உத்தரிக்கும் ஸ்தலம்
சொற்பொருள் விளக்கம்: “[ரோமன் கத்தோலிக்க] சர்ச்சின் போதகத்தின்படி, அடுத்த உலகத்திலுள்ள நிலை, இடம், அல்லது நிலைமை . . . அங்கே, கிருபைக்குரிய நிலையிலுள்ள, ஆனால் எல்லா அபூரணங்களிலுமிருந்து இன்னும் விடுதலையாயிராத, மரித்தவர்களின் ஆத்துமாக்கள், மன்னிக்கப்படாதிருக்கும் மன்னிக்கத்தக்கப் பாவங்களுக்காக விளக்க-அறிக்கை செய்கின்றன அல்லது ஏற்கெனவே மன்னிக்கப்பட்டுள்ள, மன்னிக்கத்தக்க மற்றும் அழிக்கத்தக்கப் பாவங்களின் காரணமாகத் தற்காலிக தண்டனைக்காக இருக்கின்றன, இவ்வாறு செய்வதன்மூலம் அவை பரலோகத்துக்குள் பிரவேசிக்குமுன் சுத்திகரிக்கப்படுகின்றன.” (நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா, 1967, புத். XI, பக். 1034) இது பைபிள் போதகமல்ல.
உத்தரிக்கும் ஸ்தலத்தைப்பற்றிய இந்தப் போதகம் எதில் ஆதாரங்கொண்டுள்ளது?
2 மக்கபியர் 12:39-45, மத்தேயு 12:32, மற்றும் 1 கொரிந்தியர் 3:10-15 போன்ற வசனங்களைக் குறித்து கத்தோலிக்க எழுத்தாளர்கள் சொல்லியிருந்தவற்றைத் திரும்ப ஆராய்ந்தபின், நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1967, புத். XI, பக். 1034) பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “கடைசி பகுத்தாராய்ச்சியில், இந்தக் கத்தோலிக்க உத்தரிக்கும் ஸ்தலக் கோட்பாடு, பரிசுத்த வேதத்தில் அல்ல, பாரம்பரியத்தின்மீதே ஆதாரங்கொண்டுள்ளது.”
“பரலோகத்துக்கும் நரகத்துக்கும் இடையே ஒரு நடுநிலை ஸ்தலத்தை ஆதரிக்க பாரம்பரியத்தின்மீதே சர்ச் சார்ந்துள்ளது.”—U.S. கத்தோலிக், மார்ச் 1981, பக். 7.
உத்தரிக்கும் ஸ்தலத்தின் இயல்பைக் குறித்து, கத்தோலிக்கப் பேச்சாளர் என்ன சொல்கின்றனர்?
“உத்தரிக்கும் ஸ்தலத்தின் மொத்தத் துன்பமனுபவிப்பு பேரின்பம் தரும் காட்சியிலிருந்து தற்காலிகமாய்த் தள்ளிவைத்திருப்பதன் உணர்வேயென பலர் எண்ணுகின்றனர், எனினும், இதோடுகூட ஆக்கமுறையான ஏதோ சிறிது தண்டனையும் இருக்கிறதென்பது பெரும்பாலும் கொண்டுள்ள பொதுக்கருத்து. . . . இந்த வேதனை மெய்யான நெருப்பைக்கொண்டு கொடுக்கப்படுகிறதென லத்தீன் சர்ச்சில் பொதுவாய் வலியுறுத்தப்பட்டுவருகிறது. எனினும், உத்தரிக்கும் ஸ்தலத்தில் நம்பிக்கை வைப்பதற்கு இது இன்றியமையாததல்ல. இது நிச்சயமென்பதாயும் இல்லை. . . . நெருப்பைக் கொண்டு துன்புறுத்தப்படும் இந்த எண்ணத்தை ஒருவன், கிழக்கத்திய இறைமையியல் வல்லுநருடன் சேர்ந்து, தள்ளிவிட தெரிந்துகொண்டாலும், உத்தரிக்கும் ஸ்தலத்திலிருந்து ஆக்கமுறையான எல்லாத் துன்பத்தையும் விலக்கிவிடாதபடி அவன் கவனமாயிருக்கவேண்டும். அங்கே இன்னும் மெய்யான வேதனை, துயரம், மன எரிச்சல், வெட்கத்தால் மனச்சாட்சி புண்பட்டிருத்தல், மற்றும் அந்த ஆத்துமாவுக்கு உண்மையான வேதனையைத் தரக்கூடிய ஆவிக்குரிய வேறு துயரங்களும் இருக்கின்றன. . . . எவ்வாறாயினும், தங்கள் துன்பங்களுக்கு மத்தியிலும் இந்த ஆத்துமாக்கள் இரட்சிப்பின் நிச்சயத்தின்பேரில் மிகுந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்கின்றனவென்பதை ஒருவன் நினைவில் வைக்கவேண்டும்.”—நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1967), புத். XI, பக். 1036, 1037.
