சோர்ந்துவிடாதீர்கள்
“நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருப்போமாக.”—கலா. 6:9.
1, 2. யெகோவாவின் சர்வலோக அமைப்பைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதால் நம் நம்பிக்கை எப்படிப் பலப்படுகிறது?
யெகோவாவின் மாபெரும் சர்வலோக அமைப்பில் நமக்கும் ஓர் இடம் இருப்பதை நினைக்கும்போது மெய்சிலிர்த்துப் போகிறோம், அல்லவா? எசேக்கியேல் 1, தானியேல் 7 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தரிசனங்கள் யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகச் செய்துவரும் காரியங்களைப் பற்றித் தத்ரூபமாக விவரிக்கின்றன. யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை இயேசு வழிநடத்தி வருகிறார். அவருடைய வழிநடத்துதலின் கீழ் இந்த அமைப்பு, பிரசங்க வேலையைக் கண்காணிக்கிறது, அந்த வேலையைச் செய்பவர்களுக்கு அறிவுரையும் உற்சாகமும் அளிக்கிறது, மற்றவர்கள் யெகோவாவின் வணக்கத்தார் ஆவதற்கு உதவுகிறது. இதைப் படிக்கும்போது, யெகோவாவுடைய அமைப்பின் மீதுள்ள நம்பிக்கை இன்னும் அதிகமாகிறது, அல்லவா?—மத். 24:45.
2 நாம் ஒவ்வொருவரும் இந்த அருமையான அமைப்போடு சேர்ந்து செயல்படுகிறோமா? சத்தியத்தின் மீதுள்ள நம் ஆர்வம் கொழுந்துவிட்டு எரிகிறதா அல்லது தணிந்துவிட்டதா? இந்தக் கேள்விகளைச் சிந்தித்துப் பார்க்கையில் ஒருவேளை நம் ஆர்வம் தணிந்திருப்பது அல்லது நாம் சோர்வடைய ஆரம்பித்திருப்பது தெரிய வரலாம். இது இயல்புதான். இயேசுவின் பக்திவைராக்கியத்தைப் பின்பற்றும்படி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். ‘மனச்சோர்வடைந்து தளர்ந்துபோகாமல்’ இருக்க கிறிஸ்துவின் முன்மாதிரி உதவியாய் இருக்குமெனச் சொன்னார். (எபி. 12:3) அதேபோல் நாமும் சோர்வடையாமல் கடவுளுடைய சேவையைத் தொடர்ந்து உற்சாகமாகச் செய்ய யெகோவாவுடைய அமைப்பின் முன்மாதிரி நமக்கு உதவுகிறது. அதைப் பற்றியே முந்தின கட்டுரையில் படித்தோம்.
3. சோர்ந்துபோகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
3 ஆனால், சோர்ந்துபோகாமல் இருக்க இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். “நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருப்போமாக” என்று சொன்னார். (கலா. 6:9) இதில் செயல் உட்பட்டுள்ளது. எனவே, முயற்சியைக் கைவிடாமல் இருக்கவும் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து செயல்படவும் உதவுகிற ஐந்து வழிகளை இப்போது சிந்திக்கலாம். பிறகு, நாமோ நம் குடும்பத்தில் உள்ளவர்களோ இவற்றில் எந்தெந்த அம்சங்களில் முன்னேற வேண்டுமென யோசித்துப் பார்க்கலாம்.
வழிபாட்டிற்கும் உற்சாகத்திற்கும் கூடிவாருங்கள்
4. ஒன்றுகூடிவருவது உண்மை வழிபாட்டின் பிரதான அம்சம் என ஏன் சொல்கிறோம்?
4 ஒன்றுகூடிவருவது யெகோவாவின் ஊழியர்களுக்கு எப்போதுமே ஒரு முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. பரலோகத்தில்கூட தேவதூதர்கள் அவ்வப்போது யெகோவாவின் முன்னிலையில் கூடி வருகிறார்கள். (1 இரா. 22:19; யோபு 1:6; 2:1; தானி. 7:10) பூர்வ இஸ்ரவேலர் “கேட்டு, கற்றுக்கொள்வதற்காக” ஒன்றுகூடிவர வேண்டியிருந்தது. (உபா. 31:10-12) முதல் நூற்றாண்டு யூதர்களும் வேதத்தை வாசிப்பதற்காக ஜெபக்கூடங்களில் ஒன்றுகூடிவருவது வழக்கம். (லூக். 4:16; அப். 15:21) கிறிஸ்தவ சபை ஆரம்பமான பிறகும் கூட்டங்களுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இன்றும் இது நம் வழிபாட்டின் முக்கிய பாகமாக இருக்கிறது. உண்மைக் கிறிஸ்தவர்கள், ‘அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிக்கிறார்கள்.’ யெகோவாவின் ‘நாளானது நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த’ வேண்டும்.—எபி. 10:24, 25.
