கடவுளுடைய வார்த்தை உங்களை வழிநடத்தட்டும்
“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” —சங்கீதம் 119:105.
1, 2. உண்மையான சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கண்டடைவதில் பெரும்பாலான மனிதர்கள் ஏன் தோல்வி அடைந்திருக்கிறார்கள்?
யாரிடமாவது வழி கேட்ட சந்தர்ப்பம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒருவேளை, நீங்கள் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு அருகில் வந்திருக்கலாம்; ஆனால், அடுத்து வருகிற சில திருப்பங்களில் எந்தப் பக்கம் செல்வதென உங்களுக்குக் குழப்பமாக இருந்திருக்கலாம். அல்லது ஆரம்பத்திலேயே நீங்கள் தவறான வழியில் சென்றிருக்கலாம்; அதனால், உங்களுடைய பாதையை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும்சரி, அந்த இடத்தைப்பற்றி நன்கு அறிந்திருக்கிற ஒருவரிடம் விசாரித்து, அவர் சொல்கிற வழியில் செல்வதுதானே ஞானமான செயலாக இருக்கும்? நீங்கள் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு அவரால் சரியாக வழிகாட்ட முடியும்.
2 ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதகுலத்தினர் படைப்பாளராகிய யெகோவா தேவனின் வழிநடத்துதலை நாடாமல் தங்களுடைய வாழ்க்கையை நடத்த முயன்றிருக்கிறார்கள். இருந்தபோதிலும், கடவுளைச் சாராமல் தன் இஷ்டத்துக்கு வாழ்கிறபடியால் அபூரண மனிதர்கள் திக்குத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான சமாதானத்துக்கும் மகிழ்ச்சிக்கும் வழிநடத்துகிற பாதையை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏன் அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை? 2,500 ஆண்டுகளுக்கு முன்பாக எரேமியா தீர்க்கதரிசி இவ்வாறு கூறினார்: “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (எரேமியா 10:23) தகுதிவாய்ந்த ஒருவருடைய உதவியை உதறித் தள்ளிவிட்டு மனம்போன போக்கில் வாழ முயலுகிறவர்கள் ஏமாற்றங்களைச் சந்திப்பது உறுதி. உண்மையில், மனிதவர்க்கத்துக்கு வழிநடத்துதல் தேவை!
3. மனிதவர்க்கத்திற்கு வழிநடத்துதலைத் தருவதற்கு யெகோவா ஏன் முழுமையாகத் தகுதி பெற்றிருக்கிறார், அதோடு அவர் என்ன வாக்குறுதி அளித்திருக்கிறார்?
3 இத்தகைய வழிநடத்துதலைத் தருவதற்கு யெகோவா தேவனே முழுமையாகத் தகுதி பெற்றிருக்கிறார். ஏன்? ஏனென்றால் மனிதரின் உருவத்தையும் உள்ளத்தையும் வேறெவரைக் காட்டிலும் அவர் நன்கு புரிந்திருக்கிறார். அதோடு, மனித இனம் எப்படி வழிதவறிச் சென்று, திக்குத் தெரியாமல் தவிக்கிறது என்பதை அவர் முழுமையாகத் தெரிந்திருக்கிறார். சரியான பாதைக்குத் திரும்பி வருவதற்கு அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். மேலும் படைப்பாளராக, நமக்குச் சிறந்தது எது என்பதை யெகோவா எப்போதுமே அறிந்திருக்கிறார். (ஏசாயா 48:17) எனவே, சங்கீதம் 32:8-லுள்ள அவருடைய வாக்குறுதியில் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம்: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” யெகோவா மிகச் சிறந்த வழிநடத்துதலைத் தருகிறார் என்பதை நாம் நூறுசதம் நம்ப முடியும். ஆனால், அவர் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார்?
4, 5. கடவுளுடைய வசனங்கள் நம்மை எவ்வாறு வழிநடத்துகின்றன?
4 சங்கீதக்காரர் ஒருவர் யெகோவாவிடம் இவ்வாறு ஜெபித்தார்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105) கடவுளுடைய வசனங்களும் நினைப்பூட்டுதல்களும் பைபிளில் காணப்படுகின்றன; நம்முடைய வாழ்க்கைப் பாதையில் நாம் எதிர்ப்படுகிற தடைகளைத் தாண்டுவதற்கு அவை உதவுகின்றன. சொல்லப்போனால், நாம் பைபிளை வாசித்து, அதன் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும்போது, ஏசாயா 30:21-ல் விவரிக்கப்பட்டிருப்பதை அனுபவரீதியாக உணருவோம்: “வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.”
