கிறிஸ்தவர்கள் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கிறார்கள்
“உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.”—மத்தேயு 13:16.
1. சீனாய் மலையில் மோசேயைப் பார்த்த இஸ்ரவேலர் பிரதிபலித்த விதம் நம் மனதில் என்ன கேள்வியை எழுப்புகிறது?
சீனாய் மலையில் கூடிவந்திருந்த இஸ்ரவேலர் யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு நல்ல காரணங்கள் இருந்தன. ஏனெனில் அவர் தமது பலத்த கரத்தால் அவர்களை எகிப்திலிருந்து விடுவித்திருந்தார். வனாந்தரத்தில் அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து அவர்களுடைய தேவைகளை கவனித்திருந்தார். தாக்க வந்த அமலேக்கியரின் மீது வெற்றியும் தேடித் தந்திருந்தார். (யாத்திராகமம் 14:26-31; 16:2–17:13) இஸ்ரவேலர் சீனாய் மலை அடிவாரத்தில் கூடாரமிட்டிருந்தபோது இடிமுழக்கங்களும் மின்னல்களும் அவர்களைப் பயத்தில் நடுநடுங்கச் செய்தன. பிற்பாடு, சீனாய் மலையிலிருந்து மோசே இறங்கி வந்தபோது அவரது முகம் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலித்ததைக் கண்டார்கள். ஆனால், அதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்குப் பதிலாக, அது யெகோவாவின் மகிமையென புரிந்துகொள்வதற்குப் பதிலாக அவர்கள் விலகிப் போனார்கள். அவர்கள் ‘மோசேயின் அருகில் வர அஞ்சினார்கள்.’ (யாத்திராகமம் 19:10-19; 34:30, தமிழ் கத்தோலிக்க பைபிள்) அவர்களுக்காக யெகோவா எத்தனையோ காரியங்களைச் செய்திருந்தும் அவரது மகிமையின் பிரதிபலிப்பைப் பார்க்க அவர்கள் ஏன் பயந்தார்கள்?
2. மோசேயின் முகத்தில் கடவுளின் மகிமை பிரதிபலித்ததைக் கண்டு இஸ்ரவேலர் பயந்ததற்கு எது காரணமாக இருந்திருக்கலாம்?
2 அதற்கு முன் நடந்திருந்த ஒரு காரியம் பெரும்பாலான இஸ்ரவேலர் பயப்பட்டதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அவர்கள் வேண்டுமென்றே யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் ஒரு பொன் கன்றுக்குட்டியை உருவாக்கியபோது அவர்களை அவர் சிட்சித்தார். (யாத்திராகமம் 32:4, 35) யெகோவா கொடுத்த அந்தச் சிட்சையிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டார்களா? அதற்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தார்களா? இல்லை, பெரும்பாலோர் அப்படி பாடம் கற்றுக்கொள்ளவுமில்லை, நன்றி காட்டவுமில்லை. மோசே தன்னுடைய வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், இஸ்ரவேலர் கீழ்ப்படியாமற்போன அநேக சம்பவங்களோடு பொன் கன்றுக்குட்டியைப் பற்றிய இந்தச் சம்பவத்தையும் நினைவுபடுத்தி ஜனங்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினீர்கள். நான் உங்களை அறிந்த நாள் முதற்கொண்டு, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள்.”—உபாகமம் 9:15-24.
3. மோசே எப்போதெல்லாம் முகத்தின்மேல் முக்காடிட்டுக் கொண்டார்?
3 இஸ்ரவேலர் பயந்ததைக் கண்ட மோசே என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். பதிவு இவ்வாறு சொல்கிறது: “மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான். மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்தது முதல் வெளியே புறப்படும் மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது, இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே [யெகோவாவோடே] பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும் வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.” (யாத்திராகமம் 34:33-35) மோசே ஏன் சில சமயங்களில் முகத்தின்மேல் முக்காடிட்டுக் கொண்டார்? இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இக்கேள்விகளுக்கான பதில்கள், யெகோவாவுடன் உள்ள நம் பந்தத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு உதவும்.
