சகோதரர்களே, கடவுளுடைய சக்திக்கென்று விதையுங்கள், தகுதி பெறுங்கள்!
“கடவுளுடைய சக்திக்கென்று விதைக்கிறவன் கடவுளுடைய சக்தியினால் முடிவில்லா வாழ்வை அறுவடை செய்வான்.”—கலா. 6:8.
1, 2. மத்தேயு 9:37, 38 எவ்வாறு நிறைவேறி வருகிறது, இதனால் சபைகளில் என்ன தேவை ஏற்பட்டுள்ளது?
மனித சரித்திரத்திலேயே முக்கியமான சம்பவங்கள் நிகழ்வதை நீங்கள் கண்ணாரக் கண்டு வருகிறீர்கள்! இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு வேலை இப்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. “அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்களோ குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானரிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று அவர் தமது சீடர்களிடம் சொன்னார். (மத். 9:37, 38) இயேசு சொன்னபடியே பலர் ஜெபம் செய்துவருகிறார்கள்; அப்படிப்பட்ட ஜெபங்களுக்கு முன்னொருபோதும் இல்லாத அளவில் யெகோவா பதிலளித்து வருகிறார். உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் கடந்த ஊழிய ஆண்டின்போது 2,031 சபைகள் புதிதாக உருவாக்கப்பட்டதால் தற்போது மொத்தம் 1,05,298 சபைகள் உள்ளன. அப்படியானால், நாளொன்றுக்குச் சராசரியாக 757 பேர் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள்!
2 சபைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கற்பிக்கவும் மேய்ப்பு வேலை செய்யவும் தகுதியுள்ள சகோதரர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. (எபே. 4:11) தம்முடைய ஆடுகளைக் கவனிப்பதற்காக, கடந்த பல ஆண்டுகளில் தகுதிவாய்ந்த பல ஆண்களை யெகோவா நியமித்திருக்கிறார்; தொடர்ந்து இன்னும் பலரை அவர் நியமிப்பார் என நாம் நம்பிக்கையோடு இருக்கிறோம். கடைசி நாட்களில் யெகோவாவின் மக்களுக்கு ‘ஏழு மேய்ப்பரும் எட்டு அதிபதிகளும்’ இருப்பார்களென மீகா 5:5-ல் உள்ள தீர்க்கதரிசனம் உறுதியளிக்கிறது. இது எதைச் சுட்டிக்காட்டுகிறது? யெகோவாவின் மக்களை வழிநடத்த தகுதிவாய்ந்த ஆண்கள் ஏராளமானோர் இருப்பார்கள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
3. ‘கடவுளுடைய சக்திக்கென்று விதைப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது? விளக்குங்கள்.
3 நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற ஒரு சகோதரர் என்றால், சபைப் பொறுப்புகளுக்குத் தகுதிபெற என்ன செய்யலாம்? அதற்கான ஒரு முக்கிய வழி, ‘கடவுளுடைய சக்திக்கென்று விதைப்பதாகும்.’ (கலா. 6:8) இது எதை அர்த்தப்படுத்துகிறது? கடவுளுடைய சக்தி உங்கள் வாழ்க்கையில் தங்குதடையின்றி செயல்படும் விதத்தில் நீங்கள் வாழ வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. ‘பாவத்திற்கென்று விதைக்காதபடி’ தீர்மானமாய் இருங்கள். சொந்த சௌகரியங்கள், ஓய்வு நேரங்கள், பொழுதுபோக்குச் சமயங்கள் போன்றவை கடவுளுடைய சேவையில் உங்கள் ஆர்வத்தைத் தணித்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவர்கள் அனைவருமே ‘கடவுளுடைய சக்திக்கென்று விதைக்க’ வேண்டும்; அப்படிச் செய்துவருகிற ஆண்கள் காலப்போக்கில் சபைப் பொறுப்புகளுக்குத் தகுதி பெறுவார்கள். இன்று மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்வதற்கு அநேக சகோதரர்கள் தேவைப்படுகிறார்கள்; எனவே, இந்தக் கட்டுரை கிறிஸ்தவ ஆண்களுக்கென்று விசேஷமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சகோதரர்களே, இந்தக் கட்டுரையை ஜெபத்தோடு சிந்தித்துப் பார்க்கும்படி உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.
