சந்தோஷத்தை தரும் தானம்
பிரேசிலின் வடகிழக்கிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசிப்பவரே ஷனிவா. ஒரு மருத்துவமனையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்த அவர், வாய்க்கும் வயிற்றுக்கும் பற்றாத தனது சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். வயிற்றுப்பாட்டிற்கே திண்டாடியபோதும் அவர் தசமபாகத்தை தவறாமல் கொடுத்து வந்தார். “சிலசமயம் என் குடும்பம் பட்டினி கிடக்கும்” என்கிறார் வயிற்றைத் தடவியவாறே; “ஆனால் எப்படிப்பட்ட தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் கடவுளுக்கு என்னால் முடிந்த சிறந்ததை கொடுக்க விரும்பினேன்” என்கிறார்.
வேலை போன பிறகும்கூட ஷனிவா தசமபாகம் கொடுப்பதை நிறுத்தவில்லை. மிகப் பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்து கடவுளை சோதித்துப் பார்க்கும்படி அவரது பாதிரி சொன்னார். கடவுள் கண்டிப்பாக ஆசீர்வாதத்தைப் பொழிவார் என அந்தப் பாதிரி உறுதியளித்தார். ஆகவே ஷனிவா தனது வீட்டை விற்று அந்தப் பணத்தை சர்ச்சுக்கு கொடுக்க தீர்மானித்தார்.
இப்படி ஷனிவாவைப் போல் உண்மை மனதோடு கொடுப்பவர்கள் இன்னும் அநேகர் உள்ளனர். தசமபாகம் கொடுப்பது பைபிள் கட்டளை என சர்ச்சுகள் கற்பிப்பதால் ஏழைபாழைகள் அநேகர் கடமையுணர்வோடு தசமபாகம் கொடுக்கின்றனர். ஆனால் இது உண்மையிலேயே பைபிள் கட்டளையா?
தசமபாகமும் நியாயப்பிரமாணமும்
தசமபாகம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளை நியாயப்பிரமாணத்தில் இருந்தது; 3,500 ஆண்டுகளுக்கும் முன்பு பூர்வ இஸ்ரவேலரின் 12 கோத்திரங்களுக்கு யெகோவா தேவன் அருளியதே அந்த நியாயப்பிரமாணம். நிலத்தின் விளைச்சலிலும் மரங்களின் கனிகளிலும் ஆடுமாடுகளிலும் பத்தில் ஒரு பங்கை லேவி கோத்திரத்தாருக்கு தர வேண்டுமென அது குறிப்பிட்டது; ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்த சேவைகளுக்கு ஆதரவளிக்கவே இந்த ஏற்பாடு.—லேவியராகமம் 27:30, 32; எண்ணாகமம் 18:21, 24.
இஸ்ரவேலர்களுக்கு நியாயப்பிரமாணம் ‘மிகச் சிரமமாக இருக்காது’ என யெகோவா உறுதியளித்தார். (உபாகமம் 30:11, NW) தசமபாகம் கொடுப்பது உட்பட யெகோவாவின் எல்லா கட்டளைகளுக்கும் அவர்கள் உண்மையோடு கீழ்ப்படியும் பட்சத்தில் அபரிமிதமான விளைச்சல் உண்டாகும் என்ற வாக்குறுதியும் அளித்தார். பாதுகாப்பிற்காக, இன்னொரு தசமபாகமும் வருடந்தோறும் தவறாமல் கொடுக்கப்பட்டது; இது மத பண்டிகைகளுக்காக தேசத்தார் ஒன்றுகூடியபோது பொதுவாக பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு ‘பரதேசியும் தகப்பனில்லாத பிள்ளையும் விதவையும்’ திருப்தியடைய முடிந்தது.—உபாகமம் 14:28, 29, NW; 28:1, 2, 11-14.
