பைபிளின் கருத்து
“உலகத்தின் பாகமல்ல”—அதன் அர்த்தம் என்ன?
கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டிக்கொண்ட ஆயிரக்கணக்கானோர், பொ.ச. நாலாம் நூற்றாண்டில் எகிப்தின் வனாந்தரங்களில் தனித்து வாழ தங்கள் உடைமைகள், உறவினர்கள், வாழ்க்கைமுறை ஆகியவற்றை விட்டுவிட்டு சென்றனர். அவர்கள் துறவிகள் (ஆங்கரைட்ஸ்) என அழைக்கப்படலாயினர்; இந்தப் பெயர் “நான் பிரிந்துசெல்கிறேன்” என்று அர்த்தப்படும் அனகோரியோ (a·na·kho·reʹo) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு சரித்திர ஆசிரியன் அவர்களை, தங்கள் உடன்வாழ்பவர்களிடமிருந்து விலகியிருப்பவர்கள் என்று விவரிக்கிறார். மனித சமுதாயத்திலிருந்து விலகியிருப்பதன்மூலம், ‘உலகத்தின் பாகமல்லாமல்’ இருக்கவேண்டும் என்ற கிறிஸ்தவ தேவைக்கு தாங்கள் கீழ்ப்படிகிறதாக துறவிகள் நினைத்தனர்.—யோவான் 15:19, NW.
“உலகத்தால் கறைபடாதபடி” கிறிஸ்தவர்கள் தங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று பைபிள் நினைப்பூட்டுகிறது. (யாக்கோபு 1:27) வேத எழுத்துக்கள் தெளிவாக எச்சரிக்கின்றன: “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (யாக்கோபு 4:4) அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து சொல்லர்த்தமாகவே பிரித்துவைத்துக்கொண்டு, துறவிகளாக ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதை இது அர்த்தப்படுத்துகிறதா? அவர்களுடைய மத நம்பிக்கைகளை ஏற்காதவர்களிலிருந்து அவர்கள் தனியாக பிரிந்திருக்க வேண்டுமா?
கிறிஸ்தவர்கள் சமுதாயத்திற்கு எதிரானவர்கள் அல்ல
கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் முழு மனித சமுதாயத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தங்களை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தேவையை உயர்த்திக்காட்டுகிற அநேக பைபிள் விவரப்பதிவுகளில் உலகத்தின் பாகமல்லாதிருக்க வேண்டும் என்ற கோட்பாடு கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறது. (ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 6:14-17; எபேசியர் 4:18; 2 பேதுரு 2:20.) ஆகவே, உண்மைக் கிறிஸ்தவர்கள் யெகோவாவின் நீதியுள்ள வழிகளுக்கு எதிராக இருக்கும் மனப்பான்மை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை ஞானமாக தவிர்க்கின்றனர். இவை, செல்வத்தையும் புகழையும் அடைய உலகம் கொண்டிருக்கும் அளவில்லா நாட்டம், சுகபோகங்களில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு போன்றவற்றை உட்படுத்தும். (1 யோவான் 2:15-17) யுத்தம் மற்றும் அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிப்பதன் மூலமும் அவர்கள் உலகத்திலிருந்து பிரிந்திருக்கின்றனர்.
தம்முடைய சீஷர்கள் ‘உலகத்தின் பாகமாக’ இருக்கமாட்டார்கள் என்று இயேசு சொன்னார். ஆனாலும் அவர் கடவுளிடம் இவ்வாறு ஜெபித்தார்: “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.” (யோவான் 17:14-16) தம்முடைய சீஷர்கள் சமுதாயத்திற்கு எதிரிகளாக, கிறிஸ்தவர்களாக இல்லாதவர்களிடம் எல்லா தொடர்பையும் அறுத்துக்கொள்ளவேண்டும் என்று இயேசு விரும்பவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. உண்மையில், தனித்திருப்பது, ஒரு கிறிஸ்தவர் “வெளியரங்கமாகவும் வீடு வீடாகவும்” பிரசங்கித்து, போதிக்கவேண்டிய தன்னுடைய நியமிப்பை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும்.—அப்போஸ்தலர் 20:20, NW; மத்தேயு 5:16; 1 கொரிந்தியர் 5:9, 10.
