தீகிக்கு—நம்பகமான உடன் அடிமை
தீகிக்கு பல்வேறு சமயங்களில் அப்போஸ்தலனாகிய பவுலோடு பயணம் செய்து, தூதுவராக அவருக்கு வேலை செய்தார். பணத்தை நம்பி ஒப்படைப்பதற்கு தகுதிபெற்றிருந்தவராகவும் கண்காணிக்கும் பொறுப்புகளையும் உடையவருமான ஓர் இரகசிய தூதுவராக இருந்தார். பைபிள் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான தன்மையை சிறப்பித்துக் காட்டுவதால், நீங்கள் அவரைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். இந்தப் பண்பு எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்று.
பவுல் தீகிக்குவை தன் ‘பிரியமான சகோதரன், உண்மையுள்ள ஊழியக்காரன், கர்த்தருக்குள் உடன் வேலையாள் (அடிமை, NW)’ என்று விவரித்தார். (கொலோசெயர் 4:7) அந்த அப்போஸ்தலன் அவரை ஏன் அப்படி கருதினார்?
எருசலேம் நிவாரண திட்டம்
சுமார் பொ.ச. 55-ல் யூதேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் பொருள் சம்பந்தமான தேவை ஏற்பட்டது. பவுல் அவர்களுக்கு உதவி செய்வதற்கென ஐரோப்பாவிலும் சின்ன ஆசியாவிலுமிருந்த சபைகளின் உதவியுடன் பணம் சேர்க்கும் திட்டத்தை ஒழுங்கமைத்தார். ஆசியா மாகாணத்திலிருந்து வந்த தீகிக்கு இந்த நிவாரண திட்டத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தார்.
இந்த நன்கொடையை எப்படி பயன்படுத்துவது என்பதன் பேரில் கட்டளைகள் கொடுத்த பின்பு, நம்பிக்கைக்குப் பாத்திரமான நபர்களை எருசலேமுக்கு அனுப்பி வைக்க வேண்டும் அல்லது மொத்த தொகையை எடுத்துக்கொண்டு அவரோடு செல்ல வேண்டும் என்று பவுல் ஆலோசனை கூறினார். (1 கொரிந்தியர் 16:1-4) அவர் கிரேக்குவிலிருந்து எருசலேமுக்கு நீண்ட பயணத்தை மேற்கொண்டபோது அவரோடு பல நபர்கள் சென்றனர்; தீகிக்கு அவர்களில் ஒருவர் என்பது தெளிவாய் தெரிகிறது. (அப்போஸ்தலர் 20:4) பல சபைகள் ஒப்படைத்த பணத்தை அவர்கள் எடுத்துச் சென்றதால் அநேகர் அவரோடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கலாம். வழிப்பறி செய்பவர்களைப் பற்றிய பயம் காரணமாக பத்திரமாய் போய்ச் சேருவதற்கு பாதுகாப்புக்கான தேவை முக்கியமான காரணமாய் இருந்திருக்கலாம்.—2 கொரிந்தியர் 11:26.
பவுலோடு அரிஸ்தர்க்குவும் துரோப்பீமுவும் எருசலேமுக்கு சென்றதால், தீகிக்குவும் மற்றவர்களும்கூட அவரோடு சென்றிருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். (அப்போஸ்தலர் 21:29; 24:17; 27:1, 2) இந்த நிவாரண திட்டத்தில் தீகிக்கு உட்பட்டிருந்ததால், பணம் வசூலிப்பதற்கு ஏற்பாடு செய்ய கிரேக்குவில் தீத்துவோடு வேலை செய்த பல “சகோதரரில்” இவரும் ஒருவராக இருந்தார், ‘தர்மப்பணத்தைக் கொண்டுபோகையில், வழித்துணையாயிருக்கும்படி, அவர் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவராயும்’ இருந்தார். (2 கொரிந்தியர் 8:18, 19; 12:18) தீகிக்கு முதன்முதலாக நிறைவேற்றிய பணியே பொறுப்புள்ள ஒன்றாக இருந்ததால், அவர் இரண்டாவதாக நிறைவேற்றிய பணியும் பொறுப்புள்ளதாகவே இருந்தது.