5 கடவுளுடைய வார்த்தை ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு வழிகளில் உதவுவதைப்பற்றி சங்கீதம் 119:105 குறிப்பிடுவதைக் கவனியுங்கள். முதலாவதாக, அது நம் கால்களுக்குத் தீபமாய் இருக்கிறது. தினசரி வாழ்க்கையில் நாம் பிரச்சினைகளை எதிர்ப்படும்போது பைபிள் நியமங்கள் நம்மை வழிநடத்த வேண்டும். அப்போது, ஞானமான தீர்மானங்களைச் செய்யவும் இந்த உலகின் கண்ணிகளையும் படுகுழிகளையும் நம்மால் தவிர்க்கவும் முடியும். இரண்டாவதாக, கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் நம் பாதைக்கு வெளிச்சம் தருகின்றன; கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிற பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழும் நம் நம்பிக்கைக்கு இசைவான தெரிவுகளைச் செய்வதற்கு அவை நமக்கு உதவுகின்றன. நம்முடைய பாதை பிரகாசமாக இருப்பதால், குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்கையில் நமக்கு நன்மை விளையுமா தீமை விளையுமா என்பதை பகுத்துணர முடிகிறது. (ரோமர் 14:21; 1 தீமோத்தேயு 6:9; வெளிப்படுத்துதல் 22:12) பைபிளில் காணப்படுகிற கடவுளுடைய வசனங்கள் எவ்வாறு நம் கால்களுக்குத் தீபமாயும் பாதைக்கு வெளிச்சமாயும் இருக்கிறது என்பதை நாம் விவரமாகக் கலந்தாராய்வோம்.
‘என் கால்களுக்குத் தீபம்’
6. எத்தகைய சூழ்நிலைகளில் கடவுளுடைய வசனங்கள் நம் கால்களுக்குத் தீபமாய் இருக்கும்?
6 ஒவ்வொரு நாளும் நாம் தீர்மானங்கள் செய்கிறோம். சில தீர்மானங்கள் அந்தளவுக்கு முக்கியமற்றவையாகத் தோன்றலாம்; ஆனால் சில சமயங்களில் நம்முடைய ஒழுக்கநெறி, நேர்மை, நடுநிலை வகிப்பு ஆகியவற்றைச் சோதிக்கிற சூழ்நிலையை நாம் எதிர்ப்படலாம். அத்தகைய சோதனைகளை வெற்றிகரமாக எதிர்ப்படுவதற்கு, நாம் ‘நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெற’ வேண்டும். (எபிரெயர் 5:14, பொது மொழிபெயர்ப்பு) கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவைப் பெறுவதன்மூலமும், அதன் நியமங்களைப் புரிந்துகொள்வதில் முன்னேறுவதன்மூலமும் யெகோவாவைப் பிரியப்படுத்துகிற தீர்மானங்களைச் செய்வதற்கு நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிக்கிறோம்.—நீதிமொழிகள் 3:21.
7. ஒரு கிறிஸ்தவர் வேலை செய்கிற இடத்தில் சத்தியத்தில் இல்லாதவர்களுடன் தோழமை கொள்வதற்கான சூழ்நிலையை விவரியுங்கள்.
7 ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். நீங்கள் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்த மனப்பூர்வமாக முயற்சி செய்கிற நபரா? (நீதிமொழிகள் 27:11) அப்படியானால், நீங்கள் பாராட்டுக்குரியவர். ஆனால், இவ்வாறு சற்றுக் கற்பனை செய்யுங்கள். உங்களோடு வேலை செய்கிற சிலர் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு வரும்படி உங்களை அழைக்கிறார்கள். வேலை செய்யுமிடத்தில் நீங்கள் பழகும் விதம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது, அதனால் வெளியிடங்களுக்கும் உங்களோடு சேர்ந்து செல்ல அவர்கள் விருப்பப்படலாம். அப்படியொன்றும் அவர்கள் மோசமான ஆட்கள் இல்லையென்று நீங்கள் ஆணித்தரமாக நம்பலாம். தங்கள் வாழ்க்கையில் நல்ல கொள்கைகள் சிலவற்றையும்கூட அவர்கள் கடைப்பிடிக்கலாம். நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில் ஏதேனும் அபாயம் இருக்கக்கூடுமா? இவ்விஷயத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்குக் கடவுளுடைய வார்த்தை உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?
