இவையெல்லாம் அர்த்தப்படுத்துவது என்ன?
சமீப காலங்களில், ஒழுக்கநெறிகளைப் பற்றி நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களென்றால், ஒரு தெளிவான போக்கு உங்களுக்கு தெரியும். சந்தேகத்திற்கு இடமின்றி, அதிகமதிகமான ஆட்கள் ஒழுக்கநெறிகளைப் பொருட்படுத்துவதே இல்லை. இது உண்மையிலேயே எதை கோடிட்டுக் காட்டுகிறது?
சிலர் சொல்வதுபோல், நம் நாகரிகமும் மனிதகுலம் முழுவதுமே அழிவை நோக்கிச் செல்கிறதென்பதை அர்த்தப்படுத்துகிறதா? அல்லது சரித்திரத்திற்கே உரிய ஏற்ற இறக்கங்கள்தான் இந்த மாற்றங்களா?
அப்படித்தான் அநேகர் நினைக்கின்றனர். நம் நாட்களில் ஒழுக்கநெறிகளில் ஏற்பட்டிருக்கும் சீர்கேடு, இயல்பாக ஏற்படும் ஒரு மாற்றமே என அவர்கள் கருதுகின்றனர். சரித்திரம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் அநேக மாற்றங்களில் இதுவும் ஒன்று என அவர்கள் கருதுகின்றனர். கடிகார பெண்டுலத்தைப்போல இந்தப் போக்கு, பழைய நிலைக்கு வந்து மறுபடியும் உயர்ந்த ஒழுக்க தராதரங்கள் நிலவும் என முழுமையாக நம்புகின்றனர். அவர்கள் நினைப்பது சரியா?
“கடைசி நாட்கள்”
பல நூற்றாண்டுகளாக, ஒழுக்கநெறிகளின் ஆதாரமாக பரவலாக கருதப்பட்டு வரும் புத்தகம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளே. இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் சில அம்சங்களை இப்போது சிந்திப்போம். மனித சரித்திரத்தில் முடிவான காலப்பகுதியைப் பற்றிய தீர்க்கதரிசன விவரிப்பை பைபிள் தருகிறது. அந்த தீர்க்கதரிசன விளக்கங்களோடு, இன்றைய உலகை ஒப்பிட்டு பார்ப்பது அதிக தெளிவூட்டுவதாய் இருக்கிறது. “கடைசி நாட்கள்” அல்லது “காரிய ஒழுங்குமுறையின் முடிவு” என பைபிளில் அழைக்கப்படுவது இந்தக் காலப்பகுதியே. (2 தீமோத்தேயு 3:1; மத்தேயு 24:3; NW) இந்தப் பதங்கள் சுட்டிக்காட்டுகிறபடி, குறிப்பிட்ட ஒரு காலம் முடிவடைவதையும் புதிய ஒரு சகாப்தம் துவங்குவதையும் இந்தக் காலப்பகுதி அர்த்தப்படுத்துகிறது.
கடைசி நாட்கள், “கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களாய்” இருக்குமென பைபிள் முன்னறிவிக்கிறது. இந்தக் கடைசி நாட்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதற்காக, பல விவரங்களை பைபிள் அளிக்கிறது. தனிச்சிறப்புமிக்க இந்தக் காலப்பகுதிக்கான தெளிவான வருணனையை அல்லது கூட்டு அடையாளங்களை இந்த விவரங்கள் நமக்கு அளிக்கின்றன.
மக்களின் கெட்ட குணங்கள்
இன்று மிகவும் பரவலாக இருக்கும் இந்த அடையாளங்களில் ஒன்று: “மனுஷர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” (2 தீமோத்தேயு 3:2, 5) செல்வாக்குமிக்க, முழுமையான, மதசார்பற்ற நிலை சரித்திரத்தின் வேறே எந்தக் காலப்பகுதியிலும் இல்லை. படைப்பாளரே சர்வ அதிகாரமுமுள்ளவர் என்பது பரவலாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அதோடு, சத்தியத்தின் ஒரே ஊற்றுமூலம் பைபிளே என்பதையும் அநேக மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மதங்கள் இன்னும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் அநேகம் மக்கள்மீது சிறிதே செல்வாக்கு செலுத்துகின்றன. அவை பகட்டான மேலாடை போன்றுதான் இருக்கின்றன.
இந்த அடையாளங்களின் மற்றொரு அம்சத்தையும் பைபிள் குறிப்பிடுகிறது: “மனுஷர் . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும் இருப்பார்கள்.” மேலும், “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” (2 தீமோத்தேயு 3:2, 3; மத்தேயு 24:12) “கொடுமை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க பதம், மற்ற கொடுமையான காரியங்களோடு “மனித பரிவிரக்கமோ, உணர்வுகளோ இல்லாதிருப்பதை” அர்த்தப்படுத்துகிறது. இன்று, சின்னஞ்சிறு பிள்ளைகள்கூட, மிகவும் “கொடுமை”யானவர்களாய் நடந்துகொள்கின்றனர். மேலும், கொடூரமான குற்றச்செயல்களையும் அதிகளவில் செய்கின்றனர்.
மேலும், அதிவிரைவான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் பேராசை என்னும் களையை வித்திட்டுள்ளன. இவை, மக்கள் பெருமளவில் பழைய நெறிகளைப் புறக்கணிக்கும்படி செய்திருக்கின்றன. மற்றவர்களைப் பற்றி கொஞ்சம்கூட நினைக்காமல், தங்களுடைய தன்னல ஆசைகளை திருப்தி செய்துகொள்ளவே மக்கள் விரும்புகின்றனர். அதற்காக எதையும் செய்ய, அதை எந்த வழியிலும் அடைய விரும்புகின்றனர். அது நேர்மையற்ற வழியாய் இருந்தாலும் அதைப் பற்றி அவர்கள் சற்றும் கவலைப்படுவதே இல்லை. சூதாட்டம் இன்று பெருமளவில் அதிகரித்துக்கொண்டு போவது தன்னலத்திற்கு மற்றுமோர் சான்று. கடந்த சில ஆண்டுகளின் குற்றச்செயல் புள்ளிவிவரங்கள் இதற்கு தெளிவான ஓர் ஆதாரம்.
நம் காலங்களில், மிகப் பரவலாக இருக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்று: “மனுஷர் . . . தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்” இருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:2, 4) மக்கள் சிற்றின்பங்களையே நாடித் தேடுகின்றனர் என்பது இதற்கு ஓர் உதாரணம். ஆனால், வாழ்நாள் முழுவதும் ஒரு மணத்துணையோடு இருக்கும் பொறுப்பை அவர்கள் விரும்புவதில்லை. விளைவோ, குடும்ப உறவுகள் முறிதல், மகிழ்ச்சியற்ற மற்றும் குடும்பத்தோடு ஒட்டாத பிள்ளைகள், தனித்துவிடப்பட்ட மணத்துணைகள், பாலுறவு சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவையே.
இந்த அடையாளங்களின் மற்றொரு அம்சம், “மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும்” இருப்பார்கள் என்பதே. (2 தீமோத்தேயு 3:2) “[இன்றைய பொருளாதார] முறைமையின் உந்துகோல் தன்னலமே” என ஜெர்மன் பத்திரிகை டீ ட்ஸீட் குறிப்பிடுகிறது. எப்போதும் இல்லாத வகையில், பணத்திற்கு ஆலாய் பறப்பதே இன்று பெரும்பாலான மக்களுடைய வாழ்க்கையின் பிரதான காரியம். இந்த தன்னல வேட்டையில், மற்ற நெறிமுறைகள் ஒருபுறம் ஒதுக்கப்பட்டு விடுகின்றன.
உலக நிகழ்ச்சிகள்
மனித நெறிமுறைகளில் ஏற்பட்டிற்கும் சீர்குலைவைப் பற்றி பைபிள் விவரிக்கிறது. அதோடு, மனித குடும்பத்தை பாதிக்கும் அசாதாரணமான கொந்தளிப்பு கடைசி நாட்களை அடையாளப்படுத்திக்காட்டும் என்பதையும் முன்னறிவித்தது. உதாரணமாக, “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்.”—லூக்கா 21:10, 11.
இருபதாம் நூற்றாண்டில் உலகையே கலக்கிய நாசங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றில் அநேக ஜனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படியாக, குறுகிய காலப்பகுதியில் அதிகப்படியான மக்கள் அளவிட முடியாத நாசங்களால் பாதிக்கப்பட்டது சரித்திரத்தில் வேறெந்த காலப்பகுதியிலுமே இல்லை. உதாரணமாக, இந்தக் காலப்பகுதியில் பத்து கோடிக்கும் அதிகமானோர் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு முந்தைய நூற்றாண்டுகள் பலவற்றில் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகம். மற்றெல்லா போர்களிலிருந்து வித்தியாசமான இரண்டு போர்களை இந்த இருபதாம் நூற்றாண்டு கண்டிருக்கிறது. அவை உலகப் போர்கள் என்றழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட உலகப் போர் இதற்குமுன் கேள்விப்படாத ஒன்று.
தீய சக்தி
“பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட,” சக்தி வாய்ந்த, தீய ஆவி சிருஷ்டி இருப்பதை பைபிள் வெளிப்படுத்துகிறது. உண்மையான நெறிமுறைகளிலிருந்து மக்களை விலக்கி, ஒழுக்கக்கேடு என்னும் படுகுழியில் தள்ளுவதே அவனுடைய நோக்கம். கடைசி நாட்களில் பூமிக்குத் தள்ளப்பட்ட சாத்தான், “தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்”டிருக்கிறான் என பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 12:9, 12.
“கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவி” என பிசாசை பைபிள் விவரிக்கிறது. (எபேசியர் 2:2) அநேக மக்கள்மீது பலமான செல்வாக்கை பிசாசு செலுத்துகிறான் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. காற்றில் கலந்திருக்கும் விஷவாயுவை சில சமயங்களில் நாம் பார்க்க முடியாது. அதுபோலவே, பிசாசின் செல்வாக்கையும் அநேகர் உணர முடிவதில்லை.
உதாரணமாக, சாத்தான் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறான் என்பதை நவீன தகவல்தொடர்பு சாதனங்கள் பலவற்றில் அப்பட்டமாக பார்க்கலாம்: வீடியோக்கள், சினிமாக்கள், டெலிவிஷன், இன்டர்நெட், விளம்பரங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள். அவற்றில் வரும் குறிப்புகளில் பல, முக்கியமாக ஒன்றுமறியாத அப்பாவி இளைஞர்களின் கவனத்தை சுண்டியிழுப்பதாக உள்ளன. இனப்பற்று, மாயமந்திரம், ஒழுக்கக்கேடு, குரூரமான வன்முறை போன்ற வெறுக்கத்தக்க காரியங்கள் நிறைந்தவையாய்தான் இவை இருக்கின்றன.
நம் நாட்களில் உலகில் காணப்படும் நிலைமைகளுக்கும், கடைசி நாட்கள் என பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரிப்புகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைப் பார்த்து நேர்மை இருதயமுள்ள மக்கள் அநேகர் வியக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டுக்கு முன் சரித்திரத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் பைபிள் விவரிப்பிற்கு ஓரளவு பொருந்துவதாக இருந்தன. ஆனால், இருபதாம் நூற்றாண்டின்போதும் இப்போது இருபத்தோராம் நூற்றாண்டிலும் இந்த அடையாளங்களின் எல்லா அம்சங்களையும் பார்க்கலாம்.
வருகிற புதிய சகாப்தம்
மனிதகுலம் முழுவதுமே பூண்டோடு அழிக்கப்படும் என நம்புவதோ, அல்லது இப்போது இருப்பதுபோல் தான் எப்போதும் இருக்கும் என நம்புவதோ, இரண்டுமே சரியல்ல. மாறாக, இன்று பூமியை ஆக்கிரமித்து இருக்கும் தற்போதைய உலக சமுதாயம், முற்றிலும் புதிய ஒன்றால் மாற்றீடு செய்யப்படும் என பைபிள் தெளிவாக காட்டுகிறது.
கடைசி நாட்களுக்குரிய அடையாளங்களின் பல அம்சங்களை வரிசையாக சொல்லியபின் இயேசு இவ்வாறு சொன்னார்: “அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.” (லூக்கா 21:31) கடவுளுடைய பரலோக ராஜ்யமே, இயேசுவினுடைய பிரசங்கத்தின் முக்கிய பொருள். (மத்தேயு 6:9, 10) இந்த ராஜ்யத்தின் ராஜாவாக கடவுள் அவரை நியமித்திருக்கிறார். இந்த அரசாங்கம் விரைவில் இந்த பூமி முழுவதையுமே ஆளும்.—லூக்கா 8:1; வெளிப்படுத்துதல் 11:15; 20:1-6.
கடைசி நாட்களின் முடிவில், கிறிஸ்துவின் ஆட்சியில் கடவுளுடைய பரலோக ராஜ்யம், அதன் எதிரிகள் அனைவரையுமே அழித்துவிடும். சாத்தானையும் அவனை ஆதரிப்போரையும் அழிக்கும். ஒழுக்கநெறிகளே இல்லாத இந்த சமுதாயத்தை நீதியான புதிய உலகால் மாற்றீடு செய்யும். (தானியேல் 2:44) இந்தப் புதிய உலகில், நந்தவனமாக மாற்றப்பட்ட பூமியில், நேர்மை இருதயமுள்ள மக்கள் நித்திய ஜீவனை அனுபவிப்பர்.—லூக்கா 23:43; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.
இன்றைய ஒழுக்கநெறிகளின் சீர்குலைவை அருவருப்போரும், இன்றைய நிலைமையைக் குறித்த கடைசி நாட்களின் கூட்டு அடையாளத்தை சரியாக புரிந்துகொள்வோரும், மகோன்னதமான எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கலாம். இதற்காக நாம் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அவர் நம்மேல் அக்கறை உடையவராய் இருக்கிறார். அவர் படைத்த பூமிக்காக அருமையான நோக்கத்தை உடையவராய் இருக்கிறார்.—சங்கீதம் 37:10, 11, 29; 1 பேதுரு 5:6, 7.
நம் அன்பான படைப்பாளரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களை அழைக்கிறார்கள். நாடித்தேடும் நபர் எல்லாருக்கும் தூய, ஒழுக்கநெறிகளை உடைய உலகத்தில் வாழும் எதிர்பார்ப்பை கடவுள் வைத்திருக்கிறார். பைபிள் சொல்கிறவிதமாக: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3.
[பக்கம் 10-ன் படம்]
நேர்மை இருதயமுள்ள மக்கள் பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அனுபவிப்பர்