“உயிர்ப்பிக்கிற ஆவிக்கு” தொடர்ந்து கீழ்ப்பட்டிருங்கள்
“உயிர்ப்பிக்கிறது ஆவியே, மாம்சமோ ஒன்றுக்கும் உதவாது.”—யோவான் 6:63, தி.மொ.
இந்த உலக “காற்றின்” அல்லது அதன் மனப்பான்மைகளின் செல்வாக்கை நாம் எதிர்த்துப் போராட நமக்கு யெகோவா தேவனின் பரிசுத்த ஆவி மிகவும் அவசியம். (எபேசியர் 2:1, 2) பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ் பதிவு செய்யப்பட்ட கடவுளுடைய எண்ணங்களைக் கொண்டிருக்கும் பைபிளும் நமக்குத் தேவை. கடவுளுடைய ஆவியின் கனிகளாகிய “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய தன்மைகளைப் பயன்படுத்துவதால் விளையும் தாழ்மையான கிறிஸ்தவ மனநிலையையும் நாம் கொண்டிருக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு ஊக்குவித்தான்: “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.”—கலாத்தியர் 5:16, 17, 22, 23.
2 மேலும் பவுல் எழுதினதாவது: “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.” (1 கொரிந்தியர் 2:12) இந்த உலகத்தின் “காற்று” அல்லது மனப்பான்மை ஜீவனைக் கொல்லுகிறது, ஆனால் கடவுள் பரிசுத்த ஆவியால் கொடுப்பது அதை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொண்டு வருகிறது. இயேசு சொன்னார்: “உயிர்ப்பிக்கிறது [ஜீவனைத் தருவது, NW] ஆவியே; மாம்சமோ ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாம்.” (யோவான் 6:63, தி.மொ.) “மாம்சமோ ஒன்றுக்கும் உதவாது,” ஆதலால் பாவத்தை ஜெயிப்பதற்கும் உலகத்தின் ஆவியை எதிர்த்துப் பேராடுவதற்கும் நமக்குத் தெய்வீக உதவி தேவை.
3 கடந்த கட்டுரையில் நாம் இந்த உலக “காற்றின்” இரண்டு ஆபத்தான அம்சங்களைச் சிந்தித்தோம்—ஒழுக்கக்கேடான காரியங்களுடன் விளையாடுதல் மற்றும் தகுதியற்ற உடை மற்றும் சிகை அலங்கார பாணிகள். ஆனால் வேறு பல அம்சங்களும் உண்டு. உதாரணமாக, இந்த உலகத்தின் காற்றுமண்டலம் பேராசையால், பொருளாதார நன்மைகள் அல்லது பெருளாதார காரியங்களின் பேரில் ஆழ்ந்த தன்னல ஆசையால் கலந்திருக்கிறது. உங்களிடம் ஏராளமான பொருளுடைமைகள் இல்லாவிட்டால், உலகத்தின் விளம்பரங்கள், நீங்கள் முழு நிறைவற்றவர்கள் என்று உணரும்படி செய்வதையே இந்தக் ‘காற்றின் அதிபதி’ நோக்கமாக கொண்டு நிறைவேற்றியிருக்கிறான். உலக “காற்றின்” இந்த அம்சம், இவைதான் வாழ்க்கையின் மிகப்பெரிய காரியங்கள் என்ற எண்ணத்தில் உங்களைப் போதைகொள்ளச் செய்யும். இந்தப் பொருளாசை மிகுந்த “காற்றால்” நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?