“உத்தரிக்கும் ஸ்தலத்தில் நடந்துகொண்டிருப்பது எவராயினும் ஊகித்துக்கொள்வதேயாகும்.”—U.S. கத்தோலிக், மார்ச் 1981, பக். 9.
ஆத்துமா உடலின் மரணத்தைத் தப்பிப்பிழைக்கிறதா?
எசே. 18:4: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே [எபிரெயுவில், நெபெஷ்; “மனிதன்,” JB; “ஒருவன்,” NAB; “ஆத்துமா,” Kx] சாகும்.”
இயாகப்பர் (யாக்.) 5:20, கத்.பை.: “தவறின வழியினின்று பாவியை மனந்திரும்பச் செய்தவன் அவனுடைய ஆத்துமத்தை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவான்.” (தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.) (இது ஆத்துமாவின் மரணத்தைப்பற்றிப் பேசுவதைக் கவனியுங்கள்.)
மேலுமான விவரங்களுக்கு, “மரணம்” மற்றும் “ஆத்துமா” என்ற தலைப்புகளின்கீழ்ப் பாருங்கள்.
பாவத்துக்குத் தண்டனை ஒருவரின் மரணத்துக்குப் பின்னும் கூடுதலாகக் கொடுக்கப்படுகிறதா?
ரோமர் 6:7: “மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.” (Kx: “குற்றப்பழி மரித்த மனிதன்பேரில் இனிமேலும் உரிமைக்கோரிக்கைச் செய்வதில்லை.”)
மரித்தோர் இரட்சிப்பின் எதிர்பார்ப்பிலுள்ள நம்பிக்கையால் மகிழ்ச்சி அனுபவிக்க இயலுமா?
பிர. 9:5: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.”
ஏசா. 38:18, தி.மொ.: “பாதாளம் உமக்கு நன்றிசெலுத்தாது, மரணம் உம்மைத் துதிக்கவுமாட்டாதே; குழியிலிறங்கினோர் உமது உண்மையில் நம்பிக்கையாயிருத்தற்கு இடமிருக்குமோ?” (ஆகவே அவர்களில் எவராவது எவ்வாறு “இரட்சிப்பின் நிச்சயத்தின்பேரில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்க” முடியும்?)
பைபிளில் சொல்லியிருக்கிறபடி, எந்த வழிவகையின் மூலமே பாவங்களிலிருந்து சுத்திகரிப்பு நிறைவேற்றப்படுகிறது?
1 அருளப்பர் (யோவான்) 1:7, 9, கத்.பை.: “அவர் பிரகாசத்தில் இருப்பதுபோல், நாமும் பிரகாசத்தில் நடப்போமானால், நாம் அன்னியோன்னிய ஐக்கியமுள்ளவர்களாயிருப்பதுமன்றி, அவருடைய குமாரனாகிய யேசுக் கிறீஸ்துவின் இரத்தம் நம்மைச் சகல பாவத்திலும் நின்று சுத்திகரிக்கும். . . . நம்முடைய பாவங்களை நாம் சங்கீர்த்தனம் பண்ணினால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்துச் சகல அக்கிரமத்திலும் நின்று நம்மைப் பரிசுத்தமாக்குவதற்கு அவர் பிரமாணிக்கமும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் [“நம்முடைய எல்லாத் தவறும் நீக்கிப்போடப்படுகிறது,” Kx].”
காட்சியாகமம் (வெளி.) 1:5, கத்.பை.: “இவர் [இயேசு கிறிஸ்து] நம்மைச் சிநேகித்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களினின்று நம்மைக் கழுவி . . . னார்.”