பைபிள் புத்தக எண் 49—எபேசியர்
எழுத்தாளர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: ரோம்
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 60-61
நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள். கிறிஸ்தவ மிஷனரியாக உங்கள் அயராத ஊழியத்தின் காரணமாகவே துன்புறுத்துதலை அங்கு அனுபவிக்கிறீர்கள். சபைகளைச் சந்தித்துப் பலப்படுத்துவதற்காக இனிமேலும் நீங்கள் பயணம் செய்ய முடியாது. இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? உங்கள் பிரசங்க ஊழியத்தின் பலனாய் கிறிஸ்தவர்கள் ஆனவர்களுக்குக் கடிதங்கள் எழுதுவீர்கள் அல்லவா? உங்கள் நிலை குறித்து அவர்கள் ஒருவேளை கவலைப்படலாம்; ஆகவே அவர்களுக்கு ஊக்குவித்தல் ஒருவேளை தேவைப்படலாம். நிச்சயமாகவே அவர்களுக்கு அது தேவைதான். ஆகவே நீங்கள் எழுத ஆரம்பிக்கிறீர்கள். ஏறக்குறைய பொ.ச. 59-61-ல், அப்போஸ்தலன் பவுல் ரோமில் முதல் தடவை சிறைப்பட்டிருக்கையில் செய்ததையே நீங்கள் இப்போது செய்கிறீர்கள். அவர் இராயனுக்கு மனு செய்திருந்தார். விசாரணையை எதிர்நோக்கி காவலிலிருந்தபோதிலும், சில காரியங்களைச் செய்ய அவருக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் பொ.ச. 60-ல் அல்லது 61-ல் பவுல், ரோமிலிருந்து “எபேசியருக்கு” தன் நிருபத்தை எழுதினார்; அதை தீகிக்குவின் மூலம் அனுப்புகையில், ஒநேசிமுவும் அவரோடுகூட சென்றார்.—எபே. 6:21; கொலோ. 4:7-9.
2 முதல் வாக்கியத்திலேயே தன்னை எழுத்தாளராக பவுல் அடையாளம் காட்டுகிறார். மேலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ தன்னை ‘ஆண்டவருக்குள் கைதி’ என்பதாக நான்கு தடவை குறிப்பிடுகிறார். (எபே. 1:1; 3:1, 13; 4:1; 6:19; தி.மொ.) பவுல் எழுத்தாளர் அல்ல என்பதற்கான விவாதங்கள் பயனற்று போயிருக்கின்றன. பவுலின் நிருபங்கள் அடங்கிய ஒரு கையெழுத்துச் சுவடியின் 86 தாள்கள், சுமார் பொ.ச. 200-ஐச் சேர்ந்ததாக கருதப்படும் செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46)-ல் உள்ளன. இத்தாள்களுள் எபேசியருக்கு எழுதின இந்த நிருபமும் உள்ளது. இவ்வாறு, அவருடைய நிருபங்களில் ஒன்றாக அது அந்தச் சமயத்தில் வகைப்படுத்தப்பட்டது தெரிகிறது.
