இனி நமக்கென்று வாழாதிருத்தல்
‘வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாதபடிக்கு . . . அவர் [கிறிஸ்து] அனைவருக்காகவும் இறந்தார்.’—2 கொரிந்தியர் 5:15, பொது மொழிபெயர்ப்பு.
1, 2. தன்னலத்தை விட்டுவிடும்படி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசுவின் சீஷர்களை எந்த வேதப்பூர்வ கட்டளை உந்துவித்தது?
பூமியில் வாழ்ந்த காலத்தில், இயேசுவுக்கு அதுதான் கடைசி இரவு. தம்மை விசுவாசிக்கும் அனைவருக்காகவும் இன்னும் சில மணிநேரத்தில் தம் உயிரைக் கொடுக்கவிருந்தார். அந்த இரவில், முக்கியமான அநேக விஷயங்களைப் பற்றி உண்மையுள்ள அப்போஸ்தலரிடம் அவர் பேசினார். அவற்றில் ஒன்றுதான் தம்மை பின்பற்றுவோரை அடையாளம் காட்டும் ஒரு பண்பு சம்பந்தமான கட்டளையாக இருந்தது. “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.”—யோவான் 13:34, 35.
2 உண்மை கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் சுயதியாக அன்பை வெளிக்காட்ட வேண்டும், தங்களுடைய சொந்த நலனைவிட சக விசுவாசிகளுடைய நலனையே முதன்மையாக கருத வேண்டும். ‘சிநேகிதருக்காகத் தங்களுடைய ஜீவனைக் கொடுக்கவும்கூட’ தயங்கக் கூடாது. (யோவான் 15:13) இந்தப் புதிய கட்டளைக்கு ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எப்படி பிரதிபலித்தார்கள்? அப்பாலஜி என்ற பிரபல நூலில், கிறிஸ்தவர்களைப் பற்றி மற்றவர்கள் சொன்னதை இரண்டாம் நூற்றாண்டு எழுத்தாளர் டெர்டுல்லியன் இவ்வாறு மேற்கோள் காட்டினார்: ‘பாருங்கள், அவர்கள் ஒருவரையொருவர் எந்தளவு நேசிக்கிறார்கள்; ஒருவருக்காக ஒருவர் மரிக்கவும்கூட தயாராக இருக்கிறார்களே.’
3, 4. (அ) தன்னலத்தை நாம் ஏன் முறியடிக்க வேண்டும்? (ஆ) இக்கட்டுரையில் எதைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்?
3 நாமும்கூட ‘ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்ற’ வேண்டும். (கலாத்தியர் 6:2) என்றாலும், கிறிஸ்துவின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து, ‘நம் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் அன்புகூருவதற்கும், நம்மிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவதற்கும்’ மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது தன்னலம். (மத்தேயு 22:37-39) நாம் அபூரணராக இருப்பதால் சுயநலவாதிகளாக இருக்கும் மனச்சாய்வு நம்மிடம் உள்ளது. அதோடு, அன்றாட வாழ்க்கையின் கவலைகள், பள்ளியிலோ வேலை செய்யுமிடத்திலோ நிலவும் போட்டி மனப்பான்மை, வயிற்றுப்பாட்டுக்காக போராட்டம் ஆகியவை தன்னலம் என்ற இந்தப் பிறவிக் குணத்தை இன்னும் தீவிரமாக்குகின்றன. தன்னலம் குறைவதாகவே தெரியவில்லை. சொல்லப்போனால், “இந்தக் கடைசி நாட்களில், மனிதர் முற்றிலும் தன்னலவாதிகளாக . . . இருப்பார்கள்” என அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார்.—2 தீமோத்தேயு 3:1, 2, பிலிப்ஸ்.
4 பூமிக்குரிய வாழ்வின் கடைசி கட்டத்தில், தன்னலத்தை முறியடிக்க உதவும் மூன்று படிகளை இயேசு தமது சீஷர்களிடம் கூறினார். அந்தப் படிகள் யாவை, அவருடைய அறிவுரைகளிலிருந்து நாம் எப்படி பயனடையலாம்?
