படிப்புக் கட்டுரை 13
யெகோவா உங்களைப் பாதுகாப்பார்—எப்படி?
“நம் எஜமான் நம்பகமானவர்; அவர் உங்களைப் பலப்படுத்துவார், பொல்லாதவனிடமிருந்து பாதுகாப்பார்.”—2 தெ. 3:3.
பாட்டு 63 என்றும் பற்றுள்ளோராய்
இந்தக் கட்டுரையில்...a
1. தன்னுடைய சீஷர்களைப் பாதுகாக்கும்படி இயேசு ஏன் ஜெபம் செய்தார்?
இயேசு இறப்பதற்கு முந்தின ராத்திரி! தன்னுடைய சீஷர்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்பதைப் பற்றி இயேசு யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் பரலோகத்துக்குப் போன பிறகு, யாரெல்லாம் யெகோவாவை வணங்குகிறார்களோ அவர்கள் எல்லாரையும் சாத்தான் கண்டிப்பாகத் தாக்குவான் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், யெகோவாவின் பாதுகாப்பு அவர்களுக்குத் தேவை என்று நினைத்தார். அவர்கள்மேல் உயிரையே வைத்திருந்ததால், “பொல்லாதவனிடமிருந்து [அவர்களை] பாதுகாக்க வேண்டுமென்றுதான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெபம் செய்தார்.—யோவா. 17:14, 15.
2. நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா கண்டிப்பாக பதில் கொடுப்பார் என்று நாம் ஏன் உறுதியாக சொல்லலாம்?
2 தன்னுடைய மகனான இயேசுவின் மேல் யெகோவா அன்பு வைத்திருந்தார். அதனால், இயேசுவின் ஜெபத்துக்குப் பதில் கொடுத்தார். நாமும் யெகோவாவைச் சந்தோஷப்படுத்தினால் நம்மேலும் அவர் அன்பு காட்டுவார். நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பார். நம்மைப் பாதுகாப்பார். நமக்கு உதவி செய்வார். யெகோவா ஓர் அன்பான குடும்பத் தலைவர்! தன்னுடைய பிள்ளைகளை அவர் பத்திரமாக பார்த்துக்கொள்வார். தனக்குக் கெட்ட பெயர் வருவதற்கு அவர் விடவே மாட்டார்.
3. இன்று நமக்கு ஏன் யெகோவாவின் பாதுகாப்பு தேவை?
3 இவ்வளவு நாள் இருந்ததைவிட இப்போது நமக்கு யெகோவாவின் பாதுகாப்பு அதிகமாகத் தேவை. ஏனென்றால், சாத்தான் பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டிருக்கிறான். அதுவும், “பயங்கர கோபத்தோடு” வந்திருக்கிறான். (வெளி. 12:12) நம்மைத் துன்புறுத்துவது, “கடவுளுக்குப் பரிசுத்த சேவை” செய்வது போல் இருப்பதாக சிலரை நம்ப வைத்திருக்கிறான். (யோவா. 16:2) கடவுள் நம்பிக்கை இல்லாத வேறுசிலர், இந்த உலகத்தோடு நாம் ஒத்துப்போகாததால் நம்மைத் துன்புறுத்துகிறார்கள். எப்படி இருந்தாலும் சரி, நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், “நம் எஜமான் நம்பகமானவர்; அவர் உங்களைப் பலப்படுத்துவார், பொல்லாதவனிடமிருந்து பாதுகாப்பார்” என்று பைபிள் சொல்கிறது. (2 தெ. 3:3) அப்படியென்றால், யெகோவா நம்மை எப்படிப் பாதுகாக்கிறார்? முழு கவசத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்! அதோடு, சகோதர சகோதரிகளையும் தேவதூதர்களையும் பயன்படுத்தி நம்மைப் பாதுகாக்கிறார்.
யெகோவா முழு கவசத்தைக் கொடுத்திருக்கிறார்
4. யெகோவா நமக்கு என்ன கொடுத்திருப்பதாக எபேசியர் 6:13-17 சொல்கிறது?