சிறந்த வேலைக்குத் தகுதி பெறுங்கள்
4, 5. (அ) ஞானஸ்நானம் பெற்ற சகோதரர்கள், சபையில் எந்தப் பொறுப்புகளுக்குத் தகுதி பெறும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்? (ஆ) அந்தப் பொறுப்புகளுக்குத் தகுதிபெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
4 கண்காணி என்ற பொறுப்பு ஒரு சகோதரருக்குத் தானாகவே கிடைத்து விடாது. இந்த ‘சிறந்த வேலைக்கு’ தகுதிபெற அவருடைய பங்கில் முயற்சி தேவை. (1 தீ. 3:1) அப்படித் தகுதி பெறுவதற்கு, சக வணக்கத்தார்மீது உண்மையான அக்கறை காட்டி, அவர்களுக்கு உதவி செய்வது அவசியம். (ஏசாயா 32:1, 2-ஐ வாசியுங்கள்.) சரியான உள்ளெண்ணத்தோடு தகுதிபெற நினைக்கிற ஒருவர் பதவி ஆசை பிடித்தவர் அல்ல; மற்றவர்களின் நன்மைக்காக, சுயநலமில்லாமல் சேவை செய்யவே அவர் ஆசைப்படுகிறார்.
5 உதவி ஊழியராகவும், பிற்பாடு கண்காணியாகவும் தகுதிபெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்? பைபிள் குறிப்பிடுகிற தகுதிகளை எட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். (1 தீ. 3:1-10, 12, 13; தீத். 1:5-9) நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற ஒரு சகோதரர் என்றால், பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பிரசங்க வேலையில் நான் முழுமையாக ஈடுபடுகிறேனா, அப்படி ஈடுபட மற்றவர்களுக்கு உதவுகிறேனா? சக வணக்கத்தார்மீது உள்ளார்ந்த அக்கறை காட்டி, அவர்களைப் பலப்படுத்துகிறேனா? கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படிப்பவன் என்று நற்பெயர் எடுத்திருக்கிறேனா? கூட்டங்களின்போது பதில் சொல்வதில் முன்னேற்றம் செய்துவருகிறேனா? மூப்பர்கள் என்னிடம் ஒப்படைக்கிற வேலைகளைச் சிரத்தையோடு செய்துவருகிறேனா?’ (2 தீ. 4:5) இந்தக் கேள்விகளை நீங்கள் கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
6. சபைப் பொறுப்புகளுக்குத் தகுதி பெறுவதற்கான இன்னொரு வழி என்ன?
6 சபைப் பொறுப்புகளுக்குத் தகுதி பெறுவதற்கான இன்னொரு வழி, ‘கடவுளுடைய சக்தியின் பலத்தினால் மனவலிமை பெறுவதாகும்.’ (எபே. 3:16) உதவி ஊழியர் என்றோ மூப்பர் என்றோ ஒருவருக்கு அளிக்கப்படுகிற பொறுப்பு, சபையாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்படுகிற ஒரு பதவி அல்ல, அது ஒரு பாக்கியம்; அதை ஆன்மீக முதிர்ச்சியினால் மட்டுமே பெற முடியும். ஒருவர் எப்படி ஆன்மீக முதிர்ச்சியுள்ளவராய் ஆகலாம்? அதற்கு ஒரு வழி, ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்து,’ அது பிறப்பிக்கிற குணங்களை வளர்த்துக்கொள்வதாகும். (கலா. 5:16, 22, 23) கூடுதலான பொறுப்புகளைக் கையாளுவதற்குத் தேவைப்படுகிற அந்தக் குணங்களை வெளிக்காட்டுகிறீர்கள் என்றால், கொடுக்கப்பட்ட ஆலோசனைகளின்படி உழைக்கிறீர்கள் என்றால், ‘உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்’—1 தீ. 4:15.
