இதுவே இரட்சிப்பின் நாள்!
“இதுவே மிக ஏற்ற காலம்! இதுவே இரட்சிப்பின் நாள்!”—2 கொரிந்தியர் 6:2, Nw.
1. கடவுளுக்கும் இயேசுவுக்கும் உகந்தவர்களாய் நடந்துகொள்ள என்ன செய்யவேண்டும்?
யெகோவா நியாயத்தீர்ப்புக்கென்று ஒரு நாளைக் குறித்திருக்கிறார். (அப்போஸ்தலர் 17:31) அது நம் இரட்சிப்பின் நாளாக இருக்க, அவர் மனதுக்கும் அவர் நியமித்திருக்கும் நியாயாதிபதியான இயேசு கிறிஸ்துவின் மனதுக்கும் உகந்தவர்களாக நடந்துகொள்ளவேண்டும். (யோவான் 5:22) அவர்கள் மனதில் இடம்பிடிக்க பைபிளின்படி நடக்கவேண்டும். மேலும் நாம் விசுவாசத்தால் தூண்டப்பட்டு, இயேசுவின் உண்மையான சீஷராவதற்கு மற்றவர்களுக்கும் உதவவேண்டும்.
2. மனிதவர்க்கத்தினர் ஏன் கடவுளுக்கு அந்நியராய் இருக்கின்றனர்?
2 பாவத்தைச் சுதந்தரித்திருப்பதால் மனிதவர்க்கத்தினர் கடவுளுக்கு அந்நியராய் இருக்கின்றனர். (ரோமர் 5:12; எபேசியர் 4:17, 18) ஆகவே நமது பிரசங்கத்தைக் கேட்பவர்கள் அவரோடு ஒப்புரவாகும்போது மட்டுமே இரட்சிப்பைப் பெறுவார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது இதை தெளிவாக சொன்னார். இப்போது 2 கொரிந்தியர் 5:10–6:10-க்கு கவனம் செலுத்தலாம். நியாயத்தீர்ப்பு, கடவுளோடு ஒப்புரவாகுதல், இரட்சிப்பு ஆகியவற்றைப் பற்றி பவுல் என்ன சொன்னார் என பார்க்கலாம்.
“மனுஷருக்குப் புத்திசொல்கிறோம்”
3. பவுல் எவ்வாறு ‘மனுஷருக்குப் புத்திசொன்னார்,’ இன்று நாமும் ஏன் அதைச் செய்யவேண்டும்?
3 பவுல் நியாயத்தீர்ப்புக்கும் பிரசங்கிப்புக்கும் சம்பந்தமிருப்பதாய் எழுதினார்: “சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்.” (2 கொரிந்தியர் 5:10, 11) நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் பவுல் தொடர்ந்து ‘மனுஷருக்குப் புத்திசொன்னார்.’ நம்மைப் பற்றியென்ன? இப்பொல்லாத உலகின் முடிவுகாலத்தில் நாம் வாழ்வதால், நம்மால் முடிந்தளவு மற்றவர்களுக்குப் புத்திசொல்லவேண்டும். அதாவது இயேசுவின் சாதகமான நியாயத்தீர்ப்பையும் இரட்சிப்பின் பிறப்பிடமான யெகோவா தேவனின் அங்கீகாரத்தையும் பெற நடவடிக்கை எடுக்குமாறு புத்திசொல்லவேண்டும்.
4, 5. (அ) யெகோவாவிற்கு நாம் செய்யும் சேவையைக் குறித்து நாம் ஏன் வீண் பெருமை அடிக்கக்கூடாது? (ஆ) பவுல் எவ்வாறு “கடவுளுக்காக” பெருமைபாராட்டினார்?
