அதிகாரம் 5
என் பெற்றோரின் மறுமணத்தின்பேரில் நான் எவ்வாறு என்னை நடத்திக்கொள்வது?
“என் அப்பா ரீட்டாவை மணந்த அந்த நாள் என் வாழ்க்கையில் மிக மனக்கசப்பான நாள்,” என்று ஷேன் நினைவுபடுத்திக் கூறுகிறான்: “நான் கோபவெறியில் இருந்தேன். என் அம்மாவுக்குத் துரோகம் செய்ததனால் என் அப்பாவிடம் மூர்க்கவெறிகொண்டிருந்தேன். எங்களைத் தனியேவிட்டுவிட்டுச் சட்டப் பள்ளிக்குச் சென்றதால் அம்மாவிடமும் கோபவெறிகொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் வந்து வாழப்போகிற, அந்தத் தொல்லைப்பிடித்தக் குழந்தைகள், ரீட்டாவின் பிள்ளைகள்மீதும் கோபவெறிகொண்டிருந்தேன் . . . நான் ரீட்டாவைப் பகைத்தேன். பகைப்பது சரியல்லவென நான் நம்பினதனால், என்மீதுங்கூட மூர்க்க வெறிகொண்டேன்.”—Stepfamilies—New Patterns in Harmony, by Linda Craven.
பெற்றோர் ஒருவர் மறுமணம் செய்துகொள்ளுகையில் உன் பெற்றோர் எப்போதாவது திரும்ப ஒன்றாய் இணைவதன் நம்பிக்கையை அழித்துப்போடுகிறது. இது உன்னைப் பாதுகாப்பற்ற, நம்பிக்கைத்துரோகம் செய்யப்பட்ட, பொறாமைகொண்ட உணர்ச்சியடையும்படி செய்விக்கலாம்.
முக்கியமாய், இந்த மறுமணம் மிக நேசமான பெற்றோர் ஒருவரின் மரணத்தை உடனடியாகப் பின்தொடர்ந்து வந்தால் மிக மனவேதனையைத் தரும். “என் தாயின் மரணம் என்னை மிக மனக்கசப்புள்ளவளாய் மாறும்படிச் செய்தது,” என்று 16 வயது மிஸ்ஸி ஒப்புக்கொண்டாள். “என் தகப்பனின் மணநிச்சயம்செய்யப்பட்ட பெண் என் தாயின் இடத்தை ஏற்கிறாள் என்று எண்ணினேன், ஆகவே நான் அவளிடம் மிகவும் பகையெண்ணங்கொண்டு நடந்தேன்.” உன் இயல்பான பெற்றோருக்கு உண்மைத்தவறாதிருப்பது, உன் மாற்றாந்தாய்/தகப்பனிடம் அன்பை உணரத்தொடங்குவதுங்கூட உன்னைக் குற்ற உணர்ச்சியடையும்படி செய்விக்கலாம்.
இளைஞர் பலர், தங்கள் உணர்ச்சிவச வேதனையை அழிவுக்குரிய வகைகளில் வெளிப்படச் செய்வதில் அதிசயமொன்றுமில்லை. சிலர் தங்கள் பெற்றோரின் புதிய திருமணத்தைப் பிரிவுறச் செய்யவும் சதிசெய்கின்றனர். ஆனால் உன் இயல்பான பெற்றோரும் மாற்றாந்தாய்/தந்தையும் கடவுளுக்கு முன்பாகத் தங்கள் மணவாக்குறுதிகளைப் பரிமாற்றம் செய்திருப்பதை நினைவுபடுத்திக்கொள். “தேவன் இணைத்ததை மனுஷன் [அல்லது பிள்ளை] பிரிக்காதிருக்கக்கடவன்.” (மத்தேயு 19:6) நீ அவர்களைப் பிரிக்க முடிந்தாலும், இது உன் இயல்பான பெற்றோரை மறுபடியும் ஒன்றாய் இணைக்காது.