4 சாத்தானுடைய தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக யெகோவா நமக்கு முழு கவசத்தைக் கொடுத்திருக்கிறார். (எபேசியர் 6:13-17-ஐ வாசியுங்கள்.) அந்தக் கவசம் ரொம்ப வலிமையானது. ஆனால், அதன் ஒவ்வொரு பாகத்தையும் நாம் போட்டுக்கொண்டால்தான் நமக்குப் பாதுகாப்பு கிடைக்கும். ஒவ்வொரு பாகமும் எதைக் குறிக்கிறது?
5. சத்தியம் என்ற இடுப்புவாரை நாம் ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்?
5 பைபிளில் இருக்கிற உண்மைகள்தான் சத்தியம் என்ற இடுப்புவார். அதை நாம் ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்? ‘பொய்க்குத் தகப்பனாக’ இருக்கிற சாத்தான், ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஏகப்பட்ட பொய்களைப் பரப்பி இருக்கிறான். (யோவா. 8:44) இந்த “உலகம் முழுவதையும்” ஏமாற்றி இருக்கிறான். (வெளி. 12:9) ஆனால், சத்தியம் என்ற இடுப்புவாரை நாம் போட்டுக்கொண்டால் அவனிடமிருந்து ஏமாறாமல் இருக்கலாம். இதை எப்படிப் போட்டுக்கொள்ளலாம்? அதற்கு மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும். (1) யெகோவாவைப் பற்றிய உண்மைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். (2) “அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” அவரை வணங்க வேண்டும். (3) எல்லா விஷயத்திலும் நேர்மையாக நடக்க வேண்டும்.—யோவா. 4:24; எபே. 4:25; எபி. 13:18.
6. நீதி என்ற மார்புக் கவசம் எது, அதை நாம் ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்?
6 யெகோவாவின் நெறிமுறைகள்தான் நீதி என்ற மார்புக் கவசம். இதை நாம் ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்? ஒரு போர் வீரர் மார்புக் கவசம் போடவில்லை என்றால் அம்புகள் அவருடைய இதயத்தைக் குத்திக் கிழித்துவிடும். அதேபோல், நீதி என்ற மார்புக் கவசத்தை நாம் போடவில்லை என்றால், இந்த உலகத்தில் இருக்கிற மோசமான விஷயங்கள் நம்முடைய அடையாளப்பூர்வ இதயத்தைக் குத்திக் கிழித்துவிடும். (நீதி. 4:23) இந்த மாதிரி நடந்துவிட்டால், யெகோவா எதிர்பார்ப்பதுபோல் முழு இதயத்தோடு அவர்மேல் அன்பு காட்டவும் முடியாது, அவருக்குச் சேவை செய்யவும் முடியாது. (மத். 22:36, 37) இந்த நிலைமை நமக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் சாத்தான் நம்முடைய இதயத்தைப் பிளக்க முயற்சி செய்கிறான். எப்படி? யெகோவா வெறுக்கிற விஷயங்களின் மேல், அதாவது இந்த உலகத்தில் இருக்கிற விஷயங்களின் மேல், நாம் அன்பு வைக்க வேண்டும் என்று நினைக்கிறான். (யாக். 4:4; 1 யோ. 2:15, 16) அவனுடைய முயற்சிகளுக்கு நாம் மசியவில்லை என்றால், யெகோவாவின் நெறிமுறைகளை விட்டுக்கொடுக்கச் சொல்லி நம்மை மிரட்டுவதற்கும் நம்மைத் துன்புறுத்துவதற்கும் அவன் முயற்சி செய்கிறான்.
7. நீதியின் மார்புக் கவசத்தை நாம் எப்படிப் போட்டுக்கொள்ளலாம்?
7 எது சரி எது தவறு என்று யெகோவா சில நெறிமுறைகளை வைத்திருக்கிறார். அதன்படி வாழும்போது நீதியின் மார்புக் கவசத்தைப் போட்டுக்கொள்கிறோம். (சங். 97:10) யெகோவாவின் நெறிமுறைகள் ரொம்ப கட்டுப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, ஒருவர் அதன்படி வாழ்வதை நிறுத்திவிட்டால் எப்படி இருக்கும்? ஒரு போர் வீரர், மார்புக் கவசம் ரொம்ப பாரமாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு போர் நடந்துகொண்டிருக்கும்போதே அதைக் கழற்றிவைப்பது போல் இருக்கும். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! யெகோவாவை நேசிப்பவர்களுக்கு அவருடைய கட்டளைகள் “பாரமானவை அல்ல,” நம்மைப் பாதுகாப்பவை!—1 யோ. 5:3.
8. காலணிகளை நாம் எப்படிப் போட்டுக்கொள்ளலாம்?
8 சமாதானத்தின் நல்ல செய்தியைச் சொல்வதற்குத் தயாராக இருப்பதுதான் காலணி. இந்தக் காலணியை எப்போதுமே போட்டுக்கொள்ள வேண்டும் என்று பவுல் சொல்கிறார். அப்படியென்றால், பிரசங்கிப்பதற்கு நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பிரசங்கிக்கும்போது நம்முடைய விசுவாசம் பலமாகும். வேலை செய்கிற இடத்தில், பள்ளியில், வியாபாரப் பகுதியில், கடைகளுக்குப் போகும்போது, சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்களைப் பார்க்கப்போகும்போது, தெரிந்தவர்களிடம் பேசும்போது, ஏதோ ஒரு காரணத்துக்காக வீட்டில் அடைபட்டு இருக்கும்போது, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது என எல்லா சமயங்களிலும் யெகோவாவின் மக்கள் நல்ல செய்தியைச் சொல்வதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! ஆனால், பயந்து போய் ஒருவர் ஊழியம் செய்வதை நிறுத்திவிட்டால் எப்படி இருக்கும்? ஒரு போர் வீரர் போர், நடந்துகொண்டிருக்கும்போதே தன்னுடைய காலணிகளைக் கழற்றி விடுவதுபோல் இருக்கும். அவர் அப்படிச் செய்தால், அவருடைய பாதங்களில் அடிபட்டுவிடலாம். எதிரிகள் அவரைச் சுலபமாகத் தாக்கிவிடலாம். அதுமட்டுமல்ல, தளபதி கொடுக்கிற கட்டளைகளின்படியும் செய்ய முடியாமல் போகலாம்.
9. விசுவாசம் என்ற பெரிய கேடயத்தை ஏன் எப்போதும் பிடித்திருக்க வேண்டும்?
9 யெகோவாவின் மேல் நாம் வைத்திருக்கிற விசுவாசம்தான், விசுவாசம் என்ற பெரிய கேடயம். தான் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் யெகோவா கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற விசுவாசம் நமக்கு இருக்கிறது. இந்த விசுவாசம், ‘பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம் அணைப்பதற்கு’ உதவுகிறது. இந்தப் பெரிய கேடயத்தை நாம் பிடித்திருந்தால்தான் விசுவாச துரோகிகளுடைய போதனைகளைக் கேட்டு ஏமாந்துவிட மாட்டோம். அதேபோல், மக்கள் நம்முடைய நம்பிக்கைகளைக் கிண்டல் செய்யும்போது சோர்ந்துவிட மாட்டோம். விசுவாசம் என்ற கேடயம் இல்லையென்றால், யெகோவாவின் சட்டங்களை மீறி நடக்கச் சொல்லி யாராவது நம்மைக் கட்டாயப்படுத்தினால், அதற்கு இணங்கிவிடுவோம். வேலை செய்கிற இடத்தில் அல்லது பள்ளியில் உங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்கிறீர்களா? அப்படிச் செய்கிற ஒவ்வொரு தடவையும் கேடயத்தைப் பிடித்திருக்கிறீர்கள்! (1 பே. 3:15) யெகோவாவை சுறுசுறுப்பாக வணங்குவதற்குத் தடையாக இருக்கிற ஒரு நல்ல வேலையை மறுக்கிறீர்களா? அப்படிச் செய்கிற ஒவ்வொரு தடவையும் கேடயத்தைப் பிடித்திருக்கிறீர்கள்! (எபி. 13:5, 6) எதிர்ப்புகள் வரும்போதெல்லாம் விட்டுக்கொடுக்காமல் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்கிறீர்களா? அப்படிச் செய்கிற ஒவ்வொரு தடவையும் கேடயத்தைப் பிடித்திருக்கிறீர்கள்!—1 தெ. 2:2.
