யெகோவாவில் சந்தோஷமாயிருங்கள்!
“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”—பிலிப்பியர் 4:4.
1. கிறிஸ்தவர்கள் எப்போதும் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்று பவுல் சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்று நாம் ஏன் ஆச்சரியப்படக்கூடும்?
தற்காலத்தில், சந்தோஷத்திற்குரிய காரணங்கள் குறைவானவையாகவும் மிக அரிதானவையாகவும் தோன்றக்கூடும். தூசியால் உண்டாக்கப்பட்ட மனிதர்கள், உண்மையான கிறிஸ்தவர்கள்கூட, வருத்தத்தை உண்டுபண்ணும் சூழ்நிலைகளை—வேலையின்மை, உடல்நலக் குறைவு, அன்பானவர்களின் மரணம், ஆளுமை பிரச்சினைகள், அல்லது விசுவாசத்தில் இல்லாத குடும்ப அங்கத்தினர்களிடமிருந்து அல்லது பழைய நண்பர்களிடமிருந்து வரும் எதிர்ப்பு போன்றவற்றை—எதிர்ப்படுகின்றனர். அப்படியென்றால் “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” என்ற பவுலின் அறிவுரையை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும்? நாம் எல்லாருமே போராட வேண்டியிருக்கிற விரும்பத்தகாத, கடுஞ்சோதனையான சூழ்நிலைகளைக் கருத்தில்கொள்ளும்போது, இது சாத்தியமானதாகக்கூட இருக்கிறதா? இந்த வார்த்தைகளின் சூழமைவைப்பற்றிய ஒரு கலந்தாலோசிப்பு, இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த உதவும்.
சந்தோஷப்படுங்கள்—ஏன், எப்படி?
2, 3. இயேசு மற்றும் பண்டைய இஸ்ரவேலருடைய விஷயங்களில் விளக்கப்பட்டபடி, சந்தோஷத்தின் முக்கியத்துவம் என்ன?
2 “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.” சுமார் 24 நூற்றாண்டுகளுக்கு முன்னர், இஸ்ரவேலரிடம் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை நமக்கு இது நினைவுபடுத்தக்கூடும்: “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்,” அல்லது மொஃபட் மொழிபெயர்ப்பின்படி: “நித்தியமானவருக்குள் சந்தோஷமாக இருப்பதே உங்களுக்குப் பெலன்.” (நெகேமியா 8:10) சந்தோஷம் பெலனளிக்கிறது; மேலும் ஒருவர் ஆறுதலுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் சென்று ஒதுங்கக்கூடிய ஒரு அரணைப்போல இருக்கிறது. பரிபூரண மனிதராகிய இயேசுவுக்குக்கூட சகித்திருக்கும்படி உதவ சந்தோஷமே காரணமாக இருந்தது. “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” (எபிரெயர் 12:2) தெளிவாகவே, கஷ்டங்களின் மத்தியில் சந்தோஷப்பட முடிவது, இரட்சிப்பிற்கு அத்தியாவசியமாக இருக்கிறது.
3 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்வதற்குமுன், இஸ்ரவேலர் இவ்வாறு கட்டளையிடப்பட்டிருந்தனர்: “நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.” யெகோவாவைச் சந்தோஷத்துடன் சேவிக்கத் தவறுவதன் விளைவுகள் கடுமையானவையாக இருக்கும். ‘சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்.’—உபாகமம் 26:11; 28:45-47.
4. நாம் ஏன் சந்தோஷப்பட தவறக்கூடும்?