3 இந்த நிருபத்தைப் பவுல் எழுதினார் என்றும் இது “எபேசியருக்கு” எழுதப்பட்டதென்றும் ஆரம்ப கால திருச்சபை எழுத்தாளர்கள் உறுதிசெய்கின்றனர். உதாரணமாக, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் ஐரீனியஸ், எபேசியர் 5:30-ஐ இவ்வாறு மேற்கோள் காட்டினார்: “ஆசீர்வதிக்கப்பட்ட பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்தில் நாம் அவருடைய சரீரத்தின் உறுப்பினரென்று சொல்லுகிறபடி.” அதே சமயத்தில் வாழ்ந்த அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட் பின்வருமாறு அறிவிக்கையில் எபேசியர் 5:21-ஐ மேற்கோள் காட்டினார்: “இக்காரணத்தால், எபேசியருக்கு எழுதின நிருபத்திலும் அவர், தேவ பயத்தில் ஒருவருக்கொருவர் கீழ்ப்பட்டிருங்கள் என்று எழுதுகிறார்.” பொ.ச. மூன்றாம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளின் எழுத்தாளரான ஆரிகென், பின்வருமாறு சொல்கையில் எபேசியர் 1:4-ஐ மேற்கோள் காட்டினார்: “ஆனால், இந்த அப்போஸ்தலன் எபேசியருக்கு எழுதின நிருபத்தில், உலக தோற்றத்திற்கு முன்னே நம்மைத் தெரிந்துகொண்டவர் என்று சொல்கையில், அதே மொழிநடையையே பயன்படுத்துகிறார்.”a ஆரம்ப கால கிறிஸ்தவ சரித்திரத்திற்கு (ஏ. பொ.ச. 260-342), சான்றாதாரம் அளிக்கும் இன்னொருவர் யூஸிபியஸ்; இவர் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் எபேசியரைச் சேர்க்கிறார். மேலும் ஆரம்ப கால திருச்சபையின் மற்ற எழுத்தாளர்களில் பெரும்பான்மையர் எபேசியரை தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்தின் பாகம் என்றே தங்கள் புத்தகங்களில் குறிப்பிடுகின்றனர்.b
4 செஸ்டர் பியட்டி பப்பைரஸ், வாடிகன் கையெழுத்துப்பிரதி எண் 1209, சினியாட்டிக் கையெழுத்துப் பிரதி ஆகியவை முதலாம் அதிகாரம் 1-ம் வசனத்தில், ‘எபேசுவில்’ என்ற வார்த்தையை உபயோகிக்காமல் விட்டுவிடுகின்றன; இவ்வாறு இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது என்பதைக் குறிப்பிடுவதில்லை. மேலும், (எபேசுவில் பவுல் மூன்று ஆண்டுகள் உழைத்திருந்தபோதிலும்) எபேசுவிலிருந்த தனிப்பட்ட நபர்களுக்கு வாழ்த்துதல்களை அதில் தெரிவிக்கவில்லை. இந்த இரண்டு காரணங்களும் சேர்ந்து, இந்த நிருபம் வேறு யாருக்காவது எழுதப்பட்டிருக்கலாம் அல்லது எபேசு உட்பட, ஆசியா மைனரிலுள்ள எல்லா சபைகளிலும் வாசிக்கப்படுவதற்கு அனுப்பப்பட்ட நிருபமாக இருந்திருக்கலாம் என்று சிலரை ஊகிக்க செய்திருக்கிறது. எனினும், பெரும்பான்மையான மற்றநேக கையெழுத்துப் பிரதிகளில் ‘எபேசுவில்’ என்ற வார்த்தை காணப்படுகிறது. மேலும் ஏற்கெனவே நாம் பார்த்தபடி, ஆரம்ப கால திருச்சபை எழுத்தாளர்கள் இதை எபேசியருக்கு எழுதின நிருபமாகவே ஏற்றுக்கொண்டனர்.
5 இந்த நிருபம் எதற்காக எழுதப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள சூழமைவைப் பற்றிய சில தகவல்கள் நமக்கு உதவும். பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில், எபேசு பட்டணம் பில்லிசூனியம், மந்திரம், சோதிடம், கருவளத் தேவதை அர்டிமிஸின் வணக்கம் ஆகியவற்றிற்கு பேர்போனதாக இருந்தது.c அந்தத் தேவதையின் சிலைக்காக பிரமாண்டமான கோவில் எழுப்பப்பட்டிருந்தது, அது பூர்வ உலகின் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாய் கருதப்பட்டது. 19-வது நூற்றாண்டில் அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகளின்படி, அந்தக் கோவில், ஏறக்குறைய 73 மீட்டர் அகலமும் 127 மீட்டர் நீளமுமுள்ள மேடையின்மீது கட்டப்பட்டிருந்தது. அந்தக் கோவில் மட்டுமே ஏறக்குறைய 50 மீட்டர் அகலமும் 105 மீட்டர் நீளமுமுடையதாய் இருந்தது. ஏறக்குறைய 17 மீட்டர் உயரமுள்ள 100 பளிங்குக்கல் தூண்கள் அதில் இருந்தன. வெண் பளிங்குக்கல் பாளங்களால் அமைந்த கூரை இருந்தது. அந்தப் பளிங்குக்கல் பாளங்களை இணைப்பதற்கு இடையே சாந்துகலவைக்குப் பதிலாக பொன் பயன்படுத்தப்பட்டிருந்ததாய் சொல்லப்படுகிறது. உலகின் நாலா புறமும் இருந்து சுற்றுலா பயணிகளை இந்தக் கோயில் கவர்ந்திழுத்தது. பண்டிகை காலங்களில் காண வருவோர் கூட்டம் லட்சக்கணக்கில் இந்த நகரத்துக்குள் திரண்டு வந்தது. வெள்ளி உருவங்களைச் செய்யும் எபேசுவின் தட்டான்கள் அர்டிமிஸ் கோவிலைப் போன்ற சின்னஞ்சிறு வெள்ளி உருவச் சிலைகளைச் செய்து யாத்திரிகருக்கு நினைவுப்பொருட்களாக விற்று வருவாய் மிகுந்த தொழிலை நடத்தி வந்தனர்.