தசமபாகம் கொடுக்காவிட்டால் தண்டனை கிடைக்குமென நியாயப்பிரமாணம் குறிப்பிடவில்லை, ஆனால் இவ்வழியில் உண்மை வணக்கத்தை ஆதரிக்கும் பெரும் தார்மீக கடமை ஒவ்வொரு இஸ்ரவேலருக்கும் இருந்தது. சொல்லப்போனால், மல்கியாவின் நாளில் தசமபாகத்தைப் புறக்கணித்த இஸ்ரவேலர்கள் ‘தசமபாகத்திலும் காணிக்கைகளிலும் தம்மை வஞ்சித்ததாக’ யெகோவா குற்றம் சாட்டினார். (மல்கியா 3:8) இன்று தசமபாகம் கொடுக்காத கிறிஸ்தவர்களும் அதே குற்றத்தை சுமக்கிறார்களா?
சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு நாட்டின் சட்டங்கள் பொதுவாக மற்ற நாடுகளில் செல்லுபடியாவதில்லை. உதாரணத்திற்கு, பிரிட்டனில் சாலையின் இடது பக்கத்தில்தான் காரை ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற சட்டம் பிரான்ஸிலுள்ள ஓட்டுநர்களுக்கு பொருந்துவதில்லை. அதேபோல், தசமபாகத்தைத் தேவைப்படுத்திய சட்டம், கடவுளுக்கும் இஸ்ரவேல் தேசத்திற்கும் இடையிலான விசேஷ உடன்படிக்கையின் பாகமாக இருந்தது. (யாத்திராகமம் 19:3-8; சங்கீதம் 147:19, 20) இஸ்ரவேலர்கள் மட்டுமே அந்தச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருந்தார்கள்.
அதோடு, கடவுள் ஒருபோதும் மாறுவதில்லை என்பது உண்மையென்றாலும் அவர் எதிர்பார்ப்பவை சிலசமயம் மாறுகின்றன. (மல்கியா 3:6) பொ.ச. 33-ல் இயேசு தம் உயிரை பலியாக அளித்தது, ‘தசமபாகம் வாங்குகிறதற்கான கட்டளை’ உட்பட நியாயப்பிரமாணத்தை ‘குலைத்தது,’ அல்லது ‘ஒழித்தது’ என்று பைபிள் திட்டவட்டமாக குறிப்பிடுகிறது.—கொலோசெயர் 2:13, 14; எபேசியர் 2:13-15; எபிரெயர் 7:5, 18.
கிறிஸ்தவ தானம்
இருந்தாலும் உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்கு நன்கொடைகள் இன்னமும் தேவையாக இருந்தன. ‘பூமியின் கடைசிபரியந்தமும் சாட்சிகளாயிருக்கும்படி’ இயேசு தம் சீஷர்களுக்கு கட்டளையிட்டார். (அப்போஸ்தலர் 1:8) விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது, சபையை சந்தித்து பலப்படுத்தும் கிறிஸ்தவ போதகர்களும் கண்காணிகளும் அதிகம் தேவைப்பட்டனர். விதவைகளையும் அநாதைகளையும் தேவையிலிருந்த மற்றவர்களையும் எல்லா சமயத்திலும் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இந்த செலவுகளையெல்லாம் எவ்வாறு சமாளித்தார்கள்?
சுமார் பொ.ச. 55-ல், யூதேயாவில் வறுமையில் தவித்த சபையின் சார்பாக ஐரோப்பாவிலும் ஆசியா மைனரிலும் இருந்த புறதேச கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கொரிந்து சபைக்கு எழுதிய கடிதங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் ‘பரிசுத்தவான்களுக்கான தர்மப்பணம்’ எவ்வாறு சேர்க்கப்பட்டதென விவரிக்கிறார். (1 கொரிந்தியர் 16:1) கிறிஸ்தவ தானம் சம்பந்தமாக பவுலின் வார்த்தைகள் வெளிப்படுத்தும் உண்மைகளைத் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
கொடுக்கும்படி உடன் விசுவாசிகளை அப்போஸ்தலனாகிய பவுல் நயந்து, குழைந்து கேட்கவில்லை. சொல்லப்போனால், ‘இன்னலிலும்,’ ‘கொடிய வறுமையிலும்’ இருந்த மக்கெதோனிய கிறிஸ்தவர்கள், ‘கொடுப்பதிலும் பரிசுத்தவான்களுக்கான ஊழியத்திலும் பங்குபெறும் பேறு தங்களுக்கு கிடைக்க வேண்டுமென்று அவரை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டார்கள்.’—2 கொரிந்தியர் 8:1-4, NW.
