ஆவியின் சிந்தையுடன் ஜீவியுங்கள்!
‘ஆவியின் சிந்தையோ ஜீவன்.’—ரோமர் 8:6.
1, 2. ‘மாம்சத்திற்கும்’ ‘ஆவிக்கும்’ இடையே உள்ள என்ன வேறுபாட்டை பைபிள் சுட்டிக்காட்டுகிறது?
இன்றைய சமுதாயம் மாம்ச இச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீர்கெட்ட சமுதாயம்; இதில் கடவுளுக்கு முன்பாக ஒழுக்க சுத்தத்தைக் காத்துக் கொள்வது எளிதல்ல. எனினும், ‘மாம்சத்திற்கும்’ ‘ஆவிக்கும்’ இடையே இருக்கும் முரண்பாட்டை வேதவசனங்கள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. பாவத்தன்மையுள்ள மாம்ச ஆசைகளுக்கு அடிமையாவது பயங்கர பாதிப்புகளைக் கொண்டுவரும்; கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதோ சந்தோஷமான பலன்களை அள்ளித் தரும்.
2 உதாரணமாக, “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” என இயேசு கிறிஸ்து சொன்னார். (யோவான் 6:63) “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; . . . இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” என கலாத்திய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கலாத்தியர் 5:17) “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்” என்றும் பவுல் சொன்னார்.—கலாத்தியர் 6:8.
3. தவறான ஆசைகளிலிருந்தும் மனச்சாய்வுகளிலிருந்தும் விடுபட என்ன தேவை?
3 யெகோவாவின் செயல்படும் சக்தியாகிய பரிசுத்த ஆவி, அசுத்தமான ‘மாம்ச இச்சைகளையும்’ பாவத்தன்மையுள்ள மாம்சத்தின் மரணப்பிடியையும் அடியோடு அகற்ற முடியும். (1 பேதுரு 2:11) நாம் தவறான மனச்சாய்வுகளுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம்; அதிலிருந்து விடுபட கடவுளுடைய ஆவியின் உதவி நமக்கு நிச்சயம் தேவை. ஏனெனில், “மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்” என பவுல் எழுதினார். (ரோமர் 8:6) ஆவியின் சிந்தை என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
“ஆவியின் சிந்தை”
4. “ஆவியின் சிந்தை” என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
4 ‘ஆவியின் சிந்தையைப்’ பற்றி பவுல் எழுதினபோது, “சிந்திக்கும் முறை, (எதிலாவது லயித்திருக்கும்) மனம், . . . நோக்கம், பேரார்வம், முயற்சி செய்தல்” என்பவற்றை குறிக்கும் கிரேக்கச் சொல்லை பயன்படுத்தினார். இதோடு சம்பந்தப்பட்ட ஒரு வினைச்சொல்லுக்கு, “சிந்தித்தல், குறிப்பிட்ட முறையில் மனத்தை ஊன்ற வைத்தல்” என அர்த்தம். எனவே, “ஆவியின் சிந்தை” என்பது யெகோவாவின் செயல்படும் சக்தியால் கட்டுப்படுத்தப்படுவதை, அடக்கியாளப்படுவதை, தூண்டப்படுவதை அர்த்தப்படுத்துகிறது. இவ்வாறு, நம்முடைய சிந்தனைகளும், மனச்சாய்வுகளும், ஆசாபாசங்களும், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க நாம் மனமுவந்து அனுமதிப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது.
5. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு நாம் எந்தளவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
5 ‘ஆவிக்கு அடிமைகள்’ என பவுல் சொல்கையில், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு எந்தளவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். (ரோமர் 7:6, NW) இயேசுவின் மீட்பின் கிரய பலியின் மீது கிறிஸ்தவர்களுக்கு விசுவாசம் இருக்கிறது; அதன் அடிப்படையில் அவர்கள் பாவத்தால் ஆளப்படாமல் விடுதலை அடைந்திருக்கின்றனர். ஒருகாலத்தில் அவர்கள் பாவத்திற்கு அடிமைப்பட்டு “மரித்த” நிலையில் இருந்தனர். (ரோமர் 6:2, 11) இப்படி அடையாள அர்த்தத்தில் மரித்திருப்பவர்கள் உடல்ரீதியில் உயிருடன் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, “நீதிக்கு அடிமைகளாக” கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு விடுதலையானவர்களாயும் இருக்கின்றனர்.—ரோமர் 6:18-20.