4 கடவுள் நம் ஊழியத்தை ஆசீர்வதிக்கும்போது நம் சொந்த சாதனையாக நினைத்து பெருமையடிக்கக்கூடாது. கொரிந்துவில் சிலர் தங்களைக் குறித்தோ மற்றவர்களைக் குறித்தோ பெருமையடித்துக்கொண்டு, சபையில் பிரிவினை உண்டாக்கினர். (1 கொரிந்தியர் 1:10-13; 3:3, 4) இதை பவுல் இப்படி ஜாடைமாடையாக சுட்டிக்காண்பித்தார்: “மீண்டும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று கூறவில்லை; மாறாக எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம். அப்போது உள்ளத்தைப் பாராமல் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துப் பெருமை பாராட்டுவோருக்கு நீங்கள் மறுப்புக் கூற இயலும். நாங்கள் மதிமயங்கியவர்கள்போல் இருக்கிறோம் என்றால் அது கடவுளுக்காகவே; அறிவுத் தெளிவோடு இருக்கிறோம் என்றால் அது உங்களுக்காகவே.” (2 கொரிந்தியர் 5:12, 13, பொ.மொ.) அகங்காரம் பிடித்தவர்கள் சபையின் ஒற்றுமையையும் ஆவிக்குரிய நலனையும் பற்றி கவலைப்படவேயில்லை. கடவுளுக்குப் பிரியமாயிருக்க உடன் விசுவாசிகளுக்கு உதவுவதற்குப் பதிலாக அவர்கள் வெளித்தோற்றத்தைக் குறித்தே பெருமை பாராட்டினர். ஆகவே பவுல் அவர்களுக்குப் புத்திசொல்பவராய், “பெருமை பாராட்டுகிறவன் யெகோவாவைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்” என்று பிற்பாடு குறிப்பிட்டார்.—2 கொரிந்தியர் 10:17, NW.
5 பவுல் மட்டும் பெருமையடித்துக் கொள்ளவில்லையா என்ன? சிலர் அப்படித்தான் நினைத்தார்கள். அவர் தன்னை அப்போஸ்தலனென சொல்லி பெருமையடித்துக்கொண்டதாய் நினைத்தார்கள். ஆனால் அவர் “கடவுளுக்காக” (NW) பெருமைபாராட்ட வேண்டியிருந்தது. விளக்கமாக சொன்னால், கொரிந்தியர்கள் யெகோவாவை விட்டு விலகாமல் இருக்கவே, தான் அப்போஸ்தலன் என்பதற்கான தகுதிகளைக் குறித்து பெருமை பாராட்டினார். அதாவது, கள்ள அப்போஸ்தலர்களால் தவறான பாதைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர்களை மீண்டும் கடவுளது பாதைக்குத் திருப்பவே அவ்வாறு செய்தார். (2 கொரிந்தியர் 11:16-21; 12:11, 12, 19-21; 13:10) ஆனால் அதே வேலையாய் எப்போது பார்த்தாலும் அவர் தன் அருமைபெருமைகளை பற்றியே சொல்லிக்கொண்டில்லை.—நீதிமொழிகள் 21:4.
கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவுகிறதா?
6. கிறிஸ்துவினுடைய அன்பு என்ன செய்யும்படி நம்மைத் தூண்ட வேண்டும்?
6 உண்மை அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவின் மீட்கும் பலியைக் குறித்து மற்றவர்களுக்குப் போதித்தார். அது அவர் வாழ்க்கைப் போக்கையே மாற்றியதால் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது: ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:14, 15) நமக்காக உயிரையே கொடுத்த இயேசுவின் அன்பை என்னென்பது! அதுவே நம் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான நம் நன்றியை, யெகோவா தம் அருமை குமாரன் மூலம் தரும் இரட்சிப்பைப் பற்றிய நற்செய்தியை வைராக்கியமாய் பிரசங்கிப்பதன் மூலம் காட்டவேண்டும். (யோவான் 3:16; சங்கீதம் 96:2-ஐ ஒப்பிடுக.) “கிறிஸ்துவினுடைய அன்பு,” ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதிலும் சீஷராக்குவதிலும் வைராக்கியமாய் ஈடுபட உங்களை நெருக்கி ஏவுகிறதா?—மத்தேயு 28:19, 20.
