அதிகாரம் 14
“ஒருமனதாகத் தீர்மானித்தோம்”
ஆளும் குழு எப்படி ஒரு தீர்மானத்தை எடுத்தது, அந்தத் தீர்மானம் சபைகளை எப்படி ஒன்றுபடுத்தியது
அப்போஸ்தலர் 15:13-35-ன் அடிப்படையில்
1, 2. (அ) முதல் நூற்றாண்டு சபையின் ஆளும் குழு என்ன முக்கியமான கேள்விகளை எதிர்ப்படுகிறது? (ஆ) சரியான முடிவை எடுக்க அந்தச் சகோதரர்களுக்கு எது கைகொடுக்கிறது?
முடிவு என்னவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எல்லாருடைய முகத்திலும் எட்டிப்பார்க்கிறது. கிறிஸ்தவ சரித்திரத்தில் இது ஒரு முக்கியமான கட்டம் என்பதை உணர்ந்து, எருசலேமில் ஒரு அறையில் கூடியிருக்கும் அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். விருத்தசேதனம் பற்றிய விவாதம் முக்கியமான சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கிறிஸ்தவர்கள் மோசேயின் திருச்சட்டத்தின்கீழ் இருக்கிறார்களா? யூதக் கிறிஸ்தவர்களையும் யூதராக இல்லாத கிறிஸ்தவர்களையும் பிரித்துப் பார்க்க வேண்டுமா?
2 தலைமைதாங்கி நடத்தும் அந்த ஆண்கள் ஏற்கெனவே அநேக அத்தாட்சிகளை அலசிப் பார்த்துவிட்டார்கள். இப்போது, கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தையும், யெகோவாவின் ஆசீர்வாதம் இருப்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டும் வலிமைமிக்க நேரடி அத்தாட்சிகளும் அவர்களுடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தைப் பற்றி அவர்கள் அறிந்த, உணர்ந்த அனைத்தையும் தெரிவித்துவிட்டார்கள். அவர்கள் சிந்திக்கும் விவாதத்தின் சம்பந்தமாக அத்தாட்சிகள் மலைபோல் குவிந்திருக்கின்றன. யெகோவாவின் சக்தி அவர்களை வழிநடத்திச் செல்வது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அந்த வழிநடத்துதலை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
3. அப்போஸ்தலர் 15-ம் அதிகாரத்தில் இருக்கிற விஷயங்களை சிந்திப்பதால் நாம் எப்படிப் பயனடையலாம்?
3 இந்த விஷயத்தில் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விசுவாசமும் தைரியமும் ரொம்பவே தேவை. ஏனென்றால் ஒருபக்கம், யூத மதத் தலைவர்களின் பகை தீவிரமாகும் ஆபத்து இருந்தது. இன்னொரு பக்கம், கடவுளுடைய மக்களைத் திருச்சட்டத்தின் பக்கம் திருப்புவதில் சபைக்குள்ளேயே உடும்புப் பிடியாக இருக்கிறவர்களுடைய எதிர்ப்பு இருந்தது. இப்படிப்பட்ட தருணத்தில், ஆளும் குழு என்ன தீர்மானம் எடுக்கும்? பார்க்கலாம். அதோடு, இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவுக்கு அவர்கள் எப்படி முன்மாதிரியாக இருந்தார்கள் என்பதையும் நாம் ஆராயலாம். கிறிஸ்தவ வாழ்வில் வித்தியாசமான தீர்மானங்களையும் சவால்களையும் எதிர்ப்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் அவர்கள் எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
“தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலுள்ள வார்த்தைகள் அதை ஆமோதிக்கின்றன” (அப். 15:13-21)
4, 5. தீர்க்கதரிசன புத்தகத்திலிருந்து என்ன விஷயத்தை யாக்கோபு மேற்கோள் காட்டினார்?
