தெய்வீக போதனை வெற்றிசிறக்கிறது
“உங்களுடைய கண்கள் உங்கள் மகத்தான போதகரைக் காணும் கண்களாகவேண்டும். ‘ஜனங்களே, வழி இதுவே, இதிலே நடங்கள்’ என்று உங்களுக்குப் பின்னால் சொல்லப்படுகிற வார்த்தையை உங்கள் காதுகளே கேட்கும்.”—ஏசாயா 30:20, 21, NW.
1. யெகோவாவின் போதனையை சரியாகவே தெய்வீக போதனை என்று ஏன் அழைக்கலாம்?
யெகோவா தேவன் எவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த போதனையின் ஊற்றுமூலராய் இருக்கிறார். அவர் பேசும்போது, விசேஷமாக தம்முடைய பரிசுத்த வார்த்தையின்மூலம் பேசும்போது நாம் செவிகொடுப்போமாகில், அவர் நம்முடைய மகத்தான போதகராக இருப்பார். (ஏசாயா 30:20) எபிரெய பைபிள் வசனம் அவரை “தெய்வீகமானவர்,” என்றுங்கூட அழைக்கிறது. (சங்கீதம் 50:1, NW) ஆகவே, யெகோவாவின் அறிவுரை தெய்வீக போதனையாய் இருக்கிறது.
2. கடவுள் ஒருவரே ஞானமுள்ளவர் என்பது எந்தக் கருத்தில் உண்மையாயிருக்கிறது?
2 இந்த உலகம் அதனுடைய அநேக கல்வி ஸ்தாபனங்களைக்குறித்து பெருமை கொள்கிறது, ஆனால் அவற்றில் ஒன்றுமே தெய்வீக போதனையை அளிப்பதில்லை. காலாகாலமாக மனிதவர்க்கம் திரட்டிய உலகப்பிரகாரமான எல்லா ஞானத்தையும், யெகோவாவின் எல்லையற்ற ஞானத்தின் அடிப்படையிலான தெய்வீக போதனையோடு ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை. கடவுள் ஒருவரே ஞானமுள்ளவர் என்று ரோமர் 16:27 சொல்கிறது, யெகோவா மாத்திரமே முழுமையான ஞானத்தையுடையவர் என்ற கருத்தில் இது உண்மையாய் இருக்கிறது.
3. எக்காலத்திலும் பூமியில் சஞ்சரித்தவர்களிலேயே இயேசு கிறிஸ்து ஏன் மிகப் பெரிய போதகராக இருக்கிறார்?
3 கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, ஞானத்தின் பரிபூரண மாதிரியாகவும் எக்காலத்திலும் பூமியில் சஞ்சரித்தவர்களிலேயே மிகப் பெரிய போதகராகவும் இருக்கிறார். ஆச்சரியமேயில்லை! யுகங்களாக பரலோகத்தில் யெகோவா அவருடைய போதகராய் இருந்துவந்தார். உண்மையில், முதல் சிருஷ்டிப்பாகிய தம்முடைய ஒரேபேறான குமாரனுக்கு கடவுள் போதிக்கத் தொடங்கியபோது தெய்வீக போதனை ஆரம்பமானது. அதனால் இயேசு இவ்வாறு சொல்ல முடிந்தது: “என் பிதா எனக்கு போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்.” (யோவான் 8:28; நீதிமொழிகள் 8:22, 30) பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள கிறிஸ்துவின் சொந்த வார்த்தைகளே நம்முடைய தெய்வீக போதனையின் அறிவோடு அதிகத்தைக் கூட்டுகிறது. இயேசு எதைக் கற்பித்தாரோ அதைக் கற்பிப்பதன்மூலம், அபிஷேகம்செய்யப்பட்டவர்கள் தங்களுடைய மகத்தான போதகருக்குக் கீழ்ப்படிகிறார்கள்; “கடவுளுடைய மிகப் பல்வகைப்பட்ட ஞானத்தை” சபையின் மூலமாய் தெரியப்படுத்துவதே அவருடைய சித்தம்.—எபேசியர் 3:10, 11, NW; 5:1; லூக்கா 6:40.