5. கூட்டங்களில் நாம் எப்படி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம்?
5 ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கு ஒரு முக்கிய வழி கூட்டங்களில் பங்குகொள்வது. கூட்டங்களில் கேள்விக்கான நேரடி பதிலைச் சொல்லலாம், வசனத்தைப் பொருத்திக் காட்டலாம், பைபிள் நியமத்தைக் கடைப்பிடிப்பதால் வரும் நன்மையை உதாரணத்துடன் சுருக்கமாகச் சொல்லலாம்; இப்படிப் பல வழிகளில் நம் விசுவாசத்தை வாயினாலே அறிக்கை செய்யலாம். (சங். 22:22; 40:9) எத்தனை வருடங்களாகக் கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்தாலும் சரி, பிள்ளைகளும் பெரியவர்களும் மனதிலிருந்து சொல்லும் பதிலைக் கேட்பது உற்சாகத்தின் ஊற்றாய் இருப்பதை நீங்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள்!
6. கூட்டங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன?
6 வேறென்ன காரணங்களுக்காக நாம் தவறாமல் கூடிவர வேண்டும்? ஊழியத்தில் மக்களிடம், முக்கியமாக எதிர்ப்பவர்களிடமும் கேட்க மனமில்லாதவர்களிடமும் தைரியமாகப் பேசுவதற்குத் தேவையான உதவியை கூட்டங்களும் மாநாடுகளும் தருகின்றன. (அப். 4:23, 31) பைபிள் விஷயங்களை அங்கு கலந்தாலோசிப்பது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. (அப். 15:32; ரோ. 1:11, 12) வழிபாட்டிற்கு ஒன்றுகூடிவரும்போது, அங்கு போதிக்கப்படும் விஷயங்களும் ஒருவருக்கொருவர் பெறும் ஊக்கமும் சந்தோஷத்தைத் தருகின்றன, ‘துன்ப நாட்களில் அமைதியளிக்கின்றன.’ (சங். 94:12, 13, பொது மொழிபெயர்ப்பு) பூமியெங்கும் உள்ள யெகோவாவின் மக்களுக்காகத் தயாரிக்கப்படும் எல்லா ஆன்மீக நிகழ்ச்சிகளையும் ஆளும் குழுவின் போதானாக் குழு கண்காணிக்கிறது. ஒவ்வொரு வாரமும் நாம் சிறந்த போதனைகளைப் பெற வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுகிற ஏற்பாடுகளுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்!
7, 8. (அ) கூட்டங்களுக்கு வருவதன் முக்கிய நோக்கம் என்ன? (ஆ) கூட்டங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன?
7 நாம் நன்மை அடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே கூட்டங்களுக்குச் செல்வதில்லை. அதைவிட மிக முக்கியமான ஒன்றும் இருக்கிறது. ஆம், யெகோவாவை வழிபடுவதற்காகவே கூடிவருகிறோம். (சங்கீதம் 95:6-ஐ வாசியுங்கள்.) நம் அருமையான பரலோகத் தகப்பனைப் புகழ்ந்து பாடுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! (கொலோ. 3:16) தவறாமல் கூட்டங்களுக்குச் சென்று குறிப்புகள் சொல்வதன் மூலமும் அவரைப் புகழ்கிறோம்; இப்படிச் செலுத்தப்படும் வணக்கத்தைப் பெற அவர் தகுதியானவர். (வெளி. 4:11) அதனால்தான், ‘சபைக் கூட்டங்களைச் சிலர் வழக்கமாகத் தவறவிடுவதுபோல் நாமும் தவறவிடாமலிருக்க’ ஆலோசனை கொடுக்கப்படுகிறது.—எபி. 10:25.
8 இந்தப் பொல்லாத உலகத்திற்கு எதிராக யெகோவா நடவடிக்கை எடுக்கும்வரை பொறுமையோடு இருக்க கூட்டங்கள் பெரிதும் உதவுகின்றன. ஆகவே, என்னதான் வேலையாக இருந்தாலும் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்; ஏனென்றால், கூட்டங்கள் ‘மிக முக்கியமான காரியங்களில்’ ஒன்று. (பிலி. 1:10) தவிர்க்கவே முடியாத காரணம் இருந்தால் தவிர வேறு எதற்காகவும் கூட்டங்களைத் தவற விடக் கூடாது.
