மனைவிகளே—உங்கள் கணவர்களுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுங்கள்
‘மனைவிகளே, . . . உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.’—எபேசியர் 5:22.
1. கணவரை மதித்து நடப்பது ஏன் பெரும்பாலும் கடினமாக இருக்கிறது?
அநேக நாடுகளில் மணமகள் திருமண உறுதிமொழியை எடுக்கிறபோது, கணவருக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறாள். என்றாலும், பெரும்பாலான கணவர்கள் மனைவிகளை நடத்தும் விதமே அந்த உறுதிமொழிக்கு இசைய வாழ்வது சுலபமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. இருந்தாலும், அதற்கு ஓர் இனிய ஆரம்பம் இருந்தது. முதல் மனிதனாகிய ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றைக் கடவுள் எடுத்து பெண்ணை உருவாக்கினார். “என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்” என்று ஆதாம் வியந்து கூறினான்.—ஆதியாகமம் 2:19-23.
2. சமீப காலங்களில் திருமணத்தில் பெண்களின் பங்கும் மனப்பான்மையும் எவ்வாறு மாறியிருக்கின்றன?
2 நல்ல ஆரம்பம் இருந்தாலும், 1960-களின் தொடக்கத்தில் ஐக்கிய மாகாணங்களில் பெண்களின் விடுதலை என்றழைக்கப்பட்ட இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது; இது, ஆண் ஆதிக்கத்தின் சங்கிலியை உடைத்து அதன் பிடியிலிருந்து விடுபட பெண்கள் எடுத்த முயற்சியாகும். அந்தச் சமயத்தில், ஒரு மனைவி தன்னுடைய குடும்பத்தை அம்போவென தவிக்கவிட்டுச் சென்றாள் என்றால் கணவர்களில் சுமார் 300 பேர் தங்களுடைய குடும்பங்களை நட்டாற்றில் விட்டுச் சென்றார்கள். 1960-களின் முடிவில் இந்த விகிதம் சுமார் 100-க்கு ஒன்று என மாறியது. இப்போது, ஆண்களுக்குச் சமமாகக் குடிப்பது, புகைப்பது ஒழுக்கயீனமாக நடந்துகொள்வது எனப் பெண்களும் போட்டி போட உறுதிபூண்டிருப்பதுபோல் தெரிகிறது. அதனால் அவர்கள் சந்தோஷமாய் இருக்கிறார்களா? இல்லை. சில நாடுகளில், திருமணம் செய்துகொள்பவர்களில் சுமார் பாதிப்பேர் விவாகரத்து செய்கிறார்கள். தங்களுடைய மணவாழ்வை முன்னேற்றுவிக்க சில பெண்கள் எடுத்த முயற்சி, சூழ்நிலையை மேம்படுத்தியிருக்கிறா அல்லது மோசமாக்கியிருக்கிறதா?—2 தீமோத்தேயு 3:1-5.
3. திருமணத்தைப் பாதிக்கிற அடிப்படை பிரச்சினை என்ன?
3 என்ன அடிப்படை பிரச்சினை இருக்கிறது? “பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய” கலகக்கார தூதனால் ஏவாள் ஏமாற்றப்பட்டது இந்தப் பிரச்சினைக்கு ஓரளவு காரணமாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9; 1 தீமோத்தேயு 2:13, 14) கடவுள் கற்பிக்கிறதை சாத்தான் திரித்துவிட்டிருக்கிறான். உதாரணமாக, திருமணத்தைக் கெடுபிடியானதாகவும் கொடுமையானதாகவும் சாத்தான் தோன்றச் செய்திருக்கிறான். அவன் ஆளும் இந்த உலகத்தின் மக்கள் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி கடவுளுடைய அறிவுரைகள் பாரபட்சமானவை, நம் காலத்துக்குப் பொருந்தாதவை என்ற வதந்திகளை ஊக்குவிக்கிறான். (2 கொரிந்தியர் 4:3, 4) எனினும், மணவாழ்வில் பெண்ணின் பங்கைப்பற்றி கடவுள் சொல்கிறதை எதார்த்தத்தோடு ஆராய்ந்து பார்த்தால், கடவுளுடைய வார்த்தை எவ்வளவு ஞானமானதாகவும் நடைமுறையானதாகவும் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வோம்.