உலகத்தால் கறைபடாதபடி தங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை, கிறிஸ்தவர்கள் மற்றவர்களைவிட தாங்கள் மேம்பட்டவர்கள் என்று எண்ணுவதற்கு எந்த காரணத்தையும் கொடுப்பதில்லை. யெகோவாவுக்கு பயப்படுகிறவர்கள் “தற்பெருமையை” வெறுக்கிறார்கள். (நீதிமொழிகள் 8:13, NW) கலாத்தியர் 6:3 இவ்வாறு சொல்லுகிறது, “ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.” உயர்வானவர்களாக உணருகிறவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றனர், ஏனென்றால் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” இருக்கிறோம்.—ரோமர் 3:23.
“ஒருவனை பற்றியும் தூஷணமாக பேசாதிருங்கள்”
தங்களுடைய தனிப்பட்ட மத தொகுதிகளை சேராத அனைவரையும் ஏளனமாக கருதிய ஆட்கள், இயேசுவின் காலத்தில் இருந்தனர். இப்படிப்பட்டவர்களுள் பரிசேயரும் இருந்தனர். அவர்கள் மோசேயின் சட்டத்திலும் யூத பாரம்பரியத்தின் நுணுக்கங்களை பற்றியும் திறம்பட்ட அறிவுடையவர்களாக இருந்தனர். (மத்தேயு 15:1, 2; 23:2) அநேக மத சடங்குகளை மிகவும் கவனமாக பின்பற்றுவதில் அவர்கள் பெருமைபட்டுக்கொண்டனர். தங்களுடைய அறிவுப்பூர்வமான சாதனைகள் மற்றும் மத அந்தஸ்தின் காரணமாகவே தாங்கள் மற்றவர்களைவிட மேலானவர்கள் என்பதைப்போல பரிசேயர்கள் நடந்துகொண்டனர். தங்களுடைய பெருமையான மற்றும் ஆணவம் மிகுந்த மனநிலையை அவர்கள் இவ்வாறு சொல்வதன் மூலம் வெளிக்காட்டினார்கள்: “வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்.”—யோவான் 7:49.
பரிசேயரல்லாதவரை குறிக்கும் கீழ்த்தரமான ஒரு பதத்தைக்கூட பரிசேயர்கள் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில், அம்ஹாரெட்ஸ் என்ற எபிரெய பதம், சமுதாயத்தின் பொதுவான அங்கத்தினர்களை குறிக்க சாதகமான விதத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் யூதாவின் செருக்குடைய மதத்தலைவர்கள் அம்ஹாரெட்ஸின் அர்த்தத்தை இகழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றினர். கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிக்கொள்பவர்கள் உட்பட மற்ற தொகுதிகளும், தங்களுடையதிலிருந்து வித்தியாசப்பட்ட மத நம்பிக்கைகளை உடையவர்களை குறிப்பதற்கு, “புறமதத்தவர்” மற்றும் “பொய்மதத்தவர்” போன்ற பதங்களை கீழ்த்தரமான விதத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர்.
என்றபோதிலும், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படி கருதினர்? அவிசுவாசிகளை “சாந்தமாய்” மற்றும் “ஆழ்ந்த மரியாதையுடன்” நடத்தும்படி இயேசுவின் சீஷர்கள் நினைப்பூட்டப்பட்டனர். (2 தீமோத்தேயு 2:25, 26; 1 பேதுரு 3:15, NW) இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுல் ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தார். அவர் அகந்தையுடையவராக அல்ல, அணுகத்தக்கவராக இருந்தார். மற்றவர்களுக்கு மேல் தன்னை உயர்த்திக்கொள்வதற்கு பதிலாக, அவர் தாழ்மையுள்ளவராகவும் கட்டியெழுப்புகிறவராகவும் இருந்தார். (1 கொரிந்தியர் 9:22, 23) தீத்துவுக்கான தன்னுடைய ஏவப்பட்ட நிரூபத்தில், பவுல் “ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும்” வேண்டும் என்ற நினைப்பூட்டுதலை கொடுக்கிறார்.—தீத்து 3:2.