மாபெரும் மாற்றம்
6. ‘நீதிக்கு அடிமைகள்’ ஆகிறவர்கள் என்ன மாற்றத்தை அனுபவிக்கின்றனர்?
6 ‘பாவத்திற்கு அடிமைகளாக’ இருந்தவர்கள், ‘நீதிக்கு அடிமைகளாக’ கடவுளைச் சேவிப்பதற்காக செய்த மாற்றம் நிச்சயமாகவே மாபெரும் மாற்றம் எனலாம். இத்தகைய மாற்றத்தை அனுபவித்த சிலரைக் குறித்து, “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” என பவுல் எழுதினார்.—ரோமர் 6:17, 18; 1 கொரிந்தியர் 6:11.
7. ஒவ்வொரு விஷயத்திலும் யெகோவாவின் நோக்குநிலையை அறிந்துகொள்வது ஏன் முக்கியம்?
7 குறிப்பிடத்தக்க இத்தகைய மாற்றத்தை அனுபவிக்க விரும்பினால், ஒவ்வொரு விஷயத்திலும் யெகோவாவின் நோக்குநிலையை நாம் முதலாவது அறிந்துகொள்ள வேண்டும். “யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காட்டியருளும். . . . உமது சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும்” என பல நூற்றாண்டுகளுக்கு முன் சங்கீதக்காரனாகிய தாவீது கடவுளிடம் ஊக்கமாய் ஜெபித்தார். (சங்கீதம் 25:4, 5, தி.மொ.) தாவீதின் ஜெபத்தை யெகோவா கேட்டார். இன்று அவருடைய ஊழியர்கள் இப்படி ஜெபிக்கையிலும் அவர் கேட்பார். கடவுளுடைய வழிகளும் அவருடைய சத்தியமும் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருப்பதால், அவற்றை தியானிப்பது அசுத்தமான மாம்ச ஆசைகளை திருப்தி செய்ய தூண்டப்படுகையில், அவற்றை மேற்கொள்ள உதவும்.
கடவுளுடைய வார்த்தை வகிக்கும் முக்கிய பாகம்
8. பைபிளைப் படிப்பது ஏன் அதிக முக்கியம்?
8 கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், அவருடைய ஆவியின் படைப்பாகும். எனவே ஆவி நம்மிடம் செயல்படுவதற்கான முக்கிய வழி நாம் பைபிளை வாசிப்பதும் படிப்பதும்தான். முடிந்த மட்டும் தினமும் வாசிக்கவும் படிக்கவும் வேண்டும். (1 கொரிந்தியர் 2:10, 11; எபேசியர் 5:18) நம் மனதையும் இருதயத்தையும் பைபிள் சத்தியங்களாலும் நியமங்களாலும் நிரப்புவது, நம்முடைய ஆன்மீகத்தின்மீது வரும் தாக்குதல்களை சமாளிக்க உதவும். ஒழுக்கக்கேடான சோதனைகளை எதிர்ப்படுகையில், கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாய் நடக்க தீர்மானமாய் இருக்க உதவும் பைபிள் வசனங்களையும் நியமங்களையும் கடவுளுடைய ஆவி நமக்கு நினைப்பூட்டும். (சங்கீதம் 119:1, 2, 99; யோவான் 14:26) எனவேதான் ஏமாந்து தவறான பாதையில் நாம் போய்விடுவதில்லை.—2 கொரிந்தியர் 11:3.
9. யெகோவாவுடன் உள்ள உறவைக் காத்துக்கொள்ளும் நம் தீர்மானத்தை பைபிள் படிப்பு எப்படி பலப்படுத்துகிறது?