4 பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “விபச்சாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாரனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை.” (எபேசியர் 5:5) பொருளாசைக்காரன் உண்மையில் ஒரு விக்கிரகாராதனைக்காரன் என்பதைக் கவனியுங்கள். ‘நான் நிச்சயமாக ஒரு விக்கிரகாராதனைக்காரனாகும் அளவுக்குச் சென்றுவிட மாட்டேன்,” என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் விக்கிரகாராதனை என்பது என்ன? அது யெகோவாவையும் அவருடைய வணக்கத்தையும் வைக்கும் இடத்தில் வேறொரு காரியத்தை வைத்து கடவுளுக்கும் அவருடைய சேவைக்கும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக அந்தக் காரியத்திற்குக் கவனம் செலுத்துவதல்லவோ? பேராசை அல்லது பொருளாசை பணத்தையும் அதன் சக்தியையும் செல்வாக்கையும் வணங்குவதை உட்படுத்துகிறது. புதியதோர் வாகனம் அல்லது ஒரு வீடியோ காஸட் ரிக்கார்டர் அல்லது வேறொரு பொருளை வாங்கும் காரியத்தை யெகோவாவின் சேவையில் உங்களுக்கிருக்கும் வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்வதற்கு முன்னால் வைப்பீர்களானால் அதுதானே உலகத்தின் “காற்று” உங்களைக் கடுமையாக பாதிக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக இருக்காதா? பொருள் சம்பந்தமான காரியங்கள் உங்களுக்கு விக்கிரகங்களாகிறதல்லவா?
5 நீங்கள் உயர் கல்வியை அல்லது உயர்வான உத்தியோகத்தை நாடுகிறீர்கள் என்றால், பணக்காரராவதற்கும் உங்களுடைய தேவைகளுக்கு மிஞ்சிய கூடுதலான பொருள் நன்மைகளைப் பெறுவதற்கும் அதை நாடுகிறீர்களா? வேகமாக பணக்காரராகிவிடுவதற்கான திட்டங்களால் கவர்ச்சிக்கப்பட்டு அவற்றில் உங்களை உட்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா? இந்த உலகத்தின் “காற்று” ஐசுவரியத்துக்கான தன்னல இச்சையாலும் அரசு விதித்திருக்கும் வரிகளைக் கொடுக்காமல் ஏமாற்றும் காரியத்தாலும் நிறைந்திருக்கிறது. இந்த ஒரு சூழ்நிலையில்தான் சூதாட்டமும் அதைப்போன்ற செயல்களும் செழித்தோங்குகின்றன. சோதிக்கப்படாதிருங்கள். பேராசை தவழும் இந்த உலக “காற்றின்” செல்வாக்கைத் தவிர்ப்பவர்கள், தங்களுக்கு இருக்கும் தேவைகளில் திருப்தியாயிருப்பதிலும் ராஜ்ய அக்கறைகளை முதலாவது வைப்பதிலுமே உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதைக் காண்கின்றனர்.—மத்தேயு 6:25-34; 1 யோவான் 2:15-17.
நாவை தகுந்த விதத்தில் உபயோகித்தல்
6 நம்முடைய பேச்சுப் பழக்கங்களைப் பற்றியதென்ன? கெட்ட வார்த்தைகள், கோபச் சொற்கள், பொய் சொல்லுல்—இந்த உலகத்தின் “காற்று” இப்படிப்பட்ட அசுத்தமான பேச்சால் முழுவதுமாகக் கலந்திருக்கிறது. என்றாலும், சில சமயங்களில் கிறிஸ்தவ சபையுடன் கூட்டுறவு கொள்ளும் ஒரு சிலருடைய பேச்சுங்கூட வன்மையையும் இழிவையும் பிரதிபலிக்கிறது. சீஷனாகிய யாக்கோபு நம்மிடம் மிக பலமாகச் சொல்லுவதாவது: “துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. ஒரே ஊற்றுக் கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?” (யாக்கோபு 3:10, 11) இவ்வுலகத்தின் சில கொச்சை பேச்சுகளை நீங்கள் கற்றுக்கொண்டீர்களா? உங்களுடைய சொல்வளம் இரண்டு வகையினதா, அதாவது, கிறிஸ்தவர்கள் மத்தியில் பயன்படுத்துவதற்கு ஒன்றும் மற்ற இடங்களில் பயன்படுத்துவதற்கு வேறொன்றுமாக இரண்டு வகையினதா? பவுல் பின்வருமாறு எழுதினான்: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்திவிருத்திக்கேதுவான நல்ல வார்த்தை உண்டானால், அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” (எபேசியர் 4:29) எல்லா சமயத்திலும் தகுந்த சுத்தமான பேச்சு எவ்வளவு முக்கியம்!
