இளைஞர்களே —பிசாசை எதிர்த்து உறுதியோடு நில்லுங்கள்!
“பிசாசின் சூழ்ச்சிகளை நீங்கள் உறுதியோடு எதிர்த்து நிற்க வேண்டுமானால், கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்.”—எபே. 6:11.
1, 2. (அ) சாத்தானையும் அவனோடு இருக்கிற பேய்களையும் எதிர்த்து இளைஞர்களால் எப்படி போர்செய்ய முடிகிறது? (ஆரம்பப் படம்) (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பார்க்கப்போகிறோம்?
கிறிஸ்தவர்களை படைவீரர்களுக்கு ஒப்பிட்டு பவுல் பேசினார். நாம் போர்க்களத்தில் இருக்கிறோம், நம்முடைய எதிரிகளோ, நிஜமானவர்கள்! மனிதர்களை எதிர்த்து நாம் போர் செய்யவில்லை; சாத்தானையும், அவனோடு இருக்கிற பேய்களையும் எதிர்த்துதான் போர் செய்கிறோம்! இந்தப் போர்வீரர்களுக்கு ஆயிரக்கணக்கான வருஷங்கள் அனுபவம் இருக்கிறது; போர் செய்வதில் அவர்கள் கெட்டிக்காரர்கள்! அதனால், இந்தப் போரில் நமக்கு வெற்றி கிடைக்காது என்று நாம் நினைக்கலாம், அதுவும் நாம் இளைஞர்களாக இருந்தால்! அப்படியென்றால், இளைஞர்களால் பலம்படைத்த இந்த எதிரிகளை ஜெயிக்க முடியுமா? நிச்சயம் முடியும். அவர்கள் ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! எப்படி அவர்களால் ஜெயிக்க முடிகிறது? யெகோவாவிடமிருந்து அவர்களுக்குப் பலம் கிடைக்கிறது. அதோடு, நன்றாகப் பயிற்சி பெற்ற படைவீரர்களைப் போல, ‘கடவுள் தருகிற முழு கவசத்தையும் [அவர்கள்] போட்டிருக்கிறார்கள்.’ அதனால், போர்செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.—எபேசியர் 6:10-12-ஐ வாசியுங்கள்.
2 ரோமப் படைவீரர்கள் அணிந்திருந்த கவசத்தை மனதில்வைத்து பவுல் இந்த உதாரணத்தைச் சொல்லியிருக்கலாம். (அப். 28:16) இந்த அருமையான உதாரணத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம். அதோடு, ஆன்மீகக் கவசத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அணிந்துகொள்வதில் தங்களுக்கு இருந்த சவால்களைப் பற்றியும், அப்படி அணிந்துகொண்டதால் கிடைத்த பலன்களைப் பற்றியும் சில இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
‘சத்தியம் என்ற இடுப்புவார்’
3, 4. சத்தியம் எப்படி ரோமப்படை வீரர்களின் இடுப்புவாரைப் போல் இருக்கிறது?
3 எபேசியர் 6:14-ஐ வாசியுங்கள். ரோமப் படைவீரர்களின் இடுப்புவாரில், உலோகத் தகடுகள் இருந்தன; அவர்களுடைய இடுப்பை அவை பாதுகாத்தன. அதோடு, அவர்களுடைய கனமான மார்புக் கவசங்களை அசையாமல் வைத்துக்கொண்டன. சில இடுப்புவார்களில், பலமான ஊக்குகள் இருந்தன. வாளையும், பட்டாக்கத்தியையும் வைத்துக்கொள்ள அவை உதவியாக இருந்தன. இடுப்புவார் இறுக்கமாக இருந்ததால், படைவீரர்களால் தைரியமாகப் போருக்குப் போகமுடிந்தது.
4 அந்த இடுப்புவாரைப் போல, பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற சத்தியம், பொய்ப் போதனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. (யோவா. 8:31, 32; 1 யோ. 4:1) நாம் சத்தியத்தை எந்தளவு நேசிக்கக் கற்றுக்கொள்கிறோமோ, அந்தளவு கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வது அல்லது நம்முடைய ‘மார்புக் கவசத்தை’ அணிந்துகொள்வது, நமக்குச் சுலபமாக இருக்கும். (சங். 111:7, 8; 1 யோ. 5:3) அதோடு, இந்தச் சத்தியங்களை நாம் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தால், நம் எதிரிகள் கேட்கிற கேள்விகளுக்குத் திறமையாகப் பதில் சொல்ல முடியும்.—1 பே. 3:15.
5. நாம் ஏன் எப்போதுமே உண்மையைப் பேச வேண்டும்?
5 பைபிளிலிருக்கும் சத்தியங்கள் நமக்கு முக்கியமானதாக இருப்பதால் நாம் அதற்குக் கீழ்ப்படிகிறோம்; எப்போதுமே உண்மையைப் பேசுகிறோம். பொய் என்பது சாத்தான் பயன்படுத்துகிற ஒரு வலிமையான ஆயுதம்! பொய் சொல்வது, அதைச் சொல்கிறவரையும் அதை நம்புகிறவரையும் பாதிக்கும். (யோவா. 8:44) அதனால், நாம் பரிபூரணர்களாக இல்லையென்றாலும்கூட, பொய் சொல்லாமல் இருப்பதற்கு கடினமாக முயற்சி செய்கிறோம். (எபே. 4:25) ஒருவேளை இப்படிச் செய்வது கஷ்டமாக இருக்கலாம். 18 வயது அபிகாயில் சொல்வதைக் கவனியுங்கள். “உண்மை பேசறது எல்லா சமயத்துலயும் ஒத்துவராதுனு தோணலாம். அதுவும், பொய் சொன்னா தப்பிச்சுக்கலாங்குற ஒரு சூழ்நிலை வர்றப்போ, அப்படி தோணலாம்.” இருந்தாலும், அவள் ஏன் எப்போதும் உண்மையே பேசுகிறாள்? “உண்மையா நடந்துக்குறப்போ, யெகோவாவுக்கு முன்னால சுத்தமான மனசாட்சியோட இருக்க முடியுது. என் அப்பா அம்மாவோட நம்பிக்கையையும் என்னோட பிரெண்ட்ஸோட நம்பிக்கையையும் சம்பாதிக்க முடியுது” என்று அவள் சொல்கிறாள். 23 வயது விக்டோரியா இப்படிச் சொல்கிறார்: “நீங்க சத்தியத்தை பேசறப்போ... உங்க நம்பிக்கைகள விட்டுக்கொடுக்காம இருக்குறப்போ... சிலர் உங்களுக்கு தொல்லை கொடுக்கலாம். ஆனா நீங்க உறுதியா இருந்தீங்கனா, நிறைய பலன்கள் கிடைக்கும். உங்களோட தன்னம்பிக்கை அதிகமாகும், யெகோவாகிட்ட நெருக்கமான பந்தத்த அனுபவிக்க முடியும், உங்கள நேசிக்கிறவங்களோட மதிப்ப சம்பாதிக்க முடியும்.” அப்படியென்றால், ‘சத்தியம் என்ற இடுப்புவாரை’ எப்போதும் அணிந்துகொள்வது ஏன் முக்கியம் என்று தெரிகிறதா?
‘நீதி என்ற மார்புக் கவசம்’
6, 7. நீதி, ஏன் மார்புக் கவசத்துக்கு ஒப்பிட்டுப் பேசப்பட்டிருக்கிறது?
6 ரோமப் படைவீரர்கள் அணிந்திருந்த மார்புக் கவசம், பெரும்பாலும் இரும்புப் பட்டைகளால் செய்யப்பட்டிருந்தன. மார்பில் கச்சிதமாகப் பொருந்தும் விதத்தில் அவை வளைக்கப்பட்டிருந்தன. அந்த இரும்புப் பட்டைகள், உலோகக் கொக்கிகள் மூலம் தோல்வாரில் இணைக்கப்பட்டிருந்தன. அந்த வீரர்கள், தங்களுடைய தோள்களிலும் நிறைய இரும்புப் பட்டைகளை அணிந்திருந்தார்கள்; அவையும் தோல்வாரில் இணைக்கப்பட்டிருந்தன. இரும்புப் பட்டைகள் இறுக்கமாக இருக்கின்றனவா என்று வீரர்கள் தவறாமல் பார்க்க வேண்டியிருந்தது. மார்புக் கவசம், வீரர்களின் உடல் அசைவை ஓரளவு கட்டுப்படுத்தியது என்பது உண்மைதான். இருந்தாலும், வாள்களின் கூர்மையான முனையிலிருந்தும், அம்புகளின் தாக்குதல்களிலிருந்தும் வீரர்களுடைய இதயத்தையும் மற்ற உறுப்புகளையும் மார்புக் கவசம் பாதுகாத்தது.
7 நம் “இதயத்தை” அல்லது உள்ளான மனிதனை பாதுகாக்கிற யெகோவாவின் நீதியான தராதரங்களை, மார்புக் கவசத்துக்கு ஒப்பிடலாம். (நீதி. 4:23) எந்தவொரு படைவீரரும் இரும்பாலான மார்புக் கவசத்துக்குப் பதிலாக, லேசான உலோகத்தாலான மார்புக் கவசத்தை அணியமாட்டார். அதேபோல், நாமும் எது சரி என்று யெகோவா சொல்கிறாரோ, அதன்படி செய்வதற்குப் பதிலாக, எது சரி என்று நமக்குத் தோன்றுகிறதோ, அதன்படி செய்ய மாட்டோம். நம் இதயத்தைப் பாதுகாக்கிற ஞானம் நமக்கு இல்லை! (நீதி. 3:5, 6) அதனால்தான், நம் ‘மார்புக் கவசம்’ இறுக்கமாக இருக்கிறதா, அதாவது நம் இதயத்தைப் பாதுகாக்கிற நிலையில் இருக்கிறதா, என்று தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
8. நாம் ஏன் யெகோவாவின் தராதரங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
8 யெகோவாவின் தராதரங்கள் உங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவோ, உங்கள் இஷ்டப்படி எதையாவது செய்யவிடாமல் தடுப்பதாகவோ எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? 21 வயது டேனியல் இப்படிச் சொல்கிறார்: “பைபிள் தராதரங்கள்படி நடந்துக்குறதுனால, ஆசிரியர்களும் கூடபடிக்கிறவங்களும் என்னை கேலி செய்வாங்க. அதனால, கொஞ்சநாளா, எனக்கு தன்னம்பிக்கையே இல்லாம போயிடுச்சு, ரொம்ப சோர்வாவும் இருந்தேன்.” ஆனால், இப்போது அவர் எப்படி உணருகிறார்? “நாட்கள் போக போக, யெகோவாவோட தராதரங்கள்படி நடக்குறதுனால கிடைக்கிற பலன்கள என்னால பார்க்க முடிஞ்சுது. என்னோட ‘ஃப்ரெண்ட்ஸ்’ கொஞ்ச பேர் போதை பொருளுக்கு அடிமையாயிட்டாங்க. சிலர், பள்ளிப்படிப்ப பாதியிலயே விட்டுட்டாங்க. அவங்க வாழ்க்கை இப்படியானத நினைச்சா வருத்தமா இருக்கு. யெகோவா உண்மையிலயே என்னை பாதுகாத்திருக்காரு.” 15 வயது மாடிஸன் இப்படிச் சொல்கிறாள்: “யெகோவாவோட தராதரங்கள்படி வாழ்றதும், என் வயசு பசங்க எதை ஜாலினு சொல்றாங்களோ, அத செய்யாம இருக்குறதும் எனக்கு போராட்டமா இருக்கு.” அதனால், அவள் என்ன செய்தாள்? “நான் யெகோவாவோட பேரை தாங்கியிருக்குறேங்குறதயும், இந்த சோதனையெல்லாம் சாத்தான் விடுற அம்புதாங்குறதயும் ஞாபகப்படுத்திக்கிறேன். ஜெயிக்கிற ஒவ்வொரு தடவையும் என்னை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.”
சமாதானத்தின் நல்ல செய்தியை அறிவிக்க உதவுகிற காலணி
9-11. (அ) கிறிஸ்தவர்கள் போட்டுக்கொள்ளும் அடையாளப்பூர்வ காலணி எது? (ஆ) தயக்கமில்லாமல் பிரசங்கிக்க நாம் என்ன செய்யலாம்?
9 எபேசியர் 6:15-ஐ வாசியுங்கள். காலணி இல்லாமல் ரோமப் படைவீரர்கள் போருக்குப் போகவே மாட்டார்கள். அந்தக் காலணியின் அடிப்பகுதி மூன்று அடுக்கு தோலால் செய்யப்பட்டிருந்ததால், பலமாக இருந்தன. அதோடு, அணிந்துகொள்ள சௌகரியமாக இருந்ததால், கால்தவறி விழுந்துவிடுவோமோ என்ற பயமில்லாமல் படைவீரர்களால் தைரியமாக நடக்க முடிந்தது.
10 ரோமப் படைவீரர்கள் அணிந்திருந்த காலணி, போரில் வெற்றிபெற அவர்களுக்கு உதவியது. அதேபோல், நம்முடைய அடையாளப்பூர்வ காலணி, “சமாதானத்தின் நல்ல செய்தியை” பிரசங்கிப்பதற்கு நமக்கு உதவுகிறது. (ஏசா. 52:7; ரோ. 10:15) இருந்தாலும், சிலசமயங்களில், பிரசங்கிப்பதற்கு நமக்கு ரொம்பவே தைரியம் தேவை! 20 வயது ராபர்ட்a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இப்படிச் சொல்கிறார்: “முன்னாடியெல்லாம், கூடபடிக்கிற பசங்ககிட்ட பிரசங்கிக்குறதுக்கு பயமா இருக்கும். அவங்ககிட்ட பேசறதுக்கு எனக்கு தர்மசங்கடமா இருந்துச்சுனு நினைக்குறேன். ஆனா, ‘நான் ஏன் அப்படி இருந்தேன்னு’ இப்போ நினைக்க தோணுது. இப்பெல்லாம், கூடபடிக்கிறவங்ககிட்ட சந்தோஷமா பிரசங்கிக்குறேன்.”
11 முன்கூட்டியே தயாரிப்பது, பிரசங்கிப்பதற்கு ரொம்ப உதவியாக இருப்பதை கிறிஸ்தவ இளைஞர்கள் நிறைய பேர் அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள். நீங்கள் எப்படித் தயாரிக்கலாம்? 16 வயது ஜூலியா இப்படிச் சொல்கிறாள்: “நான் எப்பவுமே ஸ்கூல் பையில பிரசுரங்கள தயாரா வைச்சிருப்பேன். கூடபடிக்கிற பசங்களோட கருத்துகளயும் அவங்க நம்புற விஷயங்களயும் காதுகொடுத்து கேட்பேன். அதனால, அவங்களுக்கு எப்படி உதவலாம்னு என்னால தெரிஞ்சுக்க முடியுது. முன்கூட்டியே தயாரிக்குறப்போ, அவங்களுக்கு ஏத்த மாதிரி பேச முடியுது.” 23 வயது மெக்கின்ஸி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நீங்க அன்பா நடந்துக்கிட்டா... காதுகொடுத்து கேட்டா... கூடபடிக்கிறவங்க என்ன மாதிரியான பிரச்சினைகள அனுபவிக்கிறாங்கனு புரிஞ்சுக்க முடியும். இளைஞர்களுக்காக அமைப்பு வெளியிட்டிருக்குற எல்லா பிரசுரத்தயும் படிச்சிட்டேனான்னு நான் செக் பண்ணிக்குவேன். அதனால, பைபிள்லயோ jw.org வெப்சைட்டுல இருக்குற தகவலயோ பார்க்க சொல்லி என் கூடபடிக்குறவங்ககிட்ட சொல்ல முடியுது.” பிரசங்கிப்பதற்காக நன்றாகத் தயாரித்திருந்தால், பொருத்தமான ‘காலணியை’ அணிந்திருக்கிறோம் என்று அர்த்தம்!
‘விசுவாசம் என்ற பெரிய கேடயம்’
12, 13. சாத்தானின் சில ‘நெருப்புக் கணைகளில்’ ஒன்றைப் பற்றிச் சொல்லுங்கள்.
12 எபேசியர் 6:16-ஐ வாசியுங்கள். ரோமப் படைவீரர்கள் செவ்வக வடிவிலிருந்த பெரிய கேடயத்தை வைத்திருந்தார்கள். அவர்களுடைய தோள்முதல் முழங்கால்வரை அது அவர்களைப் பாதுகாத்தது. வாள், ஈட்டி மற்றும் அம்புகளின் தாக்குதல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தது.
13 சாத்தான் எந்த ‘நெருப்புக் கணைகளால்’ உங்களைத் தாக்கலாம்? ஒருவேளை, யெகோவாவைப் பற்றிய பொய்களைச் சொல்லி அவன் உங்களைத் தாக்கலாம். அதாவது, யெகோவாவுக்கு உங்கள்மீது அக்கறை இல்லையென்றும் அவர் உங்களை நேசிக்க மாட்டார் என்றும் அவன் உங்களை நினைக்க வைக்கலாம். 19 வயது ஈடா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “யெகோவா என்கிட்ட நெருக்கமா இல்லனும், எனக்கு ஃப்ரெண்டா இருக்க அவரு விரும்புலனும் நான் நிறைய தடவை நினைச்சிருக்கேன்.” அந்த மாதிரியான உணர்வு வரும்போது, அவர் என்ன செய்கிறார்? “கூட்டங்கள் எனக்கு டானிக் மாதிரி! என்னோட விசுவாசத்த அது பலப்படுத்துது. முன்னெல்லாம், பதிலே சொல்லாம சும்மா உட்கார்ந்துட்டு இருப்பேன். ‘என் பதில யாரு கேட்க போறாங்கனு’ நினைப்பேன். ஆனா இப்போ, கூட்டங்களுக்கு நான் தயாரிக்குறேன், ரெண்டு மூணு பதில் சொல்றதுக்கு முயற்சி பண்றேன். அது எனக்கு கஷ்டந்தான், ஆனா, பதில் சொன்னதுக்கு அப்புறம் சந்தோஷமா இருக்கு. சகோதர சகோதரிங்க என்னை உற்சாகப்படுத்துறாங்க. கூட்டங்கள் முடிஞ்சு வெளியே வர்றப்போ, யெகோவா என்னை நேசிக்குறாருங்குற எண்ணத்தோடதான் வெளியே வர்றேன்.”
14. ஈடாவின் அனுபவம் நமக்கு எதைக் காட்டுகிறது?
14 படைவீரர்களின் கேடயம் எப்போதுமே ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், நம்முடைய விசுவாசம் அப்படி இல்லை. ஈடாவின் அனுபவம் இதைத்தான் காட்டுகிறது. நம் விசுவாசம் குறையலாம் அல்லது அதிகமாகலாம். (மத். 14:31; 2 தெ. 1:3) நம்முடைய ‘விசுவாசம் என்ற கேடயம்’ நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால், அதைப் பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
‘மீட்பு என்ற தலைக்கவசம்’
15, 16. நம்முடைய நம்பிக்கை எப்படி நமக்கு தலைக்கவசம் போல் இருக்கிறது?
15 எபேசியர் 6:17-ஐ வாசியுங்கள். தலையையும் கழுத்தையும் முகத்தையும் பாதுகாப்பதற்காக, ரோமப் படைவீரர்கள் தலைக்கவசத்தை அணிந்திருந்தார்கள். சில தலைக்கவசங்களில் கைப்பிடியும் இருந்ததால், அவற்றைக் கையில் பிடித்துக்கொண்டு போவது வசதியாக இருந்தது.
16 படைவீரர்களுடைய மூளையை தலைக்கவசம் பாதுகாத்தது போல, “மீட்புக்கான நம்பிக்கை,” நம்முடைய யோசனைகளைப் பாதுகாக்கிறது. (1 தெ. 5:8; நீதி. 3:21) கடவுளுடைய வாக்குறுதிகள்மீது கவனம் செலுத்துவதற்கும், நம்முடைய பிரச்சினைகளால் சோர்ந்துபோகாமல் இருப்பதற்கும், இந்த நம்பிக்கை உதவுகிறது. (சங். 27:1, 14; அப். 24:15) ஆனால், நம்முடைய நம்பிக்கை நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால், கடவுளுடைய வாக்குறுதிகள் நிஜமாகவே நிறைவேறும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். “தலைக்கவசம்” நம் தலையில் இருக்க வேண்டும், கையில் அல்ல!
17, 18. (அ) நம்முடைய தலைக்கவசத்தை நாம் கழற்றிவிட வேண்டும் என்பதற்காக, சாத்தான் என்ன தந்திரமான முறைகளைப் பயன்படுத்தலாம்? (ஆ) சாத்தானுடைய வலையில் சிக்கவில்லை என்பதை நாம் எப்படி நிரூபிக்கலாம்?
17 நம்முடைய தலைக்கவசத்தை நாம் கழற்றிவிட வேண்டும் என்பதற்காக, சாத்தான் தந்திரமான முறைகளைப் பயன்படுத்தலாம். இயேசுவின் விஷயத்தில் அவன் என்ன செய்தான் என்பதை யோசித்துப்பாருங்கள். மனிதகுலத்தை இயேசுதான் ஆட்சி செய்யப்போகிறார் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால், அதற்கு முன்பு, அவர் பாடுகள்பட்டு மரணமடைய வேண்டியிருந்தது. பிறகு யெகோவா குறித்திருக்கும் காலம் வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதனால், உடனடியாக ராஜாவாக ஆகும் வாய்ப்பை சாத்தான் அவருக்குக் கொடுத்தான். தன்னை ஒரேவொரு தடவை வணங்கினால், உடனடியாக இந்த உலகத்தின் ராஜாவாகிவிடலாம் என்று சொன்னான். (லூக். 4:5-7) இப்போது நம்முடைய விஷயத்துக்கு வரலாம். புதிய உலகத்தில் நமக்கு அருமையான ஆசீர்வாதங்களைத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருப்பது சாத்தானுக்குத் தெரியும். ஆனால், அவை நிறைவேறும்வரை நாம் காத்திருக்க வேண்டும்; அதுவரைக்கும் நிறைய பிரச்சினைகளையும் அனுபவித்துதான் ஆகவேண்டும். அதனால், இப்போதே சௌகரியமான வாழ்க்கையைத் தருவதாக சாத்தான் சொல்கிறான். கடவுளுடைய அரசாங்கத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சொந்த சௌகரியங்களுக்கு நாம் முதலிடம் தர வேண்டுமென்று அவன் விரும்புகிறான்.—மத். 6:31-33.
18 இளம் கிறிஸ்தவர்கள் நிறைய பேர், சாத்தானுடைய தூண்டிலில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது சந்தோஷத்தைத் தருகிறது. உதாரணத்துக்கு, 20 வயது கியான் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “கடவுளோட அரசாங்கம் மட்டும்தான் நம்மளோட பிரச்சினைகள தீர்க்கும்னு எனக்கு தெரியும்.” அவருடைய நம்பிக்கை, அவருடைய எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த உலகத்தில் இருப்பவையெல்லாம் தற்காலிகமானவை என்பதை ஞாபகத்தில் வைக்க அது அவருக்கு உதவியது. கைநிறைய சம்பாதிக்கிற ஒரு வேலைக்காக, தன்னுடைய சக்தியை செலவு செய்வதற்குப் பதிலாக, யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் அவர் செலவு செய்கிறார்.
‘கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தை என்ற வாள்’
19, 20. கடவுளுடைய வார்த்தையைத் திறமையாகப் பயன்படுத்த எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
19 ரோமப் படைவீரர்கள் பயன்படுத்திய வாள், ஏறக்குறைய 50 செ.மீ. (20 அங்குலம்) நீளத்தில் இருந்தது. அவர்கள் தினமும் பயிற்சி செய்ததால், வாள் சுழற்றுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.
20 கடவுளுடைய வார்த்தையை வாளுக்கு ஒப்பிட்டு பவுல் பேசினார். அந்த வாளை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதைத் திறமையாகப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம் விசுவாசத்தை ஆதரித்துப் பேசவும், நம் யோசனைகளை சரிசெய்யவும் நம்மால் முடியும். (2 கொ. 10:4, 5; 2 தீ. 2:15) அப்படியென்றால், உங்களுடைய திறமையை எப்படி மெருகேற்றலாம்? 21 வயது செபஸ்டியன் சொல்வதைக் கவனியுங்கள். “பைபிள் வாசிக்குறப்போ, ஒவ்வொரு அதிகாரத்துலிருந்தும் ஒரு வசனத்த எழுதி வைச்சேன். எனக்குப் பிடிச்ச வசனங்களையெல்லாம் இப்ப ஒண்ணுசேர்த்துட்டு இருக்கேன்.” இப்படிச் செய்தது, யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள அவருக்கு உதவியது. டேனியல் இப்படிச் சொல்கிறார்: “பைபிள் வாசிக்குறப்போ, ஊழியத்துல பார்க்குற ஜனங்களுக்கு உதவியா இருக்குற சில வசனங்கள தேர்ந்தெடுப்பேன். பைபிள்மேல உங்களுக்கு இருக்குற ஆர்வத்தையும், அவங்களுக்கு உதவுறதுக்கு நீங்க எடுக்குற முயற்சிகளயும் ஜனங்க பார்க்குறப்போ, நீங்க சொல்றத காதுகொடுத்து கேட்பாங்க.”
21. சாத்தானையும் பேய்களையும் நினைத்து நாம் ஏன் பயந்து நடுங்க வேண்டியதில்லை?
21 இந்தக் கட்டுரையில் நாம் பார்த்த இளைஞர்களின் உதாரணங்களிலிருந்து ஒரு விஷயத்தை கற்றுக்கொள்கிறோம். அதாவது, சாத்தானையும் பேய்களையும் நினைத்து நாம் பயந்து நடுங்க வேண்டியதில்லை. அவர்கள் பலமானவர்கள் என்பது உண்மைதான். ஆனால், யெகோவாவைவிட அவர்கள் பலமானவர்கள் கிடையாது. அதோடு, அவர்கள் என்றென்றும் வாழப்போவதும் கிடையாது. கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியில், அவர்கள் அதலபாதாளத்துக்குள் தள்ளப்படுவார்கள்; அப்போது, அவர்களால் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ய முடியாது. கடைசியில், அவர்கள் அழிக்கப்படுவார்கள். (வெளி. 20:1-3, 7-10) நம்முடைய எதிரியைப் பற்றி... அவனுடைய தந்திரத்தைப் பற்றி... அவனுடைய நோக்கத்தைப் பற்றி... நாம் தெரிந்துகொண்டோம். அதனால், யெகோவாவின் உதவியோடு அவனை நம்மால் உறுதியாக எதிர்த்து நிற்க முடியும்!
a பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.