கிறிஸ்துவின் மனப்பான்மையை வெளிக்காட்டுங்கள்
“பொறுமையும் ஆறுதலும் அளிக்கும் கடவுள், கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே மனப்பான்மை உங்களுக்குள் இருக்கும்படி அருள் புரிவாராக.”—ரோமர் 15:5, Nw.
1. ஒருவருடைய வாழ்க்கையை அவருடைய மனப்பான்மை எப்படி பாதிக்கலாம்?
ஒருவரது வாழ்க்கையின் வெற்றி தோல்விக்கும், இன்ப துன்பத்துக்கும் அவரது மனப்பான்மைதான் காரணம். ஒருவருக்கு, ஆர்வமற்ற அல்லது ஊக்கமான மனப்பான்மை இருக்கலாம்; நம்பிக்கையான அல்லது நம்பிக்கையற்ற மனப்பான்மை இருக்கலாம்; எதிர்க்கும் அல்லது ஒத்துழைக்கும் மனப்பான்மை இருக்கலாம்; குறைகூறும் அல்லது பாராட்டும் மனப்பான்மை இருக்கலாம். ஒருவர் எப்படி வெவ்வேறு சூழ்நிலைகளை சமாளிக்கிறார், இவரிடம் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பது அவருடைய மனப்பான்மையைப் பொருத்ததே. சரியான மனப்பான்மை உள்ளவர் கஷ்டமான சூழ்நிலைமையிலும் சந்தோஷம் கைநழுவாதபடி பார்த்துக்கொள்வார். பச்சைக் கண்ணாடி போட்டவருக்கு பார்ப்பதெல்லாம் பச்சை என்பதுபோல், தவறான மனப்பான்மை உள்ளவரின் கண்களுக்கோ திருப்தியான வாழ்க்கையிலும் எதைப் பார்த்தாலும் குற்றமாகத்தான் தெரியும்.
2. மனப்பான்மைகளை ஒருவர் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்?
2 நல்ல மனப்பான்மையையும் கெட்ட மனப்பான்மையையும் ஒருவரால் கற்றுக்கொள்ள முடியும். சொல்லப்போனால் கற்றுக்கொள்ளப்படுகின்றன. பச்சிளம் குழந்தையைப் பற்றி காலியர்ஸ் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “மொழியையும் வேறு பல திறமைகளையும் குழந்தை கற்றுக்கொள்வதைப் போலத்தான் மனப்பான்மைகளையும் கற்றுக்கொள்ள அல்லது வளர்த்துக்கொள்ள நேரிடுகிறது.” அப்படியென்றால், மனப்பான்மைகளை ஒருவர் எப்படி கற்றுக்கொள்கிறார்? அவர் பல வழிகளில் கற்றுக்கொள்கிறார். குறிப்பாக, வளரும் சூழலும், நண்பர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறதாவது: “நம்மோடு நெருங்கிப் பழகுவோரின் மனப்பான்மைகளை மெல்ல மெல்ல நாம் ஈர்த்துக்கொள்கிறோம் அல்லது கற்றுக்கொள்கிறோம்.” இதற்கு ஒப்பான ஒன்றை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பைபிளும் சொன்னது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”—நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33, தி.மொ.
சரியான மனப்பான்மைக்கு முன்மாதிரி
3. மனப்பான்மையைக் குறித்ததில் தலைசிறந்து விளங்குபவர் யார், அவருடைய முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
3 மற்ற எல்லாவற்றிலும் முன்மாதிரியாய் திகழும் இயேசு கிறிஸ்துவே மனப்பான்மை என்ற விஷயத்திலும் தலைசிறந்து விளங்குகிறார். “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” என்றார் அவர். (யோவான் 13:15) இயேசுவைப்போல் இருக்க முதலாவதாக அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.a அப்போஸ்தலனாகிய பேதுரு சிபாரிசு செய்வதற்கு இசைய நடக்கும் நோக்கத்துடனே நாம் இயேசுவின் வாழ்க்கை சரிதையைப் படிக்க வேண்டும். அவர் சொன்னதாவது: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.” (1 பேதுரு 2:21) முடிந்த மட்டும் இயேசுவைப்போல் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய குறிக்கோள். அதற்கு அவருடைய மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
4, 5. ரோமர் 15:1-3-ல், இயேசுவின் எந்த மனப்பான்மை வலியுறுத்திக் காட்டப்படுகிறது, கிறிஸ்தவர்கள் எவ்வாறு அவரைப் பின்பற்றலாம்?
4 கிறிஸ்து இயேசுவின் மனப்பான்மையே நமக்கும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் பெற பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தின் 15-ம் அதிகாரம் நமக்கு உதவுகிறது. இந்த அதிகாரத்தின் முதல் சில வசனங்களில், இயேசுவின் முதன்மையான குணத்தை பவுல் குறிப்பிடுகிறார். “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.”—ரோமர் 15:1-3.
5 தங்களுக்குப் பிரியமானதை மட்டுமே செய்யாமல் மற்றவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய மனத்தாழ்மையுடன் தயாராய் இருக்கும்படி இயேசுவின் மனப்பான்மையைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ‘பலமுள்ளோருக்கு’ அழகு பணிவு; இந்தப் பண்பிருந்தால் ஒருவர் மற்றவர்களுக்கு சேவை செய்ய தயாராயிருப்பார். எக்காலத்திலும் வாழ்ந்தவர்களுள் ஆன்மீக பலமிக்கவராக திகழ்ந்த இயேசு, தம்மைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மத்தேயு 20:28) கிறிஸ்தவர்களாக நாமும் ‘பலவீனருக்கும்’ மற்றவர்களுக்கும் சேவைசெய்ய விரும்புகிறோம்.
6. எதிர்ப்பையும் நிந்தனையையும் இயேசு எதிர்ப்பட்ட போது நடந்துகொண்ட விதத்தை நாம் எப்படி பின்பற்றலாம்?
6 இயேசு எப்போதும் நல்லதையே நினைத்தார், நல்லதையே செய்தார். இது அவரிடமிருந்த மற்றொரு தனிச்சிறப்புமிக்க குணம். கடவுளைச் சேவிப்பது சம்பந்தப்பட்ட தம் நல்லெண்ணத்தில் மற்றவர்களின் கெட்ட மனப்பான்மை நுழைய அவர் ஒருபோதும் இடமளிக்கவில்லை; நாமும் இடமளிக்கக்கூடாது. உண்மையுடன் கடவுளை வணங்கியதன் நிமித்தம் இயேசு நிந்திக்கப்பட்டார், துன்புறுத்தப்பட்டார்; ஆனால் குறைகூறாமல் பொறுமையுடன் அவற்றை சகித்தார். “பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மை” செய்ய விரும்பும் எவருக்கும், விசுவாசமும் புரிந்துகொள்ளுதலும் இல்லாத மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
7. இயேசு எவ்வாறு பொறுமையோடு நடந்துகொண்டார், நாம் எப்படி அவ்வாறு நடந்துகொள்ள முடியும்?
7 மற்ற வழிகளிலும் இயேசு சரியான மனப்பான்மையை வெளிக்காட்டினார். யெகோவாவினிடமாக அவர் ஒருநாளும் தம் பொறுமையை இழந்துவிடவில்லை. கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேறுவதற்கு அவர் பொறுமையுடன் காத்திருந்தார். (சங்கீதம் 110:1; மத்தேயு 24:36; அப்போஸ்தலர் 2:32-36; எபிரெயர் 10:12, 13) மேலும், தம்மைப் பின்பற்றியவர்களிடமும் இயேசு பொறுமையை இழந்துவிடவில்லை. அவர் ‘சாந்தமுள்ளவராக’ இருந்ததனால், “என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்; அவருடைய போதனை ஊக்கத்தையும், புத்துணர்ச்சியையும் தந்தது. மேலும் “மனத்தாழ்மை” இருந்ததால், போலியான பெருமையோ அகம்பாவமோ ஒருபோதும் அவரிடம் தலைதூக்கவில்லை. (மத்தேயு 11:29) இயேசுவின் இக்குணங்களைப் பின்பற்றும்படி சொல்கையில் பவுல் பின்வருமாறு நம்மை ஊக்குவிக்கிறார்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே [“மனப்பான்மையே,” NW] உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.”—பிலிப்பியர் 2:5-7.
8, 9. (அ) தன்னலமற்ற மனப்பான்மையை வளர்ப்பதற்கு நாம் ஏன் உழைக்க வேண்டும்? (ஆ) இயேசுவின் முன்மாதிரியை முழுமையாக பின்பற்ற இயலாமற்போனால் நாம் ஏன் சோர்வடையக் கூடாது, இதில் பவுல் எவ்வாறு நல்ல முன்மாதிரியாக திகழ்ந்தார்?
8 பிறருக்கு செய்யும் சேவையும் பிறர் நலமுமே நமக்கு முக்கியம் என சொல்வது எளிது. ஆனால், நம்முடைய மனநிலையை நேர்மையுடன் சோதித்துப் பார்த்தால் முழுக்க முழுக்க நம் இருதயம் அந்த எண்ணத்தை வெளிப்படுத்தாதது தெரிய வரும். ஏன் இந்த நிலை? அதற்கு முதல் காரணம், ஆதாம் ஏவாளிடமிருந்து தன்னல குணங்களை நாம் சொத்தாக பெற்றிருப்பது; இரண்டாவதாக, தன்னலம் பிடித்த உலகில் நாம் வாழ்வது. (எபேசியர் 4:17, 18) ஆகவே, தன்னல மனப்பான்மையை ஓரங்கட்ட விரும்பினால், நம் இரத்தத்தில் ஊறிய அபூரணத்திற்கு எதிராக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத் திடதீர்மானமும் முயற்சியும் தேவை.
9 எளிதில் வெளிப்படும் நம் அபூரணம் இயேசுவின் பரிபூரண முன்மாதிரிக்கு எதிர்மாறானதாய் உள்ளது; எனவே சிலசமயங்களில் நாம் சோர்வடையலாம். இயேசுவின் மனப்பான்மையை நம்மால் பின்பற்ற முடியுமா என்ற சந்தேகமும் எழலாம். ஆனால், பவுலின் ஊக்கமூட்டும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது.” (ரோமர் 7:18, 19, 22, 23) கடவுளுடைய சித்தத்தை செய்ய பவுல் விரும்பியபோதிலும் அவருடைய அபூரணம் அடிக்கடி அவருக்கு தடையாய் இருந்தது உண்மைதான். ஆனால் அவருடைய மனப்பான்மை—யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் அவர் கருதிய விதமும் அவருடைய எண்ணமும்—அனைவருமே பின்பற்றத்தக்கதாய் அமைந்தது. அவரால் முடிந்ததென்றால் நம்மாலும் முடியும்.
தவறான மனப்பான்மைகளை மாற்றிக்கொள்ளுதல்
10. பிலிப்பியர் என்ன சிந்தையை விருத்திசெய்யும்படி பவுல் ஊக்குவித்தார்?
10 தவறான மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் முடியுமா? முடியும். முதல் நூற்றாண்டிலிருந்த சில கிறிஸ்தவர்களால் அவ்வாறு உண்மையிலேயே மாற்றிக்கொள்ள முடிந்தது. பிலிப்பியருக்கு எழுதின தன் நிருபத்தில் சரியான மனப்பான்மை எந்தளவுக்குத் தேவை என பவுல் குறிப்பிட்டார். ‘நான் [பரலோக வாழ்க்கையைப் பெற முன்னதாகவே உயிர்த்தெழுதலை] அடைந்தாயிற்று [என்றோ] முற்றும் தேறினவனானேன் என்றோ எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக் கடவோம்’ என அவர் எழுதினார்.—பிலிப்பியர் 3:12-15.
11, 12. சரியான மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள என்னென்ன வழிகளில் யெகோவா உதவுகிறார்?
11 கிறிஸ்தவரான பின்னர் முன்னேற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று ஒருவர் நினைத்தால் அது தவறு என்று பவுலின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. கிறிஸ்துவின் மனப்பான்மை அந்த நபரிடம் இல்லை என்பதையும் அது காட்டுகிறது. (எபிரெயர் 4:11; 2 பேதுரு 1:10; 3:14) அத்தகைய ஒருவர் தன்னை மாற்றிக்கொள்ளவே முடியாதா? நிச்சயம் முடியும். நம் மனப்பான்மையை உண்மையிலேயே மாற்றிக்கொள்ள விரும்பினால் கடவுள் நமக்கு உதவுவார். “எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்” என்றும் பவுல் சொல்கிறார்.—பிலிப்பியர் 3:15.
12 எனினும், எத்தகைய மனப்பான்மைகள் சரியானவை என்பதை யெகோவா நமக்கு வெளிப்படுத்த, நம்முடைய பங்கில் செய்ய வேண்டியதை நாம் சரிவர செய்ய வேண்டும். ‘வேறே சிந்தையுடையவர்கள்,’ ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ அளிக்கும் கிறிஸ்தவ பிரசுரங்களின் உதவியுடன் கடவுளுடைய வார்த்தையை ஜெபத்துடன் படித்தால், அது சரியான மனநிலையை வளர்த்துக்கொள்ள உதவும். (மத்தேயு 24:45) “[கடவுளின்] சபையை மேய்ப்பதற்கு” பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்ட கிறிஸ்தவ மூப்பர்களும் இத்தகைய உதவியை சந்தோஷமாக அளிப்பார்கள். (அப்போஸ்தலர் 20:28) நாம் அபூரணர் என்பதை மனதில் வைத்து அன்புடன் நமக்கு உதவுவதற்காக யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! அந்த உதவியை நாம் மனமார ஏற்றுக்கொள்வோமாக.
மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்
13. யோபுவைப் பற்றிய பைபிள் பதிவிலிருந்து, சரியான மனப்பான்மையைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?
13 சரித்திரப்பூர்வ முன்மாதிரிகளைக் குறித்து சிந்திப்பது நம்முடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்ள நமக்கு உதவலாமென ரோமர் 15-ம் அதிகாரத்தில் பவுல் குறிப்பிடுகிறார். “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” என்றார் அவர். (ரோமர் 15:4) கடந்த காலங்களில், யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் சிலர், தங்கள் மனப்பான்மையை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு யோபுவை எடுத்துக்கொள்வோம்; அவர் நற்குணம் படைத்தவராய் இருந்தார். தீமை யெகோவாவிடமிருந்து வருவதாக அவர் ஒருபோதும் சொல்லவில்லை. கடவுள் மீதிருக்கும் நம்பிக்கையை தான் அனுபவிக்கும் துன்பம் கெடுத்துப்போட அவர் துளியும் அனுமதிக்கவில்லை. (யோபு 1:8, 21, 22) எனினும் தன் பக்கம் நீதியிருப்பதாக நிரூபிக்க நினைத்தார். இந்த மனப்பான்மையை மாற்றிக்கொள்வதில் யோபுக்கு உதவ யெகோவா எலிகூவை தூண்டினார். தனக்கேற்பட்ட அவமானமாய் யோபு அதை கருதாமல், தன் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து உடனே செயல்பட்டார்.—யோபு 42:1-6.
14. நம்முடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்வதற்கு அறிவுரை கொடுக்கப்பட்டால், நாம் எவ்வாறு யோபுவைப்போல் நடந்துகொள்ளலாம்?
14 நம்முடைய மனப்பான்மை சரியல்ல என்பதாக உடன் கிறிஸ்தவர் ஒருவர் அன்போடு சொன்னால், யோபுவைப் போல் நாம் நடந்துகொள்வோமா? யோபுவைப் போலவே நாமும் ‘ஒருபோதும் தேவனைப்பற்றி குறைசொல்லாமல்’ இருப்போமாக. (யோபு 1:22) நாம் அநியாயமாய் துன்பப்படுகையில், நம்முடைய கஷ்டங்களுக்கு யெகோவா காரணம் என்று கனவிலும் நினையாதிருப்போமாக. யெகோவாவின் சேவையில் எத்தகைய சிலாக்கியங்களை அனுபவித்தாலும் நாம் இன்னும் “அப்பிரயோஜனமான ஊழியக்காரர்”தான்; இதை நினைவில் வைத்து, நாம் செய்வதே சரியென விவாதிப்பதை தவிர்ப்போமாக.—லூக்கா 17:10.
15. (அ) இயேசுவைப் பின்பற்றினோர் சிலர் என்ன தவறான மனப்பான்மையைக் காட்டினார்கள்? (ஆ) பேதுரு எவ்வாறு சிறந்த மனப்பான்மையை வெளிக்காட்டினார்?
15 முதல் நூற்றாண்டில், இயேசு பேசியதைக் கேட்ட சிலர், தவறான மனப்பான்மையை வெளிக்காட்டினர். ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு, புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒன்றைச் சொன்னார். “அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்” என்று சொன்னார்கள். இப்படி பதிலளித்தவர்களின் மனப்பான்மை சரியல்ல என்பது தெளிவாகவே தெரிந்தது. அவர்களின் மனப்பான்மை சரியாக இல்லாததால்தான் இயேசு சொல்வதைக் கேட்டு நடக்க அவர்களுக்கு மனமில்லை. “அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்” என பதிவு சொல்கிறது. அப்படியென்றால் அவர்கள் எல்லாருமே தவறான மனப்பான்மையை வெளிக்காட்டினார்களா? இல்லை. பதிவு தொடர்ந்து சொல்வதை கவனியுங்கள்: “அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்” என்று கேட்டார். பின்பு தன் கேள்விக்குத் தானே பதிலளிப்பவராய், “நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்று சொன்னார். (யோவான் 6:60, 66-68) என்னே சிறந்த மனப்பான்மை! வேத வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கப்படும்போது அல்லது விளக்கம் மாற்றப்படும்போது உடனடியாக அவற்றை ஜீரணிக்க முடியாதிருக்கலாம்; ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் பேதுருவைப் போல் நாம் நடந்துகொள்வது நல்லதல்லவா? தொடக்கத்தில் சில விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதினால் யெகோவாவைச் சேவிப்பதை நிறுத்திவிடுவது அல்லது ‘ஆரோக்கியகரமான வார்த்தைகளின் மாதிரிக்கு’ எதிராக பேசுவது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும்!—2 தீமோத்தேயு 1:13.
16. இயேசுவின் நாளிலிருந்த யூத மதத்தலைவர்கள் என்ன மோசமான மனப்பான்மையை வெளிக்காட்டினர்?
16 முதல் நூற்றாண்டின் யூத மதத்தலைவர்களிடம் இயேசுவின் மனப்பான்மை துளியும் இல்லை. எக்காரணத்தைக் கொண்டும் இயேசு சொல்வதற்குச் செவிசாய்க்கக் கூடாது என்ற அவர்களுடைய பிடிவாதம், லாசருவை கல்லறையிலிருந்து இயேசு உயிர்த்தெழுப்பியபோது வெளிப்படையாய் தெரிந்தது. இயேசு கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை நல்மனம் படைத்தவர் தெளிவாக புரிந்துகொள்ள அந்த அற்புதமே போதுமானதாய் இருந்திருக்கும். ஆனால், நாம் வாசிப்பதாவது: “அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.” அதற்கு அவர்கள் கண்ட வழி? “அந்நாள்முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.” இயேசுவைக் கொல்லுவதற்கு சதிசெய்ததுடன் நிறுத்திக்கொள்ளவில்லை; அவர் அற்புதங்களை நடப்பிப்பவர் என்பதற்கு உயிருள்ள அத்தாட்சியாய் திகழ்ந்தவர்களையே கொன்றுபோட அவர்கள் முயன்றனர். “பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.” (யோவான் 11:47, 48, 53; 12:9-11) அப்படிப்பட்ட மனப்பான்மை நம்மிடமிருந்து, உண்மையில் சந்தோஷப்பட வேண்டிய விஷயங்களுக்கு சந்தோஷப்படாமல் நாம் எரிச்சலடைந்தால் அல்லது நிலைகுலைந்து போனால் அது எவ்வளவு வெறுக்கத்தக்கதாக இருக்கும்! ஆம், அது ஆபத்தானதும்தான்!
கிறிஸ்துவின் மனப்பான்மையைப் பின்பற்றுதல்
17. (அ) என்ன சந்தர்ப்பங்களில் தானியேல் பயப்படாமல் நடந்துகொண்டார்? (ஆ) இயேசு எப்படி தைரியத்தை வெளிக்காட்டினார்?
17 எப்போதும் யெகோவாவின் ஊழியர்கள் நல்ல மனநிலையை வெளிக்காட்டுகின்றனர். ஒருசமயம் தானியேலின் பகைவர்கள் சதிசெய்தனர். முப்பது நாட்கள் வரையில் அரசனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையோ மனிதனையோ நோக்கி விண்ணப்பம் செய்யக்கூடாது என்ற ஒரு சட்டத்தைப் பிறப்பிக்கும்படி செய்தனர். அவர் 30 நாட்களுக்கு கடவுளிடம் ஜெபிக்காமல் இருந்தாரா? இருக்கவில்லை; அவர் பயப்படாமல், தன் வழக்கத்தின்படியே நாள்தோறும் மூன்று வேளையும் யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபித்துவந்தார். (தானியேல் 6:6-17) இயேசுவும் அவ்வாறே தம்முடைய பகைவர்களுக்குப் பயப்படவில்லை. ஓர் ஓய்வுநாளின்போது, சூம்பின கையுள்ள ஒருவனை அவர் எதிர்ப்பட்டார். ஓய்வுநாளில் தாம் சுகப்படுத்துவது அங்கிருந்த பல யூதர்களுக்குப் பிடிக்காது என்பது இயேசுவுக்குத் தெரியும். அதைப் பற்றிய அவர்களுடைய கருத்தை நேரடியாகவே கேட்டார். அவர்கள் பதில் சொல்லாதபோது, இயேசு அந்த மனிதனைச் சுகப்படுத்தினார். (மாற்கு 3:1-6) தமக்கு சரியென பட்டதை செய்ய அவர் ஒருபோதும் தயங்கவில்லை.
18. சிலர் ஏன் நம்மை எதிர்க்கிறார்கள், ஆனால் அவர்களுடைய கெட்ட மனப்பான்மையைக் காண்கையில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
18 எதிர்ப்பைக் கண்டு தாங்கள் ஒருபோதும் கதிகலங்கிப் போகக்கூடாது என்பதை இன்று யெகோவாவின் சாட்சிகளும் புரிந்துகொண்டிருக்கின்றனர். இல்லாவிட்டால், இயேசுவின் மனப்பான்மையை அவர்கள் வெளிக்காட்டவில்லை என அர்த்தமாகிவிடுமே. சாட்சிகளைப் பற்றிய உண்மைகள் தெரியாததால், அல்லது அவர்களையோ அவர்கள் செய்தியையோ வெறுப்பதால் சிலர் எதிர்க்கலாம். ஆனால், அவர்களது எதிர்க்கும் மனப்பான்மை நம் நம்பிக்கையான மனப்பான்மையை பறித்துப்போடாதபடி பார்த்துக்கொள்வோமாக. வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று தீர்மானிக்க யாரையும் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
19. இயேசு கிறிஸ்துவின் மனப்பான்மையை நாம் எவ்வாறு வெளிக்காட்டலாம்?
19 தம்மைப் பின்பற்றினவர்களிடமும் கடவுளுடைய ஏற்பாடுகளிடமும் இயேசு எப்போதும் நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டினார்; அப்படி நடந்துகொள்வது அத்தனை சுலபமல்லாதபோதிலும் அவர் தம் மனப்பான்மையை மாற்றிக்கொள்ளவே இல்லை. (மத்தேயு 23:2, 3) அவர் குணம் நமக்கும் வேண்டும். நம்முடைய சகோதரர்கள் அபூரணர்கள் என்பது உண்மைதான், ஆனால் நாமும் அபூரணர்கள்தானே. உலகம் முழுவதுமுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளின் மத்தியில் அல்லாமல் அருமையான தோழர்களையும் உண்மையிலேயே நல்ல நண்பர்களையும் வேறு எங்கு கண்டுபிடிக்க முடியுமென நினைக்கிறீர்கள்? பைபிளைப் பற்றிய முழுமையான புரிந்துகொள்ளுதலை யெகோவா இன்னும் நமக்கு அளிக்கவில்லை; ஆனால், வேறெந்த மதத் தொகுதி இதைப் பார்க்கிலும் இன்னும் சிறப்பாக பைபிளை புரிந்துகொண்டிருக்கிறது? இயேசு கிறிஸ்துவின் சரியான மனநிலையே நம்மிடம் எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்வோமாக. யெகோவா செயல்படுவதற்காக எவ்வாறு காத்திருக்கலாம் என்பதை அறிவதும் இதில் உட்பட்டிருக்கிறது. இதை பின்வரும் கட்டுரையில் கலந்தாராய்வோம்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகம், இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் விவரிக்கிறது.
நீங்கள் விளக்க முடியுமா?
•நம்முடைய மனப்பான்மை நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?
•இயேசு கிறிஸ்துவின் மனப்பான்மையை விளக்குங்கள்.
•யோபின் மனப்பான்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
•எதிர்ப்பை எதிர்ப்படுகையில் என்ன சரியான மனப்பான்மை தேவை?
[பக்கம் 7-ன் படங்கள்]
நல்மனம் படைத்த கிறிஸ்தவர் தக்க சமயத்தில் மற்றவர்களுக்கு உதவுவார்
[பக்கம் 9-ன் படம்]
ஜெபத்துடன் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது, கிறிஸ்துவின் மனப்பான்மையை ஏற்க நமக்கு உதவுகிறது