4 ஆகவே, இன்றைய அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேரும் அவர்களுடைய கூட்டாளிகளான ‘வேறே ஆடுகளும்’ சந்தோஷப்படுவது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது! (யோவான் 10:16) “மறுபடியும் சொல்லுகிறேன்” என்று பவுல் தன்னுடைய அறிவுரையை திரும்பவும் சொன்னபோது, யெகோவா நமக்குச் செய்திருக்கும் எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்படுவதன் முக்கியத்துவத்தை அழுத்திக் காண்பித்தார். நாம் அவ்வாறு செய்கிறோமா? அல்லது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அந்தளவுக்கு ஈடுபட்டவர்களாகி, நாம் சந்தோஷப்படுவதற்கான பல காரணங்களைச் சிலவேளைகளில் மறந்துவிடுகிறோமா? இராஜ்யத்தையும் அதன் ஆசீர்வாதங்களையும் பற்றிய நம்முடைய காட்சியை மறைத்துவிடும் அளவுக்கு பிரச்சினைகள் குவிந்துவிடுகின்றனவா? கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் இருத்தல், தெய்வீக நியமங்களை அசட்டை செய்தல், அல்லது கிறிஸ்தவ கடமைகளைப் புறக்கணித்தல் போன்ற மற்ற காரியங்கள் நம் சந்தோஷத்தைக் கெடுத்துவிட நாம் அனுமதிக்கிறோமா?
5. நியாயத்தன்மையற்ற ஒருவர், சந்தோஷமாயிருப்பதை ஏன் கடினமானதாகக் காண்கிறார்?
5 “உங்களுடைய நியாயத்தன்மை எல்லா மனிதருக்கும் தெரியப்படட்டும். கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.” (பிலிப்பியர் 4:5, NW) நியாயத்தன்மையற்ற ஒருவர் சமநிலையில் குறைவுபடுகிறார். அவர் தன்னுடைய உடல்நலத்தை சரியாகக் கவனிக்காமல், அநாவசியமாகத் தன் உடலைத் தேவையற்ற அழுத்தத்திற்கோ வருத்தத்திற்கோ உள்ளாக்குகிறார். ஒருவேளை அவர் தன்னுடைய வரம்புகளை ஏற்று அதற்கு ஏற்றபடி வாழ கற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அவருடைய இலக்குகளை மிக உயர்வாக வைத்துவிட்டு, பின்னர் என்னவானாலும் பொருட்படுத்தாமல் அதை அடைய முயலக்கூடும். அல்லது குறைவாக செயல்படவோ ஊக்கம் குறைந்து செயல்படவோ அவர் தன்னுடைய வரம்புகளை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தலாம். அவர் சமநிலையில் குறைவுபட்டு, நியாயத்தன்மையற்றவராக இருப்பதால், சந்தோஷமாயிருப்பதைக் கடினமானதாகக் காண்கிறார்.
6. (அ) உடன் கிறிஸ்தவர்கள் நம்மில் எதைக் காணவேண்டும், எப்போது மட்டுமே அது அவ்வாறு இருக்கும்? (ஆ) நாம் நியாயத்தன்மை உள்ளவர்களாய் இருக்கும்படி 2 கொரிந்தியர் 1:24-லிலும் ரோமர் 14:4-லிலும் உள்ள பவுலின் வார்த்தைகள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன?
6 எதிர்ப்பவர்கள் நம்மை வெறியர்கள் என்று நினைத்தாலும், உடன் கிறிஸ்தவர்கள் எப்போதும் நம்முடைய நியாயத்தன்மையைப் பார்க்கமுடிய வேண்டும். நாம் சமநிலை உள்ளவர்களாகவும், நம்மிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ பரிபூரணத்தை எதிர்பார்க்காமலும் இருந்தால், அவர்கள் அவ்வாறு காண்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுடைய வார்த்தை கேட்பதற்கும் அதிகமான பாரங்களை மற்றவர்கள்மீது சுமத்துவதிலிருந்து நாம் விலகியிருக்கவேண்டும். அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 1:24) முன்னாள் பரிசேயராக பவுல் இருந்ததால், அதிகாரத்தில் இருப்பவர்களால் ஏற்படுத்தப்பட்டு, சுமத்தப்படும் கட்டுறுதியான சட்டங்கள் சந்தோஷத்தை மூழ்கடித்துவிடும் என்பதையும், அதே சமயத்தில் உடன் ஊழியர்களால் அளிக்கப்பட்ட உதவியுள்ள ஆலோசனைகள் அதை அதிகரிக்கும் என்பதையும் நன்கு அறிந்திருந்தார். “கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” என்ற உண்மை, நாம் ‘மற்றவருடைய வேலைக்காரனை நியாயந்தீர்க்கக்கூடாது’ என்பதை நியாயத்தன்மை உள்ள ஒருவருக்கு நினைப்பூட்ட வேண்டும். ‘அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே உத்தரவாதி.’—ரோமர் 14:4.