ஞானத்திற்கான நாட்டம்
4. மூளையின் செயல்திறத்தைக் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
4 தெய்வீக போதனையின் விளைவாக வருகிற ஞானத்தைப் பெற்றுக்கொள்வதானது, கடவுளால் அளிக்கப்பட்ட சிந்திக்கும் திறமைகளை ஊக்கத்துடன் பயன்படுத்துவதைத் தேவைப்படுத்துகிறது. இது சாத்தியமானதே, ஏனென்றால் மனித மூளை பேராற்றல்மிக்க உள்ளார்ந்த சக்தியைப் பெற்றிருக்கிறது. வியக்கத்தக்க இயந்திரம் (The Incredible Machine) என்ற புத்தகம் சொல்கிறது: “ஏறக்குறைய எல்லையற்ற சிக்கலும் வளைந்துகொடுக்குந்தன்மையும் வாய்ந்த மனித மூளையை—அதன் சிக்கலான, மின்காந்த இரசாயனக் குறியீட்டுக் குறிகளின் நிர்ணயிக்கப்பட்ட அமைப்புமுறைமூலம் சாத்தியமாக்குகிற தன்மைகளை—ஒப்பிடுகையில், நாம் கற்பனைசெய்து பார்க்கக்கூடிய மிக அதிக நுணுக்கம் வாய்ந்த கம்ப்யூட்டர்களுங்கூட செயல்திறனற்றவையாக இருக்கின்றன. . . . எந்தக் கணநேரத்திலும் உங்களுடைய மூளையினூடாகப் பளிச்சென ஒளிவிட்டுச்செல்லும் லட்சக்கணக்கான குறியீட்டுக் குறிகள் அசாதாரண பளுவானத் தகவலைத் தாங்கிச்செல்கின்றன. உங்களுடைய உடலின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழ்நிலைமைகளைப் பற்றிய செய்திகளை அவை கொண்டுவருகின்றன: உங்களுடைய கால் பெருவிரலிலுள்ள சுளுக்கு, அல்லது காபியின் வாசனை, அல்லது ஒரு நண்பனுடைய வேடிக்கையான குறிப்பைப்பற்றிய செய்திகளைக் கொண்டுவருகின்றன. மற்ற குறியீட்டுக் குறிகள் தகவலைச் செயற்படுத்தி பகுத்தாராய்கிறபோது, குறிப்பிட்ட சில உணர்ச்சிகளை, நினைவுகளை, சிந்தனைகளை, அல்லது தீர்மானத்திற்கு வழிநடத்துகிற திட்டங்களை உண்டுபண்ணுகின்றன. என்ன செய்யவேண்டும் என்பதை உங்களுடைய மூளையிலிருந்து வருகிற குறியீட்டுக் குறிகள் ஏறக்குறைய உடனடியாகவே உங்களுடைய உடலிலுள்ள மற்ற பாகங்களுக்குச் சொல்கின்றன: உங்களுடைய கால் பெருவிரலைப் பக்கவாட்டில் அசையுங்கள், காபியை அருந்துங்கள், சிரியுங்கள், அல்லது ஒருவேளை தமாஷான ஒரு பதிலைக் கொடுங்கள். இதற்கிடையில் உங்களுடைய மூளை, சுவாசித்தல், இரத்த வேதியியல், வெப்பநிலை, நீங்கள் உணராமலிருக்கிற மற்ற மிக முக்கியமான வெளிப்புற வேலைகள் ஆகியவற்றையும்கூட கண்காணித்துவருகிறது. உங்களுடைய சூழ்நிலைமையில் தொடர்ச்சியான மாற்றங்கள் இருக்கிறபோதிலும், உங்களுடைய உடல் உறுதியாகவும் அமைதியாகவும் இயங்குவதைக் காத்துக்கொள்வதற்கு அது கட்டளைகளை அனுப்புகிறது. எதிர்காலத் தேவைகளுக்காக அது ஆயத்தப்படுத்தவும் செய்கிறது.”—பக்கம் 326.
5. வேதப்பூர்வமான கருத்தில், ஞானம் என்றால் என்ன?
5 சந்தேகமில்லாமல் மனித மூளை வியக்கத்தக்கத் திறனைப் பெற்றிருக்கிறபோதிலும், எவ்வாறு நாம் மனதை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்த முடியும்? மொழி, சரித்திரம், அறிவியல், அல்லது மத வேறுபாடுகளை ஒத்துப்பார்த்தல் ஆகியவற்றை மாத்திரமே கடினமாய் படிப்பதில் நம்மை மூழ்கியிருக்கச்செய்வதன் மூலமல்ல. பிரதானமாக நம்முடைய சிந்திக்கும் திறமைகளைத் தெய்வீக போதனையைப் பெறுவதற்கு நாம் பயன்படுத்தவேண்டும். அது மட்டுமே உண்மையான ஞானத்தில் விளைவடைகிறது. ஆனால் உண்மையான ஞானம் என்றால் என்ன? வேதப்பூர்வமான கருத்தில், திருத்தமான அறிவு மற்றும் உண்மையான புரிந்துகொள்ளுதல் அடிப்படையிலான நல்ல நிதானிப்புக்கு ஞானம் முக்கியத்துவம் கொடுக்கிறது. ஞானமானது, பிரச்னைகளை வெற்றிகரமாக தீர்க்கும்பொருட்டு அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பயன்படுத்துவதற்கு, ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்கு அல்லது தடுப்பதற்கு, மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு, மற்றும் இலக்குகளை முயன்றடைவதற்கு நமக்கு உதவியளிக்கிறது. அக்கறைக்குரிய விதத்தில், நாம் நிச்சயமாகவே தவிர்க்க விரும்புகிற போக்குகளாகிய முட்டாள்தனம் மற்றும் மதிகேட்டிலிருந்து ஞானத்தை பைபிள் வேறுபடுத்திக் காட்டுகிறது.—உபாகமம் 32:6; நீதிமொழிகள் 11:29; பிரசங்கி 6:8.
