‘சத்திய வசனத்தை சரியாக கையாளுதல்’
கடவுளுடைய வார்த்தை, வெற்றிகரமான ஒரு வாழ்க்கைக்கு மிக முக்கியமாக தேவைப்படும் நியமங்கள் அடங்கிய களஞ்சியமாக உள்ளது. அது கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும் ஒரு ஊழியனுக்கு உதவிசெய்ய முடியும். (2 தீமோத்தேயு 3:16, 17) இருப்பினும், கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த வழிகாட்டியிலிருந்து முழுமையாக பயனடைவதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்த புத்திமதியை நாம் பின்பற்ற வேண்டும்: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.”—2 தீமோத்தேயு 2:15.
கடவுளுடைய வார்த்தை, மற்ற காரியங்களோடுகூட ஊட்டச்சத்துள்ள பால், பலமான ஆகாரம், புத்துணர்ச்சியளிக்கும் மற்றும் தூய்மையாக்கும் தண்ணீர், ஒரு கண்ணாடி மற்றும் கூர்மையான பட்டயம் ஆகியவற்றுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதங்கள் குறிப்பாக எடுத்துக்காட்டும் அர்த்தங்களை விளங்கிக்கொள்வது, ஒரு ஊழியர் பைபிளைத் திறம்பட்டவிதத்தில் உபயோகிப்பதற்கு உதவுகிறது.
கடவுளுடைய வார்த்தையாகிய பாலை அளித்தல்
புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தைகளுக்குத் தேவைப்படும் உணவு பால் ஆகும். குழந்தை வளர்ந்து வருகையில் படிப்படியாக பலமான ஆகாரம் அதன் உணவுத்திட்டத்துக்குள் புகுத்தப்படுகிறது, ஆனால் ஆரம்பத்தில் அது பாலை மட்டுமே ஜீரணிக்கமுடியும். கடவுளுடைய வார்த்தையைப் பற்றி சிறிதளவே அறிந்திருப்பவர்கள் அநேக அம்சங்களில் குழந்தைகளைப் போல் இருக்கின்றனர். ஒரு நபர் கடவுளுடைய வார்த்தையில் புதிதாக அக்கறை காண்பித்தாலும்சரி அல்லது சில காலமாக அதைப் பற்றி அறிந்திருந்தாலும்சரி, பைபிள் சொல்லும் காரியங்களின் பேரில் அவருக்கு வெறும் அடிப்படையான புரிந்துகொள்ளுதல் மட்டுமே இருந்தால், அவர் ஒரு ஆவிக்குரிய குழந்தையாக இருக்கிறார். அவருக்கு எளிதில் ஜீரணமாகும் ஊட்டச்சத்து—ஆவிக்குரிய “பால்”—தேவைப்படுகிறது. அவர் கடவுளுடைய வார்த்தையின் ஆழமான காரியங்களை, ‘பலமான ஆகாரத்தை’ இன்னும் ஜீரணிக்க முடியாதவராய் இருக்கிறார்.—எபிரெயர் 5:12.
கொரிந்துவில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட சபைக்கு பவுல் எழுதியபோது நிலைமை இவ்வாறுதான் இருந்தது: “நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்.” (1 கொரிந்தியர் 3:2) கொரிந்தியர்கள் முதலில் “தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை” கற்றுக்கொள்ள வேண்டியவர்களாய் இருந்தனர். (எபிரெயர் 5:12) அவர்கள் இருந்த வளர்ச்சிப்படியில், ‘தேவனுடைய ஆழங்களை’ அவர்கள் ஜீரணித்துக்கொள்ள முடிந்திருக்காது.—1 கொரிந்தியர் 2:10.