மாற்றாந்தாய்/தகப்பனிடம் ஓயாது சண்டைசெய்துகொண்டிருப்பதும் உகந்ததல்ல. நீதிமொழிகள் 11:29 பின்வருமாறு எச்சரிக்கிறது: “தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்,” அதாவது, பயனற்றுத் தோல்வியடைவான். பதினைந்து வயது கெரி தன் மாற்றாந்தாயிடம் கொண்டிருந்த மனக்கசப்பு முடிவில் கடுமையான சண்டையில் உச்சநிலையை எட்டியது. இதன் விளைவு? கெரியின் தகப்பன் தன் மகளை அல்லது தன்னை இருவரிலொருவரைத் தெரிந்துகொள்ளும்படி அவளுடைய மாற்றாந்தாய் வாதாடிக் கேட்டாள். கெரி தன் இயல்பான தாயுடன் திரும்பப் போய்ச் சேர்வதில் முடிவடைந்தாள்—அவள் தாயும் மறுமணம் செய்திருந்தாள்.
அன்பு சமாளிக்க உதவிசெய்கிறது
பெற்றோர் ஒருவரின் மறுமணத்தோடு வெற்றிகரமாய்ச் சமாளிப்பதற்குரிய இரகசியம் என்ன? 1 கொரிந்தியர் 13:4-8-ல் விவரித்துள்ள நியமத்தில் அடிப்படைக்கொண்ட அன்பைச் செயலில் பயன்படுத்துவதேயாகும்.
அன்பு “தனக்கானதை நாடாது.” [தி.மொ.] இது ‘நம் சொந்த அனுகூலத்தை அல்ல, மற்றவரின் அனுகூலத்தைத் தேடுவதைக்’ குறிக்கிறது. (1 கொரிந்தியர் 10:24, NW) பெற்றோர் ஒருவர் தந்தையாகிலும் தாயாகிலும் திருமணத் துணை ஒருவரின் தோழமை தனக்கு மறுபடியும் தேவையெனத் தீர்மானித்தால், நீ அதை எதிர்த்துக் கோபங்கொள்ளவேண்டுமா?
“அன்புக்குப் பொறாமையில்லை.” பெரும்பாலும் இளைஞர்கள் தங்கள் இயல்பான பெற்றோரின் அன்பை மற்ற எவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறதில்லை. ஆனால் உன் பெற்றோரின் அன்பு குறைந்துபோய்விடுமென நீ பயப்படவேண்டியதில்லை, ஏனெனில் அன்பு விரிவாகக்கூடியது. (2 கொரிந்தியர் 6:11-13-ஐ ஒத்துப்பார்.) உன் இயல்பான பெற்றோர் உன்பேரிலுள்ள எந்தப் பாசத்தையும் இழக்காமல் புதிய துணையை உள்ளிணைப்பதற்குத் தன் அன்பை விரிவாக்க முடியும்! மாற்றாந்தாய் அல்லது தகப்பனை உள்ளிணைப்பதற்கு நீ உன் இருதயத்தைத் திறப்பாயா? அவ்வாறு செய்வது பிரிந்துசென்ற உன் பெற்றோர் ஒருவருக்கு உண்மைத்தவறுவதை எவ்வகையிலும் குறிக்கிறதில்லை.
அன்பு “அயோக்கியமானதைச் செய்யாது.” எதிர்பாலாரான புதிய சகோதரர் அல்லது சகோதரிகளோடு வாழ்வது ஒழுக்கநெறி சம்பந்தப்பட்ட நெருக்கடிகளை உண்டுபண்ணக்கூடும். மாற்றாந்தாய் அல்லது தகப்பனைக் கொண்ட குடும்பங்களில் 25 சதவீதத்தில் குடும்ப உறுப்பினருக்குள் முறைகேடான பாலுறவுகள் நடைபெறுகின்றனவென அறிவிக்கப்படுகிறது.