நழுவவிட்ட சந்தர்ப்பங்கள்
4. மோசே முக்காடிட்டுக் கொண்டதற்கான காரணத்தை அப்போஸ்தலன் பவுல் எப்படி விளக்கினார்?
4 மோசே முக்காடிட்டுக் கொண்டதற்கும் இஸ்ரவேலரின் மனநிலைக்கும் சம்பந்தமிருந்ததை அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். ‘மோசேயினுடைய முகத்திலே மகிமைப் பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவர் முகத்தை நோக்கிப் பார்க்கக் கூடாதிருந்தார்களே. அவர்களுடைய மனது கடினப்பட்டிருந்தது’ என அவர் எழுதினார். (2 கொரிந்தியர் 3:7, 14) எப்பேர்ப்பட்ட மோசமான நிலை! இஸ்ரவேலர் யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாக இருந்தார்கள், அவர்கள் தம்மிடம் நெருங்கி வர வேண்டுமென அவர் விரும்பினார். (யாத்திராகமம் 19:4-6) ஆனால் அவர்களோ, கடவுளுடைய மகிமை பிரதிபலித்ததைப் பார்க்கத் தயங்கினார்கள். தங்கள் மனங்களிலும் இருதயங்களிலும் யெகோவாமீது பற்றும் பாசமும் வைப்பதற்குப் பதிலாக, ஒரு கருத்தில் அவரை விட்டு விலகியே போனார்கள்.
5, 6. (அ) முதல் நூற்றாண்டு யூதர்களுக்கும் மோசேயின் காலத்து இஸ்ரவேலருக்கும் இடையே என்ன இணைப் பொருத்தம் இருந்தது? (ஆ) இயேசுவுக்குச் செவிகொடுத்தவர்களுக்கும் செவிகொடாதவர்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருந்தது?
5 இந்த அம்சத்திற்கு இணையான ஒரு காரியம் பொ.ச. முதல் நூற்றாண்டில் நடந்தது. பவுல் கிறிஸ்தவராக மாறிய சமயத்திற்குள்ளாகவே, நியாயப்பிரமாண உடன்படிக்கையின் இடத்தை புதிய உடன்படிக்கை ஏற்றிருந்தது; பெரிய மோசேயான இயேசு கிறிஸ்து அதன் மத்தியஸ்தராக இருந்தார். இயேசு தம் சொல்லிலும் செயலிலும் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலித்தார். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைப் பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: ‘இவர் கடவுளுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிறார்.’ (எபிரெயர் 1:3) யூதர்களுக்கு எப்பேர்ப்பட்ட அருமையான வாய்ப்பு கிடைத்தது! கடவுளுடைய சொந்தக் குமாரனிடமிருந்து நேரடியாகவே நித்திய ஜீவனுக்குரிய காரியங்களை அவர்களால் கேட்க முடிந்தது! வருத்தகரமாக, அந்த ஜனங்களில் பெரும்பாலோர் இயேசுவின் போதனைக்குச் செவிசாய்க்கவில்லை. அவர்களைக் குறித்து ஏசாயா மூலம் யெகோவா உரைத்த தீர்க்கதரிசனத்தை இயேசு இவ்வாறு மேற்கோள் காட்டினார்: “இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்.”—மத்தேயு 13:15; ஏசாயா 6:9, 10.
6 அந்த யூதர்களுக்கும் இயேசுவின் சீஷர்களுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது; தம் சீஷர்களைக் குறித்து இயேசு இவ்வாறு கூறினார்: “உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.” (மத்தேயு 13:16) உண்மை கிறிஸ்தவர்கள் யெகோவாவை அறிந்துகொள்வதற்கும் அவரைச் சேவிப்பதற்கும் வாஞ்சையாய் இருக்கிறார்கள். பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறபடி, அவரது சித்தத்தைச் செய்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அதன் காரணமாக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் புதிய உடன்படிக்கையின் ஊழியத்தில் ஈடுபடும்போது யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கிறார்கள், வேறே ஆடுகளும்கூட அப்படியே பிரதிபலிக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 3:6, 18.