8. தோழமையைக் குறித்த விஷயத்தைப் பகுத்தறிய எந்த பைபிள் நியமங்கள் நமக்கு உதவுகின்றன?
8 சில பைபிள் நியமங்களைக் கவனியுங்கள். முதலாவதாக நினைவுக்கு வருகிற நியமம் 1 கொரிந்தியர் 15:33-ல் (பொ.மொ.) உள்ளது. அது இவ்வாறு சொல்கிறது: “தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” இந்த வசனத்தில் உள்ள நியமம், சத்தியத்தில் இல்லாதவர்களோடு அறவே சகவாசம் வைத்துக்கொள்ளக்கூடாதென அர்த்தப்படுத்துகிறதா? இல்லை என்றே பைபிள் பதில் அளிக்கிறது. அப்போஸ்தலன் பவுலும்கூட, சத்தியத்தில் இல்லாதவர்கள் உட்பட “எல்லாருக்கும்” அன்பையும் கரிசனையையும் காட்டினாரே. (1 கொரிந்தியர் 9:22) நாம் பிறருடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்பதே கிறிஸ்தவத்தின் அடிப்படை கொள்கையாக இருக்கிறது. இந்த அக்கறையை நம்முடைய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களிடமும் காட்ட வேண்டும். (ரோமர் 10:13-15) சொல்லப்போனால், நம்முடைய உதவி தேவைப்படுவோரைவிட்டு நாம் ஒதுங்கி வாழ்ந்தால், “யாவருக்கும், . . . நன்மைசெய்யக்கடவோம்” என்ற அறிவுரையை நம்மால் எவ்வாறு பின்பற்ற முடியும்?—கலாத்தியர் 6:10.
9. உடன் வேலை செய்பவரோடு பழகுவதில் சமநிலையோடு இருப்பதற்கு பைபிளிலுள்ள எந்த அறிவுரை நமக்கு உதவுகிறது?
9 இருந்தபோதிலும், உடன் வேலை செய்பவரோடு அன்பாகப் பழகுவதற்கும் அவருடன் ஒட்டி உறவாடுவதற்கும் இடையே தெளிவான வித்தியாசம் இருக்கிறது. இந்த விஷயத்தில் மற்றொரு பைபிள் நியமம் உட்பட்டிருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களை இவ்வாறு எச்சரித்தார்: “அவிசுவாசிகளுடன் பொருத்தமற்றுப் பிணைக்கப்படாதிருங்கள்.” (2 கொரிந்தியர் 6:14, NW) “பொருத்தமற்றுப் பிணைக்கப்படாதிருங்கள்” என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன? சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்தச் சொற்றொடரை “கூட்டுச்சேராதிருங்கள்,” “சமமாக ஒன்றுசேர்ந்து காரியங்களைச் செய்ய முயலாதிருங்கள்,” “பொருத்தமற்ற பந்தங்களை உருவாக்கிக் கொள்வதை நிறுத்துங்கள்” என்றெல்லாம் மொழிபெயர்த்திருக்கின்றன. உடன் வேலை செய்பவரோடு நாம் வைத்திருக்கும் பந்தம் எப்போது பொருத்தமற்றதாகிறது? அது எப்போது எல்லைமீறிப்போய், பொருத்தமற்ற பிணைப்பாக ஆகிறது? இந்த விஷயத்தில் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டும்.
10. (அ) இயேசு தம்முடைய நண்பர்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்? (ஆ) தோழமையைக் குறித்ததில் சரியான தீர்மானங்களைச் செய்வதற்கு என்ன கேள்விகள் ஒரு நபருக்கு உதவலாம்?
