‘மரணம் ஒழிக்கப்படும்’
“ஒழிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.”—1 கொரிந்தியர் 15:26, திருத்திய மொழிபெயர்ப்பு.
1, 2. (அ) அப்போஸ்தலன் பவுல், மரித்தவர்களுக்கு என்ன நம்பிக்கையை முன்வைத்தார்? (ஆ) உயிர்த்தெழுதல் பற்றிய என்ன கேள்விக்கு பவுல் பதிலளித்தார்?
“சரீரத்தின் உயிர்த்தெழுதலிலும் நித்திய ஜீவனிலும் . . . நான் நம்பிக்கை வைக்கிறேன்.” அப்போஸ்தல பிரமாணம் இவ்வாறு கூறுகிறது. கத்தோலிக்கரும் புராட்டஸ்டண்டினரும் கடமை உணர்வோடு அதைத் திரும்ப திரும்ப சொல்கின்றனர். அவர்கள் நம்புவது அப்போஸ்தலரின் நம்பிக்கைக்கு இசைவாக இருப்பதைவிட கிரேக்க தத்துவத்தோடு அதிகம் இசைந்திருக்கிறதை சற்றும் அறியாதவர்களாக இவ்வாறு செய்கின்றனர். ஆனால், அப்போஸ்தலன் பவுல் கிரேக்க தத்துவத்தையும் நிராகரித்தார்; அழியாத ஆத்துமாவிலும் நம்பிக்கை வைக்கவில்லை. இருந்தாலும் எதிர்கால வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை வைத்து, ஏவப்பட்டவராய் இவ்வாறு எழுதினார்: “ஒழிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” (1 கொரிந்தியர் 15:26, தி.மொ.) மரித்துக்கொண்டிருக்கும் மனிதவர்க்கத்திற்கு இது எதைத்தான் அர்த்தப்படுத்துகிறது?
2 பதிலுக்காக, 1 கொரிந்தியர் 15-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உயிர்த்தெழுதல் பற்றிய பவுலின் கலந்தாலோசிப்பிற்கு நாம் திரும்புவோம். அதன் ஆரம்ப வசனங்களில், உயிர்த்தெழுதலைக் கிறிஸ்தவ போதகத்தின் முக்கிய பாகமாக பவுல் நிலைநாட்டியது உங்களுக்கு நினைவிருக்கும். இப்போது குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு கவனத்தைத் திருப்புகிறார்: “ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வா[ன்].”—1 கொரிந்தியர் 15:35.
என்ன விதமான சரீரம்?
3. சிலர் ஏன் உயிர்த்தெழுதலை நிராகரித்தனர்?
3 இந்தக் கேள்வியை எழுப்புவதன் மூலம், பிளேட்டோனிய தத்துவத்தின் செல்வாக்கை எதிர்க்க பவுல் யோசித்திருக்கலாம். சரீரத்தின் மரணத்தைத் தப்பிப்பிழைக்கும் அழியாத ஆத்துமா மனிதனுக்கு இருக்கிறதென பிளேட்டோ போதித்தார். இந்தக் கொள்கையில் நம்பிக்கையோடு வளர்ந்தவர்களுக்கு உயிர்த்தெழுதல் பற்றிய கிறிஸ்தவ போதகம் தேவையற்றதாக தோன்றியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆத்துமா மரணத்தைத் தப்பிப்பிழைக்கிறது என்றால் உயிர்த்தெழுதலுக்கு என்ன தேவை இருக்கிறது? மேலும், உயிர்த்தெழுதல் ஒருவேளை நியாயமற்றதாக தோன்றியிருக்கலாம். சரீரம் மண்ணோடு கலந்துவிட்ட பிறகு உயிர்த்தெழுதல் எவ்வாறு இருக்கமுடியும்? சில கொரிந்தியர்களின் எதிர்ப்பு, “சரீரத்தின் பருப்பொருளைத் திரும்பவும் உருவாக்குவது சாத்தியமற்றது என்ற தத்துவக் கோட்பாட்டில்” ஒருவேளை சார்ந்திருக்கலாம் என பைபிள் விரிவுரையாளர் ஹைன்ரீக் மேயர் கூறுகிறார்.