7 “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலிப்பியர் 4:6) பவுல் எழுதிய ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களை’ நாம் இப்போது அனுபவிக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5, NW) ஆகவே கிறிஸ்தவர்கள் பிரச்சினைகளை எதிர்ப்படும்படி எதிர்பார்க்கவேண்டும். “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” என்ற பவுலின் வார்த்தைகள், ஒரு உண்மைதவறாத கிறிஸ்தவனுக்கு ஏமாற்றம் அல்லது மனச்சோர்வு உணர்ச்சிகள் அவ்வப்போது எழும்பக்கூடியதன் சாத்தியத்தைக் கவனிக்கத் தவறுவதில்லை. பவுலின் சொந்த அனுபவத்தில், அவர் உண்மையாக ஒத்துக்கொண்டார்: “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.” (2 கொரிந்தியர் 4:8, 9) என்றபோதிலும், ஒரு கிறிஸ்தவனின் சந்தோஷம், தற்காலிகமாக எழும்பும் வருத்தம் மற்றும் கவலைக்குரிய நேரங்களை முடிவில் தணித்துவிடும். சந்தோஷப்படுவதற்குரிய அநேக காரணங்களை ஒருபோதும் கவனிக்கத் தவறாமல், தொடர்ந்து முன்னேறுவதற்குத் தேவையான பலத்தை அது அளிக்கும்.
7, 8. கிறிஸ்தவர்கள் பிரச்சினைகளைக் கொண்டிருப்பார்கள் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும், இருந்தாலும் தொடர்ந்து சந்தோஷமாயிருப்பது அவர்களுக்கு எப்படி சாத்தியமாக இருக்கிறது?
8 பிரச்சினைகள் எழும்புகையில், அவை எப்படிப்பட்ட இயல்புடையவையாக இருந்தாலும், சந்தோஷமுள்ள கிறிஸ்தவன் ஜெபத்தின் மூலமாக யெகோவாவின் உதவிக்காக மனத்தாழ்மையுடன் மன்றாடுகிறான். அவன் மட்டுக்குமீறிய வருத்தத்திற்குள் ஆழ்ந்துவிடுவதில்லை. பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தன்னால் நியாயமாக என்ன செய்யமுடியுமோ அதைச் செய்தபிறகு, பின்வரும் அழைப்புக்கு இணங்க, பலனை யெகோவாவின் கைகளில் விட்டுவிடுகிறான்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” அதேநேரத்தில், அந்தக் கிறிஸ்தவன் யெகோவாவுடைய எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்குத் தொடர்ந்து நன்றிசெலுத்துகிறான்.—சங்கீதம் 55:22; இதையும் பார்க்கவும்: மத்தேயு 6:25-34.
9. சத்தியத்தைப் பற்றிய அறிவு எப்படி மன சமாதானத்தைக் கொடுக்கிறது, இது ஒரு கிறிஸ்தவனின்மேல் என்ன நல்ல பலனைக் கொண்டிருக்கிறது?
