யெகோவாவின் நம்பிக்கையுள்ள உடன் வேலையாட்களாகச் சேவித்தல்
“பூமிக்குரிய மனிதனே, நல்லது இன்னதென்று அவர் உனக்குத் தெரிவித்திருக்கிறார். நீதியை நடப்பிக்கவும் இரக்கத்தை நேசிக்கவும் உன் கடவுளோடு நடப்பதில் மனத்தாழ்மையோடிருக்கவும் வேண்டுமென்பதேயல்லாமல் வேறு எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்?”—மீகா 6:8, NW.
கிறிஸ்தவ அப்போஸ்தலன் யோவான் பின்வருமாறு எழுதினான்: “பாருங்கள், பிதா நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு அதிசயம்! கடவுளின் பிள்ளைகளென்று நாம் அழைக்கப்பட அருள்செய்தார்; நாமிருக்கிறதும் அப்படியே.” (1 யோவான் 3:1, தி.மொ.) மேலும் அப்போஸ்தலன் பவுல் தன்னையும் தன் உடன் தோழனாகிய அப்பொல்லோவையும் குறித்து: “நாங்கள் தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறோம்,” என்று சொன்னான். (1 கொரிந்தியர் 3:9) இந்த இரண்டு கூற்றுகளும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றின அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களாலும் அவர்களைப் பற்றியும் கூறப்பட்டன. ஆனால் அடிப்படை நியமத்தில் இவை கடவுளின் உண்மையுள்ள எல்லா ஊழியருக்கும் பொருந்துகிறது. ஆகவே இவை வேறு வார்த்தைகளில் பின்வருமாறு சொல்லப்படலாம்: ‘பாருங்கள், நம்மை யெகோவாவின் உடன் வேலையாட்களாக இருக்கச் செய்ததில் எத்தகைய அன்பைப் பிதா நம்மீது பொழிந்திருக்கிறார்.’
2 பலவீனரும் அபூரணருமான மனிதர்கள், வல்லமையிலும் ஞானத்திலும் எல்லையற்றவரும், நீதியில் பரிபூரணரும், அன்பே உருவானவருமான மகா உன்னத சிருஷ்டிகரின் உடன் வேலையாட்களாக எவ்வாறு இருக்க முடியும்? இது கூடியதே எப்படியெனில் நம்முடைய முதல் பெற்றோர் சிருஷ்டிகரின் மற்றும் அவருடைய உடன் வேலையாளரான, அந்த வார்த்தை அல்லது லோகாஸின் சாயலிலும் அவர்களுக்கு ஒப்பாகவும் உண்டாக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 1:26, 27, தி.மொ.; யோவான் 1:1) ஆகவே நம்முடைய முதல் பெற்றோர் ஓரளவு ஞானமும், நீதியும், வல்லமையும் அன்பும் கொடுக்கப்பட்டனர். இதன் காரணமாகவே, யெகோவா, தம்முடைய தீர்க்கதரிசியின் மூலமாய்த் தம்முடைய பூமிக்குரிய ஊழியருக்குப் பின்வருமாறு சொல்ல முடிந்தது; “பூமிக்குரிய மனிதனே நல்லது இன்னதென்று அவர் உனக்குத் தெரிவித்திருக்கிறார். நீதியை நடப்பிக்கவும் இரக்கத்தை நேசிக்கவும் உன் கடவுளோடு நடப்பதில் மனத்தாழ்மையோடிருக்கவும் வேண்டுமென்பதேயல்லாமல் வேறு எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்?”—மீகா 6:8, NW.
3 அல்லாமல் “வேறு எதை யெகோவா கேட்கிறார்?” என்ற இவ்வார்த்தைகளை நாம் வாசிக்கையில், முன்னால் சொல்லப்பட்டது, கடவுளிடமும் உடன் மனிதரிடமும் ‘பூமிக்குரிய மனிதனுக்கு, இருக்கும் பொறுப்பைப் பெரும்பாலும் நன்றாய்ச் சுருக்கிக் கூறுகிறதென்ற கருத்தே உள்ளடங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. எந்த அளவுக்கு இது உண்மையில் அவ்வாறு இருக்கிறதென்பது நம்முடைய கலந்தாராய்ச்சி தொடர்ந்து முன்னேறுகையில் தெளிவாகும். நிச்சயமாகவே, எத்தகையோரும் வெறுமென யெகோவாவுடன் நடக்க முடியாது. சொல்லவேண்டுமானால், ‘ஒப்பந்தம் செய்து அவரைச் சந்தித்த’வர்களுக்கே இந்தச் சிலாக்கியம் தனிப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. (ஆமோஸ் 3:3) எப்படி? முந்தின கட்டுரையில் விளக்கிக் காட்டினபடி, எவ்வித ஒதுக்கீடுமின்றி யெகோவாவுக்கு முழுமையாய் ஒப்புக்கொடுத்து அதைத் தண்ணீர் முழுக்காட்டினால் அடையாளப்படுத்துவதன் மூலமே. ஆகவே மீகா 6:8 இந்த ஆட்களுக்குக் குறிப்பதென்ன?