6 பவுல் தன் இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது பிரசங்கிப்பதற்காக கொஞ்ச காலம் எபேசுவில் தங்கினார்; பின்பு அந்த ஊழியத்தைத் தொடர ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் அங்கேயே விட்டுச் சென்றார். (அப். 18:18-21) தன் மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது திரும்பவும் அங்கே வந்த பவுல் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் தங்கினார்; அப்போது “இந்த மார்க்கத்தை” பலருக்குப் பிரசங்கிக்கவும் போதிக்கவும் செய்தார். (அப். 19:8-10; 20:31) எபேசுவில் தங்கியிருக்கையில் பவுல் கடினமாய் உழைத்தார். பைபிள் காலங்களில் அனுதின வாழ்க்கை என்ற தன் ஆங்கில புத்தகத்தில் எ. இ. பேலி எழுதுகிறதாவது: “பொதுவாகவே, சூரிய உதயத்திலிருந்து காலை 11 மணி வரை தன் தொழிலை செய்வது பவுலின் வழக்கம். (அப். 20:34, 35) அந்த நேரத்துக்குள்ளாக திரேனியு தன் போதகத்தை முடித்திருப்பார்; பின்பு காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மன்றத்தில் பிரசங்கித்து, உதவியாளரோடு கூட்டங்கள் நடத்துவார், . . . பின்பு கடைசியாக மாலை 4 மணியிலிருந்து இரவு வெகுநேரம் வரை வீட்டுக்குவீடு சுவிசேஷத்தை அறிவித்தார். (அப். 20:20, 21, 31) சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் அவருக்கு நேரம் எப்படி கிடைத்ததென்று ஒருவர் ஆச்சரியப்படலாம்.”—1943, பக்கம் 308.
7 ஆர்வமுள்ள இந்த பிரசங்க ஊழியத்தின் போது, வணக்கத்திற்கு உருவங்களைப் பயன்படுத்துவது தவறென பவுல் வெளிப்படையாய் சொன்னார். வெள்ளி உருவச் சிலைகளைச் செய்து விற்கும் தெமேத்திரியு போன்ற தட்டான்களின் கோபத்தை இது தூண்டிவிட்டது. அந்தப் பெரும் அமளியால் பவுல் கடைசியாக இந்தப் பட்டணத்தை விட்டே வெளியேற வேண்டியதாயிற்று.—அப். 19:23–20:1.
