‘மாம்சத்திலுள்ள முள்ளை’ சமாளித்தல்
“என் தகுதியற்ற தயவு உனக்குப் போதும்.”—2 கொரிந்தியர் 12:9, NW.
1, 2. (அ) சோதனைகளையும் பிரச்சினைகளையும் கண்டு நாம் ஏன் திகைப்படையக் கூடாது? (ஆ) சோதனைகளை சந்திக்கையில் நாம் ஏன் நம்பிக்கையுள்ளோராக இருக்கலாம்?
“கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” (2 தீமோத்தேயு 3:12) ஏன்? ஏனெனில் தன்னல காரணங்களின் நிமித்தமாகவே கடவுளுக்கு மனிதன் தொண்டு செய்கிறான் என்று சாத்தான் அடித்துக் கூறுகிறான், மேலும் தன் வாதத்தை நிரூபிக்க அவன் வெறிபிடித்து அலைகிறான். இயேசு ஒருமுறை தம்முடைய அப்போஸ்தலர்களை இவ்வாறு எச்சரித்தார்: “இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.” (லூக்கா 22:31) வேதனை தரும் பிரச்சினைகளால் நம்மை சோதிப்பதற்கு சாத்தானை கடவுள் அனுமதிக்கிறார் என்று இயேசுவுக்கு நன்றாக தெரியும். இது, வாழ்க்கையில் நாம் எதிர்ப்படும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் சாத்தானே அல்லது அவனுடைய பேய்களே காரணமென்று நிச்சயமாகவே அர்த்தப்படுத்துவதில்லை. (பிரசங்கி 9:11, NW) ஆனால், நம் உத்தமத்தை முறிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துபார்க்க சாத்தான் ஆவலாயிருக்கிறான்.
2 சோதனைகளைக் கண்டு நாம் திகைப்படையக் கூடாதென்று பைபிள் சொல்கிறது. நமக்கு நேரிடும் எதுவும் புதுமையானதும் அல்ல, எதிர்பாராததும் அல்ல. (1 பேதுரு 4:12) உண்மையில், ‘உலகத்திலுள்ள [நம்] சகோதரக் கூட்டத்தாரில் அதே பாடுகள் நிறைவேறி வருகின்றன.’ (1 பேதுரு 5:9, திருத்திய மொழிபெயர்ப்பு) இன்று, கடவுளுடைய ஊழியர்கள் ஒவ்வொருவரையும் சாத்தான் மிகக் கடுமையாக சோதிக்கிறான். முட்களைப் போன்ற எத்தனை பிரச்சினைகளால் முடியுமோ அத்தனை பிரச்சினைகளாலும் நம்மை வாதிப்பதில் பிசாசானவன் இன்பங்கொள்கிறான். இந்த உலகத்தைப் பயன்படுத்தி, ‘நம் மாம்சத்திலுள்ள முட்களை’ இன்னும் ஆழமாக குத்துகிறான் அல்லது இன்னும் பல முட்களைக் குத்துகிறான். (2 கொரிந்தியர் 12:7) இருப்பினும், சாத்தானின் தாக்குதல் நம் உத்தமத்தை முறிக்க வேண்டியதில்லை. சோதனையிலிருந்து ‘தப்பும் வழியை [யெகோவா நமக்கு] உண்டாக்குவதுபோல்,’ மாம்சத்தில் முட்களைப்போல் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கும் வழியையும் உண்டாக்குவார்.—1 கொரிந்தியர் 10:13, தி.மொ.
முள்ளை சமாளிப்பது எவ்வாறு?
3. தன் மாம்சத்தில் இருந்த முள்ளை நீக்கும்படி யெகோவாவிடம் பவுல் வேண்டிக் கொண்டபோது அவர் எவ்வாறு பதிலளித்தார்?