9 பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களின் உதவியுடன், வேதவசனங்களை கருத்தூன்றி ஊக்கமாய் படித்துவர வேண்டும். அப்போது, கடவுளுடைய ஆவி நம்முடைய மனதிலும் இருதயத்திலும் செல்வாக்கு செலுத்தும், யெகோவாவின் தராதரங்களிடம் நம் மதிப்பை அதிகரிக்கும். நம் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுடனான உறவு மிக முக்கியம். எனவே, சோதனையை சந்திக்கையில், தவறான காரியங்கள் தரும் இன்பத்தைப் பற்றி சிந்திக்க மனதை அனுமதிக்க மாட்டோம். அதற்கு மாறாக, யெகோவாவிடம் நம் உத்தமத்தைக் காத்துக்கொள்வதிலேயே முழுகவனத்தையும் செலுத்துவோம். அவருடன் நமக்கிருக்கும் உறவை மனதார போற்றுகையில் அதைக் கெடுக்கவோ அழிக்கவோ செய்யும் எந்த மனச்சாய்வையும் எதிர்த்துப் போராடுவோம்.
“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!”
10. ஆவிக்குரிய சிந்தையுடனிருக்க, யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது ஏன் அவசியம்?
10 ஆவியின் சிந்தையுடனிருக்க கடவுளுடைய வார்த்தையிலிருந்து பெறும் அறிவு மட்டுமே போதாது. அரசனாகிய சாலொமோன் யெகோவாவின் தராதரங்களைத் தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டிருந்தார், ஆனால் தன் வாழ்க்கையின் பிற்பட்ட காலத்தில் அதற்கிசைய வாழத் தவறினார். (1 இராஜாக்கள் 4:29, 30; 11:1-6) ஆவியின் சிந்தையுடன் நாம் இருந்தால் பைபிளிலுள்ளதை அறிவதோடு கடவுளுடைய நியமங்களுக்கு முழு இருதயத்துடன் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வோம். இது, யெகோவாவின் தராதரங்களை ஆர்வத்துடன் ஆராய்வதையும், அதற்கேற்ப ஊக்கமாய் நடக்க முயலுவதையும் குறிக்கிறது. அப்படி செய்ய சங்கீதக்காரனுக்கு மனம் இருந்தது. எனவே, “உமது வேதத்தில் [“சட்டங்களில்,” NW] நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்” என பாடினார். (சங்கீதம் 119:97) கடவுளுடைய சட்டங்களைப் பின்பற்ற உண்மையிலேயே ஆர்வம் காட்டுகையில், கடவுளுடைய குணங்களை நாமும் வெளிக்காட்டுவோம். (எபேசியர் 5:1, 2) தவறு செய்ய கவர்ந்திழுக்கப்படும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகாமல் ஆவியின் கனிகளை வெளிப்படுத்துவோம். யெகோவாவைப் பிரியப்படுத்தும் ஆவல், ‘மாம்ச இச்சைகளிலிருந்து’ நம்மை தூர விலகியிருக்க செய்யும்.—கலாத்தியர் 5:16, 19-23; சங்கீதம் 15:1, 2.
11. வேசித்தனத்திலிருந்து விலகியிருக்கும்படியான யெகோவாவின் சட்டம் நம் பாதுகாப்பிற்கானதே என்பதை எப்படி விளக்குவீர்கள்?