7 நாம் எப்பொழுதுமே உண்மை சொல்லும் காரியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நாம் பொறுப்புள்ளவர்களாவதைத் தவிர்த்திட வழிவிலகச் செய்யும் வகையில் சுற்றிவளைத்துப் பேசுவது அல்லது வேண்டுமென்றே மற்றவர்களைத் தவறாக வழிநடத்துவது பொய்க்குச் சமானம். எனவே பவுலின் பின்வரும் கட்டளைக்குச் செவிகொடுக்க நிச்சயமாயிருங்கள்: “நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.”—எபேசியர் 4:25; நீதிமொழிகள் 3:32.
8 இந்த உலக ஆவியின் மற்றொரு அம்சம் கட்டுப்பாடற்ற கோபத்தை வெளிப்படுத்துதல். உலகப்பிரகாரமான மக்களில் பலர் தன்னடக்கத்தை மிக எளிதாக இழந்துவிடுகின்றனர். அவர்கள் பொங்கி எழுவார்கள், பின்பு ஆவியைத் தணித்துக்கொள்ள அப்படிச் செய்ததாக சொல்லிவிடுவார்கள். ஆனால் பவுல் கொடுத்த புத்திமதியோ அதுவல்ல, அவன் எழுதினதாவது: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.” (எபேசியர் 4:31) தன்னடக்கத்தையும் கடவுளுடைய ஆவியின் மற்ற கனிகளையும் விருத்தி செய்தபோதிலும் கோபம் வளருகிறது என்றால் அப்பொழுது என்ன? “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.” (எபேசியர் 4:26, 27) எனவே நாம் கோபப்படுத்தப்பட்டால், காரியத்தை வேகமாக, அந்த நாள் முடிவதற்குள்ளாக தீர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில், இருதயத்தில் கசப்பும் கோபமும் வேர்கொள்ள ஆரம்பிக்கிறது, அதைப் பிடுங்கிப்போடுவது கடினம். இந்த உலகத்தின் கோபம் மற்றும் பழிவாங்கும் “காற்றை” சுவாசிக்க அனுமதியாதீர்கள்!—சங்கீதம் 37:8.
9 உங்களுடைய வேலை பழக்கங்களைப் பற்றியதென்ன? வேலை சமயத்தில் சுற்றிக்கொண்டிருப்பத மற்றும் முதலாளியிடமிருந்து பொருட்களைத் திருடுவது போன்ற காரியங்கள் இன்று சர்வசாதாரனச் செயல்கள். இந்தக் “காற்றில்” கொஞ்சத்தை நீங்கள் சுவாசித்திருக்கிறீர்களா? ‘எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள்’ என்ற மனப்போக்கு உங்களையும் சற்று தொட்டுப் பார்க்கிறதா? கிறிஸ்தவர்களாக நாம் வேலை செய்யும் விதம் யெகோவாவின் பேரிலும் அவருடைய உண்மை வணக்கத்தின் பேரிலும் பரதிபலிப்புடையதாயிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. உங்களுடைய வேலையில் நீங்கள் நடந்துகொள்ளும் விதம்கண்டு, ஒருவர், யெகோவாவின் சாட்சிகள் தன்னுடைய வீட்டில் பேசும் சத்தியத்தை மறுப்பதை நீங்கள் காணவிரும்புவீர்களா? பவுல் சொன்னான்: “திருடுகிறவன் இனித் திருடாமலும் குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி தன் கைகளினால் நலமான வேலை செய்து பிரயாசப்படக்கடவன்.”—எபேசியர் 4:28.
