கடவுளுடைய வார்த்தையை கற்பிக்க முற்றிலும் தயாராயிருத்தல்
‘ஊழியராயிருக்கும்படி தேவனே எங்களை ஏற்ற தகுதியுள்ளவர்களாக்கினார்.’ —2 கொரிந்தியர் 3:5, 6, NW.
1, 2. சில சமயங்களில் பிரசங்கிக்க என்ன முயற்சிகள் செய்யப்படுகின்றன, ஆனால் அவை பொதுவாகவே ஏன் தோல்வியடைகின்றன?
ஒரு வேலையை செய்வதற்கான தகுதிகள் உங்களிடம் இல்லாதிருக்கையில் அதை செய்யச் சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? இதை சற்று கற்பனை செய்து பாருங்கள்: தேவையான எல்லா பொருட்களுமே உங்கள் முன் பரவலாக வைக்கப்பட்டுள்ளன, எல்லா உபகரணங்களும் தயார். ஆனால் அந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என உங்களுக்கு கொஞ்சம்கூட தெரியாது. இந்த வேலை சீக்கிரமாக முடிய வேண்டிய ஒன்று என்பதால் நிலைமை இன்னும் மோசமாகிறது. அதைச் செய்துவிடுவீர்கள் என அனைவரும் உங்களையே நம்பியிருக்கின்றனர். அது எவ்வளவு ஏமாற்றம் தருவதாக இருக்கும்!
2 இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலை முற்றிலும் கற்பனையல்ல. ஓர் உதாரணத்தை கவனியுங்கள். சில சமயங்களில், வீட்டுக்கு வீடு ஊழியத்தை ஒழுங்கமைத்து செய்ய கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் ஒன்று முயலலாம். ஆனால், அப்படிப்பட்ட முயற்சிகள் எப்போதும் தோல்வியையே தழுவுகின்றன, சில வாரங்கள் அல்லது மாதங்களில் முற்றிலும் நின்றுபோகின்றன. ஏன்? ஏனெனில், அந்த வேலையை செய்ய தகுதி பெறும்படி கிறிஸ்தவமண்டலம் தன்னை பின்பற்றுவோருக்கு உதவி செய்யவில்லை. இந்த உலகின் இறையியல் கல்லூரிகளிலும் செமினரிகளிலும் பல வருடங்கள் பயின்ற பாதிரிமாருக்குக்கூட அந்த பிரசங்க வேலையை செய்ய தகுதியில்லை. எதை வைத்து இவ்வாறு சொல்கிறோம்?
3. என்ன சொற்றொடர் 2 கொரிந்தியர் 3:5, 6-ல் மூன்று முறை உபயோகிக்கப்பட்டுள்ளது, அதன் அர்த்தம் என்ன?
3 கிறிஸ்தவ நற்செய்தியை பிரசங்கிக்க ஒருவனை உண்மையில் எது தகுதியுள்ளவனாக்குகிறது என்பதை கடவுளுடைய வார்த்தை விளக்குகிறது. “எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பது போல ஒன்றை யோசிக்கிறதற்கு எங்களுக்கு நாங்களே ஏற்ற தகுதி பெற்றவர்கள் அல்ல; எங்களுடைய ஏற்ற தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. . . . ஊழியராயிருக்கும்படி அவரே எங்களை ஏற்ற தகுதியுள்ளவர்களாக்கினார்” என எழுதும்படி அப்போஸ்தலன் பவுல் ஏவப்பட்டார். (2 கொரிந்தியர் 3:5, 6, NW) இங்கே “ஏற்ற தகுதி” என்ற சொற்றொடர் மூன்று முறை உபயோகிக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள். அதன் அர்த்தம் என்ன? வைன்ஸ் எக்ஸ்பாசிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் பிப்ளிகல் உவர்ட்ஸ் கூறுவதாவது: “[இதன் மூல கிரேக்க வார்த்தை] பொருட்களைக் குறிக்கையில் ‘போதுமான’ என்ற அர்த்தம் தருகிறது . . . ; மனிதர்களைக் குறிக்கையிலோ ‘திறமை வாய்ந்த,’ ‘தகுதி பெற்ற’ என்ற அர்த்தம் தருகிறது.” ஆகவே, ‘ஏற்ற தகுதி பெற்றவர்’ ஒரு வேலையை செய்ய திறமை வாய்ந்தவர், தகுதியுள்ளவர். ஆம், நற்செய்தியின் உண்மையான ஊழியர்கள் இந்த வேலையை செய்ய தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் பிரசங்கிக்க திறமை வாய்ந்தவர்கள், தயாராக இருப்பவர்கள், தகுதியுள்ளவர்கள்.