4 இயேசுவின் சகோதரனும் சீஷருமான யாக்கோபு தைரியமாகப் பேசினார்.a இந்தச் சந்தர்ப்பத்தில், அந்தக் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கியது போல் தெரிகிறது. அவர்கள் குழுவாக எடுத்த முடிவை அவருடைய வார்த்தைகள் ரத்தினச்சுருக்கமாக எடுத்து காட்டுகின்றன. அங்கே கூடியிருந்தவர்களிடம் யாக்கோபு இப்படி சொன்னார்: “கடவுள் முதல் தடவையாக மற்ற தேசத்து மக்கள்மேல் தன் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தன்னுடைய பெயருக்கென்று ஒரு ஜனத்தைப் பிரித்தெடுத்த விதத்தைப் பற்றி சிமியோன் நமக்கு நன்றாக விவரித்துச் சொன்னார். தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலுள்ள வார்த்தைகள் அதை ஆமோதிக்கின்றன.”—அப். 15:14, 15.
5 சிமியோன் [சீமோன் பேதுரு] கொடுத்த பேச்சையும், பவுலும் பர்னபாவும் அளித்த ஆதாரங்களையும் கேட்டபோது விவாதிக்கப்படும் விஷயத்துக்குப் பொருத்தமான பைபிள் வசனங்கள் யாக்கோபின் மனதுக்கு வந்திருக்கும். (யோவா. 14:26) அதனால்தான், “தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலுள்ள வார்த்தைகள் அதை ஆமோதிக்கின்றன” என்று சொன்ன பிறகு ஆமோஸ் 9:11, 12-ஐ யாக்கோபு மேற்கோள் காட்டினார். இந்தப் புத்தகம், எபிரெய வேதாகமத்தில், ‘தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்’ என்று பொதுவாக அழைக்கப்படும் புத்தகங்களின் வரிசையில் இடம்பெற்றிருந்தது. (மத். 22:40; அப். 15:16-18) ஆமோஸ் புத்தகத்தில் இன்று நாம் வாசிக்கும் வார்த்தைகளுக்கும் யாக்கோபு மேற்கோள் காட்டிய வார்த்தைகளுக்கும் சற்று வித்தியாசம் இருப்பதைக் கவனிப்பீர்கள். யாக்கோபு ஒருவேளை செப்டுவெஜின்ட் என்ற எபிரெய வேதாகமத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கலாம்.
6. இந்த விவாதத்தை வேதவசனங்கள் எப்படி தெளிவுபடுத்தியது?
6 “தாவீதின் கூடாரத்தை,” அதாவது மேசியாவின் அரசாங்கத்துக்கு வழிநடத்தும் ராஜவம்சத்தை, திரும்ப எடுப்பித்து கட்டும் காலம் வருமென ஆமோஸ் தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா முன்னறிவித்தார். (எசேக்கியேல் 21:26, 27) அப்படியானால், யூதத் தேசத்தாரோடு யெகோவா மீண்டும் ஒரு விசேஷ உறவை வைத்துக்கொள்வாரா? இல்லை. ‘எல்லா தேசத்து மக்களும்’ ஒன்று சேர்க்கப்பட்டு ‘[கடவுளுடைய] பெயரால் அழைக்கப்படுவார்கள்’ என்று தீர்க்கதரிசனம் மேலும் சொல்கிறது. “அவர்களுக்கும் [யூதரல்லாத கிறிஸ்தவர்களுக்கும்] நமக்கும் [யூத கிறிஸ்தவர்களுக்கும்] இடையே அவர் [கடவுள்] எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை, விசுவாசத்தின் காரணமாக அவர்களுடைய இதயங்களைச் சுத்தமாக்கினார்” என்று சற்று முன்பு பேதுரு சொன்னதை நினைவில் வையுங்கள். (அப். 15:9) வேறு வார்த்தைகளில் சொன்னால், யூதர்களைப் போலவே யூதராக இல்லாத கிறிஸ்தவர்களும் தன்னுடைய அரசாங்கத்தின் வாரிசுகளாக ஆகவேண்டும் என்பது கடவுளுடைய விருப்பம். (ரோ. 8:17; எபே. 2:17-19) கடவுளுடைய அரசாங்கத்தின் வாரிசுகளாக ஆவதற்கு மற்ற தேசத்தை சேர்ந்தவர்கள் முதலில் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்றோ யூத மதத்துக்கு மாற வேண்டும் என்றோ தீர்க்கதரிசனங்களில் எங்கேயுமே சொல்லப்படவில்லை.