‘நீதியை நடப்பிப்பது’
4 முதலாவதாக, “நீதியை நடப்பிக்க” வேண்டிய தேவை இருக்கிறது. யெகோவா தேவனின் உடன் வேலையாட்களாக, நாம் நல் மனச்சாட்சியைக் கொண்டிருக்க வேண்டும். “நீதியை நடப்பிப்பது” நேர்மையானதை கடவுள் நமக்குக் கட்டளையிடுவதைச் செய்ய வேண்டுமென அடிப்படையாய்க் குறிக்கிறது. இது, நாம் நம்முடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென பொருள்படுகிறது, அந்தக் கடமைகளில் முதன்மையானது யெகோவாவுக்குத் தனிப்பட்ட பக்தி செலுத்த வேண்டுமென்பதே. (நாகூம் 1:2) எத்தகைய போட்டியிடுதலையும் அவர் சகிப்பதில்லை. நாம் நிச்சயமாகவே இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய முடியாது.—1 கொரிந்தியர் 10:22; மத்தேயு 6:24.
5 மேலும், “நீதியை நடப்பிக்க,” இயேசு கிறிஸ்து செய்ததைப்போல் நாம் ‘நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்க’ வேண்டும். நீதியை அவர் நேசித்ததனால், தம்மைக் “குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரு”மாக வைத்துக்கொண்டார். (சங்கீதம் 45:7; எபிரெயர் 7:26) இயேசு அக்கிரமத்தை வெறுத்ததனால், தம்முடைய நாளிள், பாசாங்குத்தனமும் பேராசையுங்கொண்ட மதத் தலைவர்களை நேர்மையான கோபவெறுப்புடன் கண்டனஞ் செய்தார்.—மத்தேயு 23:13-36; யோவான் 8:44.
6 இயேசுவின் முன்மாதிரியில் காண்பதன்படி நீதியை நேசிப்பது மாத்திரமே போதாது. தீமையை நாம் வெறுக்கவும் வேண்டும்—ஆம், அருவருக்கவும், அறவே வெறுக்கவும் வேண்டும், காண சகிக்கமுடியா வண்ணம் நமக்குக் குமட்டலெடுக்க வேண்டும். சிறு வயது முதற்கொண்டு நம்முடைய மனச்சாய்வுகள் பொல்லாதவையாயும், நம் இருதயம் வஞ்சனையும் கேடும் உள்ளதாயும் இருப்பதனால், தீமையானதைச் செய்யக்கூடாதென்று வெறுமென மனதில் ஏற்றிருப்பதைப் பார்க்கிலும் அதிகம் நமக்குத் தேவை. (ஆதியாகமம் 8:21; எரேமியா 17:9) பாவ மனப்போக்குகளையும் சோதனைகளையும் நாம் உறுதியாய் எதிர்க்காவிடில், அவற்றின் கவர்ச்சிகரங்களுக்கு ஆளாகிப் பணிந்துவிடுவோம். பாகால் பேயோரின் ஒழுக்கக்கேடான வணக்கத்தில் ஒன்றுபட்ட ஜோடியை ஊடுருவக் குதித்துப்போட பினேகாஸ் ஈட்டியைப் பயன்படுத்தினபோது தீமைக்கு அவன் காட்டின அதே கடும் வெறுப்பு நமக்கு இருக்கவேண்டும்.—எண்ணாகமம் 25:5-8.
7 அக்கிரமக்காரர் எவரையும் தம்முடைய உடன் வேலையாட்களாக யெகோவா விரும்புகிறதில்லை, பயன்படுத்தப் போவதுமில்லை. இது சங்கீதம் 50:16-18-ல் தெளிவாக்கப்பட்டிருக்கிறது, அங்கே நாம் வாசிப்பதாவது: “தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்து போடுகிறாய். நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப் போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.”
8 நாம், கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் நாம் தன்னடக்கத்தைப் பிரயோகிக்க வெகு கவனமாயிராவிட்டால், நம்முடைய மாம்ச பலவீனத்தினால் நாம் மீறிநடந்து யெகோவாவின் பெயருக்கு நிந்தையைக் கொண்டுவருவோம். இவ்வாறு, சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மூப்பர், அவிசுவாசியான கணவனைக் கொண்ட ஆவிக்குரிய ஒரு சகோதரியுடன் விபசாரக் குற்றஞ் செய்தார். அந்த முந்நாள் மூப்பர் சபைக்குப் புறம்பாக்கப்பட்டதை அறிவித்த அந்தச் சாயங்காலத்தில் கோப வெறி கொண்ட கணவன் வேட்டைத் துப்பாக்கியுடன் ராஜ்ய மன்றத்துக்குள் நுழைந்து, குற்றஞ்செய்த அந்த இருவரையும் சுட்டான். அவர்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை, ஆனால் அடுத்த நாள், ஐக்கிய மாகாணங்களில் மிகப் பெரிய செய்தித்தாளில் இது முன்பக்கச் செய்தியாயிருந்தது! மெய்யாகவே, தவறுசெய்தல் நிந்தனையைக் கொண்டுவருகிறது.—நீதிமொழிகள் 6:32.