3 தன் மாம்சத்தில் இருந்த முள்ளை நீக்கும்படி கடவுளிடம் அப்போஸ்தலன் பவுல் மன்றாடினார். “அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்” என்றார். பவுலின் உருக்கமான வேண்டுதலுக்கு யெகோவாவின் பதில் என்னவாக இருந்தது? “என் தகுதியற்ற தயவு உனக்குப் போதும்; பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்.” (2 கொரிந்தியர் 12:8, 9, NW) இந்தப் பதிலை நாம் கூர்ந்து ஆராய்ந்து, நம்மை வேதனைப்படுத்தும் முட்களைப் போன்ற எந்தப் பிரச்சினைகளையும் சமாளிப்பதற்கு இது எவ்வாறு நமக்கு உதவும் என்பதைக் காணலாம்.
4. யெகோவாவின் தகுதியற்ற தயவிலிருந்து எந்த விதங்களில் பவுல் நன்மை அடைந்தார்?
4 கிறிஸ்துவின் மூலமாய் ஏற்கெனவே அருளப்பட்டிருந்த தகுதியற்ற தயவுக்காக நன்றியுள்ளவராக இருக்கும்படி பவுலை கடவுள் ஊக்குவித்ததைக் கவனியுங்கள். நிச்சயமாகவே பவுல் பல விதங்களில் மிகுதியாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார். இயேசுவைப் பின்பற்றினோரை அவர் கடுமையாய் துன்புறுத்தியிருந்தபோதிலும், இயேசுவின் சீஷனாகும் பாக்கியத்தை யெகோவா அவருக்கு அன்புடன் அருளியிருந்தார். (அப்போஸ்தலர் 7:58; 8:3; 9:1-4) அதன்பின் பூரிப்பளிக்கும் பல ஊழிய நியமிப்புகளையும் வாய்ப்புகளையும் பவுலுக்கு தயவாக அருளினார். இது நமக்கு தெளிவான பாடத்தை புகட்டுகிறது. மிகக் கடினமான காலங்களிலுங்கூட, ஏற்கெனவே பெற்றிருக்கும் பல ஆசீர்வாதங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். சோதனைகளை எதிர்ப்படுகையில், யெகோவா நம்மீது பொழியும் மிகுந்த நன்மைகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.—சங்கீதம் 31:19.
5, 6. (அ) யெகோவாவின் பலம் ‘பலவீனத்தில் பூரணமாய் விளங்கும்’ என்று பவுலுக்கு அவர் எவ்வாறு கற்பித்தார்? (ஆ) பவுலின் முன்மாதிரி எவ்வாறு சாத்தானை பொய்யனாக நிரூபித்தது?
5 வேறொரு வழியில் யெகோவாவின் தகுதியற்ற தயவு போதுமானதாக நிரூபிக்கிறது. பிரச்சினைகளை சமாளிப்பதற்கு வேண்டியளவு உதவியை கடவுளுடைய வல்லமை அளிக்கிறது. (எபேசியர் 3:20) தம் பலம் ‘பலவீனத்தில் பூரணமாய் விளங்கும்’ என்று யெகோவா பவுலுக்குக் கற்பித்தார். எவ்வாறு? துன்பத்தை சகிக்க பவுலுக்குத் தேவைப்பட்ட எல்லா பலத்தையும் அவர் அன்புடன் அருளினார். இவ்வாறு, பவுல் சகிப்புத்தன்மையையும் யெகோவாவில் அசைக்க முடியாத நம்பிக்கையையும் காட்டியபோது, பலவீனரும் பாவியுமாகிய இவரைப் பொறுத்தவரை கடவுளுடைய வல்லமை ஜெயித்ததென்பது எல்லாருக்கும் விளங்கியது. இது, நிம்மதியாகவும் பிரச்சினைகள் இல்லாமலும் வாழும்போது மாத்திரமே கடவுளுக்கு மனிதர் சேவை செய்கிறார்கள் என்று வாதிடும் பிசாசின்மீது பாதிப்பை ஏற்படுத்தியது. பவுலின் உத்தமம் அந்த பழிதூற்றுபவனின் முகத்தில் பட்டென்று ஓர் அறை விட்டதைப் போல இருந்தது!