4. (அ) விசேஷித்த சிலர் மட்டுமே கிறிஸ்தவ ஊழியத்திற்கு தகுதி பெறுவது கிடையாது என்பதை பவுலின் உதாரணம் எவ்வாறு காட்டுகிறது? (ஆ) நாம் ஊழியர்களாக தகுதி பெற யெகோவா என்ன மூன்று வழிகளை உபயோகிக்கிறார்?
4 ஆனால் இந்தத் தகுதி எங்கிருந்து வருகிறது? அவர்களுடைய தனிப்பட்ட திறமையினாலா? மேம்பட்ட அறிவினாலா? புகழ்பெற்ற கல்லூரிகளில் விசேஷித்த கல்வி பயின்றதினாலா? அப்போஸ்தலன் பவுல் இவற்றையெல்லாம் பெற்றிருந்தார் என்று அத்தாட்சிகள் காட்டுகின்றன. (அப்போஸ்தலர் 22:3; பிலிப்பியர் 3:4, 5) ஆனாலும், ஓர் ஊழியனாக அவருக்கிருந்த தகுதிகளை மேற்படிப்பு கல்லூரிகளிலிருந்து அல்ல, மாறாக யெகோவா தேவனிடமிருந்தே பெற்றதாக அவர் மனத்தாழ்மையோடு ஒப்புக்கொள்கிறார். அந்தத் தகுதிகள் விசேஷித்த சிலருக்கு மட்டுமே உரியவையா? ‘நம்முடைய ஏற்ற தகுதி’ என்றே கொரிந்திய சபைக்கு பவுல் எழுதினார். யெகோவா கொடுத்திருக்கும் வேலையை செய்து முடிக்க உதவியாக அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் அனைவருமே தகுதி பெறும்படி அவர் பார்த்துக் கொள்கிறார் என்பதை இது தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இன்று உண்மை கிறிஸ்தவர்கள் தகுதி பெற யெகோவா எவ்வாறு உதவுகிறார்? அவர் உபயோகிக்கும் மூன்று வழிகளைப் பற்றி சிந்திக்கலாம்: (1) அவருடைய வார்த்தை, (2) அவருடைய பரிசுத்த ஆவி, (3) அவருடைய பூமிக்குரிய அமைப்பு.
யெகோவாவின் வார்த்தை நம்மை தகுதி பெற செய்கிறது
5, 6. பரிசுத்த வேதவசனங்கள் உண்மை கிறிஸ்தவர்கள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன?
5 முதலாவதாக, ஊழியர்கள் ஆவதற்கு கடவுளுடைய வார்த்தை நம்மை எவ்வாறு தகுதி பெற செய்கிறது? “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:16, 17) ஆகவே, கடவுளுடைய வார்த்தையை மக்களுக்கு கற்பிக்கும் ‘நற்கிரியையை’ செய்ய பரிசுத்த வேதாகமமே நம்மை ‘தேறினவர்களாகவும், தகுதியுள்ளவர்களாகவும்’ ஆக்குகிறது. ஆனால், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் ஆதரவாளர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் கையிலும் பைபிள் உள்ளதே! ஒரே புத்தகம், தகுதி வாய்ந்த ஊழியர்களாகும்படி சிலருக்கு உதவி செய்துவிட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் போவது எப்படி? பைபிளைப் பற்றிய நம் மனப்பான்மையே இதற்கு காரணம்.