சுய தியாக மனப்பான்மை தேவை
7. மற்றவர்களுக்குச் சேவை செய்ய என்ன தேவை?
7 மற்றவர்களுக்குச் சேவை செய்ய கடின உழைப்பும் சுய தியாக மனப்பான்மையும் தேவை. கிறிஸ்தவக் கண்காணிகள் ஆன்மீக மேய்ப்பர்களாக இருப்பதால், மந்தையில் உள்ளவர்களின் பிரச்சினைகளைக் குறித்து அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அப்போஸ்தலன் பவுலை எடுத்துக்கொள்ளுங்கள்; மேய்ப்பு வேலையில் உட்பட்டிருந்த பொறுப்புகள் அவரை எப்படிப் பாதித்தன? கொரிந்துவிலிருந்த சக விசுவாசிகளிடம், “உங்களுக்கு வருத்தம் உண்டாக்குவதற்காக நான் . . . எழுதவில்லை; உங்கள்மீது நான் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே மிகுந்த துயரத்தோடும் மனவேதனையோடும் கண்ணீரோடும் எழுதினேன்” என்று அவர் குறிப்பிட்டார். (2 கொ. 2:4) தனது மேய்ப்பு வேலையில் பவுல் ஒன்றிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது.
8, 9. மற்றவர்கள்மீது அக்கறை காட்டிய ஆண்களைப் பற்றிய உதாரணங்களை பைபிளிலிருந்து குறிப்பிடுங்கள்.
8 யெகோவாவின் மக்களுக்காக அயராது உழைத்த ஆண்களிடம் சுய தியாக மனப்பான்மை பளிச்சென்று தெரிந்தது. உதாரணமாக, நோவாவை எடுத்துக்கொள்வோம். ‘பேழை கட்டுகிற வேலை முடிந்ததும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அப்போது வருகிறேன்’ என்று நிச்சயம் தன் குடும்பத்தாரிடம் சொல்லியிருக்க மாட்டார்! அவ்வாறே மோசேயும், ‘செங்கடல் அருகே எப்படியோ வந்து சேர்ந்துவிடுங்கள்; நான் அங்கே வந்து உங்களைச் சந்திக்கிறேன்’ என்று இஸ்ரவேலரிடம் சொல்லவில்லை. அதைப் போலவே யோசுவா, ‘எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்ததும் எனக்குச் செய்தி அனுப்புங்கள்’ என்று சொல்லவில்லை. ஏசாயாவும்கூட வேறு யாரையோ சுட்டிக்காட்டி, ‘இதோ, அவன் இருக்கிறான்; அவனை அனுப்புங்கள்’ என்று சொல்லவில்லை.—ஏசா. 6:8.
9 கடவுளுடைய சக்தியால் செல்வாக்கு செலுத்தப்பட்ட ஆண்களில் தலைசிறந்த உதாரணமாய்த் திகழ்ந்தவர் இயேசு கிறிஸ்து. மனிதகுலத்தை மீட்கும் மிகப் பெரிய பொறுப்பை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். (யோவா. 3:16) அவர் காட்டிய சுயநலமற்ற அன்பைப் பற்றி வாசிக்கும்போது நாமும் அதே மனப்பான்மையைக் காட்டத் தூண்டப்படுகிறோம், அல்லவா? நீண்ட கால மூப்பர் ஒருவர், கடவுளுடைய மந்தையில் உள்ளவர்களைக் குறித்துத் தன் உணர்வுகளைத் தெரிவிக்கும்போது, “‘என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக’ என பேதுருவிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் என் மனதைத் தொட்டன. ஆறுதலான வார்த்தைகளும், அன்பான செயல்களும், மற்றவர்களுக்கு எந்தளவு தெம்பூட்டும் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். மேய்ப்பு வேலை எனக்கு ரொம்பவும் பிடித்த வேலை” என்று கூறினார்.—யோவா. 21:16.