திருமணம் செய்கிறவர்களின் கவனத்திற்கு
4, 5. (அ) திருமணத்தைப் பற்றி யோசிக்கும்போது ஒரு பெண் ஏன் கவனமாய் இருக்க வேண்டும்? (ஆ) திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கும் முன் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்?
4 பைபிள் ஓர் எச்சரிக்கையைத் தருகிறது. சாத்தான் ஆளுகிற இந்த உலகத்தில் மணவாழ்வில் வெற்றி காண்பவர்கள்கூட “உபத்திரவப்படுவார்கள்” என அது சொல்கிறது. அதனால், திருமணத்தைக் கடவுள் ஏற்பாடு செய்திருந்தாலும் அதில் அடியெடுத்து வைப்பவர்களை பைபிள் எச்சரிக்கிறது. கணவன் இறந்து போனதால் மறுமணம் செய்துகொள்வதற்கு விடுதலையாயிருக்கும் ஒரு பெண்ணைப்பற்றி பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் பைபிள் எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள்.” மேலும், ‘ஏற்றுக்கொள்ள வல்லவர்கள்’ திருமணம் செய்யாமலேயே இருந்துவிடும்படி இயேசுவும் சிபாரிசு செய்தார். எனினும், திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர், “கர்த்தருக்குட்பட்ட” ஒருவரையே, அதாவது ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட கடவுளுடைய வணக்கத்தாரையே தேர்ந்தெடுக்க வேண்டும்.—1 கொரிந்தியர் 7:28, 36-40; மத்தேயு 19:10-12.
5 ஒரு பெண் யாரை மணம் செய்துகொள்ளப்போகிறாள் என்பதற்கு விசேஷ கவனம் செலுத்த வேண்டும்; ஏனெனில் பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய [கணவனுடைய] நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்.” அவன் இறந்துபோனால் அல்லது பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு தம்பதியர் விவாகரத்து செய்திருந்தால் மட்டுமே அவள் “புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.” (ரோமர் 7:2, 3) கண்டதும் ஏற்படுகிற கவர்ச்சி ஒருவேளை காதலிப்பதற்குப் போதுமானதாக இருக்கலாம்; ஆனால், மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு அது சரியான அஸ்திவாரமாய் அமைவதில்லை. எனவே, ஓர் இளம் பெண் தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்வது அவசியம்: ‘இந்த ஆணுடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஓர் ஏற்பாட்டுக்குள் வர நான் விரும்புகிறேனா?’ திருமணத்திற்கு முன்பு இந்தக் கேள்வியை எண்ணிப் பார்க்க வேண்டும், அதற்குப் பின்பு அல்ல.
6. இன்று பெரும்பாலான பெண்கள் என்ன தீர்மானத்தை எடுக்க முடியும், அது ஏன் மிக முக்கியமானது?
6 இன்று அநேக நாடுகளில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள ஒருவர் விருப்பம் தெரிவிக்கையில் அவரை ஏற்றுக்கொள்கிற அல்லது நிராகரிக்கிற உரிமை ஒரு பெண்ணுக்கு இருக்கிறது. என்றாலும், ஞானமான தீர்மானம் எடுப்பது ஒரு பெண்ணுக்கு எதையும்விட மிகக் கடினமாக இருக்கலாம்; ஏனெனில், மணவாழ்வில் அன்னியோன்னியமும் அன்பும் கிடைக்குமென்ற பலமான ஆசை அவளுக்கு இருப்பதால் அது கடினமாக இருக்கலாம். ஓர் எழுத்தாளர் இவ்வாறு சொன்னார்: “திருமணம் செய்வதாக இருந்தாலும்சரி மலையேறுவதாக இருந்தாலும்சரி, ஒரு காரியத்தைச் செய்வதற்கு எந்தளவு ஆசைப்படுகிறோமோ அந்தளவு தவறான தீர்மானம் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. நமக்குச் சாதகமான விஷயங்களுக்கு மட்டுமே கவனம்செலுத்த விரும்புவோம்.” மலையேறும் ஒருவர் தவறான தீர்மானம் எடுப்பது அவருடைய உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்; அதைப்போலவே, ஞானமற்ற விதத்தில் மணத் துணையைத் தேர்ந்தெடுப்பதும் ஆபத்தையே ஏற்படுத்தலாம்.