8 புறமத வணக்கத்தாராலும் அர்டிமிஸின் மலைப்பூட்டும் கோவிலின் செல்வாக்காலும் சூழப்பட்டு இருந்த எபேசு சபை எதிர்ப்படுகிற பிரச்சினைகளைப் பற்றி இப்போது சிறையில் இருக்கையில் பவுல் சிந்திக்கிறார். அபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் “பரிசுத்த ஆலயமாக” இருக்கிறார்கள் என்பதையும் அதில் யெகோவா தம்முடைய ஆவியால் வாசம் செய்கிறார் என்பதையும் காட்டுவதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்ட பொருத்தமான உவமையைப் பவுல் இப்போது பயன்படுத்துகிறார். (எபே. 2:21) கடவுளுடைய நிர்வாகத்தை (தம்முடைய வீட்டாரின் விவகாரங்களை அவர் கையாளும் முறை) பற்றிய ‘இந்தப் பரிசுத்த இரகசியம்’ எபேசியருக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதன் மூலமாகவே அவர், இயேசு கிறிஸ்துவைக் கொண்டு ஒற்றுமையையும் சமாதானத்தையும் திரும்ப நிலைநாட்டுவார். இது அவர்களுக்குப் பெரும் உற்சாகத்தையும் ஆறுதலையும் அளித்தது என்பதில் சந்தேகமில்லை. (1:9, 10, NW) கிறிஸ்துவில் யூதரும் புறஜாதியாரும் ஒன்றிணைவதை பவுல் வலியுறுத்துகிறார். ஒன்றுபடவும் ஐக்கியப்படவும் புத்தி சொல்கிறார். இவ்வாறு, இந்தப் புத்தகத்தின் நோக்கத்தையும், மதிப்பையும், நிச்சயமாகவே ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதையும் இப்போது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
எபேசியரின் பொருளடக்கம்
9 கிறிஸ்துவின் மூலம் ஒற்றுமைப்படுத்துவதே கடவுளுடைய நோக்கம் (1:1–2:22). அப்போஸ்தலனாகிய பவுல் வாழ்த்துக்களை அனுப்புகிறார். கடவுளின் மகிமையான தகுதியற்ற தயவுக்காக அவருக்குத் துதி செலுத்த வேண்டும். இது, இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் இருக்க அவர்களைக் கடவுள் தெரிந்துகொண்டதுடன் சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது. கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் மூலமான மீட்பின் கிரயத்தால் அவர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. மேலுமாக, கடவுள் தம்முடைய சித்தத்தைப் பற்றிய பரிசுத்த இரகசியத்தை தெரியப்படுத்தியதால் அவர்களிடம் தம்முடைய அன்பைப் பெருகச் செய்திருக்கிறார். ஏனெனில் ‘சகலத்தையும் மறுபடியும் கிறிஸ்துவில் ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பதற்கு’ ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்த அவர் தீர்மானித்திருக்கிறார். கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் அவர்கள் சுதந்தரவாளிகளாகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். (1:10, NW) இதற்கு அச்சாரமாக, முன்னதாகவே அவர்கள் பரிசுத்த ஆவியால் முத்திரை பெற்றிருக்கின்றனர். தாங்கள் அழைக்கப்பட்ட அந்த அழைப்பின் பேரிலுள்ள நம்பிக்கையை அவர்கள் உறுதியாய் மனதில் ஏற்க வேண்டும்; கிறிஸ்துவை கடவுள் எழுப்பி, அவரை எல்லா அரசாங்கத்துக்கும் அதிகாரத்துக்கும் மேலாக வைத்து, சபைக்கு எல்லாமுமாக இருக்கும்படி தலையாக்கினார், இதை செய்வதற்கு அவர் பயன்படுத்திய அதே வல்லமையை தங்களிடமும் கடவுள் பயன்படுத்துவார் என்பதை அவர்கள் உணர வேண்டும். இவற்றிற்காகவே பவுல் ஜெபிக்கிறார்.
10 தங்கள் மீறுதல்களிலும் பாவங்களிலும் செத்தவர்களாய் அவர்கள் இருந்தனர். அவர்களை கடவுள் தம்முடைய இரக்கத்தின் ஐசுவரியத்தாலும் மிகுந்த அன்பாலும் உயிர்ப்பித்தார். அதோடு, ‘கிறிஸ்து இயேசுவுடன் ஐக்கியத்தில் பரலோக ஸ்தானங்களில்’ ஒன்றாக அமர செய்திருக்கிறார். (2:6, NW) இந்த யாவும் தகுதியற்ற தயவினாலும் விசுவாசத்தினாலுமே உண்டானதே தவிர, அவர்களுடைய எந்தவிதமான செயல்களின் பலனாகவும் அல்ல. புறஜாதியாரை யூதரிலிருந்து பிரித்து வைத்திருந்தது நியாயப்பிரமாணத்தின் சட்டதிட்டங்கள். அந்தச் சுவரை தகர்த்தெரிந்தவரான கிறிஸ்துவே அவர்களின் சமாதானம். இப்போது இரு சாராரும் கிறிஸ்துவின் மூலம் பிதாவை அணுக முடிகிறது. ஆகையால் எபேசியர் இனிமேலும் பரதேசிகள் அல்ல, “பரிசுத்தவான்களோடுகூட ஒரே ஜனசமூக”த்தார்; ஆவியின்மூலம் யெகோவா வாசம் செய்வதற்கான பரிசுத்த ஆலயமாக பெருகி வருகிறார்கள்.—2:19, தி.மொ.
