நீங்கள் ‘சந்தோஷப்பட’ காரணம்
1. ஒவ்வொரு மாத முடிவிலும், நாம் ‘சந்தோஷப்பட’ காரணம் என்ன?
1 ஒவ்வொரு மாத முடிவிலும் ஊழிய அறிக்கையைக் கொடுக்கும்போது, நீங்கள் ‘சந்தோஷப்பட’ காரணம் என்ன? (கலா. 6:4) மாதத்திற்கு 130 மணிநேரம் அறிக்கை செய்யும் விசேஷ பயனியராக இருந்தாலும்சரி 15 நிமிடங்கள் அறிக்கை செய்யும் முதியவராக இருந்தாலும்சரி, நாம் எல்லாருமே யெகோவாவிற்கு முழு மனதோடு சேவை செய்வதற்காகச் சந்தோஷப்படுகிறோம்.—சங். 100:2.
2. யெகோவாவின் சேவையில் ஏன் மும்முரமாக ஈடுபட வேண்டும்?
2 யெகோவா உன்னத பேரரசராக இருப்பதால், மிகச் சிறந்ததை அவருக்குக் கொடுக்க வேண்டும். (மல். 1:6) அவர்மீதுள்ள அன்பினால்தான் அவருக்கு நம்மை அர்ப்பணித்திருக்கிறோம். ஒவ்வொரு மாத முடிவிலும் நம் நேரம், திறமை, சக்தி ஆகியவற்றின் ‘முதற்பலனை’ யெகோவாவுக்கு கொடுத்தோம் என்ற திருப்தி இருந்தால், நிச்சயமாக சந்தோஷப்படுவோம். (நீதி. 3:9) ஒருவேளை இதைவிட இன்னும் அதிகம் செய்திருக்கலாம் என மனசாட்சி சொல்கிறதா? அப்படியானால், அதற்காக என்ன செய்யலாமென யோசித்துப் பாருங்கள்.—ரோ. 2:15.
3. மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது ஏன் சரியல்ல?
3 ‘மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்’: நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல. ஆரோக்கியமாக இருந்த காலத்தோடு இப்போது நம்மை ஒப்பிடுவதும் சரியல்ல. சூழ்நிலைகள் மாறலாம். திறமைகளும் வேறுபடலாம். ஒப்பிட்டுப் பார்ப்பது போட்டி மனப்பான்மையையும், எதற்கும் லாயக்கற்றவன் என்ற எண்ணத்தையும்தான் ஏற்படுத்தும். (கலா. 5:26; 6:4) இயேசு யாரையும் யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. அதற்குப் பதிலாக, ஒருவர் தன்னால் முடிந்ததை செய்தபோது பாராட்டினார்.—மாற். 14:6-9.
4. தாலந்து பற்றி இயேசு சொன்ன உவமையிலிருந்து என்ன முத்தான பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?
4 இயேசு சொன்ன ஓர் உவமையில் ஒவ்வொருவரும் “அவனவனுடைய திறமைக்கு ஏற்ப” தாலந்துகளைப் பெற்றுக்கொண்டார்கள். (மத். 25:15) எஜமான் திரும்பி வந்து அவர்கள் செய்த வேலைகளைப் பற்றி விசாரித்தார். தங்கள் திறமைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப கடினமாக உழைத்தவர்கள் பாராட்டைப் பெற்றார்கள், தங்கள் எஜமானரோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள். (மத். 25:21, 23) அதைப்போல் இன்றும் பிரசங்க வேலையில் நாம் மும்முரமாக ஈடுபட்டால் கடவுளின் பாராட்டைப் பெறலாம், அவரோடு சேர்ந்து சந்தோஷப்படலாம்!