கடவுள் கொடுத்த சுயாதீனத்துக்காக உறுதியாக நில்லுங்கள்!
“ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.”—கலாத்தியர் 5:1.
1, 2. கடவுள் கொடுத்த சுயாதீனம் எவ்விதமாக இழக்கப்பட்டது?
யெகோவாவின் மக்கள் சுயாதீனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் கடவுளிடமிருந்து சுதந்திரத்தை அவர்கள் நாடுவதில்லை. ஏனென்றால் அது சாத்தானுக்கு அடிமையாவதை அர்த்தப்படுத்தும். அவர்கள் யெகோவாவோடு தங்கள் நெருங்கிய உறவை பேணி காக்கிறார்கள், அவர் அவர்களுக்குத் தரும் சுயாதீனத்தில் களிகூருகிறார்கள்.
2 நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாள் பாவம் செய்து பாவத்துக்கும் மரணத்துக்கும் பிசாசுக்கும் அடிமையாவதன் மூலம் கடவுள் கொடுத்த சுயாதீனத்தை இழந்து போனார்கள். (ஆதியாகமம் 3:1-19; ரோமர் 5:12) ஏன், சாத்தான் முழு உலகத்தையும் அழிவுக்குக் கொண்டுச் செல்லும் பாவமுள்ள வழியில் வைத்தான்! ஆனால் கடவுள் கொடுத்த சுயாதீன நிலைமையிலே நிலைக்கொண்டிருப்பவர்கள் நித்திய ஜீவனுக்குப் போகும் வழியில் நடக்கிறார்கள்.—மத்தேயு 7:13, 14; 1 யோவான் 5:19.
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
3. ஏதேன் தோட்டத்தில் கடவுள் என்ன நம்பிக்கையை தந்தார்?
3 யெகோவா தம்முடைய நாமத்தைக் கனப்படுத்துகிற மனிதர்கள் சாத்தானுக்கும் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமையாயிருப்பதிலிருந்து விடுதலைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று நோக்கங் கொண்டிருந்தார். ஏதேனில் சாத்தான் பயன்படுத்திய சர்ப்பத்தினிடம் கடவுள் இவ்விதமாகச் சொன்ன போது, அந்த நம்பிக்கை தரப்பட்டது: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:14, 15) யெகோவாவின் பரலோக அமைப்பிலிருந்து வந்த வித்தாகிய இயேசு கிறிஸ்து, கழுமரத்தில் மரித்த போது குதிங்கால் காயத்தை அனுபவித்தார், ஆனால் கடவுள் இவ்விதமாக விசுவாசமுள்ள மனிதகுலத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்காக ஒரு மீட்பின் பலியை அளித்தார். (மத்தேயு 20:28; யோவான் 3:16) குறித்த காலத்தில், இயேசு பழைய பாம்பாகிய சாத்தானின் தலையை நசுக்கிவிடுவார்.—வெளிப்படுத்துதல் 12:9.
4. ஆபிரகாம் என்ன சுயாதீனத்தை அனுபவித்துக் களித்தார்? யெகோவா அவருக்கு என்ன வாக்குறுதியைக் கொடுத்தார்?
4 ஏதேனில் வாக்கு கொடுத்து சுமார் 2,000 ஆண்டுகளான பின்பு, ‘யெகோவாவின் சிநேகிதனாகிய’ ஆபிரகாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து ஊர் தேசத்தை விட்டு புறப்பட்டு வேறொரு இடத்துக்குச் சென்றார். (யாக்கோபு 2:23; எபிரெயர் 11:8) இவ்விதமாக அவர் கடவுள் கொடுத்த சுயாதீனத்தைப் பெற்றுக்கொண்டார். இனிமேலும் பொய் மதம், சீரழிந்த அரசியல் மற்றும் பேராசையுள்ள வியாபாரமான சாத்தானின் உலகத்துக்கு ஓர் அடிமையாக அவர் இருக்கவில்லை. ஏதேனிய தீர்க்கதரிசனத்தோடுகூட, ஆபிரகாமின் மூலமும் அவருடைய வித்தின் மூலமும் எல்லா குடும்பங்களும் ஜனங்களும் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள் என்ற வாக்குகளைக் கடவுள் கூட்டினார். (ஆதியாகமம் 12:3; 22:17, 18) ஆபிரகாம் கண்டனத் தீர்ப்பிலிருந்து விலகியிருந்தார், ஏனென்றால் ‘அவர் யெகோவாவை விசுவாசித்தார், அதை அவர் நீதியாக எண்ணினார்.’ (ஆதியாகமம் 15:6) இன்று அதேவிதமாகவே யெகோவாவோடு ஒரு நெருக்கமான உறவு, கண்டனத் தீர்ப்பிலிருந்தும் சாத்தானின் கட்டுப்பாட்டின் கீழுள்ள உலகிற்கு அடிமையாயிருப்பதிலிருந்தும் கடவுள் கொடுத்த சுயாதீனத்தைக் கொண்டு வருகிறது.