10 முதல் நூற்றாண்டில் இருந்துவந்த எஜமான் —அடிமை உறவு இன்று காணப்படுவது அரிதாயிருப்பினும், பவுல் கிறிஸ்தவ அடிமைகளுக்கு எபேசியர் 6:5-8ல் எழுதியதிலிருந்து கிறிஸ்தவ தொழிலாளிகள் கற்றுக்கொள்ளலாம். அங்கு வேலையாட்கள் ‘தாங்கள் வேலை செய்துவந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து, மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாக அல்ல, ஆனால் கிறிஸ்துவின் ஊழியக்காரராக’ வேலை செய்யும்படி சொல்லப்பட்டார்கள். எனவே ஒரு கிறிஸ்தவன் ஒரு முழுநாள் வேலையைக் கொடுப்பதில் அல்லது வாக்களித்த பொருட்களை அல்லது பணியைக் கொடுப்பதில் தவறும் வகையில் காரியங்களைத் திட்டமிட்டுச் செய்யக்கூடாது. நாம் காரியங்களை “யெகோவாவுக்கென்று” செய்வோமானால், நமக்குச் சரியான மனநிலை இருக்கும் மற்றும் இந்த உலகத்தின் தன்னல, சோம்பல் “காற்றால்” பாதிக்கப்பட மாட்டோம்.
உணவு, பானம் மற்றும் பொழுதுபோக்கு
11 இந்த உலகத்தின் உணவு மற்றும் பானத்தில் அளவு கட்டுபாடற்ற உபயோகம் உங்களைப் பாதித்திருக்கிறதா? ‘புசிப்போம், குடிப்போம், களிகூருவோம், நாளைக்குச் சாக நேரிடுமே’ என்பதே அதன் மனப்பான்மை. (1 கொரிந்தியர் 15:32) இந்த ஆவிதாமே பூர்வகால முதலாய்க் கடவுளுடைய ஊழியரில் சிலரை பாதித்திருக்கிறது. வனாந்தரத்திலே இஸ்ரவேலர் “புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து கூத்தாட [இன்ப நேரத்தைக் கொண்டிருக்க, NW] எழுந்தார்கள்” என்ற அந்தச் சமயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். (யாத்திராகமம் 32:6, தி.மொ.) அந்த “இன்ப நேரம்” அவர்களைக் கட்டுப்பாடற்ற ஒழுக்கக்கேடான நடத்தைக்கும் விக்கிரகாராதனைக்கும் வழிநடத்தியது, அதனால் அவர்களுக்கெதிராக கடவுளுடைய கோபம் மூண்டது. நாம் அந்தப் போக்கை மேற்கொள்ளாதிருப்போமாக.—1 பேதுரு 4:3-6.
12 யெகோவா நமக்கு ஏராளமான பல்வகைப்பட்ட, சுவை மிகுந்த, ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளையும் பானங்களையும் கொடுத்திருக்கிறார், ஆனால் இவற்றை நாம் மிதமாக அளவோடு பயன்படுத்துவதையே விரும்புகிறார். பைபிளில் பெருந்திண்டி மற்றும் குடிவெறி கண்டனம் செய்யப்படுகிறது. (நீதிமொழிகள் 23:20, 21) எனவே நேர்மையோடு உங்களைப் பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: என்னுடைய உணவு அருந்தும், பானம் பருகும் பழக்கங்களில் முன்னேற்றங்களைச் செய்வதற்கு இடம் இருக்கிறதா? உங்களுக்குக் கூடுதலான தன்னடக்கம் தேவைப்படுகிறது என்றால், இதை உணர்ந்து இந்தப் பிரச்னையை மேற்கொள்வதற்காக கடவுளுடைய ஆவியின் உதவிகேட்டு நீங்கள் ஏறெடுக்கும் ஜெபத்திற்கு இசைவாக செயல்படுங்கள். “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிக்கொள்ளாமல் ஆவியினால் நிறைந்திருங்கள்,” என்று பவுல் சொன்னான். (எபேசியர் 5:18) ஆம், கடவுளுடைய ஆவியால் நிறைந்திருங்கள், இந்த உலகத்தின் கட்டுப்பாடற்ற ஆவிக்கு இடங்கொடுத்துவிடாதீர்கள்! “நீங்கள் புசித்தாலும் குடித்தாலும், எதை செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 10:31) என்றாலும், இந்தக் காரியங்கள் சம்பந்தமாக உங்களுக்குத் தொடர்ந்து பிரச்னைகள் இருக்குமானால், சபையிலுள்ள ஆவிக்குரிய முதிர்ந்த ஆட்களை உதவிக்காக அணுகுங்கள்.—கலாத்தியர் 6:1; யாக்கோபு 5:14, 15.