10. மீட்பின் தலைக்கவசம் என்றால் என்ன, அதை ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்?
10 யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற நம்பிக்கைதான் மீட்பின் தலைக்கவசம். தனக்கு உண்மையோடு சேவை செய்பவர்களுக்கு யெகோவா கண்டிப்பாக பலன் கொடுப்பார். அவர்களுக்கு ஒருவேளை மரணமே வந்தாலும், அவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்புவார். இதுதான் யெகோவா கொடுத்திருக்கிற நம்பிக்கை! (1 தெ. 5:8; 1 தீ. 4:10; தீத். 1:1, 2) ஒரு போர் வீரருடைய தலையை எப்படித் தலைக்கவசம் பாதுகாக்கிறதோ, அதேபோல் இந்த நம்பிக்கை நம்முடைய யோசிக்கும் விதத்தைப் பாதுகாக்கிறது. எப்படி? கடவுளுடைய வாக்குறுதிகளை எப்போதுமே கண் முன்னால் வைத்திருப்பதற்கும், பிரச்சினைகளில் மூழ்கிவிடாமல் இருப்பதற்கும் உதவுகிறது. இந்தத் தலைக்கவசத்தை நாம் எப்படிப் போட்டுக்கொள்கிறோம்? யெகோவா யோசிப்பதுபோல் யோசிப்பதன் மூலம் போட்டுக்கொள்கிறோம்! உதாரணத்துக்கு, பணம் பொருள்மேல் நம்பிக்கை வைக்காமல் யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறோம்.—சங். 26:2; 104:34; 1 தீ. 6:17.
11. கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற வாள் எது, அதை ஏன் பயன்படுத்த வேண்டும்?
11 பைபிள்தான் கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற வாள். வீண் கருத்துகள், பொய் போதனைகள், தவறான பழக்கவழக்கங்கள் போன்ற சிறையிலிருந்து விடுதலை செய்கிற சக்தி அந்த வாளுக்கு இருக்கிறது. (2 கொ. 10:4, 5; 2 தீ. 3:16, 17; எபி. 4:12) நன்றாக ஆராய்ச்சி செய்து படிப்பதன் மூலமும், அமைப்பு தருகிற பயிற்சியை எடுத்துக்கொள்வதன் மூலமும் அந்த வாளை நம்மால் நன்றாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ள முடியும். (2 தீ. 2:15) கடவுள் கொடுக்கிற முழு கவசத்தைப் பற்றி இவ்வளவு நேரம் பார்த்தோம். இதைத் தவிர வேறு விதங்களிலும் யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார். அவை என்ன?
நாம் தனியாகப் போராட வேண்டியதில்லை!
12. நம்மைப் பாதுகாப்பதற்காக யெகோவா வேறு யாரைக் கொடுத்திருக்கிறார், ஏன்?
12 ஒரு பெரிய படையை எதிர்த்து தன்னால் தனியாகப் போர் செய்ய முடியாது என்பதை ஓர் அனுபவமுள்ள போர் வீரர் ஒத்துக்கொள்வார். மற்ற போர் வீரர்களுடைய உதவி தேவை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதேபோல், சாத்தானையும் அவனுடைய கூட்டாளிகளையும் நம்மால் தனியாக எதிர்த்து நிற்க முடியாது. மற்ற சகோதர சகோதரிகளுடைய உதவி நமக்குத் தேவை. அதற்காகத்தான் உலகம் முழுவதும் இருக்கிற ‘சகோதரர்களை’ யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார்.—1 பே. 2:17.