மக்கெதோனியாவிலிருந்த தாராள மனம் படைத்த சகோதரர்களைப் பின்பற்றும்படி செல்வந்தர்களாக இருந்த கொரிந்தியர்களை பவுல் உற்சாகப்படுத்தியது உண்மைதான். இருந்தாலும், அவர் “ஆணையிடுவதைத் தவிர்த்தார்; வேண்டுகோள் விடுக்க, யோசனை கூற, உற்சாகப்படுத்த, அல்லது தயவாய் கேட்கவே அவர் விரும்பினார். வற்புறுத்திக் கேட்டிருந்தால் கொரிந்தியர்களால் மனப்பூர்வமாக அன்போடு கொடுக்க முடிந்திருக்காது” என ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. “விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல,” ஆனால் “சந்தோஷமாகக் கொடுக்கிறவனில் கடவுள் அன்புகூருகிறார்” என்பதை பவுல் அறிந்திருந்தார்.—2 கொரிந்தியர் 9:7, திருத்திய மொழிபெயர்ப்பு.
பெருமளவு விசுவாசமும் அறிவும் உடன் கிறிஸ்தவர்கள் பேரிலான உண்மையான அன்புமே உடனடியாக மனமுவந்து அள்ளிக் கொடுக்கும்படி கொரிந்தியர்களை தூண்டியிருக்கும்.—2 கொரிந்தியர் 8:7, 8.
“தன் மனதில் நியமித்தபடியே”
ஒரு குறிப்பிட்ட தொகையை அல்லது சதவீதத்தை குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்’ என்று மட்டுமே பவுல் ஆலோசனை வழங்கினார். (1 கொரிந்தியர் 16:2, பொது மொழிபெயர்ப்பு) ஒரு தொகையை தவறாமல் கொடுக்க திட்டமிடுவதாலும், அத்தொகையை ஒதுக்கி வைப்பதாலும், பவுல் செல்கையில் மன விசனத்தோடோ உணர்ச்சிவசப்பட்டோ கொடுக்கும் கட்டாயத்திற்கு கொரிந்தியர்கள் ஆளாக மாட்டார்கள். எவ்வளவு கொடுப்பது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவரின் தனிப்பட்ட தீர்மானம், “தன் மனதில் நியமித்தபடியே” அவர் கொடுக்க வேண்டும்.—2 கொரிந்தியர் 9:5, 7.
பெருக அறுப்பதற்கு கொரிந்தியர்கள் பெருக விதைக்க வேண்டியிருந்தது. தங்களுக்கே இல்லாதபோது தானம் செய்ய வேண்டுமென அவர்கள் ஒருபோதும் கேட்கப்படவில்லை. ‘உங்களுக்கு வருத்தம் உண்டாகும்படியல்ல’ என பவுல் அவர்களுக்கு உறுதியளித்தார். நன்கொடைகள் ‘ஒருவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்’ என்றார். (2 கொரிந்தியர் 8:12, 13; 9:6) பிற்பாடு எழுதிய ஒரு கடிதத்தில் அப்போஸ்தலன் இவ்வாறு எச்சரித்தார்: ‘ஒருவன் . . . தன் வீட்டாரை விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.’ (1 தீமோத்தேயு 5:8) இந்த நியமத்திற்கு எதிரான தானத்தை பவுல் உற்சாகப்படுத்தவில்லை.
பவுல், தேவையில் இருந்த ‘பரிசுத்தவான்களுக்காக தர்மப்பணத்தைத்’ திரட்டுவதற்கு ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. பவுலோ மற்ற அப்போஸ்தலர்களோ தங்கள் சொந்த ஊழிய செலவுகளுக்காக பணம் திரட்டியதாகவோ தசமபாகம் வாங்கியதாகவோ வேதாகமத்தில் நாம் எங்கும் வாசிப்பதில்லை. (அப்போஸ்தலர் 3:6) சபைகள் தனக்கு அனுப்பிய பரிசுகளுக்காக எப்போதும் நன்றியுடன் இருந்த பவுல், தன் சகோதரர்களுக்கு “பாரமாயிராதபடிக்கு” கடினமாக முயற்சி செய்தார்.—1 தெசலோனிக்கேயர் 2:9; பிலிப்பியர் 4:15-18.