11 ‘கிறிஸ்துவின் பரிசுத்த இரகசியம்’ (3:1-21). ‘புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரரும் ஒரே சரீரத்துக்குள்ளானவர்களும் வாக்குத்தத்தத்துக்குக் கிறிஸ்துவுக்குள் உடன் பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற . . . கிறிஸ்துவின் [“பரிசுத்த,” NW] இரகசியத்தை’ கடவுள் இப்போது தம்முடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் வெளிப்படுத்தி இருக்கிறார். (3:3, 5, தி.மொ.) கிறிஸ்துவின் அளவற்ற இந்த ஐசுவரியங்களை அறிவிப்பதோடு, இந்தப் பரிசுத்த இரகசியம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை மனிதர் காண்பதற்கு கடவுளுடைய தகுதியற்ற தயவினால் பவுல் இதன் ஊழியராகியிருக்கிறார். இப்படி எல்லா அம்சங்களையும் பெற்ற கடவுளின் ஞானம் சபையின் மூலமே தெரியப்படுத்தப்படுகிறது. இதனிமித்தமே, அறிவுக்கெட்டாத கிறிஸ்துவின் அன்பை அவர்கள் முழுமையாக அறிந்துகொள்ளவும், கடவுள் ‘நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் . . . நமக்குச் செய்ய வல்லவர்’ என்று உணரவும் கடவுளுடைய ஆவியின்மூலம் வல்லமையில் பலப்படும்படி பவுல் ஜெபிக்கிறார்.—3:20.
12 ‘புதிய ஆள்தன்மையைத்’ தரித்துக்கொள்ளுதல் (4:1–5:20). கிறிஸ்தவர்கள் தங்களுடைய அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக, மனத்தாழ்மையிலும், நீடிய பொறுமையிலும், அன்பிலும், சமாதானத்தின் ஐக்கியக் கட்டிலும் நடக்க வேண்டும். ஏனெனில் ஒரே ஆவியும், ஒரே நம்பிக்கையும், ஒரே விசுவாசமுமே உள்ளது. “எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், . . . எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.” (4:6) ஆகையால் ‘ஒரே கர்த்தராகிய’ கிறிஸ்து, “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்” தீர்க்கதரிசிகளையும், சுவிசேஷகரையும், மேய்ப்பர்களையும், போதகர்களையும் அளித்திருக்கிறார். ஆகையால், ‘சத்தியத்தைப் பேசி,’ ஒவ்வொரு உறுப்பும் ஒத்துழைக்கும் விதமாய் இணைக்கப்பட்டுள்ள ஒரு சரீரமாக, ‘தலையாயிருக்கிறவராகிய கிறிஸ்துவுக்குள் எல்லா காரியங்களிலும் அன்பில் வளருவோமாக’ என்று பவுல் எழுதுகிறார். (4:5, 12, 15, NW) பழைய ஆள்தன்மைக்குரிய ஒழுக்கக்கேடான, பயனற்ற, அறியாமையின் வழிகளை விட்டு விலக வேண்டும். ஒவ்வொருவரும் தன் மனதைத் தூண்டி இயக்கும் சக்தியில் புதிதாக்கப்பட வேண்டும்; ‘உண்மையான நீதியிலும் பற்றுறுதியிலும் கடவுளுடைய சித்தத்திற்கிசைய உண்டாக்கப்பட்ட புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொள்ள வேண்டும்.’ எல்லாரும் எல்லாருக்கும் உரியவர்களாக இருப்பதால், அவர்கள் சத்தியத்தைப் பேசி, கோபம், திருடுதல், கெட்ட வார்த்தைகள், பகைமையான மனக்கசப்பு ஆகியவற்றைக் களைந்து போட வேண்டும்; இவை அனைத்திலும் கடவுளுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக, அவர்கள் ‘ஒருவருக்கொருவர் தயவும், உருக்கமான இரக்கமுமுள்ளோராகி, கடவுள் கிறிஸ்துவின்மூலம் அவர்களுக்குத் தாராளமாய் மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் தாராளமாய் மன்னிப்பார்களாக.’—4:24, 32, NW.