13. கூட்டங்களுக்குப் போவதால் என்னென்ன நன்மைகள் கிடைப்பதாக எபிரெயர் 10:24, 25 சொல்கிறது?
13 கூட்டங்களுக்குப் போகும்போது சகோதர சகோதரிகளுடைய உதவி நமக்குக் கிடைக்கிறது. (எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.) நாம் சிலசமயங்களில் சோர்ந்துவிடலாம். ஆனால், கூட்டங்களுக்குப் போகும்போது புத்துணர்ச்சி கிடைக்கிறது. மனதிலிருந்து சகோதர சகோதரிகள் சொல்கிற பதில்களைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, அங்கே கொடுக்கப்படுகிற பேச்சுகளும் நடிப்புகளும் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற மன உறுதியை நமக்குக் கொடுக்கிறது. கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் சகோதரர்களிடம் பேசுவது உற்சாகத்தைத் தருகிறது. (1 தெ. 5:14) கூட்டங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்கிற வாய்ப்பும் கிடைக்கிறது. இதுவும் சந்தோஷத்தைத் தருகிறது. (அப். 20:35; ரோ. 1:11, 12) வேறுசில விதங்களிலும் கூட்டங்கள் உதவுகின்றன. நன்றாக ஊழியம் செய்வதற்கும் பைபிள் படிப்புகளை நடத்துவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் உதவுகின்றன. உதாரணத்துக்கு, கற்பிப்பதற்கான கருவிகளை நன்றாகப் பயன்படுத்துவதற்கு அங்கே கற்றுக்கொள்கிறோம். அதனால், கூட்டங்களுக்கு நன்றாகத் தயாரித்துவிட்டு போங்கள். கூட்டம் நடக்கும்போது நன்றாகக் கவனியுங்கள். என்ன கற்றுக்கொண்டீர்களோ அதன்படி செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, “கிறிஸ்து இயேசுவின் சிறந்த படைவீரனாக” இருப்பீர்கள்.—2 தீ. 2:3.
14. நமக்கு வேறு என்ன உதவி இருக்கிறது?
14 கோடிக்கணக்கான தேவதூதர்களுடைய ஆதரவும் நமக்கு இருக்கிறது. ஒரே ஒரு தேவதூதருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். (ஏசா. 37:36) அப்படியென்றால், கோடிக்கணக்கான தேவதூதர்கள் அடங்கிய ஒரு படைக்கு எவ்வளவு சக்தி இருக்கும்! யெகோவாவின் இந்தப் படையை எதிர்க்கிற சக்தி எந்தவொரு மனிதனுக்கோ பேய்க்கோ இல்லை. யெகோவா நம்மோடு இருந்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் நம்மால் எதிர்க்க முடியும். (நியா. 6:16) அதனால், உங்களோடு வேலை செய்பவர்கள், படிப்பவர்கள், சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்கள் ஏதாவது சொன்னால் அல்லது செய்தால் அதைப் பார்த்து பயந்துவிடாதீர்கள். நீங்கள் தனியாக இல்லை! யெகோவா உங்களோடு இருக்கிறார்!!
இனிமேலும் யெகோவா பாதுகாப்பார்
15. ஏசாயா 54:15, 17-ன்படி, யெகோவாவின் மக்களுடைய வாயை எந்தச் சக்தியாலும் ஏன் கட்டிப்போட முடியாது?