நற்செய்தி ஏன் மறைக்கப்பட்டிருக்கிறது
7. நற்செய்தியைப் பெரும்பாலோர் காதுகொடுத்து கேட்காதிருப்பது ஏன் ஆச்சரியமல்ல?
7 இயேசுவின் காலத்திலும் சரி, மோசேயின் காலத்திலும் சரி, பெரும்பாலான இஸ்ரவேலர் தங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை உதறித்தள்ளினார்கள் என்பதைப் பார்த்தோம். நம்முடைய காலத்திலும் இதுதான் நடக்கிறது. நாம் சொல்லும் நற்செய்தியைப் பெரும்பாலோர் காதுகொடுத்து கேட்பதே இல்லை. இது நமக்கு ஆச்சரியமல்ல. ஏனெனில் பவுல் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது.” (2 கொரிந்தியர் 4:3, 4 பொது மொழிபெயர்ப்பு) நற்செய்தியை மூடிமறைக்க சாத்தான் முயற்சியெடுப்பது ஒருபுறமிருக்க, அநேக ஜனங்களோ அதைப் ‘பார்க்க’ மனதில்லாமல் தாங்களே தங்கள் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள்.
8. அறியாமையினால் அநேகர் எவ்விதத்தில் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள், நாமும் அவ்வாறு ஆகாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?
8 அறியாமையின் காரணமாக அநேகருடைய அடையாள அர்த்தமுடைய கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன. ஜனங்கள் ‘புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருக்கிறார்கள்’ என பைபிள் சொல்கிறது. (எபேசியர் 4:18) நியாயப்பிரமாணத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த பவுல் ஒரு கிறிஸ்தவராக மாறுவதற்கு முன்பு, தேவனுடைய சபையை துன்புறுத்துமளவுக்கு அறியாமையினால் குருடாக்கப்பட்டிருந்தார். (1 கொரிந்தியர் 15:9) என்றாலும், அவருக்கு யெகோவா சத்தியத்தை வெளிப்படுத்தினார். அதைப் பற்றி பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும் பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம் பெற்றேன்.” (1 தீமோத்தேயு 1:16) பவுலைப் போல, ஒருசமயம் கடவுளுடைய சத்தியத்தை எதிர்த்த பலர் இப்போது அவரைச் சேவித்து வருகிறார்கள். நம்மை எதிர்ப்பவர்களிடம்கூட தொடர்ந்து சாட்சி கொடுப்பதற்கு இது ஒரு நல்ல காரணமாகும். அதே சமயத்தில், கடவுளுடைய வார்த்தையை நாம் தவறாமல் படிப்பதும் அதைப் புரிந்துகொள்வதும், அறியாமையினால் அவருக்குப் பிடிக்காத விதத்தில் நடந்துகொள்ளாதபடி பாதுகாக்கிறது.
9, 10. (அ) கற்றுக்கொள்ள மனமில்லாததையும் தங்கள் சொந்தக் கருத்துகளை விட்டுக்கொடுக்காததையும் முதல் நூற்றாண்டு யூதர்கள் எப்படிக் காட்டினார்கள்? (ஆ) கிறிஸ்தவமண்டலத்தில் இதற்கு இணையான காரியத்தைப் பார்க்கிறோமா? விளக்குங்கள்.
9 அநேகருக்கு ஆன்மீக விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதற்குக் காரணம், கற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமுமில்லை, தங்களுடைய சொந்தக் கருத்துகளை விட்டுக்கொடுப்பதுமில்லை. இயேசுவையும் அவரது போதனைகளையும் யூதர்கள் அநேகர் ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததற்குக் காரணம், மோசேயின் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விடாப்பிடியாகக் கடைப்பிடித்து வந்ததுதான். ஆனால் எல்லாருமே அப்படியிருக்கவில்லை. உதாரணமாக, இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, ‘ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.’ (அப்போஸ்தலர் 6:7) என்றாலும், “மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே” என்று பெரும்பாலான யூதர்களைக் குறித்து பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 3:15) “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என யூத மதத் தலைவர்களிடம் இயேசு முன்பு சொல்லியிருந்ததை பவுல் ஒருவேளை அறிந்திருக்கலாம். (யோவான் 5:39) அவர்கள் உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்த வேதவாக்கியங்கள், இயேசுவே மேசியா என்பதைப் பகுத்துணர அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும். ஆனால் அவர்களோ தங்களுடைய சொந்தக் கருத்துகளையே பின்பற்றி வந்தார்கள்; அற்புதங்களைச் செய்த தேவனுடைய குமாரனால்கூட அவர்களை நம்ப வைக்க முடியவில்லை.
