வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
◼ 1 கொரிந்தியர் 15:5-ல் குறிப்பிட்டிருக்கிற இயேசு தரிசனமான, அந்த “பன்னிருவர்” யாவர்?
1 கொரிந்தியர் 15:5-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் இயேசுவின் தரிசனம் யோவான் 20:26-29-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தோமாவை உட்படுத்திய அதே சம்பவம் போல் தோன்றுகிறது. இருந்தபோதிலும், இது அப்போஸ்தலர்களை ஒரு குழுவாக குறிப்பிடுகிறது. இதில் மாத்தியாவும் ஒருவனாக இருந்திருக்கக்கூடும்.
உயிர்த்தெழுதல் சம்பந்தமாக சிந்திக்கும்போது, உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு மனிதர்களுக்கு இயேசு அளித்த தரிசனங்கள் பற்றி, பவுல் எழுதினார். கிறிஸ்துவைப்பற்றி அப்போஸ்தலன் கூறும்போது: “கேபாவுக்கும் பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன் பின்பு அவர் ஐந்நூறுபேருக்கும் அதிகமான சகோதரருக்கும் தரிசனமானார்” என்று கூறுகிறான்.—1 கொரிந்தியர் 15:5, 6.
சீஷர்களாக யாரெல்லாம் இயேசுவைப் பின்பற்றினார்களோ அவர்களில் 12 பேரை அவர் அப்போஸ்தலர்களாக தேர்ந்தெடுத்தார். (மத்தேயு 10:2-5) யூதாஸ் காரியோத்து 12 பேரில் ஒருவனாக இருந்தான். அவன் துரோகியாக மாறி இயேசுவைக் காட்டிக் கொடுத்து பின்பு நான்றுகொண்டு செத்தான். (மத்தேயு 26:20-25; 27:3-10) இந்த 12 பேரில் இயேசுவின் மரணத்தின் போதும், உயிர்த்தெழுப்பட்ட பின்பும் 11 உண்மையான அப்போஸ்தலர்கள் மட்டுமே இருந்தனர். உயிர்த்தெழுதலுக்கும் பரலோகத்திற்கு ஏறிச் செல்வதற்கும் முன்பாக இயேசு அநேக சீஷர்களுக்கு தரிசனமானார். அதற்குப் பிறகு தானே அப்போஸ்தலர்கள் யூதாஸூக்குப் பதிலாக வேறொருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள். தெய்வீக வழிநடத்துதலின் கீழ் மத்தியா தேர்ந்தெடுக்கப்பட்டான். “அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக் கொள்ளப்பட்டான்.”—அப்போஸ்தலர் 1:6-26.
யூதாஸ் மரித்து, மத்தியா இன்னும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே “பன்னிருவருக்கும்” இயேசு தரிசனமானார் என்று ஏன் பவுல் எழுதியிருக்கிறான் என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், “பதினோரு அப்போஸ்தலர்கள்” மட்டுமே முதலாவதாக இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.—லூக்கா 6:13-16.
பொதுவாக பேசும் போது ஓர் ஆள் இல்லாத போதிலும் அனைவரையும் சேர்த்து ஒரு குழுவாக பேசுவது இயல்பான காரியம். (“நிர்வாகக் குழுவினர் தீர்மானித்தார்கள் . . . ” “மூப்பர் குழு கூடியது . . . ”) எனவே ஒருவர் அல்லது இருவர் இல்லாவிட்டாலும் அந்த அப்போஸ்தலர்களின் முழு குழுவையும் குறிப்பதற்கு “பன்னிருவர்” என்ற பதம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. (அப்போஸ்தலர் 6:1-6-ஐ ஒப்பிடவும்.) முதலாவதாக இயேசு சீஷர்களுக்குப் பூட்டப்பட்ட அறையிலே தரிசனமான போது “பன்னிருவரில் ஒருவனாகிய தோமா என்பவன் அவர்களுடனே கூட இருக்கவில்லை” எட்டு நாட்களுக்குப் பிறகு அவன் அங்கு இருந்தான் அவனுடைய சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. (யோவான் 20:19-29) மத்தியா, யூதாஸூக்குப் பதிலாக நியமிக்கப்பட தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, வெகுகாலமாக சீஷனாக இருந்தான். (அப்போஸ்தலர் 1:21, 22) அவன் ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலர்களுடன் அதிக நெருக்கமாக கூட்டுறவு கொண்டிருந்ததாலும் “அவர்களோடு கணக்கிடப்பட்டவனாக” இருந்ததாலும் இயேசு “பன்னிருவருக்கு” தரிசனமானார் என்ற நடந்த சம்பவத்தைக் குறித்து சொல்லும்போது மத்தியாவும் சேர்த்துக் கொள்ளப்பட்டான். (w88 1⁄15)