வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வேசித்தனத்தில் அல்லது காமவிகாரத்தில் ஈடுபட்டதற்காக ஒருவரைக் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்குவதைப் போலவே அசுத்தமான பழக்கங்களில் ஈடுபட்டவரையும் சபைநீக்கம் செய்ய முடியுமா?
முடியும், ஒரு நபர் மனந்திரும்பாமல் வேசித்தனத்திலோ, சில அசுத்தமான பழக்கங்களிலோ, காமவிகாரத்திலோ ஈடுபட்டால் அவரைச் சபையிலிருந்து நீக்கலாம். அப்போஸ்தலன் பவுல் சபைநீக்கம் செய்யப்படுவதற்குரிய குற்றங்களோடு பின்வரும் மூன்று பாவங்களையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார். “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம் . . . இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று நான் . . . உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—கலாத்தியர் 5:19-21.
வேசித்தனம் (கிரேக்கில், போர்னியா) வேதப்பூர்வமான திருமணத்திற்கு வெளியே கொள்ளும் கள்ளத்தனமான பாலுறவுகளைக் குறிக்கிறது. வேசித்தனம், விபசாரம், மணமாகாதவர்களுக்கு இடையே பாலுறவு, வாய்வழிப் புணர்ச்சி, ஆசனவழி புணர்ச்சி, மணத்துணை அல்லாத வேறொருவரின் பாலுறுப்புகளை கிளர்ச்சியடையச் செய்தல் போன்றவை அதில் உட்பட்டுள்ளன. வேசித்தனம் செய்கிற ஒருவர் மனந்திரும்பாவிட்டால் கிறிஸ்தவ சபையில் தொடர்ந்து இருக்க முடியாது.
காமவிகாரம் (கிரேக்கில், ஆசெல்யீயா) என்பது “இழிவான காமம், ஒழுக்கக்கேடு, வெட்கங்கெட்ட நடத்தை, காமவெறி” ஆகியவற்றைக் குறிக்கிறது. த நியூ தேயர்ஸ் கிரீக்-இங்லீஷ் லெக்ஸிகன் இந்தக் கிரேக்கப் பதத்தை, “கட்டுக்கடங்காத காமம், . . . மட்டுமீறிய ஒழுக்கக்கேடு, வெட்கங்கெட்டத்தனம், துடுக்குத்தனம்” என்று விளக்குகிறது. இன்னொரு அகராதியின்படி, காமவிகாரம் என்பது “சமுதாய வரம்புகள் அனைத்தையும் மீறும் நடத்தையாகும்.”
மேற்குறிப்பிடப்பட்ட விளக்கங்களின்படி, ‘“காமவிகாரம்” என்பதில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன: (1) அந்த நடத்தையே கடவுளுடைய சட்டங்களை நேரடியாக மீறுவதாகும். (2) தவறு செய்தவரின் மனப்பான்மை அவமரியாதை மிக்கதாகவும், துணிகரமுள்ளதாகவும் இருக்கிறது.
ஆகவே, “காமவிகாரம்” என்பது ஏதோ ஒரு சிறிய தவறைக் குறிப்பதில்லை. அது கடவுளுடைய சட்டங்களை நேரடியாக மீறுவதாகும். அதோடு துணிகரமான அல்லது துணிந்து அவமதிக்கும் மனப்பான்மையை அதாவது அவமரியாதை காட்டுவதை அல்லது அதிகாரங்களையும் சட்டங்களையும் தராதரங்களையும் வெறுப்பதையும்கூட குறிக்கிறது. பவுல் காமவிகாரத்தை முறைதகா உறவுக்கு ஒப்பிடுகிறார். (ரோமர் 13:13, 14, NW) கடவுளுடைய ராஜ்யத்தில் ஒருவர் பிரவேசிக்க முடியாதபடி செய்யும் தவறான பழக்கங்களோடு காமவிகாரத்தையும் கலாத்தியர் 5:19-21 பட்டியலிடுவதால், அது அவர் கண்டிக்கப்படுவதற்கும், கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்படுவதற்கும் அடிப்படையாய் அமைகிறது.
