“ஒருவரிலொருவர் கனிவான பாசமுள்ளவர்களாய் இருங்கள்”
“சகோதர அன்பிலே ஒருவரிலொருவர் கனிவான பாசமுள்ளவர்களாய் இருங்கள்.”—ரோமர் 12:10, NW.
1, 2. நவீன நாளைய மிஷனரி ஒருவரும் அப்போஸ்தலன் பவுலும் தங்கள் சகோதரர்களிடம் எப்படிப்பட்ட உறவை அனுபவித்து மகிழ்ந்தார்கள்?
தூர கிழக்கு நாடுகளில் டான் என்பவர் 43 ஆண்டுகள் மிஷனரி சேவை செய்தார். அத்தனை ஆண்டுகளும், சகோதரர்களிடம் அன்பையும் பாசத்தையும் காட்டுவதில் பேர்பெற்றவராக விளங்கினார். கடைசியாக கொடிய நோயோடு போராடிக்கொண்டிருந்த சமயத்தில், அவர் மூலம் பைபிள் சத்தியத்தை கற்றுக்கொண்ட சிலர் அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணித்து வந்திருந்தார்கள். கொரிய மொழியில் “காம்ஸாஹாம்னிடா, காம்ஸாஹாம்னிடா!” அதாவது “நன்றி, நன்றி!” என்று அவரிடம் சொல்வதற்காகவே வந்திருந்தார்கள். காரணம், டான் பொழிந்த கனிவான பாசம் அவர்களுடைய நெஞ்சை தொட்டிருந்தது.
2 பாசத்தை பொழிவதில் எடுத்துக்காட்டாக விளங்கியவர் டான் மட்டுமல்ல. முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலன் பவுலும்கூட தான் சேவித்தவர்களிடம் மிகுந்த பாசம் காட்டினார். அவர்களுக்காக தன்னையே அளித்தார். நம்பிக்கையில் உறுதியானவராக அவர் விளங்கியபோதிலும், “பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறது போல” மென்மையானவராகவும், மிகுந்த அக்கறை காட்டுபவராகவும் இருந்தார். அதனால்தான் தெசலோனிக்கேயர் சபைக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.” (1 தெசலோனிக்கேயர் 2:7, 8) பிற்பாடு ஒரு சமயம், எபேசுவிலிருந்த சகோதரர்கள் இனி தன்னை பார்க்க மாட்டார்கள் என சொன்னபோது, ‘அவர்களெல்லாரும் மிகவும் அழுது, பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் செய்தார்கள்.’ (அப்போஸ்தலர் 20:25, 37, 38) இதிலிருந்து, பவுலுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் இடையே இருந்த உறவு, ஒரே விசுவாசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே அமையவில்லை என்பது தெளிவாகிறது. அவர்களுக்கு இடையே கனிவான பாசம் இருந்தது.
கனிவான பாசமும் அன்பும்
3. பாசம் என்பதற்கான பைபிள் பதங்கள் எப்படி அன்போடு சம்பந்தப்பட்டிருக்கின்றன?
3 பைபிளில் கனிவான பாசம், அனுதாபம், பரிவு ஆகியவை கிறிஸ்தவ பண்புகளிலேயே உயர்தரமான பண்பாகிய அன்போடு நெருங்க சம்பந்தப்பட்டுள்ளன. (1 தெசலோனிக்கேயர் 2:8; 2 பேதுரு 1:7) அழகு மிளிரும் வைரத்தின் பட்டைகளைப் போன்று, இந்த அருமையான பண்புகள் யாவும் ஒன்று சேர்ந்து சிறந்த பலன்களைத் தருகின்றன. இப்பண்புகள், ஒருவருக்கொருவர் நெருங்கி வர மட்டுமல்ல பரலோகத் தகப்பனிடமும் நெருங்கி வர கிறிஸ்தவர்களுக்கு உதவுகின்றன. ஆகவே, அப்போஸ்தலன் பவுல் தன் சக விசுவாசிகளை இவ்வாறு அறிவுறுத்தினார்: “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. . . . சகோதர அன்பிலே ஒருவரிலொருவர் கனிவான பாசமுள்ளவர்களாய் இருங்கள்.”—ரோமர் 12:9, 10; NW.