9 ஆகையால், பொருத்தமாகவே நமக்குப் பின்வருமாறு அறிவுரை கொடுக்கப்படுகிறது: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23) ஆம், நம்முடைய அடையாளக் குறிப்பான இருதயம் எதன்மேல் கருத்தூன்றியிருக்க நாம் விடுகிறோம் என்பதைக் குறித்து நம்மை நாம் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் மேலும், டெலிவிஷன், பத்திரிகைகள், மற்றும் வேறு வகைகளான செய்தி மூலங்கள், இழிபொருள் ஓவியம் உட்பட அசுத்தமான காரியங்களை முதன்மைப்படுத்திக் காட்டுகின்றன. ஆகையால் நாம் காண்பதையும், கேட்பதையும் வாசிப்பதையும் வெகு கவனமாய்த் தெரிந்தெடுக்கவேண்டும். நம்முடைய சொந்த எண்ணத்தை நாம் அடக்கியாளுவது அவ்வளவு மிக முக்கியம்! உதாரணமாக, பாலுறவு சம்பந்த கற்பனை கனவுகளை, மெய் வாழ்க்கையில் நடப்பிக்க நாம் முயற்சிசெய்ய எண்ணமாட்டாதக் காரியங்களை நம்முடைய மனக்கண்முன் கொண்டுவந்து பார்ப்பதில் இன்பம் பெறுவது எளிதாயிருக்கலாம். (மத்தேயு 5:28) ஆனால், அடிக்கடி இத்தகைய சிந்தனை நிச்சயமாகவே கெட்ட நடத்தைகளில் விளைவுறுகிறது. அப்படியானால், இத்தகைய காரியங்களில் மனம்தங்கியிருக்க விடுவதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியின் கனியாகிய தன்னடக்கத்தைக் காட்டி பிலிப்பியர் 4:8-ல் வரிசையாகக் கொடுத்துள்ள காரியங்களின்பேரில் மனம் ஊன்றி தங்கியிருக்கச் செய்வோமாக.—கலாத்தியர் 5:22, 23.
“இரக்கத்தை நேசி”
10 மீகா 6:8-ல் குறிப்பிட்டுள்ள இரண்டாவது தேவை நாம் ‘இரக்கத்தை நேசிக்க’ வேண்டுமென்பதே. தி நியூ இங்லிஷ் பைபிளில் “உண்மைத் தவறாமையை நேசி” என்றிருக்கிறது. ஓரக்குறிப்பைக் கொண்ட நியூ உவோர்ல்ட் டிரான்ஸ்லேஷன் பைபிளில் அடிக்குறிப்பு, “இரக்கம்” என்று மொழிபெயர்த்துள்ள எபிரெயச் சொல் சேசெட், “அன்புள்ள-இரக்கம்” அல்லது “உண்மைத் தவறா அன்பு” எனவும் மொழிபெயர்க்கப்படலாமென்று காட்டுகிறது. சொற்களஞ்சிய ஆசிரியர்கள் சொல்லுகிறபடி, “உண்மைத் தவறாமை, பொறுப்பை விட்டோடுவதற்கு அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்வதற்கு உண்டாகும் எந்தச் சோதனையையும் உறுதியாய் எதிர்த்து நிற்பதைக் குறிக்கிறது.” “உண்மைத் தவறாமை, கடினமான சச்சரவுகளுக்கு எதிரிலும். அந்த ஆள் அல்லது காரியத்தின் சார்பாக நின்று அவருக்காகப் போராட விரும்பும் எண்ணத்தை, உண்மையாயிருப்பதுடன் கூட்டுகிறது.” உற்சாகமூட்டுவதாய், வேத எழுத்துக்களிலும் இந்தச் சொற்களின் உபயோகத்தில் சிறிது வேறுபாட்டைக் காண்கிறோம். உதாரணமாக, “உண்மைத் தவறாமை” என்ற பதம் சடப்பொருட்களைக் குறித்ததில் ஒருபோதும் பயன்படுத்தப்பட்டில்லை. ஆனால் “உண்மையுள்ள” என்ற சொல் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு சந்திரன் ‘வானங்களில் உண்மையுள்ள சாட்சி’யென அழைக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 89:37, NW) பின்னும் கடவுளுடைய வார்த்தைகள் உண்மையுள்ளவை, அதாவது, நம்பத்தக்கவையென்று சொல்லப்பட்டிருக்கின்றன.a (வெளிப்படுத்துதல் 21:5; 22:6, NW) எனினும், உண்மைத் தவறாமை யெகோவா தேவனுக்கும் அவர் அங்கீகரிக்கும் ஊழியருக்கும் மாத்திரமே உரியதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிசைய, யெகோவாவைக் குறித்து நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “உத்தமனுக்கு [உண்மைத்தவறாதவனுக்கு] நீர் உத்தமராகவும் . . . உம்மைக் காட்டுவீர்.”—2 சாமுவேல் 22:26, தி.மொ.