கவனத்தைக் கவரும் ஓர் அடையாள அர்த்தமுள்ள நாடகம்
5. ஈசாக்கின் பிறப்பு என்ன சூழ்நிலைமைகளோடு இணைக்கப்பட்டிருந்தது?
5 ஆபிரகாமுக்கு ஒரு வித்துண்டாகும்படி, மலடியாயிருந்த அவருடைய மனைவி சாராள் குழந்தையை பெற்றெடுப்பவளாக தன் அடிமைப் பெண் ஆகாரை அவருக்குக் கொடுத்தாள். அவள் மூலமாக ஆபிரகாம் இஸ்மவேலுக்குத் தந்தையானார், ஆனால் வாக்குப்பண்ணப்பட்ட வித்தாக அவனை கடவுள் தெரிந்துகொள்ளவில்லை. மாறாக, ஆபிரகாமுக்கு 100 வயதும் சாராளுக்கு 90 வயதுமாக இருந்தபோது, யெகோவா அவர்கள் ஈசாக்கு என்ற பெயர்கொண்ட ஒரு குமாரனை கொண்டிருக்கக்கூடும்படிச் செய்தார். இஸ்மவேல் ஈசாக்கை கேலி செய்த போது ஆகாரும் அவளுடைய குமாரனும் தொலைவான இடத்துக்கு அனுப்பப்பட்டார்கள். சுயாதீன ஸ்திரீயாகிய சாராள் மூலமாக பிறந்த ஆபிரகாமின் குமாரன் வாதத்திற்கிடமில்லாத வித்தாக விட்டுச்செல்லப்பட்டார். ஆபிரகாமைப் போலவே, ஈசாக்கும்கூட விசுவாசத்தை அப்பியாசித்து கடவுள் கொடுத்த சுயாதீனத்தை அனுபவித்துக் களித்தார்.—ஆதியாகமம் 16:1-16; 21:1-21; 25:5-11.
6, 7. பொய் போதகர்கள் சில கலாத்திய கிறிஸ்தவர்களை எதை நம்பும்படிச் செய்தனர்? ஆனால் பவுல் என்ன விளக்கினார்?
6 இந்தச் சம்பவங்கள், கடவுள் கொடுத்த சுயாதீனத்தில் பிரியப்படுகிறவர்களுக்கு மிகவும் முக்கியத்துவமுள்ள காரியங்களுக்கு முன்நிழலாக இருந்தன. இது பொ.ச. 50 முதல் 52 போல் கலாத்திய சபைகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் சமயத்திற்குள் கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் பண்ணத் தேவையில்லை என்பதை ஆளும் குழு தீர்மானித்துவிட்டிருந்தது. ஆனால் பொய் போதகர்கள், இது கிறிஸ்தவத்தின் அத்தியாவசியமான அம்சம் என்று சொல்லி ஒரு சில கலாத்தியர்களை அதற்கு இணங்க வைத்திருந்தார்கள்.