10 இயேசுவின் மாதிரியைக் கவனியுங்கள். மனிதர்கள் படைக்கப்பட்ட சமயம் முதற்கொண்டு அவர்களை அவர் நேசிக்கிறார். (நீதிமொழிகள் 8:31) பூமியிலிருந்தபோது, தம்மைப் பின்பற்றியவர்களோடு நெருங்கிய பந்தத்தை வைத்திருந்தார். (யோவான் 13:1) மதரீதியாகத் தவறாக வழிநடத்தப்பட்டிருந்த ஒரு மனிதனிடம்கூட அவர் ‘அன்புகூர்ந்தார்.’ (மாற்கு 10:17-22) ஆனால், தம்முடைய நெருங்கிய நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இயேசு தெளிவான வரம்புகளை வைத்திருந்தார். தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்வதில் உள்ளான அக்கறை காட்டாத நபர்களோடு அவர் நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ளவில்லை. ஒரு சமயத்தில், இயேசு இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.” (யோவான் 15:14) உடன் வேலை செய்யும் ஒருவரோடு அன்பாகப் பழகுவது உங்களுக்குச் சுலபமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் உங்களையே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள்: ‘இயேசு கட்டளையிடுகிறவற்றைச் செய்ய அவர் மனமுள்ளவராக இருக்கிறாரா? யெகோவாவை வணங்க வேண்டும் என்றல்லவா இயேசு கற்றுக்கொடுத்தார்; அதன்படி, யெகோவாவைப்பற்றிக் கற்றுக்கொள்ள அவர் விரும்புகிறாரா? ஒரு கிறிஸ்தவராக நான் கடைப்பிடிக்கும் அதே ஒழுக்கத் தராதரங்களை அவர் கடைப்பிடிக்கிறாரா?’ (மத்தேயு 4:10) உடன் வேலை செய்பவர்களோடு உரையாடும்போதும், பைபிள் தராதரங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதிகாட்டும்போதும் இக்கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்குத் தெரியவரும்.
11. என்னென்ன சந்தர்ப்பங்களில் கடவுளுடைய வசனங்கள் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணங்கள் தருக.
11 இன்னும் அநேக சந்தர்ப்பங்களிலும்கூட கடவுளுடைய வசனங்கள் நம் கால்களுக்குத் தீபமாக இருக்கும். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவர் வேலையில்லாமல் திண்டாடலாம்; நெருக்கடியான அந்தச் சூழ்நிலையில் அவருக்கு ஒரு வேலை கிடைக்கலாம். எனினும், அது அவருடைய நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடுகிற வேலையாக இருக்கிறது; அவர் அதை ஏற்றுக்கொண்டால், அடிக்கடி சபைக் கூட்டங்களுக்கு வர முடியாமல் போகும்; அதோடு, உண்மை வணக்கத்தின் மற்ற அம்சங்களையும் அவர் தவறவிடுவார். (சங்கீதம் 37:25) மற்றொரு கிறிஸ்தவருக்கோ, பைபிள் நியமங்களை மீறுகிற இழிவான பொழுதுபோக்கு நிகழ்ச்சி என தெளிவாகத் தெரிந்தும் அதைப் பார்ப்பதற்கான தீவிர ஆசை ஏற்படலாம். (எபேசியர் 4:17-19) வேறொரு நபருக்கோ, உடன் வணக்கத்தாருடைய அபூரணங்களைக் கண்டு எளிதில் புண்படுகிற பிரச்சினை இருக்கலாம். (கொலோசெயர் 3:13) இத்தகைய எல்லா சூழ்நிலைகளிலும் கடவுளுடைய வார்த்தை நம் கால்களுக்குத் தீபமாய் இருக்க நாம் அனுமதிக்க வேண்டும். உண்மையில், பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதன்மூலம் வாழ்க்கையில் எதிர்ப்படுகிற எந்தவொரு சவாலையும் நாம் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும். கடவுளுடைய வார்த்தை “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:17.
‘என் பாதைக்கு வெளிச்சம்’
12. கடவுளுடைய வசனங்கள் நம் பாதைக்கு எவ்வாறு வெளிச்சம் தருகின்றன?
12 சங்கீதம் 119:105 குறிப்பிடுகிற விதமாக கடவுளுடைய வசனங்கள் நம் பாதைக்கும் வெளிச்சத்தைத் தந்து நமக்கு முன்னால் இருக்கும் வழிக்குப் பிரகாசமூட்டுகின்றன. துயர்தரும் உலக நிலைமைகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன, முடிவில் என்ன நடக்கும் என்பதையெல்லாம் பைபிள் விளக்குகிறது. எனவே, எதிர்காலம் நமக்குக் கேள்விக்குறியாக இல்லை. ஆம், இந்தப் பொல்லாத உலகின் “கடைசிநாட்களில்” வாழ்ந்து வருகிறோம் என்பதை நாம் புரிந்திருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) எதிர்காலத்தைப்பற்றி நாம் அறிந்திருப்பது இப்போது எப்படி வாழ்கிறோம் என்பதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்.”—2 பேதுரு 3:11, 12.
