‘தேவனே விளையச்செய்கிறார்’!
“நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.”—1 கொ. 3:7.
1. நாம் ‘தேவனுக்கு உடன்வேலையாட்களாக’ இருப்பது எவ்வாறு?
‘தேவனுக்கு உடன்வேலையாட்கள்.’ நம்மெல்லாருக்கும் இருக்கிற அரும்பெரும் பாக்கியத்தை அப்படித்தான் அப்போஸ்தலன் பவுல் விவரித்தார். (1 கொரிந்தியர் 3:5-9-ஐ வாசியுங்கள்.) சீஷராக்கும் வேலையைப் பற்றித்தான் இங்கு பவுல் குறிப்பிட்டார். விதை விதைத்துத் தண்ணீர் பாய்ச்சும் வேலைக்கு இதை அவர் ஒப்பிட்டார். மிக முக்கியமான இந்த வேலையை நல்ல முறையில் செய்வதற்கு யெகோவாவின் உதவி நமக்குத் தேவை. “விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்” என்பதை பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார்.
2. ‘தேவனே விளையச்செய்கிறார்’ என்ற உண்மை, ஊழியத்தைச் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்க நமக்கு உதவுமென ஏன் சொல்லலாம்?
2 தேவனே விளையச்செய்கிறார் என்ற இந்த உண்மை, ஊழியத்தைச் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்க நமக்கு உதவுகிறது. பிரசங்கித்துச் சீஷராக்கும் வேலையை நாம் ஊக்கமாகச் செய்தாலும், அதன்மூலம் கிடைக்கும் பலனுக்கான எல்லாப் புகழும் யெகோவாவையே சேரும். ஏன் அப்படிச் சொல்கிறோம்? நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், சீஷராக ஒரு நபர் எப்படி முன்னேற்றம் அடைகிறார் என்பதை நாம் யாரும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது; அப்படியிருக்க, அவருடைய முன்னேற்றம், அதாவது வளர்ச்சி நம்முடைய கையில் இல்லை. இதை சாலொமோன் ராஜா சரியாகவே இவ்வாறு குறிப்பிட்டார்: ‘எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களை நீ அறியாய்.’—பிர. 11:5.
3. சீஷராக்கும் வேலை எவ்வாறு விதைக்கும் வேலையைப் போன்றிருக்கிறது?
3 ஒருவர் எவ்வாறு சீஷராக முன்னேற்றம் அடைகிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியாதிருப்பது, அந்த வேலையில் நம்மைச் சோர்வடையச் செய்கிறதா? இல்லை. மாறாக, ஆனந்தத்தோடும் ஆர்வத்தோடும் இந்த வேலையில் பங்குகொள்ளவே தூண்டுகிறது. “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே” என்று சாலொமோன் ராஜா கூறினார். (பிர. 11:6) ஆம், ஒரு விதை எங்கே முளைக்கும், அது முளைக்குமா முளைக்காதா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. இதுபோன்ற அநேக காரியங்கள் நமக்குத் தெரியாது. சீஷராக்கும் வேலையும் ஏறக்குறைய இதைப் போன்றதே. இந்த விஷயத்தை இரண்டு உவமைகள்மூலம் இயேசு விளக்கினார். அவை மாற்கு புத்தகத்தில் 4-ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு உவமைகளிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
வெவ்வேறு இடங்கள்
4, 5. விதைக்கிறவரைப் பற்றி இயேசு சொன்ன உவமையைச் சுருக்கமாகக் கூறுங்கள்.
4 ஒருவர் தூவுகிற விதை நிலத்தின் வெவ்வேறு இடங்களில் விழுகிறதென இயேசு விவரிக்கிறார். இதை மாற்கு 4:1-9-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: “கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கி வளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.”