4. ‘கனிவான பாசம்’ என்பதன் அர்த்தம் என்ன?
4 ‘கனிவான பாசம்’ என்ற சொற்றொடருக்கு பவுல் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒன்று நட்பு, மற்றொன்று இயல்பான பாசம். அப்படியானால் கிறிஸ்தவர்கள், “அன்பும் ஆதரவும் நெருங்கிய பந்தமும் உள்ள குடும்பத்தினரைப் போல் ஒருவருக்கொருவர் பற்றுதல் காட்ட வேண்டும்” என ஒரு பைபிள் கல்விமான் விளக்குகிறார். உங்களுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் நீங்கள் இப்படித்தான் நடந்துகொள்கிறீர்களா? கிறிஸ்தவ சபையில் ஓர் அன்பான சூழல்—குடும்பச் சூழல்—மேலிட வேண்டும். (கலாத்தியர் 6:10) இதன் காரணமாகவே, பொது மொழிபெயர்ப்பு பைபிள் ரோமர் 12:10-ஐ இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுவோமாக.” மேலும் த ஜெருசலம் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உடன்பிறப்புகள் போல் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள்.” ஆம், சகோதர சகோதரிகளுக்கிடையே அன்பு காட்டுவது என்பது நியாயமானதும் கடமையும் மட்டுமேயல்ல. நாம் ‘மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாக சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூர’ வேண்டும்.—1 பேதுரு 1:22.
‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி தேவனால் போதிக்கப்பட்டிருத்தல்’
5, 6. (அ) சர்வதேச மாநாடுகள் வாயிலாக எப்படி கிறிஸ்தவ பாசத்தை யெகோவா தம் ஜனங்களுக்கு போதித்திருக்கிறார்? (ஆ) சகோதரர்கள் நீண்ட காலத்திற்கு ஒன்று சேர்ந்து சேவை செய்கையில் அவர்களுக்கு இடையேயுள்ள பந்தம் எவ்வாறு வலுவடைகிறது?
5 இந்த உலகில் ‘அநேகருடைய அன்பு தணிந்து போயிருந்தாலும்’ ‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி’ தம் நவீன கால மக்களுக்கு யெகோவா போதிக்கிறார். (மத்தேயு 24:12; 1 தெசலோனிக்கேயர் 4:9) இந்தப் போதனையைப் பெற யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாடுகள் மிகச் சிறந்த சந்தர்ப்பங்களாகும். அச்சமயங்களில், மாநாடு நடக்கும் ஊரிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தூர தேசங்களிலிருந்து வரும் சகோதரர்களை சந்திக்கிறார்கள், அநேகர் அவர்களை தங்கள் வீடுகளில் தங்க வைக்கிறார்கள். இவ்வாறு சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டின்போது, வேறு நாடுகளிலிருந்து சிலர் வந்திருந்தார்கள்; உணர்ச்சிகளை வெளிக்காட்டும் பழக்கம் அவர்களுடைய நாட்டில் இல்லை. “முதலில் அவர்களுக்கு தயக்கமும் கூச்சமும் பயமும் இருந்தது. ஆனால், ஆறே நாட்களுக்குப் பிறகு, அங்கிருந்து விடைபெறும் வேளை வந்தபோது, அவர்களும் அவர்களை உபசரித்த சகோதரர்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி அழுதார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்தவ அன்பில் மூழ்கி திளைத்தார்கள்; அது அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவம்” என தங்கும் வசதிகளுக்கு ஏற்பாடு செய்த ஒரு கிறிஸ்தவர் சொல்கிறார். நம் சகோதரர்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை உபசரிக்கும்போது அவர்களும் சரி நாமும் சரி சிறந்த நன்மைகளை பெற முடியும்.—ரோமர் 12:13.