மிகச் சிறந்த நிவாரணி!
5. வடக்கு கலிலேயாவில் பிரசங்கித்துக் கொண்டிருந்த சமயத்தில், இயேசு தமது சீஷர்களுக்கு எதை வெளிப்படுத்தினார், அது ஏன் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது?
5 வடக்கு கலிலேயாவிலுள்ள பிலிப்புச் செசரியாவுக்கு அருகில் இயேசு பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இயற்கை வனப்புமிக்க ரம்மியமான ஓர் இடமாக அது இருந்ததால், தன்னலத்தை துறப்பதற்கு பதிலாக உல்லாசமாய் பொழுதுபோக்குவதற்கே உகந்த இடமாக அது தோன்றியிருக்கலாம். என்றாலும், இயேசு அங்கிருந்த சமயத்தில், “தாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும்” என்பதை சீஷர்களுக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். (மத்தேயு 16:21) அவரது சீஷர்களுக்கு இது எவ்வளவு அதிர்ச்சியூட்டுவதாக இருந்திருக்கும்! ஏனென்றால் தங்களுடைய தலைவர் இந்தப் பூமியில் ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்றே அதுவரை அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்!—லூக்கா 19:11; அப்போஸ்தலர் 1:6.
6. பேதுருவை இயேசு ஏன் கடுமையாக கண்டித்தார்?
6 அப்பொழுது, பேதுரு “அவரைத் [இயேசுவை] தனியே அழைத்துக் கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக் கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.” அப்போது இயேசு என்ன செய்தார்? “அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.” இருவருடைய மனப்பான்மையிலும் எவ்வளவு வித்தியாசம்! கடவுள் தமக்கு நியமித்த சுயதியாக பாதையை—சில மாதங்களில் கழுமரத்தில் மரிப்பதற்கு வழிநடத்தும் பாதையை—இயேசு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். பேதுருவோ சொகுசான பாதையைப் பரிந்துரைத்தார். “இது உமக்கு நேரிடக் கூடாதே” என்று சொன்னார். பேதுருவுக்கு நல்ல உள்நோக்கம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், இயேசு அவரைக் கண்டித்தார், ஏனென்றால் அந்தச் சமயத்தில் சாத்தானின் செல்வாக்கிற்கு பேதுரு இடமளித்திருந்தார். ‘தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளை [பேதுரு] சிந்தித்தார்.’—மத்தேயு 16:22, 23.
7. மத்தேயு 16:24-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, தமது சீஷர்கள் என்ன போக்கைப் பின்பற்றும்படி இயேசு சொன்னார்?
7 இயேசுவிடம் பேதுரு சொன்னதைப் போன்ற வார்த்தைகள் இன்றைக்கும் நம் காதுகளில் விழுகின்றன. ‘உன்னை வருத்திக்கொள்ளாதே’ அல்லது ‘அதிக சிரமம் எடுத்துக்கொள்ளாதே’ என்றே இந்த உலகம் பொதுவாக உந்துவிக்கிறது. மறுபட்சத்தில், இயேசுவோ முற்றிலும் மாறுபட்ட மனப்பான்மையை பரிந்துரை செய்தார். அவர் தமது சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: ‘ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து [“தன்னலம் துறந்து,” பொ.மொ.], தன் சிலுவையை [அதாவது, வாதனையின் கழுமரத்தை] எடுத்துக்கொண்டு என்னை [“தொடர்ந்து,” NW] பின்பற்றக்கடவன்.’ (மத்தேயு 16:24) “இன்னும் தமது சீஷர்களாக மாறாத ஆட்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை. மாறாக, தமது அழைப்புக்கு ஏற்கெனவே செவிகொடுத்தவர்கள் சீஷர்களாக இருப்பதன் அர்த்தத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவே கிறிஸ்து இதைச் சொன்னார்” என த நியூ இன்டர்பிரெட்டர்ஸ் பைபிள் கூறுகிறது. அந்த வசனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இயேசு சொன்ன மூன்று படிகள் விசுவாசிகள் பின்பற்ற வேண்டியவை. ஒவ்வொரு படியையும் நாம் இப்பொழுது தனித்தனியாக சிந்திக்கலாம்.