10. மற்றவர்களுக்குச் சேவை செய்கிற விஷயத்தில் எவை இயேசுவின் மனப்பான்மையைக் காட்டும்படி சகோதரர்களைத் தூண்ட வேண்டும்?
10 “நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன்” என்று இயேசு மக்களிடம் உறுதி அளித்தார்; இதே மனப்பான்மையைச் சகோதரர்கள் கடவுளுடைய மந்தையிடம் காட்ட வேண்டும். (மத். 11:28) கடவுள் மீதுள்ள விசுவாசமும், சபையார் மீதுள்ள அன்புமே இந்தச் சிறந்த வேலைக்குத் தகுதிபெற அவர்களைத் தூண்ட வேண்டும்; ‘இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் ரொம்பச் சிரமப்பட வேண்டியிருக்கும், அதிக தியாகம் செய்ய வேண்டியிருக்கும்’ என்றெல்லாம் அவர்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அப்படித் தகுதிபெற ஒருவருக்கு ஆசை இல்லையென்றால் அவர் அதை வளர்த்துக்கொள்ள முடியுமா?
சேவை செய்வதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ளுங்கள்
11. மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கான ஆசையை ஒருவர் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
11 ‘எனக்கெல்லாம் திறமையில்லை’ என்று நினைத்துக்கொண்டு சபைப் பொறுப்புகளுக்குத் தகுதிபெற முயற்சி செய்யாமல் இருக்கிறீர்களா? அப்படியென்றால், கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்வது சரியானது. (லூக். 11:13) அந்தச் சக்தி, அப்படிப்பட்ட நினைப்பைத் தவிர்க்க உங்களுக்கு உதவும். பரிசுத்த சேவை செய்வதற்கான ஆசையைத் தருவது கடவுளே. ஏனென்றால், அவர் அளிக்கிற சக்தியே ஒரு சகோதரரைத் தகுதிபெறத் தூண்டுவிக்கிறது; பிறகு, அந்தச் சேவையைச் செய்வதற்கான பலத்தைத் தருகிறது. (பிலி. 2:13; 4:13) ஆகையால், அந்த ஆசையை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு வழி யெகோவாவிடம் உதவி கேட்பதே.—சங்கீதம் 25:4, 5-ஐ வாசியுங்கள்.
12. சபைப் பொறுப்புகளைச் சரியாகக் கையாளுவதற்கு ஒரு சகோதரர் எப்படி ஞானத்தைப் பெறலாம்?
12 ‘சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும்; அதையெல்லாம் பார்த்து அதற்கெல்லாம் ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அது ரொம்பவே சிரமமாய் இருக்கும், அதற்கு நிறையத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்’ என்று நினைத்து ஒரு சகோதரர் பின்வாங்கலாம். அல்லது, ‘அந்தப் பொறுப்புகளைக் கையாள எனக்கு அந்தளவு ஞானம் இல்லை’ என்று அவர் நினைக்கலாம். அப்படி நினைத்தாரென்றால், ஞானத்தைப் பெறுவதற்காக பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் ஊக்கத்தோடு படிக்க வேண்டும். ‘கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கு நேரம் ஒதுக்குகிறேனா, ஞானத்திற்காக யெகோவாவிடம் ஜெபம் செய்கிறேனா?’ என்று அவர் கேட்டுக்கொள்ள வேண்டும். சீடராகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுபட்டிருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் கடிந்துகொள்ள மாட்டார்; எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற அவர் அவனுக்கும் கொடுப்பார்.” (யாக். 1:5) இந்த வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்களா? சாலொமோன் ஞானத்தைக் கேட்டு ஜெபம் செய்தபோது யெகோவா அதற்குப் பதிலளித்தார். எப்படி? நியாயம் விசாரிக்கையில் நன்மை தீமை என்னவென்று பகுத்தறிய, “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை” அவருக்குத் தந்தருளினார். (1 இரா. 3:7-14) சாலொமோனின் சூழ்நிலை வேறு நம்முடைய சூழ்நிலை வேறு என்பது உண்மைதான் என்றாலும், யெகோவாவின் ஆடுகளைக் கவனிக்கும் பொறுப்பிலுள்ள சகோதரர்களுக்கு அவர் ஞானத்தைத் தருவாரென நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.—நீதி. 2:6.