நல்மனமுள்ள ஆட்களைத் தேடுங்கள்
9. பிரசங்கிக்கும் வேலை முக்கியமானது என்று ஏன் சொல்கிறோம்?
9 ஊழியத்தில் முழுமையாக ஈடுபடுவதும் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுவதற்கு நமக்குக் கைகொடுக்கும். இயேசு பூமியிலிருக்கும்போது இந்த வேலையை ஆரம்பித்து வைத்தார். (மத். 28:19, 20) அன்றுமுதல் இன்றுவரை, பிரசங்கித்து சீடராக்குவதே யெகோவாவுடைய சர்வலோக அமைப்பின் முக்கிய நோக்கம். தேவ தூதர்கள் நம் வேலைக்கு ஆதரவு தருகிறார்கள்; ‘முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்களை’ கண்டுபிடிக்கவும் துணைபுரிகிறார்கள். இதற்கான உதாரணங்கள் நம் நாளில் ஏராளம்! (அப். 13:48; வெளி. 14:6, 7) மிக முக்கியமான இந்த வேலையை ஒழுங்கமைப்பதும் ஆதரிப்பதுமே யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தின் தலையாய நோக்கம். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா?
10. (அ) சத்தியத்தின் மீதுள்ள நம் அன்பு குன்றிவிடாதிருக்க என்ன செய்யலாமென விளக்குங்கள். (ஆ) சோர்ந்துவிடாமல் இருக்க ஊழியம் உங்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?
10 ஊழியத்தில் ஆர்வத்தோடு ஈடுபடும்போது சத்தியத்தின் மீதுள்ள நம் அன்பு ஒருபோதும் குன்றாது. பல வருடங்களாக மூப்பராகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்கிற மிஷல் சொல்கிறார்: “சத்தியத்தைப் பற்றி மக்களுக்குச் சொல்றதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள்ல வர்ற ஒவ்வொரு கட்டுரையையும் படிச்சு நல்லா யோசிச்சு பார்ப்பேன். அதுல இருக்கிற ஞானமான, ஆழமான, அதேசமயம் சமநிலையோட சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள பார்க்குறப்போ அப்படியே மலைச்சு போயிடுவேன். ஊழியத்துல இத கொடுக்கறப்போ ஜனங்களும் இதே மாதிரி நினைக்கிறாங்களானு தெரிஞ்சுக்க ஆசப்படுவேன். அவங்களோட ஆர்வத்த எப்படி தூண்டலாம்னு யோசிப்பேன். ஊழியத்துக்கு ஒதுக்குன நேரத்துல ஊழியம் மட்டும்தான் செய்வேன்; எதாவது வேல வந்தா அத ஊழியத்துக்கு முன்னாடியோ பின்னாடியோ தள்ளிடுவேன்.” நாமும், ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடும்போது இந்தக் கடைசி நாட்களில் உறுதியோடு இருப்போம்.—1 கொரிந்தியர் 15:58-ஐ வாசியுங்கள்.
ஆன்மீக ஏற்பாடுகளிலிருந்து நன்மை அடையுங்கள்
11. யெகோவா கொடுக்கும் ஆன்மீக உணவை ஏன் முழுமையாக உட்கொள்ள வேண்டும்?
11 நம்மைப் பலப்படுத்துவதற்காக யெகோவா ஆன்மீக உணவை பிரசுரங்கள் மூலம் அள்ளி வழங்குகிறார். ஒரு பிரசுரத்தைப் படித்துவிட்டு, ‘இது எனக்காகவே யெகோவா எழுத வெச்ச மாதிரி இருக்கு! இதுக்காகத்தான் நான் காத்திட்டிருந்தேன்!’ என்று நீங்கள் நிச்சயம் சொல்லியிருப்பீர்கள். இது ஒன்றும் தற்செயலாக நடந்தது அல்ல. இதுபோன்ற வழிகளில்தான் யெகோவா நமக்கு ஆலோசனை தருகிறார், வழிநடத்துகிறார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” என்று அவரே சொல்லியிருக்கிறார். (சங். 32:8) நமக்குக் கிடைக்கும் எல்லா ஆன்மீக உணவையும் உட்கொண்டு, தியானிக்க முயற்சி செய்கிறோமா? அப்படிச் செய்தால் இந்தக் கடினமான கடைசி நாட்களில் பட்டுப்போன மரம்போல் ஆகிவிடாமல் ஆன்மீக ரீதியில் தொடர்ந்து கனிகொடுப்போம்.—சங்கீதம் 1:1-3; 35:28; 119:97-ஐ வாசியுங்கள்.