8. தன்னலம் துறப்பது என்றால் என்ன என்பதை விளக்கவும்.
8 முதலாவதாக, நாம் தன்னலம் துறக்க வேண்டும். “தன்னலம் துறத்தல்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை, சுயநல ஆசைகளையும் சொந்த செளகரியங்களையும் ஒதுக்கித் தள்ளுவதை சுட்டிக் காட்டுகிறது. தன்னலம் துறப்பது என்பது ஏதேனும் இன்பங்களை எப்போதாவது அனுபவிக்காமல் விட்டுவிடும் காரியமல்ல; அதேசமயம், நாம் துறவியாக மாற வேண்டும் அல்லது நமக்கே கேடு விளைவிக்க வேண்டும் என்பதையும் அர்த்தப்படுத்துவதில்லை. நம்முடைய முழு வாழ்க்கையையும் நம்மிடமுள்ள அனைத்தையும் யெகோவாவுக்கு மனப்பூர்வமாக ஒப்படைத்து விடுவதால் நாம் இனிமேல் ‘நமக்கு சொந்தமானவர்கள் அல்ல.’ (1 கொரிந்தியர் 6:19, 20, NW) நம் வாழ்க்கை நம் மீதே ஊன்றியதாக இல்லாமல் கடவுள் மீது ஊன்றியதாக ஆகிறது. நம்மையே துறப்பது என்பது கடவுளுடைய சித்தத்தைச் செய்ய உறுதிபூண்டிருப்பதைக் குறிக்கிறது, இது நம் அபூரண ஆசைகளுக்கு எதிராக இருக்கிறபோதிலும்கூட அப்படி செய்வதைக் குறிக்கிறது. நாம் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும்போது பிரத்தியேகமாக கடவுளுக்கே நம்மை அர்ப்பணித்திருப்பதை காட்டுகிறோம். அப்படியானால், நம்முடைய மீதமுள்ள வாழ்நாட்காலம் பூராவும் நம் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழவே கடினமாக முயல வேண்டும்.
9. (அ) இயேசு பூமியிலிருந்தபோது, வாதனையின் கழுமரம் எதை அடையாளப்படுத்தியது? (ஆ) நம்முடைய வாதனையின் கழுமரத்தை எந்த விதத்தில் நாம் எடுத்துச் செல்கிறோம்?
9 இரண்டாவது படி என்னவென்றால், நம்முடைய வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் நூற்றாண்டில், வாதனையின் கழுமரம் என்பது துன்பத்தை, அவமானத்தை, மரணத்தை அடையாளப்படுத்தியது. பொதுவாக, குற்றவாளிகள் மட்டுமே வாதனையின் கழுமரத்தில் கொலை செய்யப்பட்டார்கள் அல்லது அவர்களுடைய பிணம் கழுமரத்தில் தொங்கவிடப்பட்டது. ஒரு கிறிஸ்தவர் இந்த உலகத்தின் பாகமாக இல்லாததால், துன்பத்தையும் இகழ்ச்சியையும், ஏன், மரணத்தையும்கூட ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை இயேசு இந்தச் சொற்றொடரின் மூலம் காட்டினார். (யோவான் 15:18-20) நம் கிறிஸ்தவ தராதரங்கள் இந்த உலகிலிருந்து நம்மைப் பிரித்து வைக்கின்றன, ஆகையால் இந்த உலகம் ‘நம்மை தூஷிக்கலாம்.’ (1 பேதுரு 4:4) இது பள்ளியில், வேலை செய்யுமிடத்தில், அல்லது வீட்டில்கூட நிகழலாம். (லூக்கா 9:23) என்றாலும், இந்த உலகிலிருந்து வரும் இகழ்ச்சியை சகித்திருக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்கிறோம், ஏனென்றால் நாம் இனி நமக்காக வாழ்வதில்லை. இயேசு இவ்வாறு கூறினார்: “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.” (மத்தேயு 5:11, 12) ஆம், கடவுளுடைய தயவைப் பெறுவதே முக்கியம்.