13 இந்த உலகம் போட்டி விளையாட்டுக்கள், இசை, மற்றும் பலவகை பொழுதுபோக்குகளுக்கு அடிமைப்பட்டிருக்கிறது. அவை வேத நியமங்களை மீறுவதாயிருந்தாலொழிய, அப்படிப்பட்ட காரியங்களை அனுபவிப்பது தவறாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் பிரச்னையானது, “காற்றை ஆளும் அதிபதி” இன்று கிடைக்கப்பெரும் பல பொழுதுபோக்குகளை நச்சுபடுத்திவிட்டான். (எபேசியர் 2:2, தி ஜெருசலேம் பைபிள்) அடிக்கடி ஒழுக்கக்கேடுதான் வளர்க்கப்படுகிறது, வன்முறை ஆதரிக்கப்படுகிறது, ஏமாற்றுதல், வஞ்சித்தல் மற்றும் கொலையும்கூட சித்தரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட திரைப்படங்களை நாம் பார்க்கும்போது இந்த மனநிலைகளை நம்முடைய உடலமைப்புக்குள் இழுத்துக்கொள்கிறோம், மற்றும் இவற்றின் நச்சுத்தன்மை நமக்குக் கேடு விளைவிப்பது நிச்சயம். மேலும் சில வகை பொழுதுபோக்குகள் வேதப்பூர்வமாக தவறாக இல்லாதிருந்தாலும், அவற்றிற்கு அடிமையாகிவிடும் ஆபத்து உண்டு, இதனால் ஆவிக்குரிய காரியங்களுக்குச் சிறிதளவு நேரமே விடப்படுகிறது. எனவே நாம் தேர்ந்தெடுத்து செயல்பட வேண்டும். ஆரோக்கியமானதும் நன்மையானதுமான சில பொழுதுபோக்குகளை அளவோடு அனுபவிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் இந்த உலகத்தின் வரம்பற்ற போக்கைத் தவிருங்கள். இந்த உலகத்தின் காற்றுக்கு நல்ல வாசனை இருந்தாலுஞ்சரி, கெட்ட நாற்றம் இருந்தாலுஞ்சரி, இது நச்சுப்படுத்தப்பட்டது, மரணத்துக்கேதுவானது!—நீதிமொழிகள் 11:19.
இனப்பெருமை—ஒரு தீய காற்று
14 இந்த உலகத்தின் “காற்றில்” மறைந்திருக்கும் ஓர் அம்சம்தான் இனம் மற்றும் தேசிய பெருமை. சில இனத்தார் மேன்மையானவர்கள், மற்றவர்கள் கீழானவர்கள் என்ற தவறான கருத்தை சிலர் பரப்புகின்றனர். தங்களுடைய தாய் நாடு மற்ற நாடுகளைவிட மேன்மையானது என்று மக்களை நோக்கும்படி செய்திருப்பது தேசபக்தி. உண்மை என்னவெனில், தன்னலத்தாலும் மற்றவர்கள் பேரில் பொறாமைகொள்ளுவதாலும் பலர் அடிப்படை மனித உரிமைகளையும் தேவைகளையும் இழந்து அனாவசியமாகத் துன்பப்படுகின்றனர். வெறுப்புணர்ச்சியும், வன்முறையுங்கூட விளைவடைகிறது. அநேகர் புரட்சிசெய்ய ஆரம்பிக்கின்றனர், தங்களுடைய சொந்த வழியில் சமுதாயப் பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள். நாமுங்கூட இந்தக் கருத்துக்களில் சிக்கிக்கொள்ளக்கூடும். நாம் கவனிக்கும்போது அல்லது அநீதியான செயல்களால் பாதிக்கப்படும்போதும், அப்பொழுது சமூக சீர்த்திருத்தத்திற்காக முன்செல்கிறவர்களைக் குறித்து கேள்விப்படும்போதும் நாம் கவனமாயிராவிட்டால் நாமும் அதன் செல்வாக்குக்குள் வந்துவிடக்கூடும். நம்முடைய நடுநிலை ஸ்தானத்தை விட்டுவிட்டு யார் சார்பாவது சேர்ந்துவிடுவோம். (யோவான் 15:19) அதைவிட அதிக வினைமையானது, நாம் கல்லெறிவதிலும், கூட்டுத் திட்டங்களிலும் அல்லது மாற்றங்களை அமல்படுத்துவதிலும் நாம் வன்முறையைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களைச் சேர்ந்துகொள்ள தூண்டப்படக்கூடும்.
