மகிழ்ச்சிக்கு உண்மையிலேயே எது தேவை
மகிழ்ச்சிக்கு உண்மையிலேயே எது தேவை என்பதை ‘நித்தியானந்த தேவனான’ யெகோவாவும் ‘நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியான’ இயேசு கிறிஸ்துவும் வேறு எவரையும்விட நன்றாக அறிந்திருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 1:11; 6:15) எனவே, மகிழ்ச்சிக்கான வழி கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் இருப்பதைக் குறித்து ஆச்சரியமேதுமில்லை.—வெளிப்படுத்துதல் 1:3; 22:7.
மகிழ்ச்சிக்கு எது தேவை என்பதை புகழ்மிக்க மலைப்பிரசங்கத்தில் இயேசு விவரிக்கிறார். ‘மகிழ்ச்சியுள்ளவர்கள்’ யார் என்பதை இயேசு இவ்வாறு குறிப்பிடுகிறார்: (1) ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடையவர்கள், (2) துயரப்படுகிறவர்கள், (3) சாந்தகுணமுள்ளவர்கள், (4) நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள், (5) இரக்கமுள்ளவர்கள், (6) இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், (7) சமாதானம் பண்ணுகிறவர்கள், (8) நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள், (9) அவர் நிமித்தம் நிந்தனைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறவர்கள்.—மத்தேயு 5:3-11, NW.a
இயேசுவின் கூற்றுகள் உண்மையானவையா?
இயேசு சொன்ன கூற்றுகள் உண்மைதானா என்ற கேள்விக்கே இடமில்லை. கோபமுள்ளவர்கள், வாக்குவாதம் பண்ணுகிறவர்கள், இரக்கமற்றவர்கள் ஆகியோரைவிட சாந்தகுணமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், சுத்தமான இருதயத்தினால் தூண்டப்பட்டு சமாதானம் பண்ணுகிறவர்கள் ஆகியோரே மகிழ்ச்சியானவர்கள் என்பதை யார்தான் மறுப்பர்?
ஆனால், நீதியினிமித்தம் பசிதாகமுள்ளவர்களை அல்லது துயரப்படுகிறவர்களை மகிழ்ச்சியுள்ளவர்கள் என எப்படி சொல்ல முடியும் என்று ஒருவேளை நாம் யோசிக்கலாம். இப்படிப்பட்டவர்கள் உலக நிலைமைகளைப் பற்றி எதார்த்தமான கண்ணோட்டம் உடையவர்கள். அவர்கள் நமது நாளில் “செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற”வர்கள். (எசேக்கியேல் 9:4) இதுதானே அவர்களை மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்குவதில்லை. ஆனால், இந்தப் பூமிக்கு நீதியான நிலைமைகளையும் ஒடுக்கப்படுவோருக்கு நீதியையும் கொண்டுவருவதே கடவுளுடைய நோக்கம் என்பதை அறிந்துகொள்ளும்போது அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறார்கள்.—ஏசாயா 11:4.
சரியானதை செய்வதில் ஆட்கள் அடிக்கடி தவறும்போது நீதியின் பேரிலுள்ள அன்பு அவர்களுக்குத் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. இது, ஆன்மீக தேவையைக் குறித்து இவர்கள் உணர்வுடையவர்களாக இருப்பதைக் காட்டுகிறது. இவர்கள் கடவுளுடைய வழிநடத்துதலை நாடுகிறார்கள், ஏனென்றால் அவருடைய உதவியால் மட்டுமே தங்களுடைய பலவீனங்களை மேற்கொள்ள முடியும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 16:3, 9; 20:24.
துயரப்படுகிறவர்கள், நீதிக்காக பசிதாகமுள்ளவர்கள், ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள் ஆகியோர் படைப்பாளருடன் நல்ல உறவை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்கள். மனிதருடன் நல்ல உறவை வைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது, ஆனால் கடவுளுடன் நல்ல உறவை வைத்திருப்பதோ அதைவிட அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. ஆம், சரியானதை நேசிக்கிறவர்களையும் தெய்வீக வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள மனமுடையவர்களையும் மகிழ்ச்சியுள்ளவர்கள் என அழைப்பது பொருத்தமானதே.
என்றாலும், துன்புறுத்தப்படுகிறவர்களும் நிந்திக்கப்படுகிறவர்களும் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்க முடியும் என்பது நம்புவதற்கே கடினமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை, ஏனென்றால் இயேசுவே அவ்வாறு கூறியிருக்கிறார். அவருடைய வார்த்தைகளை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?
துன்புறுத்தப்படுகிறவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்—எப்படி?
நிந்தனையும் துன்புறுத்தலும்தானே மகிழ்ச்சிக்கு வழிநடத்துகிறது என இயேசு சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். ‘நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்; . . . என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தும்போது மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பீர்கள்’ என்றே இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 5:10, 11) ஆகவே, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதாலும் அவருடைய நீதியான கொள்கைகளின்படி வாழ்வதாலும் துன்பப்பட்டால் மட்டுமே மகிழ்ச்சி உண்டாகிறது.
ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட சம்பவத்திலிருந்து இதை அறிந்துகொள்ளலாம். யூத உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் “அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.” அந்த அப்போஸ்தலர்கள் எப்படி பிரதிபலித்தார்கள்? ‘அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.’—அப்போஸ்தலர் 5:40-42; 13:50-52.
நிந்தனைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை நன்றாக புரிந்துகொள்ள அப்போஸ்தலன் பேதுரு உதவினார். ‘நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் மகிழ்ச்சியுள்ளவர்கள்; ஏனென்றால் மகிமையின் ஆவி, ஏன் கடவுளின் ஆவியே உங்கள் மீது தங்கியிருக்கிறது’ என எழுதினார். (1 பேதுரு 4:14, NW) ஆம், ஒரு கிறிஸ்தவராக சரியானதை செய்ததற்காக துன்பப்படும்போது, இத்தகைய துன்பம் வேதனை அளித்தாலும்கூட, கடவுளுடைய பரிசுத்த ஆவியை பெறுவதை அறிவதுதானே மகிழ்ச்சி தருகிறது. கடவுளுடைய ஆவி எவ்வாறு மகிழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டுள்ளது?
மாம்சத்தின் கிரியைகளா, ஆவியின் கனியா?
ஆட்சியாளராகிய கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் மீது மாத்திரமே அவருடைய பரிசுத்த ஆவி தங்குகிறது. (அப்போஸ்தலர் 5:32) ‘மாம்சத்தின் கிரியைகளைச்’ செய்கிறவர்களுக்குத் தமது ஆவியை யெகோவா தருவதில்லை. “விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே” மாம்சத்தின் கிரியைகள். (கலாத்தியர் 5:19-21) உண்மைதான், இன்றைய உலகில் ‘மாம்சத்தின் கிரியைகள்’ சர்வசாதாரணமாக காணப்படுகின்றன. என்றாலும், அவற்றில் ஈடுபடுகிறவர்கள் உண்மையான, நிரந்தரமான மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. மாறாக, இத்தகைய காரியங்களில் ஈடுபடுவது உறவினர்களோடும் நண்பர்களோடும் உள்ள நல்லுறவைக் கெடுக்கிறது. அதுமட்டுமல்ல, “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்று கடவுளுடைய வார்த்தை கூறுகிறது.
ஆனால் “ஆவியின் கனி”யை வளர்ப்பவர்களுக்கு கடவுள் தமது ஆவியை அருளுகிறார். “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகியவையே ஆவியின் கனி பிறப்பிக்கும் குணங்கள். (கலாத்தியர் 5:22, 23) இக்குணங்களை நாம் வெளிக்காட்டும்போது, மற்றவர்களுடனும் கடவுளுடனும் சமாதான உறவை வளர்த்துக் கொள்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறோம், அது கடைசியில் உண்மையான மகிழ்ச்சியில் விளைவடைகிறது. (பெட்டியைக் காண்க.) மிக முக்கியமாக, அன்பு, தயவு, நற்குணம், இன்னும் பிற தெய்வீக குணங்களை வெளிக்காட்டுவதன் மூலம் நாம் யெகோவாவைப் பிரியப்படுத்துகிறோம்; அதோடு, நீதி வாசம் செய்யும் கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெறும் மகிழ்ச்சியான நம்பிக்கையையும் பெறுகிறோம்.
மகிழ்ச்சி என்பது ஒரு தெரிவு
ஜெர்மனியில் வசிக்கும் உல்ஃப்கேங், பிரிஜிட்டி என்ற தம்பதியர் பைபிளை ஊக்கமாக படிக்க ஆரம்பித்தார்கள். மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவை என மக்கள் நினைக்கும் ஏகப்பட்ட பொருட்களை அவர்கள் வைத்திருந்தார்கள். இளமைத் துடிப்புடனும் ஆரோக்கியமாகவும் இருந்தார்கள். விலையுயர்ந்த ஆடைகளை அணிந்தார்கள், அழகான மாளிகையில் குடியிருந்தார்கள், அவர்களுடைய வியாபாரமும் நன்றாக நடந்துகொண்டிருந்தது. பெரும்பாலான நேரத்தை அதிகமதிகமான பொருட்களை வாங்கி குவிப்பதிலேயே செலவழித்தார்கள், ஆனால் அவை உண்மையான மகிழ்ச்சியை அவர்களுக்குத் தரவில்லை. காலப்போக்கில், உல்ஃப்கேங்கும் பிரிஜிட்டியும் முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். அதிகமதிகமான நேரத்தையும் முயற்சியையும் ஆன்மீக காரியங்களுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தார்கள், யெகோவாவிடம் நெருங்கி வருவதற்குரிய வழிகளைத் தேடினார்கள். இந்தத் தீர்மானம் அவர்களுடைய மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்தியது; அது, வாழ்க்கையை எளிமையாக்குவதற்கும் முழுநேர பிரசங்கிகளாக கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அறிவிப்பதற்கும் அவர்களை உந்துவித்தது. இன்றைக்கு ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் வாலண்டியர்களாக சேவை செய்கிறார்கள். அதோடு, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள சத்தியத்தை பிற நாட்டவரும் கற்றுக்கொள்வதற்கு உதவ ஆசிய மொழி ஒன்றை கற்று வருகிறார்கள்.