4, 5. (அ) விசுவாசமற்றவர்களின் ஆட்சேபணைகள் ஏன் நியாயமற்றவையாக இருந்தன? (ஆ) “விதை” பற்றிய பவுலின் உவமையை விளக்குங்கள். (இ) உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு எப்படிப்பட்ட உடல்களைக் கடவுள் தருகிறார்?
4 அவர்களுடைய நியாயவிவாதத்தின் முட்டாள்தனத்தை பவுல் வெளிப்படுத்துகிறார்: “புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதைவகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.” (1 கொரிந்தியர் 15:36-38) பூமியில் இருக்கும்போது மனிதர்களுக்கு இருந்த உடல்களைக் கடவுள் மறுபடியும் எழுப்பப்போவதில்லை. ஆனால் மறுரூபமாகுதல் நடக்கும்.
5 உயிர்த்தெழுதலை, ஒரு விதை முளைவிடுவதற்கு பவுல் ஒப்பிடுகிறார். ஒரு சிறிய கோதுமை விதை அதிலிருந்து வளரும் செடிக்கு எந்தவிதத்திலும் ஒத்திருப்பதில்லை. த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது: “ஒரு விதை முளைவிட ஆரம்பிக்கையில் அது அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சுகிறது. அந்தத் தண்ணீர் விதைக்குள் அநேக ரசாயண மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விதைக்குள் இருக்கும் திசுக்கள் பருமனாகி விதையின் தோலை உடைத்துக்கொண்டு வெளியே வருவதில் விளைவடைகிறது.” உண்மையில், ஒரு விதையாக அது மரித்து வளர்ந்துவரும் செடியாக மாறுகிறது. அதன் வளர்ச்சியை தீர்மானிக்கும் விஞ்ஞானப்பூர்வ சட்டங்களை அவரே ஸ்தாபித்ததால் “அதற்கு தேவன் . . . மேனியைக் கொடுக்கிறார்;” மேலும், அதனதன் வகையின்படியே ஒவ்வொரு விதையும் ஒரு உடலைப் பெறுகிறது. (ஆதியாகமம் 1:11) அதைப்போலவே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் முதலில் மனிதர்களாக மரிக்கிறார்கள். பிறகு கடவுளுடைய ஏற்றகாலத்தில், முற்றிலும் புதிய சரீரங்களில் அவர்களை மறுபடியும் உயிருக்கு கொண்டுவருகிறார். பவுல் பிலிப்பியருக்கு சொன்ன விதமாக, “இயேசுகிறிஸ்து . . . நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.” (பிலிப்பியர் 3:20, 21; 2 கொரிந்தியர் 5:1, 2) அவர்கள் மகிமையான சரீரங்களுடன் உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்தில் வாழ்கின்றனர்.—1 யோவான் 3:2.
6. உயிர்த்தெழுப்பப்படுபவர்களுக்கு பொருத்தமான ஆவி உடல்களைக் கடவுளால் கொடுக்கமுடியும் என நம்புவது ஏன் நியாயமானது?
6 இதை நம்புவது மிகவும் கடினமானதா? இல்லை. மிருகங்களுக்கு அநேக வித்தியாசமான சரீரங்கள் இருக்கிறதென பவுல் விவாதிக்கிறார். கூடுதலாக, “வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு” என சொல்வதன் மூலம் பரலோக தேவதூதர்களை மாம்சமும் இரத்தமுமுள்ள மனிதர்களிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கிறார். உயிரற்ற சிருஷ்டிப்பிலும் அதிகமான வேறுபாடு இருக்கிறது. நீல நட்சத்திரங்கள் (blue stars), சிகப்பு நட்சத்திரங்கள் (red giants), வெள்ளை நட்சத்திரங்கள் (white dwarfs) போன்ற விண்வெளிக் கோளங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, “மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது” என பவுல் கூறினார். இதைக் கருதுகையில், உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு பொருத்தமான பரலோகத்திற்குரிய சரீரங்களைக் கடவுளால் கொடுக்கமுடியும் என்பது நியாயமாக இருக்கிறதல்லவா?—1 கொரிந்தியர் 15:39-41.
