மணவாழ்வைப் பலப்படுத்தும் நல்ல பேச்சுத்தொடர்பு
“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.”—நீதி. 25:11.
1. நல்ல பேச்சுத்தொடர்பு எப்படி மணவாழ்வுக்கு கைகொடுத்திருக்கிறது?
“வேற யாரையும்விட என் மனைவியோட நேரம் செலவிடதான் எனக்கு பிடிக்கும். அவகிட்ட பேசும்போது சந்தோஷம் ரெண்டு மடங்காயிடும், கவலை பாதியா குறைஞ்சிடும்,” என்று கனடாவைச் சேர்ந்த ஒரு சகோதரர் சொன்னார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “கல்யாணம் ஆகி 11 வருஷம் ஆகுது. ஆனா, ஒருநாள்கூட நாங்க ரெண்டு பேரும் பேசாம இருந்ததே கிடையாது. எங்களுக்குள்ள விரிசல் வந்திடுமோன்னு நாங்க கவல பட்டதே இல்லை. இதுக்கு முக்கிய காரணம், எங்களுக்குள்ள இருந்த நல்ல பேச்சுத்தொடர்புதான்.” கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “நல்ல பேச்சுத்தொடர்பு இருந்ததுனால எங்க மணவாழ்க்கை ஆனந்தமா இருந்துச்சு. அதோட, யெகோவாகிட்டயும் ரொம்ப நெருக்கமானோம், ஒருத்தருக்கொருத்தர் உண்மையா அன்யோன்யமா இருந்தோம், எங்களுக்குள்ள இருந்த அன்பும் அதிகமாச்சு.”
2. நல்ல பேச்சுத்தொடர்புக்கு சவாலாக இருப்பவை எவை?
2 உங்கள் மணவாழ்வில் இனிய பேச்சுத்தொடர்பு இருக்கிறதா? அல்லது மனம்விட்டு பேசுவது கஷ்டமாக இருக்கிறதா? மணவாழ்வில் பிரச்சினை வருவது சகஜம்தான். ஏனென்றால், வித்தியாசமான குணம், கலாச்சாரம், வளர்ந்த விதம் என வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வரும் இரு அபூரண இதயங்கள் இணைவதே திருமணம். (ரோ. 3:23) அவர்கள் பேசும் விதம் வேறுபடலாம். அதனால்தான், திருமணத்தைப் பற்றி ஆய்வு செய்யும் ஜான் எம். காட்மனும் நேன் சில்வரும் இப்படிச் சொல்கிறார்கள்: “திருமண பந்தம் நிலைத்திருக்க தைரியம், விடாமுயற்சி, எதையும் தாங்கும் இதயம் தேவை.”
3. மணவாழ்வு சிறக்க அநேகர் என்ன செய்திருக்கிறார்கள்?
3 மணவாழ்வு சிறக்க கடின உழைப்பு தேவை. அப்படி உழைக்கும்போது வாழ்வில் சந்தோஷம் பூத்துக் குலுங்கும். ஒருவருக்கொருவர் பாசத்தைப் பொழியும் தம்பதிகளால் உண்மையிலேயே சந்தோஷமாக வாழ முடியும். (பிர. 9:9) ஈசாக்கு-ரெபெக்காளின் மணவாழ்வை சிந்தித்துப் பாருங்கள். (ஆதி. 24:67) கணவன் மனைவியாக பல வருடங்கள் வாழ்ந்த பிறகும், அவர்களுக்குள் இருந்த பாசம் மங்கிவிட்டதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. இவர்களைப் போன்ற தம்பதிகள் இன்றும் அநேகர் இருக்கிறார்கள். அவர்களுடைய வெற்றியின் இரகசியம்? அபிப்பிராயங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படையாக அதே சமயம் கனிவாகச் சொல்ல கற்றிருக்கிறார்கள். இதற்காக விவேகம், அன்பு, ஆழ்ந்த மரியாதை, மனத்தாழ்மை ஆகிய குணங்களை வளர்த்திருக்கிறார்கள். இந்த முக்கியமான குணங்கள் மணவாழ்வில் மணம் பரப்பும்போது பேச்சுத்தொடர்புக்கான வழி திறந்தே இருக்கும்.
விவேகத்துடன் நடந்துகொள்ளுங்கள்
4, 5. தம்பதிகள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள விவேகம் எப்படி உதவும்? உதாரணம் கொடுங்கள்.