11 கடவுளுடைய குமாரன் பரலோகத்தில் யெகோவாவுக்கு உண்மையுடனும் உண்மைத் தவறாமலும் இருந்தார். பூமியில், மனிதனான இயேசு கிறிஸ்து பரீட்சைகளை அனுபவித்து தம்முடைய கீழ்ப்படிதலின் மூலம் மனிதனாகத் தாம் உண்மையுடனும் உண்மைத் தவறாமலும் இருந்ததை நிரூபித்தார். இது எபிரெயர் 5:7-9-ல் குறிப்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது, அங்கே நாம் வாசிப்பதாவது: “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி உரத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபஞ்செய்து வேண்டிக்கொண்டு தமது பயபக்தியினிமித்தம் கேட்கப்பெற்றுத் தாம் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு தாம் பூரணராக்கப்பட்ட பின்பு தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்.”—தி.மொ.
உண்மைத்தவறாமையின் பரீட்சைகள்
12 யெகோவாவுக்கு உண்மைத் தவறாதிருப்பது, பூமியிலுள்ள அவருடைய ஊழியராகிய நம்முடைய உடன் கிறிஸ்தவர்களுக்கும் உண்மைத் தவறாதிருப்பதையும் தேவைப்படுத்துகிறது. அப்போஸ்தலன் யோவான் பின்வருமாறு நம்மை நினைப்பூட்டுகையில் இதைத் தெளிவாக்குகிறான்: “கண்ட சகோதரனின் அன்புகூராமலிருக்கிறவன் காணாத கடவுளில் அன்புகூரமுடியாது.” (1 யோவான் 4:20, தி.மொ.) மற்றவர்களுடைய அபூரணங்கள் இந்தக் காரியத்தில் நம்முடைய உண்மைத் தவறாமையைப் பரீட்சிக்கலாம். உதாரணமாக, சிலர், தாங்கள் புண்படுத்தப்பட்டிருக்கையில், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருவதை நிறுத்திக்கொள்வதனால், யெகோவாவின் அமைப்புக்குத் தாங்கள் உண்மைத் தவறாதிருப்பதில் பலவீனத்தைக் காட்டியிருக்கின்றனர். தலைமைத் தாங்கிநடத்தும்படி யெகோவா பயன்படுத்துபவர்கள் தீர்ப்பில் பிழைபடுகையில் நம்முடைய சகோதரருக்கு உண்மைத் தவறாதிருப்பதில் மற்றொரு பரீட்சை எழும்புகிறது. அவ்வப்போது, இத்தகைய பிழைகளைச் சிலர், தங்கள் உணர்ச்சிகளைப் புண்படுத்திக்கொண்டு யெகோவாவின் காணக்கூடிய அமைப்பிலிருந்து தொடர்பறுத்துக்கொள்வதற்குச் சாக்குப்போக்காகப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் நடத்தைப்போக்கு சரியென நிரூபிக்கப்படுகிறதா? இல்லவே இல்லை!
13 கடவுளுடைய அமைப்பை விட்டு விலகிச் செல்வதில் இத்தகைய ஆட்கள் ஏன் சரியென நிரூபிக்கப்படுகிறதில்லை? ஏனெனில் அவருடைய வார்த்தை பின்வருமாறு நமக்கு உறுதிகூறுகிறது: “உம்முடைய [யெகோவாவின்] வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.” (சங்கீதம் 119:165) மேலும், “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்,” என்றும் நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். (1 பேதுரு 4:8; நீதிமொழிகள் 10:12) இன்னும், ஒருவன் யெகோவாவின் ஜனங்களை விட்டுத் தன்னைப் பிரித்துக்கொள்கிறானென வைத்துக்கொள்வோம். அவன் எங்கே போக முடியும்? ஒரு சமயம் இயேசு தம்முடைய அப்போஸ்தலரை, அவர்களும் அவரைவிட்டுப் போய்விட மனதாயிருந்தார்களாவெனக் கேட்டபோது அவர்கள் எதிர்ப்பட்ட அதே பிரச்னையை அவன் எதிர்ப்படுகிறானல்லவா? அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு சரியான பதில் கொடுத்தான்: “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.” (யோவான் 6:68) பொய்மத உலகப் பேரரசாகிய ‘மகா பாபிலோனுக்கு’ அல்லது சாத்தானின் அரசியல் “மூர்க்க மிருகத்தின்” கொடும்பிடிக்குள் செல்வதையே தவிர போவதற்கு வேறு இடமில்லை. (வெளிப்படுத்துதல் 13:1; 18:1-5) யெகோவாவின் காணக்கூடிய அமைப்பை விட்டுச் சென்ற உண்மையற்றவர்களில் பெரும்பான்மையர், கடவுளை அவமதிக்கும் “மகா பாபிலோனில்” உள்ளவர்களுடன் தங்கள் எண்ணங்களில் ஒருமித்து செல்பவர்களாகிவிட்டனர்.