12. ஆன்மீக உணவை அற்பமாக நினைக்காமல் இருக்க எது நமக்கு உதவும்?
12 ஆரோக்கியமான ஆன்மீக உணவைத் தொடர்ந்து அளிப்பதற்காகச் செய்யப்பட்டுவரும் வேலைகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது சிறந்தது. ஆராய்ச்சி செய்வது, எழுதுவது, சரிபார்ப்பது, படங்களைத் தேர்ந்தெடுப்பது, பிரசுரங்களையும் வெப்சைட்டில் போடப்படும் தகவல்களையும் மொழிபெயர்ப்பது ஆகிய வேலைகளை ஆளும் குழுவின் எழுத்துக் குழு கண்காணிக்கிறது. அச்சிடும் கிளை அலுவலகங்கள் தங்கள் பிராந்தியத்திலுள்ள எல்லாச் சபைகளுக்கும் பிரசுரங்களை அனுப்பி வைக்கின்றன. இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள்? யெகோவாவின் மக்கள் ஆன்மீக உணவைத் திருப்தியாகச் சாப்பிடுவதற்கே. (ஏசா. 65:13) எனவே, யெகோவாவுடைய அமைப்பு தரும் எல்லா ஆன்மீக உணவையும் தவறாமல் உட்கொள்வோமாக!—சங். 119:27.
அமைப்பின் ஏற்பாடுகளுக்கு ஆதரவு கொடுங்கள்
13, 14. பரலோகத்தில் யெகோவாவுடைய ஏற்பாடுகளுக்கு ஆதரவு தருபவர்கள் யார், நாம் எப்படி அவர்களைப் பின்பற்றலாம்?
13 யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறவர்களை அழிப்பதற்காக இயேசு வெள்ளைக் குதிரைமேல் ஏறி வருவதுபோல் அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்டார். (வெளி. 19:11-15) இயேசுவுக்குப் பின்னால் உண்மையுள்ள தேவதூதர்களும் இயேசுவோடு ஆட்சி செய்வதற்காக ஏற்கெனவே பூமியிலிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர்களும் குதிரையில் அணிவகுத்து வருவதையும் அவர் கண்டார். இது தங்கள் தலைவரான இயேசுவுக்கு முழு ஆதரவு கொடுப்பதைக் காட்டுகிறது. (வெளி. 2:26, 27) யெகோவாவின் ஏற்பாடுகளை நாம் ஆதரிப்பதற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு, அல்லவா?
14 எனவே, யெகோவாவுடைய அமைப்பை இன்று பூமியில் முன்நின்று வழிநடத்தி வரும் பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களில் மீந்திருப்போருக்கு திரள் கூட்டத்தார் முழு ஆதரவைத் தருகிறார்கள். (சகரியா 8:23-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு நாம் ஒவ்வொருவரும் எப்படி ஆதரவு காட்டலாம்? ஒரு வழி, முன்நின்று வழிநடத்துகிறவர்களுக்கு அடிபணிந்து நடப்பது. (எபி. 13:7, 17) முதலாவது இதைச் சபையில் கடைபிடிக்க வேண்டும். மூப்பர்களையும் அவர்கள் செய்யும் வேலைகளையும் மற்றவர்கள் மதிக்கும் விதத்தில் நாம் பேசுகிறோமா? மூப்பர்களுக்கு மரியாதை கொடுக்கவும் அவர்கள் கொடுக்கிற பைபிள் ஆலோசனையைக் கேட்கவும் பிள்ளைகளை உற்சாகப்படுத்துகிறோமா? உலகளாவிய வேலைக்கு எவ்விதங்களில் நன்கொடை கொடுக்கலாம் என்று குடும்பமாகக் கலந்தாலோசிக்கிறோமா? (நீதி. 3:9; 1 கொ. 16:2; 2 கொ. 8:12) ராஜ்ய மன்றத்தை நேர்த்தியாக வைத்துக்கொள்வதை முக்கியமான வேலையாக நினைக்கிறோமா? மரியாதையும் ஐக்கியமும் குடிகொண்டிருக்கும் இடத்தில் யெகோவா தம் சக்தியை தாராளமாகப் பொழிவார். இந்தக் கடைசி நாட்களில் சோர்ந்துபோகாமல் இருக்க இந்தச் சக்தி நமக்கு எப்போதும் உதவும்.—ஏசா. 40:29-31.