டேவிட்டின் தாய் மறுமணம் செய்துகொண்டது மாற்றாந்தகப்பனின் பருவ வயதுக்குள்ளிருந்த நான்கு புதல்விகளை வீட்டுக்குள் கொண்டுவந்தது, டேவிட் சொல்வதாவது, “பால்சம்பந்த உணர்ச்சிகளைக் குறித்து மனத் தடை போடுவது கட்டாயத்தேவையாயிருந்தது.” நீயும் உன் உடை அல்லது உன் நடத்தை பால்சம்பந்த முறையில் தகா நடத்தைக்குத் தூண்டும் காரணமாக இராதபடி நிச்சயப்படுத்திக்கொண்டு, மட்டுக்குமீறி நெருங்கிய நட்பு வைத்துக்கொள்வதைத் தவிர்ப்பதற்குக் கவனமாயிருக்க விரும்புவாய்.—கொலோசெயர் 3:5.
அன்பு “எதன்கீழும் தாங்குகிறது . . . எதிலும் சகித்திருக்க வல்லமை அளிக்கிறது.” (சார்ல்ஸ் பி. உவில்லியம்ஸின் [ஆங்கில] மொழிபெயர்ப்பு) உன் வேதனையான உணர்ச்சிகளை எதுவுமே போக்க முடிகிறதில்லையென சில சமயங்களில் தோன்றலாம்! மார்லா பின்வருமாறு ஒப்புக்கொள்கிறாள்: “வீட்டில் எனக்கு இடமில்லையென நான் உணர்ந்தேன். நான் பிறந்திராவிடில் நலமாயிருக்குமெனவும் நான் அம்மாவிடம் சொன்னேன்.” மார்லா அடங்காது எதிர்த்துநின்று வீட்டைவிட்டு ஓடியும் போய்விட்டாள்! எனினும், அவள் இப்பொழுது சொல்வதாவது: “சகித்திருப்பதே மிக நல்லது.” நீயும் அவ்வாறே சகித்திருந்தால் நீ முதன்முதல் உணர்ந்த மனக்கசப்பு, மனத்தடுமாற்றம் மற்றும் மனவேதனை காலப்போக்கில் தணிந்து அமர்வுறும்.
‘நீங்கள் என் உண்மையான தாய்/தகப்பன் அல்ல!’
புதிய பெற்றோரின் சிட்சைக்குட்படுவது எளிதல்ல, மாற்றாந்தாய் அல்லது தந்தை ஏதாவது செய்யும்படி கேட்டால், ‘நீங்கள் என் உண்மையான தாய்/தகப்பன் அல்ல’ என்று உளறிக்கொட்டும்படி தூண்டப்படலாம். ஆனால் 1 கொரிந்தியர் 14:20-ல் கூறப்பட்டுள்ள நியமத்தை நினைவுபடுத்திக்கொள்: “உங்கள் சிந்தனையில் முதிர்ச்சியுள்ளவர்களாக வளருங்கள்.”—The Holy Bible in the Language of Today, by William Beck.
உன்னைச் சிட்சிப்பதற்கு உன் மாற்றாந்தாய்/தந்தைக்கு இருக்கும் அதிகாரத்தை ஏற்பது நீ ‘உன் சிந்தையில் வளர்ந்து முதிர்ச்சியடைந்திருக்கிறாய்’ என்று காட்டுவதற்கு ஒரு வழியாகும். அவர் அல்லது அவள் இயல்பான பெற்றோரின் கடமைகளை நிறைவேற்றுகிறார், உன் மரியாதைக்கு உரிமையுடையவர். (நீதிமொழிகள் 1:8; எபேசியர் 6:1-4) பைபிள் காலங்களில் எஸ்தர், தன் பெற்றோர் மரித்தபோது ஏற்பு தகப்பனால் வளர்க்கப்பட்டாள். தான் எஸ்தரின் இயல்பான தகப்பனாயிராதபோதிலும், ‘மொர்தெகாய் அவளுக்குக் கட்டளைகள் கொடுத்தான்,’ அவள் வயதுவந்தவளாக இருந்தபோதிலும் அவற்றிற்குக் கீழ்ப்படிந்தாள்! (எஸ்தர் 2:7, 15, 17, 20) மெய்யாகவே, மாற்றாந்தாய்/தகப்பனின் சிட்சை உன்பேரில் அவளுடைய அல்லது அவருடைய அன்பின் மற்றும் அக்கறையின் வெளிக்காட்டாகும்.—நீதிமொழிகள் 13:24.