10 இன்று கிறிஸ்தவமண்டலத்திலுள்ள அநேகருடைய விஷயத்திலும் இதுவே உண்மை. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, ‘தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுள்ளது; . . . ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமாக இல்லை.’ (ரோமர் 10:2) சிலர் பைபிளைப் படித்தாலும், அதில் சொல்லப்பட்டுள்ளவற்றை நம்ப தயாராய் இருப்பதில்லை. உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரான அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மூலம் யெகோவா தமது மக்களுக்கு போதிக்கிறார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. (மத்தேயு 24:45, NW) ஆனால், தம் மக்களுக்கு யெகோவா போதித்து வருகிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்; தம்மைப் பற்றிய சத்தியத்தை அவர் படிப்படியாகவே வெளிப்படுத்தி வருகிறார் என்பதையும் புரிந்துகொள்கிறோம். (நீதிமொழிகள் 4:18) யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாய் இருப்பதன் மூலம் அவரது சித்தத்தையும் நோக்கத்தையும் பற்றிய அறிவை நாம் பெற்றுக்கொள்கிறோம்.
11. பிடித்த விஷயங்களில் மட்டுமே நம்பிக்கை வைப்பது எவ்வாறு சத்தியத்தை மறைத்துப் போட்டிருக்கிறது?
11 இன்னும் சிலரோ தங்களுக்குப் பிடித்த விஷயங்களை மட்டுமே நம்புவதால் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள். கடவுளுடைய ஜனங்களையும், இயேசுவின் பிரசன்னத்தைக் குறித்து அவர்கள் அறிவிக்கிற செய்தியையும் சிலர் கேலிசெய்வார்கள் என ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டது. நோவாவின் காலத்தில் கடவுள் இந்த உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்தார் என்ற உண்மையை அவர்கள் ‘வேண்டுமென்றே மறந்துவிடுகிறார்கள்’ என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (2 பேதுரு 3:3-6, பொ.மொ.) அவ்வாறே கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்கிற பலர் இரக்கம், தயவு, மன்னிப்பு போன்ற பண்புகளை யெகோவா வெளிக்காட்டுகிறார் என்பதை மனதார ஏற்றுக்கொள்கிறார்கள்; இருந்தாலும், தவறு செய்பவர்களை அவர் தண்டியாமல் விட்டுவிடுகிறவர் அல்ல என்ற உண்மையை அசட்டை செய்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். (யாத்திராகமம் 34:6, 7) மெய்க் கிறிஸ்தவர்கள், பைபிள் உண்மையிலேயே என்ன போதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
12. பாரம்பரியத்தால் ஜனங்கள் எப்படிக் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்?
