யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர் ஆகியோருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
கலாத்தியாவில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலரை யூத மதவாதிகள், தூய வழிபாட்டிலிருந்து திசைதிருப்புவதைக் கேள்விப்பட்ட அப்போஸ்தலன் பவுல், “கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு” வலிமையான ஒரு கடிதத்தை எழுதுகிறார். (கலா. 1:2) இதில் அவர்களுக்கு நேரடியான ஆலோசனைகளை வழங்குகிறார், அவர்களைக் கடுமையாகக் கண்டித்தும் எழுதுகிறார். இதை பொ.ச. 50-க்கும் 52-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதுகிறார்.
சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு எபேசு, பிலிப்பி, கொலோசெ ஆகிய பட்டணங்களிலுள்ள சபைகளுக்குக் கடிதம் எழுதுகிறார். அவர் ரோமில் ‘இயேசுவினிமித்தம் கட்டுண்டவராய்’ இருக்கிற சமயம் அது. அக்கடிதங்களில் அவர்களுக்குச் சிறந்த அறிவுரைகளையும் ஊக்கமூட்டும் அன்பான விஷயங்களையும் எழுதுகிறார். (எபே. 3:1) இந்த நான்கு புத்தகங்களிலும் உள்ள தகவல்களுக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் இன்று நாம் பயனடையலாம்.—எபி. 4:12.
‘நீதிமான்களாக்கப்படுவது’—எவ்வாறு?
பவுல்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையைக் குலைத்துப்போட யூத மதவாதிகள் தந்திரமாக முயலுகிறார்கள். ஆகவே, தான் ஓர் அப்போஸ்தலன் என்பதை நிரூபிப்பதற்காக அவர் சில விவரங்களை அளிக்கிறார். (கலா. 1:11–2:14) “இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை” என்று சொல்லி அவர்களுடைய பொய்ப் போதனைகளை அவர் அம்பலப்படுத்துகிறார்.—கலா. 2:15.
‘நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள்,’ கிறிஸ்தவர்களுக்குரிய சுதந்திரத்தைப் பெறும்பொருட்டு அவர்களை கிறிஸ்து ‘மீட்டிருப்பதை’ பவுல் குறிப்பிடுகிறார். “நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், . . . நிலைகொண்டிருங்கள்” என்று கலாத்தியருக்குக் கடுமையாய்ப் புத்திமதி அளிக்கிறார்.—கலா. 4:4, 5; 5:1.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
3:16-18, 28, 29—ஆபிரகாமிடம் செய்யப்பட்ட உடன்படிக்கை இப்போதும் நடைமுறையில் உள்ளதா? ஆம். நியாயப்பிரமாண உடன்படிக்கை, ஆபிரகாமிடம் கடவுள் செய்த உடன்படிக்கையோடு கூடுதலாகக் கொடுக்கப்பட்டதே தவிர, அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டது அல்ல. ஆகவே, நியாயப்பிரமாணச் சட்டம் ‘ஒழிக்கப்பட்ட’ பிறகும்கூட ஆபிரகாமோடு செய்யப்பட்ட உடன்படிக்கை அமலில் இருந்தது. (எபே. 2:15) அதன் வாக்குறுதிகள் ஆபிரகாமின் உண்மையான ‘சந்ததிக்கு’ கொடுக்கப்பட்டன; அதாவது, அந்தச் சந்ததியின் பிரதான பாகமாகிய கிறிஸ்து இயேசுவுக்கும், அதோடு, ‘கிறிஸ்துவினுடையவர்களுக்கும்’ கொடுக்கப்பட்டன.
6:2—‘கிறிஸ்துவினுடைய பிரமாணம்’ என்பது என்ன? இயேசு கற்பித்த, கட்டளையிட்ட எல்லா விஷயங்களையும் இந்தப் பிரமாணம் உள்ளடக்குகிறது. விசேஷமாக, “ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்ற கட்டளையையும் இது உட்படுத்துகிறது.—யோவா. 13:34.
6:8—நாம் எவ்வாறு ‘ஆவிக்கென்று விதைக்கிறோம்’? கடவுளுடைய சக்தி நம்மீது தடையின்றி செயல்படும் விதத்தில் வாழ்வதன் மூலமாக நாம் ஆவிக்கென்று விதைக்கிறோம். கடவுளுடைய சக்தியை அதிகமதிகமாகப் பெற உதவும் காரியங்களில் முழு இருதயத்தோடு ஈடுபடுவதும் இதில் உட்படுகிறது.
நமக்குப் பாடம்:
1:6-9. சபையில் பிரச்சினைகள் தலைதூக்கும்போது கிறிஸ்தவ மூப்பர்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும். பைபிளைப் பயன்படுத்தி நியாயங்காட்டிப் பேசுவதன் மூலம் தவறான விவாதங்களை உடனுக்குடன் சரிசெய்ய முடியும்.
2:20. மீட்பின் ஏற்பாடு, கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள பரிசாகும். அவ்வாறே நாம் அதைக் கருத வேண்டும்.—யோவா. 3:16.
5:7-9. கெட்ட சகவாசம் ‘சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகும்படி நம்மைத் தடுக்கும்.’ ஆகவே, அப்படிப்பட்ட சகவாசத்தைத் தவிர்ப்பது ஞானமான காரியம்.
6:1, 2, 5. நாம் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு குற்றத்தைச் செய்துவிடுகையில், அதனால் வரும் மனப்பாரத்தைச் சுமப்பதற்கு ‘ஆவிக்குரியவர்கள்,’ அதாவது ஆன்மீகத் தகுதிபெற்றவர்கள் நமக்கு உதவலாம். என்றாலும், ஆன்மீகப் பொறுப்புகள் என்று வருகையில் நம்முடைய பாரத்தை நாம்தான் சுமக்க வேண்டும்.
‘கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படுதல்’
எபேசியருக்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்க வேண்டிய ஒற்றுமையை பவுல் முக்கியப்படுத்திக் காட்டுகிறார். ‘காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படும்’ என்று அவர் குறிப்பிடுகிறார். அனைவரும் ‘விசுவாசத்தில் ஒருமைப்பட்டவர்களாய்’ இருப்பதற்கு உதவ ‘மனிதர் வடிவில் வரங்களை’ கிறிஸ்து அருளியிருக்கிறார்.—எபே. 1:9; 4:8, NW, 11.
கிறிஸ்தவர்கள், கடவுளுக்குப் புகழ் சேர்ப்பதற்கும் ஒற்றுமையைக் காப்பதற்கும் ‘புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள’ வேண்டும். அதோடு, ‘கிறிஸ்துவைக் குறித்த பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருக்கவும்’ வேண்டும். அதுமட்டுமல்ல, ஆன்மீகப் போராயுதங்கள் அனைத்தையும் அணிந்துகொண்டு ‘பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கவும்’ வேண்டும்.—எபே. 4:24; 5:21, NW; 6:11.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:4-7—அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே எவ்வாறு முன்குறிக்கப்பட்டார்கள்? அவர்கள் தனி நபர்களாக அல்ல, ஒரு தொகுதியாகவே முன்குறிக்கப்பட்டார்கள். அவர்கள், ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பிறப்பிப்பதற்கு முன்னரே அவ்வாறு முன்குறிக்கப்பட்டார்கள். பாவத்தன்மையுள்ள மனிதர் உருவாகும் முன்பே, ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அறிவிக்கப்பட்டது; கிறிஸ்துவைப் பின்பற்றுகிற சிலர் பரலோகத்தில் அவருடன் ஆட்சி செய்வதுபற்றிய கடவுளின் நோக்கமும் இத்தீர்க்கதரிசனத்தில் உட்பட்டுள்ளது.—கலா. 3:16, 29.
2:2 (NW)—இந்த உலகத்தின் ஆவி எவ்வாறு காற்றைப்போல் இருக்கிறது, இது எவ்வாறு அதிகாரம் செலுத்துகிறது? இந்த “உலகத்தின் ஆவி,” அதாவது சுதந்திர மனப்பான்மையும் கீழ்ப்படியாமையும், காற்றைப்போல் எங்கும் பரவியுள்ளது. (1 கொ. 2:12) இந்த ஆவி பலமாகச் செல்வாக்கு செலுத்துகிறது; அதோடு, தொடர்ந்து நீடித்தும் வருகிறது. இவ்வாறு இது உலகெங்கும் அதிகாரம் செலுத்துகிறது.
2:7—அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பூமியில் இருக்கையிலேயே எவ்வாறு ‘உன்னதங்களில்’ இருக்க முடியும்? உன்னதங்களில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருப்பது, வாக்குறுதி அளிக்கப்பட்டபடியே அவர்கள் பரலோகத்திற்குச் சென்றுவிட்டதைக் குறிப்பதில்லை. மாறாக, ‘வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியின் மூலம் முத்திரைபோடப்பட்டிருப்பதால்,’ அவர்கள் கடவுளுக்கு முன்பாக உயர்த்தப்பட்ட நிலையில் இருப்பதையே குறிக்கிறது.—எபே. 1:13, 14.
நமக்குப் பாடம்:
4:8, 11-15. இயேசு கிறிஸ்து “சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி,” அதாவது சாத்தானுடைய செல்வாக்கின் கீழுள்ள மனிதரைக் கைவசப்படுத்தி கிறிஸ்தவ சபையைப் பலப்படுத்துவதற்காக அவர்களை வரங்களாகப் பயன்படுத்துகிறார். சபையை முன்நின்று வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கியிருப்பதன் மூலமும் சபையின் ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதன் மூலமும் ‘அன்புடன் . . . கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், வளர’ முடியும்.—எபி. 13:7, 17.
5:22-24, 33. ஒரு மனைவி, தன் கணவருக்குக் கீழ்ப்பட்டிருப்பதோடு அவருக்கு மரியாதை கொடுப்பதும் அவசியம். ‘சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியை’ அதாவது குணத்தைக் காட்டுவதன் மூலம் அவள் இதைச் செய்யலாம். அதோடு, அவரைப் பற்றி மதிப்புடன் பேசுவதன் மூலமும் அவர் செய்கிற தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பதன் மூலமும் அவள் இதைச் செய்யலாம்.—1 பே. 3:3, 4; தீத். 2:3–5.
5:25, 28, 29. ஒரு கணவன் தன்னைப் ‘போஷித்துக் காப்பாற்றுவது’ போல தன் மனைவியையும் போஷித்துக் காப்பாற்ற வேண்டும். சரீர ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் அவளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவளோடு போதுமான நேரத்தைச் செலவிட்டு, சொல்லிலும் செயலிலும் கனிவாக நடத்துவதன் மூலம் அவளை நன்கு பராமரிக்க வேண்டும்.
6:10-13. பிசாசின் சேனைகளோடு எதிர்த்துப் போராட கடவுள் கொடுத்துள்ள போராயுதங்களை முழு இருதயத்தோடு அணிந்துகொள்வது அவசியம்.
‘ஒரே ஒழுங்காய் நடந்துகொள்ளுங்கள்’
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் முழுவதிலும் அன்பைப் பற்றியே பவுல் பெரிதும் வலியுறுத்துகிறார். ‘உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருக . . . வேண்டுதல் செய்கிறேன்’ என்று அவர் கூறுகிறார். மிதமிஞ்சிய தன்னம்பிக்கை என்னும் கண்ணியில் சிக்கிவிடாதிருக்க, “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” என்று அவர் அறிவுரை வழங்குகிறார்.—பிலி. 1:9, 11; 2:12.
‘பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடரும்படி’ முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களை பவுல் ஊக்கப்படுத்துகிறார். “நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக” என்று அவர் குறிப்பிடுகிறார்.—பிலி. 3:14–16.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:23 (NW)—எந்த ‘இரண்டினால்’ பவுல் நெருக்கப்பட்டார், ஆனால் எந்த விடுதலைக்காக அவர் ஆசைப்பட்டார்? சூழ்நிலை காரணமாக, வாழ்வா சாவா என்ற நெருக்கடியில் பவுல் இருந்திருக்கலாம். (பிலி. 1:21) என்றாலும், இவை இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் என்பதைக் குறிப்பிடாமல், எதை விரும்பினார் என்பதையே அவர் தெரியப்படுத்துகிறார். அதாவது, ‘கிறிஸ்துவோடு இருப்பதற்காக விடுதலையையே’ அவர் விரும்பினார். (பிலி. 3:20, 21; 1 தெ. 4:16) இந்த விடுதலை கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது நடைபெறும். அப்போது அவருக்காக யெகோவா ஏற்பாடு செய்துள்ள வெகுமதியைப் பெறுவார்.—மத். 24:3.
2:12, 13—கடவுள் எவ்விதத்தில் ‘விருப்பத்தையும் செய்கையையும் நம்மில் உண்டாக்குகிறார்’? நம்மால் முடிந்தளவு மிகச் சிறந்த விதத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான ஆசையை நம் இருதயத்திலும் மனதிலும் அதிகமாக வளர்த்துக்கொள்வதற்கு அவருடைய சக்தி துணைபுரிகிறது. ஆகவே, நம்முடைய ‘இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுவதற்கு’ உதவ யெகோவா தயாராய் இருக்கிறார்.
நமக்குப் பாடம்:
2:5-11. மனத்தாழ்மை காட்டுவது பலவீனம் அல்ல, பலமே என்பதை இயேசுவின் உதாரணம் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, தாழ்மையுள்ளவர்களை யெகோவா உயர்த்துகிறார் எனவும் பைபிள் சொல்கிறது.—நீதி. 22:4.
3:13. “பின்னானவை” என்பது, கைநிறைய சம்பாதிக்கும் வேலையாகவோ, பணக்காரக் குடும்பத்தினராய் இருந்ததால் கிடைத்த பாதுகாப்பாகவோ இருக்கலாம். அவை, கடந்த காலத்தில் நாம் செய்த மோசமான பாவங்களாகவும்கூட இருக்கலாம்; அவற்றிலிருந்து மனந்திரும்பி இப்போது ‘பரிசுத்தமாக்கப்பட்டிருக்கலாம்.’ (1 கொ. 6:11) இந்தக் காரியங்களையெல்லாம் மறந்துவிட்டு, அதாவது அவற்றைக் குறித்துக் கவலைப்படுவதை விட்டுவிட்டு ‘முன்னானவற்றை நாட’ வேண்டும்.
4:14-16. பிலிப்பியர்கள் பரம ஏழைகளாக இருந்தபோதிலும் தாராளமாய்க் கொடுப்பதில் நமக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.—2 கொ. 8:1–6.
‘விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாய் இருத்தல்’
கொலோசெயருக்கு எழுதிய கடிதத்தில் பொய்ப் போதகர்களின் தவறான கருத்துகளை பவுல் வெட்டவெளிச்சமாக்குகிறார். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் அல்ல, ‘விசுவாசத்தில் நிலைத்திருப்பதன்’ மூலமே இரட்சிப்பு கிடைக்கிறது என அவர் நியாயங்காட்டிப் பேசுகிறார். ‘கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, . . . விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாயும்’ இருக்கும்படி கொலோசெயர்களுக்கு பவுல் ஊக்கமூட்டுகிறார். அவ்வாறு உறுதிப்பட்டவர்களாய் இருப்பது, என்ன செய்யும்படி அவர்களைத் தூண்ட வேண்டும்?—கொலோ. 1:22; 2:6, 7.
“இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். தேவசமாதானம் [“கிறிஸ்து அருளுகிற சமாதானம்,” NW] உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது” என பவுல் எழுதுகிறார். நீங்கள் “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்கிறார். சபையாரல்லாதவர்களைப் பற்றிக் கூறுகையில் அவர்களிடம் ‘ஞானமாய் நடந்துகொள்ளுமாறு’ சொல்கிறார்.—கொலோ. 3:14, 15, 24; 4:5.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:8 (NW)—‘இவ்வுலகின் அடிப்படைக் காரியங்களான’ எவற்றைக் குறித்து பவுல் எச்சரித்தார்? இவை சாத்தானுடைய உலகின் அடிப்படைக் காரியங்கள், அல்லது நியமங்கள், ஆகும். இவையே இந்த உலகை உருவமைக்கின்றன, வழிநடத்துகின்றன, செயல்படத் தூண்டுகின்றன. (1 யோ. 2:16) இந்த உலகின் தத்துவங்கள், பொருளாசை, பொய் மதங்கள் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
4:16—லவோதிக்கேயருக்கு எழுதிய கடிதம் ஏன் பைபிளில் இடம்பெறவில்லை? ஒருவேளை நமக்கு இன்று தேவைப்படுகிற தகவல்கள் அதில் இல்லாதிருந்ததே அதற்குக் காரணமாய் இருக்கலாம். அல்லது மற்ற அதிகாரப்பூர்வ கடிதங்களில் சொல்லப்பட்டுள்ள தகவல்களே அதில் திரும்பக் கூறப்பட்டிருக்கலாம்.
நமக்குப் பாடம்:
1:2, 20. கடவுளுடைய அளவற்ற கருணையால் செய்யப்பட்ட ஏற்பாடே இயேசுவின் மீட்கும்பலி. இதன் மூலம் நாம் சுத்தமான மனசாட்சியையும் மன சமாதானத்தையும் பெற முடிகிறது.
2:19, 23. “மாயமான தாழ்மை” என்பது, மற்றவர்களைக் கவருவதற்காகத் தாழ்மையாக இருப்பதுபோல் நடிப்பதாகும். இவ்வாறு நடிப்பவர்கள், ஒருவேளை பொருட்செல்வங்களை நிராகரிக்கலாம், அல்லது உடலை வருத்திக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் ‘மாம்ச சிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிறதையே’ இது காட்டுகிறது.