7. ஒரு மணத்துணையைத் தேடுவதுபற்றி என்ன ஞானமான ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிறது?
7 தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்கிற ஓர் ஆணின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை ஒரு பெண் கவனமாகச் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். பல வருடங்களுக்கு முன்னால் இந்தியாவைச் சேர்ந்த ஓர் இளம் பெண் தன்னடக்கத்துடன் இவ்வாறு கூறினாள்: “நம்முடைய பெற்றோர் வயதில் பெரியவர்கள், ஞானமுள்ளவர்கள்; நம்மைப் போலச் சுலபமாக ஏமாந்துவிட மாட்டார்கள். . . . நான் எளிதில் தவறு செய்துவிட வாய்ப்பிருக்கிறது.” பெற்றோரும் மற்றவர்களும் செய்யும் உதவி முக்கியமானது. இளைஞர்கள் தங்களுடைய வருங்கால மணத்துணையின் பெற்றோர்களை அறிந்து கொள்ளவும், அதேபோல பெற்றோரிடமும் மற்ற குடும்பத்தாரிடமும் அந்த மணத்துணை எப்படிப் பழகுகிறார் என்று கூர்ந்து கவனிக்கவும் ஞானமுள்ள ஓர் ஆலோசகர் பல ஆண்டுகளாக இளைஞர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
இயேசு எவ்வாறு கீழ்ப்பட்டிருந்தார்
8, 9. (அ) கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருப்பதை இயேசு எவ்வாறு கருதினார்? (ஆ) கீழ்ப்பட்டிருப்பதன் மூலம் என்ன நன்மையை அடையலாம்?
8 கீழ்ப்பட்டிருப்பது சவால்மிக்கதாய் இருந்தாலும் இயேசுவைப்போலவே பெண்களும் அதை மதிப்புக்குரியதாய் கருத முடியும். கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருப்பதில் துன்பமும் வாதனையின் கழுமரத்தில் மரிப்பதும் உட்பட்டிருந்தபோதிலும் அவருக்குக் கீழ்ப்பட்டிருப்பதில் இயேசு மகிழ்ச்சி கண்டார். (லூக்கா 22:41-44; எபிரெயர் 5:7, 8; 12:3) பெண்கள் இயேசுவை தங்களுக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்; “ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாறென்றும்” பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 11:3) எனினும், கவனத்திற்குரிய விஷயம் என்னவெனில், மணமான பிறகுதான் பெண்கள் ஆணின் தலைமைத்துவத்தின் கீழ் வருகிறார்கள் என்பது இல்லை.
9 பெண்கள், மணமானவர்களாக இருந்தாலும்சரி மணமாகாதவர்களாக இருந்தாலும்சரி கிறிஸ்தவ சபைகளைக் கண்காணிக்கும் ஆன்மீகத் தகுதிபெற்ற ஆண்களின் தலைமைத்துவத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமென பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 2:12, 13; எபிரெயர் 13:17) இந்த விஷயத்தில் பெண்கள் கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்றும்போது அவருடைய அமைப்பு சார்ந்த ஏற்பாட்டில் தேவதூதர்களுக்கு முன்மாதிரி வைக்கிறார்கள். (1 கொரிந்தியர் 11:8-10) கூடுதலாக, வயதில் முதிர்ந்த மணமான பெண்கள் தங்களுடைய நல்ல முன்மாதிரி மூலமும் பயனுள்ள ஆலோசனைகள் மூலமும் இளம் பெண்கள் ‘தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களாயிருப்பதற்குக்’ கற்பிக்கலாம்.—தீத்து 2:3-5.
