தீய ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகில் நல்லொழுக்கத்தைக் காத்துக்கொள்ளுதல்
“கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.”—பிலிப்பியர் 2:15, 16.
1, 2. கானானியர் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கடவுள் வற்புறுத்தியதற்கு காரணம் என்ன?
ஒத்திணங்கிவிடுவதற்கு யெகோவாவின் கட்டளைகள் சிறிதும் இடங்கொடுப்பதில்லை. இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கவிருந்த சமயத்தில் தீர்க்கதரிசியாகிய மோசே அவர்களிடம் பின்வருமாறு சொன்னார்: “ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம் பண்ணக்கடவாய்.”—உபாகமம் 7:2; 20:16, 17.
2 யெகோவா இரக்கமுள்ள கடவுளாக இருக்கையில், கானானிய குடிமக்கள் முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என்று ஏன் வற்புறுத்தினார்? (யாத்திராகமம் 34:6) ஒரு காரணம், ‘கானானியர் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே இஸ்ரவேலரும் செய்ய கற்றுக்கொடாமலும், தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படியாகும்.’ (உபாகமம் 20:18) “அந்த ஜாதிகளின் துன்மார்க்கத்தினிமித்தமே யெகோவா அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்” என்பதாகக்கூட மோசே சொன்னார். (உபாகமம் 9:4, தி.மொ.) கானானியர்கள் தீய ஒழுக்கத்தின் உருவாகவே இருந்தனர். பாலியல் ஒழுக்கக்கேடும் விக்கிரகாராதனையும் அவர்களுடைய வணக்கத்தின் விசேஷ அம்சங்களாக இருந்தன. (யாத்திராகமம் 23:24; 34:12, 13; எண்ணாகமம் 33:52; உபாகமம் 7:5) முறைதகாப் புணர்ச்சி, ஆண் புணர்ச்சி, மிருகப் புணர்ச்சி ஆகியவை ‘கானான் தேசத்தாருடைய செய்கையாக’ இருந்தன. (லேவியராகமம் 18:3-25, NW) அப்பாவி குழந்தைகள் பொய் கடவுட்களுக்குக் கொடூரமாக பலிசெலுத்தப்பட்டனர். (உபாகமம் 18:9-12) இந்தத் தேசங்கள் அழிக்கப்படாமல் வெறுமனே இருப்பதுதானே தம்முடைய ஜனங்களுடைய சரீர, ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய நலனுக்கு ஆபத்தாக இருக்கும் என்பதாக யெகோவா கருதியது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை!—யாத்திராகமம் 34:14-16.
3. கானானிய குடிகளைப் பற்றிய கடவுளுடைய ஆணைகளை இஸ்ரவேலர் முழுமையாக நிறைவேற்றாத காரணத்தால் என்ன விளைவடைந்தது?
3 கடவுளுடைய ஆணைகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் போன காரணத்தால், இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றும்போது கானானின் குடிகளில் பலர் இன்னும் உயிரோடிருந்தனர். (நியாயாதிபதிகள் 1:19-21) காலம் சென்றபோது, கானானியரின் தந்திரமான செல்வாக்கு உணரப்பட்டு, பின்வருமாறு சொல்லப்பட முடிந்தது: ‘அவருடைய [யெகோவாவுடைய] கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடே பண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் [இஸ்ரவேலர்] வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி, வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்றார்கள்.’ (2 இராஜாக்கள் 17:15) ஆம், வருடங்களினூடாக, கானானியர் முழுமையாக அழிக்கப்பட கடவுள் ஆணையிடுவதற்கு காரணமாயிருந்த அதே தீய ஒழுக்கங்களை—விக்கிரகாராதனை, கட்டுப்பாடில்லாத பாலியல் ஈடுபாடு, ஏன், பிள்ளைகளைப் பலியிடுவதைக்கூட—அநேக இஸ்ரவேலர் கடைப்பிடித்து வந்தார்கள்!—நியாயாதிபதிகள் 10:6; 2 இராஜாக்கள் 17:17; எரேமியா 13:27.