4 “விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்” என்று நீதிமொழிகள் 16:20 சொல்கிறது. இந்த ஆலோசனை மிக முக்கியமாக மணவாழ்வுக்குப் பொருந்துகிறது. (நீதிமொழிகள் 24:3-ஐ வாசியுங்கள்.) ஞானமும் விவேகமும் கடவுளுடைய வார்த்தையில் புதைந்து கிடைக்கின்றன. ஆதியாகமம் 2:18 சொல்கிறபடி, ஆணுக்குப் பெண் ஏற்ற துணையாக இருக்க வேண்டும் என்றே கடவுள் பெண்ணைப் படைத்தார், அவள் ஆணை போல இருக்க வேண்டும் என்று படைக்கவில்லை. அதனால்தான் ஆணை போலவே பெண் பேசுவதில்லை. பேசும் விதத்தில் நபருக்கு நபர் வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால், பெண்களைப் பொறுத்ததில் தங்கள் உணர்ச்சிகளைப் பற்றி, உறவுகளைப் பற்றி, மற்றவர்களை பற்றி பேச விரும்புவார்கள். அன்பாக, அன்யோன்யமாகப் பேச வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்; இது, தங்களை நேசிக்கும் ஒரு நெஞ்சம் இருக்கிறது என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தும். ஆண்களோ தங்கள் உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிக்காட்ட மாட்டார்கள். வேலைகளை, பிரச்சினைகளை, தீர்வுகளைப் பற்றித்தான் அதிகம் பேசுவார்கள். தங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
5 பிரிட்டனிலிருக்கும் ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “என்ன நடந்ததுன்னு கேக்காமலேயே, சட்டுபுட்டுனு பிரச்சினையை தீர்த்துடணும்னு என் கணவர் நினைப்பார். அவர் காதுகொடுத்து கேட்கணும்னு நான் நினைப்பேன், ஆனா அவர் இப்படிப் பண்ணும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.” கணவர் எழுதினார்: “கல்யாணமான புதுசுல, அவளுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் அத அடுத்த நிமிஷமே சரிபண்ணிடனும்னு நினைப்பேன். ஆனா, அவ சொல்றத நான் பொறுமையா காதுகொடுத்து கேக்கணும்னுதான் அவ எதிர்பார்த்திருக்கிறாள்; அத நான் பின்னாலதான் புரிஞ்சிக்கிட்டேன்.” (நீதி. 18:13; யாக். 1:19) விவேகமுள்ள கணவன், மனைவியின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, அதற்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்கிறார். அதேசமயம், அவளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மதிப்பதை சொல்லிலும் செயலிலும் காட்டுகிறார். (1 பே. 3:7) அதேபோல், மனைவியும் கணவனின் மனதைப் புரிந்துகொள்ள முயலுகிறாள். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, மதித்து, பைபிள் சொல்கிறபடி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும்போது, அவர்களால் சிறந்த ஜோடியாக வாழ முடியும். அதோடு இருவரும் சேர்ந்து ஞானமான, சமநிலையான தீர்மானங்களை எடுக்கவும் அதைக் கடைப்பிடிக்கவும் முடியும்.
6, 7. (அ) பிரசங்கி 3:7-ல் உள்ள ஆலோசனை விவேகத்தைக் காட்ட தம்பதிகளுக்கு எப்படி உதவும்? (ஆ) மனைவி எப்படி விவேகத்தைக் காட்டலாம், கணவன் எதைச் செய்ய முயற்சி எடுக்க வேண்டும்?
6 “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்பதையும் விவேகமுள்ள தம்பதிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். (பிர. 3:1, 7) மணவாழ்வில் 10 வருடங்களைக் கடந்த சகோதரி சொல்கிறார்: “நேரம் பார்த்துதான் பிரச்சினையை பற்றி வாய் திறக்கணும்னு கத்துக்கிட்டேன். என் கணவர் வேலை டென்ஷன்ல இருக்கறப்போ, வேற ஏதாவது முக்கியமான வேலை செஞ்சிட்டு இருக்கிறப்போ கொஞ்ச நேரம் பொறுமையா இருந்துட்டு அப்புறந்தான் விஷயத்தை சொல்வேன். அப்பதான், சுமுகமா பேச முடியும்.” விவேகமுள்ள மனைவி கனிவாகப் பேசுவாள், ஏற்ற சமயத்தில் சொன்ன சரியான வார்த்தை மனதைத் தொடும் என்பதை உணர்ந்திருக்கிறாள்.—நீதிமொழிகள் 25:11-ஐ வாசியுங்கள்.