13 எல்லாரும் கடவுளைப் பின்பற்றுவோராக வேண்டும். வேசித்தனம், அசுத்தம், பேராசை ஆகியவை அவர்கள் மத்தியில் பேசப்படவும் கூடாது. ஏனெனில் அத்தகைய காரியங்களைப் பழக்கமாய்ச் செய்வோர் ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. ‘ஒளியின் பிள்ளைகளாகத் தொடர்ந்து நடங்கள்’ என்று பவுல் எபேசியருக்கு அறிவுரை கூறுகிறார். நீங்கள் எவ்வாறு நடக்கிறீர்கள் என்பதன்பேரில் ‘வெகு கவனம் செலுத்துங்கள்,’ ‘நாட்கள் பொல்லாதவையாய் இருப்பதால்,’ வாய்ப்பான காலத்தை விலைகொடுத்து வாங்குங்கள். ஆம், ‘யெகோவாவின் சித்தம் என்னவென அவர்கள் தொடர்ந்து கண்டறிந்துகொண்டு’ நன்றியறிதலுள்ள முறையில் கடவுளின் புகழை யாவரறிய செய்ய வேண்டும்.—5:8, 15-17, NW.
14 சரியான கீழ்ப்பட்டிருத்தல்; கிறிஸ்தவப் போர் (5:21–6:24). சபை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருப்பது போலவே, மனைவிகளும் கணவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். “கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்”ததுபோல், கணவர்களும் தங்கள் மனைவிகளில் தொடர்ந்து அன்புகூர வேண்டும். அவ்வாறே, ‘மனைவி தன் கணவனிடமாக ஆழ்ந்த மரியாதையுடையவளாய் இருக்க வேண்டும்.’—5:25, 33, NW.
15 கீழ்ப்படிவதன் மூலமும், தேவபக்தி சம்பந்தப்பட்ட சிட்சையை ஏற்று நடப்பதன் மூலமும் பிள்ளைகள் பெற்றோரோடு ஒற்றுமையாக வாழவேண்டும். அடிமைகளும் எஜமானருங்கூட கடவுளுக்குப் பிரியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில், எல்லாருக்கும் எஜமானர் ‘பரலோகத்தில் இருக்கிறார், அவரிடத்தில் பட்சபாதம் இல்லை.’ கடைசியாக, எல்லாரும் பிசாசுக்கு எதிராக உறுதியாய் நிலைத்து நிற்பதற்கு, கடவுளிடமிருந்து வரும் சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொண்டு, “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படு”வார்களாக. ‘எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் பெரிய கேடகத்தையும்,’ ‘தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் பிடித்துக்கொள்ள வேண்டும்.’ தொடர்ந்து ஜெபியுங்கள், விழித்திருங்கள். தான் எல்லா தைரியத்துடனும் “சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்”கும்படி தனக்காக ஜெபிக்கும்படியும் பவுல் கேட்டுக் கொள்கிறார்.—6:9, 10, 16, 17, 20.
ஏன் பயனுள்ளது
16 எபேசியருக்கு எழுதப்பட்ட இந்த நிருபம் கிறிஸ்தவனுடைய வாழ்க்கையின் ஏறக்குறைய எல்லா அம்சங்களையும் குறிப்பிடுகிறது. நம் நாளில் பெருகி வரும் கடுந்துயரமிக்க பிரச்சினைகளையும் உலகில் காணப்படும் தீய செயல்களையும் காண்கையில், பவுலின் சிறந்த நடைமுறையான ஆலோசனை, தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புவோருக்கு உண்மையிலேயே பயனுள்ளது. பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமாகவும், பெற்றோர் பிள்ளைகளிடமாகவும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? தன் மனைவியிடமாக கணவனுக்கும், தன் கணவனிடமாக மனைவிக்கும் உள்ள பொறுப்புகள் என்ன? பொல்லாத உலகின் மத்தியிலும் அன்போடு ஒற்றுமையையும் கிறிஸ்தவ தூய்மையையும் காத்துக்கொள்ள சபையிலுள்ள ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? பவுலின் அறிவுரை இந்தக் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கிறது. மேலும் புதிய கிறிஸ்தவ ஆள்தன்மையைத் தரித்துக்கொள்வதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதையும் பவுல் தொடர்ந்து காட்டுகிறார். எபேசியரைப் படிப்பதன் மூலம், கடவுளுக்குப் பிரியமானதும் “உண்மையான நீதியிலும் பற்றுறுதியிலும் கடவுளுடைய சித்தத்திற்கிசைய உண்டாக்கப்பட்”டிருப்பதுமான இந்த வகையான ஆள்தன்மைக்கு உண்மையான மதித்துணர்வை எல்லோராலும் காட்ட முடியும்.—4:24-32, NW; 6:1-4; 5:3-5, 15-20, 22-33.