7. அழியாமை என்றால் என்ன? சாவாமை என்றால் என்ன?
7 பின்னர் பவுல் கூறுகிறார்: “மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும், அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.” (1 கொரிந்தியர் 15:42) பரிபூரணமாக இருந்தாலும்கூட மானிட சரீரம் அழியக்கூடியதே. அது கொல்லப்படலாம். உதாரணமாக, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு “அழிவுக்குட்படாதபடிக்கு” எழுப்பப்பட்டார் என பவுல் கூறினார். (அப்போஸ்தலர் 13:34) பரிபூரணமாக இருந்தாலும் அழியக்கூடிய மானிட சரீரத்தில் அவர் இனி ஒருபோதும் உயிர் பெறமாட்டார். உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு கடவுள் கொடுக்கும் சரீரங்கள் அழியாதவை—மரணம் அல்லது அழிவிற்கு அப்பாற்பட்டவை. பவுல் தொடர்கிறார்: “கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்.” (1 கொரிந்தியர் 15:43, 44) “அழிவுள்ளதாகிய இது அழியாமையை . . . தரித்துக்கொள்ள வேண்டும்” என்று பவுல் மேலுமாக கூறுகிறார். அழியாமை என்பது முடிவில்லாத, அழிக்கப்பட முடியாத ஜீவனைக் குறிக்கிறது. (1 கொரிந்தியர் 15:53; எபிரெயர் 7:17) இவ்வாறாக, உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் தங்கள் உயிர்த்தெழுதலை சாத்தியமாக்கிய “வானவருடைய [இயேசுவுடைய] சாயலையும்” தரித்துக்கொள்வார்கள்.—1 கொரிந்தியர் 15:45-49.
8. (அ) உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள், பூமியில் உயிரோடு இருந்த அதே ஆட்கள்தான் என நமக்கு எப்படி தெரியும்? (ஆ) உயிர்த்தெழுதல் நடக்கும்போது என்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகின்றன?
8 இவ்வாறு மறுரூபமானாலும்கூட, மரிப்பதற்கு முன்பிருந்த அதே ஆட்களே உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். அதே ஞாபகசக்தியுடனும் அதே உயர்ந்த கிறிஸ்தவ குணாதிசயங்களுடனும் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (மல்கியா 3:3; வெளிப்படுத்துதல் 21:10, 18) இந்த விதத்தில் அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் போல் இருப்பார்கள். பரலோக சிருஷ்டியாக இருந்த அவர் மனிதனாக மாறினார். பிறகு மரித்து, மறுபடியும் பரலோக சிருஷ்டியாக உயிர்ப்பிக்கப்பட்டார். இருந்தாலும், “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” (எபிரெயர் 13:8) அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு என்னே மகிமையான சிலாக்கியம் இருக்கிறது! பவுல் கூறுகிறார்: “அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?”—1 கொரிந்தியர் 15:54, 55; ஏசாயா 25:8; ஓசியா 13:14.
பூமிக்குரிய ஓர் உயிர்த்தெழுதலா?
9, 10. (அ) 1 கொரிந்தியர் 15:24-ன் சூழமைவில் சொல்லப்பட்டிருக்கும் “முடிவு” எது, அதோடு சம்பந்தப்பட்ட என்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன? (ஆ) மரணம் ஒழிக்கப்படுவதற்கு என்ன நடக்கவேண்டும்?
9 அழிவில்லாத ஆவி சிருஷ்டியாக பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இல்லாத கோடிக்கணக்கானவர்களுக்கு ஏதாவது எதிர்காலம் இருக்கிறதா? நிச்சயமாகவே இருக்கிறது! கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது பரலோக உயிர்த்தெழுதல் நடைபெறுகிறது என்று விளக்கிய பிறகு, பின்தொடரும் நிகழ்ச்சிகளை பவுல் விவரிக்கிறார்: “அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.”—1 கொரிந்தியர் 15:23, 24.