13, 14. (அ) “கிறிஸ்துவின் அன்பு” பவுலுடைய வாழ்க்கையை எப்படிச் செதுக்கிச் சீராக்கியது என்பதை விளக்குங்கள். (ஆ) “கிறிஸ்துவின் அன்பு” நம்மை என்னவெல்லாம் செய்யத் தூண்ட வேண்டும்?
13 மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ள உதவுகிற இன்னொரு வழி, யெகோவாவும் அவருடைய மகனும் நமக்காகச் செய்திருக்கிற காரியங்களைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பதாகும். உதாரணமாக, 2 கொரிந்தியர் 5:14, 15 வசனங்களைச் சிந்தித்துப் பாருங்கள். (வாசியுங்கள்.) ‘கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தூண்டியெழுப்புகிறது’ என்று எப்படிச் சொல்லலாம்? கடவுளுடைய சித்தத்தின்படி, கிறிஸ்து நமக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்ததன் மூலம் ஒப்பற்ற விதத்தில் தம் அன்பை வெளிக்காட்டினார். அதற்கான நன்றியுணர்வு நமக்குள் பெருகும்போது நம் உள்ளம் அப்படியே நெகிழ்கிறது. கிறிஸ்து காட்டிய அன்பே பவுலின் வாழ்க்கையைச் செதுக்கிச் சீராக்கியது; அந்த அன்பே சுயநலமாகச் செயல்படாதபடி அவரைத் தடுத்தது; அதோடு, கடவுளுக்கும் சபையாருக்கும் சக மனிதருக்கும் சேவை செய்வதில் கவனத்தை ஒருமுகப்படுத்த அவருக்கு உதவியது.
14 மக்கள்மீது கிறிஸ்துவுக்கு இருக்கிற அன்பைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்தோம் என்றால், நம் உள்ளத்தில் நன்றியுணர்வு பெருக்கெடுக்கும். அதுமட்டுமல்ல, நாம் சுயநல லட்சியங்களை நாட மாட்டோம், சொந்த ஆசைகளைத் திருப்தி செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து ‘பாவத்திற்கென்று விதைத்துக்கொண்டே’ இருக்கத் துணிய மாட்டோம். அதற்குப் பதிலாக, கடவுள் தந்துள்ள வேலைக்கு முதலிடம் கொடுப்பதற்காக மற்ற காரியங்களை ஒழுங்கமைப்போம். நம் சகோதரர்கள் மீதுள்ள அன்பினால் ‘அடிமைகளாக வேலை செய்ய’ தூண்டப்படுவோம். (கலாத்தியர் 5:13-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் ஊழியர்களுக்குத் தாழ்மையுடன் சேவை செய்கிற அடிமைகளாக நம்மைக் கருதினோம் என்றால், அந்த ஊழியர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துவோம். சாத்தானுக்கே உரிய மனப்பான்மையை, அதாவது குறைகூறுகிற, நியாயந்தீர்க்கிற மனப்பான்மையை, அறவே தவிர்த்துவிடுவோம்.—வெளி. 12:10.
குடும்பத்தாரின் பங்கு
15, 16. ஒரு சகோதரர் உதவி ஊழியராகவோ மூப்பராகவோ சிபாரிசு செய்யப்படுவதில் குடும்ப அங்கத்தினர்கள் எவ்வாறு உட்பட்டிருக்கிறார்கள்?