7 பவுல் கலாத்தியரிடம் சொன்னார்: ஒரு நபர் நீதிமானாக்கப்படுவது, கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலமாகவே அன்றி மோசேயின் நியாயப்பிரமாண கிரியைகளின் மூலமாக அல்ல. (1:1–3:14) நியாயப்பிரமாணம் ஆபிரகாமிய உடன்படிக்கையோடு பிணைக்கப்பட்டிருந்த வாக்குத்தத்தத்தை செல்லாததாக்கிவிடாமல், ஆனால் மீறுதல்களை வெளிப்படுத்தி கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. (3:15-25) தம்முடைய மரணத்தின் மூலமாக இயேசு நியாயப்பிரமாணத்தின் கீழிருந்தவர்களை விடுதலை செய்து அவர்கள் தேவனுடைய புத்திரராகும்படிச் செய்தார். ஆகவே நாட்களையும் மாதங்களையும் காலங்களையும் வருடங்களையும் பார்க்கும் ஏற்பாட்டுக்குத் திரும்புவது அடிமைத்தனத்திற்குள் திரும்பப் போவதை அர்த்தப்படுத்தக்கூடும். (4:1-20) பவுல் பின்னர் எழுதினார்:
8, 9. (எ) கலாத்தியர் 4:21-26-ல் பவுல் என்ன சொன்னார் என்பதை சுருக்கமாக உங்கள் சொந்த வார்த்தைகளில் விளக்குங்கள். (பி) அடையாள அர்த்தமுள்ள இந்த நாடகத்தில், ஆபிரகாம், சாராள் ஆகியவர்கள் யாருக்கு அல்லது எதற்குப் படமாக இருந்தார்கள்? வாக்குப்பண்ணப்பட்ட வித்து யார்?
8 “நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள். ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் [ஆகார்] பிறந்தவன் [இஸ்மவேல்], ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் [சாராள்] பிறந்தவன் [ஈசாக்கு]. அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான [கடவுள் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணின இடம்] ஏற்பாடு, [நியாயப்பிரமாண உடன்படிக்கை]. அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளை பெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே. [மற்றொரு உடன்படிக்கை வித்தின் சம்பந்தமாக ஆபிரகாமோடு செய்யப்பட்ட உடன்படிக்கையாகும்.] ஆகார் என்பது அரபி தேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட [ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததியார்] அடிமைப்பட்டிருக்கிறாளே. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.”—கலாத்தியர் 4:21-26.
9 இந்த அடையாள அர்த்தமுள்ள நாடகத்தில் ஆபிரகாம் யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்தார். “சுயாதீனமுள்ள”வளான சாராள், கடவுளுடைய “ஸ்திரீ”க்கு அல்லது பரிசுத்தமான சர்வலோக அமைப்புக்கு படமாக இருந்தாள். அது அந்த அடையாள அர்த்தமுள்ள ஸ்திரீ மற்றும் பெரிய ஆபிரகாமின் வித்தாகிய கிறிஸ்துவை பிறப்பித்தது. (கலாத்தியர் 3:16) அசுத்தமான வணக்கம், பாவம் மற்றும் சாத்தானிடமிருந்து விடுவிக்கப்படுவதற்குரிய வழியை மக்களுக்குக் காண்பிக்க, இயேசு சத்தியத்தைக் கற்பித்து பொய் மதத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எருசலேமும் அவளுடைய பிள்ளைகளும் அவரை நிராகரித்துவிட்டதால் மத சம்பந்தமான அடிமைத்தனத்திலேயே இருந்தார்கள். (மத்தேயு 23:37, 38) இயேசுவை பின்பற்றிய யூதர்கள் அவர்கள் அபூரணத்துக்கும் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமையாயிருந்ததைக் காண்பித்த நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலைப்பெற்றவர்களானார்கள். மேசியானிய அரசராகவும் ‘சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிப்பவராகவும்’ கடவுளுடைய “ஸ்திரீ”யினால் பிறப்பிக்கப்பட்டவர் என்று இயேசுவை ஏற்றுக்கொள்கிற எல்லா மனிதர்களும் நிச்சயமாகவே விடுதலைப் பெற்றவர்களாயிருக்கின்றனர்!—ஏசாயா 61:1, 2; லூக்கா 4:18, 19.
அடிமைத்தன நுகத்தைத் தவிர்த்திடுங்கள்
10, 11. இயேசு தம்மைப் பின்பற்றினவர்களை என்ன அடிமைத்தன நுகத்திலிருந்து விடுவித்தார்? இன்று என்ன இணைப்பொருத்தங்கள் கவனிக்கப்படலாம்?
10 பெரிய ஈசாக்காகிய கிறிஸ்துவோடு கூட ஆபிரகாமிய வித்தை உண்டுபண்ணுகிறவர்களுக்கு பவுல் சொல்கிறார்: “மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள் . . . சகோதரரே, நாம் ஈசாக்கைப் போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் [இஸ்மவேல்] ஆவியின்படி பிறந்தவனை [ஈசாக்கு] அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழுதும் நடந்துவருகிறது. . . . நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம். ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், [நியாயப்பிரமாணத்திலிருந்து] நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.”—கலாத்தியர் 4:26–5:1.
11 இயேசுவை பின்பற்றுகிறவர்களில் எவரேனும் நியாயப்பிரமாணத்துக்கு தங்களைக் கீழ்ப்படுத்தியிருந்தால், அடிமைத்தன நுகத்தில் அவர்கள் சிறைப்படுத்தப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். பொய் மதம் தற்போதைய அடிமைத்தன நுகமாக இருக்கிறது. கிறிஸ்தவமண்டலம் பூர்வ எருசலேமுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் இணையாக இருக்கிறது. ஆனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் கடவுளுடைய சுயாதீனமுள்ள பரலோக அமைப்பாகிய மேலான எருசலேமின் பிள்ளைகளாக இருக்கின்றனர். அவர்களும் பூமிக்குரிய நம்பிக்கையுள்ள உடன் விசுவாசிகளும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை, அவர்கள் சாத்தானிடம் சிறைப்பட்டில்லை. (யோவான் 14:30; 15:19; 17:14, 16) சத்தியத்தினாலும் இயேசுவின் பலியினாலும் விடுவிக்கப்பட்டவர்களாய் நமக்குக் கடவுள் கொடுத்த சுயாதீனத்தில் உறுதியாய் நிலைத்திருப்போமாக.
கடவுள் கொடுத்த சுயாதீனத்துக்காக ஒரு நிலைநிற்கையை எடுத்தல்
12. விசுவாசிகள் என்ன போக்கை மேற்கொள்கிறார்கள்? இப்பொழுது என்ன சிந்திக்கப்படும்?
12 இலட்சக்கணக்கானோர் இப்போது யெகோவாவின் சாட்சிகளாக மெய்யான சுயாதீனத்தை அனுபவித்துக்களிக்கிறார்கள். இன்னும் லட்சக்கணக்கானோரோடு பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்களில் அநேகர் “நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்”களாக இருக்கின்றனர். விசுவாசிகளாகும் போது, இவர்கள் முழுக்காட்டப்படுவதன் மூலம், கடவுள் கொடுத்த சுயாதீனத்துக்காக ஒரு நிலைநிற்கையை எடுக்கிறவர்களாக இருப்பார்கள். (அப்போஸ்தலர் 13:48; 18:8) ஆனால் கிறிஸ்தவ முழுக்காட்டுதலுக்கு முன்நிகழும் படிகள் யாவை?
13. அறிவுக்கும் முழுக்காட்டுதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
13 முழுக்காட்டப்படுவதற்கு முன்பாக ஒரு நபர் வேதாகமத்தின் திருத்தமான அறிவைப் பெற்று அதன் பேரில் செயல்பட வேண்டும். (எபேசியர் 4:13) இதன் காரணமாகவே இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, [முழுக்காட்டுதல் கொடுத்து, NW] நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
14. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே முழுக்காட்டப்படுதல் என்ன அறிவை தேவைப்படுத்துகிறது?
14 பிதாவின் நாமத்திலே முழுக்காட்டப்படுவது என்பது கடவுளாகவும் சிருஷ்டிகராகவும் சர்வலோக பேரரசராகவும் யெகோவாவின் பதவியையும் அதிகாரத்தையும் ஒப்புக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. (ஆதியாகமம் 17:1; 2 இராஜாக்கள் 19:15; வெளிப்படுத்துதல் 4:11) குமாரனுடைய நாமத்திலே முழுக்காட்டுதல், உயர்த்தப்பட்ட ஆவி சிருஷ்டியாகவும், மேசியானிய ராஜாவாகவும், கடவுளால் “மீட்கும் பொருளாக” அளிக்கப்பட்டவராகவும் கிறிஸ்துவின் பதவியையும் அதிகாரத்தையும் ஏற்பதை தேவைப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 2:5, 6; தானியேல் 7:13, 14; பிலிப்பியர் 2:9-11) பரிசுத்த ஆவியின் நாமத்திலே முழுக்காட்டுதல் பெறும் ஒரு நபர், அது சிருஷ்டிப்பிலும் பைபிள் எழுத்தாளர்களை ஏவுகிறதிலும், இன்னும் மற்ற வழிகளிலும் பயன்படுத்தப்பட்ட கடவுளுடைய கிரியை நடப்பிக்கும் சக்தி என்பதை உணர்ந்து கொள்கிறார். (ஆதியாகமம் 1:2; 2 பேதுரு 1:21) நிச்சயமாகவே கடவுளையும் கிறிஸ்துவையும் பரிசுத்த ஆவியையும் பற்றி கற்றறிவதற்கு இன்னுமதிகம் இருக்கிறது.