“உன் கடவுளோடு நடப்பதில் மனத்தாழ்மையோடிரு”
14 “மனத்தாழ்மைக்”குரிய ஆங்கிலச் சொல் பல பொருள்படுகிறது. போலிப் பெருமையற்றிருப்பதை, பருமனிலும், அளவிலும், செயல்பரப்பிலும் மட்டுப்பட்டிருப்பதை, அது குறிக்கலாம். அல்லது கற்புடைமையை, “உடையின் மற்றும் நடத்தையின்” நல்லொழுக்கப் பாங்கை அனுசரித்தலை அது குறிக்கலாம். (1 தீமோத்தேயு 2:9) பின்னும், நாம் முக்கியமாய் அக்கறைகொள்கிற “மனத்தாழ்மை”யின் பொருளும் இருக்கிறது, அதாவது, ஒருவன் தன் மட்டுப்பட்ட தன்மைகளை உணர்ந்திருத்தல் அல்லது “தன்னுடைய திறமைகளின் அல்லது தகைமையின் பேரில் அடக்கமான மதிப்பை வைத்தல்.” நம்மைப்பற்றி நமக்கு மட்டுக்கு மீறிய உயர்ந்த எண்ணம் இருந்து, யெகோவா தேவனிடம் முதன்மையாய்க் கவனத்தை இழுத்துக் கொண்டிருப்பதற்குப் பதில் நம்பேரில் கவனத்தை இழுத்துக்கொண்டிருந்தால் நாம் யெகோவாவின் உடன் வேலையாட்களாக ஒருபோதும் இருக்கமுடியாது.
15 ‘நம்முடைய திறமைகளின் அல்லது தகைமையின் பேரில் அடக்கமான மதிப்பை வைத்தல்,’ என்பதே “மனத்தாழ்மை” என்று மீகா 6:8-ல் மொழிபெயர்க்கப்பட்ட அந்த எபிரெய சொல்லுக்கு நாம் பொருத்த வேண்டிய பொருளென தெரிகிறது. எபிரெய வேத எழுத்துக்களில் இந்தச் சொல் காணப்படும் வேறு ஒரே இடத்தில் அது பயன்படுத்தியுள்ள முறையிலிருந்து இது தெரிகிறது. நீதிமொழிகள் 11:2-ல் இது, பால் சம்பந்த அசுத்தத்தோடல்ல, ஆனால் தன்னைப்பற்றி மட்டுக்கு மீறி உயர்வாய் நினைப்பதன் விளைவாயுண்டாகும் அகந்தையுடன் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறது. அங்கே நாம் வாசிப்பதாவது: “அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.” மனத்தாழ்மையோடிருப்பது யெகோவாவுக்குப் பயந்திருப்பதோடுகூட ஒன்றிணைந்து செல்கிறது, இதுவும் ஞானத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 111:10) மனத்தாழ்மையுள்ள ஒருவன் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தைக் கொண்டிருக்கிறான், ஏனெனில் தனக்கும் கடவுளுக்கும் இடையில், யெகோவாவின் நீதிக்கும் வல்லமைக்கும் தன்னுடைய சொந்த அபூரணத்துக்கும் பலவீனத்துக்கும் இடையில் எத்தகைய மிகப் பெரும் வேறுபாடு இருக்கிறதென்பதை அவன் தெளிவாக உணருகிறான். ஆகையால், மனத்தாழ்மையுள்ளவன் பயத்தோடும் நடுக்கத்தோடும் தன் இரட்சிப்பு நிறைவேற உழைக்கிறான்.—பிலிப்பியர் 2:12.