4, 5. (அ) உண்மையற்ற இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் என்ன சம்பவித்தது? (ஆ) பிலிப்பியர் 2:14, 15-ல் என்ன அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது, என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
4 ஆகவே ஓசியா தீர்க்கதரிசி பின்வருமாறு அறிவித்தார்: “இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக் குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை. பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி மிஞ்சிமிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது. இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.” (ஓசியா 4:1-3) பொ.ச.மு. 740-ல் இஸ்ரவேலின் சீர்கெட்ட வடக்கு ராஜ்யம் அசீரியரால் முறியடிக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பின்பு, உண்மையற்ற யூதாவின் தெற்கு ராஜ்யம் பாபிலோனால் கைப்பற்றப்பட்டது.
5 தீய ஒழுக்கம் நம்மை மேற்கொள்ளும்படியாக நாம் அனுமதிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவங்கள் விளக்குகின்றன. கடவுள் அநீதியை வெறுக்கிறார், தம்முடைய ஜனங்கள் மத்தியில் அதை அவர் சகித்துக்கொள்ள மாட்டார். (1 பேதுரு 1:14-16) தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையில், அதிகமதிகமாக சீரழிந்துவரும் ஓர் உலகில் நாம் வாழ்ந்துவருவது உண்மைதான். (கலாத்தியர் 1:4; 2 தீமோத்தேயு 3:13) அப்படியிருந்தாலும், “உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும் தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்” விதமாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்படியாக எல்லா கிறிஸ்தவர்களையும் கடவுளுடைய வார்த்தை அறிவுறுத்துகிறது. (பிலிப்பியர் 2:14, 15) ஆனால் தீய ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகில் நாம் எவ்வாறு நல்லொழுக்கத்தைக் காத்துக்கொள்ள முடியும்? அவ்விதமாகச் செய்வது உண்மையில் சாத்தியமா?
தீய ஒழுக்கம் நிறைந்த ரோமர்களின் உலகம்
6. நல்லொழுக்கத்தைக் காத்துக்கொள்வது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு ஏன் ஒரு சவாலாய் இருந்தது?
6 ரோம சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தீய ஒழுக்கம் ஊடுருவி பரவியிருந்த காரணத்தால் நல்லொழுக்கத்தைக் காத்துக்கொள்ளும் சவாலை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்டார்கள். ரோம தத்துவஞானி செனிகா தன் காலத்தில் வாழ்ந்தவர்களைக் குறித்து பின்வருமாறு சொன்னார்: “துன்மார்க்கத்தின் மாபெரும் போட்டியில் மனிதர்கள் போராடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் தவறு செய்வதற்கான ஆவல் அதிகரித்தும், தவறு செய்தலைக் குறித்த பயம் குறைந்தும் வருகிறது.” ரோமர்களின் சமுதாயத்தை அவர் “காட்டு மிருகங்களின் ஒரு சமூகத்துக்கு” ஒப்பிட்டார். பொழுதுபோக்கிற்காக ரோமர்கள் அரங்கங்களில் நடைபெற்ற கொடூரமான சண்டைகளையும், காமவெறிகொண்ட நாடக காட்சிகளையும் நாடியது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
7. பொ.ச. முதல் நூற்றாண்டில் அநேகர் மத்தியில் சர்வசாதாரணமாய் இருந்த தீய ஒழுக்கங்களை பவுல் எவ்வாறு விவரித்தார்?
7 அப்போஸ்தலன் பவுல் முதல் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த மக்களின் தரங்கெட்ட நடத்தையை மனதில்கொண்டே பின்வருமாறு எழுதியிருக்கலாம்: “இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.” (ரோமர் 1:26, 27) அசுத்தமான மாம்ச இச்சைகளை நாடித் தொடர தீர்மானித்தவர்களாய் ரோம சமுதாயம் தீய ஒழுக்கத்தில் மூழ்கிவிட்டிருந்தது.
8. கிரேக்க மற்றும் ரோம சமுதாயத்தில் அநேகமாக பிள்ளைகள் எவ்வாறு சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்கள்?