9 “அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:7) பைபிள் சத்தியத்தைப் பற்றிய அறிவு, கிறிஸ்தவனின் மனதை பொய்யிலிருந்து விடுவித்து, ஆரோக்கியமான சிந்தனா முறைகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. (2 தீமோத்தேயு 1:13) இதன் மூலமாக அவர் மற்றவர்களுடன் கொண்டிருக்கும் சமாதானமான உறவுகளை கெடுக்கக்கூடிய தவறான அல்லது ஞானமற்ற நடத்தையைத் தவிர்க்க உதவிசெய்யப்படுகிறார். அநியாயத்தினாலும் பொல்லாங்கினாலும் நிலைகுலைந்துபோவதற்குப் பதிலாக, மனிதகுலத்தின் பிரச்சினைகளை ராஜ்யத்தின் மூலமாகத் தீர்க்கும்படி அவன் யெகோவாவில் தன் நம்பிக்கையை வைக்கிறான். அப்படிப்பட்ட மன அமைதி அவனுடைய இருதயத்தைக் காத்து, அவனுடைய உள்நோக்கங்களைத் தூய்மையாக வைத்து, அவனுடைய சிந்தனையை நீதியின் பாதையில் வழிநடத்துகிறது. தூய உள்நோக்கங்களும் சரியான சிந்தனையும், முறையே, ஒரு குழப்பமான உலகால் கொண்டுவரப்படுகிற பிரச்சினைகள் மற்றும் அழுத்தங்களின் மத்தியிலும் சந்தோஷப்படுவதற்கு எண்ணற்ற காரணங்களை அளிக்கின்றன.
10. எதைப்பற்றி பேசுவதாலோ சிந்திப்பதாலோ மட்டுமே உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்கமுடியும்?
10 “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.” (பிலிப்பியர் 4:8) கெட்ட காரியங்களைக் குறித்துப் பேசுவதிலோ சிந்திப்பதிலோ ஒரு கிறிஸ்தவன் எவ்வித இன்பத்தையும் காண்பதில்லை. உலகம் அளிக்கக்கூடிய பெரும்பாலான பொழுதுபோக்குகளை இது தானாகவே புறம்பாக்கிவிடுகிறது. தன்னுடைய மனதையும் இருதயத்தையும் பொய்கள், புத்தியீனமான பரியாசம், மற்றும் அநீதியான, ஒழுக்கங்கெட்ட, நற்குணம் பொருந்தாத, வெறுக்கத்தக்க, அருவருக்கத்தக்க காரியங்களால் நிரப்பும் எவரும் கிறிஸ்தவ சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள முடியாது. தெளிவாகச் சொன்னால், தன்னுடைய மனதையும் இருதயத்தையும் தீட்டானதால் நிரப்பி வைத்துக்கொண்டு, எவரும் உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைய முடியாது. சாத்தானின் ஊழல்நிறைந்த உலகில், சிந்திப்பதற்கும் கலந்துபேசுவதற்கும் எவ்வளவோ நல்ல காரியங்களைக் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்றறிவது எவ்வளவு கட்டியெழுப்புவதாய் இருக்கிறது!
சந்தோஷப்படுவதற்கு எண்ணற்ற காரணங்கள்
11. (அ) எதை ஒருபோதும் அசட்டையாக எண்ணிவிடக் கூடாது, ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? (ஆ) சர்வதேச மாநாடு ஒன்றிற்குச் சென்ற ஒரு பிரதிநிதி மற்றும் அவரது மனைவின் மீது அது என்ன பாதிப்பைக் கொண்டிருந்தது?
