“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”
அன்றும் இன்றும்—பைபிள் நியமங்கள் ஏற்படுத்திய சிறந்த மாற்றம்
ஆட்ரியன் இளைஞராக இருந்தபோது எதற்கெடுத்தாலும் சீறி விழுவார், வன்மம் வைத்துக்கொண்டே இருப்பார். நாளடைவில் இந்தக் கோபம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. அவர் குடிக்கவும், புகைப்பிடிக்கவும், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழவும் ஆரம்பித்துவிட்டார். ‘பங்க்’ பாணியை பின்பற்றினார். அராஜகத்தில் தனக்கிருந்த நம்பிக்கையைக் காட்ட பச்சைகுத்திக் கொண்டார். இப்படியெல்லாம் நடந்துகொண்ட காலத்தைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “‘பங்க்’ பாணியில் என் முடியை வெட்டிக் கொண்டேன். முள் மாதிரி முடி நேராக நிற்பதற்கு நன்றாக பசை தடவினேன். சிலசமயங்களில் சிகப்பு அல்லது வேறு ஏதாவது கலரில் ‘டை’ அடித்தேன்.” அதுமட்டுமல்ல, அவர் மூக்கு குத்தியிருந்தார்.
அடாவடித்தனம் பண்ணுகிற சில இளவட்டங்களோடு சேர்ந்து ஒரு பாழடைந்த வீட்டிற்கு ஆட்ரியன் குடிமாறினார். அங்கே அவர்கள் குடித்து வெறித்திருந்தார்கள், போதைப் பொருட்களை பயன்படுத்தினார்கள். “ஸ்பீட், வேலியம் அல்லது கையில் எது கிடைக்கிறதோ அந்த போதை மருந்தை போட்டுக் கொண்டேன்” என அவர் கூறுகிறார். “போதைப் பொருட்களோ முகரும் பசையோ கிடைக்கவில்லை என்றால் மற்றவர்களின் கார்களிலிருந்து பெட்ரோலை எடுத்து போதை ஏற்றிக்கொள்வேன்” என கூறுகிறார் ஆட்ரியன். வழிப்பறியில் அதிகமாக ஈடுபட்டு, மற்றவர்கள் பயந்துநடுங்கும் அளவுக்கு ஒரு பயங்கரமான முரடரானார். பொதுவாக ஜனங்கள் யாருமே அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ரௌடி கோஷ்டிகள்தான் அவருடன் சேர்ந்து கொண்டன.
இந்த “நண்பர்கள்” எல்லாரும் தங்களுடைய ஆதாயத்திற்காகவே தன்னோடு கூட்டு சேர்ந்திருக்கிறார்கள் என்பது ஆட்ரியனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. அதுமட்டுமல்ல, “அத்தனை கோபமும் மூர்க்கத்தனமும் எதையுமே சாதிக்கவில்லை” என்ற முடிவுக்கு வந்தார். வாழ்க்கையில் வெறுமையுணர்வும் விரக்தியும் அடைந்து, கடைசியில் தன் நண்பர்களை எல்லாம் விட்டுவிட்டார். ஒருசமயம், கட்டடப் பணி நடக்கும் இடத்தில் அவருக்கு காவற்கோபுரம் பத்திரிகை கிடைத்தது; அதிலிருந்த பைபிள் செய்தி அவரைக் கவர்ந்தது. யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிப்பதற்கு இது வழிநடத்தியது. “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்ற வேண்டுகோளுக்கு அவர் உடனடியாக கீழ்ப்படிந்தார். (யாக்கோபு 4:8, NW) விளைவு? பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பது அவசியம் என்பதை அவர் விரைவில் உணர்ந்தார்.
பைபிள் அறிவை அதிகமதிகமாக பெற்றபோது அது ஆட்ரியனின் மனசாட்சியை உறுத்தியது; இதனால் அவருடைய வாழ்க்கைப் பாணியும் மாறியது. முன்கோபத்தைக் கட்டுப்படுத்தவும் தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் அவருக்கு உதவி அளிக்கப்பட்டது. கடவுளுடைய வார்த்தையின் வல்லமையால் ஆளே மாறிவிட்டார்.—எபிரெயர் 4:12.
இருந்தாலும், பைபிளால் எப்படி அந்தளவுக்கு செல்வாக்கு செலுத்த முடியும்? வேதவசனங்களைப் பற்றிய அறிவு “புதிய மனித சுபாவத்தை அணிந்துகொள்ள” நமக்கு உதவுகிறது. (எபேசியர் 4:24, NW) ஆம், பைபிளின் திருத்தமான அறிவுக்கேற்ப வாழும்போது நம்முடைய சுபாவம் மாறுகிறது. ஆனால், அத்தகைய அறிவு மற்றவர்களை எப்படி மாற்றுகிறது?
முதலாவதாக, என்னென்ன கெட்ட சுபாவங்களை விட்டொழிக்க வேண்டும் என்பதை பைபிள் தெளிவாக குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 6:16-19) இரண்டாவதாக, கடவுளுடைய பரிசுத்த ஆவியினால் பிறக்கும் நல்ல பண்புகளை வெளிக்காட்டும்படி வேதவசனங்கள் நம்மை அறிவுறுத்துகின்றன. “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகியவை அந்தப் பண்புகளில் அடங்கும்.—கலாத்தியர் 5:22, 23.