15 ஒரு சபையின் ஆவி இனம் மற்றும் தேசிய உணர்ச்சிகளால் பாதிக்கப்படலாம். (அப்போஸ்தலர் 6:1-7 ஒத்துப்பாருங்கள்) ஆனால் பின்வரும் புத்திமதிக்குச் செவிகொடுத்தால் நமக்குச் சரியான ஆவி இருக்கும்: “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ‘பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்,’ என்று எழுதியிருக்கிறபடியால் நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” (ரோமர் 12:18, 19) எல்லா இனத்தவரும் முதல் மானிட ஜோடியிலிருந்து வந்ததாலும் கடவுள் பாரபட்சமற்றவராதலால், கிறிஸ்தவ சபையில் இனம் அல்லது தேசீயம் சம்பந்தமான பெருமைக்கு இடம் இல்லை.—அப்போஸ்தலர் 10:34, 35; 17:26; ரோமர் 10:12; எபேசியர் 4:1-3.
உயிர்ப்பிக்கிற “காற்றை” சுவாசியுங்கள்
16 இந்த உலக “காற்றின்” அல்லது ஆவியின் மரணத்துக்கேதுவான முக்கிய அம்சங்களை நாம் சிந்தித்தோம். அது நம்மை சூழ்ந்திருப்பதாலும் அவ்வளவு அழுத்தத்தைச் செலுத்துவதாலும், நம்முடைய ஆவிக்குரிய காரியத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட அனுமதிப்போமானால் இந்த அசுத்தமான “காற்று” வேகமாக அதை நிரப்பிவிடும். அதை எதிர்த்து நிற்பதில் வெற்றி பெறுவது என்பது, நாம் எந்தளவுக்குத் தூய்மையானதையும் சுத்தமானதையும் நீதியானதையும் நேசிக்கிறோம், எந்தளவுக்குத் தூய்மையற்றதையும் அசுத்தமானதையும் பொல்லாததையும் வெறுக்கிறோம் என்பதையே அதிகமாக சார்ந்திருக்கிறது. யெகோவாவின் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்குப் பிரதிபலிக்கும் விதத்தில் சரியான மனநிலையை வளர்த்துக்கொண்டிருப்போமானால் நாம் சரியான “காற்றை” சுவாசித்துக்கொண்டிருப்போம்.—ரோமர் 12:9; 2 தீமோத்தேயு 1:7; கலாத்தியர் 6:7, 8.
17 இந்த உலகத்தின் துர்நாற்றமுள்ள “காற்று” உங்களுக்கு நறுமனமுள்ளதாக இருக்க எவ்விதத்திலும் இடங்கொடுக்காதீர்கள். உணர்வுகளைக் கவர்ச்சிப்பதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை இந்தக் “காற்றின்” அதிபதி அறிந்திருப்பதோடுகூட பொதுவாகப் பாவத்திற்கு வழிநடத்தும் ஓர் இணையா ஆசையையும் அமைத்திட அறிந்திருக்கிறான். (யாக்கோபு 1:14, 15) “புகை பிடிக்கக்கூடாது” என்ற பகுதியில், யெகோவாவின் ஆவிக்குரிய பரதீஸில் தங்கியிருங்கள். இந்த உலக “காற்றில்” கலந்த புகை இலேசாக உங்கள் பக்கம் அடிப்பதைக் காணும்போது, அதை நீங்கள் வெறுத்தொதுக்குங்கள். மரணத்துக்கேதுவான நச்சுப் பொருளை எப்படி வெறுத்தொதுக்குவீர்களோ, அதுபோல அதற்கு விலகியிருங்கள். “நீங்கள் ஞானமற்றவர்களைப் போல் நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். ஆகையால் நீங்கள் மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.”—எபேசியர் 5:15-17.