8 ரோமர்கள் மத்தியில் ஓரின புணர்ச்சி எவ்வளவு பரவலாக இருந்தது என்பதை வரலாறு தெளிவாக சொல்வது கிடையாது. ஆனால் ஓரின புணர்ச்சியைப் பரவலாக பழக்கமாக செய்துவந்த அவர்களுடைய முன்னோர்கள் இவர்கள்மீது செல்வாக்கு செலுத்தி வந்தனர் என்பதில் சந்தேகமேதுமில்லை. வயதில் மூத்த ஆண்கள் இளம் பையன்களை கெடுப்பது பழக்கமாக இருந்தது, ஆசிரியர்-மாணவர் என்ற உறவில் அவர்களை தங்கள் பாதுகாப்பின்கீழ் வைத்துக்கொண்டு அநேகமாக இந்த இளைஞர்களை தவறான பாலியல் நடத்தைக்குள் வழிநடத்தினார்கள். சாத்தானும் அவனுடைய பேய்களுமே இப்படிப்பட்ட தீய ஒழுக்கத்தின் பின்னால் இருந்து பிள்ளைகளை தவறாக நடத்தினர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.—யோவேல் 3:3; யூதா 6, 7.
9, 10. (அ) என்ன விதத்தில் 1 கொரிந்தியர் 6:9, 10 பல்வேறு வகையான தீய ஒழுக்கங்களைக் கண்டனம் செய்தது? (ஆ) கொரிந்து சபையிலிருந்த ஒருசிலருடைய பின்னணி என்னவாக இருந்தது, அவர்களுடைய விஷயத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தது?
9 தேவாவியால் ஏவப்பட்டு எழுதுபவராய், பவுல் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களிடம் பின்வருமாறு சொன்னார்: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.”—1 கொரிந்தியர் 6:9-11.
10 பவுலின் ஏவப்பட்ட கடிதம் ‘வேசிமார்க்கத்தார்’ “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று” சொல்லி இவ்விதமாக பாலியல் ஒழுக்கக்கேட்டை கண்டனம் செய்தது. தீய ஒழுக்கங்கள் பலவற்றை வரிசைப்படுத்திக் கூறியபின்பு பவுல் சொன்னார்: “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கழுவப்பட்டீர்கள்.” தவறு செய்தவர்கள் கடவுளுடைய உதவியினால் அவருடைய பார்வையில் சுத்தமுள்ளவர்களாய் ஆக முடிந்தது.
11. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அவர்களுடைய நாளில் இருந்த பொல்லாங்கான சூழ்நிலையை எவ்விதமாக சமாளித்தார்கள்?
11 ஆம், தீய ஒழுக்கம் நிறைந்திருந்த முதல் நூற்றாண்டு உலகிலும்கூட கிறிஸ்தவ நல்லொழுக்கம் செழித்தோங்கியது. விசுவாசிகள் ‘மனம் புதிதாகிறதினாலே மறுரூபமானார்கள்.’ (ரோமர் 12:2) அவர்கள் ‘முந்தின நடக்கையை’ கைவிட்டுவிட்டு, ‘உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களானார்கள்.’ இவ்விதமாக அவர்கள் உலகின் தீய ஒழுக்கங்களை விட்டோடி “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்”கொண்டார்கள்.—எபேசியர் 4:22-24.
தீய ஒழுக்கம் நிறைந்த இன்றைய உலகம்
12. 1914 முதற்கொண்டு உலகின்மீது என்ன மாற்றம் வந்திருக்கிறது?
12 நம்முடைய நாளைப் பற்றி என்ன? நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகம் எக்காலத்திலும் இருந்ததைவிட அளவுக்கு அதிகமாக தீய ஒழுக்கம் நிறைந்ததாய் உள்ளது. விசேஷமாக 1914 முதற்கொண்டு உலகெங்கிலும் ஒழுக்கத்தில் சீர்குலைவு இருந்துவருகிறது. (2 தீமோத்தேயு 3:1-5) நற்பண்பு, நல்லொழுக்கம், மரியாதை, நன்னெறி பற்றிய பாரம்பரியமான கருத்துக்களை நிராகரித்தவர்களாய், அநேகர் தன்னலம் கருதுகிற சிந்தையுள்ளவர்களாகி “ஒழுக்க உணர்வில்லாதவர்களாய்” இருக்கிறார்கள். (எபேசியர் 4:19, NW) நியூஸ்வீக் பத்திரிகை இவ்வாறு சொன்னது: “ஒழுக்கம் தனிப்பட்டவரின் கருத்தைச் சார்ந்தது என்று எண்ணும் ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம்.” இன்று எங்கும் வியாபித்திருக்கும் ஒழுக்கச் சூழல் “சரியானது, தவறானது என்பது பற்றிய கருத்துக்களை தனிப்பட்டவரின் ரசனை, உணர்ச்சிப்பூர்வமான விருப்பம் அல்லது கலாச்சார தெரிவு என்ற விஷயங்களாக வரையறுத்துவிட்டிருக்கிறது.”
13. (அ) பெரும்பாலான இன்றைய பொழுதுபோக்கு எவ்விதமாக தீய ஒழுக்கத்தை ஊக்குவிக்கிறது? (ஆ) தவறான பொழுதுபோக்கு தனிநபர்களின்மீது என்ன கெட்ட பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்?
13 முதல் நூற்றாண்டில் இருந்ததுபோலவே, தரம்கெட்ட பொழுதுபோக்கு இன்று சர்வசாதாரணமாய் இருக்கிறது. டெலிவிஷனும், வானொலியும், திரைப்படங்களும், வீடியோக்களும் பாலியல் சம்பந்தமான விஷயங்களை எப்பொழுதும் வழங்கிக்கொண்டே இருக்கின்றன. தீய ஒழுக்கம் கம்ப்யூட்டர் பின்னல்வலைகளிலும்கூட ஊடுருவி பரவியிருக்கிறது; தற்போது ஆபாசமான விஷயங்கள் இந்த நெட்வொர்க்குகளில் அதிகமாக காணப்படுகின்றன, அதனால் பல்தரப்பட்ட வயதினரும் அவற்றைப் பெறமுடிகிறது. இவை எல்லாவற்றின் பாதிப்பும் என்ன? செய்தித்தாள் நிருபர் ஒருவர் சொல்கிறார்: “இரத்தஞ்சிந்துதலும், ஊனமாக்குதலும், கீழ்த்தரமான பாலுறவும் நாம் பழக்கப்பட்டிருக்கும் கலாச்சாரத்தில் ஊறிவிடும்போதும், இரத்தஞ்சிந்துதலும் ஊனமாக்குவதும் கீழ்த்தரமான பாலுறவும் நமக்கு சகஜமாகிவிடுகின்றன. மிதமிஞ்சி ஈடுபடுவதால் நாம் சலிப்படைந்துவிடுகிறோம். மோசமான நடத்தை முன்னிலும் குறைவான அளவில் நம்மை அதிர்ச்சியடையச் செய்வதால் நாம் அதிகமதிகமாக அதை சகித்துக்கொள்கிறவர்களாகிறோம்.”—1 தீமோத்தேயு 4:1, 2-ஐ ஒப்பிடுக.
14, 15. உலகம் முழுவதிலும் பாலியல் ஒழுக்கம் தரம்கெட்டு போய்விட்டிருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
14 தி நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளின் இந்த அறிக்கையை கவனியுங்கள்: “25 ஆண்டுகளுக்கு முன்பாக வெட்கக்கேடாக கருதப்பட்டது, இப்பொழுது ஏற்புடைய சேர்ந்துவாழும் ஏற்பாடாக ஆகியிருக்கிறது. திருமணம் செய்துகொள்வதற்கு பதிலாக சேர்ந்து வாழ தெரிந்துகொண்டிருக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை 1980 மற்றும் 1991-க்கு இடையே [ஐக்கிய மாகாணங்களில்] 80 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.” இது வட அமெரிக்காவுக்கு மாத்திரமே உரிய அபூர்வ நிகழ்ச்சியாக இல்லை. ஏஷியாவீக் பத்திரிகை இவ்விதமாக அறிவிக்கிறது: “கலாச்சார விவாதமொன்று [ஆசியா] முழுவதிலுமுள்ள தேசங்களில் நடைபெற்றுவருகிறது. பாலியல் சுதந்திரமா பாரம்பரிய மதிப்பீடுகளா என்பதே விவாதமாக உள்ளது. மாற்றத்துக்கான அழுத்தங்கள் சீராக அதிகரித்துக்கொண்டே வருகின்றன.” வேசித்தனமும் திருமணத்துக்கு முன்பு பாலுறவில் ஈடுபடுவதும் அநேக தேசங்களில் அதிகமதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதை புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.
