அதிகாரம் 5
சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்
1, 2. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்க்கையில் உதவிக்காக யாரை நோக்கியிருக்க வேண்டும்?
“இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்,” என்று சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பு ஒரு மதித்துணர்வுமிக்க தந்தை உணர்ச்சிபொங்க தெரிவித்தார். (சங்கீதம் 127:4) பெற்றோராய் இருப்பதில் வரும் மகிழ்ச்சி உண்மையில் கடவுளிடமிருந்து வரும் அருமையான வெகுமதி, அது திருமணமாகியிருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு எளிதில் கிடைக்கும் ஒன்று. இருப்பினும், பெற்றோராய் இருக்கும் நிலை, மகிழ்ச்சியோடுகூட பொறுப்புகளையும் கொண்டுவருகிறது என்பதை பிள்ளைகளை உடையோர் விரைவில் உணர்ந்துகொள்கின்றனர்.
2 விசேஷமாக இன்று, பிள்ளைகளை வளர்த்து பெரியவர்களாக்குவது மிகவும் கடினமான, பொறுப்புள்ள வேலையாய் இருக்கிறது. அவ்வாறு இருப்பினும், அநேகர் அதை வெற்றிகரமாய் நிறைவேற்றி முடித்திருக்கின்றனர், அதற்கான வழியை பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் குறிப்பிட்டுக் காண்பிக்கிறார்: “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.” (சங்கீதம் 127:1) யெகோவாவின் அறிவுரைகளை எந்த அளவுக்கு நீங்கள் மிகவும் நெருக்கமாய் பின்பற்றுகிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் மேம்பட்ட பெற்றோராய் ஆவீர்கள். பைபிள் சொல்கிறது: ‘உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.’ (நீதிமொழிகள் 3:5) நீங்கள் 20-வருட பிள்ளை-வளர்ப்பு திட்டத்தில் இறங்குகையில் யெகோவாவின் புத்திமதிக்கு விருப்பத்தோடு செவிகொடுக்க விரும்புகிறீர்களா?
பைபிளின் கருத்தை ஏற்றுக்கொள்ளுதல்
3. பிள்ளைகளை வளர்ப்பதில் தந்தைமார் என்ன பொறுப்பை உடையவர்களாய் இருக்கின்றனர்?
3 உலகெங்கிலும் அநேக குடும்பங்களில், பிள்ளைப் பயிற்றுவிப்பு பிரதானமாய் ஒரு பெண்ணின் வேலையே என்று ஆண்கள் கருதுகின்றனர். குடும்பத்தை நடத்துவதற்காக சம்பாதிப்பது முக்கியமாய் தந்தையின் பங்கு என்று கடவுளுடைய வார்த்தை குறிப்பிட்டுக் காண்பிப்பது உண்மையே. இருப்பினும், அவருக்கு வீட்டில் பொறுப்புகள் இருக்கின்றன என்றும்கூட அது சொல்கிறது. பைபிள் சொல்கிறது: “வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் குடும்பத்தைக் கட்டு.” (நீதிமொழிகள் 24:27, NW) கடவுளுடைய பார்வையில், தந்தையும் தாயும் பிள்ளைப் பயிற்றுவிப்பில் கூட்டாளிகளாக இருக்கின்றனர்.—நீதிமொழிகள் 1:8, 9.
4. பெண்பிள்ளைகளைக் காட்டிலும் ஆண்பிள்ளைகளை நாம் ஏன் உயர்வானவர்களாக கருதக்கூடாது?
4 நீங்கள் உங்கள் பிள்ளைகளை எவ்வாறு கருதுகிறீர்கள்? ஆசியாவில் “பெண் குழந்தைகள் பெரும்பாலும் வரவேற்கப்படுவதில்லை,” என்று அறிக்கைகள் சொல்கின்றன. லத்தீன் அமெரிக்காவில் “அதிக விவரம் தெரிந்த, மூடநம்பிக்கையற்ற குடும்பங்கள்” மத்தியிலும்கூட காரணமில்லாமல் பெண்பிள்ளைகளுக்கு எதிராக பாரபட்சமான மனநிலை இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆனால், உண்மை என்னவெனில், பெண்பிள்ளைகள் இரண்டாம்தர பிள்ளைகள் அல்ல. பண்டைய காலங்களில் சிறப்பான தந்தையாய் விளங்கிய யாக்கோபு, தனக்கு அந்தச் சமயம் வரையாக பிறந்திருந்த மகள்கள் உட்பட எல்லா பிள்ளைகளையும் “தேவன் . . . [எனக்கு] உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்” என்று விவரித்தார். (ஆதியாகமம் 33:1-5; 37:35) அதேபோல், இயேசு தம்மிடம் கொண்டுவரப்பட்ட எல்லா ‘சிறு பிள்ளைகளையும்’ (சிறுவர்களையும் சிறுமிகளையும்) ஆசீர்வதித்தார். (மத்தேயு 19:13-15) அவர் யெகோவாவின் எண்ணத்தைப் பிரதிபலித்தார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம்.—உபாகமம் 16:14.
5. தங்கள் குடும்பத்தின் அளவைக் குறித்து தீர்மானம் எடுக்கையில் என்ன ஆராய்வுகள் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்?