15 மனைவி மக்களை உடைய ஒரு சகோதரர் மூப்பராகவோ உதவி ஊழியராகவோ சிபாரிசு செய்யப்படும்போது, அவருடைய குடும்ப சூழ்நிலையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆம், அவருடைய குடும்பத்தார் ஆன்மீக ரீதியில் எப்படியிருக்கிறார்கள், எப்படிப்பட்ட பெயரெடுத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது. மூப்பராகவோ உதவி ஊழியராகவோ தகுதிபெற முயலுகிற ஒரு சகோதரருக்கு அவருடைய குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது.—1 தீமோத்தேயு 3:4, 5, 12-ஐ வாசியுங்கள்.
16 குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தால், யெகோவாவின் உள்ளம் குளிரும். (எபே. 3:14, 15) சபைப் பொறுப்புகளைச் சரிவர கையாளுவதிலும் குடும்பத்தை ‘சிறந்த விதத்தில்’ நடத்துவதிலும் ஒரு குடும்பத் தலைவர் சமநிலையோடு செயல்பட வேண்டும். ஆகவே, ஒரு மூப்பரோ ஓர் உதவி ஊழியரோ தன் மனைவி மக்களோடு சேர்ந்து வாரந்தோறும் குடும்ப வழிபாட்டில் பைபிளை ஆழ்ந்து படிக்க வேண்டும்; அப்போதுதான் குடும்ப வழிபாட்டிலிருந்து எல்லாருமே நன்மையடைய முடியும். அவர்களோடு சேர்ந்து அவர் தவறாமல் வெளி ஊழியத்திலும் ஈடுபட வேண்டும். இதற்காக அவர் எடுக்கிற முயற்சிகளுக்கு அவரது குடும்பத்தார் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
மீண்டும் சேவை செய்வீர்களா?
17, 18. (அ) சபைப் பொறுப்புகள் ஒரு சகோதரரின் கையைவிட்டுப் போயிருந்தால், அவர் எப்படிப்பட்ட மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்? (ஆ) முன்பு ஒரு மூப்பராகவோ உதவி ஊழியராகவோ இருந்த ஒரு சகோதரர் இப்போது என்ன செய்யலாம்?
17 நீங்கள் ஒரு காலத்தில் மூப்பராகவோ உதவி ஊழியராகவோ சேவை செய்திருக்கலாம்; ஆனால், தற்போது அந்தப் பொறுப்பு உங்கள் கைவிட்டுப் போயிருக்கலாம். என்றாலும், யெகோவாமீது உங்களுக்கு அன்பு இருக்கிறது என்பதிலும், அவருக்கு உங்கள்மீது இன்னமும் அக்கறை இருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. (1 பே. 5:6, 7) நீங்கள் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று உங்களிடம் சொல்லப்பட்டதா? உங்களிடம் சுட்டிக்காட்டப்பட்ட தவறை ஒத்துக்கொண்டு, கடவுளின் உதவியோடு அதை மேற்கொள்ளுங்கள். கசப்புணர்வை வளர்த்துக்கொள்ளாதபடி ஜாக்கிரதையாய் இருங்கள். ஞானமாக நடந்துகொள்ளுங்கள், நம்பிக்கையான மனநிலையைக் காட்டுங்கள். மூப்பராகப் பல வருடங்கள் சேவை செய்து, பிற்பாடு அதை இழந்திருந்த ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “சபைப் பொறுப்புகளை நான் இழந்தபோதிலும் கூட்டங்களுக்குப் போவது, வெளி ஊழியத்தில் ஈடுபடுவது, பைபிள் வாசிப்பைச் செய்வது என எதையுமே நிறுத்திவிடக் கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தேன். அந்தத் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தேன். அதோடு, பொறுமையைக் கற்றுக்கொண்டேன்; ஏனென்றால், இழந்த பொறுப்புகளை ஓரிரு வருடங்களில் மீண்டும் பெறுவேன் என்று நினைத்திருந்தேன்; ஆனால், மீண்டும் ஒரு மூப்பராகச் சேவை செய்வதற்குக் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் நான் காத்திருக்க வேண்டியிருந்தது. சோர்ந்துவிடக் கூடாது, தகுதிபெற தொடர்ந்து முயல வேண்டும் போன்ற ஊக்கமூட்டும் வார்த்தைகள் எனக்குப் பெரிதும் கைகொடுத்தன.”