11 நாம் எவ்வாறு யெகோவாவின் சட்டங்களிடம் ஆழ்ந்த மதிப்பையும் அன்பையும் அதிகரிக்கலாம்? அதன் மதிப்பை கவனமாய் ஆராய்வது அதற்கு உதவும் ஒரு வழியாகும். திருமண பந்தத்திற்குள் மட்டுமே பாலுறவை அனுமதித்து, வேசித்தனத்திற்கும் விபசாரத்திற்கும் தடைவிதிக்கும் கடவுளுடைய சட்டங்களைக் கவனியுங்கள். (எபிரெயர் 13:4) இந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது, ஏதோ நல்லதை இழக்கும்படி செய்கிறதா? அப்படிப்பட்ட நல்லதை அனுபவிக்க முடியாதபடி செய்யும் ஒரு சட்டத்தை அன்புள்ள பரலோக தகப்பன் ஏற்படுத்துவாரா? நிச்சயமாக மாட்டார்! யெகோவாவின் ஒழுக்க தராதரங்களைப் பின்பற்றாத பலரின் வாழ்க்கையைப் பற்றி சிந்தியுங்கள். முறைதவறி கர்ப்பமாகிவிடுவதால் கருச்சிதைவுகள் செய்ய வேண்டி வருகிறது; ஒருவேளை அவசரப்பட்டு மனமின்றி மண வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. ஒற்றை பெற்றோராக பிள்ளையை வளர்க்கும் நிலை பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும், வேசித்தனத்தில் ஈடுபடுகிறவர்கள் பாலுறவின் பலனாக வரும் நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுகிறார்கள். (1 கொரிந்தியர் 6:18) யெகோவாவின் ஊழியர் வேசித்தனத்தில் ஈடுபட்டால், மனதை அரித்தெடுக்கும் வேதனையால் துடிக்க வேண்டி வரலாம். குற்றமுள்ள மனசாட்சியின் குறுகுறுப்பை அசட்டை செய்ய முயலுவது, தூக்கமில்லா இரவுகளையும் மனவேதனையையும் பரிசாக தரும். (சங்கீதம் 32:3, 4; 51:3) வேசித்தனத்திலிருந்து விலகியிருக்கும்படியான யெகோவாவின் சட்டம், நம் பாதுகாப்பிற்கானதே என்பது தெளிவாக தெரிகிறதல்லவா? ஆம், ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்கையில் உண்மையிலேயே அதிக சுகமுண்டு!
யெகோவாவின் உதவிக்கு ஜெபியுங்கள்
12, 13. பாவத்தைப் பிறப்பிக்கும் ஆசைகள் நம்மை பாதிக்கையில் ஜெபிப்பது ஏன் சரியானது?
12 ஆவியின் சிந்தையைக் காத்துக்கொள்ள உண்மையிலேயே இதயப்பூர்வ ஜெபம் அவசியம். கடவுளுடைய ஆவியின் உதவியை நாடுவது சரியானதே. ஏனெனில், “நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” என இயேசு சொன்னார். (லூக்கா 11:13) நம்முடைய பலவீனங்களை சமாளிக்க ஆவியின் உதவி தேவை என்பதை நாம் ஜெபத்தில் வெளிப்படுத்தலாம். (ரோமர் 8:26, 27) பாவத்தைப் பிறப்பிக்கும் ஆசைகளோ மனப்பான்மைகளோ நம்மைப் பாதிப்பதாக நாமே உணரலாம்; அல்லது அன்புள்ள உடன்விசுவாசி ஒருவர் இதை நம்மிடம் சுட்டிக்காட்டலாம். அப்போது, குறிப்பாக அந்தப் பிரச்சினையை நம் ஜெபங்களில் தெரிவித்து, அத்தகைய மனப்போக்குகளைக் கட்டுப்படுத்த கடவுளுடைய உதவியை நாடுவது ஞானமான செயல்.
13 நீதியுள்ள, கற்புள்ள, நல்லொழுக்கமுள்ள, புகழத்தக்க காரியங்களிடம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு யெகோவா நமக்கு உதவுவார். “தேவ சமாதானம்” நம் இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்வதற்கு ஊக்கமாய் ஜெபிப்பது எவ்வளவு பொருத்தமானது! (பிலிப்பியர் 4:6-8) ஆகையால், “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடை”வதற்கு யெகோவாவின் உதவியைக் கேட்போமாக. (1 தீமோத்தேயு 6:11-14) நம் பரம தகப்பனின் உதவி நமக்குக் கிடைக்கையில், கவலைகளும் சோதனைகளும் கட்டுப்படுத்த முடியாதளவு போய்விடாது. மாறாக, நம் வாழ்க்கையில் கடவுள் தரும் அமைதி நிலவும்.
ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்
14. கடவுளுடைய ஆவி சுத்தத்திற்கான சக்தி எனப்படுவது ஏன்?