கடவுள் விரும்புகிற காரியங்களை ஆட்ரியன் மிகத் தெளிவாக புரிந்துகொண்டார், இது தன்னையே ஆராய்ந்து பார்க்க அவருக்கு உதவியது; என்னென்ன பண்புகளை வளர்க்க வேண்டும், எவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதைக் கண்டுகொள்ளவும் உதவியது. (யாக்கோபு 1:22-25) ஆனால், அது ஓர் ஆரம்பமே. அறிவோடுகூட, தூண்டுதலும் தேவைப்பட்டது; அதாவது, ஆட்ரியன் தன்னை மாற்றிக்கொள்ள விரும்புவதற்கு ஏதோவொன்று தூண்ட வேண்டியிருந்தது.
விரும்பத்தக்க புதிய மனித சுபாவம் “படைத்தவருடைய சாயலுக்கு ஏற்ப” வடிவமைக்கப்படுகிறது என்பதை ஆட்ரியன் அறிந்துகொண்டார். (கொலோசெயர் 3:10, NW) ஒரு கிறிஸ்தவனின் சுபாவம் கடவுளுடைய சுபாவத்தைப் போல் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். (எபேசியர் 5:1) பைபிளைப் படிப்பதன் மூலம், மனிதகுலத்திடம் யெகோவா நடந்துகொண்ட விதங்களை அறிந்துகொண்டார்; கடவுள் காண்பித்த அன்பு, தயவு, நற்குணம், இரக்கம், நீதி போன்ற சிறந்த பண்புகளை உன்னிப்பாக கவனித்தார். அப்படிப்பட்ட அறிவு, யெகோவாவை நேசிக்கவும், அவருக்குப் பிரியமான நபராக நடக்க முயலவும் ஆட்ரியனை தூண்டியது.—மத்தேயு 22:37.
நாளடைவில், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியால் ஆட்ரியன் தன் கடுங்கோபத்தை கட்டுப்படுத்தினார். பைபிள் அறிவின் உதவியால் மற்றவர்களும் தங்கள் வாழ்க்கை பாணியை மாற்றிக்கொள்வதற்கு அவரும் அவருடைய மனைவியும் இப்போது மும்முரமாக உதவிசெய்து வருகிறார்கள். “என்னுடைய பழைய நண்பர்கள் பலர் இப்போது உயிருடன் இல்லை; நானோ உயிரோடு இருக்கிறேன், அதுவும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன்!” என கூறுகிறார் ஆட்ரியன். வாழ்க்கையை மேம்படுத்தும் வல்லமை பைபிளுக்கு இருக்கிறது என்பதற்கு இன்று ஓர் உயிருள்ள உதாரணமாக திகழ்கிறார் இவர்.
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
“அத்தனை கோபமும் மூர்க்கத்தனமும் எதையுமே சாதிக்கவில்லை”
[பக்கம் 25-ன் பெட்டி]
பைபிள் நியமங்கள் செயலில்
கடுங்கோபமாகவும் மூர்க்கத்தனமாகவும் இருந்த அநேகர் சாதுவாக மாறுவதற்கு உதவிய பைபிள் நியமங்களில் சில இதோ:
‘ எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, . . . நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.’ (ரோமர் 12:18, 19) யாரை பழிவாங்குவது, எப்போது பழிவாங்குவது என்பதை கடவுளே தீர்மானிக்கட்டும். உண்மைகளை முழுமையாக அறிந்து அவ்வாறு பழிவாங்க அவரால் முடியும்; அதோடு, அவர் அளிக்கும் எந்தத் தண்டனையும் அவருடைய பரிபூரண நீதியையே வெளிப்படுத்தும்.
“நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.” (எபேசியர் 4:26, 27) ஒருவர் ஏதோவொரு சமயத்தில் நியாயமாகவே கோபமடையக் கூடும். அப்படி கோபமடைந்தாலும், அவர் ‘எரிச்சலோடே’ இருந்துவிடக் கூடாது. ஏன்? ஏனெனில், அது அவரை ஏதாவது தீங்கு செய்துவிட தூண்டலாம்; இவ்வாறு ‘பிசாசுக்கு இடங்கொடுத்து’ யெகோவா தேவனின் அங்கீகாரத்தை இழந்துவிடச் செய்யலாம்.
“கோபத்தை விலக்கு, உக்கிரத்தை விட்டுவிடு, எரிச்சல் கொள்ளாதே, அது தீங்கு செய்வதற்கே ஏதுவாகும்.” (சங்கீதம் 37:8, திருத்திய மொழிபெயர்ப்பு) கட்டுப்படுத்தப்படா உணர்ச்சிகள் கட்டுக்கடங்கா செயல்களுக்கு வழிவகுக்கின்றன. ஒருவர் கோபாவேசத்தில் ஏதேனும் சொன்னால் அல்லது செய்தால், சம்பந்தப்பட்ட எல்லாரையுமேதான் அது பாதிக்கும்.