விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க எது உதவும்?
1 நாம் என்று யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தோமோ அன்றிலிருந்தே ஆவிக்குரிய முன்னேற்றம் செய்து வருகிறோம். இதனால் மட்டில்லா மகிழ்ச்சியும் அடைகிறோம்! இருந்தாலும், நாம் ‘வேர்கொள்ளவும், கட்டப்படவும், விசுவாசத்தில் உறுதிப்படவும்’ வேண்டுமென்றால் தொடர்ந்து ஆவிக்குரிய விதத்தில் வளர வேண்டும். (கொலோ. 2:6, 7) பெரும்பாலானோர் ஆவிக்குரிய செழுமை அடைந்திருக்கின்றனர் என்பது உண்மையே. ஆனால் சிலர் “விசுவாசத்திலே உறுதியாக நிலைத்திரு[க்க]” தவறியதால் விலகிச் சென்றுவிட்டனர். (1 கொ. 16:13, NW) நாம் இவ்வாறு விலகிச் சென்றுவிடாமல் இருக்க என்ன செய்யலாம்?
2 ஆவிக்குரிய காரியங்களில் எப்போதும் மூழ்கியிருங்கள்: யெகோவாவின் அமைப்பு ஏற்பாடு செய்யும் ஆவிக்குரிய காரியங்களில் முழுமையாக ஈடுபடுங்கள். இங்கேதான் நம்முடைய ஆவிக்குரிய தேவைகள் அபரிமிதமாக பூர்த்தி செய்யப்படுகின்றன. சபை கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவை தொடர்ந்து ஆவிக்குரிய வளர்ச்சியடையவும் ஸ்திரப்படவும் நம்மைத் தூண்டுகின்றன. அவற்றிலிருந்து முழுமையாக பயனடைய வேண்டுமென்றால் நாம் தவறாமல் ஆஜராக வேண்டும். (எபி. 10:24, 25) தினந்தோறும் பைபிளையும், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும், கடவுளுடைய வார்த்தையிலுள்ள பலமான ஆகாரத்தை அலசி ஆராயும் புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கமிருந்தால் நம் ஆவிக்குரிய வேர்கள் ஆழமாகவும் உறுதியாகவும் வளர உதவும். (எபி. 5:14) தனிப்பட்ட ஆவிக்குரிய இலக்குகள் வைத்து அவற்றை அடைய ஊக்கமாக உழைத்தால் நித்தியகால நன்மைகளைப் பெறுவோம்.—பிலி. 3:16.
3 முதிர்ச்சியுள்ளவர்களின் உதவி: சபையிலுள்ள ஆவிக்குரிய முதிர்ச்சி வாய்ந்தவர்களோடு கூட்டுறவை வளர்த்துக்கொள்ளுங்கள். மூப்பர்களை நன்றாக அறிந்துகொள்ள முயலுங்கள், நம்மை பலப்படுத்துவதற்காக முன்னணியில் நிற்பவர்கள் அவர்களே. (1 தெ. 2:11, 12) அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளையும் புத்திமதிகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். (எபே. 4:11-16) உதவி ஊழியர்களும், விசுவாசத்தில் உறுதிப்பட மற்றவர்களுக்கு உதவ விரும்புகின்றனர். ஆகவே இந்தச் சகோதரர்களிடமிருந்தும் நீங்கள் உற்சாகத்தைப் பெறலாம்.
4 ஊழியத்தில் உங்களுக்கு உதவி தேவையா? உதவி வேண்டும் என மூப்பர்களிடம் கேளுங்கள். பயனியர்கள் மற்றவர்களுக்கு உதவும் திட்டத்தில் உங்களையும் அவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் புதிதாக முழுக்காட்டுதல் எடுத்தவரா? நம் ஊழியம் புத்தகத்தைப் படிப்பதும், அதன் ஆலோசனைகளைப் பொருத்துவதும் ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கி முன்னேற உங்களைத் தூண்டும். உங்களுக்கு பிள்ளைகள் உள்ளனவா? அவர்களுடைய ஆவிக்குரிய தன்மையை வளர்க்க தொடர்ந்து உழையுங்கள்.—எபே. 6:4.
5 நாம் விசுவாசத்தில் வேரூன்றி நிலைத்திருந்தால், யெகோவாவோடு நெருக்கமான ஓர் உறவையும் நம் சகோதரர்களோடு அன்பான கூட்டுறவையும் அனுபவித்து மகிழ்வோம். இதன் காரணமாக, சாத்தான் கொண்டுவரும் தாக்குதலை சகித்து நிலைத்திருக்கவும் முடியும், நித்திய எதிர்காலம் பற்றிய நம் நம்பிக்கையும் உறுதிப்படும்.—1 பே. 5:9, 10.