7, 8. (அ) யாக்கோபு என்ன கருத்தைச் சொன்னார்? (ஆ) யாக்கோபு சொன்ன வார்த்தைகளை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
7 வேதவசனங்களின் அத்தாட்சியும் அங்கிருந்தவர்கள் கொடுத்த வலிமைமிக்க சாட்சியும் இந்த வார்த்தைகளைச் சொல்ல யாக்கோபை தூண்டின: “என் கருத்து இதுதான்: கடவுளிடம் திரும்புகிற மற்ற தேசத்து மக்களுக்கு நாம் கஷ்டம் கொடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, உருவச் சிலைகளால் தீட்டுப்பட்டதற்கும் பாலியல் முறைகேட்டுக்கும் நெரித்துக் கொல்லப்பட்டதற்கும் இரத்தத்துக்கும் விலகியிருக்க வேண்டும் என்று அவர்களுக்கு நாம் எழுத வேண்டும். ஏனென்றால், இந்தக் கட்டளைகள் அடங்கிய மோசேயின் புத்தகங்கள் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் ஜெபக்கூடங்களில் சத்தமாக வாசிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதனால், அவற்றைப் பிரசங்கிப்பவர்கள் பூர்வ காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருந்திருக்கிறார்கள்.”—அப். 15:19-21.
8 அந்தக் கூட்டத்துக்கு ஒருவேளை தலைமை தாங்கிய யாக்கோபு, மற்ற சகோதரர்கள்மீது அதிகாரம் செலுத்தினாரா? மனம்போன போக்கில் தீர்மானம் எடுத்தாரா? இல்லவே இல்லை!! “என் கருத்து” என்று யாக்கோபு சொன்ன வார்த்தைகள், அந்தச் சகோதரர்கள்மீது அவர் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதைக் காட்டுகின்றன. அதற்கு பதிலாக, அத்தாட்சிகளின் அடிப்படையிலும் வேதவசனங்களின் அடிப்படையிலும் தான் எடுத்திருக்கும் தீர்மானத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கும்படியே அவர் சொன்னார்.
9. யாக்கோபின் ஆலோசனையால் விளைந்த நன்மைகள் என்ன?
9 யாக்கோபு சொன்ன கருத்து ஒரு நல்ல கருத்தா? அதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால், அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் பிற்பாடு அதை ஏற்றுக்கொண்டார்கள். அதனால் விளையும் நன்மைகள் என்ன? ஒருபக்கத்தில், மோசேயின் திருச்சட்டத்தில் இருந்த விதிமுறைகள் யூதராக இல்லாத கிறிஸ்தவர்கள்மீது விதிக்கப்படாது; அதனால், அது அவர்களுக்கு ‘தொல்லையாக,’ அல்லது ‘கஷ்டமாக’ இருக்காது. (அப். 15:19; நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்.) இன்னொரு பக்கத்தில், இந்தத் தீர்மானம் யூதக் கிறிஸ்தவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்பு கொடுப்பதாகவும் இருக்கும். ஏனென்றால், ‘மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெபக்கூடங்களில் சத்தமாக வாசிக்கப்பட்டு வந்திருப்பதை’ அவர்கள் காலம்காலமாகக் கேட்டிருக்கிறார்கள்.b (அப். 15:21) பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலோசனை யூதர்கள் மற்றும் யூதராக இல்லாத கிறிஸ்தவர்களுக்கு இடையே இருந்த பந்தத்தை நிச்சயம் பலப்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தத் தீர்மானம் யெகோவாவின் விருப்பத்துக்கு இசைவாக இருப்பதால் அவரைப் பிரியப்படுத்தும். முழு கிறிஸ்தவ சபையின் ஒற்றுமைக்கும் நலனுக்கும் அச்சுறுத்தலாக இருந்த ஒரு பிரச்சினை எவ்வளவு அருமையாக, அழகாக தீர்க்கப்பட்டது! இன்றைய கிறிஸ்தவ சபைக்கு அது சிறந்த உதாரணம்!