7 ஒரு கிறிஸ்தவ கணவன், மனைவி சொல்வதைக் காதுகொடுத்து கேட்டால் மட்டும் போதாது, தன் மனதைத் திறந்து உணர்ச்சிகளை சொல்லவும் வேண்டும். மணவாழ்வில் 27 வருடங்களைக் கழித்த மூப்பர் சொன்னார்: “என் மனசுல உள்ளத சொல்றதுக்கு நான் நல்லா முயற்சி செய்ய வேண்டியிருந்தது.” மணம் முடித்து 24 வருடங்கள் ஆன சகோதரர் இப்படிச் சொன்னார்: “வாயே திறக்கலனா, பிரச்சினை தானா சரியாகிடும்னு நினைச்சு எல்லாத்தையும் மனசுக்குள்ள பூட்டி வச்சிப்பேன். ஆனா, என்னோட உணர்ச்சிகள சொன்னா ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டேன்னு புரிஞ்சுகிட்டேன். எப்படிச் சொல்றதுனு தெரியாம தவிக்கும்போது, நல்ல வார்த்தைகள பயன்படுத்தி நல்ல விதமா சொல்றதுக்கு உதவுங்கனு ஜெபம் பண்ணுவேன். அப்புறம், மூச்சை நல்லா இழுத்துவிட்டுட்டு பேச ஆரம்பிப்பேன்.” பேசுவதற்குச் சரியான சூழலும் முக்கியம். ஒருவேளை இருவரும் சேர்ந்து தினவசனத்தைக் கலந்தாலோசிக்கும்போது அல்லது பைபிள் படிக்கும்போது பேசலாம்.
8. மணவாழ்வில் மற்றவர்களால் சாதிக்க முடியாத எதைக் கிறிஸ்தவத் தம்பதிகள் சாதிக்கிறார்கள்?
8 உரையாடும் கலையை வளர்த்துக்கொள்ள கணவனும் மனைவியும் ஜெபம் செய்ய வேண்டும். அதோடு, அதை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இருக்க வேண்டும். ஒருவர் தன் சுபாவத்தை மாற்றிக்கொள்வது கஷ்டம்தான். ஆனால், ஒரு தம்பதி யெகோவாவை நேசித்தால்... அவருடைய சக்திக்காக ஜெபித்தால்... திருமண பந்தத்தைப் புனிதமாக நினைத்தால்... மற்றவர்களால் முடியாததையும்கூட அவர்களால் சாதிக்க முடியும். மணமுடித்து 26 வருடங்களைக் கடந்த மனைவி எழுதுகிறார்: “திருமணத்தைக் கடவுள் பார்க்கிற விதமா பார்க்கிறோம். பிரிஞ்சு போறத பத்தி நினைச்சுக்கூட பார்த்ததில்ல. அதனால, பிரச்சினைகள கலந்து பேசி, எப்பாடுபட்டாவது தீர்த்துக்க முயற்சி செய்வோம்.” அப்படி ஒருவருக்கொருவர் உண்மையாக, தெய்வ பயத்தோடு வாழ்வது கடவுளைச் சந்தோஷப்படுத்துகிறது, கடவுளிடமிருந்து அளவில்லா ஆசீர்வாதத்தையும் பெற்று தருகிறது.—சங். 127:1-3.
அன்பில் வளருங்கள்
9, 10. தம்பதிகள் எப்படியெல்லாம் தங்கள் பந்தத்தைப் பலப்படுத்தலாம்?