இன்று மனமுவந்த நன்கொடைகள்
முதல் நூற்றாண்டில் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் மனமுவந்து நன்கொடைகள் தந்தார்களே தவிர தசமபாகம் கொடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இருந்தாலும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் தேவையிலுள்ள கிறிஸ்தவர்களைப் பராமரிப்பதற்கும் இன்றும் அதுதான் திறம்பட்ட வழியா என நீங்கள் சிந்திக்கலாம்.
இதை கவனியுங்கள். 1879-ல், “ஆதரவுகேட்டு மனிதரிடம் ஒருபோதும் கையேந்த அல்லது மன்றாட மாட்டோம்” என இந்தப் பத்திரிகையின் ஆசிரியர்கள் வெளிப்படையாக குறிப்பிட்டனர். அந்தத் தீர்மானம், பைபிள் சத்தியத்தை பிரசங்கிக்க யெகோவாவின் சாட்சிகள் எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறதா?
தற்போது சாட்சிகள் 235 நாடுகளில் பைபிள்களையும் கிறிஸ்தவ புத்தகங்களையும் மற்ற பிரசுரங்களையும் விநியோகிக்கிறார்கள். பைபிள் சம்பந்தப்பட்ட கல்வியை புகட்டும் பத்திரிகையான காவற்கோபுரம், முதலில் ஒரேவொரு மொழியில் மாதத்திற்கு 6,000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது அது மாதம் இருமுறை 146 மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது; 2,40,00,000-க்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்படுகின்றன. இந்த உலகளாவிய பைபிள் கல்வி புகட்டும் வேலையை ஒழுங்கமைக்க சாட்சிகள் 110 நாடுகளில் கிளை அலுவலகங்களை கட்டியிருக்கிறார்கள் அல்லது வாங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கூடுதலான பைபிள் போதனையைப் பெற ஆர்வமுள்ளவர்களுக்காக உள்ளூரில் கூட்டத்திற்கான மன்றங்களையும் பெரிய அசெம்பிளி மன்றங்களையும் ஆயிரக்கணக்கில் கட்டியிருக்கிறார்கள்.
மக்களின் ஆவிக்குரிய தேவைகளை கவனிப்பதற்கே யெகோவாவின் சாட்சிகள் முதலிடம் தருகிறார்கள் என்றாலும் உடன் விசுவாசிகளின் பொருளாதார தேவைகளை அவர்கள் புறக்கணிப்பதில்லை. போர், பூமியதிர்ச்சி, வறட்சி, புயல் போன்றவற்றால் தங்கள் சகோதரர்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் உடனடியாக மருந்துகளையும் உணவையும் துணிமணிகளையும் தேவையான மற்ற பொருட்களையும் அளிக்கிறார்கள். தனிப்பட்ட விதமாகவும் சபையாகவும் கிறிஸ்தவர்கள் அளிக்கும் நன்கொடைகள் இந்த செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
மனமுவந்து நன்கொடைகள் அளிப்பது திறம்பட்ட வழியாக இருப்பதோடு, ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஷனிவாவைப் போன்ற ஏழை எளியோர் மீதுள்ள சுமையையும் எடுத்துப் போடுகிறது. நல்ல வேளையாக ஷனிவா தன் வீட்டை விற்பதற்கு முன், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான மரியா என்ற முழுநேர ஊழியர் அவரை சந்தித்தார். “அவர்களோடு பேசியதால், தேவையில்லாத பயங்கர பிரச்சினைகளிலிருந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்தது” என்கிறார் ஷனிவா.
கடவுளுடைய ஊழியம் தசமபாகங்களை சார்ந்ததல்ல என்பதை ஷனிவா புரிந்துகொண்டார். சொல்லப்போனால் தசமபாகம் கொடுப்பது இனியும் வேதப்பூர்வ கட்டளை அல்ல. தாராளமாக கொடுக்கும்போது கிறிஸ்தவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள், ஆனால் இல்லாதபோது தானம் செய்யும் கட்டாயம் அவர்களுக்கு இல்லை என்றும் கற்றுக்கொண்டார்.