பவுலைப் போன்று, இன்று கிறிஸ்தவ ஊழியர்கள் தங்கள் ஆவிக்குரிய குழந்தைகளுக்கு ‘பாலை’ கொடுப்பதன் மூலம் அதாவது, அடிப்படை கிறிஸ்தவ கோட்பாட்டில் உறுதியாக நிலைநாட்டப்படுவதற்கு அவர்களுக்கு உதவுவதன் மூலம், தங்கள் அக்கறையை செயல்படுத்திக் காண்பிக்கின்றனர். அவர்கள் அப்படிப்பட்ட புதிய அல்லது முதிர்ச்சியற்ற நபர்களை ‘திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருப்பதற்கு’ உற்சாகப்படுத்துகின்றனர். (1 பேதுரு 2:3) புதியவர்களுக்கு தேவைப்படும் விசேஷித்த கவனத்தை அப்போஸ்தலனாகிய பவுல், தான் கண்டுணர்ந்ததாக பின்வருமாறு எழுதியபோது காண்பித்தார்: “பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.” (எபிரெயர் 5:13) கடவுளுடைய வார்த்தையின் தூய்மையான பாலை புதியவர்களுக்கும் அனுபவமில்லாதவர்களுக்கும் வீட்டு பைபிள் படிப்புகளின் மூலமும் சபையிலும் பகிர்ந்தளிக்கையில் பொறுமை, அன்பாதரவு, புரிந்துகொள்ளுதல், இரக்கம் ஆகியவை கடவுளுடைய ஊழியர்களுக்குத் தேவைப்படுகிறது.
கடவுளுடைய வார்த்தையின் பலமான ஆகாரத்தைக் கையாளுதல்
இரட்சிப்பை நோக்கி வளருவதற்கு ஒரு கிறிஸ்தவனுக்கு ‘பாலைக்’ காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. பைபிளின் அடிப்படை சத்தியங்களை தெளிவாக புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் ‘முதிர்ச்சிவாய்ந்த ஆட்களுக்கு உரித்தாயிருக்கும் பலமான ஆகாரத்தை’ எடுத்துக்கொள்ள தயாராயிருக்கிறார். (எபிரெயர் 5:14, NW) அவர் இதை எவ்வாறு செய்யலாம்? அடிப்படையில், தனிப்பட்ட படிப்பை ஒழுங்கான முறையில் செய்வதன் மூலமும் கிறிஸ்தவ கூட்டங்களில் கூட்டுறவுகொள்வதன் மூலமுமே. அப்படிப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் ஒரு கிறிஸ்தவரை ஆவிக்குரியப்பிரகாரமாய் பலமாகவும் முதிர்ச்சிவாய்ந்தவராகவும் ஊழியத்தில் திறம்பட்டவராகவும் ஆக்குவதற்கு உதவும். (2 பேதுரு 1:8) அறிவோடுகூட, யெகோவாவின் சித்தத்தைச் செய்வதும்கூட ஆவிக்குரிய உணவில் உள்ளடங்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.—யோவான் 4:34.
கடவுளுடைய ஊழியர்களுக்கு ஏற்ற வேளையில் உணவு வழங்குவதற்கென்றும் ‘தேவனுடைய அநந்த ஞானத்தை’ புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவதற்கென்றும் இன்று “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” நியமிக்கப்பட்டிருக்கிறது. யெகோவா தம்முடைய ஆவியின் மூலம் ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களை இந்த உண்மையுள்ள அடிமையின் மூலம் வெளிப்படுத்துகிறார், அது ஆவிக்குரிய “உணவை ஏற்றவேளையிலே” உண்மைத்தன்மையோடு பிரசுரித்து வருகிறது. (மத்தேயு 24:45-47, NW; எபேசியர் 3:10, 11; ஒப்பிடுக: வெளிப்படுத்துதல் 1:1, 2.) பிரசுரிக்கப்பட்டிருக்கும் அப்படிப்பட்ட ஏற்பாடுகளை ஒவ்வொரு தனிப்பட்ட கிறிஸ்தவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள உத்தரவாதமுள்ளவராய் இருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 1:3.