18 உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்களாகக் கடவுளைச் சேவிக்க வேண்டும் என்பது அவருடைய சித்தம். அப்படிச் செய்வது மிக அருகாமையிலிருக்கும் அவருடைய புதிய ஒழுங்குமுறையில் ஜீவனைக் குறிக்கும். அப்பொழுது சுவாசிக்கும் காற்று நமக்கு எவ்வளவு புத்துயிரளிப்பதாயிருக்கும்! மரணத்துக்கேதுவான எந்தவித நச்சுக் கலப்பும் இருக்காது. உயிர்காக்கும் சுத்தமான காற்றாக இருக்கும். அது சொல்லர்த்தமான காற்றைக் குறித்ததில் உண்மையாக இருக்கும், அதைவிட முக்கியமானது சுத்திகரிக்கப்பட்ட பூமியில் வாழும் வாய்ப்பையுடைய மக்களின் ஆவியைக் குறித்ததில் அதிக உண்மையாக இருக்கும். அவர்களிடம் கீழ்ப்படிதலுடைய, மனத்தாழ்மையான, நன்கு செவிசாய்க்கும் மனப்பான்மை காணப்படும். கலகத்தனமான, ஊழல்மிகுந்த, தேவபக்தியற்ற செல்வாக்குகள் நிரம்பிய இந்தப் பழைய உலகத்தின் “காற்று” கடந்துபோய்விட்டிருக்கும்.—வெளிப்படுத்துதல் 21:5-8.
19 யெகோவா நச்சுக்கலப்பையும் நச்சுப்படுத்துகிறவர்களையும் அர்மகெதோனில் நிர்மூலமாக்கப்போவதால் இந்த ஒழுங்குமுறையின் “காற்றை” சுவாசித்துக்கொண்டிருக்கும் மக்களின் பாகமாக இருக்க நாம் விரும்பமாட்டோம். பழைய உலகம் கடந்துவிட்டு, ‘காற்றின் அதிபதி’ அபிஸில் கட்டப்பட்ட பின்பு எப்பேர்ப்பட்ட ஒரு விடுதலை இருக்கும்! யெகோவாவை நேசித்து, சுத்தமான, ஒழுக்கமான, நீதியான காரியங்களை நேசிக்கும் எல்லோரும் அங்கு இருப்பார்கள். அங்கு இருக்க வேண்டும் என்பது யெகோவாவின் விருப்பம், எனவே தம்முடைய ஆவியினால் அவர்களுக்கு உதவி செய்வார். ஒரு சுத்தமான, ஆரோக்கியமான புதிய ஒழுங்குமுறையில் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்திடுவார். இந்தப் பழைய ஒழுங்குமுறையின் மரணத்துக்கேதுவான “காற்றை” சுவாசிப்பதனால் அந்தச் சிலாக்கியத்தை நாம் இழந்துவிடாதிருப்போமாக! (w87 9/15)
[கேள்விகள்]
1. (எ) இந்த உலக “காற்றின்” செல்வாக்கை எதிர்த்து நிற்க யெகோவா எப்படித் தம்முடைய மக்களுக்கு உதவியளிக்கிறார்? (பி) கடவுளுடைய ஆவியின் கனிகளை விருத்தி செய்வது எப்படி நாம் சரியான மனச்சாய்வைக் கொண்டிருக்க உதவும்?
2. கடவுளுடைய ஆவியால் பிறப்பிக்கப்படும் காரியம் எப்படி “இந்த உலகத்தின் ஆவியைக்” கொண்டிருப்பதன் விளைவுகளுக்கு முரணாக இருக்கிறது?
3, 4. (எ) பேராசை என்பது என்ன? பொருள் சம்பந்தமான காரியங்களின் பேரிலிருக்கும் மாம்ச இச்சையை ‘இந்தக் காற்றின் அதிபதி’ எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறான்? (பி) பொருளாசைக்காரர் எப்படி விக்கிரகாராதனைக்காரர் ஆவர்?
5. இந்த உலகத்தின் காற்று எந்த வழிகளில் ஐசுவரியத்துக்கான தன்னல ஆசை நிரம்பியதாய் இருக்கிறது?