10. இயேசுவை தொடர்ந்து பின்பற்றுவதில் என்ன உட்பட்டுள்ளது?
10 மூன்றாவதாக, நாம் தொடர்ந்து அவரைப் பின்பற்ற வேண்டும் என இயேசு கிறிஸ்து கூறினார். பின்பற்றுவது என்பது ஒருவருடன் சேர்ந்து செல்வதை—“ஒருவர் செல்லும் அதே பாதையில் செல்வதை”—குறிக்கிறது என டபிள்யு. ஈ. வைன் எழுதிய புதிய ஏற்பாட்டு வார்த்தைகளுக்குரிய எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி என்ற ஆங்கில நூல் கூறுகிறது. ஒன்று யோவான் 2:6 இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவருக்குள் [கடவுளுக்குள்] நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் [கிறிஸ்து] நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்.” இயேசு எப்படி நடந்தார்? இயேசு தமது பரலோகத் தகப்பன் மீதும் தமது சீஷர்கள் மீதும் அன்பு வைத்திருந்ததால் எந்தவித சுயநலத்திற்கும் இடமளிக்கவில்லை. ‘கிறிஸ்து தமக்கே பிரியமாய் நடக்கவில்லை’ என பவுல் எழுதினார். (ரோமர் 15:3) இயேசு களைப்பாகவும் பசியாகவும் இருந்த நேரங்களில்கூட தம்முடைய சொந்த நலனைவிட பிறருடைய நலனுக்கே முதலிடம் கொடுத்தார். (மாற்கு 6:31-34) ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டார். நாம் ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கி, இயேசு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணும்’ பொறுப்பை வைராக்கியமாக செய்வதன் மூலம் அவரைப் பின்பற்ற வேண்டும் அல்லவா? (மத்தேயு 28:19, 20) இவை எல்லாவற்றிலும் கிறிஸ்து நமக்கு மாதிரியை வைத்துப்போனார், ஆகவே நாம் அவருடைய ‘அடிச்சுவடுகளில் தொடர்ந்து’ நடக்க வேண்டும்.—1 பேதுரு 2:21.
11. தன்னலம் துறப்பதும், நம்முடைய வாதனையின் கழுமரத்தைச் சுமப்பதும், இயேசு கிறிஸ்துவை தொடர்ந்து பின்பற்றுவதும் ஏன் முக்கியம்?
11 தன்னலம் துறப்பதும், நம்முடைய வாதனையின் கழுமரத்தைச் சுமப்பதும், நமக்கு முன்மாதிரியானவரை தொடர்ந்து பின்பற்றுவதும் இன்றியமையாதது. இப்படி செய்வது சுயதியாக அன்பை காட்டுவதற்கு மிகப் பெரும் தடையாக இருக்கும் சுயநலத்தை முறியடிக்கிறது. அதோடு, இயேசு இவ்வாறு கூறினார்: “தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”—மத்தேயு 16:25, 26.
இரு எஜமானருக்கு நாம் சேவை செய்ய முடியாது
12, 13. (அ) இயேசுவின் அறிவுரையைக் கேட்ட அந்த இளம் அதிபதிக்கு எதைப் பற்றி அக்கறை இருந்தது? (ஆ) அந்த இளம் மனிதனுக்கு இயேசு என்ன அறிவுரை கொடுத்தார், ஏன்?