9 “பரிபூரணமாகப் பிணைப்பது அன்பே.” திருமண பந்தத்தில் இந்தக் குணத்தைக் காட்டுவது முக்கியம். (கொலோ. 3:14) நாட்கள், மாதங்கள், வருடங்கள் என இன்பத்தையும் துன்பத்தையும் ஒருவருக்கொருவர் பங்கிட்டு வாழும்போது தம்பதிகளுக்கிடையே உண்மையான அன்பு தழைத்தோங்கும். உயிர் நண்பர்களாகவும் ஆவார்கள், “நீ/நீங்கள் இல்லாமல் நானில்லை” என்று வாழ்வார்கள். சினிமாக்களில், மனைவி கணவனுக்காக அல்லது கணவன் மனைவிக்காக ஏதாவதொரு பெரிய விஷயம் செய்வதுபோல் காட்டப்படும். அது மட்டும் போதாது, நிறைய சின்ன சின்ன விஷயங்களைச் செய்வதும் முக்கியம். உதாரணமாக, அன்பான அணைப்பு, உள்ளப்பூர்வமான பாராட்டு, பாசமான பார்வை, நேசப் புன்னகை, “இன்னைக்கு நாள் எப்படி போச்சு?” என்ற அக்கறையான விசாரிப்பு இதெல்லாம் முக்கியம். இந்தச் சின்ன சின்ன விஷயங்களே திருமண வாழ்வில் அள்ள அள்ள குறையாத ஆனந்தத்தைத் தரும். மணவாழ்வில் 19 வருடங்களைச் சந்தோஷமாகக் கழித்த ஒரு தம்பதி, தினமும் ஃபோன் செய்வதாக, மெசேஜ் அனுப்பிக்கொள்வதாகச் சொல்கிறார்கள். “சும்மா, எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காக அப்படி செய்வோம்,” என்று கணவர் சொன்னார்.
10 ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்துகொண்டே இருப்பதற்கு அன்பு அவர்களைத் தூண்டும். (பிலி. 2:4) அப்படித் தெரிந்துகொள்வதால் அபூரணத்தின் மத்தியிலும் அவர்களுடைய அன்பு வளரும். வருடங்கள் செல்லச் செல்ல அந்த அன்பு வளர்ந்து விருட்சமாகும். எனவே, திருமணமான ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “என் மனைவியை/கணவனை பற்றி எனக்கு எந்தளவுக்குத் தெரியும்? அவளின்/அவரின் உணர்ச்சிகளை, எண்ணங்களைப் புரிந்துகொள்கிறேனா? அவளை/அவரை பற்றி எத்தனை தடவை நினைத்துப் பார்க்கிறேன்? முதன்முதலில் அவளை/அவரை சந்தித்தபோது எந்தக் குணங்களைப் பார்த்து மயங்கினேனோ அவற்றை இப்போது எத்தனை தடவை நினைத்துப் பார்க்கிறேன்?
மரியாதையை வளர்த்துக்கொள்ளுங்கள்
11. மணவாழ்வில் ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுப்பது ஏன் மிக முக்கியம்? உதாரணம் கொடுங்கள்.
11 சந்தோஷமான மணவாழ்வில்கூட சில குறைகள் இருக்கும். அன்பான தம்பதிகளுக்கிடையிலும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆபிரகாமும் சாராளும் எல்லா விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை. (ஆதி. 21:9-11) இருந்தாலும், சின்ன சின்ன வித்தியாசங்கள் அவர்களுக்கிடையில் பெரிய பிளவை ஏற்படுத்திவிடவில்லை. ஏன்? அவர்கள் ஒருவரையொருவர் மதிப்பு மரியாதையோடு நடத்தினார்கள். ஒருமுறை சாராளிடம் ஆபிரகாம் பேசியபோது “தயவுசெய்து” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். (ஆதி. 12:11, 13, NW) சாராளும் ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார், தன் மனதிற்குள் அவரை “என் ஆண்டவன்” என்று சொன்னார். (ஆதி. 18:12) தம்பதிகளுக்கிடையில் மரியாதை குறைவது அவர்களுடைய பேச்சிலும் தொனியிலும் பளிச்செனத் தெரிந்துவிடும். (நீதி. 12:18) பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்யவில்லை என்றால் பெரிய பிரச்சினையில்தான் கொண்டுபோய் விடும்.—யாக்கோபு 3:7-10, 17, 18-ஐ வாசியுங்கள்.
12. புதுமணத் தம்பதிகள் ஏன் மரியாதையாகப் பேச அதிக முயற்சி எடுக்க வேண்டும்?
12 புதுமணத் தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்போடு, மரியாதையோடு பேச கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் தயக்கமின்றி மனந்திறந்து பேச முடியும். ஒரு கணவர் சொல்கிறார்: “கல்யாணமான புதுசுல வாழ்க்கை நல்லாதான் இருக்கும், ஆனா சில நேரங்கள்ல கசக்கவும் செய்யும். மனைவியோட உணர்ச்சிகள, பழக்க வழக்கங்கள, தேவைகள எல்லாம் நல்லா தெரிஞ்சிக்கும்போது, அதேமாதிரி அவளும் உங்கள பத்தி தெரிஞ்சிக்கும்போது சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனா, திருமண வாழ்க்கை ஆட்டம் காணாம இருக்க நியாயமா நடந்துக்கணும், நகைச்சுவை உணர்வோட இருக்கணும், ரொம்ப முக்கியமா மனத்தாழ்மை, பொறுமை, யெகோவாமேல நம்பிக்கை இருக்கணும்.” இது எவ்வளவு உண்மை!