12 சர்ச்சுக்குச் செல்லும் அநேகர் பாரம்பரியத்தினால் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசு தம் காலத்திலிருந்த மதத் தலைவர்களிடம், “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள்” என்று சொன்னார். (மத்தேயு 15:6) பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள் மிகுந்த ஆர்வத்தோடு தூய வணக்கத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்தார்கள்; ஆனால் அவர்களுடைய ஆசாரியர்கள் திமிர்பிடித்தவர்களாயும் சுயநீதிமான்களாயும் ஆனார்கள். மதப் பண்டிகைகள் அனைத்தும் தேவபக்தியற்ற வெறும் சடங்குகளாயின. (மல்கியா 1:6-8) இயேசுவின் காலத்திற்குள்ளாக, வேதபாரகரும் பரிசேயரும் நியாயப்பிரமாண சட்டங்களோடு ஏகப்பட்ட பாரம்பரியங்களையும் சேர்த்தார்கள். அவர்களை மாயக்காரர் என இயேசு எல்லார் முன்பாகவும் அழைத்தார், ஏனெனில் நியாயப்பிரமாணத்தின் நீதியான நியமங்களை அவர்கள் பகுத்துணரவில்லை. (மத்தேயு 23:23, 24) எனவே, மனிதரால் உருவாக்கப்பட்ட மதப் பாரம்பரியங்களை நம்பி, தூய வணக்கத்திலிருந்து விலகிப்போகாதிருக்க உண்மை கிறிஸ்தவர்கள் மிகுந்த கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
‘அதரிசனமானவரைத் தரிசித்தல்’
13. மோசே என்ன இரண்டு வழிகளில் கடவுளுடைய மகிமையை ஓரளவு பார்த்தார்?
13 சீனாய் மலையில், கடவுளுடைய மகிமையைக் காண்பிக்கும்படி மோசே கேட்டார்; அவ்வாறே யெகோவாவுடைய மகிமையின் பின்னொளியை அவர் பார்க்கவும் செய்தார். அவர் ஆசரிப்புக்கூடாரத்திற்குச் சென்றபோது முக்காடிட்டுக் கொள்ளவில்லை. அவர் உறுதியான விசுவாசமுள்ளவராக விளங்கினார், கடவுளுடைய சித்தத்தைச் செய்ய வாஞ்சையுள்ளவராக இருந்தார். தரிசனத்தில் யெகோவாவுடைய மகிமையை ஓரளவு பார்க்க வாய்ப்பு கிடைத்தபோதிலும், ஒரு கருத்தில் அவர் ஏற்கெனவே தனது விசுவாசக் கண்களால் கடவுளைப் பார்த்திருந்தார். அவர் ‘அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல உறுதியாயிருந்தாரென’ பைபிள் கூறுகிறது. (எபிரெயர் 11:27; யாத்திராகமம் 34:5-7) அதோடு, தன்னுடைய முகத்திலிருந்து சற்று நேரத்திற்கு ஒளி பிரகாசித்ததன் மூலம் மட்டுமின்றி, யெகோவாவை அறிந்து அவரைச் சேவிக்க இஸ்ரவேலருக்கு உதவியதன் மூலமும் கடவுளுடைய மகிமையை மோசே பிரதிபலித்தார்.
14. கடவுளுடைய மகிமையை இயேசு எப்படிப் பார்த்தார், அவர் எதில் மனமகிழ்ந்தார்?
14 பரலோகத்தில், எண்ணிலடங்கா யுகங்களுக்கு, ஏன் இப்பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பிருந்தே கடவுளுடைய மகிமையை இயேசு முகமுகமாய் பார்த்திருந்தார். (நீதிமொழிகள் 8:22, 30) அந்தக் காலப்பகுதியில் யெகோவா தேவனும் இயேசுவும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பையும் பாசத்தையும் வளர்த்துக் கொண்டார்கள். தாம் முதன்முதலாகப் படைத்த இந்தக் குமாரனிடம் யெகோவா தேவன் மிகுந்த அன்பையும் பாசத்தையும் பொழிந்தார். அதற்குக் கைமாறாக தமக்கு உயிர் தந்த கடவுளிடம் இயேசு ஆழ்ந்த அன்பையும் பாசத்தையும் காட்டினார். (யோவான் 14:31; 17:24) அவர்களுக்கு இடையே நிலவிய அன்பு, அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான பரிபூரண அன்பாக இருந்தது. மோசேயைப் போலவே, இயேசுவும் தாம் போதித்த காரியங்கள் மூலம் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிப்பதில் மனமகிழ்ந்தார்.
15. கிறிஸ்தவர்கள் எவ்வழியில் கடவுளுடைய மகிமையைச் சிந்தித்துப் பார்க்கிறார்கள்?