6 மாநாடுகளில் பெறும் இதுபோன்ற அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைப்பது உண்மைதான்; ஆனால் கிறிஸ்தவர்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு ஒன்று சேர்ந்து யெகோவாவை சேவிக்கும்போது அவர்களுக்கு இடையேயுள்ள நெருக்கமான உறவு மேன்மேலும் வலுப்படுகிறது. நம் சகோதரர்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்கையில், அவர்களுடைய சிறந்த பண்புகளை—உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை, உண்மைப் பற்றுறுதி, இரக்க குணம், தாராள குணம், அக்கறை, பரிவு, தன்னலமற்ற குணம் ஆகியவற்றை—மெச்சி பாராட்ட முடியும். (சங்கீதம் 15:3-5; நீதிமொழிகள் 19:22) கிழக்கு ஆப்பிரிக்காவில் மிஷனரியாக சேவை செய்த மாற்க் என்பவர் இவ்வாறு சொன்னார்: “நம் சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து சேவை செய்கையில் முறிக்க முடியாத ஒரு பந்தம் உருவாகிறது.”
7. சபையில் கிறிஸ்தவ பாசத்தை அனுபவித்து மகிழ என்ன தேவைப்படுகிறது?
7 சபையில் அப்படிப்பட்ட பந்தத்தை ஏற்படுத்தி அதைக் காத்துக்கொள்வதற்கு சபை அங்கத்தினர்கள் ஒருவரோடொருவர் நெருங்கி வருவது அவசியம். கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் செல்வதன் மூலம், சகோதர சகோதரிகளோடுள்ள நம் பற்றுதலை பலப்படுத்துகிறோம். கூட்டங்களுக்கு செல்வது, அவற்றில் பங்குகொள்வது, கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் சகோதர சகோதரிகளோடு கூட்டுறவு கொள்வது ஆகியவற்றின் மூலம் ‘அன்பு செலுத்தவும் நற்கிரியைகள் புரியவும்’ நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, தூண்டியெழுப்புகிறோம். (எபிரெயர் 10:24, 25) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “நான் சிறுவனாக இருந்தபோது குடும்பமாக ராஜ்ய மன்றத்திற்கு செல்வோம், கூட்டம் முடிந்து கடைசியாக வீடு திரும்பியவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. வெகு நேரத்திற்கு எல்லாரிடமும் பேசி மகிழ்ந்தோம். அதை இப்போதும் ஆசை ஆசையாக நினைத்துப் பார்ப்பேன்.”
‘விரிவாக்குவது’ அவசியமா?
8. (அ) ‘விரிவாகுங்கள்’ என்று கொரிந்தியர்களிடம் பவுல் சொன்னதன் கருத்து என்ன? (ஆ) சபையில் பாசத்திற்கு மெருகூட்ட நாம் என்ன செய்யலாம்?
8 இப்படிப்பட்ட பாசத்தை முழுமையாக காட்டுவதற்கு நம் இதயக் கதவுகளை ‘விரிவாக்குவது’ அவசியமாகலாம். கொரிந்துவிலிருந்த சபைக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது [“விரிவாகியிருக்கிறது,” NW]. எங்கள் உள்ளம் உங்களைக் குறித்து நெருக்கமடையவில்லை.” அதைப் போல அந்தக் கொரிந்தியர்களும் அன்பில் ‘விரிவாகும்படி’ அவர்களுக்கு பவுல் அறிவுறுத்தினார். (2 கொரிந்தியர் 6:11-13) உங்களுடைய பாசத்தை நீங்களும் ‘விரிவாக்க’ முடியுமா? மற்றவர்கள் உங்களிடத்தில் வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ரோமருக்கு எழுதிய கடிதத்தில் பவுல், கனிவான பாசத்தை காட்டுவதன் அவசியத்தோடு, “கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” என்ற ஆலோசனையையும் சேர்த்து வழங்கினார். (ரோமர் 12:10) மற்றவர்களை கனம் பண்ணுவதற்கு ஒரு வழி, கூட்டங்களில் நீங்கள் தாமே முதலில் சென்று அவர்களிடம் ‘ஹலோ’ சொல்வதாகும். மேலும், உங்களோடு வெளி ஊழியம் செய்யவோ, கூட்டத்திற்கு தயார் செய்யவோ அவர்களை நீங்கள் அழைக்கலாம். இவ்வாறு செய்வது கனிவான பாசம் பொங்கிப் பெருகுவதற்கு வழிவகுக்கிறது.