11 சந்தோஷப்படுவதற்கான காரணங்களைக் குறித்துப் பேசுகையில், நம்முடைய சர்வதேச சகோதரத்துவத்தை நாம் மறந்துவிடக்கூடாது. (1 பேதுரு 2:17) உலகப்பிரகாரமான தேசிய மற்றும் இனத் தொகுதிகள் ஒருவருக்கொருவர் ஆழமான பகையை வெளிப்படுத்துகையில், கடவுளுடைய மக்கள் அன்பினால் நெருங்கி இணைகிறார்கள். சர்வதேச மாநாடுகளில் அவர்களுடைய ஒற்றுமை விசேஷித்த விதத்தில் காணப்படுகிறது. 1993-ல் உக்ரேனிலுள்ள கீவில் நடத்தப்பட்ட ஒன்றைப்பற்றி, ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்திருந்த பிரதிநிதி ஒருவர் எழுதினார்: “ஆனந்த கண்ணீர், மலர்ச்சியுடைய கண்கள், குடும்பவுணர்வுள்ள கட்டித்தழுவுதல்களின் திரள், வண்ணப்பகட்டான குடைகளையும் கைக்குட்டைகளையும் அசைப்பதன்மூலம் அந்த அரங்கினூடே கடத்தப்பட்ட வாழ்த்துக்கள் ஆகியவை தேவாட்சிக்குரிய ஒற்றுமைக்குச் சான்றளித்தன. உலகளாவிய சகோதரத்துவத்தின் மூலமாக யெகோவா அற்புதகரமாக சாதித்திருப்பதைப்பற்றி எங்கள் இருதயம் பெருமிதத்தில் பூரிப்படைகிறது. இது என் மனைவியையும் என்னையும் ஆழமாகத் தொட்டு, எங்கள் விசுவாசத்திற்குப் புதிய பரிமாணங்களை அளித்திருக்கிறது.”
12. நம்முடைய சொந்த கண்களுக்கு முன்பாக ஏசாயா 60:22 எவ்வாறு நிறைவேற்றமடைகிறது?
12 இன்றைய கிறிஸ்தவர்களுக்கு, பைபிள் தீர்க்கதரிசனங்கள் தங்கள் சொந்த கண்களின் முன்னால் நிறைவேற்றமடைவதைக் காண்பது எந்தளவிற்கு விசுவாசத்தைப் பலப்படுத்துவதாக இருக்கிறது! உதாரணமாக, ஏசாயா 60:22-ன் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” 1914-ல் ராஜ்யத்தின் பிறப்பின்போது, 5,100 பேர்—சின்னவன்—மட்டுமே சுறுசுறுப்பாக பிரசங்கித்து வந்தனர். ஆனால் கடந்த ஐந்து வருடங்களின்போது, உலகளாவிய சகோதரத்துவத்தின் அளவு, ஒவ்வொரு வாரமும், புதிதாக முழுக்காட்டுதல் பெற்ற 5,628 சாட்சிகள் என்ற சராசரி வீதத்தில் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது! 1993-ல், 47,09,889 சுறுசுறுப்பான ஊழியர்கள் என்ற ஒரு உச்சநிலை அடையப்பட்டது. கற்பனை செய்துபாருங்கள்! 1914-ன் “சின்னவன்” சொல்லர்த்தமாகவே ‘ஆயிரமாவதற்கு’ நெருங்கி வந்திருக்கிறான்!
13. (அ) 1914 முதற்கொண்டு என்ன நடந்துகொண்டிருக்கிறது? (ஆ) 2 கொரிந்தியர் 9:7-லுள்ள பவுலின் வார்த்தைகளின் நியமத்தை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள்?
13 1914-லிருந்து மேசியானிய அரசர் தம்முடைய பகைவர்களின் மத்தியில் கீழ்ப்படுத்துகிறவராக செல்ல தொடங்கிவிட்டார். மனமுவந்து அவரைப் பின்பற்றுகிறவர்களால் அவருடைய ஆட்சி ஆதரிக்கப்பட்டு வருகிறது; அவர்கள் உலகளாவிய பிரசங்க வேலை மற்றும் சர்வதேச கட்டுமான திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு நேரம், பலம், மற்றும் பணத்தை அளிக்கிறார்கள். (சங்கீதம் 110:2, 3) யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் பணத்தைப் பற்றிய பேச்சு வெகு அரிதாகவே குறிப்பிடப்படுகிறபோதிலும், இந்த நடவடிக்கைகளை நிறைவேற்றி முடிப்பதற்கு பண நன்கொடைகள் செய்யப்படுவதால் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.a (1 நாளாகமம் 29:9-ஐ ஒப்பிடவும்.) கொடுப்பதற்காக உண்மையான கிறிஸ்தவர்களைத் தூண்டவேண்டியதில்லை; அவர்கள் தங்களுடைய சூழ்நிலைகள் அனுமதிக்கும் அளவிற்கு தங்கள் அரசரை ஆதரிப்பதை ஒரு சிலாக்கியமாகக் கருதுகிறார்கள்; ஒவ்வொருவரும் “விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே” கொடுக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 9:7.