18 நீங்கள் சபைப் பொறுப்புகளை இழந்திருக்கிற ஒரு சகோதரரா? அப்படியானால், சோர்ந்துவிடாதீர்கள். உங்கள் ஊழியத்தையும் உங்கள் குடும்பத்தையும் யெகோவா எப்படியெல்லாம் ஆசீர்வதித்து வருகிறார் என யோசித்துப் பாருங்கள். உங்கள் குடும்பத்தாரை ஆன்மீக ரீதியில் பலப்படுத்துங்கள். நோயால் அவதிப்படுகிற சகோதர சகோதரிகளைப் போய்ச் சந்தியுங்கள், பலவீனமாய் இருப்பவர்களுக்குத் தெம்பூட்டுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவைத் துதிக்கவும், அவருடைய சாட்சிகளில் ஒருவராக நற்செய்தியை அறிவிக்கவும் உங்களுக்குக் கிடைத்திருக்கிற பாக்கியத்தை உயர்வாக மதியுங்கள்.a—சங். 145:1, 2; ஏசா. 43:10-12.
புதிய கண்ணோட்டத்தில் பாருங்கள்
19, 20. (அ) ஞானஸ்நானம் பெற்ற எல்லாச் சகோதரர்களும் என்ன செய்யும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
19 முன்பு எப்போதையும்விட இப்போது கண்காணிகளுக்கும் உதவி ஊழியர்களுக்கும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஞானஸ்நானம் பெற்ற சகோதரர்களே, உங்களுடைய சூழ்நிலைகளைப் புதிய கண்ணோட்டத்தில் சீர்தூக்கிப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். எனவே, ‘நான் ஏன் உதவி ஊழியராகவோ மூப்பராகவோ தகுதிபெற முயலாமல் இருக்கிறேன்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இந்த முக்கியமான விஷயத்தைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க கடவுளுடைய சக்தி உங்களுக்கு உதவும்.
20 சகோதரர்கள் கடவுளுக்குப் பிரியமான விதத்தில் சுய தியாக மனப்பான்மையைக் காண்பிக்கும்போது, சபை அங்கத்தினர் எல்லாருமே நன்மை அடைவார்கள். சுயநலமற்ற விதத்தில், அன்பான செயல்களைச் செய்யும்போது, மற்றவர்களுக்குச் சேவை செய்கிறோம் என்ற மகிழ்ச்சியையும், கடவுளுடைய சக்திக்கென்று விதைக்கிறோம் என்ற திருப்தியையும் நாம் பெறுவோம். என்றாலும், கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாதபடி நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். எப்படியென்று அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
[அடிக்குறிப்பு]
a ஆகஸ்ட் 15, 2009 தேதியிட்ட காவற்கோபுரத்தில், பக்கங்கள் 30-32-ஐப் பாருங்கள்.
உங்கள் பதில்?
• மீகா 5:5-ல் உள்ள தீர்க்கதரிசனம் நமக்கு என்ன நம்பிக்கையை அளிக்கிறது?
• சுய தியாக மனப்பான்மையில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது?
• மற்றவர்களுக்குச் சேவை செய்கிற ஆசையை ஒரு சகோதரர் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
• ஒரு சகோதரர் உதவி ஊழியராகவோ மூப்பராகவோ தகுதிபெற வேண்டுமென்றால், அவருடைய குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எந்தளவு முக்கியம்?
[பக்கம் 25-ன் படங்கள்]
சபைப் பொறுப்புகளுக்குத் தகுதிபெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?