“‘ஆம்’ என்றும் அதே சமயத்தில் ‘இல்லை’ என்றும்” சொல்கிறோமா?
இந்தச் சூழ்நிலையைக் கவனியுங்கள்: மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவிலுள்ள ஒரு மூப்பர், இளம் சகோதரர் ஒருவரோடு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊழியம் செய்யப்போவதாக வாக்கு கொடுக்கிறார். ஆனால், அன்று காலையில் அந்த மூப்பருக்கு ஒரு சகோதரரிடமிருந்து அவசரமாக ஃபோன் வருகிறது. அந்தச் சகோதரரின் மனைவிக்கு விபத்து ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொல்கிறார். ரத்தம் இல்லாமல் சிகிச்சை அளிக்கிற ஒரு டாக்டரைப் பார்ப்பதற்கு உதவும்படி கேட்கிறார். நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில், அந்த இளம் சகோதரருக்குக் கொடுத்த வாக்கை அந்த மூப்பரால் காப்பாற்ற முடியாமல் போகிறது.
மற்றொரு சூழ்நிலையைக் கவனியுங்கள்: சபையிலிருக்கும் ஒரு சகோதரி தனிமரமாக இரண்டு பிள்ளைகளை வளர்த்து வருகிறார். ஒருநாள் சாயங்காலம் தங்கள் வீட்டிற்கு வரும்படி அவரை ஒரு தம்பதியர் அழைக்கிறார்கள். அதைப் பற்றி அந்தச் சகோதரி தன் பிள்ளைகளிடம் சொன்னதும் அவர்களுக்கு ஒரே சந்தோஷம்! அந்த நாளுக்காக ஆசை ஆசையாகக் காத்திருக்கிறார்கள். ஆனால், எதிர்பாராத சூழ்நிலை காரணமாக சொன்னபடி அவர்களை அழைக்க முடியவில்லை என்று அந்தத் தம்பதி முந்தின நாளன்று அந்தச் சகோதரியிடம் சொல்கிறார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்பது அந்தச் சகோதரிக்கு பின்னர் தெரியவருகிறது. தம்பதியர் அந்தச் சகோதரியை அழைத்த பிறகு, அவர்களுடைய நண்பர்கள் சிலர் அதே நாளில் அந்தத் தம்பதியை தங்களுடைய வீட்டிற்கு அழைத்திருக்கிறார்கள். நண்பர்களின் அழைப்பை அந்தத் தம்பதியர் ஏற்றுக்கொண்டார்கள்.
கிறிஸ்தவர்களான நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது முக்கியம். நாம் ‘“ஆம்” என்றும் அதே சமயத்தில் “இல்லை” என்றும் சொல்லக் கூடாது.’ (2 கொ. 1:18) ஆனால், சில சமயங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதற்கு நியாயமான காரணம் இருக்கலாம். பவுலுக்கும் இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
பவுல் மாற்றி மாற்றி பேசினாரா?
கி.பி. 55-ல், பவுல் தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது எபேசுவில் இருந்தார். ஏஜியன் கடலைக் கடந்து கொரிந்துவுக்குச் சென்று, பிறகு அங்கிருந்து மக்கெதோனியாவுக்குப் போக வேண்டுமென அவர் நினைத்தார். அங்கிருந்து எருசலேமுக்குத் திரும்பும் வழியில், இரண்டாவது முறையாக கொரிந்து சபையைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால், அவர்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்டி எருசலேமிலுள்ள சகோதரர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. (1 கொ. 16:3) இதைப் பற்றி 2 கொரிந்தியர் 1:15, 16-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: “இந்த நம்பிக்கையுடன்தான், இரண்டாவது முறை உங்களிடம் வந்து மறுபடியும் உங்களைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென்று யோசித்திருந்தேன்; மக்கெதோனியாவுக்குப் போகும் வழியிலும் அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் உங்களைச் சந்திக்க வேண்டுமென்றும், நீங்கள் என்னுடன் சற்றுத் தூரம்வரை வந்து யூதேயாவுக்கு வழியனுப்ப வேண்டுமென்றும் யோசித்திருந்தேன்.”