16 யெகோவாவின் உடன் வேலையாட்கள் மனத்தாழ்மையோடிருக்க வேண்டியதற்கு எத்தனையோ பல காரணங்கள் இருக்கின்றன! நமக்கு எவ்வளவு ஞானம் இருந்தாலும், எத்தகைய உடல்பலம் அளிக்கப்பட்டிருந்தாலும், அல்லது பொருள் சம்பந்தமான எவ்வளவு அதிக செல்வத்தை உடையவராக நாமிருந்தாலும் பெருமை பாராட்டுவதற்கு நமக்கு எந்தத் காரணமுமில்லை. (எரேமியா 9:23) ஏன் இல்லை? 1 கொரிந்தியர் 4:7-ல் கூறப்பட்டுள்ள நியமத்தின் காரணமாக: “உன்னை விசேஷித்தவனாக்குகிறவர் யார்? உனக்குள்ளவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனேயானால் பெற்றுக்கொள்ளாதவன் போல் நீ பெருமை பாராட்டுகிறதென்ன?” (தி.மொ.) மேலும் நம்முடைய ஊழியத்தின் பலன்களின் காரணமாகவும் பெருமை பாராட்டுவதற்கு எத்தகைய காரணமும் நமக்கில்லை, ஏனெனில் 1 கொரிந்தியர் 3:6, 7-ல் நாம் என்ன வாசிக்கிறோம்? அங்கே பவுல் பின்வருமாறு கூறினான்: “நான் நட்டேன், அபொல்லோ நீர்ப்பாய்ச்சினான், விளையச் செய்தவரோ கடவுள். ஆதலால் நடுகிறவனும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற கடவுளே எல்லாமாவார்.” லூக்கா 17:10-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளும் நம்மை மனத்தாழ்மையோடு வைத்துக்கொள்வதற்கு உதவி செய்ய வேண்டும், அவர் சொன்னதாவது: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையுஞ் செய்து முடித்தப் பின்பு: நாங்கள் பிரயோஜனமற்ற அடிமைகள், செய்யக் கடமைப்பட்டிருந்தவைகளைத் தானே செய்தோமென்று சொல்லுங்கள்.”
17 மனத்தாழ்மையோடிருப்பது மெய்யாகவே ஞானத்தின் போக்கு. எவ்விடத்தில் சேவிப்பதற்குச் சிலாக்கியம் பெற்றிருந்தாலும் மனத்திருப்தியுடனிருக்க மனத்தாழ்மை நமக்கு உதவி செய்கிறது. நாம் மனத்தாழ்மையுடனிருந்தால், பேராசையுடன் உயர்வடைய முயற்சி செய்ய மாட்டோம், ஆனால் “சிறியவனாக” நம்மை நடத்திக் கொள்வதில் திருப்தியாயிருப்போம். (லூக்கா 9:48) பின்னும், “ஆயிரம் நாளிலும் உமது பிரகாரங்களில் செலவிடும் ஒரே நாள் நல்லது; தெய்வபயமற்றவர்களின் கூடாரங்களில் வாசமாயிருப்பதிலும் என் கடவுளுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்,” என்று உறுதியாய்க் கூறின சங்கீதக்காரனின் மனப்பான்மையை நாம் கொண்டிருப்போம். (சங்கீதம் 84:10, தி.மொ.) மேலும், நாம் மனத்தாழ்மையோடிருந்தால் மற்றவர்களைக் கனம்பண்ணுவதில் முந்திக்கொள்ளும்படி நம்மைத் தூண்டுவிக்கும் அன்பு நமக்கு இருக்கும்.—ரோமர் 12:10.
மனத்தாழ்மை இளைஞருக்கு ஏற்றது
18 கிறிஸ்தவ இளைஞர்கள் மனத்தாழ்மையின் ஆடையால் தங்களை அலங்கரித்துக்கொள்வது முக்கியமாய் ஏற்றதாயிருக்கிறது. எலிகூ எத்தகைய சிறந்த முன்மாதிரியை அவர்களுக்கு அளித்தான்! அவன் சரியான பதில்களைக் கொண்டிருந்தபோதிலும், முதியோர் பேசி முடிக்கும் வரையில் மரியாதையுடன் காத்திருக்க மனமுள்ளவனாயிருந்தான். (யோபு 32:6, 7) அடிக்கடி, இளைஞர்கள் தங்கள் வரம்புகளைப் பற்றிப் பெரும்பாலும் உணராமல், தன்னம்பிக்கை உணர்ச்சியுடனிருக்க மனஞ்சாய்கிறார்கள். தங்களுக்கு உடல் பலம் இருப்பதாலும் ஓரளவு அறிவு அடைந்திருப்பதாலும் தங்கள் முதியோரைத் தாழ்வாக நோக்கும் பாங்குடையோராய் அவர்கள் இருக்கலாம். ஆனால் அறிவும் ஞானமும் ஒரே பொருளுடையவையாக இல்லை, அறிவைப் பொருத்திப் பிரயோகிப்பதே ஞானம். ஐக்கிய மாகாணங்களில் தற்கால இளைஞர் உண்டாக்கிக்கொண்டிருக்கும் விசனகரமான பதிவு இதற்கொப்பான மாதிரியாக இருக்கிறது. பெருங் குற்றங்கள் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டவர்களில் 