5 ஒரு பெண் எவ்வளவு பிள்ளைகளை பெறமுடியுமோ அவ்வளவு பிள்ளைகளை பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது உங்கள் சமுதாயத்தில் வழக்கமாய் இருக்கிறதா? பொருத்தமாகவே, எவ்வளவு பிள்ளைகளை பெற்றுக்கொள்வது என்பது திருமணமான தம்பதியினரின் தனிப்பட்ட தீர்மானம். அநேக பிள்ளைகளை பெற்று உணவு, உடை, கல்வி ஆகியவற்றை அளிப்பதற்கு பெற்றோரிடம் போதிய வருமானம் இல்லையென்றால் என்ன செய்வது? தங்கள் குடும்பம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கையில் தம்பதியினர் இதை நிச்சயமாகவே சிந்தித்துப் பார்க்க வேண்டும். சில தம்பதிகள், தங்கள் பிள்ளைகள் எல்லாரையும் காப்பாற்ற முடியவில்லையென்றால், அப்பிள்ளைகளில் சிலரை வளர்க்கும் பொறுப்பை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இப்பழக்கம் விரும்பத்தக்கதா? உண்மையில் அப்படி இல்லை. மேலும், இது பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய கடமையிலிருந்து அவர்களை விடுவித்து விடுவதில்லை. பைபிள் சொல்கிறது: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8) பொறுப்புள்ள தம்பதிகள், ‘தங்கள் சொந்த பிள்ளைகளுக்கு வேண்டியவற்றை ஏற்பாடு செய்வதற்கென’ தங்கள் ‘குடும்பத்தின்’ அளவை திட்டமிட முயற்சி செய்கின்றனர். இதைச் செய்வதற்கு அவர்கள் கருத்தடை செய்துகொள்ளலாமா? அதுவும்கூட ஒருவருடைய தனிப்பட்ட தீர்மானம்; திருமணமான தம்பதிகள் இந்தப் போக்கை மேற்கொள்ள தீர்மானம் எடுத்தால், கருத்தடை முறையை தேர்ந்தெடுப்பதும்கூட ஒரு தனிப்பட்ட விஷயம். ‘அவனவன் தன் தன் பாரத்தைச் சுமக்க வேண்டும்.’ (கலாத்தியர் 6:5) இருப்பினும், கருச்சிதைவை உட்படுத்தும் எந்த வகையான கருத்தடையும் பைபிள் நியமங்களுக்கு முரணாக இருக்கிறது. யெகோவா தேவன் ‘ஜீவ ஊற்றாக’ இருக்கிறார். (சங்கீதம் 36:9) ஆகையால், கருத்தரித்தப் பின்பு அந்த உயிரை அழிப்பது, யெகோவாவுக்கு பெரும் அவமரியாதையை காண்பிக்கும், மேலும் அது கொலைக்கு சமமாயும் இருக்கிறது.—யாத்திராகமம் 21:22, 23; சங்கீதம் 139:16; எரேமியா 1:5.
உங்கள் பிள்ளையின் தேவைகளைப் பூர்த்திசெய்தல்
6. பிள்ளைப் பயிற்றுவிப்பை எப்போது ஆரம்பிக்க வேண்டும்?
6 நீதிமொழிகள் 22:6 சொல்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து.” பிள்ளைகளை பயிற்றுவிப்பது பெற்றோரின் மற்றொரு பெரிய பொறுப்பாகும். ஆனால், எப்போது அந்தப் பயிற்றுவிப்பை ஆரம்பிக்க வேண்டும்? வெகு சீக்கிரத்தில். தீமோத்தேயு ‘சிசுப்பருவத்திலிருந்தே’ பயிற்றுவிக்கப்பட்டிருந்தார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டார். (2 தீமோத்தேயு 3:15, NW) இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க சொல் ஒரு சிறு குழந்தையை அல்லது பிறவாத ஒரு பிள்ளையையும்கூட குறிப்பிடலாம். (லூக்கா 1:41, 44; அப்போஸ்தலர் 7:18-20) எனவே, தீமோத்தேயு மிகச் சிறிய வயதிலிருந்தே பயிற்றுவிப்பை பெற்றுக்கொண்டார்—அது பொருத்தமானதாய் இருந்தது. ஒரு பிள்ளையைப் பயிற்றுவிக்க ஆரம்பிப்பதற்கு சிசுப்பருவமே மிகவும் ஏற்ற சமயமாயிருக்கிறது. ஒரு சிறு குழந்தைகூட அறிவைப் பெற்றுக்கொள்ள பேராவலோடு விருப்பம் காண்பிக்கிறது.
7. (அ) தந்தை, தாய் ஆகிய இருவருமே குழந்தையோடு மிக நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியமானது? (ஆ) ஆரம்ப முதற்கொண்டே யெகோவாவுக்கும் அவருடைய ஒரேபேறான குமாரனுக்கும் இடையே என்ன உறவு நிலவியது?