6 கடவுளுக்கு விரோதமாக செயல்படுவதில் பவுல் ஒருகாலத்தில் சாத்தானின் கூட்டாளியாக இருந்தவர்; கிறிஸ்தவர்களை கடுமையாக துன்புறுத்தியவர்; மேல்மட்ட குடும்பத்தில் பிறந்ததால் சந்தேகமின்றி பல வசதிகளோடும் சௌகரியங்களோடும் வாழ்ந்தவர்; வைராக்கியமுள்ள பரிசேயர். அப்படியெல்லாம் இருந்த பவுல் இப்போதோ, ‘அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவராக’ யெகோவாவுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்துகொண்டிருந்தார். (1 கொரிந்தியர் 15:9) மேலும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ ஆளும் குழுவின் அதிகாரத்திற்கு மனத்தாழ்மையுடன் கீழ்ப்படிதலைக் காட்டினார். மாம்சத்திலே ஒரு முள்ளிருந்தபோதிலும் உண்மையுள்ளவராய் சகித்து நிலைத்திருந்தார். சோதனைகள் மத்தியிலும் பவுலின் ஆர்வம் குறையவே இல்லை; இது சாத்தானுக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கியிருக்கலாம். கிறிஸ்துவின் பரலோக ராஜ்யத்தில் பங்குகொள்ளப்போகும் நம்பிக்கையை பவுல் ஒருபோதும் மறக்கவில்லை. (2 தீமோத்தேயு 2:12; 4:18) எவ்வளவு வேதனையளிக்கும் எந்தவித முள்ளும் அவருடைய ஆர்வத்தைக் குலைக்க முடியவில்லை. அவ்வாறே நம்முடைய ஆர்வமும் சற்றும் தணியாமல் பெருகுவதாக! சோதனைகளில் யெகோவா நம்மை தாங்குகிறார்; இவ்வாறு, சாத்தானை பொய்யனாக நிரூபிக்க உதவும் விசேஷித்த வாய்ப்பை நமக்கு அளித்து நம்மை மேம்படுத்துகிறார்.—நீதிமொழிகள் 27:11.
யெகோவாவின் ஏற்பாடுகள் இன்றியமையாதவை
7, 8. (அ) எந்த வழிகளில் யெகோவா தம்முடைய ஊழியர்களை இன்று பலப்படுத்துகிறார்? (ஆ) நம் மாம்சத்திலுள்ள முள்ளை சமாளிப்பதற்கு அன்றாட பைபிள் வாசிப்பும் படிப்பும் ஏன் அவ்வளவு முக்கியம்?
7 இன்று, உண்மையுள்ள கிறிஸ்தவர்களை யெகோவா தமது பரிசுத்த ஆவி, வார்த்தை, கிறிஸ்தவ சகோதரத்துவம் ஆகியவற்றின் வாயிலாக பலப்படுத்துகிறார். அப்போஸ்தலன் பவுலைப் போலவே நம்முடைய பாரங்களை ஜெபத்தில் யெகோவாவின்மீது நாம் போட்டுவிடலாம். (சங்கீதம் 55:22) நம்முடைய சோதனைகளை கடவுள் நீக்கிவிட மாட்டார் என்றாலும் அவற்றை சமாளிப்பதற்கு, முக்கியமாக தாங்குவதற்கு மிகக் கடினமானவற்றையுங்கூட சமாளிப்பதற்கு, ஞானத்தை அருளுவார். மேலும், நாம் சகித்திருப்பதற்கு தேவையான பலத்தை, அதாவது ‘இயல்புக்கு மீறிய வல்லமையை’ அவரால் தரமுடியும்.—2 கொரிந்தியர் 4:7, NW.