6 சர்ச்சுக்கு செல்லும் அதிகமானோர் பைபிளின் செய்தியை ‘மெய்யாகவே தேவவசனமாக’ ஏற்றுக்கொள்வதில்லை என்பது வருத்தகரமானது. (1 தெசலோனிக்கேயர் 2:13) இதன் சம்பந்தமாக கிறிஸ்தவமண்டலம் வெட்கப்படத்தக்க பதிவையே ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்கள் இறையியல் கல்லூரிகளில் படித்த பிறகாவது கடவுளுடைய வார்த்தையை கற்பிக்க பாதிரிமார்கள் தயாராய் இருக்கின்றனரா? இல்லவே இல்லை. பைபிளில் நம்பிக்கையுள்ளவர்களாக செமினரிகளில் படிக்க ஆரம்பிக்கும் சில மாணவர்கள் படித்து முடிக்கையில் சந்தேகவாதிகளாக மாறிவிடுகின்றனரே! அதற்கு பிறகு அவர்களில் அநேகர் கடவுளுடைய வார்த்தையை முழு மனதோடு நம்பாத காரணத்தால் அதை பிரசங்கிப்பதற்கு பதிலாக மற்ற காரியங்களில் தங்களை மும்முரமாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அதாவது, அரசியல் சச்சரவுகளில் ஒரு பிரிவினரை ஆதரிப்பது, சமூக முன்னேற்றங்களில் ஈடுபடுவது அல்லது தங்கள் பிரசங்கங்களில் இந்த உலகின் தத்துவங்களை உயர்த்திப் பேசுவது போன்றவற்றையே செய்கின்றனர். (2 தீமோத்தேயு 4:3) இதற்கு நேர்மாறாக, உண்மை கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்றுகின்றனர்.
7, 8. அவருடைய நாட்களிலிருந்த மதத் தலைவர்களுடையதைவிட கடவுளுடைய வார்த்தையிடமாக இயேசுவின் மனப்பான்மை எவ்வாறு வித்தியாசப்பட்டது?
7 இயேசுவின் நாளிலிருந்த மதத் தலைவர்கள் அவருடைய எண்ணங்களில் செல்வாக்கு செலுத்த அவர் அனுமதிக்கவில்லை. சிறிய தொகுதியான தம் அப்போஸ்தலர்களுக்கு கற்பித்தாலும் சரி பெருந்திரளான ஜனங்களுக்கு கற்பித்தாலும் சரி, இயேசு பரிசுத்த வேத எழுத்துக்களை அதிகமாக பயன்படுத்தினார். (மத்தேயு 13:10-17; 15:1-11) இதன் காரணமாகவே அவருடைய நாட்களிலிருந்த மதத் தலைவர்களிலிருந்து இயேசு வித்தியாசமானவராக இருந்தார். கடவுளுடைய ஆழமான விஷயங்களுக்கு பொது மக்கள் அதிக கவனம் செலுத்தக் கூடாது என்பதில் அந்த தலைவர்கள் குறியாக இருந்தனர். வேதாகமத்திலுள்ள சில பகுதிகள் ஆழ்ந்த அர்த்தமுள்ளவையாகவும் புரிந்துகொள்வதற்கு கடினமாகவும் இருப்பதால் தங்களுடைய மிக நெருக்கமான மாணவனோடு மட்டுமே அதை கலந்துபேச வேண்டும் என அந்த நாட்களிலிருந்த ஆசிரியர்கள் நினைப்பது வழக்கம். அப்படி பேசும்போதுகூட, தாழ்ந்த குரலிலும் தங்கள் தலையை துணியால் மூடிக்கொண்டும்தான் பேசுவார்களாம்! கடவுளுடைய பெயரை உச்சரிப்பதில் மூடநம்பிக்கை இருந்தது போலவே பைபிளின் சில பகுதிகளை கலந்துபேசுவதிலும் அந்த தலைவர்களுக்கு மூடநம்பிக்கை இருந்தது!
8 கிறிஸ்துவோ அப்படியிருக்கவில்லை. குறிப்பிட்டவர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் அனைவருமே ‘தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையையும்’ சிந்திக்க வேண்டும் என அவர் நம்பினார். அறிவு என்கிற திறவுகோலை வல்லுனர்கள் என்ற ஒரு விசேஷித்த தொகுதியினரிடம் ஒப்படைக்க இயேசு விரும்பவில்லை. அவர் சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம் பண்ணுங்கள்.” (மத்தேயு 4:4; 10:27) எத்தனை பேரிடம் முடியுமோ அத்தனை பேரிடமும் கடவுளைப் பற்றிய அறிவை பகிர்ந்துகொள்ள இயேசு மிகவும் ஆவலாக இருந்தார்.