ஆனால் பைபிளில் உள்ள சில காரியங்கள் முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களுக்கும்கூட ‘புரிந்துகொள்ள கடினமாய்’ இருக்கின்றன. (2 பேதுரு 3:16, NW) அதிக படிப்பையும் தியானத்தையும் தேவைப்படுத்தும் கருத்துக்குழம்பியுள்ள சொற்றொடர்களும் தீர்க்கதரிசனங்களும் உவமைகளும் அதில் அடங்கியிருக்கின்றன. எனவே, கடவுளுடைய வார்த்தைக்குள் ஆழமாகத் தோண்டி எடுப்பது தனிப்பட்ட படிப்பில் உட்பட்டிருக்கிறது. (நீதிமொழிகள் 1:5, 6; 2:1-5) மூப்பர்கள் சபைக்கு போதிக்கும்போது விசேஷமாக இந்த உத்தரவாதத்தை உடையவர்களாய் இருக்கின்றனர். சபை புத்தகப் படிப்பை அல்லது காவற்கோபுர படிப்பை நடத்தினாலோ, பொதுப் பேச்சுகள் கொடுத்தாலோ அல்லது வேறு ஏதாவது கற்பிக்கும் ஸ்தானத்தில் சேவை செய்தாலோ, மூப்பர்கள் அதன் சம்பந்தமான தகவலை முழுமையாய் நன்றாக அறிந்திருக்க வேண்டும், சபைக்கு பலமான ஆவிக்குரிய ஆகாரத்தை அளிக்கையில் அவர்களுடைய ‘கற்பிக்கும் கலைக்கு’ கவனம் செலுத்த தயாராயிருக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 4:2, NW.
புத்துணர்ச்சியளித்து தூய்மையாக்கும் தண்ணீர்
கிணற்றருகே இருந்த சமாரிய பெண்ணிடம் குடிப்பதற்கு பானம் ஒன்றை தருவதாக இயேசு கூறினார், அது அவளுக்குள்ளே ‘நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாக’ ஆகும் என்று கூறினார். (யோவான் 4:13, 14; 17:3) தேவ ஆட்டுக்குட்டியின் மூலம் ஜீவனைப் பெறுவதற்கான கடவுளுடைய எல்லா ஏற்பாடுகளையும் இந்த ஜீவ-தண்ணீர் உள்ளடக்குகிறது, இந்த ஏற்பாடுகள் பைபிளில் விளக்கப்பட்டுள்ளன. அந்தத் ‘தண்ணீருக்காக’ தாகமாயிருக்கும் தனிப்பட்ட நபர்களாகிய நாம், ‘ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று ஆவியும் கிறிஸ்துவின் மணவாட்டியும் கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்கிறோம். (வெளிப்படுத்துதல் 22:17) இந்தத் தண்ணீரைக் குடிப்பது நித்திய ஜீவனை அர்த்தப்படுத்தக்கூடும்.
கூடுதலாக, பைபிள், மெய்க் கிறிஸ்தவர்களுக்கு ஒழுக்கப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரியப்பிரகாரமான தராதரங்களை வைக்கிறது. நாம் இந்த தெய்வீக தராதரங்களை பொருத்தும்போது, யெகோவாவின் வார்த்தையால் தூய்மையாக்கப்படுகிறோம், யெகோவா தேவன் வெறுக்கும் எல்லா பழக்கவழக்கங்களிலிருந்தும் நாம் ‘சுத்தமாக கழுவப்படுகிறோம்.’ (1 கொரிந்தியர் 6:9-11, NW) இதன் காரணமாக ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையில் அடங்கியிருக்கும் சத்தியம் ‘தண்ணீர் முழுக்கு’ என்று அழைக்கப்படுகிறது. (எபேசியர் 5:26) இந்த விதத்தில் கடவுளுடைய வார்த்தை நம்மை தூய்மையாக்க நாம் அனுமதிக்கவில்லையென்றால், நம்முடைய வணக்கம் அவருக்கு ஏற்கத்தகுந்ததாய் இருக்காது.