13. நம்முடைய காலங்களின் அவசரத்தன்மை நம் சிந்தனைகளையும் வாழ்க்கைமுறையையும் எவ்வாறு பாதிக்க வேண்டும்?
13 “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்” என்பதில் நமக்கிருக்கும் உறுதியான நம்பிக்கை நம் சிந்தனையிலும் வாழ்க்கைமுறையிலும் வெளிப்பட வேண்டும். (1 யோவான் 2:17) பைபிள் வழிகாட்டும் நியமங்களைக் கடைப்பிடிப்பது, நம்முடைய எதிர்கால இலக்குகளைப் பொருத்ததில் ஞானமான தீர்மானங்களைச் செய்வதற்கு உதவும். உதாரணமாக, இயேசு இவ்வாறு கூறினார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) அநேக இளைஞர்கள் முழுநேர ஊழியம் செய்வதன்மூலம் இயேசுவின் வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்கள்; அப்படிப்பட்டவர்கள் நம் மனமார்ந்த பாராட்டுக்குரியவர்கள்! மற்றவர்கள், குடும்பம் குடும்பமாகக்கூட, ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகமாகத் தேவைப்படுகிற நாடுகளுக்கு மனமுவந்து மாறிச் சென்றிருக்கிறார்கள்.
14. ஒரு கிறிஸ்தவ குடும்பத்தினர் ஊழியத்தில் அதிகளவு ஈடுபட என்ன செய்தார்கள்?
14 அமெரிக்காவிலிருந்த ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் உதாரணத்தைக் கவனியுங்கள். அந்தக் குடும்பத்திலிருந்த நான்கு பேரும் டொமினிகன் குடியரசிலுள்ள ஒரு சபையில் சேவை செய்வதற்காகக் குடிமாறிச் சென்றார்கள். அந்நகரில் 50,000 பேர் குடியிருக்கிறார்கள். அங்கே சுமார் 130 ராஜ்ய பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். ஆனால், ஏப்ரல் 12, 2006-ல் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களோ கிட்டத்தட்ட 1,300 பேர்! “அறுப்புக்கு விளைந்திருக்கிற” அந்தப் பகுதியில் ஐந்தே மாதங்களுக்குப் பிறகு, தகப்பன், தாய், மகன், மகள் என அந்த நான்கு பேரும் மொத்தம் 30 பைபிள் படிப்புகளை நடத்தி வந்தார்கள். (யோவான் 4:35) அந்தத் தகப்பன் இவ்வாறு கூறுகிறார்: “இந்தச் சபைக்கு உதவுவதற்காக 30 சகோதர சகோதரிகள் குடிமாறி வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 பேர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் பஹாமாஸ், கனடா, இத்தாலி, நியுஜிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கிறார்கள். ஊழியம் செய்வதற்காக அவர்கள் அதிக ஆர்வத்தோடு வருகிறார்கள்; அவர்களுடைய உற்சாகம் இங்குள்ள சகோதரர்களையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.”
15. கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதால் என்ன ஆசீர்வாதங்களை நீங்கள் அறுவடை செய்திருக்கிறீர்கள்?
15 தேவை அதிகம் இருக்கும் நாட்டில் சேவை செய்வதற்காக அங்கே குடிமாறிச் செல்லும் நிலையில் பலர் இல்லை என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால், அவ்வாறு மாறிச் செல்ல முடிந்தவர்கள்—அல்லது, அவ்வாறு செல்வதற்குத் தங்களுடைய சூழ்நிலைமைகளை மாற்றியமைத்துக் கொள்ள முடிந்தவர்கள்—ஊழியத்தின் இந்த அம்சத்தில் பங்குபெறும்போது பெருமளவு ஆசீர்வாதங்களை அறுவடை செய்வார்கள். நீங்கள் எங்கே சேவை செய்தாலும்சரி, யெகோவாவுக்கு முழு பலத்தோடு சேவை செய்யும்போது நிச்சயம் மகிழ்ச்சி காண்பீர்கள். கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தால், ‘இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிப்பதாக’ யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.—மல்கியா 3:10.