7 “நான் என் குழந்தையை முதலில் பார்த்தவுடனேயே அதை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்,” என்று ஒரு தாய் சொல்கிறாள். அப்படித்தான் பெரும்பாலான தாய்மார் உணருகின்றனர். குழந்தை பிறந்த சமயத்திலிருந்து தாயும் குழந்தையும் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவழிக்கையில் அவர்களுக்கு இடையே உள்ள அந்த இனிமையான பாசப் பிணைப்பு படிப்படியாக வளருகிறது. முலைப்பாலூட்டுவது அந்த நெருக்கத்தை இன்னும் கூடுதலாக அதிகரிக்கச் செய்கிறது. (1 தெசலோனிக்கேயர் 2:7-ஐ ஒப்பிடுக.) ஒரு தாய் தன் குழந்தையை செல்லமாகத் தடவிக்கொடுத்து சீராட்டுவதும், அதனுடன் பேசுவதும், குழந்தையின் உணர்ச்சி சம்பந்தமான தேவைகளை பூர்த்திசெய்வதற்கு மிகவும் முக்கியமானவையாய் இருக்கின்றன. (ஏசாயா 66:12-ஐ ஒப்பிடுக.) ஆனால் தந்தையைப் பற்றியென்ன? அவரும்கூட புதிதாகப் பிறந்திருக்கும் தன் குழந்தையோடு மிகவும் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். யெகோவா தேவன்தாமே இதற்கு உதாரணமாய் இருக்கிறார். யெகோவா தம்முடைய ஒரேபேறான குமாரனோடு கொண்டுள்ள உறவைப் பற்றி நாம் நீதிமொழிகள் புத்தகத்தில் படித்து தெரிந்துகொள்கிறோம், அதில் அவர் இவ்வாறு சொல்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது: “யெகோவா . . . பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். . . . அவருக்கு விசேஷமாய் பாசமாயிருக்கும் ஒருவராக நாளுக்கு நாள் ஆனேன்.” (நீதிமொழிகள் 8:22, 30, NW; யோவான் 1:14) அதைப் போன்றே, ஒரு நல்ல தந்தை தன் பிள்ளையின் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே அனலான, அன்புமிக்க உறவை அதோடு வளர்த்துக் கொள்கிறார். “பாசத்தை மிகுதியாகக் காட்டுங்கள்” என்று ஒரு தந்தை சொல்கிறார். “கட்டித்தழுவுதல்கள் முத்தங்கள் போன்றவற்றால் எந்தப் பிள்ளையும் எந்தச் சமயத்திலும் செத்துப் போனதில்லை.”
8. பெற்றோர் குழந்தைகளுக்கு முடிந்த அளவு சீக்கிரம் என்ன மனத்தூண்டுதலை கொடுக்க வேண்டும்?
8 ஆனால் குழந்தைகளுக்கு அதைக்காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. பிறந்த கணத்திலிருந்தே, குழந்தைகளுடைய மூளைகள் தகவலை ஏற்றுக்கொள்ளவும் அவற்றை சேகரித்து வைத்துக்கொள்ளவும் தயாராகின்றன, இந்தத் தகவலை முக்கியமாக அளிப்பவர்கள் பெற்றோரே. உதாரணமாக, மொழியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பிள்ளை எந்த அளவுக்கு நன்றாக பேசுவதற்கும் வாசிப்பதற்கும் கற்றுக்கொண்டிருக்கிறது என்பது, “பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே இருக்கும் ஆரம்ப செயல்தொடர்புகளின் இயல்போடு மிக நெருக்கமாய் சம்பந்தப்பட்டிருப்பதாக எண்ணப்படுகிறது,” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உங்கள் பிள்ளை குழந்தைப்பருவத்தில் இருக்கையிலேயே அதனிடம் பேசுங்கள், வாசித்துக் காட்டுங்கள். விரைவில் அவன் உங்களை பார்த்துப் பின்பற்ற விரும்புவான், இவ்வாறு சீக்கிரத்தில் வாசிப்பதற்கு நீங்கள் அவனுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். பெரும்பாலும் பள்ளிக்குச் செல்லுமுன்பே அவன் வாசிக்கக் கற்றுக்கொள்வான். ஆசிரியர்கள் குறைவாகவும் வகுப்பறைகள் நெரிசலாகவும் இருக்கும் ஒரு தேசத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருந்தால் இது விசேஷமாய் உதவியாயிருக்கும்.
9. பெற்றோர் ஞாபகத்தில் வைக்க வேண்டிய அதிமுக்கியமான இலக்கு என்ன?
9 எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவ பெற்றோரின் மிக முக்கியமான அக்கறை என்னவென்றால், தங்கள் பிள்ளையின் ஆவிக்குரியத் தேவைகளை பூர்த்தி செய்வதாகும். (காண்க: உபாகமம் 8:3.) என்ன இலக்கோடு? கிறிஸ்துவைப் போன்ற ஆளுமையை வளர்த்துக்கொள்ளும்படி, செயல்முறையில் “புதிய மனுஷனைத்” தரித்துக்கொள்ளும்படி பிள்ளைக்கு உதவுவதற்கே. (எபேசியர் 4:24) இதைச் செய்வதற்கு அவர்கள் சரியான கட்டட பொருட்களையும் சரியான கட்டட முறைகளையும் சிந்தித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.
உங்கள் பிள்ளையின் மனதில் சத்தியத்தை ஆழப் பதியவையுங்கள்
10. என்ன பண்புகளை பிள்ளைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்?