9. சக கிறிஸ்தவர்களோடு நெருங்கிய நண்பர்களாக ஆவதற்கு சிலர் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்? (உள்ளூர் அனுபவங்கள் இருந்தால் சேர்த்துக்கொள்ளவும்)
9 சபையில் தனிநபர்களும் குடும்பங்களும் ஒருவரையொருவர் சென்று சந்திப்பதன் மூலமும், ஒருவேளை ஒன்று சேர்ந்து ஓர் எளிய விருந்தை அனுபவித்து மகிழ்வதன் மூலமும் ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக ஈடுபடுவதன் மூலமும் பாசத்தை ‘விரிவாக்கலாம்.’ (லூக்கா 10:42; 14:12-14) ஹாக்கோப் என்பவர் அவ்வப்போது சிறுசிறு குரூப்பாக பிக்னிக் செல்வதற்கு ஏற்பாடு செய்கிறார். “எல்லா வயதினரும், ஒற்றைப் பெற்றோரும்கூட அதற்கு வருகிறார்கள். வீட்டிற்கு திரும்புகையில் எல்லாருடைய மனதிலும் இனிய நினைவுகள் நிரம்பி வழிகின்றன. ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக்கமாகிவிட்டதாகவும் உணர்கிறார்கள்” என அவர் சொல்கிறார். கிறிஸ்தவர்களாக நாம் சக விசுவாசிகளாக மட்டுமல்ல, ஆனால் உண்மையான நண்பர்களாகவும் இருக்க முயல வேண்டும்.—3 யோவான் 14.
10. சகோதர சகோதரிகளோடு நெருங்கிப் பழகுவதில் பிரச்சினைகள் இருந்தால் நாம் என்ன செய்யலாம்?
10 இருந்தாலும், சில சமயங்களில் நட்பையும் பாசத்தையும் வளர்க்க முயலுகையில் ஒருவேளை அபூரணம் தடையாக இருக்கலாம். அப்போது நாம் என்ன செய்யலாம்? முதலாவதாக, நம் சகோதரர்களோடு நல்ல உறவை வைத்துக்கொள்வதற்காக நாம் ஜெபிக்கலாம். தம் ஊழியர்கள் ஒருவருக்கொருவர் நட்பாக பழகுவது கடவுளுடைய சித்தம்; ஆகவே அப்படிப்பட்ட உள்ளப்பூர்வ ஜெபங்களுக்கு அவர் பதிலளிப்பார். (1 யோவான் 4:20, 21; 5:14, 15) நம் ஜெபங்களுக்கு ஏற்ப நாம் நடவடிக்கை எடுப்பதும் அவசியம். கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பயணக் கண்காணியான ரிக், பழகவே முடியாதளவுக்கு எடுத்தெறிந்து பேசும் ஒரு சகோதரரைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “அந்த சகோதரரை தவிர்ப்பதற்கு பதிலாக, அவரைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிவு செய்தேன். அவருடைய அப்பா ரொம்பவும் கண்டிப்புள்ளவராக இருந்தார் என்பது தெரிய வந்தது. அப்படிப்பட்ட பின்னணியின் செல்வாக்கிலிருந்து விடுபட அந்த சகோதரர் எந்தளவுக்கு பாடுபட்டிருக்கிறார் என்பதையும் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்ட பிறகு, நான் அவருக்கு சபாஷ் சொன்னேன். நாங்கள் உற்ற நண்பர்களாகி விட்டோம்.”—1 பேதுரு 4:8.
பாசத்தை வெளிக்காட்டுங்கள்
11. (அ) சபையில் பாசத்திற்கு மெருகூட்ட என்ன தேவைப்படுகிறது? (ஆ) பிறரிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் ஒதுங்கியிருப்பது ஏன் ஆன்மீக விதத்தில் ஆபத்தானது?