10 “முடிவு” என்பது கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவாகும். அப்போது இயேசு, தம்முடைய கடவுளும் பிதாவுமானவரிடம் மனத்தாழ்மையோடும் உண்மையோடும் ராஜ்யத்தை ஒப்படைப்பார். (வெளிப்படுத்துதல் 20:4) “சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்[ற]” கடவுளுடைய நோக்கம் நிறைவேறியிருக்கும். (எபேசியர் 1:9, 10) அதற்கு முன்பாக, கடவுளுடைய சர்வலோக நோக்கத்திற்கு எதிராக இருக்கும் “சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும்” கிறிஸ்து அழித்திருப்பார். அர்மகெதோனில் கொண்டுவரப்படும் அழிவைவிட அதிகத்தை இது உட்படுத்தும். (வெளிப்படுத்துதல் 16:16; 19:11-21) பவுல் கூறுகிறார்: “எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், [கிறிஸ்து] ஆளுகை செய்யவேண்டியது. ஒழிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” (1 கொரிந்தியர் 15:25, 26, தி.மொ.) ஆம், ஆதாமிய பாவம் மற்றும் மரணத்தின் சுவடுகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கும். அப்போது, மரித்தவர்களை உயிருக்கு கொண்டுவருவதன் மூலம் கடவுள் நிச்சயமாகவே ‘பிரேதக்குழிகளை’ எல்லாம் காலியாக்கி இருப்பார்.—யோவான் 5:28.
11. (அ) மரித்த நபர்களை கடவுள் மறுபடியும் சிருஷ்டிக்க முடியும் என நமக்கு எப்படி தெரியும்? (ஆ) பூமியில் உயிர்த்தெழுப்பப்படுபவர்களுக்கு எப்படிப்பட்ட சரீரங்கள் கொடுக்கப்படும்?
11 மனிதர்களை மறுபடியும் சிருஷ்டிப்பதை இது அர்த்தப்படுத்தும். இது முடியாத ஒன்றா? இல்லை; ஏனென்றால், கடவுளால் அவ்வாறு செய்யமுடியும் என்று சங்கீதம் 104:29, 30 நமக்கு உறுதியளிக்கிறது: “நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும். நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்.” உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் மரிப்பதற்கு முன்பிருந்த அதே ஆட்களாக இருந்தாலும், அதே சரீரங்கள் அவர்களுக்கு இருக்கவேண்டியதில்லை. பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டவர்களைப் போலவே, கடவுள் அவருக்கு பிரியமானபடி ஒரு சரீரத்தை அவர்களுக்கு தருவார். அவர்களுடைய புதிய சரீரங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், அவர்களுக்கு அன்பானவர்கள் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கும்படி முந்தைய சரீரத்தை நியாயமான அளவு ஒத்ததாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
12. பூமிக்குரிய உயிர்த்தெழுதல் எப்போது நடைபெறும்?
12 பூமிக்குரிய உயிர்த்தெழுதல் எப்போது நடைபெறும்? மார்த்தாள், மரித்திருந்த தன்னுடைய சகோதரன் லாசருவைப் பற்றி கூறினாள்: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்.” (யோவான் 11:24) அவளுக்கு எப்படி தெரியும்? அவளுடைய நாளில், உயிர்த்தெழுதல் சர்ச்சைக்குரிய பொருளாக இருந்தது. ஏனென்றால், பரிசேயர்கள் உயிர்த்தெழுதலை நம்பினார்கள், சதுசேயர்களோ அதை நம்பவில்லை. (அப்போஸ்தலர் 23:8) இருந்தாலும், கிறிஸ்தவத்திற்கு முன்னான காலத்தில் வாழ்ந்து உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்த சாட்சிகளைப் பற்றி மார்த்தாள் அறிந்திருப்பாள். (எபிரெயர் 11:35) மேலும், கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடக்கும் என தானியேல் 12:13-லிருந்தும் அவள் அறிந்திருக்கலாம். இயேசுவிடம் இருந்தேகூட அவள் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். (யோவான் 6:39) அந்தக் “கடைசிநா[ள்]” கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியுடன் ஒத்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 20:6) இந்த மகத்தான நிகழ்ச்சி ஆரம்பமாகும் அந்த “நாளி[ன்]” கிளர்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள்!—லூக்கா 24:41-ஐ ஒப்பிடுக.