அசுத்தம் (கிரேக்கில், ஆகாதார்ஸீயா) என்பது “வேசித்தனம்,” “அசுத்தம்,” “காமவிகாரம்,” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூன்று வார்த்தைகளிலேயே மிக விரிவான அர்த்தத்தைத் தருகிறது. பாலுறவில், பேச்சில், செயலில் ஆன்மீகத்தில் என எல்லா விதமான அசுத்தத்தையும் அது உட்படுத்துகிறது. எனவே “அசுத்தம்,” பல மோசமான பாவங்களை உட்படுத்துகிறது.
2 கொரிந்தியர் 12:21-ல் பவுல், ‘பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதை’ பற்றி குறிப்பிட்டார். “அசுத்தம்” என்பது “வேசித்தனம்,” “காமவிகாரம்” ஆகியவற்றோடு பட்டியலிடப்பட்டிருப்பதால், சில வகை அசுத்தங்கள் நீதிவிசாரணைக்குரிய நடவடிக்கை எடுக்க அடிப்படையாய் அமைகின்றன. ஆனால் அசுத்தம் என்ற விரிவான அர்த்தம் கொண்ட பதம் நீதிவிசாரணைக்குரிய நடவடிக்கை தேவைப்படாத விஷயங்களையும் உட்படுத்துகிறது. ஒரு வீடு ஓரளவு அசுத்தமாகவும் இருக்கலாம், பார்க்கவே சகிக்காததாகவும் இருக்கலாம்; அதைப்போலவே அசுத்தமான நடத்தையும் பலதரப்பட்டது.
பவுல் எபேசியர் 4:19-ல் குறிப்பிடுகிறபடி, சிலர் “உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே [“பேராசையோடே,” NW] நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.” காமவிகாரத்தோடு ‘அசுத்தங்களை . . . பேராசையோடே நடப்பிப்பதையும்’ ஒன்றாகவே வகைப்படுத்துகிறார். முழுக்காட்டப்பட்ட ஒரு நபர் மனந்திரும்பாமல் ‘அசுத்தங்களில் . . . பேராசையோடே’ ஈடுபட்டு வந்தால், படுமோசமான அசுத்தத்தின் அடிப்படையில் அவர் சபையிலிருந்து நீக்கப்படலாம்
திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட ஒரு ஜோடி இறுக்கமாய் கட்டியணைப்பது, மார்பகங்களில் முத்தம் கொடுப்பது போன்ற காரியங்களில் பல தடவை ஈடுபட்டிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இவர்கள் காமவிகாரத்தின் அம்சமாகிய துணிகரமான மனப்பான்மையை வெளிக்காட்டாவிட்டாலும், ஓரளவு “பேராசையோடே” நடந்துகொண்டார்கள் என்ற முடிவுக்கு மூப்பர்கள் வரலாம். இது படுமோசமான அசுத்தமாக இருப்பதால் மூப்பர்கள் அவர்கள் மீது நீதிவிசாரணை நடவடிக்கை எடுக்கலாம். அடிக்கடி பாலியல் விஷயங்களை தொலைபேசியில் அப்பட்டமாக பேசும் ஒரு நபரை ஏற்கெனவே எச்சரித்திருந்தும், தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் அவர்மேல் நீதிவிசாரணைக்குரிய நடவடிக்கை எடுக்க படுமோசமான அசுத்தம் பொருத்தமான காரணமாய் அமைகிறது.
அப்படிப்பட்ட முடிவுக்கு வர மூப்பர்களுக்கு பகுத்துணர்வு தேவை. உண்மையில் என்ன நடந்திருக்கிறது, எந்தளவுக்கு நடந்திருக்கிறது என்றெல்லாம் கவனமாகச் சீர்தூக்கிப் பார்த்த பிறகே நீதிவிசாரணை தேவையா இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். ஆன்மீக ரீதியில் கொடுக்கப்பட்ட ஆலோசனையை மதித்து நடக்காததற்காக யாரையும் காமவிகாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்ட முடியாது. அதேபோல் ஒரு நபர் எத்தனை முறை தவறு செய்த பிறகு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று எந்தக் கணக்கும் கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்ப சூழ்நிலையையும் மூப்பர்கள் கவனமாக ஜெபத்தோடு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். என்ன நடந்தது, எவ்வளவு அடிக்கடி செய்யப்பட்டது, என்ன வகையான தவறு, எந்தளவுக்கு செய்யப்பட்டது, எந்த காரணத்தோடும் உள்நோக்கத்தோடும் செய்யப்பட்டது போன்றவற்றையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்.