15. முழுக்காட்டப்படுவதற்கு முன்பாக ஒரு நபர் ஏன் விசுவாசத்தை அப்பியாசிக்க வேண்டும்?
15 முழுக்காட்டுதலுக்கு முன்பாக, ஒரு நபர் திருத்தமான அறிவின் அடிப்படையில் விசுவாசத்தை அப்பியாசிக்க வேண்டும். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் [யெகோவாவுக்குப், NW] பிரியமாயிருப்பது கூடாத காரியம்.” (எபிரெயர் 11:6) கடவுளிலும், கிறிஸ்துவிலும் தெய்வீக நோக்கத்திலும் விசுவாசத்தை அப்பியாசிக்கும் ஒரு நபர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருக்கவும், கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக வாழ்க்கை நடத்தி நற்செய்தியை பிரசங்கிப்பதில் அர்த்தமுள்ள ஒரு பங்கைக் கொண்டிருக்கவும் விரும்புவார். அவர் யெகோவாவின் ராஜரீக மகிமையைப் பற்றி பேசுவார்.—சங்கீதம் 145:10-13; மத்தேயு 24:14.
16. மனந்திரும்புதல் என்பது என்ன? அது கிறிஸ்தவ முழுக்காட்டுதலோடு எவ்விதமாக சம்பந்தப்பட்டிருக்கிறது?
16 முழுக்காட்டுதலுக்கு மனந்திரும்புதல் மற்றொரு நிபந்தனையாகும். மனந்திரும்புதல் என்பது “மனஸ்தாபம் அல்லது அதிருப்தியின் காரணமாக கடந்தகால (அல்லது திட்டமிட்டிருக்கும்) செயல் அல்லது நடத்தையின் சம்பந்தமாக ஒருவருடைய மனதை மாற்றிக் கொள்வதை” அல்லது “ஒருவர் செய்திருக்கும் அல்லது செய்யாது விட்டிருக்கும் காரியத்துக்காக மனஸ்தாபம், மனஉறுத்தல், அல்லது வருத்தமாக உணருவதை” அர்த்தப்படுத்துகிறது. முதல் நூற்றாண்டு யூதர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமான தங்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்புவது அவசியமாயிருந்தது. (அப்போஸ்தலர் 3:11-26) கொரிந்துவிலிருந்த சில விசுவாசிகள், வேசித்தனம், விக்கிரகாராதனை, விபசாரம், ஆண்புணர்ச்சி, திருடு, பொருளாசை, வெறி, உதாசினம், கொள்ளைப் போன்றவற்றிலிருந்து மனந்திரும்பினார்கள். இதன் காரணமாகவே அவர்கள், இயேசுவின் இரத்தத்தினாலே “கழுவப்பட்டு” யெகோவாவின் சேவைக்காக பிரித்தெடுக்கப்பட்டவர்களாக “பரிசுத்தமாக்கப்பட்டு” இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும் தேவனுடைய ஆவியினாலும் “நீதிமான்களாக்கப்பட்டார்”கள். (1 கொரிந்தியர் 6:9-11) ஆகவே மனந்திரும்புதல் ஒரு நல்மனச்சாட்சியையும், பாவத்தினால் வரும் குற்றவுணர்வின் தொந்தரவிலிருந்து கடவுள் கொடுத்த சுயாதீனத்தையும் பெற்றுக்கொள்வதற்கு ஒரு படியாக இருக்கிறது.—1 பேதுரு 3:21.
17. குணப்படுதல் எதை அர்த்தப்படுத்துகிறது? முழுக்காட்டப்பட திட்டமிட்டிருக்கும் ஒருவரிடமிருந்து அது என்ன கேட்கிறது?