8 இத்தகைய உதவியை நாம் எவ்வாறு பெறலாம்? கடவுளுடைய வார்த்தையை நாம் ஊக்கமாய் படிக்க வேண்டும், ஏனெனில் நம்பிக்கை அளிக்கும் அவருடைய ஆறுதல்களை அதில் கண்டடைவோம். (சங்கீதம் 94:19) உள்ளத்தைத் தொடும் வார்த்தைகளில் கடவுளிடம் உதவி கேட்டு மன்றாடிய அவருடைய ஊழியர்களின் ஜெபங்களை பைபிளில் நாம் வாசிக்கிறோம். யெகோவா அளித்த பதில்கள் பெரும்பாலும் ஆறுதலான வார்த்தைகள் அடங்கியவை; இவை தியானிப்பதற்கு ஏற்றவை. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது நம்மை பலப்படுத்தி திடப்படுத்தும்; இவ்வாறு ‘இயல்புக்கு மீறிய வல்லமை நம்முடையதாயிராமல் கடவுளுடையதாயிருக்கும்.’ ஊட்டத்தையும் பலத்தையும் பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் நாம் ஆகாரம் உண்ணுவது அவசியமாக இருப்பதுபோல், கடவுளுடைய வார்த்தையை தவறாமல் வாசிப்பதும் அவசியம். இதை நாம் செய்கிறோமா? செய்கிறோமென்றால், இப்போது நம்மை குத்தும் அடையாளப்பூர்வமான முட்கள் எவற்றையும் சகிக்க ‘இயல்புக்கு மீறிய வல்லமை’ நமக்கு உதவி செய்வதை உணர்வோம்.
9. பிரச்சினைகளுடன் போராடுவோருக்கு மூப்பர்கள் எவ்வாறு ஆதரவளிக்கலாம்?
9 தேவபயமுள்ள கிறிஸ்தவ மூப்பர்கள், கடும் துன்பமெனும் “காற்றுக்கு ஒதுக்காகவும்,” பிரச்சினைகளெனும் “பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும்” நிரூபிக்கலாம். தேவாவியால் ஏவப்பட்ட இந்த விவரிப்புக்குப் பொருத்தமாக இருக்க விரும்புகிற மூப்பர்கள், துன்பப்படுவோருக்குத் தகுந்த வார்த்தைகளில் பதிலளிக்குமாறு, ‘கல்விமானின் நாவைத் தந்தருளும்படி’ மனத்தாழ்மையுடனும் உள்ளப்பூர்வமாயும் யெகோவாவை கேட்கிறார்கள். இக்கட்டான காலங்களில் மூப்பர்களின் வார்த்தைகள் மழை தூறல்கள்போல் நம் மனதிற்கு குளுமையாகவும் ஆறுதலாகவும் இருக்கலாம். மூப்பர்கள் ‘திடனற்றவர்களைத் தேற்றுவதன்’ மூலம் மாம்சத்திலுள்ள ஏதாவது முள்ளின் காரணமாக சோர்வுற்று அல்லது மனம்வாடி இருக்கும் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு உண்மையாகவே ஆதரவளிக்கிறார்கள்.—ஏசாயா 32:2; 50:4; 1 தெசலோனிக்கேயர் 5:14.
10, 11. கடும் சோதனைகளுக்கு ஆளாகியிருப்பவர்களை கடவுளுடைய ஊழியர்கள் எவ்வாறு ஊக்குவிக்கலாம்?
10 யெகோவாவின் ஊழியர்கள் எல்லாரும் அவருடைய ஒன்றுபட்ட கிறிஸ்தவ குடும்பத்தின் பாகமாக இருக்கிறார்கள். ஆம், நாம் ‘ஒருவருக்கொருவர் அவயவங்களாக இருக்கிறோம்.’ “ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.” (ரோமர் 12:5; 1 யோவான் 4:11) இந்தக் கடமையை நாம் எவ்வாறு நிறைவேற்றுகிறோம்? 1 பேதுரு 3:8-ன் (தி.மொ.) பிரகாரம், விசுவாசத்தில் நமக்கு உறவினராக இருக்கும் எல்லாரிடமும் ‘அனுதாபமும், சகோதர சிநேகமும், உருக்கமும் உள்ளவர்களாக’ இருப்பதன் மூலம் நிறைவேற்றுகிறோம். மாம்சத்தில் வேதனையளிக்கும் குறிப்பிடத்தக்க முள்ளுடன் போராடுகிறவர்களுக்கு—சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும்—நாமனைவரும் மிகுந்த கரிசனை காட்டலாம். எவ்வாறு?