5 அன்றைய காலத்தில், பொதுவாக விதையை அள்ளி இறைப்பார்கள். விதைப்பவர், விதைகளைத் தன் மடியிலோ அல்லது பையிலோ எடுத்துச் செல்வார்; தன் கைக்கு எட்டியவரை அவற்றை வீசி இறைப்பார். ஆகவே, இந்த உவமையில், விதைப்பவர் வேண்டுமென்றே வெவ்வேறு இடங்களில் விதைப்பதில்லை. மாறாக, தூவிய விதைகள் வெவ்வேறு இடங்களில் போய் விழுகின்றன.
6. விதைக்கிறவரைப் பற்றிய உவமையை இயேசு எவ்வாறு விளக்கினார்?
6 இந்த உவமையின் அர்த்தத்தை நாம் ஊகிக்க வேண்டியதில்லை. இயேசுவே அதை விளக்கியிருக்கிறார்; அதை மாற்கு 4:14-20-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள். அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.”
7. விதையும் வெவ்வேறு இடங்களும் எவற்றைக் குறிக்கின்றன?
7 வெவ்வேறு விதமான விதைகளை விதைப்பதாக இயேசு குறிப்பிடவில்லை என்பதைக் கவனியுங்கள். மாறாக, ஒரே விதமான விதைகள் வெவ்வேறு இடங்களில் விழுவதாகவும், வெவ்வேறு அளவில் பலன் தருவதாகவும் குறிப்பிட்டார். இயேசு குறிப்பிட்ட முதலாவது இடம் இறுகிப்போயிருந்தது; இரண்டாவது இடம், மண் அதிகமின்றி பாறை நிலமாக இருந்தது; மூன்றாவது இடம், முட்கள் நிறைந்ததாய் இருந்தது; நான்காவது இடம், விளைச்சல்தரும் நல்ல நிலமாக இருந்தது. (லூக். 8:8) அந்த விதை எதைக் குறிக்கிறது? அது, கடவுளுடைய வார்த்தையில் உள்ள ராஜ்ய நற்செய்தியைக் குறிக்கிறது. (மத். 13:19) வெவ்வேறு இடங்கள் எவற்றைக் குறிக்கின்றன? வெவ்வேறு இருதயநிலையுள்ள மக்களைக் குறிக்கின்றன.—லூக்கா 8:12, 15-ஐ வாசியுங்கள்.
8. (அ) விதைக்கிறவர் யாரைக் குறிக்கிறார்? (ஆ) ராஜ்ய பிரசங்க வேலைக்குக் கிடைக்கும் பலன்கள் ஏன் வித்தியாசப்படுகின்றன?
8 விதைக்கிறவர் யாரைக் குறிக்கிறார்? கடவுளுக்கு உடன்வேலையாட்களாக இருந்து, ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பவர்களைக் குறிக்கிறார். பவுலையும் அப்பொல்லோவையும் போல இவர்கள் நட்டு, நீர்பாய்ச்சுகிறார்கள். இவர்கள் கடினமாக உழைத்தாலும், பலன்கள் வித்தியாசப்படுகின்றன. ஏன்? ஏனென்றால், நற்செய்தியைக் கேட்போரின் மனநிலை வித்தியாசப்படுகிறது. இந்த உவமையில் சொல்லப்பட்டுள்ள விதைப்பவர், தன்னுடைய சாமர்த்தியத்தால் பலன்களைப் பெறவில்லை. இது இதயத்திற்கு இதமளிக்கும் விஷயம், அல்லவா? முக்கியமாக, சகோதர சகோதரிகள் சிலர் வருடக்கணக்கில் உண்மையாய் உழைத்திருந்தும், இன்னும் சிலர் பல பத்தாண்டுகள் உழைத்திருந்தும், சொற்பப் பலனே கிடைத்திருப்பதுபோல் உணர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இது இதமளிக்கும் விஷயம்.a ஏன் அப்படி?
9. இதயத்திற்கு இதமளிக்கும் என்ன உண்மையை அப்போஸ்தலன் பவுலும் இயேசுவும் வலியுறுத்திக் காட்டினார்கள்?