தானாகவே மனமுவந்து நன்கொடைகள் தருவது ஷனிவாவிற்கு உண்மையான சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. “நான் 10 சதவீதத்தை கொடுக்கிறேனோ இல்லையோ, இருப்பதைக் கொடுப்பதில் சந்தோஷப்படுகிறேன், யெகோவாவும் சந்தோஷப்படுகிறார் என்று உறுதியாக நம்புகிறேன்” என அவர் சொல்கிறார்.
[பக்கம் 6-ன் பெட்டி/படங்கள்]
ஆரம்பகால சர்ச் ஃபாதர்கள் தசமபாகத்தை ஆதரித்தார்களா?
“நம் மத்தியில் இருக்கும் செல்வந்தர்கள், ஏழை எளியவர்களுக்கு உதவுகிறார்கள் . . . வசதிபடைத்தவர்களும் மனமுள்ளவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கொடுக்கிறார்கள்.”—முதல் மன்னிப்பு (ஆங்கிலம்), ஜஸ்டின் மார்டர், சுமார் பொ.ச. 150.
“யூதர்கள் தங்கள் பொருட்களில் தசமபாகத்தை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டியிருந்தது, ஆனால் சுதந்திரம் பெற்றவர்கள் கர்த்தரின் நோக்கங்களுக்காக தங்கள் உடைமைகள் அனைத்தையும் ஒதுக்கி வைக்கிறார்கள், . . . தன் ஜீவனத்துக்கு உண்டானதையெல்லாம் கடவுளுடைய காணிக்கைப் பெட்டியில் போட்ட அந்த ஏழை விதவையைப் போல் நடந்துகொள்கிறார்கள்.”—முரண் சமயக் கருத்துக்களுக்கு எதிராக (ஆங்கிலம்), ஐரினியஸ், சுமார் பொ.ச. 180.
“நமக்கு காணிக்கைப் பெட்டி இருந்தாலும், அதிலுள்ள காணிக்கைகள் இரட்சிப்பை விலைகொடுத்து வாங்க போடப்படுபவை அல்ல, அப்படி செய்தால் மதத்தை விலை கொடுத்து வாங்குவது போல் ஆகிவிடும். மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொருவரும், விருப்பப்பட்டால், ஒரு சிறிய தொகையை காணிக்கையாக போடுகிறார்; ஆனால் கொடுப்பதற்கான வசதியும் சந்தோஷ மனமும் இருந்தால் மட்டுமே கொடுக்கிறார்: ஏனென்றால் வற்புறுத்துதலுக்கு இடமே இல்லை; எல்லாமே மனமுவந்து கொடுக்கப்படுகிறது.”—மன்னிப்பு (ஆங்கிலம்), டெர்டுல்லியன், சுமார் பொ.ச. 197.
“சர்ச் விஸ்தரிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, குருவர்க்கத்தை சரியாகவும் நிலையாகவும் ஆதரிப்பதற்கு ஏற்ற சட்டங்களை இயற்ற வேண்டியதாயிற்று. பண்டைய நியாயப்பிரமாணத்தின் தசமபாக சட்டம் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது . . . இது சம்பந்தமாக முதன்முதலில் உறுதியான சட்டம் இயற்றப்பட்டது பற்றி 567-ல் டூர்ஸில் கூடிய பிஷப்புகளின் கடிதத்திலும் 585-ல் நடந்த மாகனின் கவுன்சிலுடைய [சட்டத் தொகுப்பிலும்] காணப்படுவதாக தெரிகிறது.”—த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா
[படத்திற்கான நன்றி]
நாணயம், மேலே இடது: Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 4, 5-ன் படம்]
மனமுவந்து கொடுப்பது மகிழ்ச்சி தருகிறது
[பக்கம் 7-ன் படங்கள்]
மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகள், பிரசங்க வேலைக்கும் அவசர நிவாரணப் பணிகளுக்கும் கூட்டங்களுக்கான மன்றங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன