தீத்து—‘உங்களுக்காகச் செய்யும் தொண்டில் உடனுழைப்பாளி’
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைகளில் சில சமயங்களில் பிரச்சினைகள் எழுந்தன. அவற்றைத் தீர்ப்பதற்கு தைரியமும் கீழ்ப்படிதலும் தேவைப்பட்டன. இது போன்ற சவாலை பல தடவை தீத்து வெற்றிகரமாக சமாளித்திருந்தார். பவுல் அப்போஸ்தலனோடு இந்த வேலையில் பங்கு கொண்ட இவர் எல்லாவற்றையும் யெகோவாவின் வழியில் செய்வதற்கு மற்றவர்களுக்கு உதவ ஊக்கமாக பிரயாசப்பட்டார். இதன் காரணமாகவே பவுல் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களிடம் தீத்து ‘உங்களுக்காகச் செய்யும் தொண்டில் உடனுழைப்பாளி’ என்று சொன்னார்.—2 கொரிந்தியர் 8:23, தமிழ் கத்தோலிக்க பைபிள்.
தீத்து யார்? பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் இவருடைய பங்கு என்ன? அவருடைய நடத்தையைப் பற்றி சிந்திப்பதால் நாம் எவ்வாறு பயனடையலாம்?
விருத்தசேதனம் பற்றிய விவாதம்
தீத்து விருத்தசேதனம் செய்யப்படாத கிரேக்கர். (கலாத்தியர் 2:3)a பவுல் அவரை, “பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரன்” என்றழைப்பதன் காரணமாக தீத்து அப்போஸ்தலனின் ஆவிக்குரிய குமாரர்களில் ஒருவராக இருந்திருக்கலாம். (தீத்து 1:1; 1 தீமோத்தேயு 1:2-ஐ ஒப்பிடுக.) விருத்தசேதனம் பற்றி எழுந்த கருத்துவேறுபாட்டைக் குறித்து கலந்தாராய்வதற்காக சுமார் பொ.ச. 49-ல் பவுலும் பர்னபாவும் சீரியாவைச் சேர்ந்த அந்தியோகியாவிலுள்ள மற்றவர்களும் எருசலேமுக்குச் சென்றபோது தீத்து அவர்களோடு இருந்தார்.—அப்போஸ்தலர் 15:1, 2; கலாத்தியர் 2:1.
விருத்தசேதனம் செய்யப்படாத புறவினத்தாரின் மதம் மாறுதல் பற்றியே எருசலேமில் விவாதிக்கப்பட்டது; எனவே, விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தாலும் சரி செய்யப்படாவிட்டாலும் சரி, யூதரும் யூதரல்லாதவரும் கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே தீத்துவை அவர்கள் அழைத்துச் சென்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக பரிசேயர்களாக இருந்தவர்கள் இப்பொழுது எருசலேம் சபையின் அங்கத்தினர்களாக இருந்தார்கள்; இவர்கள், மதம் மாறும் புறவினத்தார் விருத்தசேதனம் செய்துகொள்ளவேண்டும், நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வாதாடினார்கள். ஆனால் இதை எதிர்த்து குரல் எழுப்பப்பட்டது. தீத்துவையும் மற்ற புறவினத்தாரையும் விருத்தசேதனம் செய்யும்படி வற்புறுத்துவது இரட்சிப்பு நியாயப்பிரமாணத்தின் செயல்களினால்தான் வருகிறது, யெகோவாவின் தகுதியற்ற தயவினாலும் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைப்பதாலும் வருகிறதில்லை என்று சொல்வதற்கு சமமாக இருக்கும். புறவினத்தார் அல்லது புறஜாதி மக்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு இருந்த அத்தாட்சியையும்கூட மறுதலிப்பதற்கு இது சமமாக இருக்கும்.—அப்போஸ்தலர் 15:5-12.
கொரிந்துவுக்கு அனுப்பப்படுகிறார்
விருத்தசேதனம் பற்றிய விவாதம் தீர்க்கப்பட்டபின்பு, புறவினத்தாருக்கு பிரசங்கிக்க பவுலுக்கும் பர்னபாவுக்கும் முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில், ஏழ்மையில் இருந்தவர்களையும் மனதில் வைக்க அவர்கள் பிரயாசப்பட்டனர். (கலாத்தியர் 2:9, 10) ஆம், ஆறு வருடங்களுக்குப் பின்னர் தீத்துவைப் பற்றி ஏவப்பட்ட பதிவு குறிப்பிடுகிறது; அந்த சமயத்தில் அவர் பரிசுத்தவான்களுக்கு நிதி திரட்டுவதற்காக பவுலின் தூதுவராக கொரிந்துவில் இருந்தார். ஆனால் தீத்து இந்த வேலையை செய்துகொண்டிருந்தபோது, பதற்றம் நிரம்பிய மற்றொரு சூழ்நிலைமையை எதிர்ப்பட்டார்.