15 மோசேயையும் இயேசுவையும் போல, இன்று பூமியிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளும் கடவுளுடைய மகிமையைச் சிந்தித்துப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். மகத்தான நற்செய்தியைக் கேட்க மனமற்றவர்களாய் தங்களுடைய முகத்தை அவர்கள் திருப்பிக்கொள்வதில்லை. “கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 3:16) நாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விரும்புவதால் பைபிளைப் படிக்கிறோம். யெகோவாவின் குமாரனும் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவுமான இயேசு கிறிஸ்துவின் முகத்தில் பிரதிபலித்த மகிமையை நாம் வியந்து போற்றுகிறோம், அவரது மாதிரியைப் பின்பற்றுகிறோம். மோசேயையும் இயேசுவையும் போல, நாமும் ஓர் ஊழிய நியமிப்பைப் பெற்றிருக்கிறோம், அதாவது நாம் வணங்குகிற மகிமை பொருந்திய கடவுளைப் பற்றி பிறருக்குப் போதிக்கும் வேலையைப் பெற்றிருக்கிறோம்.
16. சத்தியத்தை அறிந்துகொள்வதால் நாம் எப்படி நன்மை அடைகிறோம்?
16 “பிதாவே! . . . இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என இயேசு ஜெபித்தார். (மத்தேயு 11:25) யெகோவா தம்முடைய நோக்கங்களையும் ஆள்தன்மையையும் பற்றி புரிந்துகொள்ள நேர்மையும் தாழ்மையுமுள்ள ஜனங்களுக்கு உதவுகிறார். (1 கொரிந்தியர் 1:26-28) நாம் அவருடைய அரவணைப்பின் கீழ் வந்திருப்பதால், வாழ்க்கையிலிருந்து நாம் முழுமையாய் நன்மையடைவதற்காக அவர் நமக்குப் போதிக்கிறார். ஆகவே, அவரை மிகவும் அன்யோன்யமாக அறிந்துகொள்ள அவர் செய்திருக்கும் அநேக ஏற்பாடுகளுக்கு நன்றியுள்ளவர்களாய், எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி அவரிடம் நெருங்கிச் செல்வோமாக.
17. யெகோவாவின் பண்புகளை நாம் எப்படி இன்னும் முழுமையாக அறிந்துகொள்கிறோம்?
17 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.” (2 கொரிந்தியர் 3:18) நம்முடைய நம்பிக்கை பரலோகத்திற்குரியதாக இருந்தாலும் சரி, பூமிக்குரியதாக இருந்தாலும் சரி, யெகோவாவை நாம் எந்தளவு அதிகமாக அறிந்து கொள்கிறோமோ, அதாவது பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவரது பண்புகளையும், சுபாவத்தையும் பற்றி எந்தளவு அறிந்து கொள்கிறோமோ அந்தளவு அதிகமாக அவரைப் போல ஆவோம். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் போதனைகளையும் பற்றி நன்றியுணர்வோடு தியானிப்போமானால், யெகோவாவின் பண்புகளை இன்னுமதிக முழுமையாகப் பிரதிபலிப்போம். கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்க முயலுகிற நாம், அவருக்குத் துதி சேர்க்கிறோம் என்பதை அறிவது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி!
நினைவிருக்கிறதா?
• மோசேயின் முகத்தில் கடவுளுடைய மகிமை பிரகாசித்ததைப் பார்க்க இஸ்ரவேலர் ஏன் பயந்தார்கள்?
• நற்செய்தி எவ்வழிகளில் ‘மறைக்கப்பட்டிருந்தது’: முதல் நூற்றாண்டில்? நம் நாளில்?
• கடவுளுடைய மகிமையை நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்?
[பக்கம் 19-ன் படம்]
இஸ்ரவேலரால் மோசேயின் முகத்தைப் பார்க்க முடியவில்லை
[பக்கம் 21-ன் படங்கள்]
பவுலைப் போல ஒருசமயம் கடவுளுடைய சத்தியத்தை எதிர்த்த பலர் இப்போது அவரைச் சேவித்து வருகிறார்கள்
[பக்கம் 23-ன் படங்கள்]
யெகோவாவின் ஊழியர்கள் அவரது மகிமையைப் பிரதிபலிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்