10 ஒரு கட்டடத்தின் தரம் அக்கட்டடத்தைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடைய தரத்தின் பேரில் பெருமளவு சார்ந்துள்ளது. “பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்கள்” போன்றவை கிறிஸ்தவ ஆளுமைகளுக்கு தேவையான மிகச் சிறந்த கட்டடப் பொருட்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 3:10-12) இவை விசுவாசம், ஞானம், பகுத்துணர்வு, உண்மைப்பற்றுறுதி, மரியாதை, யெகோவாவின் பேரிலும் அவருடைய சட்டங்களின் பேரிலும் அன்பான மதித்துணர்வு போன்ற பண்புகளை அடையாளப்படுத்திக் காண்பிக்கின்றன. (சங்கீதம் 19:7-11; நீதிமொழிகள் 2:1-6; 3:13, 14) இப்படிப்பட்ட பண்புகளை தங்கள் பிள்ளைகள் பிள்ளைப்பருவத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே வளர்த்துக்கொள்வதற்கு பெற்றோர் எவ்வாறு உதவிசெய்யலாம்? வெகு காலத்துக்கு முன்பு சுருக்கமாக கொடுக்கப்பட்ட ஒரு செயல்முறையை பின்பற்றுவதன் மூலமே.
11. தெய்வீக ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதற்கு இஸ்ரவேல பெற்றோர் எவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்தனர்?
11 இஸ்ரவேல் தேசத்தார் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கு சற்றுமுன்பு, யெகோவா இஸ்ரவேல பெற்றோருக்கு இவ்வாறு சொன்னார்: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளின் மனதில் ஆழப் பதியவைத்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ (உபாகமம் 6:6, 7, NW) ஆம், பெற்றோர் முன்மாதிரிகளாகவும், நண்பர்களாகவும், கருத்து பரிமாற்றம் செய்பவர்களாகவும், போதனையாளர்களாகவும் இருக்க வேண்டும்.
12. பெற்றோர் நல்ல முன்மாதிரிகளாய் இருப்பது ஏன் முக்கியமானது?
12 முன்மாதிரியாய் இருங்கள். முதலில் யெகோவா சொன்னார்: “இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.” பிறகு அவர் கூடுதலாக சொன்னார்: ‘நீ அவைகளை உன் பிள்ளைகளின் மனதில் ஆழப் பதியவைக்க வேண்டும்.’ ஆகையால் தெய்வீக பண்புகள் முதலாவது பெற்றோரின் இதயத்தில் இருக்க வேண்டும். பெற்றோர் சத்தியத்தை நேசித்து அதன்படி வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் பிள்ளையின் இதயத்தை எட்ட முடியும். (நீதிமொழிகள் 20:7) ஏன்? ஏனென்றால் பிள்ளைகள் தாங்கள் கேட்பதைவிட காண்பவற்றால் அதிகமாக போதனை பெறுகின்றனர்.—லூக்கா 6:40, NW; 1 கொரிந்தியர் 11:1.
13. தங்கள் பிள்ளைகளுக்கு கவனிப்பைக் கொடுக்கையில் கிறிஸ்தவ பெற்றோர் இயேசுவின் முன்மாதிரியை எவ்வாறு பின்பற்றலாம்?
13 நண்பராய் இருங்கள். யெகோவா இஸ்ரவேலில் இருந்த பெற்றோருக்கு கூறினார்: ‘நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ பெற்றோர் எவ்வளவு வேலையாயிருந்தாலும் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதை இது தேவைப்படுத்துகிறது. தம்மோடு நேரத்தை செலவழிப்பதற்கு பிள்ளைகள் தகுதியுள்ளவர்கள் என்பதை இயேசு தெளிவாக உணர்ந்தார். அவருடைய ஊழியத்தின் கடைசி நாட்களில், “சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.” இயேசுவின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? அவர் “அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.” (மாற்கு 10:13, 16) இயேசுவின் வாழ்க்கையின் கடைசி மணிநேரங்கள் வேகமாக முடிவடைந்து கொண்டிருந்த சமயத்தை சற்று கற்பனை செய்துபாருங்கள். அந்தச் சமயத்திலும் அவர் அந்தப் பிள்ளைகளுக்கு அவருடைய நேரத்தையும் கவனத்தையும் தந்தார். என்னே ஒரு சிறந்த பாடம்!
14. பெற்றோர் தங்கள் பிள்ளையோடு நேரத்தை செலவழிப்பது ஏன் பயனுள்ளது?
14 கருத்து பரிமாற்றம் செய்பவர்களாக இருங்கள். உங்கள் பிள்ளையோடு நேரத்தை செலவழிப்பது அவனோடு கருத்து பரிமாற்றம் செய்ய உங்களுக்கு உதவும். நீங்கள் எந்த அளவுக்கு அவனுடன் கருத்து பரிமாற்றம் செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவனுடைய ஆளுமை எவ்வாறு உருவாகிறது என்பதை நன்றாக கண்டுணர முடியும். கருத்து பரிமாற்றம் என்பது பேசுவதைக் காட்டிலும் அதிகத்தைக் குறிக்கிறது என்பதை மனதில் வையுங்கள். “செவிகொடுத்துக் கேட்கும் கலையை நான் வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது, மிகுந்த அக்கறையோடு கேட்க வேண்டியிருந்தது,” என்று பிரேஸிலில் வசிக்கும் ஒரு தாய் சொன்னாள். அவளுடைய மகன் தன் உணர்ச்சிகளை அவளோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தபோது அவளுடைய பொறுமைக்கு பலன் கிடைத்தது.