10. கீழ்ப்படிதலைக் காட்டுவதில் இயேசு எவ்வாறு முன்மாதிரி வைத்தார்?
10 பொருத்தமான கீழ்ப்படிதலைக் காட்டுவதன் மதிப்பை இயேசு உணர்ந்திருந்தார். ஒரு சமயத்தில், தமக்காகவும் பேதுருவுக்காகவும் அதிகாரிகளிடம் வரிகளைச் செலுத்த வேண்டுமென பேதுருவிடம் இயேசு சொன்னார். அப்படிச் செலுத்துவதற்கு வரிப்பணத்தையும்கூட அவர் பேதுருவிடம் கொடுத்தார். பிறகு பேதுரு, “நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்” என்று எழுதினார். (1 பேதுரு 2:13; மத்தேயு 17:24-27) கீழ்ப்பட்டிருப்பதில் கிறிஸ்து வைத்த மிகச் சிறந்த முன்மாதிரியைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர் . . . தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், . . . கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”—பிலிப்பியர் 2:5-8.
11. சத்தியத்தில் இல்லாத கணவர்களுக்கும் கீழ்ப்படியும்படி மனைவிகளை ஏன் பேதுரு உற்சாகப்படுத்தினார்?
11 இந்த உலகத்தின் கண்டிப்புமிக்க, அநீதியான அதிகாரிகளுக்கும்கூட கீழ்ப்பட்டிருக்குமாறு கிறிஸ்தவர்களை பேதுரு உற்சாகப்படுத்தும்போது இவ்வாறு சொன்னார்: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.” (1 பேதுரு 2:21) இயேசு எந்தளவு துன்பங்களை அனுபவித்தார் என்பதையும் எப்படிக் கீழ்ப்படிதலோடு சகித்தார் என்பதையும் விளக்கிய பிறகு, சத்தியத்தில் இல்லாத கணவர்களையுடைய மனைவிகளை பேதுரு இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.”—1 பேதுரு 3:1, 2.
12. இயேசு கீழ்ப்பட்டிருந்ததால் என்ன நன்மைகள் கிடைத்தன?
12 கேலிப் பேச்சு, வசைப் பேச்சு ஆகியவற்றின் மத்தியிலும் கீழ்ப்படிந்திருப்பது பலவீனத்திற்கு அடையாளமாக ஒருவேளை கருதப்படலாம். ஆனால், இயேசு அப்படிக் கருதவில்லை. “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும்” இருந்தார் என்று பேதுரு எழுதினார். (1 பேதுரு 2:23) இயேசுவுக்கு அருகே கழுமரத்தில் அறையப்பட்ட கள்வன், தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்த நூற்றுக்கு அதிபதி உள்பட இயேசு பட்ட துன்பத்தைக் கண்ணாரக் கண்ட சிலர் அவர்மீது ஓரளவாவது விசுவாசம் வைத்தார்கள். (மத்தேயு 27:38-44, 54; மாற்கு 15:39; லூக்கா 23:39-43) அதேபோல, சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத, துன்புறுத்துகிற கணவர்கள்கூட தங்களுடைய மனைவிகளின் கீழ்ப்படிதலுள்ள நடத்தையைப் பார்த்து கிறிஸ்தவர்களாக மாறுவார்கள் என்று பேதுரு சுட்டிக்காட்டினார். இப்படி இன்றும் சம்பவிப்பதற்கான அத்தாட்சியை நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.
மனைவிகள் கணவர்களை எவ்வாறு ஆதாயப்படுத்திக்கொள்ளலாம்
13, 14. சத்தியத்தில் இல்லாத கணவர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பது எவ்வாறு பயன் அளித்திருக்கிறது?
13 சத்தியத்தை ஏற்றுக்கொண்ட மனைவிமார்கள் கிறிஸ்துவைப் போன்ற நடத்தையின் மூலம் கணவர்களை ஆதாயப்படுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டில் ஒரு கணவர் தன்னுடைய கிறிஸ்தவ மனைவியைப்பற்றி இவ்வாறு சொன்னார்: “அவளை நான் கொடூரமாக நடத்தினேன் என்றே நினைக்கிறேன். அவளோ என்னிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டாள். ஒருபோதும் என்னை மட்டம்தட்டவில்லை. அவளுடைய மத நம்பிக்கையை என்னிடம் திணிக்க முயற்சி செய்யவில்லை. அன்போடு என்னைக் கவனித்துக்கொண்டாள். மாநாட்டுக்கு சென்றபோது, முன்கூட்டியே எனக்கு உணவு தயாரித்து வைப்பதற்கும் வீட்டு வேலைகளை முடிப்பதற்கும் கடினமாக வேலை செய்தாள். அவளுடைய நடத்தையைப் பார்த்து பைபிளில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. விளைவு? இப்போது நான் யெகோவாவின் சாட்சியாக இருக்கிறேன்!” ஆம், அவர் தன் மனைவியின் நடத்தையால் “போதனையின்றி” ஆதாயப்படுத்திக்கொள்ளப்பட்டார்.
14 பேதுரு வலியுறுத்தியதுபோல, ஒரு மனைவி என்ன சொல்கிறாள் என்பதல்ல என்ன செய்கிறாள் என்பதே நல்ல பலன்களைத் தருகிறது. இது, பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தீர்மானித்த ஒரு மனைவியின் உதாரணத்தின் மூலம் தெளிவாக விளக்கப்பட்டது. “அக்னஸ், அந்த வாசல் வழியாக வெளியே போனாயென்றால், திரும்பி வரவே வராதே!” என்று அவளுடைய கணவர் கத்தினார். அவள், “அந்த வாசல்” வழியாகப் போகாமல் வேறொரு வாசல் வழியாகச் சென்றாள். அடுத்த முறை கூட்டத்திற்குச் செல்ல வேண்டிய தினத்தில், “நீ திரும்பி வரும்போது நான் இருக்க மாட்டேன்” என்று பயமுறுத்தினார். அதேபோல் திரும்பி வரும்போது அவர் வீட்டில் இல்லை, மூன்று நாட்கள் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை. அவர் மீண்டும் திரும்பி வந்தபோது அவள் கனிவோடு, “ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டாள். யெகோவாவுக்குக் காட்டும் பக்திவைராக்கியத்தை அக்னஸ் குறைத்துக்கொள்ளவே இல்லை. முடிவில் அவளுடைய கணவர் பைபிள் படிப்புக்குச் சம்மதித்தார், அவருடைய வாழ்க்கையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். பிறகு, ஒரு கண்காணியாக அநேக பொறுப்புகளைக் கையாண்டார்.
15. கிறிஸ்தவ மனைவிகளுக்கு என்ன ‘அலங்காரம்’ சிபாரிசு செய்யப்படுகிறது?
15 அப்போஸ்தலன் பேதுரு சிபாரிசு செய்த ‘அலங்காரத்தை’ மேற்குறிப்பிடப்பட்ட மனைவிகள் வெளிக்காட்டினார்கள்; ஆனால், ‘மயிரைப் பின்னுவதற்கோ,’ “உயர்ந்த வஸ்திரங்களை” உடுத்துவதற்கோ அளவுக்கதிகமாக கவனம் செலுத்துவதை அவர் சிபாரிசு செய்யவில்லை. மாறாக பேதுரு, “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய [அதாவது, மனப்பான்மையாகிய] இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது” என்று கூறினார். இத்தகைய மனப்பான்மை, சரியாகப் பேசும் விதத்திலும் பொருத்தமான நடத்தையிலும் வெளிப்படும்; ‘நீயா நானா பார்த்துவிடலாம்’ என்ற பாணியிலோ அதிகார தொனியிலோ அல்ல. இப்படியாக, கிறிஸ்தவ மனைவி தன்னுடைய கணவருக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுகிறாள்.—1 பேதுரு 3:3, 4.
பார்த்துக் கற்றுக்கொள்ள முன்மாதிரிகள்
16. கிறிஸ்தவ மனைவிகளுக்குச் சாராள் என்ன வழிகளில் முன்மாதிரியாக இருக்கிறாள்?