யார் திரும்பி வருவார்கள்?
13. வெளிப்படுத்துதல் 20:12-14-ல் உயிர்த்தெழுதல் பற்றிய என்ன தரிசனம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது?
13 பூமிக்குரிய உயிர்த்தெழுதல் பற்றிய யோவானின் தரிசனம் வெளிப்படுத்துதல் 20:12-14-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது: “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.”
14. உயிர்த்தெழுப்பப்படுபவர்கள் மத்தியில் யார் இருப்பர்?
14 உயிர்த்தெழுதல் “சிறியோரையும் பெரியோரையும்” உள்ளடக்கும். அதாவது, வாழ்ந்து மரித்த மனிதர்களுள் பிரபலமானவர்களும் மிகச் சாதாரணமானவர்களும் அடங்குவர். ஏன் சிறுகுழந்தைகள்கூட அதில் இருப்பர்! (எரேமியா 31:15, 16) அப்போஸ்தலர் 24:15-ல் மற்றொரு முக்கியமான தகவல் வெளிப்படுத்தப்படுகிறது: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.” ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள், ராகாப் போன்ற முற்காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் அந்த “நீதிமான்களு[ள்]” முக்கியமானவர்களாக இருப்பர். (எபிரெயர் 11:1-40) அப்படிப்பட்டவர்களோடு பேசவும், கடந்தகால பைபிள் நிகழ்ச்சிகளைப் பற்றி கண்கண்ட சாட்சிகளின் விவரிப்பை கேட்கவும் இருக்கும் வாய்ப்பைப் பற்றி கற்பனை செய்துபாருங்கள்! பரலோக நம்பிக்கையில்லாமல் சமீபகாலங்களில் மரித்த, தேவபயமுள்ள ஆயிரக்கணக்கான ஆட்களும் அந்த “நீதிமான்களு[ள்]” உட்படுவர். உங்கள் குடும்ப அங்கத்தினர் அல்லது அன்பானவர் ஒருவர் அவர்கள் மத்தியில் இருப்பாரா? அவர்களை மறுபடியும் பார்க்க முடியும் என்று அறிவது எவ்வளவு ஆறுதலளிப்பதாய் இருக்கிறது! ஆனால் திரும்பிவரும் அந்த “அநீதிமான்க[ள்]” யார்? பைபிள் சத்தியத்தைக் கற்று அதைப் பொருத்துவதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் மரித்த கோடிக்கணக்கான, ஒருவேளை நூறு கோடிக்கணக்கான ஆட்களை அது உட்படுத்தும்.
15. திரும்ப வருபவர்கள், “அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே . . . நியாயத்தீர்ப்படைந்தார்கள்” என்பதன் அர்த்தம் என்ன?
15 ஆனால் திரும்பி வருபவர்கள் எவ்வாறு “அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே . . . தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்”? இந்தப் புஸ்தகங்கள் அவர்களுடைய முந்தைய செயல்களின் பதிவு அல்ல. அவர்கள் மரிக்கையில், தங்கள் வாழ்நாளில் செய்த பாவங்களிலிருந்து விடுதலையாகி இருக்கிறார்கள். (ரோமர் 6:7, 23) என்றபோதிலும், உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதர்கள் இன்னமும் ஆதாமிய பாவத்தில் இருப்பர். ஆகவே, இயேசு கிறிஸ்துவின் பலியிலிருந்து முழுமையாக பயனடைவதற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய தெய்வீக வழிநடத்துதல்களை இந்தப் புஸ்தகங்கள் கொடுக்கும். ஆதாமிய பாவத்தின் கடைசி சுவடு நீக்கப்படுகையில் முழுமையான கருத்தில் ‘மரணம் ஒழிக்கப்பட்டிருக்கும்.’ ஆயிரம் ஆண்டு முடிவில் கடவுள்தாமே ‘சகலத்திலும் சகலமுமாயிருப்பார்.’ (1 கொரிந்தியர் 15:28) ஒரு பிரதான ஆசாரியர் அல்லது மீட்பரின் தலையிடுதல் இனிமேலும் மனிதனுக்கு தேவைப்படாது. முழு மனிதவர்க்கமும், ஆதாம் ஆரம்பத்தில் அனுபவித்த பரிபூரண நிலைக்கு உயர்த்தப்படும்.
