நேரத்தைச் சேமிக்க முடியாது அதனால் சரியாகப் பயன்படுத்துங்கள்
காலம் பொன் போன்றது. இது பிரபலமான பழமொழி. உண்மையில், பொன் பொருள் இவற்றிலிருந்து நேரம் ரொம்பவே வித்தியாசமானது. எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக பணம், உணவு, எரிபொருள் போன்றவற்றைச் சேமிக்கிறோம். ஆனால், நேரத்தை அப்படிச் சேமிக்க முடியாது. நேரத்தைப் பயன்படுத்தாமல் சேமிக்க முயன்றால் அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நீங்கள் ஒரு நாளில் எட்டு மணிநேரம் தூங்கி, மீதி நேரத்தை ஒன்றும் செய்யாமல் சேமிக்க முடியுமா? அப்படிச் செய்தால் அந்நாளின் கடைசியில், நீங்கள் பயன்படுத்தாத நேரம் வீணாகிப் போய்விட்டிருக்கும்.
நேரத்தை வேகமாய் பாய்ந்தோடும் ஒரு பெரிய நதிக்கு ஒப்பிடலாம். அது எப்பொழுதும் முன்னோக்கியே பாய்ந்து செல்கிறது. அதன் ஓட்டத்தை உங்களால் தடுக்கவும் முடியாது, அதன் எல்லா துளிகளையும் பயன்படுத்திக்கொள்ளவும் முடியாது. நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஆற்றங்கரைகளில் நீர் ஆலைகளை மக்கள் உருவாக்கினார்கள். இவற்றைக் கொண்டு, பாய்ந்தோடும் நீரிலிருந்து கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்தினார்கள். அதைக் கொண்டு மாவரைக்கும் கற்கள், மரம் அறுக்கும் ஆலைகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், மிகப்பெரிய சம்மட்டிகள் போன்றவற்றை இயக்கினார்கள். அதேவிதமாக, நேரத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். எதற்காக? சேமிப்பதற்கு அல்ல, நல்ல வேலைகளைச் செய்ய பயன்படுத்துவதற்காக. இப்படி நல்ல விதமாக நேரத்தை பயன்படுத்த வேண்டுமென்றால், நேரத்தைத் திருடும் முக்கியமான இரண்டு விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அதில் ஒன்று, காலம் தாழ்த்துவது; அதோடு நெருங்கிய தொடர்புடைய மற்றொன்று, பொருள்களை தாறுமாறாக வைத்திருப்பது. முதலில் காலம் தாழ்த்துவதைப் பற்றிச் சிந்திக்கலாம்.
காலம் தாழ்த்துவதைத் தவிருங்கள்
இன்று செய்ய முடிந்ததை நாளைவரை தள்ளிப்போடாதே என்று ஒரு பிரபல பழமொழி சொல்கிறது. ஆனால், இந்த அறிவுரையைப் பின்பற்ற சிலர் விரும்புவதில்லை. ஒரு வேலையை ரொம்பவே கவனமாக, முயற்சி எடுத்து செய்ய வேண்டியிருக்கும்போது அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சிலர் சுலபமாகத் தள்ளிப்போடுகிறார்கள். காலம் தாழ்த்துவது என்றால் வேலையை வேண்டுமென்றேயும் பழக்கமாகவும் தள்ளிப்போடுதல், உடனடியாகச் செய்ய வேண்டியவைகளை வேண்டுமென்றே தள்ளிப்போடுதல் என்று அர்த்தம். காலம் தாழ்த்துபவருக்கு, வேலைகளைத் தள்ளிப்போடுவது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. நெருக்கடி அதிகரிக்கையில் வேலையைத் தள்ளிப்போட்டுவிட்டு நிம்மதியாக அந்த “ஓய்வு நேரத்தை” அனுபவிக்கிறார்; ஆனால், நெருக்கடி மீண்டும் தலைதூக்கும் வரைதான் இந்த நிம்மதி நீடிக்கும்.
சில நேரங்களில், நம்முடைய உடல்நிலை, மனநிலை காரணமாக வேலைகள் சிலவற்றையோ எல்லாவற்றையுமோ தள்ளிப்போட வேண்டியிருக்கலாம். அதோடு, அன்றாட வேலையிலிருந்து எல்லாருக்குமே அவ்வப்போது ஓய்வு தேவைப்படுகிறது. தேவ மைந்தனும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. இயேசு தம்முடைய ஊழியத்தில் முழுமூச்சாய் ஈடுபட்டிருந்தபோதும் அவரும் அவருடைய சீஷர்களும் சற்று ஓய்வெடுக்க நேரத்தை ஒதுக்கினார். (மாற்கு 6:31, 32) இதுபோன்ற ஓய்வு பயனளிக்கிறது. ஆனால், காலந்தாழ்த்துவது என்பது முற்றிலும் வித்தியாசமானது. பொதுவாகவே, அது ஒருவரை பிரச்சினைக்குள் தள்ளிவிடுகிறது. ஓர் உதாரணத்தைக் கவனிக்கலாம்.
கணக்குப் பரீட்சைக்குத் தயாராக ஒரு டீனேஜ் மாணவிக்கு மூன்று வாரங்கள் அவகாசம் இருக்கிறது. எக்கச்சக்கமான பாடங்களையும் குறிப்புகளையும் அவள் மறுபார்வை செய்ய வேண்டியிருக்கிறது. அவள் பதற்றமாக உணருகிறாள். ஆனால், பரீட்சைக்குத்தான் இன்னும் நிறைய நாள் இருக்கிறதே, பிறகு படித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாள்; படிப்பதை தள்ளிப்போட்டுவிட்டு, டிவி பார்க்கிறாள். இப்படியே நாட்களை வீணடிக்கிறாள். பரீட்சைக்கு முந்தின இரவில் மொத்த பாடமும் அவள் முன் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அவள் உட்கார்ந்து, குறிப்புகளையும் புத்தகங்களையும் புரட்ட ஆரம்பிக்கிறாள்.
வீட்டிலுள்ள மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கையில் அவள் மட்டும் விழுந்து விழுந்து படிக்கிறாள். சமன்பாடுகளையும், திரிகோண அளவைகளையும், வர்க்கமூலங்களையும் தலையைப் பிய்த்துக்கொண்டு ரொம்ப நேரமாக மனப்பாடம் செய்கிறாள். களைத்துப்போனவளாய் அடுத்த நாள் பள்ளிக்குச் செல்கிறாள். அவள் மூளை கேள்விகளுக்குப் பதிலளிக்க தயாராயில்லாததால் திணறுகிறாள். பரீட்சையில் குறைவான மதிப்பெண் பெற்று தோல்வியடைகிறாள். எல்லாப் பாடங்களையும் அவள் மீண்டும் படிக்க வேண்டியிருக்கிறது; மேல் வகுப்பிற்கு தகுதிபெறாமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது.
காலந்தாழ்த்தியதால் இந்த மாணவிக்கு வந்த கஷ்டத்தைப் பார்த்தீர்களா? இதுபோன்ற சூழ்நிலைகளில் விழாதிருக்க பைபிளின் ஒரு நியமம் மக்களுக்கு உதவுகிறது. “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, . . . காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 5:15, 16) கிறிஸ்தவர்கள் தங்களுடைய நேரத்தை ஆன்மீகக் காரியங்களில் ஞானமாகப் பயன்படுத்த வேண்டுமென பவுல் அறிவுறுத்தினார்; ஆனால், வாழ்க்கையின் மற்ற முக்கியமான நடவடிக்கைகளிலும் அந்த நியமம் உதவியாக இருக்கும். பொதுவாகவே, ஒரு வேலையை எப்போது செய்யலாம் என்பதை நம்மால் முன்கூட்டியே தீர்மானிக்க முடியும். அப்படித் தீர்மானித்து, மிகச்சரியான நேரத்தில் வேலையை ஆரம்பித்தால் அதை நம்மால் சிறப்பாகவும், சீக்கிரத்திலும் செய்ய முடியும். இது ‘ஞானமுள்ளவர்களுக்கு’ அடையாளம் என்று அந்த வசனம் கூறுகிறது.
அந்த இளம் மாணவி கணக்கு பரீட்சைக்குப் படிக்க எது மிகச் சரியான நேரமாக இருந்திருக்கும்? ஒருவேளை தினமும் மாலையில் சுமார் 15 நிமிடங்கள் படித்திருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அவளால் எல்லா பாடங்களையும் படித்திருக்க முடியும். இதைச் செய்திருந்தால் ஒரே இரவில் அரக்கப்பரக்க படித்துக்கொண்டிருக்காமல் நிதானமாகப் படித்து, நேரத்தோடு தூங்கியிருக்கலாம். பரீட்சை நாளில் சாவகாசமாகவும், தயாராகவும் இருந்திருக்கலாம்; நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருக்கலாம்.
எனவே, உங்களுக்கு ஒரு வேலை கொடுக்கப்படும்போது, அதை எப்போது செய்தால் சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானியுங்கள். அதன்படியே செய்யுங்கள். அப்போது காலந்தாழ்த்துதல் என்ற வலையில் விழாதிருப்பீர்கள்; அதன் மோசமான விளைவுகளையும் தவிர்ப்பீர்கள். வேலையை நன்றாகச் செய்த திருப்தியையும் அடைவீர்கள். குறிப்பாக, கிறிஸ்தவ சபை நியமிப்புகளைப் போன்று மற்றவர்களுடைய நன்மைக்காகச் செய்யும் வேலையாக இருக்கும்பொழுது காலந்தாழ்த்தாமல் இருப்பது மிக முக்கியம்.
தேவையில்லாதவற்றை தூக்கியெறியுங்கள்
முன்னர் குறிப்பிட்டதுபோல, நம்முடைய பொன்னான நேரத்தை நன்கு பயன்படுத்துவதற்கு தேவையில்லாதவற்றை தூக்கியெறிவது அவசியம். பொருள்களைக் கையாள, அடுக்கி வைக்க, உபயோகிக்க, சுத்தம் செய்ய, சேமித்துவைக்க, தேடி எடுக்க என எல்லாவற்றையும் செய்ய நேரமெடுக்கும் என்பது நமக்குத் தெரியும். அதிக பொருள்கள் இருந்தால் அதிக நேரமும் தேவைப்படும். வீடு அல்லது அறை முழுக்க பொருள்கள் நிரம்பி வழிந்தால் அங்கே வேலை செய்ய முடியுமா? அந்த வேலையை முடிக்க ஏகப்பட்ட நேரம் தேவைப்படும்; எரிச்சலாகவும் இருக்கும். ஆனால், அதே வேலையை அதிக பொருள்களோ, குப்பைகளோ இல்லாத இடங்களில் சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்துவிட முடியும். மேலுமாக, அதிகமதிகமான பொருள்களை வாங்கிக் குவிக்கும்போது, தேவையான பொருளைக் கண்டுபிடிப்பதற்கு அதிக நேரமாகும்.
“பொருள்களும் குப்பைகளும் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் அவற்றை எடுத்து வைப்பது, மிதித்துவிடாமல் ஒதுங்கிச் செல்வது, வழியில் கிடப்பதை நகர்த்தி வைப்பது” போன்றவற்றை செய்வதிலேயே சுத்தம் செய்யும் நேரத்தில் கிட்டத்தட்ட பாதி நேரம் வீணாகிறது என்று இல்லப் பராமரிப்பு வல்லுநர்கள் சொல்கிறார்கள். வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும் சூழ்நிலை பெரும்பாலும் இதேமாதிரிதான் இருக்கிறது. உங்கள் நேரத்தைச் சிறந்த விதத்தில் பயன்படுத்த விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் சுற்றுப்புறத்தை உன்னிப்பாக கவனியுங்கள். தேவையற்ற பொருள்கள் இடத்தை அடைத்துக்கொண்டு, உங்களை நகர விடாமல் செய்கிறதா? எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் நேரத்தை வீணடிக்கிறதா? அப்படியென்றால், தேவையற்ற பொருள்களை அகற்றுங்கள்.
தேவையற்ற பொருள்களை தூக்கிப்போடுவது சுலபம் அல்ல. ஏனெனில், தேவையில்லாத ஆனால் மனதுக்குப் பிடித்த பொருள்களைத் தூக்கியெறிவதென்பது கிட்டத்தட்ட ஒரு நல்ல நண்பரை இழப்பதுபோன்ற வேதனையை ஏற்படுத்தலாம். ஆகவே, ஒரு பொருளை வைத்திருப்பதா தூக்கியெறிவதா என்று எப்படித் தீர்மானிக்கலாம்? சிலர் பின்வரும் முறையைக் கடைப்பிடிக்கிறார்கள்: ஒரு வருடமாக எந்தப் பொருளையாவது பயன்படுத்தவில்லையா, அதைத் தூக்கியெறிந்து விடுங்கள். ஒரு வருடத்திற்குப் பின்னும் அதைத் தூக்கியெறிய மனமில்லையா? அதை ஆறு மாதத்திற்குக் கிடப்பில் போடுங்கள். அடுத்தமுறை அதைப் பார்க்கும்போது, ஒன்றரை வருடமாக அதைப் பயன்படுத்தவில்லையே என்பது உங்கள் நினைவுக்கு வரும். பின்னர் அதற்கு பிரியாவிடை கொடுப்பது சுலபமாக இருக்கலாம். எப்படியானாலும், தேவையற்ற பொருள்களைக் குறைப்பதும், நேரத்தைச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவதுமே நம் குறிக்கோள்.
உண்மையில் தேவையற்ற பொருள்கள் ஒருவருடைய வீட்டிலோ வேலை செய்யும் இடத்திலோ மட்டும்தான் இருக்குமென சொல்லமுடியாது. “உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும்” ‘தேவனுடைய வசனத்தை நெருக்கிப் போட்டு’ ஒரு நபரை நற்செய்தியை ஏற்றுக்கொள்வதில் ‘பலனற்றுப் போகச்’ செய்யலாம் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 13:22) அளவுக்கதிகமான அலுவல்களினாலும் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேடுவதினாலும் ஒரு நபர் தன் வாழ்க்கையை அனாவசியமான காரியங்களால் நிரப்பிவிடலாம். அதனால், மிக முக்கியமான ஆன்மீகக் காரியங்களில் தொடர்ந்து ஈடுபட நேரத்தை கண்டுபிடிப்பது அவருக்கு கடினமாகிவிடலாம். வாழ்க்கையில் சமநிலையையும் இழந்துவிடலாம். விளைவு? ஆன்மீக ரீதியில் அவர் பின்தங்கிவிடலாம். முடிவில், கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் புதிய உலகில் பிரவேசிக்க முடியாமலும் போகலாம். அங்கே உண்மையான திருப்தியையும் சந்தோஷத்தையும் அளிக்கும் காரியங்களை என்றென்றுமாக செய்வதற்கான வாய்ப்பை அவர் இழந்துவிடலாம்.—ஏசாயா 65:17-24; 2 பேதுரு 3:13.
வேலை, வீடு, கார், பொழுதுபோக்கு, சுற்றுலா பயணங்கள், உடற்பயிற்சி, சமுதாய நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்பான வேலைகளையோ உங்களுக்கு ஆர்வமூட்டும் மற்ற வேலைகளையோ கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டுமென நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் செய்ய நேரம் கிடைக்காமல் அடிக்கடி தடுமாறுகிறீர்களா? அப்படியென்றால், உங்கள் வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் அனாவசியமான காரியங்களைக் குறைப்பது பற்றிச் சிந்திக்க இதுவே சரியான நேரம். அப்போதுதான், ஆன்மீகக் காரியங்களில் உங்களால் அதிக நேரம் செலவிட முடியும்.
காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. உண்மையில், ஒரேசீராகப் பாயும் ஆற்றைப்போல காலம் தொடர்ந்து முன்னோக்கி ஓடுகிறது. அதைத் திருப்பவோ சேமிக்கவோ முடியாது; ஒருமுறை போனது போனதுதான். என்றாலும், நேரத்தை நம் பிடிக்குள் கொண்டுவர முடியும். அதை எப்படிச் செய்வது? பைபிள் கொடுக்கும் சில எளிமையான நியமங்களைப் பின்பற்றி, சில நடைமுறையான படிகளை எடுப்பதன் மூலம் அதைச் செய்யலாம். எதற்காக? நமக்கு முடிவில்லா நன்மைகளை அளித்து, அதேசமயம், “தேவனுக்கு மகிமையும் துதியும்” கொண்டுவரும் “அதிமுக்கியமான காரியங்களை” செய்வதற்காக.—பிலிப்பியர் 1:10, 11, NW.
[பக்கம் 8, 9-ன் படம்]
வேகமாய் பாய்ந்தோடும் நதியைப் போலவே நேரத்தையும் பயனுள்ள காரியங்களைச் செய்ய பயன்படுத்தலாம்
[பக்கம் 9-ன் படம்]
பரீட்சைக்குப் படிக்க அவளுக்கு எது மிகச் சரியான நேரம்?
[பக்கம் 10-ன் படம்]
பொருள்கள் தாறுமாறாக கிடக்கும் இடத்தில் வேலை செய்யும்போது நேரம் விரயமாகிறது, எரிச்சல் ஏற்படுகிறது