14. 1919 முதற்கொண்டு கடவுளுடைய மக்கள் மத்தியில் என்ன நிலைமை தெளிவாகி இருக்கிறது, சந்தோஷப்படுவதற்கு இது அவர்களுக்கு என்ன காரணத்தைக் கொடுக்கிறது?
14 கடவுளுடைய மக்கள் மத்தியில் உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதைப்பற்றிய முன்னறிவிப்பு, ஒரு ஆவிக்குரிய பரதீஸின் சிருஷ்டிப்பில் விளைவடைந்திருக்கிறது. 1919 முதற்கொண்டு அது படிப்படியாக தன் எல்லைகளை விரிவாக்கியிருக்கிறது. (சங்கீதம் 14:7; ஏசாயா 52:9, 10) அதன் விளைவு? உண்மை கிறிஸ்தவர்கள் ‘சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும்’ அனுபவிக்கிறார்கள். (ஏசாயா 51:11) விளைவடையும் நல்ல கனி, அபூரண மனிதரைக்கொண்டு கடவுளுடைய பரிசுத்த ஆவி எதை நிறைவேற்ற முடியும் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. எல்லா பாராட்டும் கனமும் யெகோவாவுக்கு உரித்தாகட்டும்; ஆனால் கடவுளுடைய உடன் வேலையாளாய் ஆவதைவிட பெரிய சிலாக்கியம் வேறு என்னவாக இருக்கமுடியும்? (1 கொரிந்தியர் 3:9) தேவைப்பட்டால், சத்தியத்தின் செய்தியை எடுத்துரைப்பதற்குக் கற்களைப் பயன்படுத்தும் அளவிற்கு யெகோவா வல்லமை உள்ளவராக இருக்கிறார். இருந்தபோதிலும், அவர் இந்த முறையை நாடுவதற்கு மாறாக, தூசியால் உண்டாக்கப்பட்ட மனமுவந்து செயல்படும் சிருஷ்டிகள் தம்முடைய சித்தத்தை நடப்பிப்பதை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.—லூக்கா 19:40.
15. (அ) என்ன நவீன நாளைய சம்பவங்களை நாம் அக்கறையோடு தொடருகிறோம்? (ஆ) நாம் சந்தோஷத்துடன் என்ன சம்பவத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறோம்?
15 பிரமிப்பு நிறைந்தவர்களாய், மேம்பட்டு நிற்கும் பைபிள் தீர்க்கதரிசனங்களுடன் உலக சம்பவங்கள் தொடர்புடையவையாய் இருப்பதை இப்போது யெகோவாவின் ஊழியர்கள் கவனிக்கிறார்கள். நிலையான சமாதானத்தை அடைவதற்காக தேசங்கள் கடினமாக முயற்சிக்கிறார்கள்—ஆனால் வீணாகவே. உலகின் தொந்தரவுமிக்க பகுதிகளில் செயல்படும்படி, ஐக்கிய நாடுகள் சபையை அழைக்கும்படி சம்பவங்கள் அவர்களை வற்புறுத்துகின்றன. (வெளிப்படுத்துதல் 13:15-17) அதேநேரத்தில், கடவுளுடைய மக்கள், நாள் செல்லச் செல்ல நெருங்கி வந்துகொண்டிருக்கும், எக்காலத்திலும் சம்பவிக்கக்கூடியதில் மிகச் சந்தோஷமான சம்பவங்களில் ஒன்று நடக்கப்போவதை ஏற்கெனவே எதிர்நோக்கி மிக ஆவலோடு காத்திருக்கின்றனர். “நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்.”—வெளிப்படுத்துதல் 19:7.