9 விதைப்பவருக்கு எந்தளவு பலன் கிடைக்கிறது என்பதை வைத்து அவருடைய உண்மைத்தன்மையை அளவிட முடியாது. அதைத்தான் பவுல் பின்வருமாறு குறிப்பிட்டார்: ‘அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.’ (1 கொ. 3:8) ஆகவே, ஒருவருடைய உழைப்புக்குத்தான் கூலி, உழைப்பின் பலனுக்கு அல்ல. இந்தக் குறிப்பையே இயேசுவும் தம்முடைய சீஷர்களுக்கு வலியுறுத்தினார். அவர்கள் பிரசங்க வேலையை முடித்துவிட்டுத் திரும்பிவந்தபோது, இயேசுவின் பெயரில் பிசாசுகளையும் அடிபணிய வைத்துவிட்டதாகச் சொல்லிச் சந்தோஷப்பட்டார்கள். அது அவர்களுக்குச் சந்தோஷமான விஷயமாக இருந்தாலும்கூட, “ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்று இயேசு அவர்களிடம் சொன்னார். (லூக். 10:17-20) சில இடங்களில், விதைப்பவர் ஏராளமான பலனைப் பெற முடியாமற்போகலாம். அதற்காக, அவர் மற்றவர்களைப்போல் உழைக்கவில்லை என்றோ உண்மைத்தன்மையுடன் உழைக்கவில்லை என்றோ அர்த்தமாகாது. பெரும்பாலும், பலன்கள் கிடைப்பது நற்செய்தியைக் கேட்பவரின் மனநிலையைப் பொறுத்துத்தான் இருக்கிறது. மொத்தத்தில் விளையச் செய்கிறவர் கடவுளே!
நற்செய்தியைக் கேட்போரின் பொறுப்பு
10. நற்செய்தியைக் கேட்கிற ஒருவர் நல்ல நிலம்போல் இருப்பாரா இல்லையா என்பதை எவை தீர்மானிக்கின்றன?
10 நற்செய்தியைக் கேட்போரைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் கேட்பார்களா இல்லையா என்பது முன்னரே தீர்மானிக்கப்படுகிறதா? இல்லை. அவர்கள் நல்ல நிலத்தைப்போல் இருப்பார்களா இல்லையா என்பது அவர்களைப் பொறுத்ததே. சொல்லப்போனால், ஒருவரது சூழ்நிலையும் மனநிலையும் சாதகமாகவோ பாதகமாகவோ மாறுவதற்கு வாய்ப்புண்டு. (ரோ. 6:17) சிலர் வசனத்தைக் “கேட்டவுடனே” சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுவதாக இயேசு அந்த உவமையில் குறிப்பிட்டார். ஆனால் இப்படிச் சம்பவிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்” என்று யாக்கோபு 4:7 கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறுகிறது, அப்படிச் செய்கையில் அவன் அவர்களைவிட்டு ஓடிப்போவான். வேறு சிலர், ஆரம்பத்தில் நற்செய்தியைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாலும், தங்களுக்குள்ளே “வேர்கொள்ளாதபடியால்” இடறல் அடைகிறார்கள் என்பதாக இயேசு விவரிக்கிறார். ஆனால் கடவுளுடைய ஊழியர்கள், ‘வேரூன்றி, நிலைபெற்றவர்களாக’ இருக்கும்படி அவர்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது; அப்போதுதான் அவர்கள், ‘கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள’ முடியும்.—எபே. 3:17-19; கொலோ. 2:6, 7.
11. கவலைகளும் ஐசுவரியமும் வசனத்தை நெருக்கிப்போடுவதை ஒருவர் எப்படித் தவிர்க்கலாம்?