இருப்பினும், சரியாகவே வருத்தம் தெரிவிப்பதற்கான காரியங்கள் நிச்சயமாக ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், கொலோசெயர் 3:13 ஊக்கப்படுத்துகிறபடி செய்வதன்மூலம் உன்னை ‘வளர்ந்து முதிர்ச்சியடைந்திருப்பவனாய்’ நிரூபி: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால் . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”
பகிர்ந்துகொள்ள கற்றுக்கொள், விட்டுக்கொடுக்கக் கற்றுக்கொள்
15 வயது ஜேமி தன் தாயுடன் தனிமையில் வாழ்ந்தாள், தன் சொந்த அறை அவளுக்கு இருந்தது விலையுயர்ந்த உடைகளை உடுத்தினாள். அவளுடைய தாய் மறுமணம் செய்தபோது ஜேமி நான்கு பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் தன்னைக் கண்டாள், காரியங்கள் மாறின. “இப்பொழுது என் சொந்த அறையுங்கூட எனக்கு இனிமேலும் இல்லை,” என்று அவள் புலம்பினாள். “நான் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்.”
நீயுங்கூட மூத்த அல்லது ஒரே பிள்ளையாகக் கொண்டிருந்த உன் நிலையை விட்டுவிட வேண்டியிருக்கலாம். நீ மகனாயிருந்தால், நெடுங்காலம் ஒருவேளை வீட்டின் பொறுப்புள்ள ஆளாகச் சேவித்திருப்பாய்.—இப்பொழுது அந்த நிலையை உன் மாற்றாந்தகப்பன் ஏற்கிறார். அல்லது நீ மகளாயிருந்தால், ஒருவேளை நீயும் உன் தாயும் சதோதரிகளைப்போல் இருந்திருப்பீர்கள், ஒரே அறையிலும் தூங்கியிருக்கலாம், ஆனால் இப்பொழுது உன் மாற்றாந்தந்தை உன்னை அங்கிருந்து வெளியேற்றிவிட்டார்.
“உங்கள் நியாயமான தன்மை எல்லா மனிதருக்கும் தெரியப்படட்டும்,” என்று பைபிள் ஆலோசனை கூறுகிறது. (பிலிப்பியர் 4:5) பயன்படுத்தப்பட்டுள்ள மூலச்சொல் “இசைந்துகொடு” என்று பொருள்கொண்டது, தன் சட்டப்பூர்வ உரிமைகள் எல்லாவற்றையும் விடாமல் வற்புறுத்தாத ஒருவரின் மனப்பான்மையைத் தெரிவித்தது. ஆகையால் இசைந்துகொடுக்க, விட்டுக்கொடுக்க முயற்சிசெய். உன் புதிய சூழ்நிலைமையை முற்றிலும் பயன்படுத்திக்கொள், சென்ற காலத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருப்பதைத் தவிர்த்திரு. (பிரசங்கி 7:10) மாற்றாந்தாய்/தந்தை பிள்ளைகளான உன் ஒன்றுவிட்ட சகோதரர் சகோதரிகளைப் புறத்தாரைப்போல் நடத்தாமல் அவர்களோடு பகிர்ந்துகொள்ள மனங்கொண்டிரு. (1 தீமோத்தேயு 6:18) ஒருவரையொருவர் உண்மையான சகோதரர் சகோதரிகளாக நடத்த எவ்வளவு சீக்கிரத்தில் நீ தொடங்குகிறாயோ அவ்வளவு சீக்கிரத்தில் ஒருவருக்கொருவர் உணர்ச்சிகள் வளரத்தொடங்கும். குடும்பத்தை நடத்தும் பொறுப்பேற்றுள்ள அந்தப் புதிய மனிதனைக் குறித்ததில் அவரைப் பகைக்காதே. குடும்பப் பாரத்தைச் சுமப்பதற்கு உதவிசெய்ய அவர் அங்கிருப்பதைக்குறித்து மகிழ்ச்சியாயிரு.