17 யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஒரு நபர் முழுக்காட்டப்படுவதற்கு முன்பு, குணப்படுதலும் கூட நிகழ வேண்டும். மனந்திரும்பிய ஒரு நபர் குணப்படுவது, அவர் தன்னுடைய தவறான போக்கை நிராகரித்துவிட்டப் பின்பு, சரியானதைச் செய்ய தீர்மானிக்கும் போது ஏற்படுகிறது. குணப்படுவதோடு சம்பந்தப்பட்ட எபிரெய மற்றும் கிரேக்க வினைச்சொற்கள், “பின்னால் திரும்புவதை, திசை திரும்புவதை அல்லது திரும்பி வருதலை” அர்த்தப்படுத்துகிறது. நல்ல ஆவிக்குரிய கருத்தில் பயன்படுத்தப்படுகையில், இது தவறான பாதையிலிருந்து கடவுளிடமாகத் திரும்புவதைக் குறிக்கிறது. (1 இராஜாக்கள் 8:33, 34) குணப்படுதல், “மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச்” செய்வதை, கடவுள் கட்டளையிட்டிருப்பதை நாம் செய்வதை, பொய் மதத்தை நிராகரித்துவிட்டு யெகோவாவை மாத்திரமே சேவிக்கும் பொருட்டு விலகிச் செல்லாமல் நம் இருதயத்தை அவரிடமாக திருப்புவதைத் தேவைப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 26:20; உபாகமம் 30:2, 8, 10; 1 சாமுவேல் 7:3) இது “புது இருதயத்தையும் புது ஆவியையும்,” மாற்றப்பட்ட சிந்தனையை, மனநிலையை, வாழ்க்கையில் குறிக்கோளை கேட்கிறது. (எசேக்கியேல் 18:31) இதனால் வரும் புதிய ஆள்தன்மை, தேவபக்தியற்ற பண்புகளுக்குப் பதிலாக தெய்வீக குணாதிசயங்களை உண்டுபண்ணுகிறது. (கொலோசெயர் 3:5-14) ஆம், மெய்யான மனந்திரும்புதல் உண்மையில் ஒருவரை “திசை திரும்பச்” செய்கிறது.—அப்போஸ்தலர் 3:19.
18 ஜெபத்தில் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தல் முழுக்காட்டுதலுக்கு முன் வர வேண்டும். (லூக்கா 3:21, 22 ஒப்பிடவும்.) ஒப்புக்கொடுத்தல் என்பது ஒரு பரிசுத்த நோக்கத்துக்காக பிரித்து வைக்கப்படுதலை அர்த்தப்படுத்துகிறது. இந்தப் படி, அத்தனை முக்கியமானதாக இருப்பதன் காரணமாக, கடவுளுக்கு தனிப்பட்ட பக்தியை கொடுப்பதற்கும் என்றென்றுமாக அவரை சேவிப்பதற்கும் நாம் செய்திருக்கும் தீர்மானத்தை ஜெபத்தில் அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். (உபாகமம் 5:8, 9; 1 நாளாகமம் 29:10-13) நம்முடைய ஒப்புக்கொடுத்தல் ஒரு வேலைக்கு அல்ல ஆனால் கடவுளுக்கே ஆகும். அந்தக் குறிப்பு காவற்கோபுரம் சங்கத்தின் முதல் தலைவரான சார்லஸ் டேஸ் ரஸலின் சவ அடக்கத்தின் போது தெளிவுபடுத்தப்பட்டது. 1916-ல் அந்தச் சமயத்தில் சங்கத்தின் செயலாளர்-பொருளாளர் W. E. வான் அம்பர்க் இவ்விதமாகச் சொன்னார்: “உலகெங்கிலும் செய்யப்படும் இந்த மாபெரும் வேலை, ஒரு தனிநபரின் வேலையில்லை. அதற்கு இது மிகவும் பெரியதாகும். இது கடவுளுடைய வேலையாக இருக்கிறது, இது மாறுவதில்லை. கடவுள் கடந்த காலங்களில் அநேக ஊழியர்களை பயன்படுத்தியிருக்கிறார், எதிர்காலத்தில் அநேகரை பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய ஒப்புக்கொடுத்தல் ஒரு மனிதனுக்கோ அல்லது ஒரு மனிதனுடைய வேலைக்கோ அல்ல. ஆனால் அவர் தம்முடைய வார்த்தையின் மூலமாகவும் தெய்வீக வழிநடத்துதலின் மூலமாகவும் நமக்கு வெளிப்படுத்துகின்ற கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கே ஆகும். கடவுளே இன்னும் தலைவராக இருக்கிறார்.” ஆனால் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலைப் பற்றி வேறு என்ன செய்யப்பட வேண்டும்?