12 தமது சீஷர்கள் தன்னலம் துறக்க வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்திக் கூறிய சில மாதங்களுக்குப்பின், செல்வமிக்க ஓர் இளம் அதிபதி அவரிடம் வந்து, “நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்” என்று கேட்டான். அதற்கு இயேசு: “கற்பனைகளைக் கைக்கொள்” என்று கூறி அவற்றில் சிலவற்றை மேற்கோள் காட்டினார். “இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்” என்று அந்த இளம் மனிதன் கூறினான். அந்த மனிதன் நேர்மை மனதோடு, நியாயப்பிரமாண கட்டளைகளை முடிந்தவரை கடைப்பிடித்ததாக தெரிகிறது. அதனால் அவன் அவரிடம்: “இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன”? என்று கேட்டான். அதற்கு இயேசு: “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா என்றார்.”—மத்தேயு 19:16-21.
13 யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்ய பெரும் தடங்கலாக இருந்த பொருட்செல்வத்தை அந்த இளம் மனிதன் விட்டொழிக்க வேண்டியிருந்ததை இயேசு கண்டார். கிறிஸ்துவின் உண்மையான சீஷர் இரண்டு எஜமானருக்கு சேவை செய்ய முடியாது. அவரால் ‘தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய முடியாது.’ (மத்தேயு 6:24) அவருடைய ‘கண் தெளிவாக’ இருக்க வேண்டும், அதாவது ஆன்மீக காரியங்களின் மீது ஒருமுகப்பட்டிருக்க வேண்டும். (மத்தேயு 6:22) ஒருவர் தனது உடைமைகளை எல்லாம் எடுத்து ஏழைகளுக்குக் கொடுப்பது சுயதியாக செயலாகும். பொருளாதார தியாகம் செய்ததற்கு ஈடாக, பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து வைக்கும் விலைமதிக்க முடியாத சிலாக்கியத்தை இயேசு அந்த இளம் மனிதனுக்குக் கொடுத்தார்; அதாவது அவனுக்கு நித்திய ஜீவனையும், கடைசியில் பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆளுகை செய்யும் எதிர்பார்ப்பையும் கொடுத்தார். ஆனால் அந்த மனிதன் தன்னலம் துறப்பதற்குத் தயாராக இருக்கவில்லை. “அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், . . . துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.” (மத்தேயு 19:22) என்றாலும், இயேசுவின் மற்ற சீஷர்கள் வேறு விதமாக நடந்துகொண்டார்கள்.
14. தம்மைப் பின்பற்றி வரும்படி இயேசு விடுத்த அழைப்பிற்கு நான்கு மீனவர்களும் எப்படிப் பிரதிபலித்தார்கள்?
14 சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் என்ற நான்கு மீனவர்களிடம் இயேசு இது போன்ற அழைப்பை விடுத்திருந்தார். அந்தச் சமயத்தில் அவர்களில் இருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள், மற்ற இருவரோ தங்களுடைய வலைகளைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” என்று சொன்னார். கடைசியில் நான்கு பேரும் தங்களுடைய மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு, மீதமிருந்த வாழ்நாளெல்லாம் இயேசுவைப் பின்பற்றினார்கள்.—மத்தேயு 4:18-22.
15. நவீனகால யெகோவாவின் சாட்சி ஒருவர் இயேசுவைப் பின்பற்றுவதற்கு என்ன தியாகம் செய்தார்?
