‘பழைய ஏற்பாடா’ ‘எபிரெய வேதாகமங்களா’—எது?
பைபிளின் எபிரெய/அரமேயிக் மற்றும் கிரேக்க மொழியில் இருக்கும் பகுதிகளை விவரிப்பதற்கு “பழைய ஏற்பாடு” மற்றும் “புதிய ஏற்பாடு” என்ற பதங்களை உபயோகிப்பது இன்று கிறிஸ்தவமண்டலத்தில் சாதாரண பழக்கமாயிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட பதங்களை உபயோகிப்பதற்கு ஏதாவது பைபிள் அடிப்படை இருக்கிறதா? என்ன காரணங்களுக்காக பொதுவாக யெகோவாவின் சாட்சிகள் அவற்றை தங்கள் பிரசுரங்களில் உபயோகிக்காமல் தவிர்க்கின்றனர்?
2 கொரிந்தியர் 3:14, ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு, ஜெர்மன் செப்டம்பர்டெஸ்ட்டமென்ட் போன்ற மற்ற பழைய மொழிபெயர்ப்புகளின்படி, இந்தப் பழக்கத்தை மார்ட்டின் லூத்தரின் முதல் மொழிபெயர்ப்பு (1522) ஆதரிப்பது போல் தோன்றுகிறது என்பது உண்மை தான். கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் இந்த வசனம் இவ்வாறு வாசிக்கிறது: “அவர்களுடைய மனது கடினப்பட்டது: இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.”
என்றபோதிலும், “பழைய ஏற்பாடு” என்று பொதுவாக அழைக்கப்படும் 39 புத்தகங்களைப் பற்றி அப்போஸ்தலன் இங்கு பேசிக்கொண்டிருக்கிறாரா? இங்கு “ஏற்பாடு” என மொழிபெயர்க்கப்பட்டிருப்பதன் கிரேக்க வார்த்தை டையத்தீக்கே என்பதாகும். புகழ்பெற்ற ஜெர்மன் இறையியல் என்ஸைக்ளோப்பீடியா தியலாஜிஷ் ரியலென்சைக்ளோப்பாடி 2 கொரிந்தியர் 3:14-ஐக் குறித்துப் பேசுகையில் இவ்வாறு சொல்கிறது: அந்த வசனத்தில் ‘பழைய டையத்தீக்கேயை வாசிப்பது’ அதற்கடுத்த வசனத்தில் ‘மோசேயின் ஆகமத்தை வாசிப்பதைப்’ போன்றே இருக்கிறது. எனவே, ‘பழைய டையத்தீக்கே’ மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தை அல்லது அதிகபட்சம் ஐந்து ஆகமங்களைக் குறிக்கிறது என்று அது சொல்கிறது. கிறிஸ்தவத்திற்கு முன்பாக ஏவப்பட்டெழுதப்பட்ட வசனமனைத்தையும் அது நிச்சயமாகவே குறிப்பதில்லை.
பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கை எபிரெய வேதாகமங்களின் ஒரு பகுதியை மட்டும் அப்போஸ்தலன் குறிப்பிட்டுப் பேசுகிறார், அது மோசேயினால் முதல் ஐந்து புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது; அவர் எபிரெய மற்றும் அரமேயிக் வேதாகமத்தை முழுவதுமாக குறிப்பிட்டுக் கொண்டில்லை. கூடுதலாக, பொ.ச. முதல் நூற்றாண்டின் ஏவப்பட்ட கிறிஸ்தவ எழுத்துக்கள் ஒரு ‘புதிய ஏற்பாட்டை’ உருவாக்குகின்றன என்பதை அவர் அர்த்தப்படுத்தவில்லை, ஏனென்றால் இந்தப் பதம் பைபிளில் எந்த இடத்திலும் காணப்படுவதில்லை.
பவுல் இங்கே உபயோகித்த டையத்தீக்கே என்ற கிரேக்க வார்த்தை உண்மையில் “உடன்படிக்கை” என்ற அர்த்தத்தை உடையதாயிருக்கிறது என்பதையும்கூட கவனிக்க வேண்டும். (கூடுதலான தகவலுக்கு உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி, 1984-ல் பிரசுரித்திருக்கும் ஆங்கில பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன், காண்க.) ஆகையால் அநேக நவீன மொழிபெயர்ப்புகள் “பழைய ஏற்பாடு” என்பதற்குப் பதிலாக “பழைய உடன்படிக்கை” என்று சரியாக சொல்விளக்கம் அளிக்கின்றன.
இது சம்பந்தமாக “தேசிய கத்தோலிக்க ரிப்போர்ட்டர்” சொன்னதாவது: “‘பழைய ஏற்பாடு’ என்ற பதம், தரத்தில் குறைவு மற்றும் இப்போது உபயோகத்தில் இல்லாமை போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கமுடியாத விதத்தில் உருவாக்குகிறது.” ஆனால் பைபிள் உண்மையில் ஒரே புத்தகமாக இருக்கிறது, அதில் எந்தப் பகுதியும் இப்போது உபயோகத்தில் இல்லாமலோ அல்லது “பழைய”தாகவோ இல்லை. அதன் செய்தி, எபிரெய பகுதியின் முதல் புத்தகத்திலிருந்து கிரேக்க பகுதியின் கடைசி புத்தகம் வரை தொடர்ச்சியாக முரணில்லாது இருக்கிறது. (ரோமர் 15:4; 2 தீமோத்தேயு 3:16, 17) தவறான ஊகங்களை அடிப்படையாகக்கொண்ட இப்படிப்பட்ட பதங்களைத் தவிர்ப்பதற்கு எங்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கிறபடியால், “எபிரெய வேதாகமங்கள்,” “கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்கள்” போன்ற அதிக திருத்தமான பதங்களை உபயோகிக்க நாங்கள் விரும்புகிறோம்.