11 இன்று பலர் யாரிடமுமே ஒட்டுறவு இல்லாமல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது எவ்வளவு வருந்தத்தக்கது! கிறிஸ்தவ சபையில் இப்படிப்பட்ட ஒரு நிலை இருக்க வேண்டிய அவசியம் இல்லை, இருக்கவும் கூடாது. உண்மையான சகோதர அன்பு என்பது, வெறுமனே பவ்வியமாக பேசுவதும் மரியாதையோடு நடந்துகொள்வதும் அல்ல; அதேசமயத்தில் அளவுக்குமீறி பாசத்தைக் கொட்ட முயற்சி செய்வதும் அல்ல. மாறாக, கொரிந்தியர்களிடம் பவுல் செய்ததைப் போல, சக விசுவாசிகளுடைய நலனில் நமக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்பதை அவர்களுக்கு வெளிக்காட்ட மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். எல்லாருக்குமே சகஜமாக பழகுகிற அல்லது பேசுகிற சுபாவம் இல்லாவிட்டாலும் ரொம்பவே ஒதுங்கிப்போய் இருப்பது ஆபத்தானது. “பிறரோடு ஒத்துவாழாதவர் தன்னலத்தை நாடுகின்றார்; பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்” என பைபிள் எச்சரிக்கிறது.—நீதிமொழிகள் 18:1, பொ.மொ.
12. சபையில் ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவை வைத்திருப்பதற்கு நன்கு பேசுவது ஏன் முக்கியம்?
12 உண்மையான நட்புக்கு மிகவும் தேவை, ஒளிவுமறைவில்லா பேச்சுத்தொடர்பு. (யோவான் 15:15) அடிமனதின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சொல்வதற்கு நம் எல்லாருக்குமே நண்பர்கள் தேவை. அதுமட்டுமல்ல, ஒருவரையொருவர் நாம் எந்தளவுக்கு அறிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு ஒருவர் மற்றவருடைய தேவைகளை பூர்த்தி செய்வதும் எளிதாகிறது. இவ்விதத்தில் பிறருடைய அக்கறைகளுக்கு கவனம் செலுத்தும்போது சபையில் காட்டப்படும் கனிவான பாசத்திற்கு மெருகூட்ட நாம் உதவுகிறோம். அதோடு, “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று இயேசு சொன்ன வார்த்தைகள் உண்மை என்பதையும் அறிந்துகொள்வோம்.—அப்போஸ்தலர் 20:35; பிலிப்பியர் 2:1-4.
13. நம் சகோதரர் மீது உண்மையான பாசம் இருப்பதை காட்டுவதற்கு நாம் என்ன செய்யலாம்?
13 நமக்கிருக்கும் பாசத்தை வெளிப்படுத்தினால்தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (நீதிமொழிகள் 27:5) நமக்கு நிஜமாகவே பாசம் இருந்தால், அதை நம் முகம் காட்டிவிடும், அதற்கு பிரதிபலிக்கும்படி மற்றவர்களின் இருதயத்தையும் தூண்டிவிடும். “கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்” என சொல்கிறது ஒரு பைபிள் பழமொழி. (நீதிமொழிகள் 15:30) முன்யோசனையுடன் செய்யும் செயல்களும் சபையில் கனிவான பாசத்தை ஊட்டி வளர்க்கும். உண்மையான பாசத்தை யாருமே விலைகொடுத்து வாங்க முடியாதுதான்; ஆனால் இருதயப்பூர்வமான பாசத்தோடு ஒருவருக்கொருவர் பரிசு கொடுப்பது மிகுந்த அர்த்தமுள்ளது. ஒரு கார்டு, ஒரு கடிதம், ‘ஏற்ற சமயத்தில் சொன்ன ஒரு வார்த்தை’ போன்ற அனைத்தும் ஆழ்ந்த பாசத்தை வெளிக்காட்டலாம். (நீதிமொழிகள் 25:11; 27:9) பிறரிடம் நண்பராகிவிட்ட பிறகு, தொடர்ந்து தன்னலமற்ற பாசத்தைக் காட்டுவதன் மூலம் அந்த நட்பை நாம் காத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக நம் நண்பர்களுக்கு உதவி தேவைப்படும் சமயங்களில் நாம் அவர்களோடிருந்து உதவ வேண்டும். “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” என பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 17:17.