15. பொழுதுபோக்கு விஷயத்தில் எது மனதில் வைக்கப்பட வேண்டும்?
15 பிள்ளைகளுக்கு ‘நகைக்க ஒரு காலமும் . . . நடனம்பண்ண ஒரு காலமும்’ தேவை, அதாவது பொழுதுபோக்குக்காக ஒரு சமயம் தேவை. (பிரசங்கி 3: 1, 4; சகரியா 8:5) பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து பொழுதுபோக்கை அனுபவிக்கையில் அது அதிக பலன்தரத்தக்கதாய் இருக்கிறது. டிவி பார்ப்பதே பொழுதுபோக்கு என்ற நிலை அநேக வீடுகளில் இருப்பது விசனகரமான உண்மை. ஒருசில டிவி நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி அளிப்பவையாய் இருக்கக்கூடும், ஆனால் பெரும்பாலான நிகழ்ச்சிகள் உயர்வாக மதிப்பவற்றை அழித்துப்போடுகின்றன. மேலும், டிவி பார்ப்பது குடும்பத்தில் உள்ள கருத்து பரிமாற்றாத்தை நிறுத்திவிடுவதற்கு காரணமாய் இருக்கிறது. ஆகையால், உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து புதிதாக ஏதோவொன்றை ஏன் செய்யக்கூடாது? பாடுங்கள், விளையாடுங்கள், நண்பர்களோடு கூட்டுறவுகொள்ளுங்கள், மகிழ்ந்து அனுபவிக்கத்தக்க இடங்களை சென்று பாருங்கள். அப்படி ஒன்றாக சேர்ந்து அனுபவிக்கும் சமயங்கள் கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்.
16. யெகோவாவைப் பற்றி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எதைக் கற்பிக்க வேண்டும், அதை அவர்கள் எவ்வாறு செய்ய வேண்டும்?
16 போதனையாளராய் இருங்கள். ‘நீ அவைகளை [இந்த வார்த்தைகளை] உன் பிள்ளைகளின் மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்’ என்று யெகோவா சொன்னார். எதைக் கற்பிக்க வேண்டும், எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதை அவ்வசனத்தின் சூழமைவு உங்களுக்கு சொல்கிறது. முதலாவது, “நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் அன்புகூருவாயாக.” (உபாகமம் 6:5, NW) அதற்குப் பின்பு, ‘இந்த வார்த்தைகளை . . . உன் பிள்ளைகளின் மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்.’ யெகோவாவின் பேரிலும் அவருடைய சட்டங்களின் பேரிலும் முழு-ஆத்துமாவோடுகூடிய அன்பை வளர்க்கும் நோக்கத்தோடு போதனை அளியுங்கள். (எபிரெயர் 8:10-ஐ ஒப்பிடுக.) “மனதில் ஆழப் பதியவை” என்ற சொல்லுக்கு அர்த்தம், திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் கற்பியுங்கள் என்பதாகும். ஆகையால், உங்கள் பிள்ளைகள் தெய்வீக ஆளுமையை வளர்த்துக்கொள்ள உதவுவதற்கு ஒரு முக்கியமான வழி, தம்மைப் பற்றி ஒழுங்கான முறையில் பேசுவதே என்று யெகோவா உங்களுக்கு உண்மையில் சொல்கிறார். இது அவர்களோடு ஒரு ஒழுங்கான பைபிள் படிப்பு நடத்துவதை உட்படுத்துகிறது.
17. பெற்றோர் தங்கள் பிள்ளையில் எதை வளர்க்க வேண்டும், ஏன்?
17 ஒரு பிள்ளையின் இதயத்துக்குள் தகவலை செலுத்துவது சுலபமான காரியமல்ல என்பதை பெரும்பாலான பெற்றோர் அறிந்திருக்கின்றனர். அப்போஸ்தலனாகிய பேதுரு உடன் கிறிஸ்தவர்களை பின்வருமாறு ஊக்குவித்தார்: “புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” (1 பேதுரு 2:3) அநேகர் இயல்பாகவே ஆவிக்குரிய உணவை ஆவலோடு நாடுகிறதில்லை என்பதை “வாஞ்சையாயிருங்கள்” என்ற சொற்றொடர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளையில் அந்த வாஞ்சையை வளர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருக்கலாம்.
18. பெற்றோர் பார்த்து பின்பற்றும்படி உற்சாகப்படுத்தப்படும் இயேசுவின் சில போதனா முறைகள் யாவை?