அக்கறைக்குரியவிதமாக, ‘சத்திய வசனத்தை சரியாக கையாளும்’ மூப்பர்களும்கூட தண்ணீருக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ‘வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாக’ இருக்கின்றனர் என்று ஏசாயா சொல்கிறார். (ஏசாயா 32:1, 2) ஆவிக்குரிய மேய்ப்பர்களாக தங்கள் சகோதரர்களை சென்று பார்த்து, கடவுளுடைய புத்துணர்ச்சியளிக்கும் வார்த்தையை உபயோகித்து அவர்களைப் பலப்படுத்தி வலுவூட்டக்கூடிய கட்டியெழுப்பும் ஆறுதலளிக்கும் ஆவிக்குரிய தகவலை அளிக்கும்போது அன்பான மூப்பர்கள் இந்த விவரிப்பை நிறைவேற்றுகின்றனர்.—மத்தேயு 11:28, 29.a
சபை அங்கத்தினர்கள் மூப்பர்களின் சந்திப்புகளை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். “மூப்பர்கள் எவ்வாறு தேற்றுவித்து ஆறுதலாயிருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன், யெகோவா இந்த ஏற்பாட்டை செய்திருப்பதற்காக நான் அதிக சந்தோஷப்படுகிறேன்,” என்று பானீ சொல்கிறார். விவாக துணையின்றி வாழும் லின்டா என்ற பெயருடைய தாய் எழுதுகிறார்: “மூப்பர்கள் வேதப்பூர்வமான உற்சாகத்தைக் கொடுப்பதன் மூலம் சமாளித்துக்கொள்வதற்கு எனக்கு உதவி செய்தனர். அவர்கள் செவிகொடுத்துக் கேட்டு இரக்கம் காண்பித்தனர்.” மைக்கல் சொல்கிறார்: “அக்கறை காண்பிக்கும் ஒரு அமைப்பின் பாகமாக இருப்பதை நான் உணரும்படி அவர்கள் செய்தனர்.” “நான் கடும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்த காலப்பகுதிகளை சமாளித்துக்கொள்ள மூப்பர்களின் சந்திப்புகள் எனக்கு உதவி செய்தன,” என்று மற்றொருவர் சொல்கிறார். ஆவிக்குரியப்பிரகாரமாய் ஊக்கமூட்டும் ஒரு மூப்பரின் விஜயம், குளிர்ந்த புத்துணர்ச்சியளிக்கும் ஒரு பானம் போல் உள்ளது. தங்கள் சூழ்நிலைமைக்கு வேதப்பூர்வமான நியமங்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் காண அன்பான மூப்பர்கள் அவர்களுக்கு உதவிசெய்கையில் செம்மறியாட்டைப் போன்ற நபர்கள் ஆறுதல்படுத்தப்படுகின்றனர்.—ரோமர் 1:10, 11; யாக்கோபு 5:14.
கடவுளுடைய வார்த்தையை ஒரு கண்ணாடியைப் போல் உபயோகியுங்கள்
ஒரு நபர் பலமான ஆகாரத்தை எடுத்துக்கொள்கையில், அதனுடைய நோக்கம், வெறுமனே அதன் சுவையை மட்டும் அனுபவிப்பது அல்ல. மாறாக, அவர் செயலாற்றுவதற்கு உதவக்கூடிய ஊட்டச்சத்தை அதிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவர் ஒரு பிள்ளையாக இருந்தால், பெரியவராக வளருவதற்கு அந்த உணவு உதவிசெய்யும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இதே காரியம்தான் ஆவிக்குரிய உணவின் விஷயத்திலும் உண்மையாய் உள்ளது. தனிப்பட்ட பைபிள் படிப்பு மகிழ்ச்சிகரமாய் இருக்கமுடியும், ஆனால் அதற்கான காரணம் அது மட்டுமல்ல. ஆவிக்குரிய உணவு நம்மை மாற்ற வேண்டும். அது ஆவியின் கனிகளை அடையாளம் கண்டுகொண்டு அவற்றை பிறப்பிப்பதற்கு நமக்கு உதவிசெய்கிறது. அது ‘நம்மைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள’ நமக்கு உதவுகிறது. (கொலோசெயர் 3:10; கலாத்தியர் 5:22-24) ஆவிக்குரிய உணவு முதிர்ச்சிக்கு வளரவும்கூட நமக்கு உதவிசெய்கிறது, நம்முடைய பிரச்சினைகளைக் கையாளுவதில் ஆவிக்குரிய நியமங்களைப் பொருத்துவதற்கும் மற்றவர்கள் அவர்களுடைய பிரச்சினைகளைக் கையாளுவதற்கு உதவுவதற்கும் துணைபுரிகிறது.