பிரசங்கித்தல்—ஒரு பாரமா அல்லது ஒரு சந்தோஷமா?
16. ஒரு கிறிஸ்தவன் கற்றுக்கொண்டிருப்பதை நடைமுறைப்படுத்தத் தவறுவது எவ்வாறு அவனுடைய சந்தோஷத்தைக் கெடுக்க முடியும் என்பதை விவரியுங்கள்.
16 “நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.” (பிலிப்பியர் 4:9) கிறிஸ்தவர்கள் எதைக் கற்றிருக்கிறார்களோ அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம், கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறும்படி எதிர்பார்க்கலாம். அவர்கள் கற்றிருக்கிற மிக முக்கியமான காரியங்களில் ஒன்று, மற்றவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் அவசியமாகும். உண்மையில், நேர்மை இருதயமுள்ள ஆட்கள் கேட்கக்கூடிய ஒரு தகவலில் அவர்களுடைய உயிரே சார்ந்திருக்கையில், அப்படிப்பட்ட தகவலைக் கேட்கச்செய்யாமல் வைத்திருக்கும் எவராவது மன அமைதியை அனுபவிப்பவராக அல்லது சந்தோஷமுள்ளவராக இருக்கமுடியுமா?—எசேக்கியேல் 3:17-21; 1 கொரிந்தியர் 9:16; 1 தீமோத்தேயு 4:16.
17. நம்முடைய பிரசங்க வேலை ஏன் எப்போதுமே சந்தோஷத்திற்குரிய ஒன்றாக இருக்கவேண்டும்?
17 யெகோவாவைப்பற்றி கற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாக இருக்கும் செம்மறி ஆடுகளைப் போன்றவர்களைக் காண்பது எவ்வளவு சந்தோஷகரமானது! உண்மையில், சரியான உள்நோக்கத்தோடு சேவை செய்பவர்கள், ராஜ்ய சேவையை எப்போதுமே சந்தோஷத்திற்குரிய ஒன்றாகக் காண்பார்கள். இது ஏனென்றால், யெகோவாவுக்கு ஒரு சாட்சியாக இருப்பதற்கான முக்கிய காரணம், அவருடைய நாமத்தை துதிப்பதற்கும் சர்வலோக பேரரசராக அவருடைய ஸ்தானத்தை ஆதரிப்பதற்குமே ஆகும். (1 நாளாகமம் 16:31) இந்த உண்மையை உணரும் ஒருவர், தான் கொண்டுசெல்லும் நற்செய்தியை மக்கள் ஞானமற்றவிதத்தில் நிராகரித்தாலும்கூட சந்தோஷமாகவே இருப்பார். அவிசுவாசிகளுக்குப் பிரசங்கிப்பது ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று அவர் அறிந்திருக்கிறார்; யெகோவாவின் நாமத்தைத் துதித்தல் என்றென்றுமாகத் தொடரும்.
18. யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி ஒரு கிறிஸ்தவனைத் தூண்டுவது எது?
18 யெகோவா தேவைப்படுத்தும் காரியங்களைச் செய்யும்படியாக உண்மை மதம் அதை நடைமுறைப்படுத்துபவர்களைத் தூண்டுகிறது; அவர்கள் செய்யவேண்டும் என்பதனால் அல்ல, ஆனால் செய்ய விரும்புவதன் காரணமாக அவ்வாறு செய்கிறார்கள். (சங்கீதம் 40:8; யோவான் 4:34) அநேக மக்கள் இதைப் புரிந்துகொள்வதற்குக் கடினமானதாகக் காண்கின்றனர். ஒருமுறை ஒரு பெண், தன்னைச் சந்திக்கவந்த சாட்சியிடம் இவ்வாறு சொன்னாள்: “உங்களைப் பாராட்டவேண்டும். நீங்கள் செய்வதைப்போல், வீடுவீடாகச் சென்று நான் ஒருபோதும் என்னுடைய மதத்தைப்பற்றி பிரசங்கிக்கமாட்டேன்.” ஒரு புன்முறுவலுடன் அந்தச் சாட்சி பதிலளித்தாள்: “நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்று புரிகிறது. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராவதற்குமுன், மற்றவர்களிடம் சென்று மதத்தைப் பற்றி என்னைப் பேசவைக்க உங்களாலும் முடிந்திருக்காது. ஆனால் இப்போதோ நான் அதைச் செய்ய விரும்புகிறேன்.” அந்தப் பெண் சற்றுநேரம் சிந்தித்துவிட்டு, பின்னர் இவ்வாறு சொல்லி முடித்தாள்: “தெளிவாகவே என்னுடைய மதம் தராத ஏதோவொன்றை உங்கள் மதம் அளிக்கிறது. ஒருவேளை நான் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.”