14 “ஆவியை அணைத்துப் போடாதிருங்கள்” என பவுல் கொடுத்த அறிவுரையை ஆன்மீகத்தில் முதிர்ந்த யெகோவாவின் ஊழியர்கள் பின்பற்றுகின்றனர். (1 தெசலோனிக்கேயர் 5:19, தி.மொ.) கடவுளுடைய ஆவி, ‘பரிசுத்தமுள்ள ஆவி.’ எனவே, அது சுத்தமானதாக, தூய்மையானதாக, புனிதமானதாக உள்ளது. (ரோமர் 1:4, 5) நம்மிடம் அது செயல்படுகையில், பரிசுத்தத்திற்கு அல்லது சுத்தத்திற்கான சக்தியாக விளங்குகிறது. அது, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் சுத்தமான வாழ்க்கை வாழ உதவுகிறது. (1 பேதுரு 1:2) அசுத்தமான எந்தப் பழக்கமும் அந்த ஆவிக்கு அவமதிப்பை ஏற்படுத்திவிடும்; அதனால் அழிவுண்டாக்கும் பாதிப்புகள் ஏற்படலாம். எவ்வாறு?
15, 16. (அ) கடவுளுடைய ஆவியை நாம் எவ்வாறு துக்கப்படுத்த வாய்ப்பிருக்கிறது? (ஆ) யெகோவாவின் ஆவியைத் துக்கப்படுத்துவதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
15 “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என பவுல் எழுதினார். (எபேசியர் 4:30) யெகோவாவின் ஆவி, அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு முத்திரை அல்லது ‘வரவிருக்கும் காரியத்திற்கு அச்சாரம்’ என வேதவசனங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, அழியாமையுடைய பரலோக வாழ்க்கைக்கு அச்சாரம். (2 கொரிந்தியர் 1:22; 1 கொரிந்தியர் 15:50-57; வெளிப்படுத்துதல் 2:10) அபிஷேகம் செய்யப்பட்டவர்களையும், பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உடைய அவர்களுடைய தோழர்களையும், உத்தமமாய் வாழவும் பாவத்தன்மையுள்ள செயல்களைத் தவிர்க்கவும் கடவுளுடைய ஆவி வழிநடத்தும்.
16 பொய், திருட்டு, வெட்கக்கேடான நடத்தை போன்றவற்றில் ஈடுபடும் மனப்போக்குகளுக்கு எதிராக அப்போஸ்தலன் எச்சரித்தார். இப்படிப்பட்ட காரியங்களில் சிக்கிக்கொள்ள நம்மை அனுமதித்தால், ஆவியால் ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தையின் அறிவுரைக்கு எதிராக செயல்படுவோம். (எபேசியர் 4:17-29; 5:1-5) அப்போது ஒருவிதத்தில் கடவுளுடைய ஆவியைத் துக்கப்படுத்திவிடுவோம். நிச்சயமாகவே அப்படி செய்ய நாம் விரும்புவதில்லை. ஒருவேளை நம்மில் யாராவது, யெகோவாவின் வார்த்தையின் அறிவுரையை அசட்டை செய்ய ஆரம்பித்தால், வேண்டுமென்றே பாவம் செய்து தேவ தயவை முற்றிலும் இழக்க செய்யும் மனப்பான்மைகளை அல்லது தன்மைகளை வளர்க்க ஆரம்பிக்கலாம். (எபிரெயர் 6:4-6) ஒருவேளை உடனே பாவ செயல்களில் ஈடுபட மாட்டோம்; ஆனால் பாவத்தின் போக்கில் செல்ல ஆரம்பிக்கலாம். ஆவியின் வழிநடத்துதலுக்கு முரணாக செல்கையில் அதைத் துக்கப்படுத்தி விடுவோம். பரிசுத்த ஆவியின் பிறப்பிடமான யெகோவாவையும் எதிர்த்துநின்று அவரை துக்கப்படுத்துவோம். கடவுளை நேசிக்கும் நாம் அதைச் செய்ய துளியும் விரும்ப மாட்டோம். மாறாக, அவருடைய ஆவியைத் துக்கப்படுத்தாமல், ஆவியின் சிந்தை உடையவர்களாய் இருந்து, அவருடைய பரிசுத்த பெயருக்குக் கனத்தைக் கொண்டுவருவதற்கு உதவி வேண்டி யெகோவாவிடம் ஜெபிப்போம்.
