லாவிட்டால் அவை நமக்குப் பிரயோஜனமாயிருக்காது. அவன் எழுதினான்: “எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.” மறுபட்சத்தில் அன்புதானே தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் மற்றும் இச்சையடக்கம் போன்ற குணங்களை பிறப்பிக்கிறது. இதன் காரணமாகவே, பவுல் அன்பு தயவுள்ளது என்றும் அது “சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்” என்பதாக தொடர்ந்து சொல்கிறான். ஆம் “அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:4, 7, 8) ஆவியின் மற்ற கனிகள் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்பின் வெளிக்காட்டல்களாக அல்லது பல்வேறு அம்சங்களாக இருப்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. மெய்யாகவே, ஆவியின் எல்லா ஒன்பது கனிகளிலும் அன்பு நிச்சயமாகவே மிகப் பெரியது என்று அர்த்தமாகிறது.
17 கடவுளுடைய ஆவியின் கனிகளில் அன்பே மிகப் பெரியது என்ற முடிவை, பவுலின் வார்த்தைகள் ஆதரிப்பதாக உள்ளது: “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். இந்தக் கற்பனைகள் . . . உன்னிடத்தில் நீ அன்புகூருகிறது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.” (ரோமர் 13:8–10) சீஷனாகிய யாக்கோபு, ஒருவர் தன்னிடத்தில் அன்புகூருவது போல அயலானிடத்தில் அன்புகூரும் இந்தப் பிரமாணத்தை “ராஜரீக பிரமாணம்” என்பதாகக் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகவே இருக்கிறது.—யாக்கோபு 2:8.
18. அன்பே மிகப் பெரிய பண்பு என்பதற்கு என்ன மேலுமான அத்தாட்சி இருக்கிறது?
18 அன்பே மிகப் பெரிய பண்பு என்பதற்கு இன்னும் அதிகமான அத்தாட்சி இருக்கிறதா? ஆம், நிச்சயமாகவே. வேதபாரகன் ஒருவன் இயேசுவிடம் “கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது” என்று கேட்ட போது என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இயேசு பத்து கற்பனைகளில் ஒன்றை எடுத்து மேற்கோள் காட்டுவார் என்பதாக அவன் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இயேசு உபாகமம் 6:4, 5-லிருந்து மேற்கோள் காண்பித்து சொன்னார்: “கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா. உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.” பின்னர் இயேசு மேலுமாகச் சொல்கிறார்: “இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை.”—மாற்கு 12:28–31, NW.
19. அகாப்பே-யின் முதன்மையான ஒரு சில கனிகள் யாவை?
19 மெய்யாகவே, பவுல் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பை குறிப்பிட்டு “இவைகளில் அன்பே பெரியது” என்பதாகச் சொன்னபோது அவன் மிகைப்படுத்திச் சொல்லிக் கொண்டில்லை. அன்பைக் காண்பிப்பது நம்முடைய பரலோகத் தகப்பனோடும், சபையிலுள்ளவர்கள் மற்றும் நம்முடைய குடும்ப அங்கத்தினர்கள் உட்பட மற்றவர்களோடும் நல்ல உறவுகளில் விளைவடைகிறது. அன்பு நம்மீது கட்டியெழுப்பும் ஒரு பாதிப்பை உடையதாக இருக்கிறது. உண்மையான அன்பு எத்தனை பலனளிப்பதாக இருக்கக்கூடும் என்பதை அடுத்தக் கட்டுரை காண்பிக்கும். (w90 11/15)
உங்களுடைய விடைகள் என்ன?
◻ அன்பு எவ்விதமாக விசுவாசத்தையும் நம்பிக்கையையும்விட பெரியதாக இருக்கிறது?
◻ அகாப்பே என்பது என்ன? இப்படிப்பட்ட அன்பு எவ்விதமாகக் காண்பிக்கப்படுகிறது?
◻ கடவுளுடைய நான்கு அடிப்படை குணாதிசயங்களில் அன்பு ஏன் மிகப் பெரியதாக இருக்கிறது?
◻ அன்பு என்னவிதங்களில் ஆவியின் மற்ற கனிகளைவிட பெரியதாக இருக்கிறது?
2. (எ) அப்போஸ்தலனாகிய பவுல் அன்பின் முக்கியத்துவத்தை எவ்விதமாக காண்பித்தார்? (பி) என்ன கேள்விகள் இப்பொழுது சிந்திக்க தகுதியுள்ளவையாக இருக்கின்றன?
6. நண்பர்களிடையே பாசத்துக்கு வேதப்பூர்வமான உதாரணங்களைக் கொடுங்கள்.
17. அன்பே ஆவியின் மிகப் பெரிய கனி என்ற முடிவை எந்த வேதப்பூர்வமான கூற்றுகள் ஆதரிக்கின்றன?
[பக்கம் 13-ன் படம்]
ஒரு பூமிக்குரிய பரதீஸில் வாழ்வதற்காக மனிதவர்க்கத்தைப் படைக்க அன்பு கடவுளைத் தூண்டியது. அங்கிருக்க நீங்கள் நம்பிக்கையாயிருக்கிறீர்களா?