14. நாம் காட்டும் பாசத்திற்கு ஒருவர் பிரதிபலிக்காதது போல் தோன்றினால் நாம் என்ன செய்யலாம்?
14 சபையில் உள்ள ஒவ்வொருவரிடமும் நெருங்கிப் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது. நமக்கு பிடித்த சிலரிடம் மட்டும் நாம் நெருங்கி பழகுவது இயல்பு. சபையில் யாரேனும் ஒருவருக்கு நீங்கள் நினைக்கிற அளவுக்கு உங்கள் மீது பற்றுதல் இல்லை என தோன்றினால், உங்களிடம் ஏதோ குறை இருக்கிறது அல்லது அந்த நபருக்கு ஏதோ குறை இருக்கிறது என உடனடியாக முடிவுகட்டி விடாதீர்கள். அந்த நபரை வற்புறுத்தி அவரோடு நட்பு வைத்துக்கொள்ளவும் முயலாதீர்கள். அந்த நபர் அனுமதிக்குமளவுக்கு நட்பை வைத்துக்கொள்ளும்போது ஒருவேளை எதிர்காலத்தில் அவரது நெருங்கிய நண்பராக ஆக முடியும்.
“நான் உம்மை அங்கீகரித்தேன்”
15. பாராட்டை தெரிவிப்பதோ தெரிவிக்காமலிருப்பதோ பிறரை எப்படி பாதிக்கிறது?
15 தம்முடைய முழுக்காட்டுதலின்போது, “நான் உம்மை அங்கீகரித்தேன்” என்ற சத்தம் வானத்திலிருந்து கேட்டதும் இயேசு எவ்வளவாய் பூரித்துப் போயிருப்பார்! (மாற்கு 1:11, NW) இந்த வார்த்தைகள், பிதாவுக்கு தம்மீது பாசம் இருக்கிறது என்பதை இயேசுவுக்கு உறுதிப்படுத்தியிருக்கும். (யோவான் 5:20) வருத்தகரமான விஷயம் என்னவென்றால், சிலர் தங்களுடைய மதிப்புக்கும் அன்புக்கும் உரியவர்களிடமிருந்து இப்படிப்பட்ட பாராட்டைப் பெறுவதில்லை. “என் குடும்பத்தார் கிறிஸ்தவ நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்; இன்னும் நிறைய பிள்ளைகளும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள். வீட்டில் எப்போதும் எங்களுக்கு திட்டுதான் கிடைக்கும், அதைக் கேட்டுக் கேட்டு நொந்து நூலாகிப்போகிறோம்” என கூறுகிறாள் ஆன். ஆனால், அப்படிப்பட்ட பிள்ளைகள் சபையின் அங்கத்தினராக ஆகும்போது, ஆன்மீக குடும்பத்தின் அன்பையும் ஆதரவையும் உணருகிறார்கள்; அதாவது விசுவாசத்திலுள்ள அப்பாமார், அம்மாமார், சகோதர சகோதரிகள் ஆகிய அனைவரின் பாசத்தையும் பெறுகிறார்கள்.—மாற்கு 10:29, 30; கலாத்தியர் 6:10.
16. பிறரிடம் குறைகாண்பது ஏன் பயன்தராது?
16 சில கலாச்சாரங்களில், பெற்றோரும் ஆசிரியர்களும் வயதில் மூத்த மற்றவர்களும் இளம் பிள்ளைகளை மனதார பாராட்டுவதே இல்லை. அப்படி பாராட்டினால் பிள்ளைகள் சுயதிருப்தி அடைந்துவிடுவார்கள் அல்லது தலைக்குமேல் ஏறிவிடுவார்கள் என்பது அவர்களுடைய எண்ணம். அப்படிப்பட்ட எண்ணம் கிறிஸ்தவ குடும்பங்களையும் சபையையும்கூட பாதிக்கலாம். சபையில் பேச்சு கொடுத்த பின்போ வேறு சமயத்திலோ பெரியவர்கள் ஒருவேளை இவ்வாறு சொல்லலாம்: “நன்றாகத்தான் இருந்தது, ஆனால் இன்னும் நன்றாக கொடுத்திருக்கலாம்!” அல்லது, வேறு விதமாகவும் தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கலாம். அவ்வாறு செய்வது இன்னும் முழு முயற்சி எடுக்க இளைஞர்களை ஊக்குவிக்கிறதென அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அதற்கு நேர்மாறாகவே நடக்கிறது; அவர்கள் பின்வாங்கி விடலாம் அல்லது தங்களால் முன்னேறவே முடியாது என நினைத்து விடலாம்.