கொரிந்தியருக்கு பவுல் எழுதிய கடிதத்திலிருந்து முதலாவது ‘விபசாரக்காரனோடு கலந்திருக்கக்கூடாது’ என அவர்களுக்கு எழுதினார் என்று தெரிகிறது. மனந்திரும்பாமல் இருக்கும் விபசாரக்காரனை அவர்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடும்படி அவர்களுக்கு சொல்ல வேண்டியதாக இருந்தது. ஆம், பவுல் அவர்களுக்கு காரசாரமான ஒரு கடிதத்தை, “அதிகக் கண்ணீரோடே” எழுதினார். (1 கொரிந்தியர் 5:9-13; 2 கொரிந்தியர் 2:4) இதற்கிடையில், தேவையிலிருந்த யூதேய கிறிஸ்தவர்களுக்கு உதவ பணம் சேகரிப்பதற்கு தீத்து கொரிந்துவுக்கு அனுப்பப்பட்டார். பவுலின் கடிதத்திற்கு அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள் என்பதைக் கண்டுகொண்டு வருவதற்காகவும்கூட அவர் அனுப்பப்பட்டிருக்கலாம்.—2 கொரிந்தியர் 8:1-6.
பவுலின் புத்திமதியை கொரிந்தியர்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்? அதை அறிந்துகொள்ள பவுல் மிகவும் ஆர்வமுள்ளவராய் இருந்தார். எனவே முடிந்தவரை சீக்கிரத்தில் வந்து செய்தி சொல்லும்படி உத்தரவிட்டு தீத்துவை எபேசுவிலிருந்து மத்தியதரைக் கடல்வழியாக கொரிந்துவுக்கு அனுப்பிவைத்தார். கடற்பயணம் செய்யமுடியாத குளிர் காலத்துக்கு (ஒருவேளை நவம்பர் மத்தியில்) முன்பாக இந்த வேலை முடிந்துவிட்டால் தீத்து கப்பலிலோ அல்லது ஹெலஸ்பான்ட் (டார்டனெல்ஸ்) வழியாக நிலமார்க்கமாக சுற்றிக்கொண்டோ துரோவாவுக்குச் செல்வார். துரோவாவில் அவர்கள் சந்திக்கும்படி ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு சொன்ன காலத்துக்கு முன்பாகவே பவுல் வந்துசேர்ந்திருக்க வேண்டும், ஏனென்றால் வெள்ளித்தட்டான்கள் தூண்டிவிட்ட கலகத்தின் காரணமாக அவர் எதிர்பார்த்ததைவிட சீக்கிரத்திலேயே எபேசுவிலிருந்து புறப்பட்டுவிட்டார். துரோவாவிலே கவலையோடு காத்திருந்த பவுல் தீத்து கடல்மார்க்கமாய் வரமாட்டார் என்று உணர்ந்தார். ஆகவே, வழியில் அவரை சந்திக்கலாம் என்ற நம்பிக்கையோடு தரைமார்க்கமாக பயணத்தைத் தொடங்கினார். ஐரோப்பிய மண்ணில் அடியெடுத்து வைத்த பின்பு, வியா எக்னாடியா வழியாகச் சென்று கடைசியாக தீத்துவை மக்கெதோனியாவில் சந்தித்தார். கொரிந்துவிலிருந்து பெற்றுக்கொண்ட செய்தி பவுலுக்கு நிம்மதியையும் மன மகிழ்ச்சியையும் கொடுத்தது. அப்போஸ்தலனின் புத்திமதிக்கு சபை செவிசாய்த்து செயல்பட்டிருந்தது.—2 கொரிந்தியர் 2:12, 13; 7:5-7.