18 உவமைகளை பயன்படுத்துவதன் மூலம் இயேசு இதயங்களை எட்டினார். (மாற்கு 13:34; லூக்கா 10:29-37) இந்தப் போதனா முறை விசேஷமாக பிள்ளைகளுக்கு போதிப்பதற்கு மிகச் சிறந்த முறையாக இருக்கிறது. பல வண்ணங்களுடைய, ஆர்வத்தைத் தூண்டும் கதைகளை உபயோகிப்பதன்மூலம் பைபிள் நியமங்களை கற்பியுங்கள், ஒருவேளை என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற பிரசுரத்தில் காணப்படும் கதைகளை உபயோகிக்கலாம்.a பிள்ளைகள் அதில் கலந்துகொள்ளும்படி செய்யுங்கள். அவர்கள் பைபிள் சம்பவங்களை வரைவதிலும் நடிப்பதிலும் தங்கள் படைப்பாற்றலை உபயோகிக்க அனுமதியுங்கள். இயேசு கேள்விகளையும்கூட பயன்படுத்தினார். (மத்தேயு 17:24-27) உங்கள் குடும்ப படிப்பின்போது இயேசுவின் முறையைப் பின்பற்றுங்கள். கடவுளுடைய சட்டம் ஒன்றை வெறுமனே சொல்வதற்குப் பதிலாக, இது போன்ற கேள்விகளை கேளுங்கள்: யெகோவா ஏன் நமக்கு இந்தச் சட்டத்தை கொடுத்தார்? நாம் அதைக் கடைப்பிடித்தால் என்ன நேரிடும்? நாம் அதைக் கடைப்பிடிக்காவிட்டால் என்ன நேரிடும்? அப்படிப்பட்ட கேள்விகள், சீர்தூக்கிப்பார்க்கவும் புரிந்துகொள்ளவும் கடவுளுடைய சட்டங்கள் நடைமுறையானவை, நல்லவை என்பதைக் காணவும் ஒரு பிள்ளைக்கு உதவிசெய்யும்.—உபாகமம் 10:13.
19. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கையாளுவதில் பைபிள் நியமங்களைப் பின்பற்றினால், பிள்ளைகள் என்ன பெரிய அனுகூலங்களை அனுபவிப்பர்?
19 நீங்கள் முன்மாதிரியாகவும், நண்பராகவும், கருத்து பரிமாற்றம் செய்பவராகவும், போதனையாளராகவும் இருப்பதன் மூலம், உங்கள் பிள்ளை அதன் ஆரம்ப வருடங்களிலிருந்து யெகோவா தேவனோடு மிக நெருங்கிய தனிப்பட்ட உறவை உருவாக்கிக்கொள்வதற்கு உதவிசெய்யலாம். இந்த உறவு ஒரு கிறிஸ்தவனாக மகிழ்ச்சிகாண உங்கள் பிள்ளைக்கு உற்சாகத்தை அளிக்கும். அவன் சகாக்களிடமிருந்து அழுத்தங்களையும் சோதனைகளையும் எதிர்ப்பட்டாலும்கூட, அன்றாட வாழ்க்கையில் தன் விசுவாசத்துக்கு ஏற்றபடி வாழ முயற்சி செய்வான். இந்த அருமையான உறவின் பேரில் மதித்துணர்வை காண்பிக்கும்படி எப்போதும் அவனுக்கு உதவி செய்யுங்கள்.—நீதிமொழிகள் 27:11.
சிட்சைக்கு அத்தியாவசிய தேவை
20. சிட்சை என்றால் என்ன, அதை எவ்வாறு கொடுக்க வேண்டும்?
20 மனதையும் இதயத்தையும் திருத்தும் பயிற்சியே சிட்சை. பிள்ளைகளுக்கு அது எப்போதும் தேவை. “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் [தங்கள் பிள்ளைகளை] தொடர்ந்து வளர்”க்கும்படி பவுல் தகப்பன்மாருக்கு புத்திமதி அளிக்கிறார். (எபேசியர் 6:4, NW) யெகோவா சிட்சிப்பது போல் பெற்றோர் அன்பான முறையில் சிட்சிக்க வேண்டும். (எபிரெயர் 12:4-11) அன்பின் அடிப்படையில் கொடுக்கப்படும் சிட்சை, நியாயமான முறையில் காரணம் காட்டுவதன் மூலம் அளிக்கப்படலாம். எனவே, “சிட்சைக்குச் செவிகொடுங்கள்” என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. (நீதிமொழிகள் 8:33, NW) சிட்சை எவ்வாறு கொடுக்கப்பட வேண்டும்?
21. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிட்சிக்கையில் என்ன நியமங்களை மனதில் வைக்க வேண்டும்?
21 பிள்ளைகளிடம் வெறுமனே மிரட்டும் குரல்களில் பேசுவது, திட்டுவது, அல்லது அவர்களை அவமதிப்பது போன்றவை மட்டுமே சிட்சிப்பதில் உள்ளடங்கியிருப்பதாக சில பெற்றோர் நினைக்கின்றனர். எனினும், அதே பொருளின் பேரில் பவுல் எச்சரிக்கிறார்: ‘பிதாக்களே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாதிருங்கள்.’ (எபேசியர் 6:4) “எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும் . . . எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி . . . சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்” என்று எல்லா கிறிஸ்தவர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர். (2 தீமோத்தேயு 2:24, 25, 26) கிறிஸ்தவ பெற்றோர் கண்டிப்புடன் இருக்கவேண்டிய தேவையை கண்டுணருகிறபோதிலும், தங்கள் பிள்ளைகளை சிட்சிக்கையில் இந்த வார்த்தைகளை மனதில் வைப்பதற்கு முயற்சிசெய்ய வேண்டும். ஆனால், சில சமயங்களில், காரணம் காண்பிப்பது போதுமானதாக இல்லாமல் இருக்கலாம், ஏதாவது ஒருவகையான தண்டனை தேவைப்படலாம்.—நீதிமொழிகள் 22:15.