11 நற்செய்தியைக் கேட்ட இன்னும் சிலர், “உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும்” உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட இடமளிப்பதாக இயேசு விவரிக்கிறார். (1 தீ. 6:9, 10) இதை அவர்கள் எப்படித் தவிர்க்கலாம்? இதற்கான பதிலை அப்போஸ்தலன் பவுல் தருகிறார்: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.”—எபி. 13:5.
12. நல்ல நிலத்தைப்போல் இருப்போர் ஏன் வெவ்வேறு அளவுகளில் பலன்கொடுக்கிறார்கள்?
12 கடைசியாக, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள், “ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்” என இயேசு கூறுகிறார். வசனத்தை ஏற்றுக்கொள்கிற சிலர், நல்ல மனநிலையுள்ளவர்களாக, பலன் தருபவர்களாக இருந்தாலும்கூட, நற்செய்தியை அறிவிக்கும் வேலையில் அவரவர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ பங்குகொள்கிறார்கள். எப்படியெனில், வயோதிகம் அல்லது வியாதி காரணமாக, பிரசங்க வேலையில் சிலரால் அதிகளவு பங்குகொள்ள முடியாமல் இருக்கலாம். (மாற்கு 12:43, 44-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) இவர்களும்கூட எந்தளவு பலன் தருகிறார்கள் என்பது விதைத்தவரின் கையில் இல்லை. ஆனாலும், யெகோவா விளையச் செய்திருப்பதைக் கண்டு அவர் அகமகிழ்கிறார்.—சங்கீதம் 126:5, 6-ஐ வாசியுங்கள்.
விதைத்துவிட்டுத் தூங்குபவர்
13, 14. (அ) விதைப்பவர் பற்றிய இயேசுவின் உவமையைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். (ஆ) விதைப்பவர் யாரைக் குறிக்கிறார், விதை எதைக் குறிக்கிறது?
13 மாற்கு 4:26-29-ல் விதைப்பவர் பற்றிய இன்னொரு உவமையை இவ்வாறு வாசிக்கிறோம்: “தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து; இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும். பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான்.”
14 இந்த உவமையில் விதைப்பவர் யாரைக் குறிக்கிறார்? இவர் இயேசுவைக் குறிப்பதாக கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த சிலர் நம்புகிறார்கள். அப்படி இருந்தால், இயேசு தூங்குவதாகவும், அதன் வளர்ச்சியை அறியாதவராகவும் இருக்கிறாரென்று எப்படிச் சொல்ல முடியும்? விதை எப்படி வளருகிறதென்று அவருக்கு நன்றாகத் தெரியுமே! மாறாக, இந்த உவமையில் வருகிற விதைப்பவர், முந்தின உவமையில் வந்தவரைப் போலவே, ராஜ்ய நற்செய்தியை அறிவிக்கிற ஒவ்வொருவரையும் குறிக்கிறார். அவர்கள், பக்திவைராக்கியமாகப் பிரசங்கிப்பதன் மூலம் ராஜ்ய விதையை விதைக்கிறார்கள். இவ்வாறு தூவப்படுகிற விதை, அவர்கள் பிரசங்கிக்கிற நற்செய்தியே.b
15, 16. இந்த உவமையில், நிஜ விதையின் வளர்ச்சியையும் சத்திய விதையின் வளர்ச்சியையும் பற்றிய என்ன குறிப்பை இயேசு விளக்குகிறார்?