9. உண்மை கிறிஸ்தவர்கள் பைபிளை எவ்வாறு உபயோகிக்கிறார்கள்?
9 கடவுளுடைய வார்த்தையே நம் போதகத்தின் மையமாக இருக்க வேண்டும். உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் பேச்சு கொடுக்கையில் பைபிளிலிருந்து சில வசனங்களை வாசிப்பது மட்டுமே போதாது. மாறாக, ஒரு வசனத்தை அதன் சூழமைவில் விளக்கி, உதாரணம் காட்டி, பொருத்திப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். பைபிளின் செய்தியை, அடையாள அர்த்தத்தில், அதன் பக்கங்களிலிருந்து எடுத்து சபையாரின் இதயங்களில் பதிய வைப்பதே நம் குறிக்கோள். (நெகேமியா 8:8, 12) ஆலோசனை அல்லது திருத்துவதற்காக சிட்சை கொடுக்கும்போதும் பைபிளையே உபயோகிக்க வேண்டும். யெகோவாவின் ஜனங்கள் பல மொழிகளை பேசினாலும், பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்தாலும் அனைவருமே ஒப்பற்ற புத்தகமாகிய பைபிளை மதிக்கிறார்கள்.
10. பைபிளின் ஏவப்பட்ட செய்தி நம்மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தலாம்?
10 அப்படிப்பட்ட மதிப்பு கொடுத்து உபயோகிக்கையில் பைபிளின் செய்தி வல்லமை செலுத்துகிறது. (எபிரெயர் 4:12) பைபிளுக்கு விரோதமான பழக்கங்களாகிய வேசித்தனம், விபச்சாரம், விக்கிரக வணக்கம், குடிபோதை, திருட்டு ஆகியவற்றிலிருந்து விலகுவது போன்ற மாற்றங்களை தங்கள் வாழ்க்கையில் செய்ய அது மக்களை உந்துவிக்கிறது. பழைய ஆள்தன்மையை நீக்கிவிட்டு புதியதை தரித்துக்கொள்ளவும் அது அநேகருக்கு உதவியுள்ளது. (எபேசியர் 4:20-24) எந்த மனித கருத்திற்கும், பாரம்பரியத்திற்கும் மேலாக பைபிளை மதித்து அதை உண்மையோடு பின்பற்றினால், நாம் தேறினவர்களாகவும், கடவுளுடைய வார்த்தையை கற்பிக்க முற்றிலும் தயாரானவர்களாகவும் இருக்க அது நிச்சயம் உதவும்.
யெகோவாவின் ஆவி நம்மை தகுதி பெற செய்கிறது
11. யெகோவாவின் பரிசுத்த ஆவி “தேற்றரவாளன்” என அழைக்கப்படுவது ஏன் பொருத்தமானது?
11 இரண்டாவதாக, நாம் முற்றிலும் தயாராயிருப்பதற்கு யெகோவாவின் பரிசுத்த ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தி எவ்வாறு உதவுகிறது என்பதை சிந்திப்போம். இருப்பதிலேயே மிகவும் வல்லமை வாய்ந்த சக்தி யெகோவாவின் ஆவியே என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. விசேஷித்த அந்த சக்தியை உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரின் சார்பாக உபயோகிக்கும் அதிகாரத்தை யெகோவா தமது அன்புள்ள குமாரனிடம் கொடுத்திருக்கிறார். ஆகவே, பரிசுத்த ஆவியை “தேற்றரவாளன்” என இயேசு குறிப்பிட்டது பொருத்தமானதே. (யோவான் 16:7) அந்த ஆவிக்காக யெகோவாவிடம் கேட்கும்படி தம்மை பின்பற்றியவர்களை உற்சாகப்படுத்தினார்; கேட்பவர்களுக்கு யெகோவா அதை தாராளமாக கொடுப்பார் என்ற உறுதியையும் அளித்தார்.—லூக்கா 11:10-13; யாக்கோபு 1:17.