19. முன்னொருபோதும் இல்லாத வகையில் சந்தோஷப்படுவதற்கு ஏன் இதுவே சமயமாக இருக்கிறது?
19 நம்முடைய ராஜ்ய மன்றங்களில் எடுப்பாகத் தெரியும்படி வைக்கப்பட்டிருக்கும் 1994-ன் வருடாந்தர வசனம், நிலையாக நமக்கு நினைப்பூட்டுகிறது: “உன் முழு இருதயத்தோடு யெகோவாவில் நம்பிக்கையாயிரு.” (நீதிமொழிகள் 3:5, NW) நாம் அடைக்கலம் புகும் பலத்த அரணாகிய யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை வைக்க முடிவதைவிட சந்தோஷத்திற்குரிய பெரிய காரணம் ஏதேனும் இருக்கமுடியுமா? சங்கீதம் 64:10 விவரிக்கிறது: “நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்.” தளர்வாக இருப்பதற்கோ பின்வாங்குவதற்கோ இது சமயம் அல்ல. கடந்து செல்லும் ஒவ்வொரு மாதமும், ஆபேலின் நாட்கள் முதல் யெகோவாவின் ஊழியர்கள் காணவேண்டுமென்று காத்துக்கொண்டிருந்த நிஜத்திற்கு வெகு நெருக்கமாக நம்மைக் கொண்டு வருகிறது. சந்தோஷத்திற்காக இத்தனை அநேக காரணங்களை நாம் முன்னொருபோதும் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்தவர்களாய், நம்முடைய முழு இருதயத்தோடும் யெகோவாவை நம்புவதற்கு இதுவே காலம்!
[அடிக்குறிப்புகள்]
a மாநாடுகளிலும் சபையில் மாதத்திற்கு ஒருமுறையும், மனமுவந்து கொடுக்கப்பட்டதால் பெறப்பட்ட நன்கொடை மற்றும் செலவிடப்பட்ட தொகையைக் குறிப்பிடும் ஒரு சுருக்கமான அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நன்கொடைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலையின் நிதிநிலைமையைப்பற்றி ஒவ்வொருவரும் நினைப்பூட்டப்படுகிறார்கள்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ நெகேமியா 8:10-ன்படி நாம் ஏன் சந்தோஷப்பட வேண்டும்?
◻ உபாகமம் 26:11-ம் 28:45-47-ம் சந்தோஷத்திற்குரிய முக்கியத்துவத்தை எவ்வாறு காண்பிக்கின்றன?
◻ நாம் எப்போதும் சந்தோஷப்படும்படி பிலிப்பியர் 4:4-9 எவ்வாறு உதவலாம்?
◻ 1994-ன் வருடாந்தர வசனம் நாம் சந்தோஷப்படுவதற்கு என்ன காரணத்தைக் கொடுக்கிறது?
[பக்கம் 16-ன் படம்]
ரஷ்ய மற்றும் ஜெர்மானிய சாட்சிகள் ஒரு சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பதில் சந்தோஷப்படுகிறார்கள்
[பக்கம் 17-ன் படம்]
மற்றவர்களிடம் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வது சந்தோஷப்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது