சபை யெகோவாவைத் துதிப்பதாக
“உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன்.”—எபிரெயர் 2:12.
1, 2. சபை ஏன் மிகுந்த பயனளிப்பதாக இருக்கிறது, அதன் முக்கிய நோக்கம் என்ன?
காலங்காலமாக, குடும்ப ஏற்பாட்டில் மக்கள் தோழமையையும் பாதுகாப்பையும் அனுபவித்து வந்திருக்கிறார்கள். எனினும், உலகெங்கும் உள்ள எண்ணிலடங்கா மக்கள் இன்று நெருக்கமான தோழமையையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும் வேறொரு ஏற்பாட்டைப்பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. அதுதான் கிறிஸ்தவ சபை. உங்களுக்கு ஓர் அன்பான, ஆதரவான குடும்பம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, சபை மூலமாக கடவுள் அளித்திருப்பவற்றுக்காக நீங்கள் நன்றியோடு இருக்கலாம், அவ்வாறு நன்றியோடு இருக்கவும் வேண்டும். நீங்கள் ஏற்கெனவே யெகோவாவின் சாட்சிகளுடைய சபையோடு கூடிவருபவராக இருந்தால், அங்கு நிலவும் கனிவான தோழமைக்கும், பாதுகாப்புக்கும் உங்களால் அத்தாட்சி அளிக்க முடியும்.
2 சபை என்பது வெறுமனே ஆட்கள் ஒன்றுகூடி வருவதற்கான ஏற்பாடல்ல. அதாவது, ஒரேவிதமான பின்னணியைச் சேர்ந்தவர்களோ, ஒரேவிதமான விளையாட்டு அல்லது பொழுதுபோக்கில் ஆர்வமுடையவர்களோ ஒன்றுகூடிவருகிற மனமகிழ் மன்றம் அல்ல. மாறாக, அது யெகோவா தேவனைத் துதிப்பதற்காகவே செய்யப்பட்டுள்ள ஏற்பாடாகும். சபை அந்த நோக்கத்திற்காகவே பல காலமாகப் பயன்படுத்தப்பட்டதாக சங்கீத புத்தகம் சொல்கிறது. “மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்” என்று சங்கீதம் 35:18 குறிப்பிடுகிறது. அவ்வாறே, சங்கீதம் 107:31, 32, “[மக்கள்] கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக” என்று ஊக்கப்படுத்துகிறது.
3. சபை வகிக்கும் பங்கைக் குறித்து பவுல் என்ன குறிப்பிட்டார்?
3 சபை வகிக்கும் மற்றொரு முக்கியப் பங்கை கிறிஸ்தவ அப்போஸ்தலனான பவுல் சிறப்பித்துக் காட்டினார். ‘தேவனுடைய . . . வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டார். (1 தீமோத்தேயு 3:15) பவுல் எந்தச் சபையைப்பற்றி இங்கு குறிப்பிட்டார்? என்னென்ன விதங்களில் “சபை” என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது? நம்முடைய வாழ்க்கைமீதும் எதிர்பார்ப்புகள்மீதும் சபை என்ன தாக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்? பதிலைத் தெரிந்துகொள்ள, “சபை” என்ற பதம், கடவுளுடைய வார்த்தையில் என்னென்ன விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை முதலில் கவனிக்கலாம்.
4. எபிரெய வேதாகமத்தில் “சபை” என்ற வார்த்தை பெரும்பாலும் என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
4 பொதுவாக, “சபை” அல்லது “கூட்டம்” என தமிழ் பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூல எபிரெய பதம், “ஒன்றுகூட்டு” அல்லது “கூடிவரச்செய்” என்று பொருள்படுகிறது. (உபாகமம் 4:9, 10; 9:10) இதே எபிரெய வார்த்தையை, பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களைக் குறிப்பிடவும், பொல்லாதவர்களின் தொகுதியைக் குறிப்பிடவும் சங்கீதக்காரன் பயன்படுத்தினார். (சங்கீதம் 26:5; 89:5-7) என்றாலும், எபிரெய வேதாகமம் இஸ்ரவேலர்களைக் குறிப்பிடவே பெரும்பாலும் அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது. யாக்கோபு ‘பல ஜனக்கூட்டமாவார்’ என்று கடவுள் கூறினார். அவ்வாறே நடந்தது. (ஆதியாகமம் 28:3; 35:11; 48:4) இஸ்ரவேலர்கள் ‘கர்த்தரின் சபையாக,’ ‘[மெய்] தேவனுடைய சபையாக’ இருக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.—எண்ணாகமம் 20:4; நெகேமியா 13:1, 2; யோசுவா 8:35; 1 சாமுவேல் 17:47; மீகா 2:5.
5. பொதுவாக, எந்த கிரேக்க வார்த்தை “சபை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்படலாம்?
5 சபை என்பதற்கான கிரேக்க வார்த்தை எக்லீஸியா என்பதாகும். “வெளியே” என்றும் “கூப்பிடு” என்றும் பொருள்படுகிற இரு கிரேக்க வார்த்தைகளை இணைத்து இந்த வார்த்தை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது, மத சம்பந்தமானதாக அல்லாமல் வேறு காரணங்களுக்காகக் கூட்டப்படும் கூட்டத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, எபேசுவில் தெமேத்திரியு என்பவன் பவுலுக்கு எதிராகக் கூட்டிய ‘கூட்டத்தைக்’ குறிப்பிட இது பயன்படுத்தப்பட்டுள்ளது. (அப்போஸ்தலர் 19:32, 39, 41) ஆனால், பைபிள் இவ்வார்த்தையை பொதுவாக கிறிஸ்தவ சபையைக் குறிப்பிடவே பயன்படுத்துகிறது. சில பைபிள்கள், இவ்வார்த்தையை “சர்ச்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. ஆனால், எக்லீஸியா என்ற வார்த்தை “[புதிய ஏற்பாட்டில்] . . . கிறிஸ்தவர்கள் வழிபாட்டிற்காக ஒன்றுகூடிவரும் ஒரு கட்டடத்தைக் குறிப்பிடுவதற்காக ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை” என தி இம்பீரியல் பைபிள் டிக்ஷ்னரி கூறுகிறது. என்றாலும், “சபை” என்ற வார்த்தை குறைந்தபட்சம் நான்கு வித்தியாசமான விதங்களில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காண்பது ஆர்வத்திற்குரியது.
அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அடங்கிய தேவனுடைய சபை
6. தாவீதும் இயேசுவும் சபையில் என்ன செய்தார்கள்?
6 சங்கீதம் 22:22-ல் காணப்படும் தாவீதின் வார்த்தைகளை இயேசுவுக்குப் பொருத்தி அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன். அன்றியும், [இயேசு] ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.” (எபிரெயர் 2:12, 17) தாவீது, பூர்வ இஸ்ரவேல் சபையின் நடுவே கடவுளைத் துதித்திருந்தார். (சங்கீதம் 40:9) என்றாலும், ‘சபை நடுவில்’ கடவுளை இயேசு துதித்ததாக பவுல் குறிப்பிட்டபோது எந்தச் சபையைக் குறித்துப் பேசினார்?
7. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் என்ன முக்கிய அர்த்தத்தில் “சபை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது?
7 எபிரெயர் 2:12, 17-ல் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் மிக முக்கியமானவை. கிறிஸ்து தம் சகோதரர்களுக்கு கடவுளுடைய பெயரை அறிவித்தார்; அந்தச் சகோதரர்கள் அடங்கிய சபையின் அங்கத்தினராகவே அவர் இருந்ததாக இந்த வசனம் காட்டுகிறது. அந்தச் சகோதரர்கள் யார்? கிறிஸ்துவின் சகோதரர்களான இவர்கள், “ஆபிரகாமின் சந்ததி”யின் பாகமானவர்கள்; ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்; ‘பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்கள்.’ (எபிரெயர் 2:16–3:1; மத்தேயு 25:40) ஆம், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “சபை” என்ற வார்த்தையின் முக்கிய அர்த்தம், ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவின் சீஷர்களைக் கொண்ட தொகுதி என்பதே. இந்த 1,44,000 ஆட்களே ‘பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் . . . சபையாக’ இருக்கிறார்கள்.—எபிரெயர் 12:23.
8. கிறிஸ்தவ சபை உருவாகவிருந்ததை இயேசு முன்னதாகவே எப்படிக் குறிப்பிட்டார்?
8 இந்தக் கிறிஸ்தவ “சபை” உருவாகவிருந்ததை இயேசு முன்னதாகவே குறிப்பிட்டிருந்தார். தம்முடைய மரணத்திற்கு சுமார் ஓராண்டுக்கு முன்னர், தம் சீஷர்களில் ஒருவரான பேதுருவிடம் அவர் பின்வருமாறு கூறினார்: “நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” (மத்தேயு 16:18) முன்னறிவிக்கப்பட்ட அந்தக் கல், இயேசுவையே குறிக்கிறது என்பதை பேதுருவும் பவுலும் சரியாகப் புரிந்துகொண்டார்கள். கிறிஸ்து எனும் கல்லின்மீது அமைக்கப்பட்டிருக்கும் ஆன்மீக வீட்டின் ‘ஜீவனுள்ள கற்களாக’ கட்டப்பட்டிருப்போர், தங்களை அழைத்தவருடைய ‘புண்ணியங்களை [“மகத்துவங்களை,” NW] அறிவிப்போராக, அவருக்குச் சொந்தமான ஜனமாக இருக்கிறார்கள்’ என்று பேதுரு எழுதினார்.—1 பேதுரு 2:4-9; சங்கீதம் 118:22; ஏசாயா 8:14; 1 கொரிந்தியர் 10:1-4.
9. தேவனுடைய சபை எப்போது உருவாகத் தொடங்கியது?
9 அவருக்குச் ‘சொந்தமான ஜனங்கள்’ அடங்கிய கிறிஸ்தவ சபை எப்போது உருவாகத் தொடங்கியது? பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று, எருசலேமில் கூடியிருந்த சீஷர்கள்மீது பரிசுத்த ஆவியை கடவுள் பொழிந்தபோது இந்தச் சபை உருவானது. அதே நாளில் பின்னர், யூதர்களையும் யூத மதத்திற்கு மாறியவர்களையும் கொண்ட கூட்டத்தின் முன்பாக பேதுரு திறம்பட்ட விதத்தில் பேச்சு கொடுத்தார். இயேசுவின் மரணத்தைக் குறித்து அநேகர் தங்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய் உணர்ந்தார்கள்; அவர்கள் மனந்திரும்பி, முழுக்காட்டுதல் பெற்றார்கள். இவர்களுடைய எண்ணிக்கை மூவாயிரம் என்பதாக பைபிள் பதிவு கூறுகிறது. அதன்பிறகு உடனடியாக அவர்கள் புதிதாய் தோன்றி வளர்ந்துவரும் கடவுளுடைய சபையின் அங்கத்தினர்களாய் ஆனார்கள். (அப்போஸ்தலர் 2:1-4, 14, 37-47) இஸ்ரவேல் தேசம் இனிமேலும் கடவுளுடைய சபையாக இருக்கவில்லை என்பதை அதிகமதிகமான யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் ஏற்றுக்கொண்டதால் சபை வளர ஆரம்பித்தது. இஸ்ரவேல் தேசத்திற்குப் பதிலாக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைக் கொண்ட ‘தேவனுடைய இஸ்ரவேலர்கள்’ கடவுளுடைய உண்மை சபையாக ஆனார்கள்.—கலாத்தியர் 6:16; அப்போஸ்தலர் 20:28.
10. இயேசுவுக்கும் தேவனுடைய சபைக்கும் இடையே எப்படிப்பட்ட பந்தம் நிலவுகிறது?
10 இயேசுவையும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களையும் பைபிள் அடிக்கடி வேறுபடுத்திக் காட்டுகிறது. “கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றியும்” என்ற சொற்றொடர் அதற்கு ஓர் உதாரணமாகும். ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைக் கொண்ட இந்தச் சபையின் தலைவர் கிறிஸ்துவே. கடவுள், “சரீரமான சபைக்கு அவரை [இயேசுவை] எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்” என்று பவுல் எழுதினார். (எபேசியர் 1:22, 23; 5:23, 32; கொலோசெயர் 1:18, 24) இன்று, இந்தச் சபையின் அங்கத்தினரான அபிஷேகம் செய்யப்பட்டோரில் மீதியானோர் சிலர் மட்டுமே பூமியில் இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களுடைய தலையான இயேசு கிறிஸ்து அவர்களை நேசிக்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அவர்களை அவர் எவ்வாறு கருதுகிறார் என்பது எபேசியர் 5:25, 27-ல் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது: “கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” அவர் பூமியில் இருந்தபோது செய்தவிதமாகவே, அவர்களும் கடவுளுடைய “நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை” செலுத்துவதில் மும்முரமாக ஈடுபடுவதால் இயேசு அவர்களை நேசிக்கிறார்.—எபிரெயர் 13:15.
“சபை”—வேறு அர்த்தங்கள்
11. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் “சபை” என்ற வார்த்தையை என்ன இரண்டாவது அர்த்தத்தில் பயன்படுத்துகிறது?
11 சில சமயங்களில், “சபை” என்ற வார்த்தையை பைபிள் குறிப்பிட்ட அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துகிறது; “தேவனுடைய சபை” என அழைக்கப்படுகிற 1,44,000 பேர் அனைவரையும் குறிக்க அதைப் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக, ‘நீங்கள் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்’ என்று கிறிஸ்தவர்களின் தொகுதி ஒன்றுக்கு பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 10:33) பூர்வ கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர் எவராவது தவறாக நடந்துகொண்டால், அது சிலருக்கு இடறல் ஏற்படுத்தும் என்பது உண்மையே. ஆனால், இந்தத் தவறான செயல் அனைத்து கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்கும், அன்றிலிருந்து இன்று வரையான அபிஷேகம் செய்யப்பட்ட அனைவருக்கும் இடறல் ஏற்படுத்த முடியுமா? நிச்சயம் முடியாது. ஆகவே, இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் “தேவனுடைய சபை” என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களைக் குறிப்பதாகத் தெரிகிறது. இதன்படி, சபையை கடவுள் வழிநடத்துகிறார், ஆசீர்வதிக்கிறார், அதற்கு உதவுகிறார் என்று சொல்லுகையில், அது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழ்கிற கிறிஸ்தவர்கள் அனைவரையும் அர்த்தப்படுத்துகிறது; அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி. அவ்வாறே, இன்றுள்ள கடவுளுடைய சபையில் மகிழ்ச்சியும் சமாதானமும் நிலவுகின்றன எனச் சொல்லுகையில், அது உலகெங்கும் இருக்கிற உண்மைக் கிறிஸ்தவர்கள் அனைவரையுமே குறிக்கிறது.
12. எந்த மூன்றாவது அர்த்தத்தில் “சபை” என்ற வார்த்தை பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
12 “சபை” என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிற மூன்றாவது விதம், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அனைத்து கிறிஸ்தவர்களையும் அர்த்தப்படுத்துகிற வகையிலாகும். ‘யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்றன’ என்று நாம் வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 9:31) அந்தப் பரந்த பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவத் தொகுதிகள் இருந்தன; ஆனாலும், யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய நாடுகளில் உள்ள அனைத்து கிறிஸ்தவத் தொகுதிகளையும் சேர்த்து “சபை” என்று பைபிள் குறிப்பிடுகிறது. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்றும், அதிலிருந்து சில நாட்களுக்குள்ளாகவும் முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்கையில், எருசலேமில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகள் தவறாமல் ஒன்றுகூடி வந்திருக்கலாம் என்பது தெரிகிறது. (அப்போஸ்தலர் 2:41, 46, 47; 4:4; 6:1, 7) முதலாம் ஏரோது அகிரிப்பா பொ.ச. 44-ல் மரிக்கும்வரை யூதேயாவை அரசாண்டார். குறைந்தபட்சம், பொ.ச. 50-க்குள் யூதேயாவில் பல சபைகள் உருவாகியிருக்க வேண்டும் என்பது 1 தெசலோனிக்கேயர் 2:14-ல் இருந்து தெளிவாகிறது. ஆகவே, ஏரோது ‘சபையிலே சிலரைத் துன்பப்படுத்தினார்’ என்று வாசிக்கையில், அது எருசலேமில் கூடிவந்த ஒன்றுக்கு மேற்பட்ட சபைகளைக் குறித்திருக்கலாம்.—அப்போஸ்தலர் 12:1.
13. என்ன நான்காவது அர்த்தத்தில் “சபை” என்ற வார்த்தை பைபிளில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது?
13 “சபை” என்ற வார்த்தை பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள நான்காவது விதம், இன்னும் குறிப்பாக உள்ளது. இந்த அர்த்தத்திலேயே இவ்வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஒரு சபையில் உள்ள கிறிஸ்தவர்களைக் குறிப்பிட அது பயன்படுத்தப்படுகிறது; இது வீட்டில் கூடிவரும் தொகுதியையும் அர்த்தப்படுத்தலாம். ‘கலாத்தியா நாட்டுச் சபைகளை’ பவுல் குறிப்பிட்டார். மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட அந்த ரோம மாகாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் இருந்தன. கலாத்தியாவைப்பற்றிச் சொல்லும்போது பவுல், ‘சபைகள்’ என்று பன்மையில் இருமுறை குறிப்பிட்டார். அந்தியோகியா, தெர்பை, லீஸ்திரா, இக்கோனியா ஆகிய இடங்களில் உள்ள சபைகளும் இதில் அடங்கும். இந்தச் சபைகளில் தகுதிவாய்ந்த மூப்பர்கள், அதாவது கண்காணிகள் நியமிக்கப்பட்டார்கள். (1 கொரிந்தியர் 16:1; கலாத்தியர் 1:2; அப்போஸ்தலர் 14:19-23) இவை அனைத்தும் ‘தேவனுடைய சபைகள்’ என்றே பைபிளில் குறிப்பிடப்படுகின்றன.—1 கொரிந்தியர் 11:16; 2 தெசலோனிக்கேயர் 1:4.
14. ஒருசில வசனங்களில் “சபை” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைக் கவனித்ததில் இருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
14 சில சமயங்களில், கிறிஸ்தவ கூட்டங்களுக்காகக் கூடிவந்த தொகுதி சிறியதாக இருந்திருக்கலாம். வீட்டில் கூடிவரும் அளவுக்கு அது சிறியதாக இருந்திருக்கலாம். என்றபோதிலும், “சபை” என்ற வார்த்தை அப்படிப்பட்ட சிறிய தொகுதிகள் சிலவற்றைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. நமக்குத் தெரிந்தவரையில் ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா, நிம்பா, பிலேமோன் ஆகியோரின் வீடுகளில் சபை கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. (ரோமர் 16:3-5; கொலோசெயர் 4:15; பிலேமோன் 2) இன்றுள்ள சபைகள் சில, சிறியவையாக இருக்கலாம். ஒருவேளை, கூட்டங்களை நடத்துவதற்காக தவறாமல் வீடுகளில் கூடிவர வேண்டியிருக்கலாம். அப்படிப்பட்ட சபைகள் மேற்கூறப்பட்ட காரணங்களை நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். முதல் நூற்றாண்டில் இருந்த அப்படிப்பட்ட சிறிய சபைகளை யெகோவா அங்கீகரித்தார். இன்றும் அவ்வாறே செய்கிறார். அதோடு, தம் ஆவியின் மூலமாக அவற்றை வழிநடத்தி, ஆதரிக்கிறார்.
சபைகள் யெகோவாவைத் துதிக்கின்றன
15. ஆரம்பகால சபைகள் சிலவற்றில் பரிசுத்த ஆவியின் செயல்பாடு எவ்விதங்களில் வெளிப்பட்டது?
15 சங்கீதம் 22:22-ஐ நிறைவேற்றும் விதமாக, சபை நடுவில் கடவுளை இயேசு துதித்தார் என்பதைக் கவனித்தோம். (எபிரெயர் 2:12) அவருடைய உண்மையுள்ள சீஷர்களும் அவ்விதமாகவே செய்ய வேண்டியிருந்தது. முதல் நூற்றாண்டில், உண்மைக் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு, கடவுளுடைய குமாரர்களாகவும் கிறிஸ்துவின் சகோதரர்களாகவும் ஆனபோது, சிலர்மீது பரிசுத்த ஆவி மற்றொரு விசேஷித்த விதத்தில் செயல்பட ஆரம்பித்தது. அவர்கள் பரிசுத்த ஆவியின் அற்புத வரங்களைப் பெற்றார்கள். ஞானம் அல்லது அறிவைப் போதிப்பதற்கான திறன், சுகப்படுத்துவதற்கோ தீர்க்கதரிசனம் சொல்வதற்கோ தேவையான வல்லமை, அவர்களுக்குத் தெரியாத மொழிகளில் பேசுவதற்கான திறமை ஆகியவை ஆவியின் வரங்களில் சில.—1 கொரிந்தியர் 12:4-11.
16. ஆவியின் அற்புத வரங்கள் கொடுக்கப்பட்டதற்கான ஒரு நோக்கம் என்னவாக இருந்தது?
16 அந்நிய பாஷையில் பேசுவதைக் குறித்து பவுல் பின்வருமாறு கூறினார்: “நான் ஆவியோடும் [“ஆவியின் வரத்தோடும்,” NW] பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.” (1 கொரிந்தியர் 14:15) மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசினால்தான் அவர்களால் கற்றுக்கொள்ள முடியுமென்பதை பவுல் உணர்ந்திருந்தார். யெகோவாவை சபையில் துதிப்பதே அவருடைய இலக்காக இருந்தது. ஆவியின் வரங்களைப் பெற்றிருந்த மற்றவர்களை அவர் இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: “சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்.” அதாவது, அவர்கள் தாங்கள் பெற்ற வரத்தை எந்தச் சபையில் பயன்படுத்துகிறார்களோ, அந்தச் சபையை ஊக்கப்படுத்துவதற்கு அவற்றைப் பயன்படுத்தும்படி கூறினார். (1 கொரிந்தியர் 14:4, 5, 12, 23) சபைகளின் மீது பவுலுக்கு அக்கறை இருந்தது தெளிவாகத் தெரிகிறது. சபைகள் ஒவ்வொன்றிலும் கடவுளைத் துதிக்க கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
17. இன்றுள்ள நம் சபைகளைப் பொறுத்ததில், எதைக் குறித்து நாம் உறுதியோடிருக்கலாம்?