15 சாத்தானின் நடவடிக்கை நம்முடைய நாளில் தீவிரமாக இருக்கும் என்பதாக பைபிள் முன்னறிவித்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:12) அப்படியென்றால் தீய ஒழுக்கம் திடுக்கிடச் செய்யும் வகையில் எங்கும் வியாபித்திருப்பது குறித்து நாம் ஆச்சரியப்படக்கூடாது. உதாரணமாக பிள்ளைகளை தன்னலமாக பாலியலில் ஈடுபட வைப்பது மிகப் பெரிய அளவுகளை எட்டியுள்ளது.a ஐக்கிய நாடுகள் குழந்தை நல நிதி (United Nations Children’s Fund) “வியாபார ரீதியில் தன்னலத்துக்காக பிள்ளைகளைப் பாலுறவில் ஈடுபடும்படியாகச் செய்வது உண்மையில் உலகிலுள்ள ஒவ்வொரு தேசத்திலும் பிள்ளைகளுக்கு தீங்கிழைத்துவருகிறது” என்பதாக அறிவிப்பு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும், “உலகம் முழுவதிலும் பத்து லட்சத்துக்கும் அதிகமான பிள்ளைகள் விலைமாதர்களாகும்படி வற்புறுத்தப்படுகின்றனர், கள்ளத்தனமாக கடத்தப்பட்டு பாலியல் நோக்கங்களுக்காக விற்கப்படுகின்றனர், ஆபாச காட்சிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றனர்.” ஓரினப்புணர்ச்சியும்கூட சர்வசாதாரணமாக காணப்படுகிறது. “மாற்று வகையான வாழ்க்கைமுறை” என்பதாக இதை சில அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் ஊக்கமளித்து முன்னேற்றுவிக்கின்றனர்.
உலகின் தீய ஒழுக்கங்களை ஒதுக்கித்தள்ளுதல்
16. பாலியல் ஒழுக்கம் சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைநிற்கை என்ன?
16 பாலியல் ஒழுக்கத்தில் கட்டுப்பாடற்ற தராதரங்களை ஆதரிப்பவர்களோடு யெகோவாவின் சாட்சிகள் சேர்ந்துகொள்வது இல்லை. தீத்து 2:11, 12 பின்வருமாறு சொல்கிறது: “எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும், உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்”ண நமக்குப் போதிக்கிறது. ஆம், திருமணத்துக்கு முன் பாலுறவு, வேசித்தனம், ஓரின புணர்ச்சி ஆகிய தீய ஒழுக்கங்களிடமாக உண்மையான ஒரு வெறுப்பை, அருவருப்பை நாம் வளர்த்துக்கொள்கிறோம்.b (ரோமர் 12:9; எபேசியர் 5:3-5) பவுல் இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “யெகோவாவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன்.”—2 தீமோத்தேயு 2:19, NW.
17. மதுபானங்களின் உபயோகத்தை உண்மைக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதுகின்றனர்?
17 அற்பமானதாக தோன்றும் தீய ஒழுக்கங்களைப் பற்றிய உலகின் கருத்தை உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒதுக்கித்தள்ளுகின்றனர். உதாரணமாக, இன்று அநேகர் மதுபான துர்ப்பிரயோகத்தை வேடிக்கையான ஒரு பொழுதுபோக்காக கருதுகின்றனர். ஆனால் யெகோவாவின் மக்கள் எபேசியர் 5:18-லுள்ள புத்திமதிக்கு செவிகொடுக்கிறார்கள்: ‘துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்திருங்கள்.’ ஒரு கிறிஸ்தவன் குடிப்பதைத் தெரிந்துகொள்கையில் அதை மிதமாகவே செய்கிறான்.—நீதிமொழிகள் 23:29-32.
18. குடும்ப அங்கத்தினர்களை நடத்தும் முறையில் பைபிள் நியமங்கள் எவ்வாறு யெகோவாவின் ஊழியர்களை வழிநடத்துகின்றன?