6. இந்த உலகத்தின் பேச்சுப் பழக்கங்கள் கிறிஸ்தவர்களாக நம் மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும்?
7. ‘பொய்யைக் களைந்து மெய்யைப் பேசுவதில்’ என்ன உட்பட்டிருக்கிறது?
8. (எ) உலகப்பிரகாரமான மக்கள் கோபப்படுத்தப்படும்போது எப்படிச் செயல்படுகிறார்கள்? (பி) நாம் கோபப்படுத்தப்பட்டால் என்ன செய்யவேண்டும்?
9. வேலை செய்கிறவர்களின் சில பொதுவான மனநிலை என்ன? நம்முடைய வேலை பழக்கத்தை நாம் ஏன் பரிசோதித்துப்பார்க்க வேண்டும்?
10. உலகப்பிரகாரமான ஒரு வேலையிலிருக்கும்போது, இந்த உலகத்தின் “தன்னல” ஆவியால் நாம் பாதிக்கப்படவில்லை என்பதை நாம் எப்படிக் காண்பிக்கலாம்?
11. உணவு மற்றும் பானம் குறித்த காரியங்களில் உலகப்பிரகாரமான ஒரு மனநிலை, பைபிள் காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் மக்களை எவ்விதத்தில் பாதித்தது?
12. உணவு மற்றும் பானம் சம்பந்தப்பட்ட நம்முடைய பழக்கங்களுக்கு நாம் கவனம் செலுத்தவேண்டியதாயிருக்கிறது என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
13. (எ) பிசாசு இன்றைய பொழுதுபோக்குகளில் பெருமளவைக் கெடுத்துவிட்டிருக்கிறான் என்பது எப்படித் தெளிவாயிருக்கிறது? (பி) பொழுதுபோக்கினிடமாக இந்த உலகம் கொண்டிருக்கும் மனப்பான்மையை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
14. சமூகப்பிரச்னைகள் சம்பந்தமாக நாம் எப்படி இந்த உலகத்தின் “காற்றால்” பாதிக்கப்படக்கூடும்?
15. ‘நாமே பழிவாங்க’ எண்ணும்போது பைபிள் என்ன வழியை சிபாரிசு செய்கிறது?
16. இந்த உலகத்தின் ஆவியால் பாதிக்கப்படாதிருக்க நமக்கு எது உதவி செய்யும்?
17. இந்த உலகத்தின் “காற்று” சற்று நம்பக்கமாக வீசுவதை நாம் காணும்போது உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
18. சுத்திகரிக்கப்பட்ட ஓர் உலகில் வாழப்போகிற வாய்ப்புடையவர்களின் ஆவி என்னவாக இருக்கும்?
19. யெகோவாவின் புதிய ஒழுங்குமுறைக்குள் யார் தப்பிப்பிழைப்பார்கள்?
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ பொருளாசைக்காரன் எந்த விதத்தில் ஒரு விக்கிரகாராதனைக்காரனாகிறான்?
◻ இந்த உலகத்தின் “காற்று” எப்படி உங்கள் பேச்சுப் பழக்கங்களைப் பாதிக்கும்?
◻ உலகப்பிரகாரமான வேலையில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவ வேலையாட்கள் என்ன ஆவியைப் பிரதிபலிக்க வேண்டும்?
◻ உணவு, பானம் மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தமாக இந்த உலக மனநிலையால் பாதிக்கப்படுவதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
◻ இனப்பற்று மற்றும் தேசப்பற்று சம்பந்தமான எந்த ஆவி கிறிஸ்தவ சபைக்குள் வந்துவிடக்கூடாது?
[பக்கம் 19-ன் படம்]
இந்த உலகத்தின் “காற்றை” எதிர்த்து நிற்குமளவுக்கு உங்கள் குடும்பம் ஆவிக்குரிய விதத்தில் பலமாக இருக்கிறதா?
[பக்கம் 18-ன் படம்]
நாம் “யெகோவாவுக்கென்று” காரியங்களைச் செய்வோமானால், இந்த உலகத்தின் தன்னலம் மற்றும் சோம்பலின் “காற்றால்” பாதிக்கப்படமாட்டோம்