11 அவர்களுடைய கஷ்டங்களைக் குறித்து உணர்வுள்ளோராக இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் அனுதாபமற்றோராக, உணர்ச்சியற்றோராக, அல்லது அக்கறையற்றோராக இருந்தால் நம்மை அறியாமலேயே அவர்களுடைய வேதனையை கூட்டிவிடுவோம். அவர்கள் படும் பாடுகளை அறிந்திருப்பது, நாம் என்ன சொல்கிறோம், எவ்வாறு சொல்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பவற்றில் விவேகமாக இருக்கும்படி நம்மை தூண்ட வேண்டும். நாம் உற்சாகமாக, நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசும்போது அவர்களைக் குத்தும் எந்த முள்ளின் வேதனையும் ஓரளவு தணியும். இவ்வாறு நாம் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கலாம்.—கொலோசெயர் 4:11.
எவ்வாறு சிலர் வெற்றிகரமாய் சமாளித்திருக்கிறார்கள்
12-14. (அ) ஒரு கிறிஸ்தவ சகோதரி புற்றுநோயை சமாளிக்க என்ன செய்தார்? (ஆ) அவருடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் எவ்வாறு உற்சாகமும் உதவியும் அளித்தார்கள்?
12 இந்தக் கடைசி நாட்களின் முடிவை நாம் நெருங்குகையில், ‘வேதனைகள்’ அனுதினமும் அதிகரிக்கின்றன. (மத்தேயு 24:8) இதனால் பூமியிலுள்ள எல்லாருக்குமே சோதனைகள் வரலாம்; அதுவும் யெகோவாவின் சித்தத்தைச் செய்ய நாடும் அவருடைய உண்மை ஊழியர்களுக்கு அதிக சோதனைகள் வரலாம். உதாரணமாக, முழுநேர ஊழியத்தில் இருந்த கிறிஸ்தவர் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது; அவருடைய உமிழ்நீர் சுரப்பிகளையும் நிணநீர் சுரப்பிகளையும் அறுவை சிகிச்சையால் நீக்க வேண்டியிருந்தது. இதை அந்தச் சகோதரியும் அவருடைய கணவரும் அறிந்தபோது, உடனடியாக யெகோவாவிடம் நெடுநேரம் கெஞ்சி மன்றாடினார்கள். நம்ப முடியாத ஒருவித மன அமைதி கிடைத்ததாக அந்தச் சகோதரி பிற்பாடு குறிப்பிட்டார். எனினும், அதன்பின் அவருக்கு பல இன்னல்கள் ஏற்பட்டன; முக்கியமாக சிகிச்சைகளின் பக்க விளைவுகள் அவரை பாடுபடுத்தின.
13 நோயை சமாளிப்பதற்கு இந்தச் சகோதரி புற்றுநோயைப் பற்றி முடிந்தளவு தெரிந்துகொள்ள முயற்சி செய்தார். தன் மருத்துவர்களிடம் விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். மேலும், இதே நோயை உணர்ச்சி ரீதியில் மற்றவர்கள் எவ்வாறு சமாளித்தார்கள் என்ற அனுபவங்களை காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலும் மற்ற கிறிஸ்தவ பிரசுரங்களிலும் படித்து தெரிந்துகொண்டார். கஷ்டங்களின்போது ஜனங்களை காக்கும் திறன் யெகோவாவிற்கு இருப்பதைக் காட்டும் பொருத்தமான பைபிள் பகுதிகளையும் மற்ற பயனுள்ள தகவல்களையும்கூட அவர் வாசித்துத் தெரிந்துகொண்டார்.