ரோமிலிருந்து கொலோசேவுக்கு
ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்குப் பிறகு (பொ.ச. 60-61), பவுல் ரோமில் முதல் சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கப்படும் நம்பிக்கையோடு இருந்தார். வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால், தீகிக்கு அவரோடு இருந்தார். இச்சமயத்தில் தீகிக்கு ஆசியாவுக்குத் திரும்பிச் சென்றார். ஆகவே, அந்தப் பிராந்தியத்திலிருந்த கிறிஸ்தவ சபைகளுக்கு கடிதங்களை அனுப்பவும் பிலேமோனின் ஓடிவிட்ட அடிமையான ஒநேசிமுவை திரும்பவும் கொலோசெ பட்டணத்திற்கு அனுப்பவும் பவுலால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. தீகிக்குவும் ஒநேசிமுவும் குறைந்தபட்சம் மூன்று கடிதங்களையாவது எடுத்துச் சென்றனர். அவையாவன: எபேசியருக்கு ஒன்று, கொலோசெயருக்கு ஒன்று, பிலேமோனுக்கு ஒன்று. அவை இப்போது பைபிளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கொலோசெயிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திலிருந்த லவோதிக்கேயா பட்டணத்திலிருந்த சபைக்கும்கூட ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம்.—எபேசியர் 6:21; கொலோசெயர் 4:7-9, 16; பிலேமோன் 10-12.
தீகிக்கு வெறுமனே தபால்காரராக மட்டும் இருக்கவில்லை. அவர் தனிப்பட்ட செய்தி எடுத்துச் செல்லும் நம்பகமான நபராகவும் இருந்தார், ஏனெனில் பவுல் இவ்வாறு எழுதினார்: “பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும் கர்த்தருக்குள் எனக்கு உடன் வேலையாளுமாயிருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான். உங்கள் செய்திகளை அறியவும், உங்கள் இருதயங்களைத் தேற்றவும் . . . உங்களிடம் அனுப்பியிருக்கிறேன்.”—கொலோசெயர் 4: 7, 8.
கடிதத்தை எடுத்துச் சென்றவர், “கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விஷயங்களைக் கடத்தியதோடுகூட, அதை எழுதி அனுப்புவோருக்கும் அதைப் பெறுவோருக்கும் இடையில் பெரும்பாலும் மத்தியஸ்தராகவும் இருந்தார் . . . நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர் தேவைப்படுவதற்கான [ஒரு காரணம்], அவர் பெரும்பாலும் கூடுதலான தகவலை எடுத்துச் சென்றதே. ஒரு கடிதம் ஒரு சூழ்நிலையை சுருக்கமாக விவரிக்கலாம், அதோடு சேர்த்து பெரும்பாலும் அதை எழுதியவரின் குறிப்புகள் இருக்கலாம், ஆனால் அதை எடுத்துச் செல்பவர் பெற்றுக்கொள்பவருக்கு எல்லா விவரங்களையும் விவரித்துச் சொல்லும்படி எதிர்பார்க்கப்படுகிறார்,” என்று கல்விமான் இ. ரன்டால்ஃப் ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார். ஒரு கடிதத்தில் போதனைகளும் அவசரமான விஷயங்களும் குறிப்பிடப்பட்டிருந்தாலும், செய்தி எடுத்துச்செல்லும் நம்பிக்கைக்குப் பாத்திரமான நபர் மற்ற கூடுதலான விஷயங்களை வாய்மொழியாக எடுத்துச் சொல்லுவார்.