படிப்படியான உயிர்த்தெழுதல்
16. (அ) உயிர்த்தெழுதல் படிப்படியாக நடக்கும் என்று நம்புவது ஏன் நியாயமானது? (ஆ) மரித்தோரிலிருந்து திரும்ப வருபவர்களுள் யார் முதலாவதாக இருக்கக்கூடும்?
16 பரலோக உயிர்த்தெழுதல் ஒழுங்கானதாக இருக்கும், “அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான்.” ஆகவே, பூமிக்குரிய உயிர்த்தெழுதலும் குழப்பம் நிறைந்த ஜனத்தொகை அதிகரிப்பை ஏற்படுத்தாது என்பது தெளிவு. (1 கொரிந்தியர் 15:23) நிச்சயமாகவே, புதிதாக உயிர்த்தெழுப்பப்படுபவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்கும். (லூக்கா 8:55-ஐ ஒப்பிடுக.) அவர்களுக்கு சரீரப்பிரகாரமான உதவி தேவைப்படும். அதைவிட முக்கியமாக, யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய ஜீவனளிக்கும் அறிவைப் பெறுவதில் அவர்களுக்கு ஆவிக்குரிய உதவியும் தேவைப்படும். (யோவான் 17:3) எல்லாரும் ஒரே நேரத்தில் உயிருக்கு வந்தால் அவர்களுடைய தேவைகளை நல்லவிதமாக கவனிக்க முடியாமல் போய்விடும். உயிர்த்தெழுதல் படிப்படியாக நடைபெறும் என எதிர்பார்ப்பது நியாயமானதே. முதலாவது உயிர்த்தெழுப்பப்படுபவர்களுள், சாத்தானுடைய ஒழுங்குமுறையின் முடிவுக்கு சற்றுமுன் மரித்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் இருக்கலாம். “பிரபுக்களாக” சேவை செய்யவிருக்கும், முற்காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள மனிதர்களும் சீக்கிரத்தில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.—சங்கீதம் 45:16.
17. உயிர்த்தெழுதல் பற்றிய எந்த சில விஷயங்களில் பைபிள் பதில் ஏதும் கூறுவதில்லை, அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி கிறிஸ்தவர்கள் ஏன் அனாவசியமாக கவலைப்படக்கூடாது?
17 என்றபோதிலும், இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் பிடிவாதமான மனநிலையைக் காட்டக்கூடாது. அநேக விஷயங்கள் சம்பந்தமாக பைபிள் பதில் சொல்வதில்லை. தனிப்பட்டவர்களின் உயிர்த்தெழுதல், எப்படி, எப்போது அல்லது எந்த இடங்களில் நடக்கும் என்பது பற்றிய விவரங்களை அது தெளிவாக கூறுவதில்லை. திரும்பி வருபவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வாறு அளிக்கப்படும் என்றும் அது சொல்வதில்லை. உயிர்த்தெழுப்பப்படும் பிள்ளைகளை வளர்ப்பது, கவனிப்பது போன்ற விஷயங்களைக் கையாள யெகோவா என்ன செய்வார் என்றோ, நம்முடைய நண்பர்களையும் அன்பானவர்களையும் உட்படுத்தும் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களை எப்படி கவனித்துக்கொள்வார் என்றோ நம்மால் உறுதியாக சொல்லமுடியாது. அப்படிப்பட்ட காரியங்களைப் பற்றி சிந்திப்பது இயற்கையானதே. ஆனால் தற்போது பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிப்பதில் நேரத்தைச் செலவிடுவது ஞானமற்றது. யெகோவாவை உண்மையுடன் சேவிப்பதும் நித்திய ஜீவனைப் பெறுவதுமே நம்முடைய முக்கிய கவனமாயிருக்க வேண்டும். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், மகிமையான பரலோக உயிர்த்தெழுதலில் தங்கள் நம்பிக்கையை வைக்கின்றனர். (2 பேதுரு 1:10, 11) கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியில் நித்திய சுதந்தரத்தைப் பெறும் நம்பிக்கை ‘வேறே ஆடுகளுக்கு’ இருக்கிறது. (யோவான் 10:16; மத்தேயு 25:33, 34) உயிர்த்தெழுதலைப் பற்றி இன்னும் அறியப்படாமல் இருக்கும் அநேக விவரங்களைப் பற்றியதில் நாம் யெகோவா மீதே சார்ந்திருக்கிறோம். ‘சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குபவருடைய’ கைகளில் நம்முடைய எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது.—சங்கீதம் 145:16; எரேமியா 17:7.