பவுல் தான் அனுப்பிய தூதுவர் என்ன விதமான வரவேற்பைப் பெற்றுக்கொள்வாரோ என்பதாக கவலையாக இருந்தபோதிலும் சொன்ன வேலையை செய்து முடிக்க தீத்துவுக்கு கடவுள் உதவிசெய்தார். “பயத்தோடும் நடுக்கத்தோடும்” தீத்துவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. (2 கொரிந்தியர் 7:8-15) விரிவுரையாளர் டபிள்யூ. டி. தாமஸ் என்பவரின் வார்த்தைகளில் சொன்னால், “பவுலின் கடுமையான வார்த்தைகளின் வலிமையைக் குறைத்துவிடாமல், அவர்களுடைய ஆவிக்குரிய நலனை மனதில் வைத்தே பவுல் அவ்வாறு பேசியிருக்கிறார் என்பதை [தீத்து] திறமையாகவும் சாதுரியமாகவும் கொரிந்தியர்களிடம் எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.” இதெல்லாம் நடந்து கொண்டிருக்கையில், கொரிந்திய கிறிஸ்தவர்களின் கீழ்ப்படிதலுள்ள மனப்பான்மையாலும் அவர்கள் செய்த பயனுள்ள மாற்றங்களின் காரணமாகவும் தீத்துவுக்கு அவர்கள் மேலிருந்த பாசம் அதிகரித்தது. பாராட்டத்தக்க அவர்களுடைய மனநிலை அவருக்கு உற்சாகமளித்தது.
யூதேயாவிலிருந்த பரிசுத்தவான்களுக்கு பணம் திரட்டுவதை ஒழுங்குபடுத்துவதற்காக கொரிந்துவுக்கு தீத்து சென்றிருந்தாரே, போன காரியம் என்னவாயிற்று? 2 கொரிந்தியரில் காணப்படும் தகவலின்படி அதிலும் அவருக்கு வெற்றியே. இந்தக் கடிதம் தீத்துவும் பவுலும் சந்தித்துக்கொண்ட பிறகு உடனடியாக மக்கெதோனியாவிலிருந்து பொ.ச. 55-ன் இலையுதிர் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். நன்கொடை திரட்டுவதைத் தொடங்கிவைத்த தீத்துவே அதை முடித்து வைப்பதற்காக, பெயர் சொல்லப்படாத இரண்டு உதவியாளர்களோடு இப்போது திரும்ப அவரை அனுப்புவதாய் பவுல் எழுதினார். கொரிந்தியர்களிடம் தீத்துவுக்கு உண்மையான அக்கறை இருந்தபடியால் திரும்ப போவதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டார். தீத்து, கொரிந்துவுக்கு திரும்பச் சென்றபோது ஆவியின் ஏவுதலால் பவுல் அவர்களுக்கு எழுதிய இரண்டாவது நிருபத்தைக் கொண்டு சென்றார்.—2 கொரிந்தியர் 8:6, 17, 18, 22.
தீத்து நல்ல ஒழுங்கமைப்பாளராக இருந்தது மட்டுமல்லாமல், கடினமான சூழ்நிலைகளில் மற்றவர்களை எளிதில் புண்படுத்திவிடக்கூடிய பொறுப்புகளை ஜாக்கிரதையாய் நிறைவேற்றுவதிலும் திறமையுள்ளவராக இருந்தார். அவர் தைரியமுள்ளவர், முதிர்ச்சி வாய்ந்தவர், மனவுறுதி படைத்தவர். கொரிந்துவின் ‘மகா பிரதான அப்போஸ்தலர்களினால்’ அந்தச் சமயத்தில் ஏற்பட்ட சவால்களை சமாளிப்பதற்கு சரியான ஆள் தீத்துதான் என்று பவுல் யோசித்திருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 11:5) மற்றொரு கடினமான பொறுப்பு ஒப்படைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது; அப்போது இது உண்மை என்பது மேலும் ஊர்ஜிதமாகிறது.
கிரேத்தா தீவில்
பவுல், தீத்துவுக்கு சுமார் பொ.ச. 61-க்கும் 64-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதியபோது அவர் மத்தியதரைக் கடலில் உள்ள கிரேத்தா தீவில் ஊழியஞ்செய்து கொண்டிருந்தார். “குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும்,” “பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும்” பவுல் அவரை அங்கு விட்டு வந்திருந்தார். பொதுவாக கிரேத்தா தீவு மக்கள் “ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்” என்பதற்கு பெயர் போனவர்களாய் இருந்தார்கள். ஆகவே கிரேத்தாவில் தீத்து மறுபடியுமாக தைரியமாகவும் உறுதியாகவும் செயல்பட வேண்டியதாக இருக்கும். (தீத்து 1:5, 10-12) இது மிகவும் பொறுப்புள்ள வேலை, ஏனென்றால் இந்த வேலையை வைத்துத்தான் அந்தத் தீவினுடைய கிறிஸ்தவத்தின் எதிர்காலமே அடங்கியிருந்தது. ஆவியின் ஏவுதலினால், கண்காணிகளாக விரும்புகிறவர்களிடம் குறிப்பாக எதைப் பார்க்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் பவுல் தீத்துவுக்கு உதவிசெய்தார். இந்தத் தகுதிகளின் அடிப்படையில்தான் கிறிஸ்தவ மூப்பர்கள் இன்றும் நியமிக்கப்படுகிறார்கள்.