18 ஒருவருடைய துணைவரிடமும் பிள்ளைகளிடமும் கத்தி கூச்சல்போடுவது அல்லது அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுவது ஆகியவை ஏற்புடைய நடத்தையே என்பதாக கருதும் இந்த உலகிலுள்ள சிலரின் கருத்தையும்கூட யெகோவாவின் ஊழியர்களாக நாம் ஒதுக்கித்தள்ளுகிறோம். நல்லொழுக்கமுள்ள போக்கைத் தொடர தீர்மானித்தவர்களாய், கிறிஸ்தவ கணவன்மாரும் மனைவிமாரும் பவுலின் புத்திமதியைப் பின்பற்ற சேர்ந்து உழைக்கிறார்கள்: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—எபேசியர் 4:31, 32.
19. வியாபார உலகில் தீய ஒழுக்கம் எவ்வளவு சர்வசாதாரணமாக உள்ளது?
19 நேர்மையின்மையும், மோசடியும், பொய் சொல்லுதலும், கொடூரமான வியாபார தந்திரமும் திருடுதலும்கூட இன்று சர்வசாதாரணமாய் இருக்கின்றன. CFO என்ற வியாபார பத்திரிகையில் ஒரு கட்டுரை பின்வருமாறு அறிக்கை செய்கிறது: “4,000 வேலையாட்களை வைத்து செய்யப்பட்ட சுற்றாய்வு, . . . அதில் உட்படுத்தப்பட்ட 31 சதவீதத்தினர் முந்தைய ஆண்டில் ‘படுமோசமான ஒழுக்கக்கேட்டை’ நேரில் பார்த்திருந்ததாக காட்டியது.” இப்படிப்பட்ட தவறான நடத்தையில், பொய் சொல்லுதலும், கள்ள பதிவுகளை உண்டுபண்ணுதலும், பாலியல் நச்சரிப்பும், திருடுதலும் உட்பட்டிருந்தன. யெகோவாவின் பார்வையில் நாம் ஒழுக்க சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட நடத்தையை நாம் தவிர்த்து பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் நாணயமாக இருக்க வேண்டும்.—மீகா 6:10, 11.
20. கிறிஸ்தவர்கள் ஏன் “பண ஆசை”யிலிருந்து விடுபட்டவர்களாக இருப்பது அவசியமாயிருக்கிறது?
20 பணம் சம்பந்தப்பட்ட ஒரு துணிகரமான முயற்சியில் தன்னால் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறமுடிந்தால் கடவுளுடைய சேவைக்கு தனக்கு அதிகமான நேரம் இருக்கும் என்பதாக கற்பனை செய்துகொண்ட ஒரு மனிதனுக்கு என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். கிடைக்கவிருக்கும் லாபங்களை அதிகமாக மிகைப்படுத்திக்கூறுவதன் மூலம் மற்றவர்களை அவர் ஒரு முதலீட்டுத் திட்டத்தில் சேரச் செய்தார். இந்த லாபங்கள் உண்மையில் கிடைக்காமல் போனபோது, பெரும் நஷ்டங்களை எப்படியாவது ஈடுசெய்வதற்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பணத்தை அவர் கையாடிவிட்டார். அவருடைய செயல்களின் காரணமாகவும் மனம் திரும்பாத மனநிலையின் காரணமாகவும் அவர் கிறிஸ்தவ சபையிலிருந்து சபை நீக்கம் செய்யப்பட்டார். “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என்ற பைபிளின் எச்சரிக்கை உண்மையாயிருக்கிறது.—1 தீமோத்தேயு 6:9, 10.