14 மனக்கசப்பை சமாளிப்பதன் பேரில் வெளிவந்த ஒரு கட்டுரை இந்த ஞானமான வார்த்தைகளை மேற்கோளாக குறிப்பிட்டது: “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான்.” (நீதிமொழிகள் 18:1) ஆகையால் அந்தக் கட்டுரை, ‘தனித்திருப்பதைத் தவிருங்கள்’ என்ற அறிவுரையை கொடுத்தது.a அந்தச் சகோதரி கூறுகிறார்: “எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்வதாக பலர் சொன்னார்கள்; சிலர் போன் செய்து பேசினார்கள். இரண்டு மூப்பர்கள் தவறாமல் போன் செய்து விசாரித்தார்கள். மலர்ச் செண்டுகளும் கார்டுகளும் வந்து குவிந்தன. சிலர் சமைத்தும் கொடுத்தார்கள். இன்னும் சிலர், ஆஸ்பத்திரிக்கு என்னை அழைத்துச் செல்ல முன்வந்தார்கள்.”
15-17. (அ) விபத்துகளால் ஏற்பட்ட இக்கட்டுகளை கிறிஸ்தவர் ஒருவர் எவ்வாறு சமாளித்தார்? (ஆ) சபையில் உள்ளவர்கள் என்ன ஆதரவை அளித்தார்கள்?
15 அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள நியூ மெக்ஸிகோவில், நெடுங்காலமாக யெகோவாவை சேவித்துவந்த ஒரு சகோதரி இருமுறை வாகன விபத்திற்குள்ளானார். அவருடைய கழுத்தும் தோள்பட்டைகளும் சேதமடைந்தன; இதனால், 25-க்கும் அதிக ஆண்டுகளாக அவரை பாடுபடுத்தி வந்த மூட்டு அழற்சி நோய் இன்னும் மோசமானது. அவர் சொல்கிறார்: “என் தலையை நிமிர்த்துவது ரொம்ப கஷ்டமாக இருந்தது, இரண்டு கிலோவுக்கு மேல் எதையும் தூக்கவே முடியவில்லை. ஆனால் யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபித்ததால்தான் இன்றுவரை என்னால் தாக்குப்பிடிக்க முடிந்திருக்கிறது. காவற்கோபுர பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளும் எனக்கு பெருமளவு உதவின. அதில் ஒரு கட்டுரை, மீகா 6:8-ன் பேரில் விளக்கமளித்து, மனத்தாழ்மையுடன் கடவுளோடு நடப்பது ஒருவர் தன் வரம்புகளை அறிந்திருப்பதை அர்த்தப்படுத்துவதாக குறிப்பிட்டது. இது, மோசமான நிலைமையிலும் மனந்தளராதிருக்க வேண்டியதை எனக்கு உணர்த்தியது; ஊழியத்தில் நான் செலவிட விரும்பிய நேரத்தைவிட குறைவாக செலவிட்டாலும் சோர்ந்துவிடக் கூடாது என்பதையும் உணர வைத்தது. தூய உள்நோக்கங்களுடன் யெகோவாவை சேவிப்பதே முக்கியம் என புரிந்துகொண்டேன்.”
