‘விரிவாக்குங்கள்’
1 சபையில் அன்பு நிலவும்படி பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கிறிஸ்தவ சகோதரர்களான நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. (1 பே. 1:22; 2:17) ஒருவருக்கொருவர் கனிவுடன் நடந்துகொண்டு நம்முடைய பாசத்தின் எல்லையை ‘விரிவாக்கும்போது’ அத்தகைய அன்பு ஏற்படுகிறது. (2 கொ. 6:12, 13, NW) நம் சகோதர சகோதரிகளோடு நன்கு பரிச்சயம் ஆவது ஏன் அவசியம்?
2 நட்பின் பிணைப்பு வலுவடைகிறது: சக விசுவாசிகளுடன் நன்கு பரிச்சயமாகும்போது அவர்களுடைய விசுவாசம், சகிப்புத்தன்மை ஆகிய குணங்களையும், இன்னும் பிற அருமையான குணங்களையும் நம்மால் அதிகமாக போற்ற முடிகிறது. அவர்களுடைய குறைபாடுகள் நம் கண்முன் வருவதில்லை, மாறாக நட்பின் பிணைப்பு வலுவடைகிறது. ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்திருக்கும்போது நம்மால் இன்னும் நல்ல விதத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகத்தையும் ஆறுதலையும் அளிக்க முடியும். (1 தெ. 5:11) இப்படி நாம் ஒருவருக்கொருவர் “பக்கபலமாய்” இருக்கையில் சாத்தானிய உலகின் மோசமான செல்வாக்கை எதிர்த்து நிற்க முடியும். (கொலோ. 4:11, NW) அழுத்தங்கள் நிறைந்த இந்தக் கடைசி நாட்களில்கூட யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பதற்கு உண்மையிலேயே எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!—நீதி. 18:24.
3 கடுமையான சோதனைகளை நாம் எதிர்ப்படுகையில் நெருங்கிய நண்பர்கள் பக்கபலமாகவும் ஆறுதலாகவும் இருந்து நமக்கு பெரிதும் உதவலாம். (நீதி. 17:17) எதற்கும் லாயக்கில்லை என்ற மனப்பான்மையுடன் போராடிக் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ பெண் இவ்வாறு சொல்கிறார்: “என் நண்பர்களில் சிலர் பல விஷயங்களில் என்னை பாராட்டிப் பேசி எனக்கிருந்த நம்பிக்கையற்ற மனப்பான்மையை மாற்ற முயன்றார்கள்.” ஆம், அத்தகைய நண்பர்கள் யெகோவா நமக்கு தந்திருக்கும் பெரிய ஆசீர்வாதம்.—நீதி. 27:9.
4 பிறரிடம் அக்கறை காட்டுங்கள்: சக விசுவாசிகளிடம் கனிவுடன் நடந்துகொண்டு எப்படி நம்முடைய பாசத்தின் எல்லையை விரிவாக்கலாம்? கிறிஸ்தவ கூட்டங்களில் வணக்கம் சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் பயனுள்ள விதத்தில் அவர்களுடன் உரையாடுவதற்கு முயற்சி எடுங்கள். அவர்களுடைய சொந்த விஷயங்களில் தலையிடாமல் அவர்களிடம் உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுங்கள். (பிலி. 2:4; 1 பே. 4:15) மற்றவர்களை உணவருந்த அழைப்பது பாசத்தின் எல்லையை விரிவாக்குவதற்கு மற்றொரு வழியாகும். (லூக். 14:12-14) அல்லது அவர்களுடன் சேர்ந்து வெளி ஊழியம் செய்வதற்கு நீங்கள் திட்டமிடலாம். (லூக். 10:1) நம் சகோதரர்களுடன் நன்கு பரிச்சயமாக முயற்சி செய்யும்போது சபையில் ஐக்கியத்தை நாம் ஏற்படுத்துவோம்.—கொலோ. 3:14.
5 நம் வயதிலுள்ளவர்களை அல்லது நம்மைப் போலவே விருப்புவெறுப்புகள் உள்ளவர்களை மட்டுமே நெருங்கிய நண்பர்களாக தேர்ந்தெடுக்கும் மனச்சாய்வு நமக்கு இருக்கிறதா? சபையில் நட்பை வளர்த்துக்கொள்ள அத்தகைய அம்சங்கள் நமக்கு முட்டுக்கட்டையாக இருக்க அனுமதிக்கக் கூடாது. தாவீதுக்கும் யோனத்தானுக்கும், ரூத்துக்கும் நகோமிக்கும் வயதிலும் வாழ்க்கைப் பின்னணியிலும் வித்தியாசங்கள் இருந்தபோதிலும் அவர்கள் பலமான பாசப் பிணைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். (ரூத் 4:15; 1 சா. 18:1) உங்கள் நட்பின் எல்லையை விரிவாக்க முடியுமா? அப்படி செய்கையில் எதிர்பாரா ஆசீர்வாதங்கள் உங்களைத் தேடிவரும்.
6 பிறரிடம் கனிவுடன் நடந்துகொண்டு பாசத்தின் எல்லையை விரிவாக்குவதன் மூலம் நாம் ஒருவரையொருவர் பலப்படுத்துவோம், சபையில் சமாதானத்தை முன்னேற்றுவிப்போம். மேலும் நம் சகோதரர்களிடம் காட்டும் அன்புக்காக யெகோவாதாமே நம்மை ஆசீர்வதிப்பார். (சங். 41:1, 2; எபி. 6:10) எத்தனை பேரிடம் முடியுமோ அத்தனை பேரிடமும் நன்கு பரிச்சயமாவதை ஏன் உங்கள் இலக்காக வைக்கக்கூடாது?
[கேள்விகள்]
1. நம் ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது?
2. சக விசுவாசிகளுடன் நட்பை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?
3. நாம் எப்படி மற்றவர்களுக்குப் பக்கபலமாய் இருக்க முடியும்?
4. சபையிலுள்ளவர்களுடன் நாம் எப்படி நன்கு பரிச்சயமாக முடியும்?
5. நம் நட்பை வளர்த்துக் கொள்வதற்குரிய ஒரு வழி எது?
6. நம் சகோதரர்களிடம் கனிவுடன் நடந்துகொண்டு பாசத்தின் எல்லையை விரிவாக்குவதால் பெறும் சில நன்மைகள் யாவை?