10. முதல் நூற்றாண்டு ஆளும் குழுவின் முன்மாதிரியை இன்று இருக்கும் ஆளும் குழு எப்படிப் பின்பற்றுகிறது?
10 முந்திய அதிகாரத்தில் பார்த்தபடி, முதல் நூற்றாண்டை போலவே, இன்றும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு செயல்படுகிறது; எல்லா விஷயத்திலும் வழிநடத்துதலுக்காக உன்னதப் பேரரசரான யெகோவாவையும் சபையின் தலைவரான இயேசு கிறிஸ்துவையும் சார்ந்திருக்கிறது.c (1 கொ. 11:3) எப்படி? 1974-லிருந்து மார்ச் 2006-ல் தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும்வரை ஆளும் குழுவின் அங்கத்தினராக சேவை செய்த ஆல்பர்ட் டி. ஷ்ரோடர் இப்படி சொன்னார்: “ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஒன்றுகூடுகிறார்கள்; கூட்டத்தை ஜெபத்தோடு ஆரம்பித்து யெகோவாவுடைய சக்தியின் வழிநடத்துதலுக்காக கேட்கிறார்கள். கலந்துபேசப்படும் ஒவ்வொரு விஷயமும், எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானமும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் அடிப்படையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள எல்லா முயற்சியும் செய்கிறார்கள்.” அதேபோல் ரொம்ப காலத்துக்கு ஆளும் குழு அங்கத்தினராக சேவை செய்து, மார்ச் 2003-ல் தன்னுடைய பூமிக்குரிய வாழ்வை முடித்த மில்டன் ஜி. ஹென்ஷல், உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 101-வது வகுப்பின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்டார்: “இந்தப் பூமியிலுள்ள எந்தவொரு அமைப்பாவது முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை ஆராய்ந்து பார்க்கிறதா?” பதில் உங்களுக்கே தெரியும்.
“சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை . . . அனுப்பத் தீர்மானித்தார்கள்” (அப். 15:22-29)
11. ஆளும் குழுவின் தீர்மானம் எப்படிச் சபைகளுக்குத் தெரிவிக்கப்பட்டது?
11 விருத்தசேதன விஷயத்தில் எருசலேமிலிருந்த ஆளும் குழு ஒருமனதாக தீர்மானம் எடுத்திருந்தது. இருந்தாலும், சபையில் இருந்த சகோதரர்கள் எல்லாரும் ஒற்றுமையாக செயல்படுவதற்கு இந்தத் தீர்மானத்தை அவர்களுக்குத் தெளிவாகவும் உந்துவிக்கும் விதத்திலும் அன்பாகவும் தெரியப்படுத்த வேண்டியிருந்தது. இதை எப்படிச் செய்யலாம்? பதிவு சொல்கிறது: “அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சபையிலிருந்த எல்லாரோடும் சேர்ந்து தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அதன்படி, சகோதரர்களை வழிநடத்திய பர்சபா என்ற யூதாசையும் சீலாவையும் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்.” அதோடு, அந்தியோகியா, சீரியா மற்றும் சிலிசியாவிலுள்ள எல்லா சபைகளிலும் வாசிக்கப்படுவதற்காக ஒரு கடிதம் எழுதி அவர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள்.—அப். 15:22-26.
12, 13. (அ) யூதாஸையும் சீலாவையும் அனுப்பியதால் கிடைத்த நன்மை என்ன? (ஆ) ஆளும் குழுவின் கடிதத்தை அனுப்பியதால் கிடைத்த நன்மை என்ன?