17 சபையில் நியமிப்புகளும் பொறுப்புகளும் அளிக்கப்படுவதன் நோக்கத்தையும் இந்த நிருபம் சுட்டிக்காட்டுகிறது. முதிர்ச்சியை மனதில் கொண்டு, “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்” இவ்வாறு செய்யப்படுகிறது. இந்தச் சபை ஏற்பாடுகளுடன் சேர்ந்து முழுமையாய் ஒத்துழைப்பதன் மூலம், ஒரு கிறிஸ்தவர் ‘தலையாகிய கிறிஸ்துவுக்குள் அன்பினால் எல்லாவற்றிலேயும் வளரலாம்.’—4:12, 15.
18 ‘கிறிஸ்துவின் பரிசுத்த இரகசியத்தைப்’ பற்றிய ஆரம்ப கால சபையின் புரிந்துகொள்ளுதலை மேலும் தெளிவாக்குவதில் எபேசியருக்கு எழுதின இந்த நிருபம் அதிக பயனுள்ளதாக இருந்தது. விசுவாசிகளான யூதர்களோடுகூட “புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்”கும்படி அழைக்கப்பட்டிருந்தார்கள் என்று இதில் தெளிவாக்கப்பட்டது. புறஜாதியானை யூதனிலிருந்து தடுத்து வைத்திருந்த “சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாண”மெனும் தடுப்புச்சுவர் முற்றிலும் நீக்கப்பட்டது. இப்போது கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம், எல்லாரும் பரிசுத்தவான்களோடுகூட உடன் பிரஜைகளும் கடவுளுடைய வீட்டாரின் அங்கத்தினர்களுமாகி உள்ளனர். புறமத அர்டிமிஸின் கோவிலுக்கு நேர்மாறாக, இவர்கள் தம்முடைய ஆவியின்மூலம் வாசம் செய்வதற்கு, ‘யெகோவாவுக்கு ஒரு பரிசுத்த ஆலயமாக’ கிறிஸ்து இயேசுவுடன் ஐக்கியத்தில் ஒன்றாய்க் கட்டப்பட்டு வந்தார்கள்.—3:3, 6; 2:15, 21, NW.
19 ‘இந்தப் பரிசுத்த இரகசியத்தைக்’ குறித்து ‘வானங்களிலுள்ளவையும் [பரலோக ராஜ்யத்திற்காக தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்] பூமியிலுள்ளவையுமான [ராஜ்ய ஆட்சியில் பூமியில் வாழவிருப்போர்] எல்லாக் காரியங்களையும் கிறிஸ்துவில் மறுபடியும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கும் . . . ஒரு நிர்வாகத்தைப்’ பற்றி பவுல் பேசினார். இவ்வாறு சமாதானத்தையும் ஒற்றுமையையும் திரும்ப நிலைநாட்டுவதற்கான கடவுளின் மகத்தான நோக்கம் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. எபேசியருடைய இதயம் அறிவொளியூட்டப்பட்டிருந்தது. அவர்கள், கடவுள் அழைத்திருந்த அந்த அழைப்பின் நம்பிக்கையை இன்னும் முழுமையாய் புரிந்துகொண்டு, ‘பரிசுத்தவான்களுக்கு ஒரு சுதந்தரமாக அவர் வைத்திருக்கிற அந்த மகிமையான ஐசுவரியங்கள் என்னவென்று’ காண வேண்டுமென பவுல் ஜெபித்தார். இந்த வார்த்தைகள் அவர்களுடைய நம்பிக்கையில் அவர்களை வெகுவாய் உற்சாகமூட்டியிருக்க வேண்டும். ‘கடவுள் கொடுக்கும் எல்லா நிறைவாலும் நாம் நிரப்பப்படும்படி,’ எபேசியருக்கு எழுதின ஏவப்பட்ட இந்த நிருபம் இந்நாளிலும் சபைகளை தொடர்ந்து கட்டியெழுப்பி வருகிறது.—1:9-11, 18; 3:19; NW.