பைபிள் அப்படிப்பட்ட பாதிப்பை நம்மீது செலுத்துகிறது என்பதை நாம் எப்படி சொல்லலாம்? நாம் பைபிளை ஒரு கண்ணாடியைப் போல் உபயோகிக்கிறோம். யாக்கோபு சொன்னார்: “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகுங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.”—யாக்கோபு 1:22-25, NW.
நாம் கடவுளுடைய வார்த்தையை நெருக்கமாக ஆராயும்போது, நாம் அதற்குள் ‘உற்றுப்பார்க்கிறவர்களாய்’ இருக்கிறோம், கடவுளுடைய தராதரங்களின்படி நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இப்போது இருப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இதை செய்யும்போது, நாம் ‘கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும்’ ஆவோம். பைபிள் நம்மீது ஒரு சிறந்த பாதிப்பை கொண்டிருக்கும்.
கடவுளுடைய வார்த்தை ஒரு பட்டயமாக
கடைசியில், நாம் எப்படி கடவுளுடைய வார்த்தையை ஒரு பட்டயமாக உபயோகிக்கலாம் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் நாம் காணும்படி உதவிசெய்கிறார். நம்மை ‘துரைத்தனங்கள், அதிகாரங்கள், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள்’ ஆகியவற்றுக்கு எதிராக எச்சரிக்கும்போது, அவர் ‘தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று நம்மை ஊக்குவிக்கிறார். (எபேசியர் 6:12, 17) “தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற” எந்த கருத்துக்களையும் துண்டித்துப் போடுவதற்கு கடவுளுடைய வார்த்தை நாம் உபயோகிக்கக்கூடிய இன்றியமையாத ஆயுதமாய் உள்ளது.—2 கொரிந்தியர் 10:3-5.
கேள்விக்கிடமின்றி, ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது.’ (எபிரெயர் 4:12) யெகோவா தம்முடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையின் பக்கங்களின் மூலம் மனிதவர்க்கத்திடம் பேசுகிறார். மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கும் பொய்க் கோட்பாடுகளை வெளிப்படுத்துவதற்கும் அதை நன்றாக பயன்படுத்துங்கள். மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும், கட்டியெழுப்புவதற்கும், புத்துணர்ச்சியளிப்பதற்கும், ஆறுதல்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் ஆவிக்குரியப்பிரகாரமாய் பலப்படுத்துவதற்கும் அதை உபயோகியுங்கள். நீங்கள் எப்போதும் யெகோவாவின் ‘பார்வையில் பிரியமானதைச்’ செய்வதற்காக, அவர் “தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக.’’—எபிரெயர் 13:21.
[அடிக்குறிப்பு]
a “அவர்கள் இளம் செம்மறியாடுகளைப் பரிவுடன் மேய்க்கின்றனர்” என்ற தலைப்பைக்கொண்ட காவற்கோபுரம், செப்டம்பர் 15, 1993, பக்கங்கள் 20-3-ல் உள்ள கட்டுரையைப் பாருங்கள்.
[பக்கம் 31-ன் படம்]
‘சத்திய வசனத்தை சரியாக கையாளுவதன்’ மூலம் மூப்பர்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்துகின்றனர்