ஆவியின் சிந்தையுடனேயே இருங்கள்
17. எப்படிப்பட்ட ஆவிக்குரிய இலக்குகளை நாம் வைக்கலாம், இது ஏன் ஞானமான போக்காகும்?
17 ஆவிக்குரிய இலக்குகளை வைத்து அவற்றை அடைய முயல்வது, ஆவியின் சிந்தையுடனேயே இருப்பதற்கான முக்கிய வழியாகும். நம் தேவைகளையும் சூழ்நிலைகளையும் பொறுத்து, நம் படிப்பு பழக்கங்களில் முன்னேற்றம் செய்வது, பிரசங்க ஊழியத்தில் இன்னும் அதிகம் ஈடுபடுவது, அல்லது முழுநேர பயனியர் ஊழியம், பெத்தேல் சேவை, மிஷனரி ஊழியம் போன்ற விசேஷ ஊழிய சிலாக்கியத்திற்காக உழைப்பது போன்ற இலக்குகளை நாம் வைக்கலாம். இது, நம் மனம் ஆவிக்குரிய அக்கறைகளில் மூழ்கியிருக்க செய்யும்; மனித பலவீனங்களுக்கு விட்டுக்கொடுத்துவிடாமல், அல்லது இவ்வுலகின் பொருள் சம்பந்தமான இலக்குகளாலும் வேதவசனத்துக்கு எதிரான இச்சைகளாலும் வசீகரிக்கப்படாமல் நம்மை பாதுகாக்கும். இது உண்மையிலேயே ஞானமான போக்கு. ஏனெனில், “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” என இயேசு ஊக்குவித்தார்.—மத்தேயு 6:19-21.
18. இந்தக் கடைசி நாட்களில் ஆவியின் சிந்தையுடன் இருப்பது ஏன் மிக முக்கியம்?
18 ஆவியின் சிந்தையுடன் இருப்பதும், உலக ஆசைகளுக்கு அடிபணிய மறுப்பதும் இந்தக் “கடைசி நாட்களில்” ஞானமான போக்கு என்பதில் சந்தேகமில்லை. (2 தீமோத்தேயு 3:1-5) “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என சொல்லப்பட்டிருக்கிறது. (1 யோவான் 2:15-17) ஒரு கிறிஸ்தவ இளைஞன் முழுநேர ஊழியம் செய்ய இலக்கு வைக்கையில் தன் வளரிளமை பருவத்தில் அல்லது வாலிபப்பிராயத்தில் வரும் எந்த சவால்களையும் சமாளிக்க இது வழிகாட்டியாய் இருந்து உதவும். தன் உத்தமத்தை விட்டுக்கொடுத்து விடும்படியான சோதனையின்போது, யெகோவாவின் சேவையில் தன்னுடைய இலக்கு என்ன என்பதை அப்படிப்பட்ட இளைஞன் தன் மனதில் தெளிவாக வைத்திருக்க செய்யும். அத்தகைய ஆவிக்குரிய ஆள், பொருள் சம்பந்தமான இலக்குகளுக்காகவோ, பாவத்தால் கிடைக்கும் எந்த சந்தோஷத்திற்காகவோ ஆவிக்குரிய இலக்குகளை விட்டுக் கொடுப்பதை ஞானமற்ற செயலாக, ஏன் முட்டாள்தனமான காரியமாக கருதுவார். ஆவிக்குரிய மனம்படைத்த மோசேயை சற்று நினைத்துப் பாருங்கள். அவர், ‘அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டார்.’ (எபிரெயர் 11:24, 25) நாம் இளைஞராக இருந்தாலும்சரி முதியவராக இருந்தாலும்சரி, அழிந்துபோகும் சரீர ஆசைகளுக்கு இடம்கொடுக்காமல் ஆவியின் சிந்தையுடன் இருக்கையில் அதே போன்ற தெரிவை செய்வோம்.