22. ஒரு பிள்ளை தண்டிக்கப்பட வேண்டுமென்றால், அவன் எதைப் புரிந்துகொள்ள உதவப்பட வேண்டும்?
22 வித்தியாசமான பிள்ளைகளுக்கு வித்தியாசமான சிட்சை தேவைப்படும். சிலர் ‘வார்த்தைகளினால் அடங்கமாட்டார்கள்.’ அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு, கீழ்ப்படியாமல் இருப்பதற்காக அவ்வப்போது தண்டனை கொடுப்பது ஜீவனைப் பாதுகாப்பதாய் இருக்கலாம். (நீதிமொழிகள் 17:10; 23:13, 14; 29:19) ஆனால் ஒரு பிள்ளை தான் ஏன் தண்டிக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். “பிரம்பு மற்றும் கடிந்துகொள்ளுதல் ஞானத்தைக் கொடுக்கும்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) (நீதிமொழிகள் 29:15; யோபு 6:24) மேலும், தண்டனைக்கு வரம்புகள் உள்ளன. “உன்னை மட்டாய்த் தண்டிப்பேன்,” என்று யெகோவா தம் ஜனங்களிடம் சொன்னார். (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) (எரேமியா 46:28ஆ) கோபமாய் சவுக்கால் அடிப்பது அல்லது பிள்ளைக்கு காயம் ஏற்படும் அளவுக்கு கடுமையாய் அடிப்பது போன்றவற்றை பைபிள் நிச்சயமாய் எந்த விதத்திலும் ஆதரிப்பதில்லை.—நீதிமொழிகள் 16:32.
23. பெற்றோரால் சிட்சிக்கப்படுகையில் ஒரு பிள்ளை எதைக் கண்டுணர முயலவேண்டும்?
23 யெகோவா தம் ஜனங்களை சிட்சிக்கப்போவதாக எச்சரித்தபோது, அவர் முதலில் சொன்னார்: “நீ பயப்படாதே . . . நான் உன்னுடனே இருக்கிறேன்.” (எரேமியா 46:28அ) அதேபோல், பெற்றோர் கொடுக்கும் சிட்சை, அது என்ன பொருத்தமான வடிவில் இருந்தாலும், ஒரு பிள்ளையை தகுதியற்றதாக ஒதுக்கப்பட்டதைப் போல் உணரும்படி செய்யக்கூடாது. (கொலோசெயர் 3:21) மாறாக, பெற்றோர் ‘தன்னோடு’ தன் சார்பாக இருப்பதால் சிட்சை கொடுக்கப்படுகிறது என்பதை பிள்ளை உணர வேண்டும்.
உங்கள் பிள்ளைக்கு தீங்கிலிருந்து பாதுகாப்பு அளியுங்கள்
24, 25. இந்த நாட்களில் பிள்ளைகள் எந்த ஒரு அருவருக்கத்தக்க அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்?
24 பழைய நினைவுகளை திரும்பவும் மனதுக்குக் கொண்டுவருகையில், தங்கள் பிள்ளைப்பருவத்தை ஒரு மகிழ்ச்சியான சமயமாக வயதுவந்தவர்கள் அநேகர் உணருகின்றனர். என்ன நடந்தாலும் பெற்றோர் தங்களை கவனித்துக்கொள்வர் என்ற நிச்சயத்தை, பாதுகாப்பான உணர்வை நினைவுபடுத்திக் கொள்கின்றனர். தங்கள் பிள்ளைகள் அவ்விதமாய் உணர வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர், ஆனால் இன்றைய சீர்கெட்ட உலகில் பிள்ளைகளை பாதுகாப்பாக வைப்பது முன்பு இருந்ததைவிட கடினமாய் இருக்கிறது.
25 சமீப ஆண்டுகளில் அதிகரித்து வந்திருக்கும் ஒரு அருவருக்கத்தக்க அச்சுறுத்தல், பிள்ளைகளை பாலின துர்ப்பிரயோகம் செய்வதாகும். மலேசியாவில் பிள்ளைகள் பாலின துர்ப்பிரயோகம் செய்யப்படுவதைப் பற்றிய அறிக்கைகள் பத்து வருட காலப்பகுதிக்குள் நான்குமடங்காக அதிகரித்தன. ஜெர்மனியில் சுமார் 3,00,000 பிள்ளைகள் ஒவ்வொரு ஆண்டும் பாலின துர்ப்பிரயோகம் செய்யப்படுகின்றனர், ஒரு தென் அமெரிக்க நாட்டில், ஒரு ஆராய்ச்சியின்படி, அந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 90,00,000 என்று மதிப்பிடப்பட்டிருப்பது திகைப்பூட்டுகிறது! வருந்தத்தக்கவிதத்தில், இப்படிப்பட்ட பிள்ளைகளில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த வீட்டிலேயே தாங்கள் அறிந்திருக்கும் மற்றும் நம்பிக்கை வைத்திருக்கும் ஆட்களாலேயே துர்ப்பிரயோகம் செய்யப்படுகின்றனர். ஆனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பலமான பாதுகாப்பாய் இருக்க வேண்டும். பெற்றோர் எப்படி பாதுகாப்பவர்களாக இருக்கலாம்?