12, 13. (அ) ஊழியத்தில் நமக்கு உதவும்படி பரிசுத்த ஆவிக்காக ஜெபிப்பது ஏன் முக்கியம்? (ஆ) பரிசுத்த ஆவி அவர்களில் செயல்படவில்லை என்பதை பரிசேயர்கள் எவ்வாறு காண்பித்தனர்?
12 பரிசுத்த ஆவிக்காக நாம் தினமும் ஜெபிக்க வேண்டும், முக்கியமாக நம் ஊழியத்தில் உதவும்படி கேட்க வேண்டும். பரிசுத்த ஆவி நமக்கு எந்த விதத்தில் உதவும்? அது நம் மனதிலும் இதயத்திலும் செயல்பட்டு, மாற்றம் செய்யவும், முன்னேற்றம் அடையவும், பழைய ஆள்தன்மையை நீக்கிவிட்டு புதியதை தரித்துக்கொள்ளவும் நமக்கு உதவும். (கொலோசெயர் 3:9, 10) கிறிஸ்துவைப் போன்ற அருமையான குணங்களை வளர்க்கவும் அது நமக்கு உதவும். கலாத்தியர் 5:22, 23-ஐ நம்மில் அநேகர் மனப்பாடமாக சொல்லிவிடுவோம். அந்த வசனங்கள் கடவுளுடைய ஆவியின் கனிகளை பட்டியலிடுகின்றன. முதலில் வருவது அன்பே. அந்தக் குணம் நம் ஊழியத்திற்கு அத்தியாவசியமானது. ஏன்?
13 நம்மை அதிகளவில் உந்துவிக்கும் சக்தி அன்பே ஆகும். யெகோவாவுக்கும் அயலானுக்குமான அன்பே நற்செய்தியை பிரசங்கிக்கும்படி உண்மை கிறிஸ்தவர்களை உந்துவிக்கிறது. (மாற்கு 12:28-31) அப்படிப்பட்ட அன்பு இல்லையென்றால் கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போராக நாம் உண்மையில் தகுதி பெறவே முடியாது. இயேசுவுக்கும் பரிசேயர்களுக்கும் மத்தியிலிருந்த வித்தியாசத்தை கவனியுங்கள். மத்தேயு 9:36 இயேசுவை பற்றி இவ்வாறு கூறுகிறது: “அவர் திரளான ஜனங்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி”னார். பொதுமக்களைப் பற்றி பரிசேயர்கள் எவ்வாறு உணர்ந்தனர்? ‘வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்’ என அவர்கள் கூறினர். (யோவான் 7:49) அந்த பரிசேயர்கள் மக்களிடம் கொஞ்சமும் அன்பு வைக்கவில்லை, மாறாக மிகுந்த வெறுப்பையே கொண்டிருந்தனர். யெகோவாவின் ஆவி அவர்களில் செயல்படவில்லை என்பது தெளிவாக உள்ளது.
14. ஊழியத்தில் ஈடுபடுகையில் அன்பு காண்பித்த இயேசுவின் முன்மாதிரி நம்மை எவ்வாறு உந்துவிக்க வேண்டும்?
14 இயேசு ஜனங்கள் மேல் மனதுருகினார். அவர்கள் படும் கஷ்டத்தை அவர் அறிந்திருந்தார். அவர்கள் தவறாக நடத்தப்பட்டு, தொய்ந்துபோய், சிதறப்பட்ட, மேய்ப்பனில்லாத ஆடுகள்போல் இருந்தனர் என்பதை அவர் அறிந்திருந்தார். ‘மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தார்’ என யோவான் 2:25 கூறுகிறது. சிருஷ்டிப்பின் சமயத்தில் யெகோவாவின் கைதேர்ந்த வேலையாளாக இருந்ததால் இயேசு, மனித இயல்பை எப்போதுமே முழுமையாக புரிந்திருந்தார். (நீதிமொழிகள் 8:30, 31, NW) அந்தப் புரிந்துகொள்ளுதலே அவருடைய அன்பை அதிகரித்தது. பிரசங்க வேலையை செய்வதற்கு அப்படிப்பட்ட அன்பே நம்மை எப்பொழுதும் தூண்டுவதாக! இதில் இன்னும் முன்னேற்றம் செய்வதற்கு தேவையுள்ளது என உணர்ந்தால் யெகோவாவின் பரிசுத்த ஆவிக்காக ஜெபம் செய்து அதற்கு இசைவாய் செயல்படுவோமாக. யெகோவா நிச்சயம் பதிலளிப்பார். நற்செய்தியை பிரசங்கிக்க முற்றிலும் தகுதி பெற்றிருந்த கிறிஸ்துவை நாம் இன்னும் முழுமையாக பின்பற்ற, எதிர்த்து வெல்ல முடியாத இந்த சக்தியை நமக்களித்து உதவுவார்.