15 இன்று கிறிஸ்தவர்கள் அநேகர் அந்த இளம் அதிபதியின் முன்மாதிரியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக அந்த நான்கு மீனவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கிறார்கள். யெகோவாவுக்கு சேவை செய்வதற்காக செல்வத்தையும் புகழையும் தியாகம் செய்திருக்கிறார்கள். “எனக்கு 22 வயதாக இருந்த சமயத்தில், நான் ஒரு பெரிய தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது” என டெப்ரா கூறுகிறார். “சுமார் ஆறு மாதங்களாக நான் பைபிள் படித்து வந்திருந்தேன், என்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க விரும்பினேன், ஆனால் என்னுடைய வீட்டிலுள்ளவர்கள் ரொம்ப எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தார்கள், நான் யெகோவாவின் சாட்சியாக மாறினால் சமுதாயத்தில் அவர்களுடைய பெயர் கெட்டுவிடும் என்று நினைத்தார்கள். செல்வச் செழிப்பான வாழ்க்கை வேண்டுமா அல்லது சத்தியம் வேண்டுமா என 24 மணிநேரத்தில் தீர்மானிக்கும்படி சொன்னார்கள். சாட்சிகளுடன் நான் வைத்திருந்த எல்லா தொடர்பையும் துண்டிக்காவிட்டால், என்னுடைய சொத்துரிமைகளைப் பறித்துக்கொள்வதாக மிரட்டினார்கள். சரியான தீர்மானமெடுக்க யெகோவா எனக்கு உதவி செய்தார், தொடர்ந்து அந்தத் தீர்மானத்தில் உறுதியாக இருப்பதற்கு பலத்தையும் கொடுத்தார். கடந்த 42 ஆண்டுகளாக முழுநேர சேவை செய்து வருகிறேன், அதற்காக நான் துளிகூட வருத்தப்படுவதில்லை. இன்பத்தையே நாடுகிற சுயநல வாழ்க்கை பாணியை ஒதுக்கித் தள்ளிவிட்டேன். அதனால் என் குடும்ப அங்கத்தினர்களைப் போல் மகிழ்ச்சியே இல்லாத அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்வதில்லை. என்னுடைய கணவருடன் சேர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு உதவி செய்திருக்கிறேன். எந்தவொரு பொருளாதார செல்வத்தையும்விட இந்த ஆன்மீக பிள்ளைகள் மிகவும் விலையேறப் பெற்றவர்கள்.” லட்சோபலட்சம் யெகோவாவின் சாட்சிகளும் இதே போன்ற மனோபாவத்தையே காட்டுகின்றனர். உங்களைப் பற்றியென்ன?
16. இனி நமக்காக வாழவில்லை என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
16 ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கென்று வாழக்கூடாது என்ற விருப்பத்தோடு பயனியர்களாக, அதாவது முழுநேர ராஜ்ய பிரசங்கிகளாக சேவை செய்திருக்கிறார்கள். முழுநேர ஊழியத்தில் ஈடுபட முடியாத மற்றவர்களோ பயனியர் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, தங்களால் இயன்ற அளவுக்கு ராஜ்ய பிரசங்க வேலையை ஆதரிக்கிறார்கள். பிள்ளைகளுக்கு ஆன்மீக பயிற்சி அளிப்பதற்காக பெற்றோர் தங்களுடைய நேரத்தை அர்ப்பணித்து, தனிப்பட்ட ஆசைகளை தியாகம் செய்கையில் இதுபோன்ற மனப்பான்மையை காண்பிக்கிறார்கள். ஏதோவொரு விதத்தில், நாமனைவரும் நம்முடைய வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்பதை காண்பிக்க முடியும்.—மத்தேயு 6:33.
யாருடைய அன்பு நம்மை உந்துவிக்கிறது?
17. தியாகங்கள் செய்ய எது நம்மை தூண்டுகிறது?
17 சுயதியாக அன்பு காட்டுவது எளிதல்ல. ஆனால் எது நம்மை நெருக்கி ஏவுகிறது என்பதைச் சிந்தியுங்கள். பவுல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது: ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, . . . பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:14, 15) இனி நமக்காக வாழாதிருக்க நம்மை தூண்டுவது கிறிஸ்துவின் அன்பே. இது எப்பேர்ப்பட்ட வலிமைமிக்க தூண்டுதல்! கிறிஸ்து நமக்காக மரித்ததால், அவருக்காக வாழ வேண்டிய தார்மீக கடமை நமக்கு இருக்கிறது அல்லவா? சொல்லப்போனால், கடவுளும் கிறிஸ்துவும் காட்டியுள்ள ஆழ்ந்த அன்பிற்கான நன்றியுணர்வு, நம் வாழ்க்கையை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து கிறிஸ்துவின் சீஷராவதற்கு நம்மை உந்துவிக்கிறது.—யோவான் 3:16; 1 யோவான் 4:10, 11.
18. சுயதியாக வாழ்க்கை ஏன் பயனுடையது?