வேறுபாடுகாட்டி நடத்துவதைச் சமாளித்தல்
தன் மாற்றாந்தகப்பன் அன்பு காட்டுகிறாரென ஒப்புக்கொண்ட பின்பு, ஓர் இளம் பெண் பின்வருமாறு தொடர்ந்து கூறினாள்: “ஆனால் ஒரு வேறுபாடு இருக்கிறது. அவர் தன் சொந்தப் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பதைப் பார்க்கிலும் . . . எங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார், எங்களை அதிகம் சிட்சிக்கிறார், குறைவாய்ப் புரிந்துகொள்கிறார். இதுவே எங்களுக்கு மிகுந்த வேதனைதரும் நிலை.”
பொதுவாய் ஒரு மாற்றாந்தாய்/தகப்பன் தன் இயல்பான பிள்ளையிடம் கொண்டுள்ள அதே உணர்ச்சியை மாற்றாரின் பிள்ளையிடம் கொண்டிராரென்பதை நீ தெரிந்துகொள். இதன் காரணம், பெரும்பாலும் தன் இயல்பான பிள்ளையோடு கொண்டுள்ள இரத்த இணைப்பு அல்ல, வாழ்க்கையில் அவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவமேயாகும். எப்படியாயினும், இரத்த-உறவுடைய பெற்றோருங்கூட ஒரு பிள்ளையை மற்றப் பிள்ளையைவிட அதிகம் நேசிக்கக்கூடும். (ஆதியாகமம் 37:3) எனினும், சமம் மற்றும் நியாயம் என்பவற்றிற்கிடையே ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. ஆட்களுக்கு அவரவருக்குரிய தனித்தனி பண்புகளும் வேறுபடும் தேவைகளும் இருக்கின்றன. ஆகையால் நீ சரிசமமாய் நடத்தப்படுகிறாயா இல்லையா என்பதைப்பற்றி மட்டுக்குமீறி கவலைப்படுவதற்குப் பதில், உன் மாற்றாந்தாய்/தந்தை உன் தேவைகளை நிறைவாக்க முயற்சி செய்கிறாராவென்பதைக் காண முயற்சி செய். அவை நிறைவாக்கப்படுகிறதில்லையென நீ உணர்ந்தால், அந்தக் காரியத்தை உன் மாற்றாந்தாய்/தந்தையிடம் கலந்துபேச உனக்குக் காரணம் உண்டு.
மாற்றாந்தாய்/தந்தையின் பிள்ளைகளான உன் ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள் சண்டைக்குங்கூட காரணராயிருக்கலாம். மாற்றாந்தாய்/தகப்பனைக்கொண்ட குடும்ப நிலைமைக்குத் தங்களைப் பொருத்திக்கொள்வதில் அவர்களும் கடினமான காலத்தை அனுவித்துக்கொண்டிருக்கலாமென்பதை ஒருபோதும் மறந்துவிடாதே. ஒருவேளை அவர்களுடைய குடும்பத்தில் நீ நுழைந்திருப்பதாக உன்மீது அவர்கள் கோபங்கொண்டிருக்கலாம். ஆகையால் தயவுடன் இருக்க உன்னால் கூடியதையெல்லாம் செய். அவர்கள் உன்னை வெடுக்கெனத் திட்டினால், ‘தீமையை நன்மையினால் வெல்ல’ முயற்சி செய். (ரோமர் 12:21) அன்றியும், உடன்பிறந்த சகோதரர் சகோதரிகளுங்கூட அவ்வப்போது சண்டையிட்டுக்கொள்வது எவ்வகையிலும் விசித்திரமாயில்லை.—அதிகாரம் 6-ஐப் பார்.
பொறுமை பலன்தருகிறது!
“ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பொறாமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.” (பிரசங்கி 7:8) இயல்பாய், மாற்றாந்தாய்/தந்தையைக் கொண்ட குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரோடொருவர் மன அமைதியை உணரும் நிலைக்கு நம்பிக்கை உண்டாவதற்குமுன் பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அப்போதே பல்வேறு பழக்கங்களும் பண்பு மதிப்புகளும் நடைமுறை ஒழுங்கில் ஒன்றுபட்டு இயங்கலாம். ஆகையால் பொறுமையாயிரு! “உடனடியான அன்பை” அனுபவிக்க அல்லது “உடனடியான குடும்பத்தில்” பலன்தருமென்று எதிர்பார்க்காதே.
தாமஸின் தாய் மறுமணம் செய்துகொண்டபோது, அவன், குறைவாய்ச் சொல்லவேண்டுமானால் மனசங்கடமடைந்திருந்தான். அவன் தாய்க்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள், அவள் மணஞ்செய்துகொண்ட அந்த மனிதனுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். “எங்களுக்குள் சண்டைகள் வாக்குவாதங்கள், குழப்பங்கள், பயங்கர உணர்ச்சிவச நெருக்கடிகள் இருந்துவந்தன,” என்று தாமஸ் எழுதினான். முடிவில் எது வெற்றியைக் கொண்டுவந்தது? “பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகித்ததனால் பிரச்னைகள் தீர்த்து அமைதிசெய்யப்பட்டன; எப்பொழுதும் உடனடியாக அல்ல, காலப்போக்கிலும் கடவுளுடைய ஆவியின் கனிகளைப் பொருத்திப் பிரயோகிப்பதனாலும், முடிவில் நிலைமைகள் சரிசெய்து அமைவிக்கப்பட்டன.”—கலாத்தியர் 5:22, 23.
பைபிள் நியமங்களுக்கு உட்படுவது, மாற்றாந்தாய்/தகப்பனைக்கொண்ட குடும்பத்தில் உண்மையில் வெற்றியைக் கொண்டுவருவதை நாங்கள் பேட்டிகண்ட பின்வரும் இளைஞரின் அனுபவங்கள் விளக்கிக் காட்டுகின்றன:
மாற்றாந்தாய்/தகப்பனைக்கொண்ட வெற்றிகரமான குடும்பத்தில் இளைஞர்கள்
பேட்டிகாண்பவர்: உன் மாற்றாந்தகப்பனின் சிட்சையின்பேரில் மனக்கசப்படைவதை எவ்வாறு தவிர்த்தாய்?
லின்ச்: சிட்சிப்பதன்பேரில் என் தாயும் மாற்றாந்தகப்பனும் எப்பொழுதும் ஒருநிலைகொண்டார்கள். ஒன்று நடந்தபோது, அதைச் செய்யும்படி அவர்கள் இருவரும் முடிவுக்கு வந்தார்கள், ஆகையால் நான் அடிபட்டபோது, அது அவர்கள் இருவரிடமிருந்தே வந்ததென்று அறிந்தேன்.
லின்டா: முதன்முதல் அது வெகு கடினமாயிருந்தது ஏனெனில் நான், “எனக்கு இதைச் சொல்ல உமக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று சொல்வேன். ஆனால் பின்பு, ‘உன் தாயையும் தகப்பனையும் கனம்பண்ணுவாயாக,’ என்று பைபிளில் சொல்லியிருப்பதை நான் சிந்தித்துப் பார்த்தேன். அவர் என் இயல்பான தகப்பன் அல்லவெனினும், கடவுளுடைய பார்வையில் அவர் இன்னும் என் தகப்பனே.
ராபின்: என் அம்மாள் நேசித்த ஆளிடம் நான் மனக்கசப்படைந்தால் அது அவர்களுக்கு ஆழ்ந்த மனவேதனையைத் தருமென்று நாம் அறிந்திருந்தேன்.
பேட்டிகாண்பவர்: நல்ல பேச்சுத் தொடர்பை எது முன்னேற்றுவித்தது?
லின்ச்: ஒருவர் தன் மாற்றாந்தகப்பன்/தாய் செய்வதில் அக்கறைகொள்ளவேண்டும். உலகப்பிரகாரமான அவருடைய வேலையில் நான் அவருக்கு உதவிசெய்தேன். நாங்கள் வேலைசெய்கையில் விடாமல் பேசிக்கொண்டேயிருப்போம். இது அவர் சிந்திக்கும் முறையைக் காண எனக்கு உதவிசெய்தது. மற்ற நேரங்களில் நான் அவருடன் வெறுமென உட்கார்ந்திருப்பேன், நாங்கள் ‘ஒன்றுமே’ பேசுவதில்லை.
வாலெரி: என் மாற்றாந்தாயும் நானும் ஒன்றாக மிகுதியான நேரத்தைச் செலவிட்டோம், நான் அவர்களை உண்மையில் புரிந்துகொண்டேன். நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களானோம்.
ராபின்: அம்மா மறுமணம்செய்ததற்கு ஓர் ஆண்டுக்கு முன்புதானே என் தகப்பன் மரித்தார். நான் என் மாற்றாந்தகப்பனிடம் நெருங்கியிருக்க மறுத்துவிட்டேன், ஏனெனில் என் தகப்பனுடைய இடத்தை அவர் எடுக்க நான் விரும்பவில்லை. என் தகப்பன் இறந்தத் துக்கத்திலிருந்து ஆறுதலடையவும் என் மாற்றாந்தந்தையுடன் நெருங்கியிருக்கவும் உதவிசெய்யும்படி கடவுளிடம் ஜெபித்தேன். நான் ஜெபித்தேன், ஜெபித்தேன், ஜெபித்துக்கொண்டேயிருந்தேன். யெகோவா இந்த ஜெபங்களுக்கு உண்மையில் பதிலளித்தார்.
பேட்டிகாண்பவர்: நெருங்கிவர நீ என்ன செய்தாய்?
வாலெரி: நாங்கள் இருவர்மட்டுமே—திரைப்படம் பார்க்க என்னோடு வரும்படி நான் என் மாற்றாந்தாயைச் சிலசமயங்களில் கேட்பேன். அல்லது நான் வெளியில் செல்கையில், அவர்களைப்பற்றி நினைத்ததைக் காட்ட அவர்களுக்கு சிறிது பூக்கள் அல்லது ஒரு பூக்குடுவை போன்ற ஏதாவதொன்றை வாங்கிவருவேன். அவர்கள் இதை உண்மையில் நன்றியோடு மதித்தார்கள்.
எரிக்: நீங்களிருவரும் அனுபவித்துமகிழும் ஒன்றுக்காகத் தேடவேண்டும். என் மாற்றாந்தகப்பனோடு எனக்கு ஒத்திருந்த ஒரே காரியம் அவர் என் தாயை மணஞ்செய்திருந்தார் நாங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தோம் என்பதே. பைபிளில் அவர் கொண்டிருந்த அதே அக்கறையை நான் எடுக்கத் தொடங்கினபோது மிகப் பெரிய உதவி வந்தது. நான் யெகோவா தேவனிடம் நெருங்கிக்கொண்டிருந்தபோது, என் மாற்றாந்தந்தையினிடமும் அதிகம் நெருங்கிவந்தேன். இப்பொழுது உண்மையில் பொதுவாய் அனுபவிக்கும் ஒன்று எங்களுக்கு இருந்தது!