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் புத்தகங்களின் தொடக்கமும் சரித்திரமும் (ஆங்கிலம்) 1868, சி. இ. ஸ்டோவி, பக்கம் 357.
b நியூ பைபிள் டிக்ஷ்னரி, இரண்டாம் பதிப்பு, 1986, ஜே. டி. டக்லஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது, பக்கம் 175.
c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 182.
[கேள்விகள்]
1. எப்போது, எந்தச் சூழ்நிலைமையில் எபேசியருக்கு இந்த நிருபத்தை பவுல் எழுதினார்?
2, 3. எபேசியர் நிருபத்தை பவுல் எழுதினார் என்பதையும், அதே சமயத்தில், இது பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தது என்பதையும் எது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது?
4. எபேசியர் வேறு யாருக்காவது எழுதப்பட்டிருக்கலாம் என சிலர் ஊகிக்க எது வழிநடத்தியிருக்கிறது, ஆனால் எபேசு சபைக்காகவே அது எழுதப்பட்டது என்பதை என்ன அத்தாட்சி ஆதரிக்கிறது?
5. பவுலின் நாளிலிருந்த எபேசுவைக் குறித்ததில் எது கவனிக்கத்தக்கது?
6. எபேசுவில் பவுல் எந்தளவுக்கு விரிவாக ஊழியம் செய்தார்?
7. பவுலின் ஆர்வமுள்ள பிரசங்கிப்பினால் விளைந்த பயன் என்ன?
8. எபேசியருக்கு எழுதின பவுலின் நிருபம் என்ன குறிப்புகளில் காலத்துக்கேற்றதாய் இருந்தது?
9. கடவுள் எவ்வாறு தம் அன்பைப் பெருகச் செய்திருக்கிறார், பவுலின் ஜெபம் என்ன?
10. எவ்வாறு எபேசியர் ‘பரிசுத்தவான்களோடுகூட ஒரே ஜனசமூகத்தாராய்’ ஆகியிருக்கின்றனர்?
11. ‘பரிசுத்த இரகசியம்’ என்ன, எபேசியருக்காக பவுல் எவ்வாறு ஜெபிக்கிறார்?
12. (அ) கிறிஸ்தவர்கள் எவ்வாறு நடக்க வேண்டும், ஏன்? (ஆ) என்ன வரங்களைக் கிறிஸ்து அளித்திருக்கிறார், என்ன நோக்கத்துக்காக? (இ) ‘புதிய ஆள்தன்மையைத்’ தரித்துக்கொள்வதில் என்ன உட்பட்டுள்ளது?
13. ஒருவர் கடவுளைப் பின்பற்றுபவராய் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?
14. கணவர்களுக்கும் மனைவிகளுக்குமான பரஸ்பர பொறுப்புகள் யாவை?
15. பிள்ளைகளையும் பெற்றோரையும், எஜமானரையும் அடிமைகளையும், கிறிஸ்தவனின் ஆயுதவர்க்கத்தையும் குறித்து பவுல் என்ன அறிவுரை கொடுக்கிறார்?
16. எபேசியரில் என்ன கேள்விகளுக்கு நடைமுறையான பதில்கள் காணப்படுகின்றன, கடவுளுக்குப் பிரியமான ஆள்தன்மையைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
17. சபையின் ஏற்பாடுகளுடன் ஒத்துழைப்பது சம்பந்தமாக எபேசியர் நிருபம் என்ன காட்டுகிறது?
18. ‘பரிசுத்த இரகசியத்தையும்,’ ஆவிக்குரிய ஆலயத்தையும் பற்றி எது தெளிவாக்கப்பட்டிருக்கிறது?
19. எபேசியர் என்ன நம்பிக்கையையும் உற்சாகமூட்டுதலையும் இந்நாள்வரை தொடர்ந்து அளித்து வருகிறது?