பவுல் எப்படி சமாளித்துக்கொண்டார் என்பதைப் பற்றி எபேசியருக்கும், கொலோசெயருக்கும், பிலேமோனுக்கும் எழுதிய கடிதங்கள் மிகவும் குறைவாகவே தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தீகிக்கு தனிப்பட்ட தகவலை தெரிவிக்க வேண்டியிருந்தது; ரோமில் பவுலின் சூழ்நிலைகளை விளக்க வேண்டியிருந்தது; சபையாரை உற்சாகப்படுத்துவதற்காக சபைகளிலிருந்த நிலைமைகளை நன்றாக கிரகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. தங்களிடம் செய்தி அனுப்பும் நபர் என்ன சொல்லிவிட்டாரோ, அதை அப்படியே உண்மையாய் தெரிவிப்பதற்காக, நம்பகமான நபர்களிடம் மட்டுமே இப்படிப்பட்ட செய்திகளும் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. தீகிக்கு அப்படிப்பட்ட நபராகவே இருந்தார்.
தொலைதூர பிராந்தியங்களில் கண்காணிப்பு
ரோமில் வீட்டுக்கைதியாக இருந்து விடுதலையாக்கப்பட்ட பின்பு, பவுல் தீகிக்குவையாவது அர்த்தெமாவையாவது கிரேத்தா தீவிலிருந்த தீத்துவிடம் அனுப்ப ஆழ்ந்து சிந்தனை செய்தார். (தீத்து 1:5; 3:12) பவுலின் இரண்டாவது ரோம சிறையிருப்பின்போது (அநேகமாக சுமார் பொ.ச. 65), அவர் மறுபடியும் தீகிக்குவை தீமோத்தேயுவின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்வதற்காக ஒருவேளை எபேசுவுக்கு அனுப்பியிருக்கலாம். அவ்வாறாக பவுலின் அருகில் இருப்பதற்காக தீமோத்தேயு பயணம் செய்து வந்திருக்கக்கூடும்.—2 தீமோத்தேயு 4:9, 12.
இந்தக் காலப்பகுதியில் தீகிக்கு கிரேத்தாவுக்கும் எபேசுவுக்கும் சென்றாரா என்பது தெளிவாயில்லை. இருந்தபோதிலும், அந்த அப்போஸ்தலன் ஊழியம் செய்த கடைசி ஆண்டுகள் வரை அவர் பவுலின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக இருந்ததை இதுபோன்ற குறிப்புகள் தெரிவிக்கின்றன. தீமோத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் பதிலாக பவுல் அவரை பொறுப்புள்ள, கடினமான பணியை மேற்கொள்ளும்படி அனுப்புவதற்கு சிந்தித்துக்கொண்டிருந்தார் என்றால், தீகிக்கு ஒரு முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவ கண்காணியாக ஆகியிருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாயிருக்கிறது. (ஒப்பிடுக: 1 தீமோத்தேயு 1:3; தீத்து 1:10-13.) பயணம் செய்வதற்கும் நீண்டதூர நியமிப்புகளில் பயன்படுத்தப்படுவதற்கும் அவருக்கு இருந்த விருப்பம், பவுலுக்கும் முழு கிறிஸ்தவ சபைக்கும் உதவியாக இருக்கும்படி அவரை செய்வித்தது.
இன்று, சுயதியாகமுள்ள கிறிஸ்தவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபைகளில் மனமுவந்து கடவுளை சேவிக்கின்றனர் அல்லது வேறு எங்காவது ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக தங்களையே அளிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மிஷனரிகளாகவோ, பயணக் கண்காணிகளாகவோ, கட்டுமானப் பணிகளில் சர்வதேச ஊழியர்களாகவோ, உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைமை அலுவலகத்திலோ அல்லது அதன் கிளை அலுவலகங்கள் ஒன்றிலோ வேலை நியமிப்புகளை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தீகிக்குவைப் போல் பிரசித்திப்பெற்றவர்களாய் இல்லையென்றாலும் கடின உழைப்பாளிகளாய் இருக்கின்றனர். கடவுளுக்கு அருமையான, ‘உண்மையுள்ள ஊழியர்களாக’ இருக்கின்றனர். மேலும், மற்ற கிறிஸ்தவர்களும் அவர்களை ‘கர்த்தருக்குள் உடன்வேலையாட்களாக’ நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக நேசிக்கின்றனர்.