15. ஏசாயா 61:1-3-ல் உள்ள வார்த்தைகள் எவ்வாறு இயேசுவுக்கு பொருந்தின, அதேசமயம் வேதபாரகரையும் பரிசேயரையும் அவை எவ்வாறு பகிரங்கப்படுத்தின?
15 இயேசு இத்தகுதிகளை எங்கிருந்து பெற்றார்? “கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்” என்று அவர் கூறினார். (லூக்கா 4:17-21) ஆம், யெகோவாவே பரிசுத்த ஆவியின் மூலம் இயேசுவை நியமித்தார். இயேசுவிற்கு கூடுதலான எந்த சான்றுகளும் தேவைப்படவில்லை. அவருடைய நாளிலிருந்த மதத் தலைவர்கள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டிருந்தனரா? இல்லை. அதுமட்டுமா, இயேசு சப்தமாக வாசித்து தமக்கே பொருத்திய ஏசாயா 61:1-3-ல் உள்ள தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றவும் அவர்கள் தயாராயில்லை. தயவுசெய்து அந்த வசனங்களை வாசித்து, மாய்மாலமிக்க வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் எந்தத் தகுதியும் இருக்கவில்லை என்பதை நீங்களே பாருங்கள். ஏழைகளுக்கு பிரசங்கிக்க அவர்களிடம் எந்த நற்செய்தியும் இல்லை. அதோடு ஆவிக்குரிய கருத்தில், அவர்களே குருடர்களாகவும் மனித பாரம்பரியங்களுக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருக்கையில் அவர்களால் எப்படி சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் கொடுக்க முடியும்? அவர்களைப் போலில்லாமல் ஜனங்களுக்கு போதிக்க நாம் தகுதி பெற்றிருக்கிறோமா?
16. ஊழியர்களாக தங்களுடைய தகுதிகளை பற்றி யெகோவாவின் ஜனங்கள் இன்று என்ன நம்பிக்கை கொண்டிருக்கலாம்?
16 கிறிஸ்தவமண்டலத்தின் மேற்படிப்பு கல்லூரிகளில் நாம் படிக்கவில்லை என்பது உண்மையே. எந்த இறையியல் செமினரியும் நம்மை போதகர்களாக நியமிக்கவும் இல்லை. அப்படியென்றால் நாம் தகுதிகளில் குறைவுபடுகிறோமா? இல்லவே இல்லை! யெகோவாவே நம்மை அவருடைய சாட்சிகளாக நியமித்திருக்கிறார். (ஏசாயா 43:10-12) அவருடைய ஆவிக்காக ஜெபித்து அதற்கு இசைவாக செயல்பட்டால் எல்லாவற்றிற்கும் மேலான தகுதிகளை நாம் பெறுவோம். பெரிய போதகரான இயேசுவின் உன்னத உதாரணத்தை, அபூரணத்தின் காரணமாக நம்மால் முழுமையாய் பின்பற்ற முடிவதில்லை. இருந்தாலும், அவருடைய வார்த்தையை கற்பிப்போராக தகுதி பெறவும் நம்மை தயார்படுத்தவும் யெகோவா தமது ஆவியை உபயோகிக்கிறார் என்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இல்லையா?
யெகோவாவின் அமைப்பு நம்மை தகுதி பெற செய்கிறது
17-19. ஊழியர்களாக தகுதி பெற, யெகோவாவின் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஐந்து வாராந்தர கூட்டங்கள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன?