15 விதைத்தவர் ‘இரவில் தூங்கி, பகலில் விழித்திருப்பதாக’ இயேசு கூறுகிறார். இவ்வாறு தூங்குவது, அவர் அலட்சியமாக இருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. பெரும்பாலோருடைய இயல்பான வாழ்க்கையையே இது சித்தரிக்கிறது. கொஞ்ச காலத்திற்குத் தொடர்ச்சியாக நடைபெறுகிற ஒரு செயலை அதாவது, பகலில் வேலைசெய்து இரவில் தூங்கும் செயலை இந்த வசனத்திலுள்ள வார்த்தைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. அந்தக் காலப்பகுதியில் என்ன நடந்ததென்று இயேசு விளக்குகிறார். ‘விதை முளைத்துப் பயிராக’ வளருகிறது என்று கூறிய அவர், ‘அவனுக்குத் தெரியாதவிதமாய்’ அது நடைபெறுவதாகவும் கூறுகிறார். அது “தானாய்” வளருகிறது என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிற குறிப்பாகும்.c
16 இயேசு இங்கே சொல்லவந்த குறிப்பு என்ன? பயிரின் வளர்ச்சியையும், அது படிப்படியாக நடைபெறுவதையும் அவர் இங்கு வலியுறுத்துவதைக் கவனியுங்கள். ‘நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், [“கடைசியில்,” NW] கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கிறது.’ (மாற்கு 4:28) இந்த வளர்ச்சி படிப்படியாகவும் ஒவ்வொரு கட்டமாகவும் நடைபெறுகிறது. இதை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது, துரிதப்படுத்தவும் முடியாது. ஆன்மீக வளர்ச்சியும் இப்படித்தான் நடைபெறுகிறது. சத்திய விதை நல்மனமுள்ள ஒருவருடைய இருதயத்தில் வளர யெகோவா அனுமதிக்கையில் அந்த வளர்ச்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெறுகிறது.—அப். 13:48; எபி. 6:1.
17. விதைத்தவர், அறுப்பு வேலையில் எவ்வாறு ஈடுபடுகிறார்?
17 ‘பயிர் விளைந்ததும்,’ அதை அறுக்கும் வேலையில் விதைத்தவர் எவ்வாறு ஈடுபடுகிறார்? ராஜ்ய நற்செய்தியைக் கேட்டவர்களின் இருதயத்தில் சத்தியம் வளரும்படி யெகோவா செய்கையில், பிற்பாடு ஒரு கட்டத்தில் தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க அவர் மீதுள்ள அன்பினால் தூண்டப்படுகிறார்கள். அதன்பிறகு தாங்கள் ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாகத் தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானம் பெறுகிறார்கள். இவர்களில் தொடர்ந்து ஆன்மீக முதிர்ச்சி அடைகிற சகோதரர்கள், படிப்படியாக சபையில் கூடுதலான பொறுப்பை ஏற்க முடிகிறது. விதை விதைத்தவரும், அந்த வேலையில் நேரடியாகப் பங்குகொள்ளாதிருந்த மற்றவர்களும் சேர்ந்து, ராஜ்ய விளைச்சலை அறுவடை செய்கிறார்கள். (யோவான் 4:36-38-ஐ வாசியுங்கள்.) இவ்வாறு, ‘விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படுகிறார்கள்.’
நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
18, 19. (அ) இயேசு சொன்ன உவமைகளை ஆராய்ந்ததிலிருந்து நீங்கள் எவ்வாறு உற்சாகம் பெற்றிருக்கிறீர்கள்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைச் சிந்திப்போம்?
18 மாற்கு 4-ஆம் அதிகாரத்தில் உள்ள இந்த இரண்டு உவமைகளை ஆராய்ந்ததிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்? விதைக்கும் வேலையை நாம் செய்தாக வேண்டும் என்பதைத் தெளிவாகக் கற்றுக்கொள்கிறோம். ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டோ, என்றைக்கோ வரப்போகிற பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் நினைத்துக்கொண்டோ இந்த வேலையில் நாம் ஈடுபடாமல் இருந்துவிடக் கூடாது. (பிர. 11:4) அதே சமயத்தில், தேவனுக்கு உடன்வேலையாட்கள் என்ற அரிய வாய்ப்பை நாம் பெற்றிருப்பதையும் மறந்துவிடக் கூடாது. ஒருவரைச் சீஷராக யெகோவாவே வளரச் செய்கிறார்; அதோடு, நாம் எடுக்கும் முயற்சிகளையும் நற்செய்தியைக் கேட்பவர்கள் எடுக்கும் முயற்சிகளையும் அவர் ஆசீர்வதிக்கிறார். நாம் யாரையும் வற்புறுத்திச் சீஷராக்க முடியாது என்பதையும் கற்றுக்கொள்கிறோம். ஒருவர் சீஷராக வளருவதற்கு நீண்ட காலம் எடுத்தாலும்சரி, அல்லது அவர் சீஷராகாமலே போனாலும் சரி, அதைக் குறித்துச் சோர்ந்துவிடவோ மனமுடைந்துவிடவோ அவசியமில்லை என்பதையும் கற்றுக்கொள்கிறோம். ஆகவே, யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பதை வைத்தும், ‘ராஜ்ய நற்செய்தியை உலகெங்கும் பிரசங்கிக்கும்’ அரிய வேலையில் உண்மையோடு ஈடுபடுவதை வைத்துமே நம் வெற்றி அளவிடப்படுகிறது. இதை அறிவது எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது!—மத். 24:14, NW.