16 அவர் தொடர்ந்து இப்படி சொல்கிறார்: “கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் செல்ல நான் எடுத்த முயற்சிகளுக்காக மூப்பர்கள் என்னை எப்போதும் பாராட்டினார்கள். இளைஞர் என்னைக் கட்டியணைத்து வரவேற்றார்கள். பயனியர் ஊழியர்கள் மிகவும் பொறுத்துப் போனார்கள்; என் உடல்நலம் அதிக மோசமடையும் நாட்களில் பெரும்பாலும் எனக்கேற்றபடி தங்கள் திட்டங்களை மாற்றிக்கொண்டார்கள். சீதோஷ்ண நிலை மோசமாக இருந்தால், என்னை மறுசந்திப்புகளுக்கு அல்லது பைபிள் படிப்புகளுக்கு அழைத்துச் செல்வார்கள். என்னால் ஊழியத்திற்கு பையை தூக்கிச் செல்ல முடியாததால், என் புத்தகங்களை மற்ற பிரஸ்தாபிகள் தங்கள் பையில் வைத்துக்கொண்டார்கள்.”
17 முட்களைப் போன்ற பலவீனங்களைச் சமாளிக்க அந்த இரண்டு சகோதரிகளுக்கும் சபை மூப்பர்களும் உடன் விசுவாசிகளும் எவ்வாறு உதவி செய்தார்கள் என்பதை சிந்தியுங்கள். அவர்கள் அன்பான, நடைமுறையான உதவி அளித்தார்கள்; அது ஆவிக்குரிய, சரீர மற்றும் உணர்ச்சி சம்பந்தமான தேவைகளைப் பூர்த்தி செய்தது. பிரச்சினைகளை அனுபவிக்கும் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இது உங்களை உந்துவிக்கிறது அல்லவா? இளைஞரே, மாம்சத்திலுள்ள முட்களுடன் போராடும் சகோதர சகோதரிகளுக்கு நீங்களும் உதவியாயிருக்கலாம்.—நீதிமொழிகள் 20:29.
18. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகிற வாழ்க்கை சரிதைகளில் என்ன ஊக்குவிப்பை நாம் கண்டடையலாம்?
18 வாழ்க்கையில் பிரச்சினைகளை சமாளித்த, இன்னும் சமாளித்து வருகிற சாட்சிகள் பலருடைய வாழ்க்கை சரிதைகளையும் அனுபவங்களையும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் பிரசுரித்திருக்கின்றன. அத்தகைய கட்டுரைகளை நீங்கள் தவறாமல் வாசித்து வருகையில், உலகம் முழுவதிலுமுள்ள உங்கள் ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் பலர் எவ்வாறு துன்பங்களை சகிக்கின்றனர் என்பதை அறிவீர்கள்; பொருளாதார கஷ்டங்கள், பிரியமானவர்களை பேரழிவுகளில் பறிகொடுத்தல், ஆபத்தான போர்க்கால நிலைமைகள் ஆகியவற்றை அவர்கள் சகித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் நோய்களால் செயலிழந்து போயிருக்கிறார்கள். சுகமாயிருப்போர் சர்வசாதாரணமாக கருதும் எளிய காரியங்களைக்கூட செய்ய முடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய நோய் அவர்களை மிகக் கடுமையாய் சோதிக்கிறது; முக்கியமாக, தாங்கள் விரும்பும் அளவுக்கு கிறிஸ்தவ நடவடிக்கைகளில் பங்குகொள்ள முடியாதபோது அது அவர்களுக்குப் பெரும் சோதனையாக அமைகிறது. இளைஞரும் முதியோருமான தங்கள் சகோதர சகோதரிகள் அளிக்கும் உதவிக்கும் ஆதரவுக்கும் அவர்கள் எவ்வளவு மனமார்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்!
சகித்திருப்பது சந்தோஷத்தைத் தருகிறது
19. முட்களைப் போன்ற இக்கட்டுகள் மற்றும் பலவீனங்கள் மத்தியிலும் பவுலால் ஏன் களிகூர முடிந்தது?
19 கடவுள் தன்னை பலப்படுத்தியதை உணர்ந்து பவுல் களிகூர்ந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” (2 கொரிந்தியர் 12:9, 10) சொந்த அனுபவங்களினிமித்தம் பவுலால் இவ்வாறு நம்பிக்கையுடன் சொல்ல முடிந்தது: “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே [“என்னை பெலப்படுத்துகிறவராலே,” NW] எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.”—பிலிப்பியர் 4:11-13.