பைபிளில், கிறிஸ்தவரல்லாதவரை குறிப்பதற்காக “அவிசுவாசிகள்” என்ற பதம் சில சமயங்களில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், “அவிசுவாசிகள்” என்ற வார்த்தை ஒரு சிறப்புப்பெயராக அல்லது பட்டப்பெயராக உபயோகப்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை. நிச்சயமாகவே, கிறிஸ்தவரல்லாதவரை சிறுமைப்படுத்த அல்லது தரக்குறைவாக உணரச்செய்ய அது உபயோகிக்கப்படவில்லை; ஏனென்றால் அவ்வாறு செய்வது பைபிள் நியமங்களுக்கு எதிரானதாக இருக்கும். (நீதிமொழிகள் 24:9) அவிசுவாசிகளிடம் செருக்காக அல்லது கடுமையாக இருப்பதை இன்று யெகோவாவின் சாட்சிகள் தவிர்க்கின்றனர். சாட்சியாக இல்லாத நண்பர்கள் அல்லது உறவினர்களை கீழ்த்தரமான பதங்களால் அழைப்பது நாகரிகமற்றது என்று அவர்கள் கருதுகின்றனர். ‘கர்த்தருடைய ஊழியக்காரன் . . . எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாய் இருக்க வேண்டும்’ என்ற பைபிளின் புத்திமதியை அவர்கள் பின்பற்றுகின்றனர்.—2 தீமோத்தேயு 2:24.
“யாவருக்கும் . . . நன்மை செய்யக்கடவோம்”
இந்த உலகத்தோடு, முக்கியமாக கடவுளுடைய தராதரங்களுக்கு அதிக அவமரியாதை காண்பிக்கிறவர்களோடு நெருக்கமாயிருப்பது ஆபத்தை கொண்டுவரக்கூடியது என்பதை உணர வேண்டியது அவசியம். (ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 15:33, NW) என்றபோதிலும், “யாவருக்கும் . . . நன்மை செய்யக்கடவோம்” என்று பைபிள் ஆலோசனை சொல்லும்போது, “யாவருக்கும்” என்ற வார்த்தை கிறிஸ்தவ நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் உட்படுத்துகிறது. (கலாத்தியர் 6:10) தெளிவாகவே, சில சந்தர்ப்பங்களில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அவிசுவாசிகளுடன் உணவை பகிர்ந்துகொண்டனர். (1 கொரிந்தியர் 10:27) ஆகவே, இன்று கிறிஸ்தவர்கள் அவிசுவாசிகளை சமநிலையுடன், அவர்களை தங்களுடைய உடன் மானிடர்களாக கருதி நடத்துகின்றனர்.—மத்தேயு 22:39.
வெறுமனே ஒருவர் பைபிள் சத்தியங்களை அறியாதவர் என்பதனால் அவர் பண்பற்றவர் அல்லது ஒழுக்கங்கெட்டவர் என்று நாம் ஊகிப்பது தவறானது. சந்தர்ப்பங்களும் மக்களும் வேறுபடுகின்றனர். ஆகவே, ஒவ்வொரு கிறிஸ்தவரும் தான் அவிசுவாசிகளிடம் எந்தளவுக்கு பழகுவதென்பதை தானே தீர்மானிக்க வேண்டும். என்றபோதிலும், துறவிகள் செய்ததைப்போல ஒரு கிறிஸ்தவன் தன்னை பிரித்து வைத்துக்கொள்வதோ, பரிசேயர் உணர்ந்ததைப்போல உயர்வாக உணருவதோ தேவையில்லாததும் வேதப்பூர்வமற்றதாகவும் இருக்கிறது.