யெகோவாவின் தலைசிறந்த பாடநூல்
6. நாம் உண்மையான ஞானத்தை வெளிக்காட்டவேண்டுமானால், எதை நன்கு பயன்படுத்தவேண்டும்?
6 நம்மைச் சுற்றிலும் ஏராளமான அளவு உலகப்பிரகாரமான ஞானம் இருக்கிறது. (1 கொரிந்தியர் 3:18, 19) இந்த உலகம் லட்சக்கணக்கான புத்தகங்களடங்கிய பள்ளிகளாலும் நூலகங்களாலும் நிறைந்திருக்கிறது! இவற்றில் அநேகமானவை மொழி, கணக்கியல், அறிவியல், அறிவின் மற்ற துறைகள் ஆகியவற்றில் போதனையளிக்கிற பாடநூல்களாய் இருக்கின்றன. ஆனால் மகத்தான போதகர், மற்ற அனைத்து நூல்களையும்விட மேம்பட்டு விளங்குகிற பாடநூலை—தம்முடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளை—அளித்திருக்கிறார். (2 தீமோத்தேயு 3:16, 17) சரித்திரம், புவியியல் மற்றும் தாவரவியல் போன்ற பொருள்களைக் குறிப்பிடும்போது மட்டுமல்லாமல், எதிர்காலத்தை முன்னறிவிக்கும்போதும்கூட அது திருத்தமாய் இருக்கிறது. மேலுமாக, மிக மகிழ்ச்சியான, அதிக பலன்தரத்தக்க வாழ்க்கையை இப்பொழுதே வாழ்வதற்கு அது நமக்கு உதவிசெய்கிறது. நிச்சயமாகவே, உலகப்பிரகாரமான பள்ளியிலுள்ள மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை உபயோகப்படுத்துவது அவசியமானதுபோல, “யெகோவாவினால் போதிக்கப்பட்ட”வர்களாக உண்மையான ஞானத்தை வெளிக்காட்டவேண்டுமானால், நாம் கடவுளுடைய தலைசிறந்த பாடநூலை நன்கு அறிந்தவர்களாயும் பயன்படுத்துகிறவர்களாயும் இருக்கவேண்டும்.—யோவான் 6:45, NW.
7 என்றபோதிலும், பைபிளை அறிவாற்றல் சார்ந்த வகையில் அறிந்திருப்பது, உண்மையான ஞானத்தையும் தெய்வீக போதனைக்கு இசைவாக நடப்பதையும் போன்றதல்ல. இதை விளக்குவதற்கு: பொ.ச. 17-வது நூற்றாண்டில், கொர்நலியஸ் வாண்டர்ஸ்டேன் என்று பெயரிடப்பட்ட ஒரு கத்தோலிக்க மனிதர், ஒரு ஜெஸ்யுட்டாக ஆவதற்கு விரும்பினார், ஆனால் அவர் மிகவும் குள்ளமானவராய் இருந்ததால் விலக்கப்பட்டார். மான்ஃபிரெட் பார்டல் என்பவர் ஜெஸ்யுட்ஸ்—சரித்திரம் மற்றும் இயேசு சங்கத்தின் புராணக்கதை (The Jesuits—History & Legend of the Society of Jesus) என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு சொல்கிறார்: “முழு பைபிளையும் மனப்பாடமாய் ஒப்பிப்பதற்கு அவர் கற்றுக்கொள்வார் என்ற நிபந்தனைக்குரிய ஒப்பந்தத்தோடே, உயரம் தேவையை தள்ளுபடிசெய்வதற்கு அவர்கள் தயாராய் இருந்தனர் என்று அந்தக் குழு வாண்டர்ஸ்டேனுக்கு அறிவித்தது. சிறிது எல்லைமீறிய இந்த வேண்டுகோளுக்கு வாண்டர்ஸ்டேன் ஒத்துப்போயிருக்கவில்லை என்றால், இந்தக் கதை சொல்லப்படுவதற்குத் தகுதியுடையதாய் இருக்காது.” முழு பைபிளையும் மனப்பாடம் செய்வதற்கு அது என்னே முயற்சியை எடுத்தது! என்றபோதிலும், கடவுளுடைய வார்த்தையை மனப்பாடம் செய்வதைப் பார்க்கிலும் அதைப் புரிந்துகொள்வது நிச்சயமாகவே மிக அதிக முக்கியமானது.
8. தெய்வீக போதனையிலிருந்து நன்மையடைவதற்கும் உண்மையான ஞானத்தை வெளிக்காட்டுவதற்கும் எது நமக்கு உதவிசெய்யும்?
8 தெய்வீக போதனையிலிருந்து முழுமையாக நன்மையடையவும் உண்மையான ஞானத்தை வெளிக்காட்டவும் வேண்டுமானால், வேதவாக்கியங்களின் திருத்தமான அறிவு தேவை. நாம் யெகோவாவின் பரிசுத்த ஆவியினால், அல்லது செயல்நடப்பிக்கும் சக்தியினால் வழிநடத்தப்படவும் வேண்டும். ஆழமான சத்தியங்களாகிய, “தேவனுடைய ஆழங்களை” கற்றுக்கொள்ள நமக்கு இது உதவிசெய்யும். (1 கொரிந்தியர் 2:10) ஆகவே, நாம் ஊக்கமாக யெகோவாவின் தலைசிறந்த பாடநூலைப் படித்து பரிசுத்த ஆவியின் மூலமான அவருடைய வழிநடத்தலுக்காக ஜெபிப்போமாக. நீதிமொழிகள் 2:1-6-க்கு இசைவாக, ஞானத்திற்கு கவனம்செலுத்தி, புத்திக்கு இருதயத்தைச் சாய்த்து, புரிந்துகொள்ளுதலுக்காக கூப்பிடுவோமாக. மறைவான பொக்கிஷங்களுக்காகத் தேடிக்கொண்டிருப்பதுபோல நாம் இதைச் செய்யவேண்டியது அவசியம், ஏனென்றால் அப்பொழுது மட்டுமே நாம் ‘யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் இன்னதென்று உணர்ந்து கடவுளுடைய அறிவு இன்னதென்று கண்டறிவோம்.’ தெய்வீக போதனையின் வெற்றிசிறத்தல்கள் மற்றும் நன்மைகள் சிலவற்றைச் சிந்திப்பது கடவுளால் கொடுக்கப்பட்ட ஞானத்திற்கான நம்முடைய போற்றுதலை உயர்த்தும்.
படிப்படியானப் புரிந்துகொள்ளுதல்
9, 10. ஆதியாகமம் 3:15-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள பிரகாரம், கடவுள் என்ன சொன்னார், அந்த வார்த்தைகளின் சரியான புரிந்துகொள்ளுதல் என்ன?
9 யெகோவாவின் மக்களுக்கு வேதவாக்கியங்களைப் பற்றிய ஒரு படிப்படியானப் புரிந்துகொள்ளுதலை அளிப்பதன்மூலம் தெய்வீக போதனை வெற்றிசிறக்கிறது. உதாரணமாக, ஏதேனில் சர்ப்பத்தின் மூலம் பேசியவனும், விலக்கப்பட்ட கனியை புசிப்பதற்கான தண்டனை மரணம் என்று கடவுள் சொன்னபோது அவர் பொய் சொன்னார் என்று குற்றம்சாட்டியவனும் பிசாசாகிய சாத்தானே என்று நாம் கற்றிருக்கிறோம். இருப்பினும், யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படியாமை மனித இனத்தின்மீது நிச்சயமாகவே மரணத்தைக் கொண்டுவந்தது என்பதை நாம் பார்க்கிறோம். (ஆதியாகமம் 3:1-6; ரோமர் 5:12) என்றபோதிலும் சர்ப்பத்தினிடம், அதாவது சாத்தானிடம் கடவுள் சொன்னபோது, அவர் மனிதவர்க்கத்திற்கு நம்பிக்கையைக் கொடுத்தார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”—ஆதியாகமம் 3:15.
10 தெய்வீக போதனையின்மூலம் படிப்படியாய் வெளிப்படுத்தப்பட்ட ஓர் இரகசியம் அந்த வார்த்தைகளில் அடங்கியிருந்தது. பைபிளின் மிக முக்கியமான பொருள், ராஜ்ய ஆளுகைக்கு சட்டப்பூர்வமான உரிமையைப் பெற்றிருக்கிற, ஆபிரகாமின் சந்ததியும் தாவீதின் சந்ததியுமாகிய அந்த வித்தின்மூலம் தம்முடைய அரசாட்சியை நியாயநிரூபணம் செய்வதே என்பதை யெகோவா தம்முடைய மக்களுக்குப் போதித்திருக்கிறார். (ஆதியாகமம் 22:15-18; 2 சாமுவேல் 7:12, 13; எசேக்கியேல் 21:25-27) இயேசு கிறிஸ்துவே கடவுளுடைய சர்வலோக அமைப்பாகிய “ஸ்திரீ”யின் பிரதான வித்து என்று நம்முடைய மகத்தான போதகர் நமக்குப் போதித்திருக்கிறார். (கலாத்தியர் 3:16) அவர்மீது சாத்தான் கொண்டுவந்த எல்லா சோதனையின் மத்தியிலும்—அந்த வித்துவின் குதிங்கால் நசுக்கப்படுதலாகிய மரணம் வரையாகவும்கூட—இயேசு உத்தமத்தைக் காத்துக்கொண்டார். மனிதவர்க்கத்திலிருந்து வந்த ராஜ்ய உடன் சுதந்தரவாளிகளாகிய 1,44,000 பேர், “பழைய பாம்பாகிய” சாத்தானின் தலையை நசுக்குவதில் கிறிஸ்துவோடு சேர்ந்துகொள்வர் என்பதையும்கூட நாம் கற்றிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 14:1-4; 20:2; ரோமர் 16:20; கலாத்தியர் 3:29; எபேசியர் 3:4-6) கடவுளுடைய வார்த்தையின் இப்படிப்பட்ட அறிவை நாம் எவ்வளவாய் போற்றுகிறோம்!
கடவுளுடைய அதிசயிக்கத்தக்க ஒளியினிடத்திற்குள்
11. மக்களை ஆவிக்குரிய ஒளியினிடத்திற்குள் கொண்டுவருவதன்மூலம் தெய்வீக போதனை வெற்றிசிறக்கிறது என்று ஏன் சொல்லப்படலாம்?
11 மக்களை ஆவிக்குரிய ஒளியினிடத்திற்குள் கொண்டுவருவதன் மூலம் தெய்வீக போதனை வெற்றிசிறக்கிறது. அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் 1 பேதுரு 2:9-ன் நிறைவேற்றமாக அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கின்றனர்: “நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” இன்று கடவுளால் கொடுக்கப்பட்ட ஒளியானது பரதீஸிய பூமியின்மீது என்றும் வாழும் நம்பிக்கைகொண்டிருக்கிற ‘திரளான கூட்டத்தினராலும்’ அனுபவிக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 7:9; லூக்கா 23:43) கடவுள் தம்முடைய மக்களுக்கு போதிக்கிறபடியால், நீதிமொழிகள் 4:18 உண்மை என்று நிரூபிக்கிறது: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.” இலக்கணம், சரித்திரம் அல்லது வேறொரு பாடத்தை மாணவர்கள் படிக்கும்போது ஓர் ஆசிரியரின் சிறந்த உதவியின் காரணமாக அவர்கள் முன்னேற்றம் செய்கிறதுபோல, இந்தப் படிப்படியாக கற்றுக்கொள்ளுகிற முறையானது தெய்வீக போதனையைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலைத் தெளிவாக்குகிறது.
12, 13. கோட்பாடு சம்பந்தமான எந்த ஆபத்துகளுக்கு எதிராக தெய்வீக போதனை யெகோவாவின் மக்களைப் பாதுகாத்திருக்கிறது?
12 தெய்வீக போதனையின் மற்றொரு வெற்றிசிறத்தலானது, அதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்பவர்களை “பிசாசுகளின் உபதேசங்”களிலிருந்து அது பாதுகாக்கிறது. (1 தீமோத்தேயு 4:1) மறுபட்சத்தில், கிறிஸ்தவமண்டலத்தைப் பாருங்கள்! 1878-ல், ரோமன் கத்தோலிக்க சமயகுருவாகிய ஜான் ஹென்றி நியூமேன் இவ்வாறு எழுதினார்: “தீமையின் தொற்றுநோயை தடுத்து நிறுத்துவதற்கும், சுவிசேஷ உபயோகத்திற்கு பேய் வழிபாட்டு பொருட்கள் மற்றும் அதோடு சம்பந்தப்பட்டவற்றை உருமாற்றுவதற்கும் கிறிஸ்தவத்தின் சக்தியில் நம்பிக்கை வைத்து, . . . சமயம் வாய்த்தால், ஏற்றுக்கொள்வதற்கு, அல்லது பின்பற்றுவதற்கு, அல்லது பொதுமக்களின் தற்போதைய சடங்குகள், பழக்கவழக்கங்கள், அதோடுகூட கல்விகற்ற வகுப்பினரின் தத்துவத்தை ஒப்புதலளிப்பதற்கு ஆரம்ப காலங்களிலிருந்தே சர்ச்சின் ஆட்சியாளர்கள் தயார்செய்யப்பட்டனர்.” புனித நீர், சமய குருமாருக்குரிய அங்கிகள், சொரூபங்கள் போன்ற இப்படிப்பட்ட காரியங்கள் “அனைத்தும் புறமத ஆரம்பத்தைக் கொண்டிருந்தன, மேலும் சர்ச்சுக்குள் ஏற்றுக்கொள்வதன் மூலம் புனிதப்படுத்தப்பட்டன,” என்று நியூமேன் தொடர்ந்து சொன்னார். தெய்வீக போதனை இப்படிப்பட்ட விசுவாசத் துரோகத்திலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்காக கடவுளுடைய மக்கள் உண்மையில் நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர். அது எல்லா விதமான பேய்க்கொள்கையின்மீதும் வெற்றிகொள்கிறது.—அப்போஸ்தலர் 19:20.
13 தெய்வீக போதனை எல்லா விதத்திலும் மதசம்பந்தமான பிழையின்மீது வெற்றிசிறக்கிறது. உதாரணமாக, கடவுளால் போதிக்கப்பட்டவர்களாக, நாம் திரித்துவத்தை நம்புவதில்லை. ஆனால் யெகோவாவே உன்னதர், இயேசு அவருடைய குமாரன், பரிசுத்த ஆவி கடவுளுடைய செயல்நடப்பிக்கும் சக்தியென ஏற்றுக்கொள்கிறோம். நாம் எரிநரகத்துக்குப் பயப்படுவதில்லை, ஏனென்றால் பைபிளில் சொல்லப்பட்ட நரகம் என்பது மனிதவர்க்கத்தின் பொதுவான பிரேதக்குழி என்று நாம் தெளிவாக உணருகிறோம். மேலும் பொய் மதவாதிகள் மனித ஆத்துமா சாவாமையுள்ளது என்று சொல்லுகிறபோதிலும், மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். தெய்வீக போதனையின் மூலம் பெற்ற சத்தியங்களின் இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றிருப்பது என்னே ஓர் ஆசீர்வாதம்!—யோவான் 8:31, 32; வெளிப்படுத்துதல் 18:2, 4, 5.
14. கடவுளுடைய ஊழியர்கள் ஆவிக்குரிய ஒளியில் ஏன் தொடர்ந்து நடக்கமுடியும்?
14 தெய்வீக போதனை மதசம்பந்தமான பிழையின்மீது வெற்றிசிறப்பதால், கடவுளுடைய ஊழியர்கள் ஆவிக்குரிய ஒளியில் நடப்பதற்கு அது உதவுகிறது. இதன் விளைவாக, அவர்கள் தங்களுக்குப் பின்னால் சொல்லப்படுகிற ஒரு வார்த்தையை கேட்கிறார்கள்: “ஜனங்களே, வழி இதுவே, இதிலே நடங்கள்.” (ஏசாயா 30:21, NW) கடவுளுடைய போதனையானது பொய்யான நியாயவிவாதத்திலிருந்தும் தம்முடைய ஊழியர்களைப் பாதுகாக்கிறது. “கள்ள அப்போஸ்தலர்கள்” கொரிந்துவிலுள்ள சபையில் தொந்தரவை உண்டாக்கிக்கொண்டிருந்தபோது, அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்திற்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும் தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 10:4, 5; 11:13-15) தெய்வீக போதனைக்கு முரணாக இருக்கிற நியாயவிவாதங்கள், சபையில் சாந்தத்தோடு கொடுக்கப்படுகிற அறிவுரையின்மூலமும் வெளியிலுள்ளவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலமும் நிர்மூலமாக்கப்படுகின்றன.—2 தீமோத்தேயு 2:24-26.
ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்கள்
15, 16. யெகோவாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்வது என்பது எதைக் குறிக்கிறது?
15 இராஜ்ய பிரசங்கிப்பு வேலை முன்னேறுகையில், “ஆவியோடும் உண்மையோடும்” கடவுளை தொழுதுகொள்வது எவ்வாறு என்று சாந்தகுணமுள்ளவர்களுக்குக் காட்டுவதில் தெய்வீக போதனை வெற்றிசிறக்கிறது. சீகார் பட்டணத்திற்கு அருகிலுள்ள யாக்கோபின் கிணற்றண்டையில், நித்திய ஜீவனை அளிக்கும் தண்ணீரை தாம் அளிக்கமுடியும் என்று ஒரு சமாரியப் பெண்ணிற்கு இயேசு சொன்னார். சமாரியர்களைக் குறிப்பிட்டு அவர் தொடர்ந்து சொன்னதாவது: “நீங்கள் அறியாததை வணங்குகிறீர்கள்; . . . உண்மை வணக்கத்தார் பிதாவை ஆவியோடும் சத்தியத்தோடும் வணங்கும் காலம்வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது, ஏனென்றால், உண்மையில் இப்படிப்பட்டவர்களே தம்மை வணங்கும்படி பிதாவானவர் எதிர்பார்க்கிறார்.” (யோவான் 4:7-15, 21-23) அப்போது இயேசு தம்மையே மேசியாவாக அடையாளங்காட்டினார்.
16 ஆனால் எவ்வாறு நாம் கடவுளை ஆவியோடு தொழுதுகொள்ள முடியும்? அவருடைய வார்த்தையிலுள்ள திருத்தமான அறிவின் அடிப்படையில் அமைந்த கடவுளுக்கான அன்பால் நிரம்பிய நன்றியுணர்வுள்ள இருதயங்களிலிருந்து வருகிற தூய வணக்கத்தைச் செலுத்துவதன்மூலம் ஆவியோடு தொழுதுகொள்ள முடியும். மதசம்பந்தமான பொய்மைகளை விட்டுவிடுவதன்மூலமும் யெகோவாவின் தலைசிறந்த பாடநூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, தெய்வீகச் சித்தத்தைச் செய்வதன்மூலமும் நாம் அவரை உண்மையுடன் வணங்கமுடியும்.
சோதனைகள்மீதும் உலகத்தின்மீதும் வெற்றிசிறக்கிறது
17. யெகோவாவின் ஊழியர்கள் சோதனைகளை எதிர்ப்படுவதற்கு தெய்வீக போதனை உதவியிருக்கிறது என்று நீங்கள் எவ்வாறு நிரூபிக்கமுடியும்?
17 கடவுளுடைய மக்கள் சோதனைகளை எதிர்ப்படும்போது, தெய்வீக போதனை மீண்டும் மீண்டும் வெற்றிசிறக்கிறது. இதை எண்ணிப்பாருங்கள்: செப்டம்பர் 1939, இரண்டாவது உலக யுத்தத்தின் தொடக்கத்தில், யெகோவாவின் ஊழியர்களுக்கு அவருடைய தலைசிறந்த பாடநூலைப்பற்றி விசேஷித்த உட்பார்வை தேவைப்பட்டது. தி உவாட்ச்டவர், நவம்பர் 1, 1939-ல் உள்ள கட்டுரை மிகுந்த உதவியாய் இருந்தது, அது கிறிஸ்தவ நடுநிலைமைப்பற்றிய விஷயத்தின்பேரில் தெய்வீக போதனையைத் தெளிவாக அளித்தது. (யோவான் 17:16) அதைப்போலவே, 1960-களின் ஆரம்பத்தில், அரசாங்கத்திலுள்ள “மேலான அதிகாரமுள்ளவர்”களுக்கு சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதல்பேரிலான உவாட்ச்டவர் கட்டுரைகள், சமுதாய அமைதியின்மையை எதிர்ப்படுகையில் தெய்வீக போதனைக்கு இசைவாக நடப்பதற்கு கடவுளுடைய மக்களுக்கு உதவியளித்தது.—ரோமர் 13:1-7; அப்போஸ்தலர் 5:29.
18. பொ.ச. இரண்டாவது மற்றும் மூன்றாவது நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டியவர்கள் இழிவான பொழுதுபோக்கை எவ்வாறு கருதினார்கள், இதன் சம்பந்தமாக தெய்வீக போதனை இன்றைக்கு என்ன உதவியை அளிக்கிறது?
18 தெய்வீக போதனை இழிவான பொழுதுபோக்கை நாடுவதற்கான கவர்ச்சிகள் போன்ற சோதனைகள்மீது வெற்றிகொள்ள நமக்கு உதவுகிறது. நம்முடைய பொது சகாப்தத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டியவர்களால் என்ன சொல்லப்பட்டது என்பதைக் கவனியுங்கள். டெர்ட்டுல்யன் எழுதினார்: “அந்தக் காட்சிக் கொட்டகையின் பயித்தியக்காரத்தனத்தோடு, அந்தக் காட்சியரங்கின் வெட்கக்கேடான தன்மையோடு, அந்த வட்டரங்கத்தின் கொடூரமான தன்மையோடு, பேச்சிலோ பார்வையிலோ கேட்டலிலோ நமக்கு எந்தச் சம்பந்தமுமில்லை.” அந்தக் காலப்பகுதியிலிருந்த மற்றொரு எழுத்தாளர் கேட்டார்: “ஓர் உண்மை கிறிஸ்தவன் துன்மார்க்கத்தைப்பற்றியே சிந்திக்காதவனாதலால், இந்தக் காரியங்களின் மத்தியில் அவன் என்ன செய்கிறான்? அவன் ஏன் சிற்றின்ப நாடக அரங்கக்காட்சியில் இன்பத்தைக் கண்டடைகிறான்?” இந்த எழுத்தாளர்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்தபோதிலும்கூட, அவர்கள் இழிவான கேளிக்கைகளை கண்டனம் செய்தனர். இன்று, தெய்வீக போதனை வெறுப்பூட்டுகிற, ஒழுக்கக்கேடான, கொடூரமான பொழுதுபோக்கை வெறுத்துத் தள்ளுவதற்கு நமக்கு ஞானத்தை அளிக்கிறது.
19. உலகத்தின்மீது வெற்றிசிறக்க தெய்வீக போதனை எவ்வாறு நமக்கு உதவிசெய்கிறது?
19 தெய்வீக போதனைக்கு இசைவாக நடப்பது உலகத்தின்மீதே வெற்றிசிறக்க நமக்கு உதவுகிறது. ஆம், நம்முடைய மகத்தான போதகருடைய போதனையைப் பொருத்திப் பிரயோகிப்பது சாத்தானின் அதிகாரத்தில் கிடக்கிற இந்த உலகத்தின் தீய செல்வாக்குகளின்மீது நம்மை வெற்றிபெறச் செய்கிறது. (2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19) ஆகாயத்தின் அதிகாரப் பிரபுவிற்கேற்றபடி நாம் நடந்தபோது, நம்முடைய மீறுதல்களினாலும் பாவங்களினாலும் நாம் மரித்திருந்தபோதிலும், கடவுள் நம்மை உயிருள்ளவர்களாய் இருக்கும்படி செய்திருக்கிறார் என்று எபேசியர் 2:1-3 சொல்கிறது. உலகப்பிரகாரமான ஆசைகளையும் அவருடைய எதிராளியும் நம்முடைய எதிராளியுமான, பிரதான வஞ்சிப்பவனாகிய பிசாசாகிய சாத்தானிடமிருந்து வெளிப்படுகிற ஆவியையும் வெற்றிசிறக்க தெய்வீக போதனை உதவிசெய்கிறது என்பதற்காக நாம் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துகிறோம்!
20. மேலுமான கலந்தாலோசிப்புக்கு என்ன கேள்விகள் தகுதிவாய்ந்தவை?
20 அப்படியானால், தெளிவாகவே, தெய்வீக போதனை அநேக வழிகளில் வெற்றிசிறக்கிறது. உண்மையில், அதனுடைய அனைத்து வெற்றிகளையும் மேற்கோள் காட்டுவது சாத்தியமற்றதாகத் தோன்றும். அது உலகெங்குமுள்ள எல்லா மக்களையும் பாதிக்கிறது. ஆனால் அது உங்களுக்கு என்ன செய்துவருகிறது? தெய்வீக போதனை உங்களுடைய வாழ்க்கையை எவ்வாறு பாதித்துவருகிறது?
நீங்கள் என்ன கற்றிருக்கிறீர்கள்?
◻ உண்மையான ஞானத்தை எவ்வாறு வரையறுக்கலாம்?
◻ ஆதியாகமம் 3:15-ன் சம்பந்தமாக கடவுள் எதைப் படிப்படியாக வெளிப்படுத்தியிருக்கிறார்?
◻ தெய்வீக போதனை எவ்வாறு ஆவிக்குரிய காரியங்களில் வெற்றிசிறந்திருக்கிறது?
◻ கடவுளை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்வது என்றால் என்ன?
◻ சோதனைகள்மீதும் உலகத்தின்மீதும் வெற்றிசிறப்பதற்கு தெய்வீக போதனை எவ்வாறு யெகோவாவின் ஊழியர்களுக்கு உதவியிருக்கிறது?
7. பைபிளில் அடங்கியுள்ளவற்றை அறிவாற்றல் சார்ந்த வகையில் அறிந்திருப்பது போதுமானதல்ல என்று நீங்கள் ஏன் சொல்வீர்கள்?
[பக்கம் 10-ன் படங்கள்]
இயேசு மரணம் வரையாக—அந்த வித்துவின் குதிங்கால் நசுக்கப்படும் வரையாக—உத்தமத்தைக் காத்துக்கொண்டார்