19. (எ) யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதற்கு வெளிப்படையான அத்தாட்சியை ஒருவர் எவ்விதமாக கொடுக்கிறார்? (பி) தண்ணீர் முழுக்காட்டுதல் எதற்கு அடையாளமாக இருக்கிறது?
19 ஒரு நபர் முழுக்காட்டப்படும் போது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதற்கு வெளிப்படையான அத்தாட்சி அளிக்கப்படுகிறது. முழுக்காட்டுதல் என்பது தண்ணீர் முழுக்காட்டுதலுக்கு உட்படுகிறவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக, யெகோவாவுக்கு நிபந்தனையற்ற ஓர் ஒப்புக்கொடுத்தலைச் செய்திருப்பதைச் சுட்டிக்காட்டும் ஓர் அடையாளமாக உள்ளது. (மத்தேயு 16:24 ஒப்பிடவும்.) முழுக்காட்டப்படும் நபர் தண்ணீருக்கு கீழே அமிழ்த்தப்பட்டு பின்னர் அதற்கு வெளியே தூக்கப்படும் போது, அவர் அடையாள அர்த்தத்தில் தன்னுடைய முந்தைய வாழ்க்கை போக்கிற்கு மரித்து இப்பொழுது கடவுளுடைய சித்தத்தை நிபந்தனையின்றி செய்வதற்காக புதிய ஒரு வாழ்க்கை முறைக்கு உயர்த்தப்படுகிறார். (ரோமர் 6:4-6 ஒப்பிடவும்.) இயேசு முழுக்காட்டப்பட்ட போது அவர் நிபந்தனையில்லாத முறையில் தம்முடைய பரலோக தகப்பனுக்கு தம்மை அளித்தார். (மத்தேயு 3:13-17) தகுதியுள்ள விசுவாசிகள் முழுக்காட்டப்படுகிறார்கள் என்று வசனங்கள் அடிக்கடி காண்பிக்கின்றன. (அப்போஸ்தலர் 8:13; 16:27-34; 18:8) ஆகவே இன்று யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராவதற்கு ஒரு நபர் விசுவாசத்தை உண்மையில் அப்பியாசிக்கும் ஒரு விசுவாசியாக இருந்து முழுக்காட்டப்பட வேண்டும்.—அப்போஸ்தலர் 8:26-39 ஒப்பிடவும்.
உறுதியாக நிலைத்திருங்கள்!
20. யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக கடவுள் கொடுத்த சுயாதீனத்துக்காக உறுதியான ஒரு நிலைநிற்கையை எடுப்பதற்கு நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என்பதை நிரூபிக்கும் ஒரு சில பைபிள் உதாரணங்கள் யாவை?
20 யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியாக ஆவதன் மூலம் கடவுள் கொடுத்த சுயாதீனத்துக்காக நீங்கள் உறுதியான ஒரு நிலைநிற்கையை எடுத்திருப்பீர்களேயானால், கடந்த காலங்களில் தம்முடைய ஊழியர்களை ஆசீர்வதித்த வண்ணமாகவே அவர் உங்களை ஆசீர்வதிப்பார். உதாரணமாக, வயதான ஆபிரகாமையும் சாராளையும் கடவுள் பயமுள்ள குமாரனாகிய ஈசாக்கைக் கொண்டு ஆசீர்வதித்தார். விசுவாசத்தின் மூலமாக தீர்க்கதரிசியாகிய மோசே, “அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும்” தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொண்டு “எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் [பூர்வத்தில் ஒரு மாதிரியாக இருந்தபடியால்] கிறிஸ்துவினிமித்தம் [அல்லது கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்டவரினிமித்தம்] வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.” (எபிரெயர் 11:24-26) மோசே இஸ்ரவேலரை எகிப்திய அடிமைத்தனத்தினின்று வெளியே அழைத்துவர யெகோவாவால் பயன்படுத்தப்படும் சிலாக்கியம் பெற்றார். மேலுமாக, கடவுளை அவர் உண்மையுடன் சேவித்த காரணத்தால், அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு, பெரிய மோசேவாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ் “பூமியெங்கும் பிரபு”களில் ஒருவராக சேவிப்பார்.—சங்கீதம் 45:16; உபாகமம் 18:17-19.