பேட்டிகாண்பவர்: தனியே நீ எவ்வாறு பயனடைந்தாய்?
ராபின்: நான் தனியே என் தாயுடன் வாழ்ந்தபோது, அடங்காமலும் கெடுக்கப்பட்டும் இருந்தேன். எப்பொழுதும் நான் விரும்பியபடியே காரியங்கள் நடக்கவேண்டுமென விரும்பினேன். இப்பொழுதோ மற்றவர்களை எண்ணிப் பார்க்கவும் மேலுமதிகம் தன்னலமற்றிருக்கவும் கற்றுக்கொண்டேன்.
லின்ச்: நான் முதிர்ச்சியுள்ள ஆளைப்போல் சிந்திக்க என் மாற்றாந்தகப்பன் எனக்கு உதவிசெய்தார். தேர்ச்சி திறமைகளைப் பெறவும் என் கைகளைப் பயன்படுத்தும் முறையை அறியவும் அவர் எனக்கு உதவிசெய்தார். காலங்கள் கடினமாயிருந்து எனக்கு எவராவது தேவைப்பட்டபோது, அவர் அங்கே இருந்தார். ஆம், எவராவது எப்போதாவது கொண்டிருந்திருக்கக்கூடிய மிகச் சிறந்தத் தகப்பன் அவரே.
கலந்துபேசுவதற்கான கேள்விகள்
◻ தங்கள் பெற்றோர் மறுமணம்செய்கையில் இளைஞர் பலர் எவ்வாறு உணருகின்றனர்? ஏன்?
◻ கிறிஸ்தவ அன்பைக் காட்டுவது பிரச்னையைச் சமாளிக்க ஓர் இளைஞனுக்கு எவ்வாறு உதவிசெய்கிறது?
◻ மாற்றாந்தகப்பன்/தாயின் சிட்சைக்கு நீ அடங்கியிருக்கவேண்டுமா?
◻ விட்டுக்கொடுப்பதும் பகிர்ந்துகொள்வதும் எவ்வாறென அறிவது ஏன் முக்கியம்?
◻ மாற்றாந்தாய்/தகப்பன் பிள்ளைகளான ஒன்றுவிட்ட சகோதரர் சகோதரிகளோடு சரிசமமாய் நடத்தப்படும்படி நீ எதிர்பார்க்கவேண்டுமா? நீ ஓரகமான முறையில் நடத்தப்படுவதாக உணர்ந்தால் என்ன செய்வது?
◻ மாற்றாந்தாய்/தகப்பனோடு நட்புடன் ஒத்திணங்கிவாழ்வதற்கு உதவிசெய்யக்கூடிய சில காரியங்கள் யாவை?
[பக்கம் 45-ன் சிறு குறிப்பு]
“என் தகப்பனின் மணநிச்சயம்செய்யப்பட்ட பெண் என் தாயின் இடத்தை ஏற்கிறாள் என்று எண்ணினேன், ஆகவே நான் அவளிடம் மிகவும் பகையெண்ணங்கொண்டு நடந்தேன்”
[பக்கம் 43-ன் படம்]
பெற்றோர் ஒருவர் மறுமணம் செய்துகொள்வது, கோப, பாதுகாப்பற்ற, மற்றும் பொறாமை உணர்ச்சிகளைப் பெரும்பாலும் கிளறிவிடுகிறது
[பக்கம் 46-ன் படம்]
மாற்றாந்தகப்பன்/தாயிட மிருந்து வரும் சிட்சை பெரும்பாலும் மனக் கசப்புடன் ஏற்கப்படுகிறது