19. ஆவியின் சிந்தையுடனேயே இருந்தால் என்னென்ன பயன்களை நாம் அனுபவிப்போம்?
19 “மாம்ச சிந்தை மரணம்” ஆனால், “ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.” (ரோமர் 8:6, 7) ஆவியின் சிந்தையுடனேயே இருக்கையில் ஒப்பற்ற சமாதானத்தை நாம் அனுபவிப்போம். நம்முடைய பாவ தன்மையின் செல்வாக்கிலிருந்து நம் இருதயங்களும் சிந்திக்கும் திறன்களும் முழுமையாய் பாதுகாக்கப்படும். தவறான காரியங்களில் ஈடுபடும்படியான சோதனைகளை இன்னும் நன்கு சமாளிப்போம். சரீரத்திற்கும் ஆவிக்கும் இடையே தொடர்ந்து நடந்துவரும் போராட்டத்தில் வெற்றி பெற கடவுளின் உதவியும் கிடைக்கும்.
20. சரீரத்திற்கும் ஆவிக்கும் இடையே நிகழும் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறலாம் என ஏன் உறுதியாய் இருக்கலாம்?
20 உயிருக்கும் பரிசுத்த ஆவிக்கும் பிறப்பிடமாய் திகழும் யெகோவாவுடன் இன்றியமையாத தொடர்பை காத்துக்கொள்வதற்கு ஆவியின் சிந்தையுடனேயே இருப்பது முக்கியம். (சங்கீதம் 36:9; 51:11) பிசாசாகிய சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் யெகோவா தேவனுடனான நம் உறவைக் கெடுத்துப்போட தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர். நம்முடைய மனத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயலுகின்றனர்; நாம் விட்டுக்கொடுத்தால் அது கடவுளுடன் பகைமைக்கும் இறுதியில் மரணத்திற்கும் வழிநடத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஆனால், சரீரத்திற்கும் ஆவிக்கும் இடையே நிகழும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெறலாம். அதுதான் பவுலின் அனுபவமாகவும் இருந்தது. தான் அனுபவித்த போராட்டத்தைப் பற்றி எழுதுகையில் அவர், “இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்ற கேள்வியை முதலாவதாக கேட்டார். விடுதலை பெறுவது சாத்தியமே என்பதைச் சுட்டிக்காட்டுபவராக, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” என உணர்ச்சிபொங்க சொன்னார். (ரோமர் 7:21-25) மனித பலவீனங்களை சமாளிப்பதற்கும் நித்திய ஜீவன் என்ற அருமையான நம்பிக்கையினால் ஆவியின் சிந்தையுடனிருப்பதற்கும் வழி செய்திருப்பதற்கு நாமும் கிறிஸ்துவின் மூலமாய் கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம்.—ரோமர் 6:23.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஆவியின் சிந்தை என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
• யெகோவாவின் ஆவி நம்மிடம் செயல்பட நாம் எப்படி அனுமதிக்கலாம்?
• பாவத்திற்கு எதிரான நம் போராட்டத்தில், பைபிள் படிப்பதும், யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதும், அவரிடம் ஜெபிப்பதும் ஏன் முக்கியம் என்பதை விளக்குங்கள்.
• ஆவிக்குரிய இலக்குகளை வைப்பது எப்படி ஜீவபாதையில் நம்மை தொடர செய்யும்?
[பக்கம் 16-ன் படம்]
நம்முடைய ஆன்மீகத்திற்கு எதிரான தாக்குதலை சமாளிக்க பைபிள் படிப்பு உதவுகிறது
[பக்கம் 17-ன் படம்]
பாவத்தைப் பிறப்பிக்கும் ஆசைகளை மேற்கொள்ள யெகோவாவின் உதவியை ஜெபத்தில் நாடுவது சரியே
[பக்கம் 18-ன் படங்கள்]
ஆவியின் சிந்தையுடன் இருக்க ஆவிக்குரிய இலக்குகள் உதவலாம்