இந்தத் தம்பதியர் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைந்தார்களா? உல்ஃப்கேங் கூறுகிறார்: “ஆன்மீக காரியங்களை அதிகமாக நாட ஆரம்பித்ததிலிருந்து நாங்கள் அதிக சந்தோஷமாகவும் அதிக திருப்தியாகவும் இருக்கிறோம். யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிப்பது எங்களுடைய மண வாழ்க்கையையும் பலப்படுத்தியிருக்கிறது. முன்பு நாங்கள் மகிழ்ச்சியான மண வாழ்க்கையை அனுபவித்தோம், ஆனால் எங்களுடைய கடமைகளும் விருப்பங்களும் எங்களை வெவ்வேறு திக்கில் கொண்டு சென்றன. எனினும் இப்பொழுது நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரே இலக்கை அடைய முயற்சி செய்து வருகிறோம்.”
மகிழ்ச்சிக்கு எது தேவை?
இரத்தினச் சுருக்கமாக சொன்னால், ‘மாம்சத்தின் கிரியைகளைத்’ தவிர்த்து, கடவுளுடைய ‘ஆவியின் கனியை’ வளர்த்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருப்பதற்கு, கடவுளுடன் ஒருவர் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் இருப்பது அவசியம். இதை அடைய முயலுகிற ஒருவர் மகிழ்ச்சியான நபரைப் பற்றிய இயேசுவின் விவரிப்புக்குப் பொருத்தமாக இருப்பார்.
ஆகவே, மகிழ்ச்சி என்பது எட்டாக் கனி என தவறாக எண்ணி விடாதீர்கள். உண்மைதான், தற்பொழுது உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் அல்லது மண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கலாம். ஒருவேளை குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல வேலைக்காக தேடிக் கொண்டிருக்கலாம். முன்பு போல உங்கள் கையில் அதிக காசு புரளாமல் இருக்கலாம். ஆனாலும், தைரியம் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை! கடவுளுடைய ஆட்சி இந்தப் பிரச்சினைகளையும் இன்னும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளையும் தீர்க்கும். “உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், . . . நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்” என சங்கீதக்காரன் மூலம் சொன்ன தமது வாக்குறுதியை யெகோவா தேவன் விரைவில் நிறைவேற்றுவார். (சங்கீதம் 145:13, 16) யெகோவாவின் இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை மனதில் வைத்திருப்பது இன்று மகிழ்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும். இது உண்மை என்பதை உலகெங்கிலும் உள்ள லட்சோபலட்ச யெகோவாவின் ஊழியர்கள் நிரூபிக்க முடியும்.—வெளிப்படுத்துதல் 21:3.
[அடிக்குறிப்பு]
a இயேசு சொன்ன இந்த ஒவ்வொரு கூற்றும் மக்காரியி என்ற கிரேக்க வார்த்தையுடன் ஆரம்பமாகிறது. சில மொழிபெயர்ப்புகள் இந்த வார்த்தையை “பாக்கியவான்கள்” என மொழிபெயர்த்திருக்கின்றன; ஆனால், புதிய உலக மொழிபெயர்ப்பு, த ஜெருசலேம் பைபிள், டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் போன்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் “மகிழ்ச்சியுள்ளவர்கள்” என்ற அதிக திருத்தமான வார்த்தையைப் பயன்படுத்துகின்றன.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
மகிழ்ச்சிக்கு உதவும் அம்சங்கள்
அன்பு பிறரிடம் காட்டும்போது அவர்களும் உங்களிடம் அன்பு காட்ட உந்துவிக்கிறது.
சந்தோஷம் சவால்களை சமாளிக்கத் தேவையான பலத்தைக் கொடுக்கிறது.
சமாதானம் பிறருடன் சண்டைச் சச்சரவின்றி இருக்க உதவுகிறது.
நீடிய பொறுமை சோதனையிலும் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.
தயவு மற்றவர்களை உங்களிடம் ஈர்க்கிறது.
நற்குணம் காட்டும்போது, உங்களுக்கு உதவி தேவைப்படுகையில் மற்றவர்கள் உதவிக்கரம் நீட்டச் செய்கிறது.
விசுவாசம் கடவுளுடைய அன்பான வழிநடத்துதலை உங்களுக்கு உறுதிப்படுத்தும்.
சாந்தம் உங்கள் இதயத்திற்கும் மனதிற்கும் உடலிற்கும் அமைதியைத் தரும்.
இச்சையடக்கம் இருந்தால் நீங்கள் அதிக தவறுகள் செய்ய மாட்டீர்கள்.
[பக்கம் 7-ன் படங்கள்]
மகிழ்ச்சியைப் பெற உங்களுடைய ஆன்மீக தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்