யெகோவாவின் வழிகாட்டுதலால் பயன் அடைதல்
16. கடவுளுடைய வசனங்களை நம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால் எவ்வாறு நன்மை அடைவோம்?
16 நாம் இதுவரை பார்த்த விதமாக, யெகோவாவின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு வழிகளில் நம்மை வழிநடத்துகின்றன. அவை நம் கால்களுக்குத் தீபமாய் இருக்கின்றன. அவை சரியான பாதையில் செல்வதற்கு உதவுவதோடு தீர்மானங்களைச் செய்கிற சமயத்தில் நம்மை வழிநடத்துகின்றன. அவை நம் பாதைக்கு வெளிச்சம் தருகின்றன; இதனால் எதிர்காலம் நமக்குப் பிரகாசமாகத் தெரிகிறது. இது, பேதுருவின் பின்வரும் அறிவுரையைப் பின்பற்ற நம்மைத் தூண்டுகிறது: “நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.”—1 பேதுரு 1:13.
17. பைபிளைப் படிப்பது கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்ற நமக்கு எவ்வாறு உதவும்?
17 யெகோவா வழிநடத்துதலைத் தருகிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், கேள்வி என்னவென்றால், நீங்கள் அதை ஏற்று நடப்பீர்களா? யெகோவா தரும் வழிநடத்துதலைப் புரிந்துகொள்வதற்கு பைபிளின் ஒரு பகுதியைத் தினந்தோறும் வாசிக்கத் தீர்மானமாயிருங்கள். வாசிக்கிறவற்றைத் தியானியுங்கள்; ஒவ்வொரு விஷயத்திலும் யெகோவாவின் சித்தத்தைப் பகுத்துணர முயலுங்கள்; வாசித்தவற்றை உங்கள் வாழ்க்கையில் எந்தெந்த அம்சங்களில் கடைப்பிடிக்க முடியும் என்பதைக் குறித்துச் சிந்தியுங்கள். (1 தீமோத்தேயு 4:15) பிறகு, தீர்மானங்கள் செய்யும்போது உங்கள் “பகுத்தறியும் திறனைப்” பயன்படுத்துங்கள்.—ரோமர் 12:1, NW.
18. கடவுளுடைய வார்த்தையை நம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால் எத்தகைய ஆசீர்வாதங்களைப் பெறுவோம்?
18 கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களை நம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால், அவை நமக்கு அறிவொளி தரும்; அதோடு, சரியான பாதையில் செல்வதற்குத் தீர்மானங்களைச் செய்யும்போது நமக்குத் தேவையான வழிநடத்துதலைத் தரும். பைபிளில் பதிவுசெய்யப்பட்ட யெகோவாவின் வசனங்கள் ‘பேதையை ஞானியாக்குகிறது’ என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம். (சங்கீதம் 19:7) பைபிளை நம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால், சுத்தமான மனசாட்சியையும், யெகோவாவைப் பிரியப்படுத்துவதால் கிடைக்கும் திருப்தியையும் பெறுவோம். (1 தீமோத்தேயு 1:18, 19) ஒவ்வொரு நாளும் கடவுளுடைய வசனங்களை நம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால், நித்திய ஜீவனை யெகோவா பரிசாக அளித்து நம்மை ஆசீர்வதிப்பார்.—யோவான் 17:3.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யெகோவா தேவனை நம் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது ஏன் முக்கியம்?
• கடவுளுடைய வசனங்கள் எப்படி நம் கால்களுக்குத் தீபமாய் இருக்கின்றன?
• கடவுளுடைய வசனங்கள் நம் பாதைக்கு எப்படி வெளிச்சமூட்டுகின்றன?
• பைபிளைப் படிப்பது கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்ற நமக்கு எவ்வாறு உதவும்?
[பக்கம் 15-ன் படம்]
சத்தியத்தில் இல்லாதவரோடு தோழமை கொள்வது எப்போது பிரச்சினைக்கு வழிநடத்தலாம்?
[பக்கம் 16-ன் படம்]
யெகோவாவின் சித்தத்தைச் செய்தவர்களே இயேசுவின் நெருங்கிய நண்பர்கள்
[பக்கம் 17-ன் படங்கள்]
கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதை நம் வாழ்க்கைமுறை காட்டுகிறதா?