12 “சகோதரர்களை வழிநடத்திய” யூதாஸும் சீலாவும் ஆளும் குழுவின் பிரதிநிதிகளாகச் செயல்பட எல்லா தகுதியும் பெற்றிருந்தார்கள். அந்தப் பிரதிநிதிகள் நான்கு பேரும் கொண்டு வந்த செய்தியில் சபைகள் ஏற்கெனவே கேட்ட கேள்விக்கான பதில் மட்டுமல்ல, ஆளும் குழுவின் புதிய வழிநடத்துதலும் அடங்கியிருந்தது. ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ அந்த மனிதர்கள் நேரடியாகவே சபைகளைப் போய் சந்திப்பதால் எருசலேமிலிருந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கும் சபைகளில் இருந்த யூதராக இல்லாத கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒரு நெருங்கிய பந்தம் உருவாகும். எவ்வளவு ஞானமான, அன்பான ஏற்பாடு! இது, கடவுளுடைய மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் வளர்த்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
13 விருத்தசேதனம் சம்பந்தமாக மட்டுமல்ல, யெகோவாவின் தயவையும் ஆசீர்வாதத்தையும் பெற என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாகவும் யூதராக இல்லாத கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கடிதம் தெளிவான வழிநடத்துதலை தந்தது. அந்தக் கடிதத்தின் முக்கிய குறிப்பு இதுவே: “முக்கியமான இந்த விஷயங்களைத் தவிர வேறு எதையும் உங்கள்மேல் சுமத்தக் கூடாதென்று கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்: உருவச் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதற்கும் இரத்தத்துக்கும் நெரித்துக் கொல்லப்பட்டதற்கும் பாலியல் முறைகேட்டுக்கும் தொடர்ந்து விலகியிருங்கள். இவற்றை அடியோடு தவிர்த்தால், சிறப்புடன் வாழ்வீர்கள். நலமாயிருங்கள்!”—அப். 15:28, 29.
14. பிரிவினை நிறைந்த இந்த உலகில் யெகோவாவின் மக்கள் மத்தியில் ஒற்றுமை எப்படிச் சாத்தியமாகிறது?
14 இன்று, உலகம் முழுவதும் 1,00,000-க்கும் அதிகமான சபைகளில் இருக்கிற 80,00,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் நம்பிக்கையிலும் செயலிலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். குழப்பமும் பிரிவினையும் நிறைந்த இந்த உலகில் இப்படிப்பட்ட ஒற்றுமை எப்படி சாத்தியமாகிறது? குறிப்பாகச் சொன்னால், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை,” அதாவது ஆளும் குழு, மூலமாக சபையின் தலைவரான இயேசு கிறிஸ்து தரும் தெளிவான, திட்டவட்டமான வழிநடத்துதலால்தான் சாத்தியமாகிறது. (மத். 24:45-47) ஆளும் குழுவின் வழிநடத்துதலுக்கு உலகம் முழுவதுமுள்ள சகோதரர்கள் மனப்பூர்வமாக கீழ்ப்படிவதன் காரணமாகவும் ஒற்றுமை சாத்தியமாகிறது.
“உற்சாகமும் சந்தோஷமும் அடைந்தார்கள்” (அப். 15:30-35)
15, 16. விருத்தசேதனத்தைப் பற்றிய விவாதத்தின் விளைவு என்ன, அப்படிப்பட்ட முடிவுக்குக் காரணம் என்ன?