18 இனி நமக்காக வாழாதிருப்பது பயனுள்ளதா? செல்வந்தனாக விளங்கிய அந்த இளம் அதிபதி கிறிஸ்துவின் அழைப்பை ஏற்காது சென்றுவிட்ட பின்பு, இயேசுவிடம் பேதுரு இவ்வாறு கேட்டார்: “இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும்”? (மத்தேயு 19:27) பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் உண்மையாகவே தன்னலம் துறந்திருந்தார்கள். அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கவிருந்தது? முதலாவதாக, தம்மோடு பரலோகத்தில் ஆளும் சிலாக்கியத்தைப் பற்றி இயேசு பேசினார். (மத்தேயு 19:28) அதே சந்தர்ப்பத்தில், தம்மைப் பின்பற்றுவோர் எல்லோரும் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் குறிப்பிட்டார். “என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, . . . பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, . . . நூறத்தனையாக[வும்], . . . மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்” என்றார். (மாற்கு 10:29, 30) நாம் எவ்வளவுதான் தியாகம் செய்தாலும், அதைவிட பல மடங்கு அதிகமானதைப் பெற்றுக்கொள்கிறோம். நமது ஆன்மீக தகப்பன்மார், தாய்மார், சகோதரர், சகோதரிகள், பிள்ளைகள் ஆகியோர், ராஜ்யத்திற்காக நாம் செய்த எந்தவொரு தியாகத்தைப் பார்க்கிலும் மிக அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா? யாருக்கு அதிக பலன்மிக்க வாழ்க்கை கிடைத்தது—பேதுருவுக்கா செல்வந்தனான அந்த இளம் அதிபதிக்கா?
19. (அ) உண்மையான மகிழ்ச்சி எதில் சார்ந்துள்ளது? (ஆ) பின்வரும் கட்டுரையில் எவற்றை சிந்திப்போம்?
19 கொடுப்பதாலும் சேவை செய்வதாலுமே மகிழ்ச்சி உண்டாகிறது, தன்னலத்தால் அல்ல என்பதை சொல்லிலும் செயலிலும் இயேசு காட்டினார். (மத்தேயு 20:28; அப்போஸ்தலர் 20:35) நாம் இனிமேல் நமக்காக வாழாமல் கிறிஸ்துவைத் தொடர்ந்து பின்பற்றும்போது, இப்பொழுதே வாழ்க்கையில் பெரும் திருப்தியைக் காண்போம், எதிர்காலத்தில் நித்திய ஜீவனைப் பெறுவோம். நாம் தன்னலம் துறக்கும்போது யெகோவா நம் எஜமானாகிறார், நாம் அவருடைய அடிமைகளாகிறோம். இந்த அடிமைத்தனம் ஏன் பயனுள்ளது? வாழ்க்கையில் நாம் செய்யும் தீர்மானங்களை இது எப்படி பாதிக்கிறது? இந்தக் கேள்விகள் அடுத்தக் கட்டுரையில் ஆராயப்படும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• நாம் ஏன் சுயநல ஆசைகளை எதிர்த்துப் போராட வேண்டும்?
• தன்னலம் துறப்பது, வாதனையின் கழுமரத்தை சுமப்பது, இயேசுவைத் தொடர்ந்து பின்பற்றுவது என்பவற்றின் அர்த்தமென்ன?
• இனி நமக்கென்று வாழாதிருக்க எது நம்மை தூண்டுகிறது?
• சுயதியாக வாழ்க்கை ஏன் பயனுள்ளது?
[பக்கம் 11-ன் படம்]
“ஆண்டவரே, இது உமக்கு நேரிடக் கூடாதே”
[பக்கம் 13-ன் படம்]
இயேசுவைப் பின்பற்றாமல் இளம் அதிபதியைத் தடுத்தது எது?
[பக்கம் 15-ன் படம்]
வைராக்கியமுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்களாக சேவை செய்ய அன்பு யெகோவாவின் சாட்சிகளை தூண்டுகிறது