63 சதவீதம் 24 வயதுக்குட்பட்ட இளைஞரே, கைதுசெய்யப்பட்டவர்களில் 30 சதவீதம் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும் “15-24 வயதுக்குட்பட்ட அமெரிக்கருக்குள் மரணம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் குடிபோதையில் அல்லது மயக்க மருந்தால் ஆற்றலிழந்த நிலையில் ஊர்தியைச் செலுத்துதல்” என்றும் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டில், “13-19 வயதுக்குட்பட்டவர்களின் திருமணம் மேலும் மேலுமதிக மணவிலக்கில் முடிவடைகின்றன, அப்படியிருக்க, “மணமகளும் மணவாளனும் மணமேடைக்குச் செல்கையில் கூடுதலான ஒருசில ஆண்டுகளின் ஞானத்தை ஏற்கெனவே பெற்றவர்களாய் இருந்தால், திருமணங்கள் பெரும்பாலும் நிலைக்கக்கூடியவையாக இருக்கலாம்” என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
19 அப்படியானால், கடவுளுடைய வார்த்தையின் அறிவுரை எவ்வளவு ஞானமானது! இளைஞர் தங்கள் தகப்பனுக்கும் தங்கள் தாய்க்கும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து, அவர்களைக் கனம்பண்ணும்படி அது சரியாகவே அவர்களுக்குக் கட்டளையிடுகிறது. (எபேசியர் 6:1-3; கொலோசெயர் 3:20) பின்வரும் இந்த ஞானமான அறிவுரையை முக்கியமாய் இளைஞர் தங்கள் இருதயத்தில் ஏற்கவேண்டும்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் [யெகோவாவில், தி.மொ.] நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.“—நீதிமொழிகள் 3:5, 6.
20 ஒப்புக்கொடுத்தலின் மூலமும் தண்ணீரில் முழுக்காட்டப்பட்டதன் மூலமும் யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை மெய்ப்பித்துக் காட்டினபின், நாம் ‘நீதியை நடப்பித்து, உண்மைத் தவறாத அன்பைக் காட்டி, நம்முடைய கடவுளோடு நடப்பதில் மனத்தாழ்மையோடிருந்தால்,” என்ன பரிசுகளை நாமெல்லாரும் எதிர்பார்க்கலாம்? அவர் கட்டளையிட்டவற்றை முழுமையாய் நிறைவேற்றினதனால் எல்லாவற்றையும் விட மிக அதிக முக்கியமாய் யெகோவாவின் அங்கீகாரத்தை நாம் பெறுவோம், இவ்வாறு அவருடைய மகா மற்றும் பயத்தைத் தூண்டும் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் பங்குகொள்வதனால் அவருடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்குவோம். (நீதிமொழிகள் 27:11) மேலும், “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது,” என்ற இந்த நியமத்தின் உண்மை நம்முடைய சொந்த வாழ்க்கையில் மெய்யாவதைக் காண்போம்.—1 தீமோத்தேயு 4:8. (w88 3/15)
[அடிக்குறிப்புகள்]
a ஐக்கிய மாகாணங்களில் மேற்குப் பகுதியில் ஒரு வெந்நீரூற்று இருக்கிறது, அது பல ஆண்டுகளாக, சராசரி 65 நிமிடங்களுக்கு ஒருமுறை ஊற்று எழும்பச் செய்து வந்தது. இவ்வாறு அது உண்மையுள்ள பழங்காலத்தியவன் என்ற அதன் பெயரைப் பெற்றது.
உங்கள் பதில்கள் யாவை?
◻ மீகா 6:8-க்குப் பொருந்த ‘நீதியை நடப்பிப்பதற்கு’ என்ன தேவை?
◻ யெகோவாவுக்கு உண்மைத் தவறாதிருப்பது உடன் கிறிஸ்தவர்களுடன் நம்முடைய உறவை எவ்வாறு பாதிக்கிறது?
◻ நாம் ஏன் ‘கடவுளோடு நடப்பதில் மனத்தாழ்மையோடிருக்க’ வேண்டும்?
◻ ஏன் முக்கியமாய்க் கிறிஸ்தவ இளைஞருக்கு மனத்தாழ்மை ஏற்றதாயிருக்கிறது?
[கேள்விகள்]
1. வேதப்பூர்வ எந்த ஆதாரத்தின்பேரில் இன்று யெகோவாவின் ஊழியர் யாவரும் அவருடைய “உடன்வேலையாட்கள்” என அழைக்கப்படலாம்?
2. யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய உடன் வேலையாட்களாக ஏன் இருக்க முடியும்?