உண்மையான மனத்தாழ்மையைக் காட்டுங்கள்
13. நிலையான, மகிழ்ச்சியான மணவாழ்விற்கு மனத்தாழ்மை ஏன் முக்கியம்?
13 நல்ல பேச்சுத்தொடர்பு, குடும்பம் என்ற சோலையை வருடிச் செல்லும் இளந்தென்றலைப்போல் இருக்கும். அந்தப் பேச்சுத்தொடர்பில் “மனத்தாழ்மை” இழையோடினால் இதமாக இருக்கும். (1 பே. 3:8) “பிரச்சினையை சட்டுனு தீர்க்குறதுக்கான வழி மனத்தாழ்மையைக் காட்டுறதுதான். மனத்தாழ்மை இருந்தா ‘என்னை மன்னிச்சிடு’-னு சொல்ல தயங்க மாட்டோம்” என்கிறார் திருமணமாகி 11 வருடங்கள் ஆன ஒரு சகோதரர். “சில நேரம் ‘ஐ லவ் யூ’-னு சொல்றதவிட ‘என்னை மன்னிச்சிடு’-னு சொல்றதுதான் ரொம்ப முக்கியம். ஜெபம் செஞ்சதுனால எங்களால மனத்தாழ்மைய ரொம்ப சுலபமா காட்ட முடிஞ்சுது. நானும் என் மனைவியும் சேர்ந்து ஜெபம் செய்யும்போது, எங்களோட குறைகளையும் யெகோவா காட்டுற அளவற்ற கருணையையும் நினைச்சு பார்ப்போம். அதனால எல்லா விஷயத்தையும் சரியான கண்ணோட்டத்துல பார்க்க முடியுது” என்று 20 வருடங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திய மூப்பர் சொன்னார்.
14. கர்வம் எப்படி மணவாழ்வுக்கு பங்கம் ஏற்படுத்திவிடலாம்?
14 கர்வம் வந்தால் ஒத்துப்போவது ரொம்பக் கஷ்டம். அது நல்ல பேச்சுத்தொடர்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். ஏனென்றால், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை, தைரியத்தை அது துடைத்தழித்துவிடும். கர்வமுள்ள ஒருவருக்கு, “தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடுங்க” என்று சொல்ல வாய் வராது, அதற்குப் பதிலாக சாக்குப்போக்கு சொல்வார். தன்னுடைய குறையை ஒத்துக்கொள்ளாமல், மற்றவர்களின் தவறைக் குத்திக்காட்டுவார். அவர் புண்படும்போது, சமாதானம் பண்ணுவதற்கு வழி தேடாமல், கோபப்பட்டு, கன்னாபின்னாவென்று பேசுவார் அல்லது மௌனம் சாதிப்பார். (பிர. 7:9) ஆம், கர்வம் மணவாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டுவிடும். “கர்வமுள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மையுள்ளவர்களையோ அளவற்ற கருணையினால் ஆசீர்வதிக்கிறார்” என்பதை மறந்துவிடாதீர்கள்.—யாக். 4:6.
15. பிரச்சினைகளைச் சரிசெய்ய எபேசியர் 4:26, 27-ல் உள்ள ஆலோசனை தம்பதிகளுக்கு எப்படி உதவும் என்று விளக்குங்கள்.
15 ‘நான் கர்வப்படவே மாட்டேன்’ என்று யாரும் சொல்ல முடியாது. கர்வம் தலைதூக்கினால் அதை இனங்கண்டுகொண்டு உடனடியாக கிள்ளியெறிய வேண்டும். சக கிறிஸ்தவர்களிடம் பவுல் இப்படிச் சொன்னார்: “சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு உங்கள் எரிச்சல் தணியட்டும்; பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்.” (எபே. 4:26, 27) கடவுளுடைய வார்த்தையிலுள்ள இந்த அறிவுரையை பின்பற்ற தவறும்போது வேதனைதான் மிஞ்சும். “சில நேரங்கள்ல நானும் என் கணவரும் எபேசியர் 4:26, 27 சொல்ற மாதிரி செய்ய மாட்டோம். அப்பெல்லாம் ராத்திரி எனக்கு தூக்கமே வராது!” என்று ஒரு சகோதரி சொன்னார். சமாதானமாக வேண்டும் என்ற நோக்கத்தில் சீக்கிரமாகவே பிரச்சினையைச் சரிசெய்வது ரொம்ப நல்லது. அடுத்த நிமிடமே எல்லாவற்றையும் மறந்துவிட்டு சகஜமாகிவிட முடியாது என்பது உண்மைதான், இருவருக்குமே கொஞ்சம் நேரம் தேவைப்படலாம். அதோடு இருவரும் மனமிரங்கி வர உதவும்படி யெகோவாவிடம் ஜெபிப்பதும் உதவியாய் இருக்கும். மனத்தாழ்மை இருந்தால் உங்களைப் பற்றி யோசிக்காமல் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று யோசிப்பீர்கள். இல்லையென்றால், பிரச்சினை பூதாகரமாகிவிடும்.—கொலோசெயர் 3:12, 13-ஐ வாசியுங்கள்.
16. திறமைகளைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க மனத்தாழ்மை எப்படி உதவும்?
16 மனத்தாழ்மையும் தன்னடக்கமும் துணையின் நல்ல குணங்களை மட்டும் பார்க்க உதவும். ஒருவேளை மனைவிக்கு சில விஷயங்களில் விசேஷ திறமை இருக்கலாம். தன் குடும்பத்தின் நன்மைக்காக அதை அவள் பயன்படுத்தலாம். கணவனுக்கு மனத்தாழ்மையும் தன்னடக்கமும் இருந்தால், அவளை தனக்கு போட்டியாக நினைக்காமல் அந்தத் திறமைகளை நன்கு பயன்படுத்த உற்சாகப்படுத்துவார். இப்படிச் செய்வதன் மூலம் அவளை மதிக்கிறார், போற்றுகிறார் என்பதைக் காட்டலாம். (நீதி. 31:10, 28; எபே. 5:28, 29) அதேசமயம், மனைவிக்கு மனத்தாழ்மையும் தன்னடக்கமும் இருந்தால் தனக்கிருக்கும் திறமைகளை பற்றி பெருமையடிக்க மாட்டாள், கணவனை தரக்குறைவாக நடத்தவும் மாட்டாள். ஏன், இருவரும் ‘ஒரே உடல்’ தானே? ஒருவருக்கு வலித்தால் மற்றவருக்கும் நிச்சயம் வலிக்கும்.—மத். 19:4, 5.
17. யெகோவாவுக்குத் துதி சேர்க்கும் மகிழ்ச்சியுள்ள தம்பதிகளாக இருக்க எது உதவும்?
17 ஆபிரகாம்-சாராள் போல... ஈசாக்கு-ரெபெக்காள் போல... ஓர் உதாரண தம்பதியாக வாழ நீங்கள் நிச்சயம் ஆசைப்படுவீர்கள். அதுபோன்ற மணவாழ்க்கை நிலைக்கும், உண்மையான சந்தோஷம் அங்கே குடியிருக்கும், யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும். எனவே, திருமணத்தைக் கடவுளுடைய கண்ணோட்டத்தில் பாருங்கள். ஞானத்தையும் விவேகத்தையும் பெற கடவுளுடைய வார்த்தையை அலசி ஆராயுங்கள். உங்கள் துணையை உயர்வாகக் கருதுவதற்கு “யாவின் தீ ஜூவாலை” போன்ற உண்மையான அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். (உன். 8:6, NW) மனத்தாழ்மையை வளர்க்கக் கடும் முயற்சி செய்யுங்கள். உங்கள் துணைக்கு மதிப்புக் கொடுங்கள். இதையெல்லாம் செய்தால், உங்கள் மணவாழ்வில் மகிழ்ச்சி காண்பீர்கள். அதைப் பார்த்து உங்கள் பரலோகத் தகப்பனும் சந்தோஷப்படுவார். (நீதி. 27:11) சொல்லப்போனால், 27 வருடங்களாக வெற்றிகரமான மணவாழ்வை அனுபவித்த ஒரு கணவன் எழுதியதைப் போலவே நீங்களும் உணருவீர்கள்: “என் மனைவி இல்லாத வாழ்க்கையை என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியாது. ஒவ்வொரு நாளும் எங்கள் திருமண பந்தம் உறுதியாகிக்கொண்டே வருகிறது. நல்ல பேச்சுத்தொடர்பும் யெகோவாமேல் இருக்கிற அன்பும்தான் இதற்குக் காரணம்.”