21. உலகில் அதிகாரத்திலுள்ள ஆட்களின் மத்தியில் என்ன நடத்தை சர்வசாதாரணமாக உள்ளது, ஆனால் கிறிஸ்தவ சபையில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
21 அதிகாரமும் செல்வாக்குமுள்ள உலகப்பிரகாரமான மனிதர்கள் அநேகமாக நல்லொழுக்கத்தில் குறைவுபடுகிறவர்களாய், ‘அதிகாரத்தில் ஆணவம் பிறக்கும்’ என்ற பழமொழி உண்மை என்பதைக் காட்டுகின்றனர். (பிரசங்கி 8:9) ஒருசில தேசங்களில் நீதிபதிகள், போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் மத்தியில் லஞ்சம் வாங்குவதும் மற்ற வகையான ஊழல்களும் வாழ்க்கை முறையாக இருக்கின்றன. என்றபோதிலும் கிறிஸ்தவ சபையில் முன்நின்று நடத்துகிறவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்; பிறர்மீது அதிகாரம் செலுத்துகிறவர்களாய் இருக்கக்கூடாது. (லூக்கா 22:25, 26) மூப்பர்களும் உதவி ஊழியர்களும் “அவலட்சணமான ஆதாயத்திற்காக” சேவிப்பதில்லை. தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறக்கூடும் என்ற நம்பிக்கையினால் அவர்களுடைய தீர்ப்பு மாற்றப்படும்படிச் செய்ய அல்லது பாதிக்கப்படும்படிச் செய்ய எடுக்கப்படும் எந்த முயற்சிகளுக்கும் அவர்கள் அசையாதவர்களாய் இருக்க வேண்டும்.—1 பேதுரு 5:2; யாத்திராகமம் 23:8; நீதிமொழிகள் 17:23; 1 தீமோத்தேயு 5:21.
22. அடுத்தக் கட்டுரை எதைக் கலந்தாலோசிக்கும்?
22 தீய ஒழுக்கம் நிறைந்த நம்முடைய உலகில் நல்லொழுக்கத்தைக் காத்துக்கொள்ளும் தற்போதுள்ள சவாலை கிறிஸ்தவர்கள் மொத்தத்தில் வெற்றிகரமாகவே எதிர்ப்பட்டு வருகிறார்கள். என்றபோதிலும், நல்லொழுக்கம் என்பது வெறுமனே துன்மார்க்கத்தைத் தவிர்ப்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. நல்லொழுக்கத்தை வளர்ப்பது உண்மையில் எதைத் தேவைப்படுத்துகிறது என்பதை அடுத்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a 1993, அக்டோபர் 8, ஆங்கில விழித்தெழு!-வில் காணப்படும் “உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்” தொடர் கட்டுரைகளைக் காணவும்.
b கடந்த காலங்களில் ஓரின புணர்ச்சி செயல்களில் ஈடுபட்டிருந்தோர் முதல் நூற்றாண்டில் சிலர் செய்தது போலவே தங்கள் நடத்தையில் மாற்றங்களைச் செய்யலாம். (1 கொரிந்தியர் 6:11) 1995, மார்ச் 22 விழித்தெழு! பக்கங்கள் 21-3-ல் பயனுள்ள தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மறுபார்வைக்கு குறிப்புகள்
◻ கானானியர் முழுமையாக அழிக்கப்படும்படி யெகோவா ஏன் ஆணையிட்டார்?
◻ முதல் நூற்றாண்டில் என்ன தீய ஒழுக்கங்கள் சர்வசாதாரணமாக இருந்தன, இப்படிப்பட்ட ஒரு சூழலை கிறிஸ்தவர்கள் எவ்வாறு சமாளித்தார்கள்?
◻ 1914 முதற்கொண்டு உலகெங்கிலும் ஒழுக்க சீர்குலைவை உலக மக்கள் பார்த்து வருகின்றனர் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
◻ சர்வசாதாரணமான என்ன தீய ஒழுக்கங்களை யெகோவாவின் மக்கள் ஒதுக்கித்தள்ள வேண்டும்?
[பக்கம் 9-ன் படம்]
தீய ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகில் வாழ்ந்துவந்த போதிலும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாய் இருந்தனர்
[பக்கம் 10-ன் படம்]
தீய ஒழுக்கம் கம்பியூட்டர் நெட்வொர்க்குகளிலும் ஊடுருவி பரவி, அநேக இளைஞரும் மற்றவர்களும் ஆபாசமான விஷயங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது
[பக்கம் 12-ன் படம்]
கிறிஸ்தவர்கள் மற்றவர்களின் நேர்மையற்ற தந்திரங்களைப் பின்பற்றாமல் நல்லொழுக்கத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்