15 எருசலேமிலிருந்து அனுப்பப்பட்ட குழு அந்தியோகியாவுக்கு வந்தவுடன், “சபையிலிருந்த எல்லாரையும் ஒன்றுகூட்டி அவர்களிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்கள்” என்று அப்போஸ்தலர் புத்தகம் சொல்கிறது. ஆளும் குழுவின் வழிநடத்துதலை கேட்டபோது அந்தச் சகோதரர்களுக்கு எப்படி இருந்தது? அந்தக் கடிதத்தை வாசித்தவுடன் “உற்சாகமும் சந்தோஷமும் அடைந்தார்கள்.” (அப். 15:30, 31) அதோடு, யூதாஸும் சீலாவும் “நிறைய பேச்சுகளைக் கொடுத்து அந்தச் சகோதரர்களை உற்சாகப்படுத்தினார்கள், பலப்படுத்தினார்கள்.” இந்த அர்த்தத்தில் இவர்கள் இரண்டு பேரும் ‘தீர்க்கதரிசிகள்’ என்று அழைக்கப்பட்டார்கள்; இதே அர்த்தத்தில்தான் பர்னபாவும் பவுலும் மற்றவர்களும் தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்பட்டார்கள். தீர்க்கதரிசி என்ற வார்த்தை கடவுளுடைய விருப்பத்தை அறிவிக்கிறவர்களை அல்லது தெரியப்படுத்துகிறவர்களைக் குறிக்கிறது.—அப். 13:1; 15:32; யாத். 7:1, 2.
16 விருத்தசேதனத்தைப் பற்றிய விவாதத்தில் ஒரு நல்ல தீர்வு கிடைப்பதற்கு எடுக்கப்பட்ட எல்லா முயற்சியையும் யெகோவா ஆசீர்வதித்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படி ஒரு நல்ல முடிவை எடுக்க முடிந்ததுக்கு காரணம் என்ன? கடவுளுடைய வார்த்தை மற்றும் கடவுளுடைய சக்தியின் உதவியால், ஆளும் குழு சரியான நேரத்தில் கொடுத்த தெளிவான வழிநடத்துதலே காரணம் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, சபைகளுக்கு அந்த முடிவை அன்பான முறையில் தெரியப்படுத்தியதும் ஒரு காரணம்.
17. இன்றைக்கு வட்டாரக் கண்காணிகள் எப்படி முதல் நூற்றாண்டு மிஷனரிகளைப் பின்பற்றுகிறார்கள்?
17 இதே முறையைப் பின்பற்றி இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு உலகம் முழுவதும் இருக்கிற சகோதரர்களுக்குக் காலத்துக்கேற்ற வழிநடத்துதலைத் தருகிறது. தீர்மானங்கள் எடுக்கும்போது அவற்றை சபைகளுக்குத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கிறது. உதாரணத்துக்கு, வட்டாரக் கண்காணிகளின் மூலம் தெரியப்படுத்துகிறது. தியாக உள்ளம் படைத்த இந்தச் சகோதரர்கள் ஒவ்வொரு சபையாகச் சென்று தெளிவான வழிநடத்துதலும் உற்சாகமும் தருகிறார்கள். பவுலையும் பர்னபாவையும் போல, ஊழியத்தில் அதிக மணிநேரங்களை செலவழிக்கிறார்கள்; அவர்களைப் போலவே “இன்னும் நிறைய பேரோடு சேர்ந்து யெகோவாவின் வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியைக் கற்பித்துக்கொண்டும் அறிவித்துக்கொண்டும்” வருகிறார்கள். (அப். 15:35) யூதாஸையும் சீலாவையும் போல, ‘நிறைய பேச்சுகளைக் கொடுத்து சகோதரர்களை உற்சாகப்படுத்துகிறார்கள், பலப்படுத்துகிறார்கள்.’
18. யெகோவாவின் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்க அவருடைய மக்கள் என்ன செய்ய வேண்டும்?