18. (அ) என்ன வெற்றியை பவுல் உயர்த்திக் காட்டுகிறார்? (ஆ) உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் நாம் ஏன் நிச்சயமான நம்பிக்கை வைக்கலாம்?
18 “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று கூறுவதன் மூலம் பவுல் தன்னுடைய விவாதத்தை முடிக்கிறார். (1 கொரிந்தியர் 15:57) ஆம், இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியின் மூலமாக ஆதாமிய மரணத்தின் மீது வெற்றி கிடைக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் ‘வேறே ஆடுகளும்’ இந்த வெற்றியில் பங்குகொள்கின்றனர். இன்று உயிரோடிருக்கும் ‘வேறே ஆடுகளுக்கு,’ இந்தச் சந்ததிக்கு மாத்திரமே விசேஷித்ததாக இருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து அதிகரித்துவரும் ‘திரள் கூட்டத்தின்’ பாகமாக அவர்கள் ‘மிகுந்த உபத்திரவத்தைத்’ தப்பிப்பிழைத்து சரீரப்பிரகாரமாக ஒருபோதும் மரிக்காமலேயே இருக்கலாம்! (வெளிப்படுத்துதல் 7:9, 14) என்றாலும், “சமயமும் எதிர்பாராத சம்பவம்” காரணமாக அல்லது சாத்தானுடைய ஏஜன்டுகளின் காரணமாக மரிப்பவர்களும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் தங்கள் விசுவாசத்தை வைக்கலாம்.—பிரசங்கி 9:11, NW.
19. இன்றுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் என்ன அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்?
19 ஆகவே, மரணம் இல்லாமல் போகும் அந்த மகிமையான நாளுக்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம். உயிர்த்தெழுதலைப் பற்றிய யெகோவாவின் வாக்குறுதியில் நாம் அசையாத நம்பிக்கை வைப்பது காரியங்களைப் பற்றிய உண்மையான கண்ணோட்டத்தை நமக்கு தருகிறது. இந்த வாழ்க்கையில் நமக்கு என்னதான் நடந்தாலும்—நாம் மரித்தாலும்கூட—யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கும் பரிசை பெறுவதிலிருந்து எதுவும் நம்மைத் தடுக்கமுடியாது. ஆகவே, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பவுல் கொரிந்தியர்களுக்கு கொடுத்த முடிவான அறிவுரை இன்றும் அதேயளவு பொருத்தத்தை உடையது: “ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”—1 கொரிந்தியர் 15:58.
உங்களால் விளக்க முடியுமா?
◻ அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் உயிர்த்தெழுப்பப்படும்போது எப்படிப்பட்ட சரீரங்கள் இருக்கும் என்ற கேள்விக்கு பவுல் எவ்வாறு பதிலளித்தார்?
◻ எப்படி மற்றும் எப்போது மரணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கும்?
◻ பூமிக்குரிய உயிர்த்தெழுதலில் யார் அடங்குவர்?
◻ பைபிள் பதில் கூறாத விஷயங்கள் சம்பந்தப்பட்டதில் நம்முடைய மனநிலை எப்படி இருக்கவேண்டும்?
[பக்கம் 20-ன் படம்]
மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதன் மூலம் ஒரு விதை ‘மரிக்கிறது’
[பக்கம் 23-ன் படங்கள்]
ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள், ராகாப் போன்ற முற்காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் உயிர்த்தெழுப்பப்படுபவர்கள் மத்தியில் இருப்பர்
[பக்கம் 24-ன் படம்]
உயிர்த்தெழுதல் மிகவும் சந்தோஷமான ஒரு சமயமாக இருக்கும்!