17. மற்றவர்களை பாராட்டுவதற்கு நாம் ஏன் வாய்ப்புகளைத் தேட வேண்டும்?
17 அதே சமயத்தில், ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு பீடிகை போடுவதற்காக பாராட்டக் கூடாது. மனதார பாராட்டும்போது குடும்பத்திலும் சபையிலும் கனிவான அன்பு மேலிடுகிறது; அனுபவமுள்ள சகோதர சகோதரிகளிடம் ஆலோசனை கேட்கும்படி இது இளைஞரை தூண்டுகிறது. ஆகவே பிறரோடு நடந்துகொள்ளும் விஷயத்தில் நம்முடைய கலாச்சாரத்தை தலைதூக்க அனுமதிக்காமல் அதற்கு பதிலாக, ‘மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் [“ஆள்தன்மையைத்,” NW] தரித்துக்கொள்வோமாக.’ யெகோவா பாராட்டுவதைப் போலவே பாராட்டுவோமாக.—எபேசியர் 4:24.
18. (அ) இளைஞர்களே, பெரியவர்கள் கொடுக்கும் ஆலோசனையை நீங்கள் எப்படி கருத வேண்டும்? (ஆ) ஆலோசனை கொடுக்கும் விதத்தைக் குறித்ததில் பெரியவர்கள் ஏன் கவனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்?
18 மறுபட்சத்தில், இளைஞர்களே! உங்களைப் பிடிக்காததால்தான் பெரியவர்கள் புத்திமதியோ ஆலோசனையோ கொடுக்கிறார்கள் என நினைக்காதீர்கள். (பிரசங்கி 7:9) உங்கள் மீது அவர்களுக்கு மிகுந்த அக்கறையும் பாசமும் இருப்பதால்தான் அவ்வாறு செய்கிறார்கள். இல்லாவிட்டால், அவர்கள் ஏன் அந்தளவுக்கு முயற்சி எடுத்து உங்களிடம் பேச வேண்டும்? வார்த்தைகளுக்கு எந்தளவு வலிமை இருக்கிறதென பெரியவர்கள், முக்கியமாக சபை மூப்பர்கள் அறிந்திருக்கிறார்கள்; ஆகவே உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே விருப்பத்துடன், என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றி தீர யோசித்துவிட்டு, ஜெபம் செய்துவிட்டு, பிறகுதான் ஆலோசனை கொடுக்கிறார்கள்.—1 பேதுரு 5:5.
“யெகோவா கனிவான பாசமுள்ளவர்”
19. ஏமாற்றத்தை சந்தித்திருப்பவர்கள் ஏன் யெகோவாவின் உதவியை நாடலாம்?
19 கசப்பான அனுபவங்களின் காரணமாக, பாசம் காட்டினால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்ற முடிவுக்கு சிலர் வந்திருக்கிறார்கள். அப்படியானால் பிறரிடம் அவர்கள் மீண்டும் பாசத்தை வெளிக்காட்டுவதற்கு தைரியமும் பலமான விசுவாசமும் தேவை. ஆனால் யெகோவா, “நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்பதை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. தம்மிடம் நெருங்கி வரும்படி அவர் நம்மை அழைக்கிறார். (அப்போஸ்தலர் 17:27; யாக்கோபு 4:8) பாசம் காட்டுவதால் வேதனையை சந்திக்க வேண்டிவருமோ என்ற நம் பயத்தையும் அவர் அறிவார்; அதனால் நம்மை ஆதரித்து நமக்கு உதவுவதாக அவர் வாக்குறுதி அளிக்கிறார். சங்கீதக்காரன் தாவீது இவ்விதமாக நமக்கு உறுதியளிக்கிறார்: “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.”—சங்கீதம் 34:18.