20, 21. (அ) ‘காணப்படாதவைகளின்’ பேரில் சிந்தனை செய்வது ஏன் சந்தோஷத்தைத் தரும்? (ஆ) இப்போது ‘காணப்படாத’ எவற்றை பூமிக்குரிய பரதீஸில் காண ஆவலாய் இருக்கிறீர்கள்?
20 ஆகையால், நம் மாம்சத்திலுள்ள அடையாள அர்த்தமுடைய எந்த முள்ளையும் நாம் சகித்தால், நம்முடைய பலவீனத்தில் யெகோவாவின் வல்லமை பூரணமாக்கப்பட்டிருப்பதை எல்லாருக்கும் காட்ட முடியும்; இது மிகுந்த சந்தோஷத்தைத் தரும். பவுல் இவ்வாறு எழுதினார்: “நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; . . . உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் . . . காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.”—2 கொரிந்தியர் 4:16-18.
21 இன்று யெகோவாவின் ஜனங்களில் பெரும்பான்மையருக்கு பூமிக்குரிய பரதீஸில் வாழும் நம்பிக்கை உண்டு; யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிற மற்ற ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழும் நம்பிக்கையும் இருக்கிறது. அத்தகைய ஆசீர்வாதங்கள் இன்று நமக்கு ‘காணப்படாதவைகள்.’ எனினும் அந்த ஆசீர்வாதங்களை கண்ணார காணப்போகிற, நிச்சயமாகவே அவற்றை என்றென்றும் அனுபவித்து மகிழப்போகிற அந்தக் காலம் விரைவில் வந்துகொண்டிருக்கிறது. அப்போது, முட்களைப் போன்ற எந்தப் பிரச்சினையோடும் இனி ஒருபோதும் அவதிப்பட வேண்டியதே இருக்காது! கடவுளுடைய குமாரன், “பிசாசினுடைய கிரியைகளையும்,” ‘மரணத்துக்கு அதிகாரியான அவனையும் அழித்துவிடுவார்.’—1 யோவான் 3:8; எபிரெயர் 2:14.
22. என்ன நம்பிக்கையும் தீர்மானமும் நமக்கு இருக்க வேண்டும்?
22 ஆகையால், இன்று எந்த முள் நம்மை வேதனைப்படுத்தினாலும் தொடர்ந்து அதை சமாளிப்போமாக. தாராளமாக வல்லமையை அருளுகிற யெகோவாவின் உதவியால் பவுலைப் போல சமாளிக்க நமக்கு பெலன் இருக்கும். அதோடு, பூமிக்குரிய பரதீஸிய வாழ்க்கையில், நம்முடைய கடவுளாகிய யெகோவா நமக்காக செய்திருக்கிற எல்லா வியத்தகு செயல்களுக்காகவும் நாள்தோறும் அவரைத் துதிப்போம்.—சங்கீதம் 103:2.
[அடிக்குறிப்பு]
a “பைபிளின் கருத்து: மனமுறிவைச் சமாளிப்பது எப்படி?” என்ற கட்டுரையை மே 8, 2000, விழித்தெழு! வெளியீட்டில் காண்க.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• உண்மையான கிறிஸ்தவர்களின் உத்தமத்தை முறிப்பதற்கு பிசாசானவன் ஏன், எவ்வாறு முயற்சி செய்கிறான்?
• எவ்வாறு யெகோவாவின் வல்லமை ‘பலவீனத்தில் பூரணமாக விளங்க’ செய்யப்படுகிறது?
• பிரச்சினைகளால் வேதனைப்படுவோரை மூப்பர்களும் மற்றவர்களும் எவ்வாறு உந்துவிக்கலாம்?
[பக்கம் 18-ன் படம்]
மாம்சத்திலிருந்த முள்ளை நீக்கும்படி பவுல் மூன்று தடவை கடவுளிடம் ஜெபித்தார்