21. பூர்வ காலங்களிலிருந்த தேவபக்தியுள்ள பெண்களைப் பற்றி என்ன உற்சாகமூட்டும் உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
21 உண்மையில் சுயாதீனமுள்ளவர்களாகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் இருந்த பெண்களைப் பற்றி சிந்திப்பதன் மூலமாகவும்கூட ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் இன்று உற்சாகப்படுத்தப்படலாம். இவர்களில், விதவையின் மனவேதனையையும், பொய் மதத்திலிருந்து கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் மகிழ்ச்சியையும் அனுபவித்த மோவாபிய பெண் ரூத் இருந்தாள். தன் ஜனங்களையும் தன் கடவுட்களையும் நிராகரித்துவிட்டு, அவள் தன் மாமியாகிய நகோமியை பற்றிக்கொண்டிருந்தாள். “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என்று அவள் சொன்னாள். (ரூத் 1:16) போவாஸின் மனைவியாக ரூத், தாவீதின் தாத்தாவாகிய ஓபேத்துக்கு தாயானாள். (ரூத் 4:13-17) ஏன், மேசியாவாகிய இயேசுவின் ஒரு முன்னோளாவதற்கு அனுமதிப்பதன் மூலம் யெகோவா இந்தத் தாழ்மையான இஸ்ரவேல் அல்லாத பெண்ணுக்கு இந்தத் “தக்க பலனை” அருளினார்! (ரூத் 2:12, NW) உயிர்த்தெழுப்பப்படுகையில் தனக்கு இப்படிப்பட்ட ஒரு சிலாக்கியமிருந்ததை அறிந்துகொள்ளும் போது ரூத் எத்தனை மகிழ்ச்சியடைவாள்! அதேவிதமாவே, ஒழுக்கயீனத்திலிருந்தும் பொய் வணக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்ட உயிர்த்தெழுப்பப்படும் முன்னாள் வேசி ராகாபின் இருதயமும், தவறு செய்த ஆனால் மனந்திரும்பிய பத்சேபாளின் இருதயமும் மகிழ்ச்சியினால் நிரம்பியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால் இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோளாகும்படி யெகோவா தேவன் தங்களை அனுமதித்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.—மத்தேயு 1:1-6, 16.
22. அடுத்தக் கட்டுரையில் என்ன சிந்திக்கப்பட இருக்கிறது?
22 கடவுள் கொடுத்த சுயாதீனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைப் பற்றிய சிந்திப்பு போய் கொண்டே இருக்கக்கூடும். உதாரணமாக அவர்களுடைய எண்ணிக்கையில், எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் அடங்குவர். அவர்கள் உபத்திரவத்தையும் துன்பத்தையும் சகித்துக்கொண்டார்கள், “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.” அவர்களுடைய எண்ணிக்கையோடுகூட கிறிஸ்துவை உண்மையுடன் முதல் நூற்றாண்டில் பின்பற்றியவர்களையும், இப்பொழுது யெகோவாவை அவருடைய சாட்சிகளாக சேவித்து வரும் லட்சக்கணக்கானோர் உட்பட அப்போது முதல் இருந்து வரும் மற்ற உண்மையுள்ளவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நாம் அடுத்து பார்க்கப் போகிற விதமாகவே கடவுள் கொடுத்த சுயாதீனத்துக்காக அவர்களோடு உங்களுடைய நிலைநிற்கையை எடுத்திருந்தால், மகிழ்ச்சியாயிருக்க உங்களுக்கு அநேக காரணங்கள் உண்டு. (w92 3/15)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻கடவுள் கொடுத்த சுயாதீனம் இழக்கப்பட்ட போது என்ன நம்பிக்கையை கடவுள் அளித்தார்?
◻என்ன “அடிமைத்தன நுகத்திலிருந்து” கிறிஸ்து தம்மைப் பின்பற்றியவர்களை விடுதலையாக்கினார்?
◻யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டப்படுவதற்கு முன்வரும் படிகள் யாவை?
◻கடவுள் கொடுத்த சுயாதீனத்துக்காக ஒரு நிலைநிற்கையை எடுப்பதற்காக நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என்பதை என்ன வேதப்பூர்வமான உதாரணங்கள் நிரூபிக்கின்றன?
18. ஜெபத்தில் கடவுளுக்கு ஏன் ஒப்புக்கொடுக்க வேண்டும்? இந்தப் படியின் முக்கியத்துவம் என்ன?
[பக்கம் 16-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டப்படுவதற்கு முன்பாக வரும் படிகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?