19 புதிய சீஷர்களின் வளர்ச்சியைக் குறித்தும் ராஜ்ய வேலையைக் குறித்தும் வேறு என்ன விஷயங்களை இயேசு கற்பித்தார்? இதற்கான பதிலை, சுவிசேஷப் புத்தகங்களில் உள்ள மற்ற உவமைகளில் காணலாம். இந்த உவமைகளில் சிலவற்றை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
[அடிக்குறிப்புகள்]
a ஐஸ்லாந்து நாட்டில் ஊழியம் செய்த சகோதரர் ஜேயார்ஜ் ஃபையோல்நர் லிண்டால் பற்றிய அறிக்கையை யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2005, பக்கங்கள் 210-11-ல் வாசித்துப் பாருங்கள்; அயர்லாந்தில் விடாமுயற்சியோடு பல ஆண்டுகளாக உண்மையாய் ஊழியம் செய்தும், உடனடிப் பலன்களைப் பெறாதவர்களின் அனுபவங்களையும் வாசித்துப் பாருங்கள்.—யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1988 (ஆங்கிலம்), பக்கங்கள் 82-99.
b இந்தப் பத்திரிகையில், விதை என்பது முதிர்ச்சியை நோக்கி முன்னேற உதவும் பண்புகளைக் குறிப்பதாகவும், சூழ்நிலைகளால் அவை செல்வாக்குச் செலுத்தப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. என்றாலும், இயேசு சொன்ன உவமையில், அந்த விதை கெட்டதாகவோ, அழுகிய கனியாகவோ மாறுவதில்லை. அது வளர்ந்து முதிர்ச்சி அடையவே செய்கிறது.—காவற்கோபுரம், ஜூன் 15, 1980, பக்கங்கள் 17-19-ஐப் பாருங்கள்.
c இதே வார்த்தை அப்போஸ்தலர் 12:10-ல் மட்டுமே காணப்படுகிறது. அங்கே, இருப்புக்கதவு “தானாய்” திறவுண்டதாகச் சொல்லப்படுகிறது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• நிஜ விதையை விதைப்பதற்கும் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் யாவை?
• ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிப்பவரின் உண்மைத்தன்மையை யெகோவா எப்படி அளவிடுகிறார்?
• நிஜ விதையின் வளர்ச்சிக்கும் சத்திய விதையின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள என்ன ஒற்றுமையை இயேசு வலியுறுத்தினார்?
• ‘விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படுவது’ எப்படி?
[பக்கம் 13-ன் படங்கள்]
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிப்பவரை இயேசு ஏன் விதைப்பவருக்கு ஒப்பிட்டார்?
[பக்கம் 15-ன் படங்கள்]
நல்ல நிலத்தைப்போல் இருப்பவர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிரசங்க வேலையில் முழு இருதயத்தோடு ஈடுபடுகிறார்
[பக்கம் 16-ன் படங்கள்]
தேவனே விளையச் செய்கிறார்