படுமோசமான அசுத்தம் என்பது பாலியல் பாவங்களை மட்டுமே குறிப்பதில்லை. உதாரணமாக, முழுக்காட்டப்பட்ட ஒரு சிறுவன் குறுகிய காலத்தில் சில சிகரெட்டுகளைக் குடித்திருக்கிறான், பின்னர் தான் செய்த தவறைத் தன் பெற்றோரிடம் ஒப்புக்கொண்டான். மறுபடியும் அதைக் கையில் தொடுவதில்லையென முடிவெடுத்தான். இது அசுத்தமான நடத்தை என்றாலும், படுமோசமான அசுத்தம் அல்லது ‘பேராசையோடு கூடிய அசுத்தமான நடத்தை’ என முடிவுகட்டும் அளவுக்கு இல்லை. ஓரிரு மூப்பர்கள் சேர்ந்து அவனுக்கு வேதப்பூர்வ அறிவுரை தருவதும், பெற்றோர் அவனுக்கு உதவுவதும் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அந்தப் பிரஸ்தாபி அடிக்கடி சிகரெட் குடித்தால், அது உடலை வேண்டுமென்றே கறைபடுத்துவதாக இருக்கும், இந்தப் படுமோசமான அசுத்தத்தை விசாரிக்க நீதிவிசாரணைக் குழு ஏற்படுத்தப்படலாம். (2 கொரிந்தியர் 7:1) அந்தப் பிரஸ்தாபி மனந்திரும்பாவிட்டால், சபைநீக்கம் செய்யப்படலாம்.
சில கிறிஸ்தவர்கள் ஆபாசத்தைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது கடவுளுக்குப் பிடிக்காத விஷயம்; இப்படி ஆபாசத்தை சக விசுவாசி ஒருவர் பார்த்திருப்பதை மூப்பர்கள் அறியும்போது அதிர்ச்சியடையலாம். ஆனால் எத்தகைய ஆபாசத்தைப் பார்த்தாலும் நீதிவிசாரணைக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. உதாரணமாக, ‘ஓரளவு மோசமான பாலியல் காட்சிகளை’ (soft-core pornography) ஒரு சகோதரர் பலமுறை பார்த்தாரென வைத்துக்கொள்வோம். அவர் தன்னைக்குறித்து அவமானப்பட்டு, தன் தவற்றை ஒரு மூப்பரிடம் ஒப்புக்கொண்டு, மறுபடியும் அத்தகைய தவற்றைச் செய்யப்போவதில்லை என உறுதிபூண்டார். அந்த சகோதரரின் நடத்தை, ‘சகலவித அசுத்தங்களையும் பேராசையோடே நடப்பிக்கும்’ அளவுக்கு இல்லை என அந்த மூப்பர் தீர்மானிக்கலாம். காமவிகாரத்தைச் சுட்டிக்காட்டும் துணிகரமான மனப்பான்மையை அவர் காட்டவில்லை என்ற முடிவுக்கும் வரலாம். நீதிவிசாரணை தேவைப்படாவிட்டாலும், பைபிளின் அடிப்படையில் கண்டிப்பதும், மூப்பர்கள் தொடர்ந்து உதவி செய்வதும் அவசியமாக இருக்கலாம்.