தீத்து கிரேத்தாவிலிருந்து எப்போது புறப்பட்டார் என்பதை வேதாகமம் கூறுவதில்லை. இன்ன சமயம் என சொல்லாமல் தங்கள் பயணத்தின்போது அங்கே தங்கிவிட்டுப் போக இருந்த சேனாவையும் அப்பொல்லோவையும் கவனித்து அனுப்பும்படி தீத்துவை பவுல் கேட்டுக்கொள்வதால் அங்கு அவர் நீண்ட நாட்கள் இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. ஆனால் தீத்து அந்தத் தீவில் இன்னும் அதிக காலம் தங்கப்போவதில்லை. பவுல் அங்கே அர்த்தெமாவை அல்லது தீகுக்குவை அனுப்ப திட்டமிட்டிருந்தார். கிரீஸுக்கு வடமேற்கில் அமைந்திருந்த நிக்கொப்போலி என்ற பிரபலமான பட்டணத்தில் தீத்து அப்போஸ்தலர்களைச் சந்திக்க இருந்தார்.—தீத்து 3:12, 13.
தீத்துவைப் பற்றி கடைசியாக பைபிள் சுருக்கமாக குறிப்பிடுகையில், சுமார் பொ.ச. 65-ல் பவுல் அவரை அடுத்த வேலைக்காக அனுப்பி வைப்பதை நாம் தெரிந்துகொள்கிறோம். அவர் தல்மாத்தியா நாட்டிற்கு, தற்கால குரோவேஷியாவில் ஏட்ரியாடிக் கடலுக்கு கிழக்கே உள்ள ஒரு பகுதிக்குச் சென்றார். (2 தீமோத்தேயு 4:10) தீத்து அங்கு எதற்காக அனுப்பப்பட்டார் என்று நமக்குச் சொல்லப்படவில்லை, ஆனால் சபையின் காரியங்களை ஒழுங்குபடுத்துவதற்காகவும் மிஷனரி வேலையில் ஈடுபடுவதற்காகவும் அவர் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அப்படியானால், கிரேத்தாவில் செய்தது போன்ற ஒரு வேலையை தீத்து இங்கு செய்வார்.
தீத்துவைப் போன்ற முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ கண்காணிகளுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! வேதாகம நியமங்களை அவர்கள் தெளிவாக புரிந்துகொண்டிருப்பதும், தைரியமாக அவற்றை அவர்கள் பொருத்துவதும் சபையின் ஆவிக்குரியத்தன்மையைப் பாதுகாக்க உதவிசெய்கிறது. அவர்களுடைய விசுவாசத்தை நாம் பின்பற்றி நம்முடைய உடன் விசுவாசிகளின் ஆவிக்குரிய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதன் மூலம் தீத்துவைப் போல இருப்போமாக.—எபிரெயர் 13:7.
[அடிக்குறிப்புகள்]
a கலாத்தியர் 2:3 தீத்துவை ஒரு கிரேக்கன் (Helʹlen) என்பதாக வருணிக்கிறது. இது அவர் பிறப்பின்படி கிரேக்கராக இருந்தார் என்பதை அர்த்தப்படுத்தக்கூடும். ஆனால் மொழியிலும் பண்பாட்டிலும் கிரேக்கராக இருந்த கிரேக்கரல்லாதவர்களைக் குறிப்பிடுவதற்கு ஒரு சில கிரேக்க எழுத்தாளர்கள் இந்தப் பன்மை வடிவத்தை (Helʹle·nes) பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. தீத்து அந்தக் கருத்தில் கிரேக்கராக இருந்திருக்கலாம்.
[பக்கம் 31-ன் படம்]
தீத்து கொரிந்துவிலும் மற்ற இடங்களிலும் இருந்த கிறிஸ்தவர்களுக்குச் செய்த தொண்டில் தைரியமுள்ள ஒரு உடனுழைப்பாளி