18 சபைகளைப் பற்றி என்ன சொல்லலாம்? பிரிவினைகள் நிறைந்த இந்த உலகத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் தொடர்ந்து அனுபவிக்க சபைகளுக்கு எது உதவும்? சீஷராகிய யாக்கோபு பிற்பாடு இப்படிச் சொன்னார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்: “பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது. பின்பு சமாதானம் பண்ணுவதாக, நியாயமானதாக, கீழ்ப்படியத் தயாரானதாக . . . இருக்கிறது. சமாதானம் பண்ணுகிறவர்களுக்காக சமாதானச் சூழலில் நீதியின் விதை விதைக்கப்பட்டு, அதன் கனி அறுவடை செய்யப்படுகிறது.” (யாக். 3:17, 18) எருசலேமில் நடந்த கூட்டத்தை மனதில் வைத்து யாக்கோபு இதைச் சொன்னாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால், சபையில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்கும் என்பதை அப்போஸ்தலர் 15-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
19, 20. (அ) அந்தியோகியா சபையில் சமாதானமும் ஒற்றுமையும் நிலவியது என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) பவுலாலும் பர்னபாவாலும் இப்போது என்ன செய்ய முடிந்தது?
19 இப்போது அந்தியோகியா சபையில் சமாதானமும் ஒற்றுமையும் நிலவியதை தெளிவாகப் பார்க்க முடிந்தது. எருசலேமிலிருந்து வந்த சகோதரர்களுடன் வாக்குவாதம் செய்வதற்குப் பதிலாக, அவர்கள் வந்ததை நினைத்து அந்தியோகியாவிலிருந்த சகோதரர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஏனென்றால், அவர்கள் “அங்கே சில காலம் தங்கியிருந்த பின்பு, அந்தச் சகோதரர்களிடமிருந்து விடைபெற்று தங்களை அனுப்பியவர்களிடம் திரும்பிப் போனார்கள்,”அதாவது எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள், என்று பதிவு சொல்கிறது.d (அப். 15:33) எருசலேமிலிருந்த சகோதரர்களும் அவர்கள் பயணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டபோது நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்கள். யெகோவாவின் அளவற்ற கருணையினால் அவர்களின் பயணம் இனிதே நிறைவடைந்தது!
20 இப்போது, அந்தியோகியாவிலேயே தங்கிவிட்ட பவுலும் பர்னபாவும்—இன்றைய வட்டாரக் கண்காணிகள் செய்வதுபோல—நல்ல செய்தியை அறிவிக்கும் வேலையில் முழுக் கவனம் செலுத்த முடிந்தது. (அப். 13:2, 3) யெகோவாவின் மக்களுக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! வைராக்கியமுள்ள இந்த இரண்டு நற்செய்தியாளர்களை யெகோவா இன்னும் எப்படிப் பயன்படுத்தினார்? அதைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் பார்க்கலாம்.
a பக்கம் 112-ல், “யாக்கோபு—‘எஜமானுடைய சகோதரர்’” என்ற பெட்டியைப் பாருங்கள்.
b மோசேயின் எழுத்துக்களிலிருந்து யாக்கோபு ஞானமாக மேற்கோள்காட்டி பேசினார். அதில், திருச்சட்டம் மட்டுமல்ல திருச்சட்டத்தைக் கொடுக்கும் முன் கடவுள் செய்த பிரமாண்டமான காரியங்களும் அவருடைய விருப்பத்தின் வெளிப்பாடுகளும் பதிவாகியிருந்தன. உதாரணத்துக்கு இரத்தம், பாலியல் முறைகேடு, சிலை வழிபாடு ஆகியவற்றைப் பற்றிய கடவுளின் கண்ணோட்டத்தை ஆதியாகம புத்தகத்தில் தெளிவாகப் பார்க்க முடியும். (ஆதி. 9:3, 4; 20:2-9; 35:2, 4) இப்படி, யூதராக இருந்தாலும் சரி, மற்ற தேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்களை யெகோவா வெளிப்படுத்தினார்.
c பக்கம் 110-ல், “இன்று ஆளும் குழு செயல்படும் விதம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
d அந்தியோகியாவிலேயே தங்கியிருக்க சீலா விரும்பினார் என்பது போல் அர்த்தம் தரும் வார்த்தைகளை சில பைபிள் மொழிபெயர்ப்புகள் வசனம் 34-ல் புகுத்தியிருக்கின்றன. (தமிழ் O.V.) ஆனால், பிற்பாடுதான் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.