என்றாலும், ஒரு கிறிஸ்தவர் பல வருடங்களாக மிகவும் கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க ஆபாசத்தை இரகசியமாக பார்த்து வந்திருக்கிறார். ஒருவேளை, கும்பலாக கற்பழித்தல், கட்டிப்போட்டு உடலுறவில் ஈடுபடுதல், கொடூரமான சித்திரவதை, பெண்களை மிருகத்தனமாக நடத்துதல், அல்லது சிறார் ஆபாசம் போன்றவற்றைப் பார்த்து வந்திருக்கலாம். அதை மூடிமறைக்க தன்னாலான அனைத்தையும் செய்து வந்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். இத்தகைய சூழ்நிலையில், மற்றவர்கள் அவருடைய செயல்களை அறிய வரும்போது, அவர் அவமானத்தில் கூனிக்குறுகிவிடுகிறார். துணிகரமான மனப்பான்மையைக் காட்டவில்லை என்றாலும், கெட்ட நடத்தைக்கு அவர் ‘தன்னை ஒப்புக்கொடுத்திருப்பதாக’ மூப்பர்கள் தீர்மானிக்கலாம்; அதோடு அவர் ‘பேராசையோடே அசுத்த நடத்தையில்,’ அதாவது படுமோசமான அசுத்தத்தில், பழக்கமாக ஈடுபட்டதாகவும் முடிவு செய்யலாம். படுமோசமான அசுத்தம் உட்பட்டிருப்பதால் நீதிவிசாரணைக் குழு ஏற்படுத்தப்படும். அந்த நபர் கடவுள் விரும்பும் விதத்தில் மனந்திரும்பாவிட்டால், இனியும் ஆபாசத்தைப் பார்க்கப் போவதில்லை என உறுதி அளிக்காவிட்டால், கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்படுவார். அதே நபர் ஆபாசத்தைப் பார்க்க மற்றவர்களையும் வீட்டிற்கு அழைத்து, இவ்வாறு அதை முன்னேற்றுவித்தால், அப்போது அவர் துணிகரமான மனப்பான்மையைக் காட்டுகிறார், இது காமவிகாரத்தில் ஈடுபடுவதாகும்.
பைபிளில் உபயோகிக்கப்பட்டுள்ளபடி, “காமவிகாரம்” என்ற பதம் எப்போதுமே மோசமான பாவத்தைத்தான், பொதுவாக பாலியல் சம்பந்தப்பட்ட பாவத்தைத்தான் குறிக்கிறது. மூப்பர்கள் அதைக் கண்டறிய முயலும்போது, துணிச்சலான நடத்தை, காமவெறி, கெட்ட நடத்தை, வெட்கங்கெட்டத்தனம், அதிர்ச்சியூட்டும் அநாகரிகமான செயல் ஆகிய குணங்கள் தெரிகிறதாவென பார்க்க வேண்டும். மறுபட்சத்தில், துணிகர மனப்பான்மை காட்டாத ஒருவர் யெகோவாவின் சட்டத்தை மோசமாக மீறினால் அதில் ‘பேராசை’ உட்பட்டிருக்கலாம். இதுபோன்ற விஷயங்களில் படுமோசமான அசுத்தம் உட்பட்டிருப்பதால், அதன் அடிப்படையில் கையாள வேண்டும்.
ஒருவர் படுமோசமான அசுத்தத்தில் ஈடுபட்டாரா அல்லது காமவிகாரத்தில் ஈடுபட்டாரா என்பதைத் தீர்மானிப்பது மிக முக்கியமான ஒன்று, ஏனெனில் உயிர்கள் உட்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட விஷயங்களை நீதிவிசாரணை செய்பவர்கள், மிகுந்த ஜெபத்தோடும், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியோடும், பகுத்துணர்வோடும், புரிந்துகொள்ளுதலோடும் அவற்றைச் செய்ய வேண்டும். மூப்பர்கள் சபையின் சுத்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். அதோடு, அவர்களுடைய தீர்ப்பு கண்டிப்பாக கடவுளுடைய வார்த்தைக்கும், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பாரின் வழிநடத்துதலுக்கும் இசைவாக இருக்க வேண்டும். (மத்தேயு 18:18; 24:45, NW) இந்தப் பொல்லாத நாட்களில், எப்போதையும்விட இப்போது, மூப்பர்கள் பின்வரும் வார்த்தைகளை மனதில் வைப்பது அவசியம்: “நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்.”—2 நாளாகமம் 19:6.