நற்செய்திக்கு ஏற்ப வாழுங்கள்
15. யெகோவாவின் உன்னத நோக்கத்திற்கு இசைய வாழ நாம் ஏன் தொடர்ந்து போராட வேண்டும்?
15 யெகோவாவுடைய அமைப்பு தரும் அறிவுரைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமானால், நாம் அறிவிக்கும் நற்செய்திக்கு ஏற்ப வாழ வேண்டும். ஆம், ‘எஜமானருக்கு எது பிரியமானதென்று நிச்சயப்படுத்திக்கொள்ள’ வேண்டும். (எபே. 5:10, 11) சாத்தானும் அவனுடைய பொல்லாத உலகமும் நம்முடைய அபூரணமும் சரியானதைச் செய்ய பெரும் தடையாக இருக்கின்றன. அன்பான சகோதர சகோதரிகளே, உங்களில் சிலர், யெகோவாவோடு உள்ள நல்லுறவைக் காத்துக்கொள்ள தினம் தினம் போராடி வருகிறீர்கள். அதற்காக நீங்கள் எடுக்கிற முயற்சியைப் பார்த்து யெகோவா மிகவும் சந்தோஷப்படுகிறார். எனவே, முயற்சியைக் கைவிடாதீர்கள்! யெகோவாவின் நோக்கத்திற்கு இசைய வாழும்போது நமக்குத் திருப்தி கிடைக்கும், நாம் செலுத்தும் வணக்கம் வீண்போகாது என்ற நம்பிக்கையும் பிறக்கும்.—1 கொ. 9:24-27.
16, 17. (அ) பெரிய பாவத்தில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? (ஆ) ஆஷாவுடைய உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
16 ஆனால், நாம் ஏதாவது ஒரு பெரிய பாவத்தில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? உடனடியாக உதவியை நாடுங்கள். விஷயத்தை மறைக்க மறைக்க நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும். தாவீது பாவத்தை மறைத்து வைத்ததால், “நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று” என்று சொன்னார். (சங். 32:3) ஆம், பாவத்தை மூடி மறைத்தால் மனதளவிலும் ஆன்மீக ரீதியிலும் சோர்ந்துபோவோம். ஆனால், ‘அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிட்டால் இரக்கம் பெறுவோம்.’—நீதி. 28:13.
17 ஆஷா என்ற சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள்.a டீன்-ஏஜில் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்தார். ஆனாலும், இரட்டை வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். அது அவரைப் பயங்கரமாகப் பாதித்தது. மனசாட்சி உறுத்த ஆரம்பித்தது. “எப்பவுமே சோகமா, கவலையா இருப்பேன்” என்று சொல்கிறார். அவர் என்ன செய்தார்? ஒருநாள் சபைக் கூட்டத்தில் யாக்கோபு 5:14, 15 விளக்கப்பட்டது. தனக்கு உதவி தேவை என்பதைப் புரிந்துகொண்டு மூப்பர்களை அணுகினார். “ஆன்மீக விதத்துல குணமடையறதுக்கு யெகோவா எழுதி தந்த மருந்துசீட்டு மாதிரி அந்த வசனங்கள் இருந்துச்சு. மருந்து கசக்கும்தான், ஆனா குணமாகனும்னா சாப்பிட்டுதான் ஆகனும். பைபிள்ல இருக்குற அறிவுரைய கடைபிடிச்சதுனாலதான் குணமானேன்.” இது நடந்து சில வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது, சுத்தமான மனசாட்சியோடு மீண்டும் யெகோவாவை ஆர்வமாகச் சேவித்து வருகிறார்.
18. என்ன செய்யத் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
18 இந்தக் கடைசி நாட்களில், யெகோவாவுடைய ஈடிணையற்ற அமைப்பின் பாகமாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! எனவே அமைப்பின் ஏற்பாடுகளை அற்பமாக எண்ணாதிருப்போமாக! தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்ள, ஊழியத்தில் ஆர்வமாக ஈடுபட, எல்லா பிரசுரங்களையும் ஆழ்ந்து படிக்க குடும்பமாய் உழைப்போமாக! முன்நின்று வழிநடத்துபவர்களுக்கு ஆதரவு தரவும் நற்செய்திக்கு இசைய வாழவும் முயலுவோமாக! இதையெல்லாம் செய்தால் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து செயல்போடுவோம், நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருப்போம்.
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.