20, 21. (அ) யெகோவாவோடு அன்னியோன்னியமாக முடியும் என்பதை நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்? (ஆ) யெகோவாவோடு அன்னியோன்னியத்தை அனுபவித்து மகிழ என்ன தேவைப்படுகிறது?
20 யெகோவாவோடு உள்ள அன்னியோன்னிய நட்பே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பந்தம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு பந்தத்தை வைத்துக்கொள்வது சாத்தியமா? சாத்தியமே. நீதியுள்ள ஆண்களும் பெண்களும் நம் பரலோக தகப்பனிடம் எப்படிப்பட்ட நெருங்கிய பந்தத்தை அனுபவித்தார்கள் என்பதை பைபிள் சொல்கிறது. அவர்கள் சொன்ன மனதைத் தொடும் வார்த்தைகள், நமக்காகவே பைபிளில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன; யெகோவாவிடம் நாமும் நெருங்கிவர முடியும் என்ற உறுதியை அவை நமக்கு அளிக்கின்றன.—சங்கீதம் 23, 34, 139; யோவான் 16:27; ரோமர் 15:4.
21 யெகோவாவோடு அன்னியோன்னியமாவதற்கு நம்மிடம் அவர் எதிர்பார்க்கும் காரியங்கள் பாரமானவைகளல்ல. “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? . . . உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே” என தாவீது சொன்னார். (சங்கீதம் 15:1, 2; 25:14) கடவுளை சேவிப்பதால் நல்ல பலன்களும், அவருடைய வழிநடத்துதலும் பாதுகாப்பும் கிடைப்பதை நாம் உணர்கையில், “யெகோவா கனிவான பாசமுள்ளவர்” என்பதை நாம் அறிந்துகொள்வோம்.—யாக்கோபு 5:11, NW.
22. தம்முடைய மக்கள் எத்தகைய உறவை அனுபவித்து மகிழ வேண்டுமென யெகோவா விரும்புகிறார்?
22 அபூரண மனிதரோடு தனிப்பட்ட உறவை வைத்துக்கொள்ள யெகோவா விரும்புகிறார் என்றால் நாம் எப்பேர்ப்பட்ட பாக்கியவான்களாய் இருக்கிறோம்! அப்படியானால் நாமும் ஒருவருக்கொருவர் கனிவான பாசத்தை வெளிக்காட்ட வேண்டாமா? யெகோவாவின் உதவியோடு, கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் அம்சமாக திகழும் கனிவான பாசத்தை நாம் ஒவ்வொருவருமே காண்பிக்கவும், பெறவும் முடியும். கடவுளுடைய ராஜ்யத்தில், இந்த கனிவான பாசத்தை எல்லாருமே என்றென்றும் ருசித்து மகிழ்வோம்.
விளக்க முடியுமா?
• கிறிஸ்தவ சபையில் எப்படிப்பட்ட சூழல் மேலிட வேண்டும்?
• சபையில் கனிவான பாசத்தைக் காட்டுவதற்கு நாம் ஒவ்வொருவரும் எப்படி பங்களிக்கலாம்?
• மனதார பாராட்டுவது எப்படி கிறிஸ்தவ பாசத்திற்கு மெருகூட்டுகிறது?
• யெகோவா காட்டும் கனிவான பாசம் எவ்வாறு நம்மை தாங்கி ஆதரிக்கிறது?
[பக்கம் 15-ன் படம்]
கிறிஸ்தவர்கள் மத்தியில் அன்பு காட்டுவது ஒரு கடமை மட்டுமே அல்ல
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
உங்களுடைய பாசத்தை ‘விரிவாக்க’ முடியுமா?
[பக்கம் 18-ன் படம்]
நீங்கள் குறைகாண்கிறீர்களா, உற்சாகப்படுத்துகிறீர்களா?