3. மீகா 6:8-ல் அடங்கியுள்ள கருத்து என்ன? ஓர் ஆள் யெகோவாவின் உடன் வேலையாட்களில் ஒருவனாவதற்கு முன்னால் அவன் பூர்த்தி செய்யவேண்டிய தேவை என்ன?
4. “நீதியை நடப்பிப்பது” அடிப்படையாய்க் குறிப்பதென்ன?
5. இயேசு கிறிஸ்து, நாம் நீதியை நேசித்து அக்கிரமத்தை வெறுத்ததை எவ்வாறு காட்டினார்?
6. தீமையாயிருப்பதால் செய்யக்கூடாதென்று விலக்கப்பட்டதை நாம் தவிர்க்க வேண்டுமென்று வெறுமென மனதில் ஏற்றிருப்பதைப் பார்க்கிலும் அதிகம் நமக்கு ஏன் தேவை?
7. அக்கிரமக்காரர் எவரையும் தம்முடைய உடன் வேலையாட்களாக யெகோவா பயன்படுத்துவதில்லை என்பதற்கு என்ன அத்தாட்சி நமக்கு இருக்கிறது?
8. தன்னடக்கத்தை இழந்து தவறுசெய்வதற்கு உட்பட்டால் நாம் கொண்டுவரக்கூடிய நிந்தனையை எந்தச் சம்பவம் அழுத்திக் காட்டுகிறது?
9. நீதிமொழிகள் 4:23-ன்படி, எதை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், ஏன்?
10, 11. (எ) உண்மையாயிருந்தலுக்கும் உண்மைத்தவறாமைக்கும் இடையே என்ன வேறுபாட்டைக் குறிக்கலாம்? (பி) கடவுளுடைய குமாரன் எவ்வாறு உண்மையாயிருந்தார், உண்மைத்தவறாமையையும் காட்டினார்?
12. சில சமயங்களில் எது நம்முடைய உண்மைத்தவறாமையைப் பரீட்சிக்கலாம்? இத்தகைய பரீட்சைகளுக்கு எதிரில் சிலர் தங்களை எப்படி நடத்திக்கொள்கின்றனர்?
13. யெகோவாவின் அமைப்பை விட்டுப் பிரிந்துபோதல் ஏன் சரியென நிரூபிக்கப்படுகிறதில்லை? உண்மைத்தவறும் இத்தகையோர் செய்வதற்குத் தெரிந்துகொள்ள அவர்கள் முன் இருப்பவை யாவை?
14, 15. (எ) “மனத்தாழ்மைக்குரிய ஆங்கிலச் சொல் என்ன பொருள்களை உடையதாயிருக்கிறது? (பி) “மனத்தாழ்மையின் எந்தப் பொருளில் நாம் இங்கே முக்கியமாய்க் கவனம் செலுத்துகிறோம்? என்ன காரணங்களினிமித்தம்? (சி) கிறிஸ்தவர்கள் ஏன் ‘தங்கள் திறமைகள் அல்லது தகைமையின்பேரில் அடக்கமான மதிப்பை வைக்க’ வேண்டும்?
16. கிறிஸ்தவர்கள் மனத்தாழ்மையோடிருக்க வேண்டியதற்குக் காரணங்களைக் காட்டும் வேதவசனங்கள் சில யாவை?
17. ஏன் மனத்தாழ்மையோடிருப்பது மெய்யாகவே ஞானத்தின் போக்கு?
18. (எ) ஏன் மனத்தாழ்மை முக்கியமாய் இளைஞருக்கு ஏற்றது? (பி) தற்கால இளைஞர் உட்பட்ட என்ன பதிவு மனத்தாழ்மைக்கான தேவையை அறிவுறுத்துகிறது?
19. வேதப்பூர்வ எந்த அறிவுரையை இளைஞர் இருதயத்தில் ஏற்பது நல்லது?
20. ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஆட்கள் யாவரும் மீகா 6:8-ல் சொல்லியிருப்பதற்குச் செவிகொடுத்து நடந்தால் என்ன பரிசுகளை எதிர்பார்க்கலாம்?
[பக்கம் 24-ன் படம்]
நீங்கள் காண்பதையும், கேட்பதையும் வாசிப்பதையும் வெகு கவனமாய்த் தெரிந்தெடுப்பதன் மூலம் உங்கள் இருதயத்தை காத்துக்கொள்கிறீர்களா?
[பக்கம் 25-ன் படம்]
போவதற்கு வேறு இடமில்லை என்பதை பேதுரு அறிந்திருந்தான், ஏனெனில் “நித்திய ஜீவ வசனங்கள்” இயேசுவினிடம் இருந்தது. யெகோவாவின் அமைப்புக்கு உண்மைதவறாதவர்களாய் நிலைத்திருக்க நீங்கள் தீர்மானமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?