17 இப்போது யெகோவாவுடைய வார்த்தையை கற்பிப்போராக நம்மை தயார்படுத்த அவர் உபயோகிக்கும் மூன்றாவது வழியை சிந்திக்கலாம்; அதுவே, ஊழியர்களாகும்படி நமக்கு பயிற்சியளிக்கும் அவருடைய பூமிக்குரிய சபை அல்லது அமைப்பு. எவ்வாறு? நாம் அனுபவிக்கும் போதனா திட்டங்களை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! ஒவ்வொரு வாரமும் ஐந்து கிறிஸ்தவ கூட்டங்களை அனுபவிக்கிறோம். (எபிரெயர் 10:24, 25) சபை புத்தகப் படிப்பிற்காக சிறு சிறு தொகுதிகளாக கூடிவருகிறோம். அப்போது யெகோவாவின் அமைப்பு கொடுக்கும் ஒரு புத்தகத்திலிருந்து ஆழமான விஷயங்களை பைபிள் படிப்பில் அனுபவிக்கிறோம். செவிகொடுப்பதன் மூலமும் பதில் சொல்வதன் மூலமும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்கிறோம். புத்தக படிப்பு கண்காணி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட போதனையையும் கவனத்தையும் செலுத்துகிறார். பொதுக் கூட்டம் மற்றும் காவற்கோபுர படிப்பு மூலம் நாம் சத்துள்ள ஆவிக்குரிய உணவை ஏராளமாக பெறுகிறோம்.
18 எவ்வாறு கற்பிப்பது என போதிப்பதற்காகவே தேவராஜ்ய ஊழியப் பள்ளி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணாக்கர் பேச்சுகளுக்காக தயாரிக்கையில், கடவுளுடைய வார்த்தையை உபயோகித்து பல்வேறு விஷயங்களை எவ்வாறு கற்பிக்கலாம் என கற்றுக்கொள்கிறோம். (1 பேதுரு 3:15) நன்கு தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேச்சு கொடுப்பதற்காக தயாரிக்கையில் புதிதாக ஒன்றை கற்றுக்கொண்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? அநேகருக்கு அந்த அனுபவம் உள்ளது. ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு கற்பிக்கையில்தான் அதைப் பற்றிய நம் அறிவு இன்னும் கூர்மையாகிறது. கூட்டத்தில் நமக்கு பேச்சு நியமிப்பு இல்லையென்றாலும் இன்னும் சிறந்த போதகராவதற்கு நாம் கற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு மாணாக்கரிலும் உள்ள நல்ல பேச்சு பண்புகளை கவனிக்கிறோம், அவற்றை பின்பற்றும் வழிகளை பற்றி யோசிக்கலாம்.
19 ஊழியக் கூட்டமும், கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போராக நம்மை தயார்படுத்துவதற்காகவே திட்டமிடப்பட்டுள்ளது. ஊழியத்தை மனதிற்கொண்டு தயாரிக்கப்பட்ட உற்சாகமூட்டும் பேச்சுகள், கலந்தாலோசிப்புகள், நடிப்புகள் ஆகியவற்றை ஒவ்வொரு வாரமும் அனுபவித்து மகிழ்கிறோம். எந்தப் பிரசங்கத்தை உபயோகிக்கலாம்? நம் பொது ஊழியத்தில் எதிர்ப்படும் பிரத்தியேக சவால்களை எவ்வாறு சமாளிக்கலாம்? ஊழியத்தில் நாம் இதுவரை முயன்று பார்த்திராத வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா? மறுசந்திப்புகள் செய்கையிலும் பைபிள் படிப்புகள் நடத்துகையிலும் இன்னும் திறம்பட்ட போதகர்களாக ஆவதற்கு எது நமக்கு உதவும்? (1 கொரிந்தியர் 9:19-22) இதைப் போன்ற கேள்விகளுக்கான பதில்கள் ஊழியக் கூட்டத்தில் விவரமாக கலந்தாலோசிக்கப்படுகின்றன. அந்தக் கூட்டத்தின் பெரும்பாலான பேச்சுகள் நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள கட்டுரைகளைச் சார்ந்ததே. இதுவும் நம்முடைய அதிமுக்கிய வேலைக்காக நம்மை தயார்படுத்துவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு உபகரணமாகும்.
20. கூட்டங்களிலிருந்தும் மாநாடுகளிலிருந்தும் நாம் எவ்வாறு முழுமையாக பயன் பெறலாம்?