7. ‘ஒருவனையும் மாம்சத்தின்படி அறியாதிருப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
7 அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்பதை தங்கள் ஒவ்வொரு செயலிலும் காட்டுவதன் மூலம், ‘இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், அவருக்காக பிழைத்திருக்கிறார்கள்.’ “ஆகையால்,” பவுல் சொன்னார், “இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.” (2 கொரிந்தியர் 5:16) கிறிஸ்தவர்கள் மற்றவர்களை மனித கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. உதாரணத்திற்கு யூதர்களை புறஜாதியினரைவிட அல்லது பணக்காரர்களை ஏழைகளைவிட உசத்தியாக பார்க்கக்கூடாது. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ‘ஒருவனையும் மாம்சத்தின்படி அறியார்கள்.’ ஏனெனில் உடன் விசுவாசிகளோடு உள்ள ஆவிக்குரிய உறவே அவர்களுக்கு முக்கியம். ‘கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிந்தவர்கள்’ அவரை பூமியில் மனிதனாக பார்த்தவர்கள் மட்டுமல்ல. மேசியாவுக்காக காத்திருந்த சிலர் அவரை மனித கண்ணோட்டத்தில் பார்த்தார்கள், அதாவது வெறுமனே மனிதராக கருதினார்கள். ஆனால் அவர்களும் தங்கள் எண்ணத்தை மாற்றவேண்டியிருந்தது. ஏனெனில் இயேசு தம் சரீரத்தை மீட்கும் பொருளாக கொடுத்து, ஜீவனளிக்கும் ஆவி ஆளாக உயிர்த்தெழுப்பப்பட்டார். பரலோக நம்பிக்கையுள்ள மற்றவர்களும் இயேசு கிறிஸ்துவை மாம்சத்தில் பார்க்க வாய்ப்பு பெறாமலேயே தங்கள் மாம்ச உடலை களைவார்கள்.—1 கொரிந்தியர் 15:45, 50; 2 கொரிந்தியர் 5:1-5.
8. எவ்வாறு நபர்கள் ‘கிறிஸ்துவோடு இணைகிறார்கள்’?
8 அபிஷேகம் செய்யப்பட்டவர்களிடம் மேலும் பவுல் சொல்கிறார்: “ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புது சிருஷ்டியாகிறார். பழையன ஒழிந்துபோய் எல்லாம் புதிதாயினவே!” (2 கொரிந்தியர் 5:17, NW) ‘கிறிஸ்துவோடு இணைந்திருப்பது’ என்பது அவரைப்போலவே இருப்பதைக் குறிக்கிறது. (யோவான் 17:21) அதாவது, யெகோவா ஒரு நபரை தம் குமாரனிடம் ஈர்த்துக்கொண்டு, பரிசுத்த ஆவியால் தம் ஆவிக்குரிய பிள்ளைகளாய் பிறப்பிக்கும்போது அந்நபர் இந்த உறவுக்குள் வருகிறார். கடவுளது ஆவியால் பிறப்பிக்கப்பட்ட குமாரனாய் அவர் ‘புது சிருஷ்டியாகிறார்.’ பரலோகத்தில் கிறிஸ்துவோடு ஆட்சிசெய்யும் எதிர்பார்ப்பைப் பெறுகிறார். (யோவான் 3:3-8; 6:44; கலாத்தியர் 4:6, 7) அப்படிப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மகத்தான சேவை செய்யும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.
“கடவுளோடு ஒப்புரவாகுங்கள்”
9. மனிதர் தம்மோடு ஒப்புரவாவதற்கு கடவுள் என்ன செய்திருக்கிறார்?
9 ‘புது சிருஷ்டி’மீது யெகோவா எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார்! பவுல் சொல்கிறார்: “இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.” (2 கொரிந்தியர் 5:18, 19) ஆதாம் பாவம் செய்தது முதற்கொண்டு மனிதவர்க்கத்தினர் கடவுளுக்கு அந்நியராய் இருக்கின்றனர். ஆனால் யெகோவாவே அன்பாக முன்வந்து இயேசுவின் பலியின் மூலம் ஒப்புரவாகுதலின் வழியை அனைவருக்கும் திறந்துவைத்தார்.—ரோமர் 5:6-12.
10. ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை யெகோவா யாரிடம் ஒப்படைத்திருக்கிறார், அதை நிறைவேற்ற அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?
10 ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை யெகோவா அபிஷேகம் செய்யப்பட்டவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். எனவே, பவுல் இப்படிச் சொன்னார்: “நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.” (2 கொரிந்தியர் 5:20, பொ.மொ.) பூர்வ காலங்களில் முக்கியமாய் போர் மூளவிருந்த சந்தர்ப்பங்களில் தூதுவர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டார்கள். (லூக்கா 14:31, 32) பாவமுள்ள மனிதவர்க்கத்தினர் கடவுளுக்கு அந்நியராய் இருப்பதால் அவர் தமது அபிஷேகம் செய்யப்பட்ட தூதுவர்களை அனுப்பி ஒப்புரவாவதற்கான விதிமுறைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார். அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் கிறிஸ்துவின் சார்பில், “கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என மன்றாடுகிறார்கள். அதாவது, கடவுளோடு சமாதானமடைந்து கிறிஸ்துவின் மூலம் அவர் தரும் இரட்சிப்பைப் பெறுமாறு கனிவோடு கேட்டுக்கொள்கிறார்கள்.
11. மீட்கும் பொருளில் நம்பிக்கை வைப்பதன் மூலம் யார் கடவுளுக்கு முன்பாக நீதியுள்ள நிலைநிற்கையைப் பெறுவார்கள்?
11 மீட்கும் பொருளில் நம்பிக்கை வைக்கும் அனைவரும் கடவுளோடு ஒப்புரவாகலாம். (யோவான் 3:36) பவுல் சொல்கிறார்: ‘நாம் அவருக்குள் [கிறிஸ்துவுக்குள்] தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காக [யெகோவா] பாவமாக்கினார்.’ (2 கொரிந்தியர் 5:21) ஆதாமின் சந்ததியினர் எல்லாருக்கும் பரிபூரண மனிதரான இயேசு பாவநிவாரண பலியானார். இப்போது அவர்கள் சுதந்தரிக்கப்பட்ட பாவத்திலிருந்து விடுதலையாகியிருக்கிறார்கள். இயேசுவினால் அவர்கள் ‘தேவனுடைய நீதியாகிறார்கள்.’ இந்த நீதியை, அல்லது கடவுளுக்கு முன்பாக நீதியுள்ள நிலைநிற்கையை முதலில் பெறுவது கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்களான 1,44,000 பேர். நித்திய பிதாவான இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியின்போது அவரது பூமிக்குரிய பிள்ளைகள், பரிபூரண மனிதர்களாக நீதியுள்ள நிலைநிற்கையைப் பெறுவார்கள். இயேசு அவர்களை பரிபூரண நிலைக்கு உயர்த்தி, கடவுளுக்கு தங்கள் உத்தமத்தை நிரூபிக்கவும் நித்திய ஜீவனென்னும் பரிசைப் பெறவும் உதவுகிறார்.—ஏசாயா 9:6; வெளிப்படுத்துதல் 14:1; 20:4-6, 11-15.
“மிக ஏற்ற காலம்”
12. யெகோவாவின் தூதுவர்களும் பிரதிநிதிகளும் என்ன முக்கியமான ஊழியம் செய்கிறார்கள்?
12 இரட்சிப்பைப் பெற நாம் பவுலின் இந்த வார்த்தைகளுக்கு இசைவாக செயல்படவேண்டும்: “நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தகுதியற்ற தயவை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் கடவுள் சொல்கிறார்: ‘மிக ஏற்ற காலத்தில் உனக்குப் பதிலளித்தேன், இரட்சிப்பின் நாளில் உனக்குத் துணையாய் இருந்தேன்.’ இதுவே மிக ஏற்ற காலம்! இதுவே இரட்சிப்பின் நாள்!” (2 கொரிந்தியர் 6:1, 2, NW) யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட தூதுவர்களும் ‘வேறே ஆடுகளான’ அவரது பிரதிநிதிகளும் தங்கள் பரலோக தகப்பனின் தகுதியற்ற தயவை வீணாக்குவதில்லை. (யோவான் 10:16) இந்த ‘ஏற்ற காலத்தில்’ அவர்கள் நீதிநேர்மையோடு நடந்து வைராக்கியமாய் ஊழியம் செய்வதன் மூலம் கடவுளது தயவைப் பெற நாடுகிறார்கள். “இதுவே இரட்சிப்பின் நாள்!” என பூலோகமெங்கும் அறிவிக்கவும் செய்கிறார்கள்.
13. ஏசாயா 49:8-ன் சாராம்சம் என்ன, அது முதலாவதாக எப்போது நிறைவேறியது?
13 பவுல் ஏசாயா 49:8-ஐ (NW) மேற்கோள் காட்டுகிறார். அதன்படி, “யெகோவா சொல்கிறார்: ‘அநுக்கிரக காலத்தில் உனக்குப் பதிலளித்தேன், இரட்சிப்பின் நாளில் உனக்குத் துணையாய் இருந்தேன்; நாட்டை மீண்டும் சீர்ப்படுத்தவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உன்னைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன்.’” இஸ்ரவேலர்கள் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கப்பட்டு பாழடைந்து கிடந்த தங்கள் தாயகத்திற்குத் திரும்பியபோது இந்த தீர்க்கதரிசனம் முதலாம் நிறைவேற்றத்தைக் கண்டது.—ஏசாயா 49:3, 9.
14. ஏசாயா 49:8 எவ்வாறு இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறியது?
14 ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் கூடுதலான நிறைவேற்றமாக, யெகோவா தமது ‘தாசனாகிய’ இயேசுவை ‘பூமியின் கடைசிபரியந்தமும் அவரது இரட்சிப்பாயிருக்கும்படி, ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தார்.’ (ஏசாயா 49:6, 8; ஒப்பிடுக: ஏசாயா 42:1-4, 6, 7; மத்தேயு 12:18-21.) இயேசுவைப் பொறுத்தவரை, ‘அநுக்கிரக காலம்’ அல்லது ‘ஏற்ற காலம்’ அவர் பூமியில் இருந்த சமயமே. அவர் ஜெபம் செய்தபோது கடவுள் ‘பதிலளித்தார்.’ பூமியில் இருந்த அந்தச் சமயமே இயேசுவுக்கு ‘இரட்சிப்பின் நாளாக’ இருந்தது. ஏனெனில் அவர் கடைசிவரை உத்தமத்தைக் காத்து, ‘தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணமானார்.’—எபிரெயர் 5:7, 9; யோவான் 12:27, 28.
15. எப்போது முதற்கொண்டு ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் கடவுளது தயவிற்கு தகுதியானவர்களென நிரூபிக்க கடும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது, என்ன குறிக்கோளோடு?
15 ஏசாயா 49:8-ஐ பவுல் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்குப் பொருத்துகிறார். அவர்கள் ‘கடவுளுடைய தகுதியற்ற தயவை வீணாக்காதிருக்கும்படி’ கேட்டுக்கொள்கிறார். அதாவது கடவுள் தரும் ‘ஏற்ற காலத்தில்’ அல்லது ‘இரட்சிப்பின் நாளில்’ அவரது அநுக்கிரகத்தைத் தேடும்படி சொல்கிறார். “இதுவே மிக ஏற்ற காலம்! இதுவே இரட்சிப்பின் நாள்!” என்றும் சொல்கிறார். (2 கொரிந்தியர் 6:2, NW) பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு, ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் கடவுளுடைய தயவிற்கு தாங்கள் தகுதியானவர்களென நிரூபிக்க கடும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் ‘ஏற்ற காலம்’ அவர்களுக்கு ‘இரட்சிப்பின் நாளாக’ இருக்கும்.
‘தேவ ஊழியக்காரராக நம்மை விளங்கப்பண்ணுதல்’
16. என்ன கஷ்டமான சூழ்நிலைகளிலும் பவுல் தன்னை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணினார்?
16 கொரிந்திய சபையிலிருந்த சிலர் கடவுளது தயவைப் பெற தகுதியானவர்களாக இல்லை. அப்போஸ்தலனாகிய பவுல் ‘யாதொன்றிலும் இடறல் உண்டாக்காதபோதும்’ அவரது அப்போஸ்தல உரிமையைப் பறித்துப்போடுவதற்காக அவர்மீது பழிசுமத்தினர். பவுலோ “மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்” தன்னை தேவ ஊழியக்காரராய் விளங்கப்பண்ணினார். (2 கொரிந்தியர் 6:3-5) தன் எதிரிகளே ஊழியக்காரர் என்றால், தானோ ‘அவர்களிலும் அதிகம்’ என பிற்பாடு குறிப்பிட்டார். ஏனெனில் அவர் அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டார், அநேக முறை அடிபட்டார், அதிக ஆபத்துக்களையும் கஷ்டங்களையும் சந்தித்தார்.—2 கொரிந்தியர் 11:23-27, தி.மொ.
17. (அ) என்னென்ன குணங்கள் நம்மை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணும்? (ஆ) ‘நீதியுள்ள ஆயுதங்கள்’ எவை?
17 பவுலையும் அவரது கூட்டாளிகளையும் போலவே நாமும் நம்மை தேவ ஊழியக்காரர்களாக விளங்கப்பண்ணலாம். எப்படி? ‘கற்பில்’ சிறந்தவர்களாய் அதாவது தூய்மையாக நடப்பவர்களாய், திருத்தமான பைபிள் அறிவுக்கு இசைவாக வாழ்வதன் மூலமே. நமக்கு எதிரான அநீதியையும் கோபத்தைக் கிளறும் செயல்களையும் பொறுமையோடு சகிப்பதன் மூலம் நாம் ‘நீடிய சாந்தத்தால்’ நம்மை விளங்கப்பண்ணுகிறோம். மற்றவர்களுக்கு உதவுவதால் ‘தயவில்’ நம்மை விளங்கப்பண்ணுகிறோம். கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, ‘மாயமற்ற அன்பைக்’ காட்டி, உண்மையையே பேசி, ஊழியத்தை நிறைவேற்ற அவர் தரும் பலத்தின்பேரில் சார்ந்திருப்பதனாலும் நாம் நம்மை தேவ ஊழியக்காரர்களாக விளங்கப்பண்ணலாம். சுவாரஸ்யமான இன்னொரு விஷயம், பவுல் ‘நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருந்ததன்’ மூலமும் தன்னை தேவ ஊழியரென நிரூபித்தார். பூர்வக் கால போர்வீரர்கள் வலதுகையில் பட்டயத்தையும் இடதுகையில் கேடகத்தையும் பிடித்திருப்பார்கள். பொய்ப் போதகர்களுக்கு எதிராக ஆவிக்குரிய போர் செய்கையில் பவுல் பாவமுள்ள மாம்சத்தின் ஆயுதங்களான வஞ்சகம், மோசம், ஏமாற்றல் போன்றவற்றைப் பயன்படுத்தவில்லை. (2 கொரிந்தியர் 6:6, 7; 11:12-14; நீதிமொழிகள் 3:32) அவர் உண்மை வணக்கத்தை ஆதரிக்க நீதியுள்ள ‘ஆயுதங்களை’ அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தினார். அவ்வாறே நாமும் செய்யவேண்டும்.
18. நாம் கடவுளுடைய ஊழியர்களாய் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
18 நாம் கடவுளுடைய ஊழியர்களாய், பவுலையும் அவரது உடன் ஊழியக்காரர்களையும் போலவே வாழ்வோம். நம்மை மதித்தாலும் சரி மதிக்காவிட்டாலும் சரி கிறிஸ்தவர்களுக்கேற்ற விதமாய் நடந்துகொள்வோம். நம்மை தவறாக படம்பிடித்துக் காட்டினாலும் பிரசங்கிப்பதை நிறுத்தமாட்டோம். அதேசமயம் புகழ்ச்சியைக் கேட்டு கர்வம் அடையவும் மாட்டோம். சத்தியத்தையே பேசி, தேவ கிரியைகளுக்காக நற்பெயர் பெறுவோம். எதிரிகளால் உயிருக்கே ஆபத்து வந்தாலும் யெகோவாவின்மேல் நம்பிக்கை வைப்போம். சிட்சையை நன்றியோடு ஏற்றுக்கொள்வோம்.—2 கொரிந்தியர் 6:8, 9.
19. ஆவிக்குரிய கருத்தில் நாம் எவ்வாறு ‘பலரை செல்வராக்கலாம்’?
19 பவுல், ஒப்புரவாக்குதலின் ஊழியத்தைப் பற்றி பேசி முடித்தபின், தானும் தன் கூட்டாளிகளும் ‘துயருற்றோர் எனத் தோன்றினாலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததாய்; ஏழையர் எனத் தோன்றினாலும் பலரைச் செல்வராக்கினதாய்; எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் எல்லாவற்றையும் பெற்றிருந்ததாய்’ சொன்னார். (2 கொரிந்தியர் 6:10, பொ.மொ.) அவர்கள் தாங்கள் பட்ட துன்பங்களால் வேதனைப்பட்டாலும் உள்ளூர சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் ஏழ்மையில் இருந்தாலும் ஆவிக்குரிய கருத்தில் ‘பலரை செல்வராக்கினார்கள்.’ சொல்லப்போனால் அவர்கள் ‘எல்லாவற்றையும் பெற்றிருந்தனர்.’ அதாவது விசுவாசத்தால் ஆவிக்குரிய செல்வங்களைப் பெற்றனர். கடவுளது பரலோக குமாரர்களாகும் எதிர்பார்ப்பையும்கூட பெற்றனர். மேலும் கிறிஸ்தவ ஊழியர்களாக அவர்கள் வளமிக்க சந்தோஷமான வாழ்க்கையை அனுபவித்தனர். (அப்போஸ்தலர் 20:35) இரட்சிப்பின் இந்நாளிலேயே, இப்போதே ஒப்புரவாக்குதலின் ஊழியத்தில் பங்குகொள்வதன் மூலம் அவர்களைப்போலவே நாமும் ‘பலரை செல்வராக்கலாம்’!
யெகோவாவின் இரட்சிப்பில் நம்பிக்கை வையுங்கள்
20. (அ) பவுல் எதை மனதார விரும்பினார், ஏன் அது வீணாக காலங்கடத்துவதற்கான சமயம் இல்லை? (ஆ) நாம் இன்று வாழ்வது இரட்சிப்பின் நாளில்தான் என எது காட்டுகிறது?
20 சுமார் பொ.ச. 55-ல் பவுல் கொரிந்தியர்களுக்கு இரண்டாம் கடிதத்தை எழுதியபோது, யூத ஒழுங்குமுறை அழிவதற்கு இன்னும் ஏறக்குறைய 15 வருடங்களே இருந்தன. யூதர்களும் புறவினத்தாரும் கிறிஸ்துவின் மூலம் கடவுளோடு ஒப்புரவாக வேண்டுமென பவுல் மனதார விரும்பினார். அதுவே அவர்களுக்கு இரட்சிப்பின் நாள், வீணாக காலங்கடத்துவதற்கான சமயம் அல்ல. நாமும் 1914 முதற்கொண்டு அதேபோல் முடிவின் காலத்தில் வாழ்ந்துவருகிறோம். உலகெங்கும் ராஜ்ய செய்தி பிரசங்கிக்கப்படுவது இது இரட்சிப்பின் நாள் என்பதை தெளிவுபடுத்துகிறது.
21. (அ) 1999-ன் வருடாந்தர வசனம் என்ன? (ஆ) இரட்சிப்பின் இந்நாளில் நாம் என்ன செய்யவேண்டும்?
21 இயேசு கிறிஸ்து மூலம் கடவுள் செய்திருக்கும் இரட்சிப்பின் ஏற்பாட்டைப் பற்றி எல்லா தேசத்து மக்களும் அறிந்துகொள்ள வேண்டும். தாமதிப்பதற்கு நேரமில்லை. “இதுவே இரட்சிப்பின் நாள்!” என பவுல் எழுதினார். யெகோவாவின் சாட்சிகளுக்கு, 2 கொரிந்தியர் 6:2-ன் இவ்வார்த்தைகளே 1999-ன் வருடாந்தர வசனம். எருசலேமும் அதன் ஆலயமும் எதிர்ப்பட்டதைக் காட்டிலும் மிகப் பெரிய அழிவை நாம் சந்திக்கவிருப்பதால் இவ்வசனம் மிகப் பொருத்தமானதே! இந்தப் பொல்லாத உலகம் விரைவில் அழியப்போகிறது, நாம் ஒவ்வொருவரும் இதில் உட்பட்டிருக்கிறோம். இன்றே, ஆம் இன்றே நடவடிக்கை எடுப்பதற்கான காலம். யெகோவாவே இரட்சிப்பவர் என்று நம்பி, அவரை நேசித்து, நித்திய ஜீவனை மதித்தால் கடவுளுடைய தயவை வீணாக்க மாட்டோம். யெகோவாவை மகிமைப்படுத்துவதே நம் உள்ளூர ஆசையாய் இருக்க வேண்டும். அதோடு “இதுவே இரட்சிப்பின் நாள்!” என வெறுமனே உதட்டளவில் அறிவிக்காமல் உண்மையிலேயே அதை நம்புகிறோம் என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபிப்போமாக.
எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ கடவுளோடு ஒப்புரவாகுதல் ஏன் மிக முக்கியம்?
◻ ஒப்புரவாக்குதலின் ஊழியத்தில் பங்குகொள்ளும் தூதுவர்களும் பிரதிநிதிகளும் யாவர்?
◻ எவ்வாறு நம்மை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணலாம்?
◻ யெகோவாவின் சாட்சிகளின் 1999-ஆம் வருடாந்தர வசனம் உங்களை என்ன செய்ய தூண்டுகிறது?
[பக்கம் 17-ன் படங்கள்]
பவுலைப் போலவே நீங்களும் வைராக்கியமாய் பிரசங்கித்து, கடவுளோடு ஒப்புரவாக மற்றவர்களுக்கு உதவுகிறீர்களா?
ஐக்கிய மாகாணங்கள்
பிரான்ஸ்
கோட் டீவ்வார்
[பக்கம் 18-ன் படம்]
இரட்சிப்பின் இந்நாளில், யெகோவா தேவனோடு ஒப்புரவாகும் லட்சக்கணக்கானோரில் நீங்களும் ஒருவரா?