16 பேதுரு இவ்வாறு எழுதினார்: “பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.” (1 பேதுரு 3:5) யெகோவாவுடைய ஆலோசனைக்குச் செவிசாய்ப்பது அவரை மகிழ்விக்கும் என்பதையும் முடிவில் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கும் நித்திய ஜீவன் என்ற பரிசுக்கும் வழிசெய்யும் என்பதையும் அத்தகைய பெண்கள் அறிந்திருந்தார்கள். ஆபிரகாமின் அழகிய மனைவியான சாராளைப்பற்றி பேதுரு குறிப்பிடும்போது, “ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்” என்று சொல்கிறார். தூர தேசத்தில் போய் சேவை செய்யும்படி கடவுளிடமிருந்து பொறுப்பைப் பெற்ற தேவபயமுள்ள தனது கணவருக்குச் சாராள் ஆதரவளித்தாள். அவள் சொகுசான வாழ்க்கையைத் தியாகம் செய்தாள், அவளுடைய உயிரும்கூட ஆபத்தில் இருந்தது. (ஆதியாகமம் 12:1, 10-13) சாராளுடைய தைரியமிக்க முன்மாதிரியின் நிமித்தம் பேதுரு இவ்வாறு சிபாரிசு செய்தார்: “நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.”—1 பேதுரு 3:6.
17. கிறிஸ்தவ மனைவிகளுக்கு முன்மாதிரியாக அபிகாயிலைப் பேதுரு ஏன் மனதில் வைத்திருந்திருப்பார்?
17 கடவுள் மேல் நம்பிக்கை வைத்த இன்னொரு தைரியமிக்க பெண் அபிகாயில்; இவளையும் பேதுரு மனதில் வைத்திருந்திருப்பார். அவள் “மகா புத்திசாலி,” அவள் கணவன் நாபாலோ, “முரடனும் துராகிருதனுமாயிருந்தான்.” தாவீதுக்கும் அவரோடிருந்தவர்களுக்கும் நாபால் உதவிசெய்ய மறுத்தபோது, அவனையும் அவனுடைய வீட்டாரெல்லாரையும் ஒழித்துக்கட்ட தாவீதின் ஆட்கள் தயாரானார்கள். ஆனால், அபிகாயில் தன்னுடைய வீட்டாரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்தாள். அவள் தேவையான உணவுப் பொருள்களை கழுதைகளின்மேல் ஏற்றிச் சென்றாள். போகும்வழியில் தாவீதையும் ஆயுதம்தரித்த அவருடைய ஆட்களையும் சந்தித்தாள்; தாவீதைக் கண்டபோது அவள் கழுதையை விட்டுக் கீழிறங்கி, அவர் பாதத்தில் விழுந்து, ஆத்திரப்படாமல் இருக்கும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். தாவீது உள்ளம் உருகினார். “உன்னை இன்றைய தினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக” என்று கூறினார்.—1 சாமுவேல் 25:2-33.
18. இன்னொரு ஆண் காதல் வலை வீசும்போது மனைவிகள் யாருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும், ஏன்?
18 மனைவிகளுக்கு இன்னொரு நல்ல முன்மாதிரி இளம் சூலமியப் பெண்; திருமணம் செய்துகொள்வதாக தான் வாக்குறுதி கொடுத்திருந்த தாழ்மையுள்ள இடையனுக்கு அவள் உண்மையுள்ளவளாய் இருந்தாள். செல்வச் செழிப்புமிக்க ராஜா காதல் வலை வீசினாலும்கூட அந்த இடையன்மேல் அவள் வைத்திருந்த அன்பு அசைக்க முடியாததாய் இருந்தது. தன்னுடைய இளம் இடையன்மீது வைத்திருந்த உணர்ச்சிகளை இவ்வாறு கொட்டுகிறாள்: “நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; . . . திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது.” (உன்னதப்பாட்டு 8:6, 7) திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்ட அனைவரும் தங்களுடைய கணவர்களுக்கு உண்மைத்தன்மையோடு இருக்கவும் ஆழ்ந்த மரியாதை காட்டவும் தீர்மானமாய் இருப்பார்களாக.
கூடுதலான தெய்வீக ஆலோசனை
19, 20. (அ) என்ன காரணத்திற்காக மனைவிகள் தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்? (ஆ) மனைவிகளுக்காக என்ன அருமையான முன்மாதிரி கொடுக்கப்பட்டிருக்கிறது?
19 கடைசியாக, இக்கட்டுரைக்கு அடிப்படையாய் அமைந்த வேதவசனத்தின் சூழமைவைக் கவனியுங்கள்: ‘மனைவிகளே, . . . உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.’ (எபேசியர் 5:22) இந்தக் கீழ்ப்படிதல் ஏன் அவசியம்? ஏனெனில், அடுத்த வசனம் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறது: “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.” எனவே, மனைவிகள் பின்வருவதைச் செய்ய தூண்டப்படுகிறார்கள்: “சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.”—எபேசியர் 5:23, 24, 33.
20 இந்தக் கட்டளைக்கு மனைவிகள் கீழ்ப்படிவதற்கு, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அடங்கிய கிறிஸ்துவின் சபையைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவும் அதன் முன்மாதிரியைப் பின்பற்றவும் வேண்டும். 2 கொரிந்தியர் 11:23-28 வசனங்களைத் தயவுசெய்து வாசியுங்கள்; அதன்மூலம், தன்னுடைய தலைவரான இயேசு கிறிஸ்துவுக்கு விசுவாசத்தோடு இருக்க சபையின் ஓர் அங்கத்தினரான அப்போஸ்தலன் பவுல் எதையெல்லாம் சகித்தார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பவுலைப்போல, மனைவிகளும் சபையிலுள்ள மற்றவர்களும் இயேசுவுக்கு உண்மையாகக் கீழ்ப்படிய வேண்டும். தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதன் மூலம் மனைவிகள் இதை வெளிக்காட்டுகிறார்கள்.
21. தங்களுடைய கணவர்களுக்கு எப்போதும் கீழ்ப்படிய மனைவிகளுக்கு எவை தூண்டுதல் அளிக்கலாம்?
21 இன்று பெரும்பாலான மனைவிகள் கீழ்ப்பட்டிருப்பதை இம்சையாகக் கருதினாலும், அதனால் வரும் நன்மைகளை ஞானமுள்ள ஒரு மனைவி கவனத்தில் வைக்கிறாள். உதாரணமாக, கணவர் சத்தியத்தில் இல்லாதிருக்கையில், கடவுளுடைய சட்டங்களையோ நியமங்களையோ மீறாத எல்லாக் காரியத்திலேயும் கணவருடைய தலைமைத்துவத்திற்குக் கீழ்ப்பட்டிருப்பது, பெரும்பாலும் ‘தன்னுடைய கணவரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்’ அருமையான வாய்ப்பை அளிக்கிறது. (1 கொரிந்தியர் 7:13, 16) மேலுமாக, யெகோவா தேவன் தன்னுடைய வாழ்க்கையை அங்கீகரிக்கிறார் என்று அறிவதில் அவள் திருப்தி காணலாம்; தம்முடைய அன்பான குமாரனின் முன்மாதிரியைப் பின்பற்றுவதற்காக யெகோவா அவளை நிறைவாய் ஆசீர்வதிப்பார்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கணவருக்கு மரியாதை காட்டுவது ஒரு மனைவிக்கு ஏன் சவாலாக இருக்கலாம்?
• திருமணம் செய்துகொள்ள ஒருவர் விருப்பம் தெரிவிக்கையில் ஒரு பெண் ஏன் மிகக் கவனமாக இருக்க வேண்டும்?
• மனைவிகளுக்கு இயேசு எப்படி நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறார், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கலாம்?
[பக்கம் 19-ன் படம்]
திருமணம் செய்துகொள்ள ஒருவர் விருப்பம் தெரிவிக்கையில் ஒரு பெண் ஏன் மிகக் கவனமாக இருக்க வேண்டும்?
[பக்கம் 21-ன் படம்]
அபிகாயில் போன்ற பைபிள் கதாபாத்திரங்களில் இருந்து மனைவிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?