15 சாத்தானுடைய இந்த உலகம் நம்மேல் வெறுப்பைக் காட்டிக்கொண்டேதான் இருக்கும். ஏனென்றால், நாம் அரசியலில் நடுநிலையோடு இருக்கிறோம், போரிலும் கலந்துகொள்வதில்லை. யெகோவாவின் பெயரை மற்றவர்களுக்குச் சொல்கிறோம். அவருடைய அரசாங்கத்தால்தான் இந்த உலகத்துக்குச் சமாதானத்தைக் கொண்டுவர முடியும் என்பதைத் தெரியப்படுத்துகிறோம். அவருடைய நீதியான நெறிமுறைகளின்படி வாழ்கிறோம். இந்த உலகத்தை ஆட்சி செய்கிற சாத்தான் ஒரு கொலைகாரன் என்பதையும் பொய்க்குத் தகப்பன் என்பதையும் வெட்டவெளிச்சமாக்குகிறோம். (யோவா. 8:44) அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த உலகம் சீக்கிரத்தில் அழிந்துவிடும் என்பதையும் சொல்கிறோம். சாத்தானாலும் அவனுடைய கூட்டாளிகளாலும் நம்முடைய வாயைக் கட்டிப் போடவே முடியாது. நமக்குக் கிடைக்கிற எல்லா வாய்ப்பையும் பயன்படுத்தி நாம் யெகோவாவைப் புகழ்ந்துகொண்டே இருப்போம். அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, இன்றுவரை நடந்துகொண்டிருக்கிற பிரசங்க வேலையை அவனால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை. ஏனென்றால், யெகோவா நம்மோடு இருக்கிறார்.—ஏசாயா 54:15, 17-ஐ வாசியுங்கள்.
16. மிகுந்த உபத்திரவத்தின்போது தன்னுடைய மக்களுக்கு யெகோவா என்ன செய்வார்?
16 எதிர்காலத்தில் யெகோவா எப்படி நம்மைப் பாதுகாப்பார்? குறிப்பாக, இரண்டு சமயங்களில் பாதுகாப்பார்! மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்ததற்குப் பிறகு, இந்த உலகத்தின் ராஜாக்கள் மகா பாபிலோனை (அதாவது, பொய் மதங்களை) அழிக்கும்போது, நாம் அழிந்துவிடாதபடி பாதுகாப்பார். (வெளி. 17:16-18; 18:2, 4) அடுத்ததாக, சாத்தானுடைய உலகத்தில் மீதியிருக்கிற எல்லாவற்றையும் அர்மகெதோன் போரில் அழிக்கும்போது நம்மைப் பாதுகாப்பார்.—வெளி. 7:9, 10; 16:14, 16.
17. யெகோவாவிடம் நெருங்கி இருக்கும்போது நமக்கு என்ன நன்மை?
17 நாம் யெகோவாவிடம் நெருங்கி இருக்கும்போது சாத்தானால் நமக்கு நிரந்தரமான அழிவைக் கொண்டுவர முடியாது. சொல்லப்போனால், அவனுக்குத்தான் நிரந்தர அழிவு வரப்போகிறது. (ரோ. 16:20) நீங்களோ, எப்போதும் முழு கவசத்தைப் போட்டுக்கொள்ளுங்கள். கொஞ்ச நேரத்துக்குக்கூட அதைக் கழற்றிவிடாதீர்கள். தனியாகப் போராடலாம் என்றும் நினைக்காதீர்கள். சகோதர சகோதரிகளுடைய உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்களும் அவர்களுக்கு உதவுங்கள். எப்போதும் யெகோவா சொல்வதுபோல் செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்தால், யெகோவா உங்களைப் பலப்படுத்துவார்! உங்களைப் பாதுகாப்பார்!—ஏசா. 41:10.
பாட்டு 132 ஒரு வெற்றிப் பாடல்
a நம்மைப் பலப்படுத்துவதாகவும் பாதுகாப்பதாகவும் யெகோவா வாக்கு கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், ஏன் நமக்குப் பாதுகாப்பு தேவை? யெகோவா நம்மை எப்படிப் பாதுகாக்கிறார்? அவருடைய பாதுகாப்பு வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கட்டுரையில் இவற்றுக்கான பதில் கிடைக்கும்.