26. பிள்ளைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு சில வழிகள் யாவை, அறிவு எவ்வாறு ஒரு பிள்ளையை பாதுகாக்கக்கூடும்?
26 பாலினத்தைக் குறித்து வெகு குறைவாகவே அறிந்திருக்கும் பிள்ளைகள் விசேஷமாக அப்படி துர்ப்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்று அனுபவம் காண்பிப்பதால், பிள்ளை இளவயதாய் இருக்கையிலேயே அதற்கு அறிவுபுகட்டுவது ஒரு பெரும் தடுப்புச்செயலாய் இருக்கிறது. அறிவு, ‘துன்மார்க்கனுடைய வழியிலிருந்தும், மாறுபாடு பேசுகிற மனுஷனிடமிருந்தும்’ பாதுகாப்பை அளிக்கக்கூடும். (நீதிமொழிகள் 2:10-12) எதைப் பற்றிய அறிவு? பைபிள் நியமங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கப்பிரகாரமாக எது சரி, எது தவறு என்பதைப் பற்றிய அறிவு. வயதுவந்தவர்களில் சிலர் கெட்ட காரியங்களைச் செய்வர், ஆகையால் செய்யத்தகாத செயல்களை ஆட்கள் எடுத்துக்கூறும்போது இளம் நபர் அதற்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை என்பதைப்பற்றிய அறிவும்கூட வேண்டும். (ஒப்பிடுக: தானியேல் 1:3, 4, 8; 3:16-18.) அப்படிப்பட்ட போதனையை எப்போதாவது ஒரு சமயம் மட்டும் கொடுக்காதீர்கள். இளம் பிள்ளைகள் ஒரு பாடத்தை நன்றாக நினைவில் வைத்துக்கொள்வதற்கு, அதைத் திரும்பத் திரும்ப அவர்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. பிள்ளைகள் கொஞ்சம் பெரியவர்களாக வளர்ந்தபிறகு, ஒரு தகப்பன், தனிமையை அனுபவிப்பதற்கு தன் மகளுக்கு இருக்கும் உரிமையை அன்போடு மதிப்பார், அதேபோல் ஒரு தாய் தன் மகனின் உரிமையை மதிப்பார், இவ்வாறு எது தகுதியானது என்பதன் பேரில் பிள்ளையின் உணர்வை உறுதிப்படுத்துகின்றனர். பெற்றோராக நீங்கள் மிகவும் நெருக்கமாக மேற்பார்வையிடுவதே துர்ப்பிரயோகத்திற்கு எதிரான மிகச் சிறந்த தற்காப்புகளில் ஒன்று.
தெய்வீக வழிநடத்துதலை நாடுங்கள்
27, 28. ஒரு பிள்ளையை வளர்க்கும் சவாலை எதிர்ப்படுகையில் யார் பெற்றோரின் மிகப் பெரிய உதவியாளராய் இருக்கிறார்?
27 ஒரு பிள்ளையை சிசுப்பருவத்திலிருந்தே பயிற்றுவிப்பது உண்மையில் ஒரு சவாலாக இருக்கிறது, ஆனால் விசுவாசத்தில் இருக்கும் பெற்றோர் இந்தச் சவாலை தனிமையாக எதிர்ப்பட வேண்டிய அவசியமில்லை. நியாயாதிபதிகளின் காலத்தில் மனோவா என்ற பெயருடைய மனிதர் தான் தந்தையாக ஆகப்போகிறார் என்பதை அறிந்தபோது, தன் பிள்ளையை வளர்ப்பதன் பேரில் வழிநடத்துதலுக்காக யெகோவாவை நோக்கி கேட்டார். யெகோவா அவருடைய ஜெபங்களுக்குப் பதிலளித்தார்.—நியாயாதிபதிகள் 13:8, 12, 24.
28 அதேபோல் இன்று, விசுவாசத்தில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்க்கையில், அவர்களும்கூட ஜெபத்தில் யெகோவாவிடம் பேசலாம். பெற்றோராயிருப்பது கடினமான வேலை, ஆனால் மிகுதியான பலன்கள் இருக்கின்றன. ஹவாயில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ தம்பதியினர் இவ்வாறு சொல்கின்றனர்: “அந்த இக்கட்டான பருவவயதுக்கு முன் உங்கள் பிள்ளையை பயிற்றுவித்து முடிப்பதற்கு உங்களுக்கு 12 வருடங்கள் இருக்கின்றன. ஆனால் பைபிள் நியமங்களைப் பொருத்துவதற்கு நீங்கள் கடினமாக உழைத்திருந்தீர்களென்றால், யெகோவாவை இதயப்பூர்வமாக சேவிக்க விரும்புவதாக உங்கள் பிள்ளைகள் தீர்மானம் செய்யும்போது, நீங்கள் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளும் சமயமாக அது இருக்கும்.” (நீதிமொழிகள் 23:15, 16) உங்கள் பிள்ளை அந்தத் தீர்மானத்தைச் செய்கையில், நீங்களும்கூட இவ்வாறு சொல்வதற்கு தூண்டப்படுவீர்கள்: ‘இதோ, மகன்கள் [மற்றும் மகள்கள்] கர்த்தரால் வரும் சுதந்தரம்.’
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.