20 நமது கூட்டங்களுக்காக தயாரித்து செல்வதன் மூலமும், கற்றுக்கொண்டவற்றை போதகர்களாக நமது ஊழியத்தில் பின்பற்றுவதன் மூலமும் நாம் ஏராளமான பயிற்சியைப் பெறுகிறோம். அதுமட்டுமல்ல, கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போராக திறமை பெறுவதற்காகவே தயாரிக்கப்பட்ட அசெம்பிளிகளும் மாநாடுகளும் உட்பட இன்னும் பெரிய கூட்டங்களும் நமக்கு உள்ளன. கூர்ந்து கவனம் செலுத்தவும், கேட்ட ஆலோசனைக்கு ஏற்ப நடக்கவும் நாம் மிகவும் ஆவலாய் இருக்கிறோம் அல்லவா?—லூக்கா 8:18.
21. நம் பயிற்சி பயனளிப்பதை என்ன அத்தாட்சி காட்டுகிறது, அதற்கான பாராட்டு யாரை சேரும்?
21 யெகோவா அளித்திருக்கும் பயிற்சி பலனுள்ளதாக இருந்திருக்கிறதா? உண்மைகளை பேசவிடுவோமே. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் அடிப்படை பைபிள் போதனைகளை கற்றுக்கொள்ளவும் கடவுள் எதிர்பார்ப்பவற்றிற்கு இசைவாக வாழவும் உதவியை பெறுகின்றனர். நமது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, என்றாலும் அதற்கான பாராட்டு நம் யாரையும் சேராது. இயேசுவைப் போலவே நாமும் காரியங்களை நியாயமாக நோக்க வேண்டும். “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று அவர் கூறினார். பூர்வகால அப்போஸ்தலர்களைப் போலவே நம்மில் அநேகர் படிப்பறிவில்லாத, சாதாரணமானவர்களே. (யோவான் 6:44; அப்போஸ்தலர் 4:13) நம்முடைய வெற்றி யெகோவா மீதே சார்ந்துள்ளது, நேர்மை இருதயமுள்ள மக்களை அவரே சத்தியத்தினிடமாக கவர்ந்திழுக்கிறார். அப்போஸ்தலன் பவுல் அதை மிகவும் அழகாக கூறினார்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார்.”—1 கொரிந்தியர் 3:6.
22. கிறிஸ்தவ ஊழியத்தில் முழுமையாக பங்குகொள்வது பற்றி நாம் ஏன் ஒருபோதும் அளவுக்கதிகமாக சோர்ந்துவிடக் கூடாது?
22 யெகோவாவுடைய வார்த்தையை கற்பிக்கும் நமது ஊழியத்தில் அவரும் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். போதகர்களாக இருக்க நாம் தகுதியற்றவர்கள் என்று அவ்வப்போது உணரலாம். ஆனால், யெகோவாவே தம்மிடமாகவும் தமது குமாரனிடமாகவும் மக்களை கவர்ந்திழுக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். அந்தப் புதியவர்களுக்கு ஊழியம் செய்ய, அவருடைய வார்த்தை, பரிசுத்த ஆவி, பூமிக்குரிய அமைப்பு மூலமாக யெகோவாவே நமக்கு தகுதியளிக்கிறார். கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போராக நாம் முற்றிலும் தயாராயிருக்க அவர் இப்போது கொடுத்துவரும் நன்மையான காரியங்களை பின்பற்றுவதன் மூலம் அவருடைய பயிற்சியை ஏற்றுக்கொள்வோமாக!
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• பிரசங்க வேலை செய்ய பைபிள் எவ்வாறு நம்மை தயாராக்குகிறது?
• நாம் ஊழியர்களாக தகுதி பெறுவதில் பரிசுத்த ஆவி என்ன பங்கு வகிக்கிறது?
• நற்செய்தியை பிரசங்கிப்பவராக தகுதி பெற யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பு உங்களுக்கு எவ்வாறு உதவியுள்ளது?
• ஊழியத்தில் பங்குகொள்கையில் நாம் ஏன் நிச்சயத்துடன் இருக்கலாம்?
[பக்கம் 25-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையை கற்பிப்பவராக இயேசு ஜனங்களிடம் அன்பு காட்டினார்