17 யெகோவா தம் சபையைத் தொடர்ந்து பயன்படுத்தி, அதை ஆதரித்து வருகிறார். பூமியில் இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதியை அவர் ஆசீர்வதித்து வருகிறார். கடவுளுடைய மக்கள் அனுபவிக்கும் அபரிமிதமான ஆன்மீக உணவு இந்த ஆசீர்வாதத்திற்கு அத்தாட்சி அளிக்கிறது. (லூக்கா 12:42) உலகளாவிய சகோதரத்துவம் முழுவதன் மேலும் அவர் ஆசீர்வாதத்தைப் பொழிகிறார். நாம் கூட்டுறவு கொள்கிற சபையும் அதில் உட்பட்டுள்ளது. அங்கு நம்முடைய செயல்களின் மூலமாகவும் விசுவாசத்தைப் பலப்படுத்தும் பதில்கள் மூலமாகவும் நம் படைப்பாளரைத் துதிக்கிறோம். சபையில் கூடிவந்திருக்கும்போது மட்டுமின்றி, வேறு சந்தர்ப்பங்களிலும் கடவுளைத் துதிப்பதற்கான போதனையையும் பயிற்சியையும் அங்கிருந்து நாம் பெற்றுக்கொள்கிறோம்.
18, 19. நம்முடைய சபைகளைச் சேர்ந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் என்ன செய்ய விரும்புவார்கள்?
18 மக்கெதோனியாவில் இருந்த பிலிப்பி சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை பவுல் பின்வருமாறு ஊக்கப்படுத்தியதை நினைவுபடுத்திப் பாருங்கள்: ‘தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் [நீங்கள்] நிறைந்தவர்களாக . . . வேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.’ கிறிஸ்தவர்களாக அல்லாத மற்றவர்களிடம் இயேசுவின் மீது தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைப் பற்றியும், தங்களுடைய அருமையான நம்பிக்கையைப் பற்றியும் பேசுவதை இது அர்த்தப்படுத்துகிறது. (பிலிப்பியர் 1:9-11; 3:8-11) ஆகவே, சக கிறிஸ்தவர்களை பவுல் பின்வருமாறு ஊக்கப்படுத்தினார்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் [இயேசு] மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.”—எபிரெயர் 13:15.
19 இயேசுவைப் போலவே நீங்களும் “சபை நடுவில்” கடவுளைத் துதிப்பதில் இன்பம் காண்கிறீர்களா? இதுவரை கடவுளை அறியாத, அவரைத் துதிக்காத ஆட்கள் முன் உங்கள் உதடுகளால் யெகோவாவைத் துதிப்பதிலும் மகிழ்ச்சி காண்கிறீர்களா? (எபிரெயர் 2:12; ரோமர் 15:9-11) இதற்கான பதில், கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தில் நம் சபை வகிக்கும் பங்கைக் குறித்து நம் மனப்பான்மை என்னவாக இருக்கிறது என்பதை ஓரளவு சார்ந்துள்ளது. நம் சபையை யெகோவா எவ்வாறு வழிநடத்தி, பயன்படுத்துகிறார்? நம் வாழ்வில் அது என்ன பங்கை வகிக்க வேண்டும்? இக்கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கட்டுரையில் காணலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைக் கொண்ட “தேவனுடைய சபை” எவ்வாறு உருவானது?
• எந்தக் கூடுதலான மூன்று அர்த்தங்களில் “சபை” என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்தியிருக்கிறது?
• தாவீதும், இயேசுவும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சபையில் என்ன செய்ய விரும்பினார்கள், இது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
[பக்கம் 21-ன் படம்]
இயேசு எந்தச் சபையின் அஸ்திவாரமாக இருக்கிறார்?
[பக்கம் 23-ன் படம்]
கிறிஸ்தவர்களைக் கொண்ட தொகுதிகள் ‘தேவனுடைய சபைகளாக’ கருதப்பட்டன
[பக்கம் 24-ன் படம்]
பெனினில் உள்ள கிறிஸ்தவ சகோதரர்களைப்போலவே நாமும் சபை நடுவே யெகோவாவைத் துதிக்கலாம்