பவுல் தன்னுடைய திட்டத்தைப் பற்றி கொரிந்து சகோதரர்களுக்கு முன்பு ஒரு கடிதத்தில் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. (1 கொ. 5:9) அதை எழுதியதற்குச் சற்று பிறகு, சபையில் சகோதரர்களுக்குள்ளே பயங்கரமான கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதாக குலோவேயாளின் குடும்பத்தார் பவுலுக்குத் தெரிவித்தார்கள். (1 கொ. 1:10, 11) அதனால், அவர் தன்னுடைய திட்டத்தை மாற்றிக்கொண்டு, கொரிந்தியர்களுக்கு முதலாம் கடிதத்தை எழுதினார். அதில் அன்பான ஆலோசனைகளையும் புத்திமதிகளையும் வழங்கினார். அதோடு, தன்னுடைய பயண திட்டத்தை மாற்றியிருப்பதாக, அதாவது மக்கெதோனியாவுக்குப் போய்விட்டு பின்னர் கொரிந்துவுக்கு வருவதாகக் குறிப்பிட்டார்.—1 கொ. 16:5, 6.a
கொரிந்துவிலிருந்த சகோதரர்கள் அவருடைய இரண்டாம் கடிதத்தைப் பெற்றபோது, அச்சபையிலிருந்த “அருமை அப்போஸ்தலர்கள்” சிலர், அவரை மாற்றி மாற்றி பேசுபவர் என்றும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாதவர் என்றும் குற்றம்சாட்டினார்கள். அதற்கு பவுல், “நான் இப்படி யோசித்தபின் பொறுப்பில்லாமல் அதை மாற்றிவிட்டதாக நினைக்கிறீர்களா? அல்லது, என் விருப்பப்படி திட்டமிட்டு, ‘ஆம், ஆம்’ என்று சொன்னதை ‘இல்லை, இல்லை’ என்று பிற்பாடு மாற்றிவிடுவதாக நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.—2 கொ. 1:17; 11:5.
அப்போஸ்தலன் பவுல் உண்மையிலேயே ‘பொறுப்பில்லாமல் நடந்துகொண்டாரோ’? என நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். “பொறுப்பில்லாமல்” என்ற வார்த்தை, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாமல் மாற்றி மாற்றி பேசுவதைக் குறிக்கிறது. பவுலைப் பொறுத்தவரை, அவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. “என் விருப்பப்படி” நடந்துகொள்கிறேனா? என்று கேட்டதன் மூலம், தான் நம்ப முடியாத ஒருவரைப் போல அடிக்கடி திட்டங்களை மாற்றிக்கொண்டிருப்பவர் அல்ல என்பதை கொரிந்து கிறிஸ்தவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
“நாங்கள் எதையுமே ‘ஆம்’ என்றும் அதே சமயத்தில் ‘இல்லை’ என்றும் சொல்வதில்லை; கடவுள் சொல்வது எப்படி நம்பகமானதோ அப்படியே நாங்கள் சொல்வதும் நம்பகமானதுதான்” என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லி அவர்களுடைய குற்றச்சாட்டைப் பொய்யென நிரூபித்தார். (2 கொ. 1:18) உண்மையில், கொரிந்துவிலிருந்த சகோதர சகோதரிகளின் நலனைக் கருதியே அவர் தன்னுடைய திட்டத்தை மாற்றினார். ‘அவர்களை வருத்தப்படுத்திவிடக் கூடாது’ என்பதற்காகவே கொரிந்துவுக்குப் போவதற்கான திட்டத்தை மாற்றியதாக 2 கொரிந்தியர் 1:23-ல் நாம் வாசிக்கிறோம். சொல்லப்போனால், அவர் அங்கு போவதற்கு முன் அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் நினைத்தபடியே, அந்தக் கடிதத்தை வாசித்த சபையார் துக்கித்து மனம்வருந்தினார்கள். மக்கெதோனியாவில் இருந்த பவுல், அந்தச் செய்தியை தீத்து மூலமாகக் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷப்பட்டார்.—2 கொ. 6:11; 7:5-7.
இயேசு “ஆமென்” என்றே இருந்தார்
பவுலின் பேச்சையும் அவர் பிரசங்கித்த விஷயங்களையும் நம்ப முடியாது என்ற அர்த்தத்திலேயே மாற்றி மாற்றி பேசுகிறவர் என்று கொரிந்தியர்கள் அவரைக் குற்றம்சாட்டியிருக்கலாம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவர்களுக்குப் பிரசங்கித்திருந்ததை பவுல் நினைப்பூட்டினார். “கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றி நானும் சில்வானுவும் தீமோத்தேயுவும் உங்களிடையே பிரசங்கித்தோம்; அவர், ‘ஆம்’ என்றும் அதே சமயத்தில் ‘இல்லை’ என்றும் ஆகிவிடவில்லை; அவரது விஷயத்தில் ‘ஆம்’ என்பது ‘ஆம்’ என்றே ஆகியிருக்கிறது” என்று சொன்னார். (2 கொ. 1:19) அப்படியிருக்க, இயேசு கிறிஸ்து நம்பகமற்றவராக இருந்தாரா? இல்லையே! இயேசு தம்முடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் எப்போதும் உண்மையையே பேசினார். (யோவா. 14:6; 18:37) அவர் பிரசங்கித்த விஷயங்கள் முழுக்க முழுக்க உண்மையானவை, நம்பகமானவை. அதே விஷயங்களைத்தான் பவுலும் பிரசங்கித்தார். அப்படியானால், பவுல் பிரசங்கித்த விஷயங்களும் நம்பகமானவையே.
யெகோவா ‘சத்தியபரர்.’ (சங். 31:5) அதைப் பற்றி பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடவுளுடைய வாக்குறுதிகள் எத்தனை இருந்தாலும், அவை அத்தனையும் அவர் மூலமாக [அதாவது கிறிஸ்து மூலமாக] ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன.” இயேசு பூமியில் இருந்தபோது உத்தமத்தைவிட்டு துளியும் விலகாமல் நடந்துகொண்டது, யெகோவாவின் வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேறும் என்பதைக் காட்டுகிறது. “அதனால்தான், கடவுளுடைய மகிமைக்காக அவர் [இயேசு] வழியாய் ‘ஆமென்’ என்று சொல்கிறோம்” என பவுல் எழுதினார். (2 கொ. 1:20, அடிக்குறிப்பு) யெகோவா கொடுத்த எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறும் என்பதற்கு இயேசுவே உத்தரவாதமாக, அதாவது “ஆமென்” என்பதாக இருக்கிறார்.
யெகோவாவையும் இயேசுவையும் போல பவுலும் எப்போதும் உண்மையையே பேசினார். (2 கொ. 1:19) அவர் ‘தன் விருப்பப்படி’ மாற்றி மாற்றி பேசவில்லை. (2 கொ. 1:17) மாறாக, ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்தார்.’ (கலா. 5:16) மற்றவர்களின் நலனை மனதில் வைத்து பேசினார். அவர் ஆம் என்று சொன்னது ஆம் என்றே இருந்தது!
நீங்கள் எப்படி?
பைபிள் நெறிகளின்படி வாழாத மக்கள், சின்ன பிரச்சினை வந்தாலோ தங்களுக்குப் பிடித்த வேறொன்றை செய்ய நினைத்தாலோ கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில்லை. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், அதுவும் எழுதி கையொப்பமிட்ட ஒப்பந்தங்களில்கூட “ஆம்” என்று சொன்னதை அப்படியே புரட்டிவிடுகிறார்கள். அநேகர், திருமணத்தை நீண்டகால ஒப்பந்தமாக நினைப்பதில்லை. சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றால் உடனே பந்தத்தை முறித்துவிடுகிறார்கள். அதனால்தான், இன்று விவாகரத்தின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.—2 தீ. 3:1, 2.
உங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? ஆம் என்று நீங்கள் சொல்வது ஆம் என்றே இருக்கிறதா? இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தபடி, சில சமயங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். ஆனால், கிறிஸ்தவரான நீங்கள் வாக்கு கொடுத்தால் அதை எப்படியாவது நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். (சங். 15:4; மத். 5:37) அப்படிச் செய்தால், நீங்கள் நம்பகமானவர், சொல் தவறாதவர், எப்போதும் உண்மை பேசுபவர் என்று எல்லோரும் சொல்வார்கள். (எபே. 4:15, 25; யாக். 5:12) நீங்கள் நம்பகமானவர் என்பது மற்றவர்களுக்குத் தெரியும்போது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியத்தைக் காதுகொடுத்து கேட்பார்கள். ஆகவே, நீங்கள் ஆம் என்று சொல்வது எப்போதும் ஆம் என்றே இருக்கட்டும்!
a ஒன்று கொரிந்தியர் புத்தகத்தை எழுதி கொஞ்ச காலத்திற்குப் பிறகு பவுல், துரோவா வழியாக மக்கெதோனியாவுக்குப் போனார். அங்கிருந்துதான் இரண்டு கொரிந்தியர் புத்தகத்தை எழுதினார். (2 கொ. 2:12; 7:5) பிற்பாடு, கொரிந்துவுக்குச் சென்றார்.